Tuesday, March 31, 2009

வடபழனி சரவணபவன்

சரவணபவன் உணவகம் சென்னையில் நிறைய இடங்களில் உள்ளன. ஆனாலும் வடபழனியில் சாப்பிடுவது இன்னமும் விசேஷமானது.

பக்கத்திலேயே பிரசித்தமான வடபழனி முருகன் கோவில் உள்ளது. கோவில் தூய்மையாக, அழகாக உள்ளது. திவ்யமான, திருப்தியான தரிசனத்திற்கு வெள்ளி, சனி, ஞாயிறு மாலைகளை தவிர்ப்பது உத்தமம். நாங்கள் வியாழன் மாலை சென்றோம், அதிக கூட்டமில்லை, பொறுமையாக முருகனிடம் உரையாட முடிந்தது.

சரவணபவனில் தென்னிந்திய, வட இந்திய உணவுகளும் கிடைக்கின்றன. தமிழக உணவு வகைகளில் இட்லி, தோசை, வடை போன்றவைகள் விதவிதமாய் கிடைக்கின்றன. நாங்கள் நெய் சாம்பார் இட்லி (மினி இட்லி 14 - நெய் சாம்பாரில் விட்டு), இடியாப்பம் மசாலா கறியுடன், மினி டிபன் (மினி தோசை, நெய் சாம்பார் இட்லி, கேசரி, உப்புமா) எல்லாம் சாப்பிட்டோம். அற்புதமாக இருந்தது, 170 ரூபாய் பில். முன்பொரு முறை அசோக் நகர் சரவண பவனில், சாப்பாடு சாப்பிட்டோம், அதுவும் நன்றாக இருந்தது.

நீங்கள் தரமான தமிழக டிபன் வகையறாக்களை சாப்பிட, சரவண பவன் செல்லலாம்.

உணவகத்தில் வாரியாரின் வெவ்வேறு புகைப்படங்கள், பெரிதாக மாட்டப் பட்டு இருந்தன. ஓரிரண்டு புகைப்படங்களில் அண்ணாச்சியும், பின்னாளில் ஜீவஜோதிக்காக ஜெயில் செல்லப் போவது தெரியாமல் சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

எனது முந்தைய உணவிட வழிகாட்டு பதிவுகள்
மழைக் காடு - அடையார் - சென்னை
அடையாறு சங்கீதாவும், குழிப்பனியாரமும்..

Tuesday, March 24, 2009

சுஜா(தா) தாட்ஸ்

கடந்த ஒரு வாரமாக சுஜாதாட்ஸ் என்ற புத்தகத்தை படித்து வருகிறேன்.

விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள புத்தகம் சுஜாதாட்ஸ். ஜூனியர் போஸ்ட்டில் 1997 - 1998ல் சுஜாதா எழுதிய கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டு உள்ளனர்.

வழக்கம் போலவே எல்லா விஷயங்களையும் தொட்டிருக்கிறார் சுஜாதா.

தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்து விட்டு, நிஜ வாழ்க்கையை கவனியுங்கள் என்கிறார் சுஜாதா. அவர் கேபிள் இணைப்பே வைத்துக் கொள்ளவில்லை என்கிறார், வியப்பாக இருக்கிறது.


இன்னுமொரு கட்டுரையில், தமிழ் சொற்களை பற்றி ஆராய்கிறார். எழுத்தாளன் என்கிறோம், கொலையாளன் என்பதில்லை, கொலையாளி என்கிறோம், ஏன்? என கேட்கிறார். நீங்கள் யாராவது கூற முடியுமா?

மல்ட்டி மீடியா என்பதற்கு தமிழ் வார்த்தையாக ‘பல்லூடகம்’ என்கிறார்.

சிறுகதை ஆரம்பத்திற்கு சில மோசமான உதாரணங்களை காட்டி இருக்கிறார்.
“டுமில் என்று துப்பாக்கி ஒரு முறை உமிழ்ந்தது, சுகரிதா செத்து விழுந்தாள்”.

பெரும்பாலும் முதல் பாராவிலேயே கதையை ஆரம்பித்து விடுங்கள், சுவாரசியமாய் ஆரம்பத்தை அமைத்து, படிப்பவர்களை கதைக்குள் இழுக்க வேண்டும் என்கிறார், சிறுகதை எழுத்தாளர்கள் கவனிக்கவும்.

