Tuesday, November 21, 2006

கடைசி அஸ்திரம் - மூன்று வரிக் கதை


புகைப்படம் : புனே கிரிவன் மலைப்பகுதி


"முடியவே முடியாது... காதல், கீதலெல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது.. என் கவுரவம், அந்தஸ்து என்னாவது" அப்பா வானத்துக்கும் பூமிக்குமாய் எம்பிக் குதித்தார்.

"அப்பா..... அவளும் நம்ம ஜாதிதாம்பா...." கடைசி அஸ்திரத்தை வீசினேன் நான்.

"கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம் ??..." என்றார் அன்புள்ள அப்பா.

<<<<>>>>

புகைப்படம் : புனே கிரிவன் மலைப்பகுதி

Tuesday, November 07, 2006

இயலாதோர்க்கான வேலைவாய்ப்பு சந்தை

எபிலிட்டி பவுண்டேஷன் என்ற சேவை நிறுவனம் இயலாதோர்க்கான/சிறப்பு தேவை மக்களுக்கான வேலை வாய்ப்பு சந்தையை வரும் டிசம்பர் 17ம் தேதி சென்னையில் நடத்த இருக்கிறது.

பட்டதாரிகளான இயலாதோர், எபிலிட்டி பவுண்டேஷன் வலைத்தளத்தில் இதற்காக பதிவு செய்து கொள்ளலாம்.

வலைத்தளம்: http://www.abilityfoundation.org/organisations1.htm
தொலைபேசி: +91 44 2445 2400
மின்னஞ்சல்: jobs@abilityfoundation.org

இதே வலைத்தளத்தில் நிறுவனங்களும், வேலைக்கு சிறப்பு தேவை மக்களை தேர்ந்தெடுக்க, பதிவு செய்து கொள்ளலாம்.

<<<>>>

If you know any disabled graduates, help them by passing this info.Job fair organized on 17th Dec 06 for the disabled graduates.It will be held in Chennai.

For more details: http://www.abilityfoundation.org/organisations1.htm
For more queries Call : +91 44 2445 2400
Or mail us at jobs@abilityfoundation.org

<<<>>>

தகவல் நன்றி: ரத்னாகர் மிஷ்ரா, புனே.

<<<>>>

நண்பர்களே, உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் இத்தகவலை பரப்புங்கள். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திலும், இங்கு வேலைக்கு தேர்ந்தெடுக்க பரிந்துரை செய்யுங்களேன், நன்றி!

<<<>>>

தமிழ் வலைப்பதிவுகள் - பொருத்துக

தமிழ் வலைப்பதிவாளர்களின் பெயரையும், அவர்களை இணைக்க ஒரு குறிப்பு வரியும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. எங்கே, சரியாக இணையுங்களேன், பார்ப்போம்.

சரியான விடைகளை பின்னூட்டத்தில் (எ.கா: 1 - j, 2-e, ....) கூறுங்கள். பின்னூட்டங்கள் உடனே வெளிவராது. சரியான பதிலென்றால் உங்களைப் பாராட்டி ஒரு சிறுகவிதையும், தவறென்றால் குறிப்பும் வழங்கப் படலாம். புதிரில் சம்பந்தப்பட்ட வலைப்பதிவாளர்களும் கலந்து கொள்ளலாம்!


1. டி.பி.ஆர்.ஜோசப் - a. பொருளாதார கட்டுரைகள்
2. பாஸ்டன் பாலா - b. அத்தை பெண்கள்: ராஷ்ஷசிகள் என்று, கவிதை புனைபவர்
3. தேசிகன் - c. ராமயணக் கதை, ஐடிபில் நினைவுகள் எழுதும் மொழிபெயர்ப்பாளர்
4. லக்கிலுக் - d. திரும்பிப் பார்த்தவர்
5. மா சிவகுமார் - e. சமீபத்திய 'தேன்கூடு போட்டி' விமர்சகர்
6. *** கணேசன் - f. 'இலவச'த்தை வழங்கியவர்
7. கார்த்திக் பிரபு - g. செய்திகளை பேச வைத்தவர்
8. யதா - h. தமிழில் எண்ணங்கள்
9. டோண்டு - i. கடலளவுக்கு கலக்குபவர்
10. பத்ரி - j. கோயில்கள் நிறைய சுற்றும், 'பெண்களூர்'காரர்

Monday, October 30, 2006

இன்று திங்கள் கிழமை..

'இன்று வெள்ளிக்கிழமை...' என்ற காதலியின் கவிதையை கடந்த இடுகையில் பார்த்தோமல்லவா, இப்போது அதற்கு பதில் சொல்லும் விதத்தில் வரும் காதலனின் கவிதையை அனுபவியுங்கள் !

<<<>>>

இன்று திங்கள் கிழமை,
நாளை செவ்வாய் கிழமை,
ஒவ்வொரு முறையும்
வாங்கிக் கொடுக்கும் குளிர்பானங்கள்,
கூட்டிச் செல்லும் திரைப்படங்கள்,
உணவருந்தும் குளிரூட்டப்பட்ட விடுதிகள்,
கணக்கிலடங்கா பரிசுப் பொருட்கள்,
மணிக்கு இருமுறை தொலைபேசி அழைப்புகள்,
அளவில்லா இணைய அரட்டைகள்,
இவைகளால் கரையும் என் வங்கி சேமிப்பு,
எல்லாம் நினைவிற்கு வருகிறதடி
உன்னை பார்த்தவுடன், என் காதலி !!

<<<>>>

Friday, October 27, 2006

இன்று வெள்ளிக்கிழமை...



இன்று வெள்ளிக்கிழமை,
நாளை சனிக்கிழமை,
நாளை மறுநாள் ஞாயிறு,
நம் பெயர்கள்,
தோழிகளின் பெயர்கள்,
நம் செல்பேசி எண்கள்,
மின்னஞ்சல் கடவுச்சொல்,
பணம் வழங்கும் அட்டையின் கடவு எண்,
நேற்று நாம் பார்த்த திரைப்படத்தின் கதை....
எல்லாம் நினைவில் உள்ளதடா
உன்னை பார்க்கும் வரை, என் காதலா !!

<<<<<>>>>>

புகைப்பட உதவி : நண்பர் ராகவேந்தர், புனே.

Tuesday, October 24, 2006

விறுவிறுப்பாகும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள்

இந்தியாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் லீக் போட்டிகளில், எதிர்பார்த்த படியே சில எதிர்பாராத முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இதில் முக்கியமானது, ஆஸ்திரேலியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் கொடுத்த ஆப்பு!ஆப்புகளில் அடுத்த இடத்தை பிடிப்பது, தென்னாப்ரிக்காவுக்கு நியூசிலாந்து கொடுத்தது.


லீக் சுற்றில் முதல் போட்டியில், இந்தியா தட்டுத் தடுமாறி இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்திய பந்துவீச்சாளர்கள், சிறப்பாக ஆடி இங்கிலாந்தை 125 ரன்களில் ஆல் அவுட்டாக்கிய போதும், பேட்டிங்கில் 6 விக்கெட்டுகளை இழந்துதான் இந்தியா வெற்றி பெற முடிந்தது. சேவக் டிவெண்ட்டி20 நினைப்பில் ஆடுவதை மாற்றிக் கொண்டால் இந்தியா பிழைக்கும்!

+: பதான் ஃபார்முக்கு திரும்பியது, முனாப் பட்டேல், பவாரின் பந்துவீச்சு
-: டிராவிட், தோனியின் ஃபார்ம், இங்கிலாந்தின் பேட்டிங்

இரண்டாம் போட்டியில் நியுசிலாந்து ப்ளெமிங் தயவில் 195 ரன்கள் எடுத்தது. ஆனால் தென்னாப்ரிக்கா மில்ஸ், ஓரம், படேல் போன்றோரின் பந்துவீச்சில் 108 ரன்களில் வீழ்ந்தது சற்று எதிர்பாரததே!

