Thursday, September 06, 2012

மனைவியை சமாளிப்பது எப்படி? – ஓர் அனுபவ அலசல்


மனைவியை சமாளிப்பது எப்படி? – ஓர் அனுபவ அலசல்


சில மாதங்களுக்கு முன்பு பழனி கந்தசாமி ஐயா, மனைவியை சமாளிப்பதற்கு சில டிப்ஸ் கொடுத்திருந்தார் (அந்த டிப்ஸ் இங்கே. அவர் சிறந்த அனுபவசாலி, அருமையான குறிப்புகளை அந்த பதிவில் அள்ளி தெளித்திருந்தார். அவரளவுக்கு இல்லாவிட்டாலும், நானும் என்னுடைய கொஞ்ச (4 வருட) அனுபவத்தை வைத்து சில குறிப்புகளை உங்களுக்கு வழங்குகிறேன். அதனை படித்து, பயன்படுத்தி மகிழுங்கள்.

இருந்தாலும் இவையெல்லாம் ஆலோசனைகளே, இவற்றை செயல்படுத்துவது உங்கள் சாமார்த்தியத்தில்தான் இருக்கிறது. அதாவது “நீச்சல் அடிப்பது எப்படி” என்ற புத்தகத்தை படித்து நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா? அதுபோல் இவையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு, பிற்காலத்தில் அனுபவப் பட்டு தெளிவதே நன்று.

திருமணமாகாத பையன்கள், படித்து விட்டு ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொண்டால், பிற்காலத்தில் உதவியாக இருக்கும்!முதல் பாயிண்ட் மற்றும் முக்கியமானது: சமையல். மனைவியின் சமையலில் எப்போதும் குற்றமே சொல்லக் கூடாது. அதற்காக ரொம்ப ஆஹா, ஓஹோ என்று அளவுக்கதிகமாக பாராட்டினாலும் சந்தேகம் வந்து விடும். ஆதலால் அடக்கி வாசியுங்கள், தேவையான அளவுக்கு பாராட்டுங்கள். ‘சூப்பரா இருக்கு, இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருந்தால் ஊரையே தூக்கிடும்’ – போன்ற மிதமான பாராட்டுகள்/ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப் படலாம்.

முக்கிய குறிப்பு: மனைவியின் சமையலை எப்போதும் மற்றவர்கள் சமையலோடு ஒப்பிடக் கூடாது, முக்கியமாக “என்ன இருந்தாலும் எங்க அம்மா வைக்கிற சாம்பார் மாதிரி வரல’ என்று சொன்னால் போச்சு, புயல் சின்னம் உருவாகி உங்களுக்கு ஒரு வாரம் சாப்பாடு கிடைக்காமல் போகலாம்.
இன்னொரு விஷயம், உங்கள் மனைவியே வாலன்டியராக வந்து ஒப்பிடும் கேள்வி கேட்டாலும் நீங்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது. உதாரணமாக மனைவி ஒரு நாள் உப்புமா செய்திருக்கிறார். நாம் சாப்பிடும் போது “என்னங்க, உப்புமா எப்படி இருக்கு? உங்கம்மா செய்றது மாதிரி இருக்கா?” என்ற கேள்வி வந்தால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் எப்படி பதில் சொன்னாலும் மாட்டிக் கொள்வீர்கள்.

அதாவது நீங்கள் ஆமா, அப்படியே எங்கம்மா உப்புமா மாதிரி இருக்கு அப்படின்னு சொன்னால், உங்க மனைவி "ஆமா, உங்களுக்கு எப்பவும் உங்கம்மா ஞாபகம்தான்.. உங்கம்மா ஒரு வண்டி எண்ண ஊத்தூவாங்க, நான் எப்படி அரை கரண்டி எண்ண ஊத்தி, அருமையா செஞ்சிருக்கேன், அதை புல்லா கட்டு கட்டிபுட்டு உங்கம்மா உப்புமாவாம்.. உப்புமா" என்று அருள்வாக்கு தருவார்.