இந்திய நடனங்களை பற்றி இன்னொரு இடத்தில் கிண்டலடிக்கிறார், ம்யூட் செய்து நடனத்தை பாருங்கள், அபத்தமாக இருக்கும் என்கிறார்.

ஆனாலும், எல்லா கட்டுரைகளுமே சுவாரசியமாக இருக்கின்றன என கூற முடிய வில்லை. கற்றதும், பெற்றதும் கட்டுரைகள் அளவுக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

எல்லோரும் ரசித்து படிக்க முடியும் புத்தகம்!! நீங்கள் படித்திருக்கிறீர்களா? உங்களது கருத்து என்ன??

ஜூனியர் போஸ்ட் இப்போதும் வருகிறதா? இது என்ன தனி இதழா அல்லது இணைப்பா?

Saturday, March 14, 2009

அடையாறு சங்கீதாவும், குழிப்பனியாரமும்..

செட்டிநாடு வகை சிறப்பு பலகாரங்களை, சுவையாக சாப்பிட வேண்டுமென்றால், நீங்கள் அடையாறு சங்கீதா உணவகத்திற்கு செல்லலாம்.
கிண்டியிலிருந்து வரும்போது, அடையார் மத்தியகைலாஷ் சிக்னலை தாண்டி, இடது புற சர்வீஸ் சாலையில் நுழைந்தால், ஒரு நிமிடத்தில் சங்கீதாவை அணுகலாம்.

வார இறுதி மாலை, இரவுகளில் கார் பார்க்கிங் கிடைப்பது கஷ்டம். சர்வீஸ் சாலையில்தான் நிறுத்த வேண்டும். டூ விலரில் செல்வது உத்தமம்.

குழிப் பணியாரம், இடியாப்பம் வடைகறி, அடை அவியல், கேரட் ஹல்வா, பீட்ரூட் போண்டோ, மகாராஜா ஸ்பெசல் மசால் தோசை, பீன்ஸ் வடை, கேரட் வடை, பால் கொழுக்கட்டை, தேங்காய்பால் ஆப்பம் போன்ற பல வகையான உணவுகளை ஒரு பிடி பிடிக்கலாம்.

விலையும், ரொம்ப இருக்காது. இன்று நானும், என் மனைவியும் சென்று ஒரு ஆந்திரா பெசரட்டு, அடை அவியல், இடியாப்பம், குழிப் பனியாரம், பீட்ரூட் போண்டோ எல்லாம் சாப்பிட்டோம், 181 ரூபாய் பில்.

சங்கீதா அடையாறில் மட்டுமல்லாமல், சென்னையில் வேறு சில இடங்களிலும் இருக்கிறது. ஒருமுறை முயற்சித்து பாருங்களேன்..

என்னுடைய சென்ற வார உணவிட வழிகாட்டு பதிவு: மழைக்காடு, அடையார்

Sunday, March 08, 2009

என் மனைவிக்காக, ஓர் கவிதை

அருகிலிருந்தால்
எந்நிமிடமும் ஊடல்தான்..
சிறுசிறு நிகழ்வுகளுக்காய்
நீயும், நானும்
கோபப் படுவோம்..
நீ அருகிலில்லா
இஞ்ஞாயிறு
ஏனோ போரடிக்கிறது..
ஒவ்வொர் நிமிடமும்
மெதுவாய் நகர்கின்றது..
சீக்கிரம் வாயேன்
என்னருமை மனைவியே,
அடுத்த ஊடலை
உடனே அவதானிப்போம்..

மழைக் காடு - அடையார் - சென்னை

அடையார் சிக்னலில் (flyover கீழே) அமைந்துள்ள உணவு விடுதி Rain Forest. உணவும், விடுதியின் சுற்றுப்புற சூழலும், வடிவமைப்பும் மிக அருமையாக உள்ளது.

விடுதியின் கதவே, ஒரு பாதாள அறைக்குள் செல்வது போல் sliding wood ஆக அமைந்துள்ளது. உள்ளே சென்றால் மான் தலை, பாம்புகள், பறவைக் கூடுகள் என அருமையான அலங்கார பொருட்கள்.

உணவும் சுவையாக உள்ளது. உங்களுக்கு south indian, north indian, chinese என்று விதவிதமான உணவு வகைகள் கிடைக்கின்றன. ஒரு சைட் டிஷ் (side dish) ன் விலை சராசரியாக 100 ரூபாய் ஆகிறது. அளவு நிறையவே கிடைக்கிறது (quantity).