-: தென்னாப்ரிக்காவின் 'டுபாக்கூர்' பேட்டிங்

மூன்றாம் போட்டியில் பலவித குழப்பங்களில் சிக்கியிருந்த பாகிஸ்தான், பயங்கர ஃபார்மில் இருந்த இலங்கையை வீழ்த்தியது. நல்ல ஸ்கோரை எட்டியிருந்தும், பலமான பாகிஸ்தான் பேட்டிங்கை எதிர்கொள்ள முடியவில்லை, இலங்கைக்கு.

+: பாகிஸ்தானின் பேட்டிங், அப்துல் ரசாக்கின் ஆல்ரவுண்ட் திறமை
-: இலங்கையின் வேகப்பந்து வீச்சு, முரளியை ஓவராக சார்ந்திருப்பது

நான்காவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஆஸ்திரேலியா இந்திய ஆடுகளங்களில் சுமாராகத்தான் ஆடும். மிக அதிகமான தன்னம்பிக்கை சில சமயங்களில் காலை வாரி விடுவதுமுண்டு. மார்டன், லாரா பேட்டிங்கில் ஜோலிக்க, பவுலிங்கில் 'ஹாட்ரிக்' டெய்லர் தனியாளாக கலக்கினார். 10 ரன்களில் வெற்றியை கோட்டை விட்டது ஆஸ்திரேலியா.

+: வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சு

ஐந்தாவது போட்டியில் நியுசிலாந்தை, இலங்கை வீழ்த்தியது. முரளியின் சுழலில் நியுசிலாந்து 165 ரன்களில் பணிய, அதை அநாயாசமாக 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலங்கை வென்றது.

+: இலங்கையின் சுழல் & பேட்டிங்
-: நியுசியின் 'பரத நாட்டிய' பேட்டிங்

ஆறாவது போட்டியில் 'ஆஷஸ்' அணிகள் மோதின. எதிர்பார்த்த படியே ஆஸ்திரேலியா இங்கிலாந்தை சொல்லி வைத்து வீழ்த்தியது. 87 ரன்களுக்கு விக்கெட் இழப்பில்லாமல் இருந்து, 159 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட்டானதற்கு காரணம் 'ஆஷஸ்' ஞாபகமா?இனிமேலாவது 'ஆஷஸ்' சீரிஸுக்கு ஓவர் பில்டப் கொடுப்பதை இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் நிறுத்தலாம். ப்ளிண்டாபை பார்த்தால் 'இம்சை அரசன் காமெடி வடிவேலு'தான் ஞாபகத்திற்கு வருகிறார். Right person in wrong place ?? வழக்கம் போல் ஏகப்பட்ட சவால்கள் விட்டு, பரிதாபமாக தோற்றது இங்கிலாந்து. ஆஸ்திரேலியாவும் சுமாராகத்தான் ஆடியது, இருந்தாலும் இங்கிலாந்தின் தயவால் வெற்றி பெற்றது.

-: இங்கிலாந்து அணியின் அணுகுமுறை

<<<>>>

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் முடிவால், விறுவிறுப்பாகி உள்ளது சாம்பியன்ஸ் ட்ராபி. இங்கிலாந்தை தவிர மற்ற ஏழு அணிகளும் இன்னமும் கோப்பைக் களத்தில் உள்ளன. எனது தற்போதைய கணிப்புப் படி பாகிஸ்தான், இலங்கை, இந்தியா, வெஸ்ட் இண்டிஸ் அணிகள் அரையிறுதி போட்டியில் இடம் பிடிக்கலாம். உங்களோட சாய்ஸ் என்ன ??

Friday, October 20, 2006

மற்றும் ஓர் தீபாவளி வாழ்த்து....

:-)))o

தீப ஓளி வீசும்
பண்டிகைத் திருநாளாம்
தீபாவளியை
இனிதே கொண்டாடி
மகிழ்ந்திட வாழ்த்துகிறோம் !!


:-)))o

அன்புடன்,
'சுறுசுறுப்பான' சோம்பேறி பையன்

<<<>>>>

தீபாவளி சம்பந்தமாய் வந்த பெரும்பாலான இணைய இடுகைகளில் சென்று பின்னூட்டம் இட்டாகி விட்டது. நண்பர்களுக்கெல்லாம் மின்னஞ்சலிலும், செல்பேசி குறுஞ்செய்திகளிலும் வாழ்த்து அனுப்பி விட்டோம். உறவினர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தாயிற்று. இருந்தாலும் எம் போன்ற கவிஞர்களுக்கு(?) அழகு தீபாவளியை ஓர் கவிதையுடன் கொண்டாடுவதே! இதோ....

<<<>>>>

புத்தம்புது ஆடைகள்,
விதவிதமான திண்பண்டங்கள்,
வீடுகொள்ளா உறவினர்கள்,
பயமுறுத்தும் அதே சமயத்தில்
ஆர்வமூட்டும் வெடிகள்,
வானொலி செய்திகளில் வரும்
பிரபலங்களின் வாழ்த்துகள்,
தெருமுழுக்க சிதறி கிடக்கும்
பட்டாசு காகிதங்கள்,
காற்றில் மிதந்து வரும்
வெடிவாசனையுடன் கூடிய புகை,
பரவசமூட்டும் பண்டிகை
கொண்டாடங்கள்...
இவையனைத்தும் இல்லாமல்
மடிக்கணினியில் உலாவும் இணையம்,
கைத்தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள்,
தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சிகள்,
அடுக்குமாடி அண்டைவீட்டாரின் 'ஹேப்பி திவாளி',
மெக்டொனால்ட்ஸின் பிஸ்ஸா
என்று கழியும் எங்களுக்கு
இத்தீபாவளி திருநாள்....
இருந்தாலும் அடுத்த தீபாவளியை
எதிர்நோக்கி ஆர்வமாய் காத்திருப்போம் !!!!

<<<>>>>

தீபாவளியை ஊருக்கு சென்று வீட்டோடு கொண்டாட இயலாத, எம் போன்ற எண்ணற்ற பேச்சிலர் நண்பர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம் !!

<<<>>>>

Thursday, October 19, 2006

என்னடா சொல்கிறாய், நீ ???



காதல் கவிதைகள் பெரும்பாலும் ஆணின் பார்வையிலேயே எழுதப் படுகின்றன. ஆனால் பெண்களின் உணர்வுகள், பார்வைகளுடன் வெளிவந்திருக்கும் காதல் கவிதைகள் குறைவே! அகநானூறு போன்ற தமிழ் இலக்கியங்களில் தலைவியின்(பெண்களின்) காதல் பாங்கு அழகுடன் விளக்கப் படுகின்றது! இக்கவிதை அத்தகைய ஓர் முயற்சியே!

<<<<<<>>>>>>

தூக்கமே வருவதில்லை...
அப்படியே வந்தாலும்
தூக்கத்தில் சிரிக்கிறேன்
என்கிறார்கள் தோழிகள்....
கனவுகளிலும்
உன் ஞாபகம்தான்...

பசிக்கிறது....
ஆனால் எதுவும் சாப்பிட பிடிக்க வில்லை...
தட்டில் கை அலை பாய்கிறது...

படிக்கும் போதும்,
எழுதும் போதும்,
குளிக்கும் போதும்
பயணிக்கும் போதும்,
எப்போதும் உன் ஞாபகம்தான்..

கண்ணாடியை பார்க்கும்போதெல்லாம்
என்னில் உன்னை பார்க்கிறேன்...
ஆதலால் கண்ணாடியைப் பார்த்து
பேசிக் கொண்டிருக்கிறேன்
உன்னிடம் பேசுவதாய் நினைத்து....

தோழிகளுடன் உரையாடும் போதும்
திடீர் திடீரென
உன்னைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவதால்
தடங்கலிடும் விவாதங்களால்,
விவாதப் பொருளாகிறேன் நான்...