ஒருவேளை நீங்கள் "எங்கம்மா உப்புமா மாதிரி இல்லை"ன்னு சொன்னா உடனே "உங்களுக்கு நான் செய்றது எல்லாம் புடிக்குமா? உங்கம்மா ஒரு குண்டான் எண்ண ஊத்தி செஞ்சாதான் புடிக்கும், பயத்துல தலைய தலைய ஆட்டிகிட்டு ஆஹா ஓஹோன்னு பாராட்டுவீங்க.. உங்களுக்கெல்லாம் வாய்க்கு ருசியா செஞ்சி போடறேன் பாருங்க என்ன சொல்லனும்" என்று சலித்துக் கொள்வார்.

ஆதாலால் உங்களதுஆன்ஸர் இதுதான்: ஹி ஹி...

இதே கேள்வி உங்கள் அம்மாவும் பக்கத்தில் இருக்கும்போது வந்தால் இன்னும் ஆபத்து. ஆதலால் “நீங்க ரெண்டு பேரு சமைக்கறதும் நல்லா இருக்கு, ரெண்டு பேரும அவங்கவங்க ஸ்டைல்ல ஸ்பெசலா, அருமையா சமைக்கறீங்க” என்று அடித்து விடவும்.


மனைவியின் “ஏங்க இந்த டிரஸ்ல நான் அழகா இருக்கேனா?” என்ற கேள்வி அபாயகரமான கேள்வி. “ஆமாம்மா, அப்படியே அனுஷ்கா மாதிரி இருக்கே” என்று சொன்னால் மூன்றாம் உலகப்போர் மூண்டு விடும். அப்ப எல்லா “அனுஷ்கா” படத்தையும் வச்ச கண்ணு வாங்காம பாத்து ஜொள்ளு விட்டுகிட்டு இருக்கீங்களா என்று கோக்கு மாக்காக கேள்வி ஏவுகணை வந்துவிழும். ஆதலால் ஜாக்கிரதையாக “சூப்பரா இருக்கேம்மா” என்றோ “அசத்தல்” என்றோ பதில் தரலாம்.

முக்கியமாக தீபாவளிக்கு டிரஸ் வாங்கினால் அம்மாவுக்கு 2000 ரூபாய் புடவை என்றால், மனைவிக்கு டிரஸ் செலவு 2000 ரூபாய்க்கு மேல்தான் இருக்க வேண்டும் (குறைந்த பட்சம் 2001 மனைவியை மகிழ்ச்சியாக்கும்). அந்த விலையை அம்மாவிடம் (தனியாக) கூறும்போது 1999 என்றுதான் கூற வேண்டும்.
எல்லா அம்மாக்களுமே பையன் திருமணம் ஆன பிறகு நிறைய மாறிட்டான் என உறுதியாக நம்புவார்கள். நாமும் கொஞ்சம் போல மாறித்தான் இருப்போம் (அதாவது டீசண்டாக ட்ரஸ் பண்ணுவது, புல் ஹேண்ட் சட்டை போடுவது, சினிமாவுக்கு, ஊருக்கு ரிசர்வ் செய்து செல்வது ஆபிசில் இருந்து சீக்கிரம் வருவது). அதை அம்மா அடிக்கடி “பையன் 2008 க்கு அப்புறம் ஒரேடியா மாறிட்டான்” என உங்களிடமோ, உறவினரிடமோ புலம்புவார்கள். மனைவி அதைக் கேட்டு நிச்சயம் கடுப்பாவார்கள். தனிமையில் இருக்கும்போது மனைவியிடம் “செல்லம், நான் முன்னாடி பொறுக்கி பையனா, பொறுப்பில்லாம இருந்தேன், இப்ப நீ வந்துதான் என்ன நல்ல பொறுப்பான, புத்திசாலி கணவனா மாத்திட்ட என்பதைத்தான் அம்மா அப்படி புகழுறாங்க” என்று சமாளிக்க வேண்டும்.
உங்கள் பெற்றோரும், மனைவியின் பெற்றோரும் ஒரே ஊரில் வசித்தால் இன்னும் பிரச்சினை நிறைய. அதாவது நீங்கள் உங்கள் ஊரிலிருந்து அவர்கள் வசிக்கும் ஊருக்கு சென்றால் “யார் வீட்டிற்கு முதலில் செல்வது” என்று சண்டை எழும். “யார் வீட்டில் அதிக நேரம் இருப்பது” என்பது அடுத்த சண்டை. இருவரது வீட்டிலும் சமமான அளவு தங்க முயலலாம். எந்தெந்த உறவினர் வீட்டு விஷேசங்களுக்கு செல்வது என்பதும் ஒரு முக்கிய தலைவலியாக திகழும். இம்மாதிரி நிறைய சண்டைகள் மனைவி கண்ணீருடன் “ஹூம்.. உங்களுக்கு என் வீட்டுக் காரங்கன்னாலே ஒரு இளக்காரம்தான்…” என்று சிணுங்குவதும், நாம் அவரை சமாதானப் படுத்தி, அவர் விருப்பம் போல் விடுமுறை கழிக்கும்படியும் நடக்கும்!
நீங்கள் கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சில பல ஈகோ மோதல்கள் உருவாகும். உதாரணமாக குமுதம் வாரப்பத்திரிக்கை வாங்கினால் கூடவே குமுதம் சினேகிதி மனைவிக்காகவும், குமுதம் பக்தி அம்மாவுக்காகவும் வாங்கி வர வேண்டும். இதில் எதை மறந்தாலும் உங்களுக்கு ஆபத்துதான்.