இதைவிடவும் பிரமாதமான விஷயம், நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கரடி, ஒற்றைக் கண்ணன் பேய் போன்ற விதவிதமான வேடங்களில் ஒருவர் வருகிறார்.

உங்கள் மனைவியை பயமுறுத்த, இதை விடவும் அருமையான தருணம் மனித உரிமை பேசும் இக்காலத்தில் கிடைப்பது அரிது :-)

இருவர் சென்று 500 ரூபாய்க்குள் திருப்தியாய் சாப்பிட்டு வரலாம்.

என்னங்க மழைக்காடுக்கு கிளம்பிட்டீங்களா, இருங்க ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க..

எஜமான் காலடி மண்ணெடுத்து..

இன்று காலை கே டிவியில் எஜமான் படம் க்ளைமேக்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். நெப்போலியனை அடித்துப் போட்டு, கத்தியை அவரது மார்புக்கு அருகே சொருகி விட்டு, "நான் என்னைக்குமே பதவி, புகழுக்கு அலைஞ்சதில்லை.." என்று பேசிவிட்டு திரும்பி செல்கிறார், பின்னனியில் எஜமான் காலடி மண்ணெடுத்து பாட்டு ஒலிக்கிறது.

வெட்கத்தை விட்டு சொல்கிறேன், நான் தீவிர ரஜினி விசிறி அல்ல, ஆனாலும் எனக்கு இந்த காட்சியை பார்த்த போது புல்லரித்தது. மிகவும் ரசித்தேன். ரஜினியிடம் என்னை மாதிரி சாதாரண ரசிகனையும் கவர்ந்து இழுக்கக் கூடிய சக்தி அவரது நடிப்பால் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். உதயகுமார், திறமையாய் காட்சி அமைத்ததையும் குறிப்பிட வேண்டும்.

எப்போது எஜமான் வந்தது, என தெரிய வில்லை. 1990ல் வந்திருக்கலாம். இன்றும் அந்த படத்தை பார்த்து ஒன்றி ரசிக்க முடிகிறது.

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில், நான் படித்துக் கொண்டிருந்த போது ஒருமுறை டைரக்டர் உதயகுமர் ஆண்டு விழாவுக்கு வந்திருந்தார்.

எஜமான பட நினைவுகளை பற்றி கேட்கும்போது, ரஜினி மீனாவின் பேச்சை கேட்டு பட்டாம் பூச்சி புடிக்க செல்வாரல்லவா, அப்போது கிராம மக்களில் ஒருவர் 'பட்டாம் பூச்சி என்னைய்யா, அவர் நினைச்சா எதை வேணாலும் புடிப்பாரு' என்ற வசனம் வரும். ஆரம்பத்தில் அந்த வசனத்தை 'பட்டாம் பூச்சி என்னைய்யா, அவர் நினைச்சா கோட்டையையே புடிப்பாரு' என்றே உதயகுமார் அமைத்திருந்தாராம், ஆனால் ரஜினி கேட்டுக் கொண்டதால் மாற்றப் பட்டதாம்.

காலடி மண்ணெடுத்து வழிபடுவது போல் காட்டுவது ஓவராக தனிமனித வழிபாடாய் இருக்கிறதே என்று கேட்டோம், சரியாக பதிலளிக்காமல் நழுவி விட்டார்.

என்ன இருந்தாலும், ரஜினி இந்த படத்தில் கலக்கி விட்டார் அல்லவா??

NZ vs IND - இன்றைய போட்டியில் ஜெயிக்குமா இந்தியா?

இன்றைய ஞாயிற்றுக்கிழமை அற்புதமாக ஆரம்பித்தது. காலையில் அலாரம் வைத்து, 6 மணிக்கே எழுந்து விட்டேன். மேட்ச் துவங்கிய முதல் பாலிலிருந்து டிவியை விட்டு அங்கே இங்கே நகரவில்லை. சேவக் ஏமாற்றினாலும், சச்சின், யுவராஜ், தோனி, ரெய்னா என்று நியுசியை துவம்சம் செய்து விட்டர்கள். இந்தியா எடுத்த பேட்டிங் பவர்ப்ளேயில் 69 ரன்கள் குவித்ததெ, ஆட்டத்தின் திருப்பு முனை என கருதுகிறேன்.