என் செல்பேசியில் வரும்
ஒவ்வொரு குறுஞ்செய்தியும்
உன்னையே ஞாபகப் படுத்துவதால்
செல்பேசிக்கு கிடைக்கின்றன கூடுதல் முத்தங்கள்...
கூடவே அலுவலக தோழிகளின் வியப்பு பார்வைகள்...

தினமும் முன்செலுத்தப்படும் மின்னஞ்சல்களில்
எங்காவது உன் பெயர் இருந்தால்,
அதற்காகவே சேமிக்கப்படுகின்றன
அவ்வஞ்சல்கள், என் கணிணியில்...

குளித்துவிட்டு உடல் துடைக்காமல்
ஆடையணிந்து அலுவலகம் கிளம்பும்
சம்பவங்கள்
அடிக்கடி நிகழ்கின்றன...

உலகம் என்னை கோமாளி என்கிறது..
என்னடா சொல்கிறாய் நீ ??

<<<<<<>>>>>>

நண்பர் சிறில் அலெக்ஸ், தனது 'தேன்' வலைப்பதிவுத் தளத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பு அளித்து, அத்தலைப்பில் ஏதாவது எழுதச் சொல்கிறார். அவர் அக்-13 அளித்த கோமாளி என்ற தலைப்பே இக்கவிதைக்கான தூண்டுதல். அவருக்கும், கவிதைக்கான படத்தை மின்னஞ்சலில் முன்செலுத்திய நண்பர் கிருஷ்ணா ராஜப்பாவிற்கும் நன்றிகள் பலப்பல !!

<<<<<<>>>>>>

//உலகம் என்னை கோமாளி என்கிறது..
என்னடா சொல்கிறாய் நீ ??//

உலகம் கவிதை நாயகியை கோமாளி என்று சொல்வது இருக்கட்டும், இம்மாதிரி காதலில் மூழ்கி புற உலகத்தை மறந்திருக்கும் காதலர்களை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ??

<<<<<<>>>>>>

Tuesday, October 17, 2006

கவிதைக்கு மெய் அழகு...