ஆபீசில் வேலை நேரத்தில், மனைவியிடமிருந்து இ-மெயில் வந்தால் உடனே ரெஸ்பாண்ட் பண்ணாமல், கொஞ்ச நேரம் கழித்து ரிப்ளை பண்ணவும் – “மீட்டிங்ல பயங்கர பிசி, உன் மெயில் பாத்ததும் உடனே ரிப்ளை பண்ணனும்னு தோனுச்சு.. அதான்..” என்று சொன்னால் அனுதாப அலை அள்ளி வீசும்.


வேலை கொஞ்சம் குறைவாக இருந்தால், வீட்டுக்கு (அ) மனைவியின் அலுவலகத்திற்கு போன் போட்டு மனைவியிடம் பாசமாக பேசவும். “டிபன், லஞ்ச் சாப்டாச்சா? வேலை எப்படி இருக்கும்மா இன்னிக்கு? இன்னைக்கு நீ பண்ண பிரசெண்டேஷன் எப்படி போச்சு” போன்ற கரிசனமான வார்த்தைகள் மனைவியின் உள்ளத்தை உருக்கி விடும். பேச்சில் அப்பப்போ மானே, தேனே, பொன்மானே போட்டுக் கொள்ளவும்.

உங்கள் அலுவலகத்தில் நடப்பதை அவ்வப்போது சென்சார் செய்து சொல்லி விடுவது உத்தமம். புதிதாக வரும் அழகு பதுமைகளின் விவரங்களை பட்டும் படாமல் சொல்வது நலம். உங்கள் அலுவலகத்தில் நீங்கள் எவ்வுளவுதான் சோப்ளாங்கியாக இருந்தாலும், அவ்வப்போது மனைவிடம் “இன்னைக்கும் ஒரு கஷ்டமான வேலை வந்துச்சா, மேனேஜர் என்னைக் கூப்பிட்டு இதை நீங்க ஒருத்தர்தான் நம்ப கம்பெனியில் பண்ண முடியும்னு சொல்லி கொடுத்தாருமா” என்று பில்டப் கொடுக்கவும்.