இந்தியாவின் இறுதி ஸ்கோர் - 392/4. நியுசிலாந்து இதை சேஸ் செய்வது மிகவும் கடினம் என்றே நினைக்கிறேன். வெட்டோரி இல்லாதது, அவர்களுக்கு ஒரு இழப்பே. முதல் போட்டியாதலால், அனுபவமில்லா கேப்டன் பவுலிங்கை மேனேஜ் செய்ய ரொம்பவும் கஷ்டப் பட்டார்.

பார்ப்போம், நியூசியின் பேட்டிங் வலுவானது, எனவே போட்டி சவாலாய் இருக்குமென நினைக்கிறேன். தற்போதைய ஸ்கோர் NZ: 203/5 (30.3 ov)

ஒரு பல்வலியும், சில பின்குறிப்புகளும்

ஒரு சுபயோக வெள்ளிக்கிழமை காலையில் எனக்கு பல்வலி ஆரம்பித்தது. மதியம் சாப்பிடவே முடியவில்லை, முதலில் சூட்டுக்கட்டி ஏதாவது வந்திருக்கும் என நினைத்தேன். வெள்ளி இரவு, வலி அதிகம் ஆனது. ஜூஸ் சாப்பிட்டு விட்டு படுத்து விட்டேன்.

சனிக்கிழமை மாலையில் பல் டாக்டரிடம் சென்றேன். வெற்றிச்செல்வன் இளைஞர், டாக்டர் என்றே நம்ப முடியவில்லை. ஆனால் அற்புதமாக என்னை கையாண்டார். பல் நோயாளிகளை பரிசோதிக்கும் இருக்கையில் என்னை சாய்மானமாக படுக்க வைத்து, சில பல கருவிகளை, மின் ஒளியின் ஊடே
கையாண்டு அங்கெ இங்கே தொட்டு அவனித்தார்.

பிறகு இருக்கைக்கு வந்து எனக்கு பொறுமையாய் படம் வரைந்து விளக்கினார். இப்போது பலருக்கும் தாடை அளவு குறுகி விட்டதால், 31,32 வது பற்கள் வெளிவருவதில்லையாம். இவற்றை ஞானப்பற்கள் (wisdom teeth) என்பார்களாம். சாதாரணமாய் இவை ஒரு மனிதனின் 25 வயதில் வெளிவந்து விடுமாம். ஆனால் தற்போது 10-ல் 7 பேருக்கு இவை வெளியே வருவதில்லையாம்.

நாம் பல் சுகாதாரத்தை முழுமையாய் கடைப்பிடிக்கா விடில், இப்பற்களில் ஒவ்வாமை (infection) ஏற்படுமாம். அப்படி ஏற்பட்ட ஒவ்வாமையால் இப்பகுதி எனக்கு கொஞ்சம் வீங்கி உள்ளது.

கொஞ்சம் சுகாதாரமாய் பல்லை பேணி வருமாறும், எனக்கு 2 tablets (Hagan - antibiatic, Nimulid - pain killer) - ம், tantrum oral rinse -ம் கொடுத்து தினமும் மூன்று முறை வாய் கொப்பளிக்க கூறினார்.

மேலும், எப்போதும் சாப்பிட்ட உடன், வாய் கொப்பளிக்க கூறினார். தினமும், காலை & மாலையில் பல் விளக்க கூறினார். வாய் கழுவுவதற்காக இருக்கும் oral rinser, mouth vash உபயோகப் படுத்த கூறினார்.

நாம் பின்பற்றப் போகிறேன், மக்களே நீங்களும் கவனமாய் பல்லை பேணுங்கள், வாழ்க்கையை அனுபவியுங்கள்!!

Wednesday, March 04, 2009

கவாஸ்கர் - இப்ப என்ன சொல்றீங்க?

இந்தியா இரு டி௨0 போட்டிகளிலும் தோற்றபோது, சுனில் கவாஸ்கர் கூறினார் (தினமலரில்), இந்தியாவிற்கு புதிய விதமான உடை (கரு ஊதா கலர்) ராசியில்லை, அதனால் தோற்று விட்டார்கள், இதனை பழைய விதமான உடைக்கே மாற்றி விட வேண்டும் என்று. இதை விடவும் அபத்தமான கருத்து இருக்க முடியாது.

இப்போது இந்தியா முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று விட்டது, அதே புதிய உடையில். இப்போது கவாஸ்கர் என்ன சொல்கிறார்??

உண்மையான காரணம், டி௨0 போட்டிகளில், நாம் போதுமான ரன்கள் எடுக்கவில்லை, பவுலிங்கும் எடுபட வில்லை. எனவே தோற்றோம்!!

நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்??