1


முருகன்..
கணேசன்..
இயேசு..
அல்லா..
அனுமான்..
பாலாஜி..
சிவன்..
எத்தனை பெயர்கள் இறைவா உனக்கு !!
ஒன்றிற்காவது இருக்கிறதா கடன் அட்டை* ??

~~~~~

* கடன் அட்டை - கிரெடிட் கார்டு

<<<<<>>>>>

2


ஸ்ரீராமஜெயம்
ஸ்ரீராமஜெயம்
ஸ்ரீராமஜெயம்
...
...
...
ஸ்ரீராமஜெயம்
நூற்றியெட்டு முறை
எழுதி அனுப்பினேன் மின்னஞ்சலை
ஸ்ரீராமர்@இந்திரலோகம்.காம் !!!
முகவரி சரியில்லை என திரும்பி
வந்து விட்டது,
யாராவது சொல்லுங்களேன்
ஸ்ரீராமர் எங்கேயிருக்கிறார் என்று ???

<<<<<>>>>>

3


நாட்டில் எங்கும் ஊழல் பெருகி விட்டது..
அரசியல்வாதிகள் ரொம்பவும் மோசம்..
என
பயணச்சீட்டில்லாமல் ரயிலில் பயணிப்பவர்
நிஜமாகவே கவலைப் படுகிறார் !!

<<<<<>>>>>

4


நாற்பதாயிரம் சம்பளம் வாங்கும்
கணிணி மென்பொருளாளர்
நான்கு ரூபாய்க்காக காய்கறிக் கடையில்
பேரம் பேசி, சண்டை போட்டு வெல்கிறார்...
வீட்டிற்கு வந்ததும்,
பெண் தோழியிடம் செல்பேசியில்
நாற்பது நிமிடங்கள் கதைக்கிறார் !!!

<<<<<>>>>>

5


நேரம் போவதே தெரியாமல்
எத்தனையோ நாட்கள்
தொலைபேசியில் கதைத்திருக்கிறோமடி,
உன் தங்கையே நீ அறிமுகப் படுத்தும் வரை...
இப்போதெல்லாம்
உன்னை நினைத்துப் பார்க்கக் கூட
நேரமில்லை !!

<<<<<>>>>>


பின்குறிப்பு : உங்களுக்கு எந்த கவிதை ரொம்ப பிடித்திருக்கிறது என்பதை பின்னூட்டத்தில் (எண்ணை மட்டும்) மறக்காமல் சொல்லுங்கள் !! எதுவுமே பிடிக்கவில்லையென்றால் சிரிப்பான் ஒன்றை போட்டு விடுங்களேன் :-)) கவிதைகளை மேம்படுத்த மாறுதல் ஆலோசனைகளும் வரவேற்கப் படுகிறது!

Friday, October 13, 2006

நில், கவனி, யோசி..

"சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளிலிருந்து சமூகம் விடுதலையடைய வேண்டும். இக்குறிக்கோளை அடைய என் உயிரையும் தியாகம் செய்ய தயாரக இருக்கிறேன். மாணவர்களாகிய நீங்களே, நாளைய சமுகத்தை மாற்றப் போகும் தூண்கள், எனவே இத்தகைய வேறுபாடுகளை களைந்து, படிப்பால், உழைப்பால் முன்னேறி வாழ்க்கையில் நீங்கள் வெற்றிநடை போட வாழ்த்துகிறேன் !!" பலத்த கைதட்டல்களுக்கு இடையே மேடைப் பேச்சை முடித்துக் கொண்டு கீழே இறங்கினார் முத்துமாணிக்கம்.

முத்துமாணிக்கம் மலைக்கோட்டை மாநகரின் பிரபல தொழிலதிபர். திருச்சி கைலாசபுரம் அருகே பெல் நிறுவனத்தைச் சார்ந்து இயங்கும் ஓர் பெரிய தொழிற்சாலைக்கு சொந்தக்காரர். சில, பல கல்விக்கூடங்களையும் நடத்தி வருகிறார். லயன்ஸ், எக்ஸ்னோரா மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் தலைவராகவோ, பொருளாளராகவோ, செயலாளராகவோ இருக்கிறார். தொண்டு நிறுவனம் ஒன்று, இவருடைய சேவையைப் பாராட்டி 'சமூகக் காவலர்' என்று பட்டம் கூட கொடுத்திருக்கிறது. திருச்சியில் புகழ்பெற்ற ஓர் கல்லூரி ஆண்டுவிழாவில்தான் மேற்கண்டவாறு பேசிவிட்டு அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்.

அலுவலகத்தில் நுழைந்து இருக்கையில் அமர்ந்தவுடன், காரியதரிசி உள்ளே வந்து "சார், ஷிப்ட் சூப்பர்வைசர் வேலைக்கு இண்டர்வியூ முடிந்து விட்டது, மூன்று பேர் கடைசி லெவல் வரை வந்து இருக்கிறார்கள். நீங்கள் இறுதி இண்டர்வியூ நடத்திவிட்டால் மூவரில் ஒருவரை தேர்ந்தெடுத்து விடலாம்..." என்றார்.

முத்துமாணிக்கம் "எனக்கு இப்போ நேரமில்லை, அவங்களைப் பத்திய விபரங்களை கொண்டு வாங்க.." என்றார்.

"...சார்.. அந்த மூணு பேர்ல ஒருத்தன் நம்ப ஜாதி பையன்..." - காரியதரிசி.

"அப்ப, அந்த பையனையே அப்பாயிண்ட் பண்ணிடுங்க.." என்றார் சமூகக் காவலர் முத்துமாணிக்கம் !!

***

தேன்கூடு - தமிழோவியம் இணைந்து நடத்தும் அக்டோபர் மாத போட்டிக்கான சிறுகதை.

Monday, October 09, 2006

மழைச்சாரலில் நனைந்த கவிதைகள்



1

மழை பொழியும் பின்னிரவுகளில்
சுடச்சுட தேநீருடன்
வராந்தாவில் நின்றபடியே
மழையை ரசிக்கும்போதும்
ஞாபகத்திற்கு வருவதில்லை,
வீடில்லாமல் மழையில் நனைந்தபடியே
தெருவில் உறங்கும் மக்களின் வாழ்க்கை !!

***

2

நேரம் போவதே தெரியாமல்
எத்தனையோ நாட்கள்
தொலைபேசியில் கதைத்திருக்கிறோம்,
உன் தங்கையை நீ அறிமுகப் படுத்தும் வரை...
இப்போதெல்லாம்
உன்னை நினைத்துப் பார்க்கக் கூட
நேரமில்லை !!

***

3

மழையில் நனையும் கார்
நடுவீதியில் நின்றவுடன்
கூப்பிடாமலேயே ஓடிவந்து
தள்ளிவிடும் தெருவில் வசிக்கும் சிறுவர்கள்...
பிச்சைக்காரருக்கு
சூடான சாதம் போடும்
பக்கத்து வீட்டு பாட்டி...
வழி தெரியாமல் தவிக்கும்
வெளியூர் காரருக்கு
கூடவே வந்து பஸ் ஏற்றி
விடும் கடலை விற்பவர்...
கீழே தவற விட்ட பணத்தை
கூப்பிட்டு எடுத்துக் கொடுக்கும்
வழிப்போக்கர்...
இவர்களுக்காக
இன்னும் இருக்கிறது ஆகாயம் !!!!

***

கடைசிக் கவிதை தமிழ்ச் சங்க போட்டிக்காக எழுதப் பட்டது. உங்களுக்கு எந்த கவிதை ரொம்ப பிடித்திருக்கிறது என்பதை பின்னூட்டத்தில் (எண்ணை மட்டும்) மறக்காமல் சொல்லுங்கள் !! எதுவுமே பிடிக்கவில்லையென்றால் சிரிப்பான் ஒன்றை போட்டு விடுங்களேன் :-))

Friday, October 06, 2006

மினி உலகக் கோப்பை கிரிக்கெட் - முன்னோட்டம்

கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் மீண்டும் நாளையிலிருந்து(அக்-7)ஆரம்பமாகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள் நாளையிலிருந்து இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் தொடங்குகின்றன. இதற்கான முன்னோட்டமே இந்த இடுகை.

இலங்கை, மேற்கிந்திய தீவுகள், கென்யா & வங்காளதேச அணிகள் தகுதிச் சுற்றில் மோதுகின்றன. இதில் இலங்கை & மேற்கிந்திய தீவுகள் அணிகள் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து பாகிஸ்தான், தென்னாப்ரிக்க அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது. இந்தியாவிற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. 2005ல் இந்தியா பிரகாசிக்க காரணமான பதான், தோனி போன்றோரின் ஃபார்ம் கவலை தரும் அம்சம். பந்துவீச்சில் அணி மிகப் பலவீனமாக உள்ளது.

இங்கிலாந்து அணி ப்ளிண்டாப், வான், ஜோன்ஸ் போன்றோர் இல்லாமல் தடுமாறி வருகிறது. நியுசிலாந்து அச்சுறுத்தும் அளவுக்கு இல்லை. இலங்கை முரளி, வாஸ், ஜெயசூர்யா போன்றோரின் ஆட்டத்தைப் பொறுத்து போட்டி தரும்.

போட்டிகள் அனைத்தும் சோனி-மேக்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகின்றன. திருவிழாவுக்கு தயாராகுங்கள்.

கோப்பையை வெல்ல என்னோட சாய்ஸ் ஆஸ்திரேலியாதான், உங்களோட சாய்ஸ் என்னன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க !!!

***

இந்த இடுகை சோம்பேறி பையனின் வலைத்தளத்திலும், கிரிக்கெட் கூட்டுப் பதிவிலும் பதிவிடப்படுகிறது.

Thursday, October 05, 2006

உள்ளாட்சித் தேர்தல் 2006 - கார்ட்டூன்

உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளன. சிக்குன்குனியா நோய் தீவிரமடைந்துள்ள இந்நிலையில் எதிர்க்கட்சிகள் இதையே ஆயுதமாக எடுத்துள்ளன. அரசாங்கமோ, நோயின் தீவிரத்தை உணராமல் சப்பைக்கட்டு கட்டி வருகிறது. தேன்கூடு போட்டியின் இந்த மாத தலைப்பைப் பார்த்தவுடன் இது குறித்து, என் மனதில் உதித்த கார்ட்டூன் இது.

கார்ட்டூனைப் பார்த்து, ரசித்து உங்கள் கருத்தை மறவாமல் சொல்லுங்கள். அனேகமாக தமிழ் வலைப்பதிவுகளில் இதுவே முதல் கார்ட்டூன் என நினைக்கிறேன், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் !!



***

தேன்கூடு-தமிழோவியம் அக்-06க்கான போட்டிக்கான கார்ட்டூன்.

Wednesday, September 20, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 71 to 74

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்

1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40, 41 to 45, 46 to 50, 51 to 55, 56 to 60
61 to 65, 66 to 70


71. மெளனம் கலைந்தே ஓட.. - சிறுகதை - வசந்த்

பெண் பார்க்க செல்ல முடிவு செய்து, செல்லும் சில நாட்களுக்கு முன்பு ஓர் விபத்தில் இறந்து விடுகிறார் கதாநாயகனுக்கு லிப்ட் கொடுப்பவர். மணப்பெண்ணாக ஆகப்போகிறவரோ பல கனவுகளுடன் பெண் பார்க்க வருவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இவர்களின் உணர்வுகளே, கதை. "..இவ்ளோ வருஷமா தெரிஞ்சுக்காத சமையலை இந்த ஒரு வாரத்துல கத்துக் குடுக்கணும்னு நினைக்கிறாங்க..." போன்ற வரிகளில் மெலிதான கிண்டலை உணர முடிகிறது. இருந்தாலும் அருணல்லவா, ஆர்த்தியை பெண் பார்க்க செல்கிறார். நடுவில் ஆர்த்தி எப்படி பாலுவை நினைத்து கொண்டு இருக்கிறார் என்று குழப்பம் வருகிறது. உரையாடல்கள், வர்ணனைகள் சுவாரஸ்யம். மெளனம், மெலிதான குழப்பம் !!

மதிப்பெண் : 73 / 100

*****

72. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - கவிதை - anamika

மழையில் நனைந்து கொண்டு நின்றிருக்கும் பெண் லிப்ட் கேட்கிறார். லிப்ட் கொடுத்தவுடன் காதல் வருகிறது நாயகனுக்கு.
""கண்டதும் காதல்" என்னாலும் நம்பியதில்லை
இன்றெனக்கு உணர்த்தினாய்
என்று உன்னைக் காண்பேனோ?" போன்ற வரிகளை சொற்பிழை (என்னாலும் / எந்நாளும்) மறந்து ரசிக்கலாம். கவிதை, முயற்சி !!

மதிப்பெண் : 66 / 100

*****

73. அல்லக்கை - சிறுகதை - இன்பா

ஓர் அடிமட்ட அரசியல்வாதியின் கதையை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார். கதை படுயதார்த்தமாக பயணிக்கிறது. "..போன ரெண்டு எலக்சனுக்கும் நான் தானே அவருக்கு முன்னாடி நின்னு தேர்தல் வேலை பார்த்தது. இத்தனை வருசம் கட்சியில இருந்திருக்கோம் இதுவரைக்கும் ஒரு வார்டு கவுன்சிலர் போஸ்ட்டுக்காவது சீட்டு கேட்டிருப்பேனா?.." போன்ற வரிகள் மனதில் நிற்கும். முடிவு, நச்சென்று உள்ளது. அல்லக்கை, அரசியல் வாழ்க்கை !!

மதிப்பெண் : 79 / 100

*****

74. மனசில் லிப்ட் கிடைக்குமா - கவிதை - சேவியர்

லிப்டில் செல்லும் பெண்ணிடம் மனதை பறிகொடுத்த இளைஞனைப் பற்றிய கவிதை.
"அவள்
இதழோரம் வழிந்தது
இருபதாம் நூற்றாண்டின்
நம்பிக்கைச் சிரிப்பு." போன்ற வரிகளை ரசிக்கலாம். கவிதை, பொழுதுபோக்கு !!

மதிப்பெண் : 70 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக இடுங்கள். நன்றி !

*****

குறிப்பு : இதுவரை 74 பதிவுகள் வந்திருக்கின்றன. அனைத்திற்கும் இத்துடன் விமர்சனங்கள் முடிவடைகின்றன. 12 நாட்கள் விடுமுறையில் ஊருக்கு கிளம்புகின்றேன். மீண்டும் அக்-3ம் தேதி சந்திப்போம். தங்கள் பின்னூட்டங்கள் அப்போது வரை வெளியாகாது. இதற்கு மேல் வரும் படைப்புகளுக்கு, இந்த மாதத்தில் அதிக படைப்புகளை அளித்த 'வசந்த்' அவர்களை விமர்சனம் வழங்க, இப்பதிவின் மூலம் கோருகிறேன் !! நன்றி !!

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 66 to 70

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்

1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40, 41 to 45, 46 to 50, 51 to 55, 56 to 60
61 to 65


66. தூக்குங்கள் தூக்குங்கள் - புதிர் - Ilackia

மிகக் கடியான புதிர். இருமுறை முயன்று மூன்றாம் முறையே புரிந்து(?)கொள்ள முடிந்தது, நீங்களும் முயலலாம். புரிந்து கொண்டால், சிரிக்கலாம்(?). புதிர், கடிச் சிரிப்பு !!

மதிப்பெண் : 50 / 100

*****

67. எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? - 3 - தொடர்கதை -யோசிப்பவர்

டைம் மிஷினுடன் எதிர்காலத்துக்கு பயணிக்கும் சாப்ட்வேர் இளைஞனின் கதை. எதிர்காலத்தின் லைப்ரரிக்கு செல்லும் கதாநாயகன், தனது கண்டுபிடிப்பு தவறாக மாறுபடுத்தப்பட்டு, சுற்றுப்புற சீர்கேட்டை விளைவித்து, பூமியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதைக் காண்கிறார். நிகழ்காலத்திற்கு திரும்பவும் வந்து ஆராய்ச்சியை நிறுத்தி, குறிப்புகளை அழித்து விடலாம் என முடிவு செய்கிறார் என இப்பகுதி முடிகிறது. "HF312 என்னும் சாதுவான ரேடியோ ஆக்டிவ் தனிமம்.." போன்றவையும், ரேடியோ ஆக்டிவ் கழிவு, HF312 போன்றவை சுவாரஸ்யமாக இருக்கின்றன. கதை இப்பகுதியில் சூடு பிடித்திருக்கிறது. ஏற்கனவே கூறியது போல் கதைக்களம், வர்ணனைகள் கதைக்கு பலம். தொடர்கதை, அறிவியல் த்ரில்லர் !!

மதிப்பெண் : 81 / 100

*****

68. தூக்கல் வாழ்க்கை - கவிதை - நடராஜன் ஸ்ரீனிவாசன்

நிலைமண்டில ஆசியப்பாவில் அமைந்த ஓர் மரபுக் கவிதை. அழகான முயற்சி. இலக்கணம் தெரியாதவரும் ரசிக்கும்படியான எளிமையும், சொல்வளமும், கருத்தும் கவிதைக்கு பலம். "மடியில் இடுப்பில் மாசறு பால்தர வடியும் எச்சில் மைந்தரைத் தூக்கினாள்" போன்ற வரிகளை ரசிக்கலாம். கவிதை, கருத்துக் கலம் !!

மதிப்பெண் : 86/ 100

*****

69. தீயினால் சுட்ட புண்!!! - சிறுகதை - வெட்டிப்பயல்

சிறுவயது நண்பர்களான இருவர், நடுவில் தொடர்பில்லாமல் வளர்ந்து, பின் வாழ்க்கையில் இணைவதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். உறவினர் கல்யாணத்தில் சந்திக்கும் பெண், அவரை சிறுவயதில் கையில் சூடு வைத்தது, பின் நட்பு, முடிவில் கல்யாணம் என கதை வேகமாக பறக்கிறது. ரசிக்கும்படியான உரையாடல்கள், வர்ணனைகள் கதைக்கு பலம். "..ஓ!!! அருண் பையன் இல்லயா? மனசன கொழப்பறதுலயே இருங்க...மம்மி வீட்டுக்கு வா உனக்கு இருக்கு..", "..அம்மா நீயே என் தெய்வம். உனக்கு கண்டிப்பாககோவில் கட்டணும்..." போன்றவை வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன. தீயினால் சுட்ட புண், குளிரும் கலக்கல் !!

மதிப்பெண் : 88/ 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

ஹோம்சயின்ஸ், பிரிக்கால்னு எழுதி மனச தொட்டுட்டீங்க போங்க. உதய் GCTன்னு நெனக்கிறேன்..
அவினாசிலிங்கத்துல இன்ஜினியரிங் காலேஜ் இருக்குதா?
//இத்த 'என்னது காந்தி செத்துட்டாரா' ஸ்டைலில் படிக்கவும் :)) //
அடங்கொக்கமக்கா..., ஊரே மாறிட்டாப்புல இருக்கு.

- பெத்த ராயுடு

*****

70. அவசரமாய் போய்கொண்டிருந்தேன்... - கவிதை - தொட்டராயசுவாமி

மனிதநேயத்தையும், யதார்த்தத்தையும் இணைத்து ஒரு கவிதை. கவிதை அழகு சற்று குறைந்து, உரையாடல் போல் தோற்றமளிப்பது சிறு பலவீனம். ..பத்ரிக்கொண்டிருந்தனர்... / பதறி , அதை விழகி சென்றால்../ விலகி, மிகக / மிக்க, விழகிய கூட்டம் / விலகிய, கோனளாக../ கோனலாக என்று நெடுக தோன்றும் சொற்குறைகளை தவிர்த்திருக்கலாம். இதையும் மீறி கதையின் கருத்து ரசிக்க/பாராட்ட வைக்கிறது. கவிதை, முயற்சி !!

மதிப்பெண் : 68 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். விமர்சனங்கள் பற்றிய உங்கள் கருத்தை, இங்கே பின்னூட்டமாக இடுங்கள். நன்றி !

*****

Tuesday, September 19, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 61 to 65

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்

1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40, 41 to 45, 46 to 50, 51 to 55, 56 to 60


61. லிஃப்ட் கொடுத்தவர்கள் - சிறுகதை - அஹமது சுபைர்

நல்ல வேலை கிடைக்க உதவி செய்த கல்லூரி நண்பனையும், நேர்முகத் தேர்வுக்கு லிப்ட் கொடுத்த அறிமுகமில்லாதவரையும் மறக்காத அனுபவக் கதை. "..போடா லூஸு...அவன் முகத்தில முழிச்சதால தான் நான் டெஸ்ட்ல பாசானேன். அவன் முகத்தில முழிச்சாதான் இன்டெர்வியூ நல்லா பண்ண முடியும்..." போன்ற வரிகள் சிரிக்க வைக்கின்றன. கதையின் பின்குறிப்பு மனதைத் தொடுகிறது. சிறுகதை, நெகிழ்வு !!

மதிப்பெண் : 75 / 100

*****

62. ஒரு தலைப்புச் செய்தி - சிறுகதை - நடராஜன் ஸ்ரீனிவாசன்

நக்சலைட் ஒருவனின் நாசவேலைக்கான பயணத்தையும், அவன் மாட்டிக் கொள்வதையும் பற்றிய கதை. வித்தியாசமான கதைக்களம். இருந்தாலும் சற்று அலுப்பு தட்டுகிறது. துரவர், சீருந்து போன்ற தூய தமிழ்(?) வார்த்தைகள் ரசிக்கவும், யோசிக்கவும் வைக்கின்றன. கடைசி வரி நச். சிறுகதை, வித்தியாசம் !!

மதிப்பெண் : 78 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

...இதற்கு முதல் பரிசு கிடைக்கவில்லையெனில்....போட்டி நடுவர்களைச் சந்தேகிப்பதைத் தவிர வேறு வழியில்லை! என் வோட்டு நிச்சயம்!

- SK

*****


63. லிப்ட் கிடைக்குமா மீனாட்சிக்கு? - நிகழ்வு - barath

பாலியல் தொழிலாளி ஒருவளின் குழந்த வரைந்த ஓவியத்தையும், அவர்களின் வாழ்க்கையையும் பற்றிய அற்புதமான படைப்பு. படைப்பின் கருத்தும், எழுதிப்பட்ட விதமும் நெகிழ்வு. "இவர்களில் எத்தனைபேரின் குழந்தைகளுக்கு தந்தை என்ற உறவு கிடைத்திருக்கிறது என்பது தெரியவில்லை." போன்ற வரிகள் சுடுகின்றன. இக்குழந்தைகளுக்கு கல்வியறிவு கிடைக்க சமூகம் உதவ வேண்டுகிறார். நிகழ்வு, சமூக அக்கறை !!

மதிப்பெண் : 85 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

கட்டாயம் வாழ்க்கையில் லிப்ட் கிடைக்க வேண்டியது இவர்களுக்குதான். பெரியோர் செய்யும் தவறின் தண்டணையை இந்த பிஞ்சுகள் சுமக்க வேண்டியுள்ளது மிக கொடுமை.

- அனுசுயா

*****


64. மீட் த பெஸ்ட் ஃப்ரெண்ட் - சிறுகதை - சரவ்

இரு நண்பர்கள் ஓரிடத்தில் (எங்கே என்பது சஸ்பென்ஸ்) சந்தித்து கொள்கிறார்கள். அவர்களின் உரையாடல், அவர்களில் ஒருவர் எப்படி அங்கே வந்தார் என்பதை சுவாரஸ்யமாக(?) சொல்லியிருக்கிறார். பின்புலத்தில் ஒரு ஜொள்ளான விபத்து. க்ளைமேக்ஸ் கலக்கல். படித்ததும், திரும்பவும் ஒருமுறை கதையை படிக்க வைக்கிறார் (வேறு புரிதலோடு). "ஜானத்தன், ‘அதுசரி மாப்ள, நீ எப்டிடா இங்க?.." போன்றவற்றை இரண்டாம் முறையில் நிறையவே ரசிக்கலாம். சிறுகதை, ஜொள் !!

மதிப்பெண் : 80/ 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

ஒரு த்ரில்லர் கதை எழுதலாம்-னு ஆரம்பிச்சேன். கொஞ்சம் ஜொள்ளரா ஆய்டுச்சு!!

- சரவ்

*****


65. மொழிபெயர்ப்பு - சிறுகதை - நடராஜன் ஸ்ரீனிவாசன்

தூய தமிழ் வார்த்தைகளுடன் எளிமையான ஓர் கதை. சேவைப் பொறியாளனான அசோகன், ஓரிரவில் சந்திக்கும் சம்பவம்தான் கதை. "..மீண்டும் அந்த பூனைக் குரல் வந்தது. இல்லை! அது பூனை இல்லை!!அசோகனுக்கு மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன." போன்ற வரிகள் திரில்லை (பயத்தை) அதிகமாக்குகின்றன. எதிர்பாராத, யதார்த்தமான க்ளைமேக்ஸ். சிறுகதை, உருக்கம் !!

மதிப்பெண் : 74 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக இடுங்கள். நன்றி !

*****

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 56 to 60

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்

1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40, 41 to 45, 46 to 50, 51 to 55


56. எங்க வீட்டு ராமாயணம் - சிறுகதை - சிதம்பரகுமாரி

அப்பா வாங்கிக் கொடுத்த புது சைக்கிளில் ஊர் சுற்றப் போகும் சிறு பெண், அவளை சுற்றிய உலகம் என்று செல்லும் கதை. சிறுபெண்ணின் கற்பனையில் வரும் சம்பவங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. விலங்குகளுக்கு பெயர் கொடுத்திருப்பது ரசிக்க வைக்கிறது. "..மேரி தான் சிரிப்பை அடக்கி, அந்த யானையை பார்த்து கேட்டாள், "அடப்பாவி, உன்னோட கல்யாணதுக்குமாடா லேட்டா வருவ?" மாப்பிள்ளை ராமு வெட்கப்பட்டு சிரிக்க.." போன்ற வரிகள் சிரிக்க வைக்கின்றன. ராமாயணம், குழந்தைகளுக்கு !!

மதிப்பெண் : 75 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

keerthana yeppadi vetuku vanda avalukuthan vali theriyathe?mathapadi kathai fulla reeel

- Kavitha

*****

57. பாகிஸ்தானியுடன் ஒரு லிஃப்ட் - அனுபவம் - உமா கதிர்

வேலை தேடி துபாய் சென்ற இடத்தில், ஓர் பாகிஸ்தானியருடன் பயணிக்கிறார். இது தொடர்பான சம்பவங்களும், உரையாடல்களும் அனுபவமாக எழுதியிருக்கிறார். இயல்பாக செல்லும் படைப்பில் "..வந்திட்டேன்னு சொல்றத விட வீட்லருந்து அனுப்பிட்டாங்கன்னுதான் சொல்லணும். வந்த புதிதில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை என்பது தெளிவாகவே புரிந்துவிட்டது.." என்று பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் மாறுவது சற்று நெருடுகிறது. "நீங்க நினக்கற மாதிரி எல்லாரும் அப்படிப்பட்டவங்க கிடையாது. ஒருசிலர் செய்கிற தவறுகளால் ஒட்டுமொத்த பழியும் மக்கள் மேல வந்திடுது." போன்றவை சிந்திக்க வைக்கின்றன. அனுபவம், வாழ்க்கைப் பயணம் !!

மதிப்பெண் : 76 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

தம்பி, நல்ல பதிவு
//தங்கமான மனசு அந்த ரிஸப்ஷனிஸ்ட் பொண்ணுக்கு. //
அப்படியா :)) ??

- சந்தோஷ்

*****

58. பதிவுக்கு மேய்க்கி - பதிவு - bsubra786

லிப்ட் என்ற தலைப்பில் வலைப்பதிவுகளில் இடுகைகள் வந்தால் எப்படியிருக்கும் என படம்பிடித்து காட்டியிருக்கிறார். ஈ.தமிழ், கில்லி, தேர்தல் 2006, தடிப்பையன் போன்ற வலைப்பதிவுகளில் வரும்/வந்த(?) இடுகைகள் என்று சிலவற்றை எழுதியிருக்கிறார். "பிரிட்டிஷாருக்கு பதில் அமெரிக்கர், இந்தியாவை ஆண்டிருந்தால் 'கொஞ்சம் எலிவேட்டர் கிடைக்குமா?' என்று கொங்கு ராசா தலைப்பிருப்பார்...", "இந்த மாதிரி பிற வலையகங்களில் இருந்து உருவி எழுதுவதை லிஃப்ட் எழுத்து என்பார்கள்." என்று நெடுக தொடரும் கிண்டல் பதிவு பற்றிய குழப்பத்தையும்(?) மீறி சிரிக்க வைக்கிறது. எதிர்காலம் 2036க்கும் ஓர் பகுதியில் பயணித்திருக்கிறார். மொத்தத்தில் பதிவுக்கு மேய்க்கி, மெகா புதிர் !!

மதிப்பெண் : 75 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

சரவ், பதிவெழுதி இரண்டு நாளாகியும் எவரும் சீந்தாத நிலையில் நண்பருடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.
'உன் கதை படிச்சேன்... ஒன்னுமே புரியலை'
'ஒரு ரெண்டு பேருக்காவது வெளங்கும்னு தோணுது!?'
'ஒன்று நீ... சரி! அந்த இன்னொருவர் எவர்?'
ஏதோ, மற்றொரு வாசகராவது ரசித்ததில் பெருத்த மகிழ்ச்சி :)

- Boston Bala

*****

59. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - கவிதை - வலைஞன்

வாழ்க்கை மீதுள்ள நம்பிக்கை பற்றிய கவிதை. எளிமையான, சிற்சிறு வரிகள் கவிதைக்கு பலம்.
"எட்டாத தூரத்தில் சிகரம்
எட்டுமென்ற நம்பிக்கை
எனக்குரம்... " போன்றவை ரசிக்க வைக்கின்றன. கவிதை, நம்பிக்கை !!

மதிப்பெண் : 78 / 100

*****

60. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - இருவரிக் கதை - வலைஞன்

இரண்டு வரிகளில் ஒரு அருமையான கதை. க்ளைமேக்ஸ் நச். தேர்ந்தெடுத்த வார்த்தைகள், களம், முடிவு என அசத்துகிறது கதை. நிச்சயம் படிக்க வேண்டும். கதை, கலக்கல் !!

மதிப்பெண் : 84 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக இடுங்கள். நன்றி !

*****

Monday, September 18, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 51 to 55

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்

1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40, 41 to 45, 46 to 50


51. சர்தார்ஜி ஜோக் ஒன்று....கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - ஜோக் - ramkumarn
படு கடியான சிறியதொரு ஜோக். இருந்தாலும் மனம் விட்டு சிரிக்கலாம். தலைப்புடன் சரியாக பொருந்துகிறது. ஜோக், கடிச் சிரிப்பு !!

மதிப்பெண் : 72 / 100

*****

52. லிப்டாக இருக்கிறேனே..! - சிறுகதை - வசந்த்

ரொம்ப கண்டிப்பாக பள்ளி மாணவர்களை நடத்தும் ஓர் டீச்சரின் கதை. ஒரு பிரச்சினையால் இன்னொரு பள்ளிக்கு செல்கின்ற டீச்சர் அங்கே மனம் மாறுகிறார். எளிமையாக, அமைதியாக செல்கிறது கதை. "..ஆனா நாம எல்லா வசதிகளும் இருந்தும், எந்தக் குறை யில்லாம இருந்தும் சாதனை செய்ய யோசிக்கிறோம். முன்னேற எண்ணம் இல்லாம இருக்கோம்.." போன்ற வரிகள் சிந்திக்க வைக்கின்றன. சிறுகதை, மனமாற்றம் !!

மதிப்பெண் : 79 / 100

*****

53. அவன் கண்விடல் - சிறுகதை - குந்தவை வந்தியத்தேவன்

இராணுவத்தில் வேலை பார்க்கும் ஓர் இளைஞன், அவன் சந்தித்து பழகும் அழகிய இளம்பெண் என்று கதை நகர்கிறது. நீளமான வாக்கியங்கள் சற்று அலுப்பைத் தருகின்றன. இதையும் தாண்டி, "சாதாரணமான விஷயமாக அவள் செய்த இதை சாதாரணமா நான் எடுத்துக்கொள்ள நிறைய நேரம் பிடித்தது." போன்ற வரிகளை ரசிக்கலாம். க்ளைமேக்ஸ் எதிர்பார்த்ததே. திருத்தப்பட்ட குறள், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. சிறுகதை, மசாலா !!

மதிப்பெண் : 80 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

ஒரிஜினல் குறள்:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

- சரவ்

*****

54. கடவுள் கேட்ட லிஃப்ட் - சிறுகதை - சேவியர்

லிஃப்ட் கேட்டு வரும் கடவுள், அவருக்கு காரில் லிஃப்ட் தந்து, பேசிய படியே வரும் சராசரி மனிதன், நடுவே நடக்கும் சம்பவங்கள் என வித்தியாசமான கதைக்களம். கடவுளுக்கும், மனிதனுக்கும் நடக்கும் உரையாடல்கள் சிந்திக்க வைக்கின்றன. "நம்பிக்கையில்லாத உலகில் வாழ்ந்து வாழ்ந்து உங்களுக்கு யாரையுமே நம்ப முடியாமல் போய் விட்டது. யாராவது பாராட்டினால் கூட எதையோ எதிர்பார்த்து தான் பாராட்டுகிறான் என்று நினைக்கிறீர்கள்.." போன்றவை நிஜமான சுய பரிசோதனை. யதார்த்தமான முடிவு. கடவுள், தத்துவம் !!

மதிப்பெண் : 82 / 100

*****

55. அவள் - சிறுகதை - நிர்மல்

விலைமாது ஒருவளை வீட்டுக்கு கூட்டி வந்து விடும் நண்பன், அதனால் ஏற்படும் சங்கடங்கள் என நகரும் கதை. "கணேசனுக்கு தலைசூடு அதிகமானது. அவனுக்கும், சண்முகத்துக்கும் வீட்டு வாடகை மற்றும் செலவு கணக்கு தவிர எந்த சொந்தமும் கிடையாது. இவளோ ஓரே வரியில் இரண்டு மாமா போடுகிறாள்..." போன்றவை சிரிக்க வைக்கின்றன. முடிவென்று ஏதுமில்லாமல் சிற்சிறு சம்பவங்களால் நகர்கிறது. சிறுகதை, பொழுதுபோக்கு !!

மதிப்பெண் : 71 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

//என்ன சொல்றதுன்னே தெரியல.//
"
"
"

- அமுதன்

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக இடுங்கள். நன்றி !

*****

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 46 to 50

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்

1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40, 41 to 45


46. எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? - 2 - தொடர்கதை - யோசிப்பவர்

டைம் மிஷினுடன் எதிர்காலத்துக்கு பயணிக்கும் சாப்ட்வேர் இளைஞனின் கதை. டைம் மெஷினில் செல்லும்போது இன்னோர் இளைஞன் லிப்ட் கேட்கிறான். எதிர்காலத்தின் லைப்ரரிக்கு செல்கிறார் கதாநாயகன், அங்கே இன்னோர் பெண்னுடன் லிப்ட்டில் பயணிக்க போவதாக இந்த பாகம் முடிவடைகிறது. அடுத்தடுத்த பாகங்களை எதிர்பார்க்கலாம். கதைக்களம், வர்ணனைகள் கதைக்கு பலம். சஸ்பென்ஸ் போதிய அளவுக்கு உள்ளது. தொடர்கதை, அறிவியல் எதிர்பார்ப்பு !!

மதிப்பெண் : 77 / 100

*****

47. காடனேரி விளக்கு - சிறுகதை - MSV Muthu

அருமையான த்ரில் கதை. காடனேரி விளக்கு நிறுத்தத்திலிருந்து காடனேரி கிராமத்துக்கு இரவு 12 மணிக்கு நடந்து செல்கிறான் ஓர் இளைஞன். அதைச் சுற்றி சம்பவங்களை த்ரில் விறுவிறுப்போடு கலந்திருக்கிறார். வெவ்வேறு பகுதிகளாக சம்பவங்களைக் கொடுத்து, கடைசியில் வாசகர்களையே கதையின் போக்கை ஊகிக்க விடுவது ரசிக்க வைக்கிறது. "பயணிகள் 'தேவதை இளம் தேவி' என்ற பாடலைக்கூட இரசிக்காமல் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்." போன்ற வரிகள் கதையின் த்ரில்லை சற்று விலக்குகின்றன. காடனேரி விளக்கு, ஒளிர்கிறது !!

மதிப்பெண் : 84 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

பங்காளி! பக்கத்துல உள்ள எங்க அரசபட்டி, கரிசல்குளம் எல்லாத்தையும் விட்டுட்டீங்க.

- கார்மேகராஜா

*****

48. கண்டிப்பாடா செல்லம்.. - சிறுகதை - ramkumarn

எத்தனை கதைகள் வந்தாலும், காலேஜ் காதல் கதைகள் மட்டும் அலுப்பதே இல்லை. இன்னுமோர் காலேஜ் காதல் கதை. உணர்வு பூர்வமாக வார்த்தைகளை, உரையாடல்களை வரைந்து விளையாடி இருக்கிறார். "ஒவ்வொரு புன்னகைக்கும் ஒரு கவிதை சேமித்துக் கொண்டிருந்தான்" போன்ற வரிகள் புருவம் உயர்த்த வைக்கின்றன. "அவள் தலையை வருடியபடியே சொன்னான் அவன், கண்டிப்பாடா செல்லம்" என்று முடியும் க்ளைமேக்ஸ் அற்புதம். சிறுகதை, செண்டிமெண்ட் கலக்கல் !!

மதிப்பெண் : 88 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

அந்த பையனும் ஒரு செமஸ்டர்ல ஃபெயிலாகி அப்பறம் மீண்டு வந்தது கொஞ்சம் மனசுக்கு சந்தோஷமா இருந்துச்சு. நான் பாத்து அப்படியே சீரழிஞ்சவங்க தான் அதிகம்.

- வெட்டிப்பயல்

*****

49. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - சிறுகதை - மாதங்கி

சின்னஞ்சிறு கதை. அழகான முடிவு. கதையின் கடைசி வரிகள் நிஜமாகவே எதிர்பாராதது. "..இப்படி ஆள்அரவம் இல்லாத இடத்தில் வாகனம் ரிப்பேர் ஆகி மாட்டிக்கொண்டாகிவிட்டது. தகவல்தொடர்பு சாதனம் வேலை செய்யவில்லை..." போன்றவற்றை இரண்டாம் முறை படிக்கும்போது நிறையவே ரசிக்கலாம். சிறுகதை, சூப்பரப்பூ !!

மதிப்பெண் : 89 / 100

*****

50. நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - சிறுகதை - முரட்டுக்காளை

மற்றுமோர் விண்வெளி அறிவியல் கதை. வர்ணனைகளில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். இ-யுனிட்ஸ், டைட்டன் கிரகம் என்று கதை படு வித்தியாசமாக பயணிக்கிறது. "ஜூபிட்டர் கிரகத்தைச் சுற்றும் பல நிலாக்களில் யுரோப்பாவும் ஒன்று. அங்கு ஒரு நாள் என்பது 85 மணி நேரங்கள் கொண்டது. மூன்று 24 மணி நேர பூமி-நாட்களில்..." போன்றவை வாசகரை விண்வெளி சூழ்நிலைக்கு இழுத்துச் செல்கின்றன. க்ளைமேக்ஸ் எதிர்பார்த்ததே !!

மதிப்பெண் : 75 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக இடுங்கள். நன்றி !

*****

Friday, September 15, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 41 to 45

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்

1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40


41. ஆனா ஆவன்னா... - கவிதை - ஜி.கௌதம்

மாணவர்களை நன்கு பாடம் சொல்லிக் கொடுத்து, அவர்கள் வாழ்க்கையில் உயர காரணமான ஆசிரியரைப் பற்றிய கவிதை. மாணவர்கள் எல்லோரும் நல்ல பொருளாதார நிலைமையில், ஏணியான ஆசிரியரோ கடைநிலையில். இந்த வேறுபாட்டை அழகாக சித்தரிக்கிறது. கவிதைநடை சற்று குறைவாய், உரையாடல் போல் தோற்றமளிப்பது சிறு பலவீனம். கவிதை, சிந்தனை !!

மதிப்பெண் : 75 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

ஏறிய வழியே
திரும்பிப் பார்த்தேன்
அதே இடத்தில
திடமாய் நின்று
என்னைப் பார்த்து சிரித்தது
ஏணி!

- ILA(a)இளா

*****

42. சோம்பேறி பையன் - சிறுகதை - கோவி.கண்ணன்

சோம்பேறியான கணவனை ஆலோசனை கூறி நல்வழிப் படுத்தி, வாழ்க்கையில் உயரவைக்கும் மனைவி, மனைவி சொல்படி நடந்து வெற்றியடையும் கணவனைப் பற்றிய கதை. அமைதியான நீரோடை போல் எளிமையாக செல்கிறது கதை. இதுவே கதைக்கு பலம். "என் மனைவி என்மீது நம்பிக்கை வைத்து படிப்படியாக என் காலடியில் அமைத்த ஏணி என்னை உயரத்தில் கொண்டு நிறுத்தியிருந்து" என்று முடியும்போது கதை, நிறைவு !!

மதிப்பெண் : 80 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

தம்பி...! மாதா மாதம் போட்டி நடத்தினால் அப்பறம் கதைக்கு எங்கே போவது. விக்ரமன் அவதாரம் எடுக்க வேண்டியதுதான் !

- கோவி.கண்ணன்

*****

43. லிப்ட் ப்ளீஸ் - 1 - 2 - 3!!! - தொடர்கதை - வெட்டிப்பயல்

க்ரைம் நாவல் போல் ஒரு தொடர்கதை. இரு வருடங்களுக்கு முன் பண்ணிய ஒரு விபத்தை நினைத்து அதிலிருந்து சற்று மனம் குழம்பி திரிகிறார் கதை நாயகன். மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்று மறுமுறை திரும்ப வரும்முன் மனக் குழப்பத்தால் இறக்கிறார். இதை திரில், க்ரைம் மசாலா தூவி பரிமாற முயற்சித்திருக்கிறார். "அவரோட மிட் பிரைனும் பான்ஸ்ம் இருக்குற ஏரியா அஃபக்ட் ஆகியிருக்கு" போன்றவைக்கு உழைத்திருக்கிறார். பகுதிகளை சரியான முறையில் தெளிவாக முடிக்காதது சிறுகுறை. க்ளைமேக்ஸ் வாசகர்களை சற்று குழப்புகிறது. கதையை விட, முடிவை விளக்கம் சொல்லி போட்ட பதிவு சூப்பர். மொத்தத்தில் கதை, ரசிக்கும்படியான குழப்பம் !!

மதிப்பெண் : 74 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

அனைத்து பின்னூட்டங்களும், தவிப்போடு அனைத்திற்கும் பதிலளித்த படைப்பாளியும்..


*****

44. கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா - சிறுகதை - pavanitha

தந்தைக்கும் மகனுக்குமிடையேயான பாசத்தையும், பரிவையும் சொல்லும் கதை. வாழ்க்கைப் படியில் ஏற்றி விட்ட தந்தையை மறக்காது, நன்றிக் கடன் செலுத்தும் மகன், பாசத்தை கொட்டும் தந்தை என்று கலக்கலான கதைக்களம். உரையாடல்கள், சம்பவங்கள் திடிர் திடீரென தாவி ஓடுவது சிறுகுறை. "டேய் ராஜ்,இந்த வருஷம் உனக்கு ரொம்ப ராசிடா. புது வண்டி அப்புறம் இப்ப கேம்பஸ் இன்டர்வியுல நல்ல வேலை. நடத்துடா." போன்ற உரையாடல்களின் மூலம் தாவுகின்ற கதையில் பலவீனங்கள் சில பலமாக மாறுகின்றன. சிறுகதை, சிறப்பான களம் !!

மதிப்பெண் : 76 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

கதை நல்லா 'நீட்'டா வந்துருக்குங்க. வாழ்த்து(க்)கள்

- துளசி கோபால்

*****

45. லிப்ட் கிடைக்குமா? - கவிதை - madhumitha

ஒவ்வோர் மனிதனுக்குள்ளும் இருக்கும் லிப்ட் ஆபரேட்டரைப் பற்றிய அழகிய கவிதை. நல்ல களம் கவிதைக்கு. வார்த்தைகளில் விளையாடியிருக்கிறார்.
"கிறுகிறுக்கும் உணர்வினை
ரசனையை
மகிழ்வை
புழுக்கத்தை
வெளிக்காட்டாது
இயந்திர மனிதனாய்" போன்ற வரிகளை ரசிக்கலாம். கவிதை, சுய பரிசோதனை !!

மதிப்பெண் : 78 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி !

*****