நீங்கள் வலைப்பதிவர் ஆதலால், இரவு 12 மணிக்கு தூக்க கலக்கத்திலும் யாராவது நம்ம பதிவுக்கு ஓட்டு, கமெண்ட்டு போடறாங்களா என்று முழித்து முழித்து பார்த்து கொண்டிருக்கும் போது, மனைவி அந்த பக்கமாக வந்தால் உடனே ஆல்ட் + டேப் போட்டு ஸ்கிரினுக்கு ஆபிஸ் மெயில் பாக்ஸை கொணர்ந்து விட்டு “எவ்ளோ வேலைதான் நான் ஒரு ஆளு பாக்கறது” என்று அலுத்துக் கொள்ளவும். இது மனைவியிடம் நம்ம புருஷனை நம்பிதான் அவர் ஆபீசே இயங்குது என்று ஒரு பிம்பத்தை உருவாக்க உதவும். மனுசன் என்னாமா வேலை பாக்குறாரு என்று ஒரு அனுதாபம் நம் மேல் கூடும்.
நீங்கள் என்னதான் ஆதி காலத்து நோகியா 1100 போனை வைத்துக் கொண்டிருந்தாலும், உங்கள் மனைவிக்கு ஒரு சாம்சங் கேலக்ஸியோ, ஐபோனா வாங்கி கொடுத்து விட வேண்டும். அப்போதுதான் நமக்கு மரியாதை. அதில் போஸ்ட்பெய்ட் சிம் கனெக்‌ஷனையே வைக்க வேண்டும். அப்போதுதான் மனைவி அவரது அம்மாவுடனோ, அக்கா தங்கைகளிடமோ சீரியல்களை பற்றி விவாதிக்க முடியும். அப்புறம் அவர்கள் சரவணன் மீனாட்சி, அரசி (சீரியல்கள்) பார்க்க வசதியாக ஒரு எல்.சி.டி டிவியோ அல்லது எல்.இ.டி டிவியோ அமைத்திட வேண்டும். சாதா டிவியில் அவ்வுளவு துல்லியமில்லை என்பது அவர்களது நம்பிக்கை.இன்னும் நிறைய விஷயங்கள் இதிலேயே எழுதினால் இது ஒரு நாவல் போல ஆகி விடும். எனவே இத்துடன் தொடரும் போட்டு முடித்து விடுகிறேன். இதைப் படிக்கும் கோடானு கோடி பதிவர் பெருமக்கள் தங்களுடைய “மனைவி சமாளிப்பு” அனுபவங்களை பின்னூட்டங்களாகவோ அல்லது தொடர் பதிவாகவோ எழுத வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்!

முக்கிய பின் குறிப்பு 1: இந்த பதிவை ஒரு காமெடிக்காக எழுதினாலும், பெண்கள் நம் நாட்டின் கண்கள், மனைவியும் அம்மாவும் நமது இரு கண்கள், அதில் மனைவியே வலது கண் என்பதை நீங்கள் எல்லாரும் அறிவீர்கள் என நம்புகிறேன். அதுதான் எனது உறுதியான கருத்தும். ஆதலால் இதனை படிக்கும் லட்சோப லட்ச தாய்மையுள்ளம், அன்புள்ளம் கொண்ட பெண் பதிவர்கள், வாசகர்கள் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம், முக்கியமாக தத்தம் வீடுகளில் பூரிக் கட்டை எங்குள்ளது என்பதை கண்டிப்பாக தேடக் கூடாது என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முக்கிய பின் குறிப்பு 2: இந்த பதிவை எனது வீட்டம்மாவும் (ஹவுஸ் பாஸ்) படிப்பார்கள் என்பதற்காக மட்டுமே மு.பி.குறிப்பு 1 எழுதியுள்ளதாக யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம்!!

படங்கள் - நன்றி: tag-pictures.com & funnythreat.com வலைத் தளங்கள்

ஓட்டு போடுவது, பின்னூட்டம் இடுவது பற்றி விரிவாகசுருக்கமாகமத்யமாக தமிழ்மணம்தெலுகுமணம்கன்னடாமணம்இண்ட்லிஇட்லிதோசையிலும்பிபிசிசன் டிவிவிஜய் டிவியிலும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர்இருந்தாலும்உங்க ஓட்டை, பின்னூட்டத்தை உங்க இஷ்டப்படி பயன்படுத்தலாம்ஏதோ பாத்துச் செய்ங்க மக்கா!! J


Saturday, September 01, 2012

பழூர் காராச்சேவு: மாணவர்கள் செய்வது சரியா? - ஆதங்கம்

புதிய வாசகர்களுக்கு முன்குறிப்பு:

பல செய்திகளை கலந்து என் கருத்துக்களோடு கொடுக்கும் பதிவுகளுக்கு காராச்சேவு என்று பெயர் வைத்திருக்கிறேன்.

எனக்கு பிடித்த இம்மாதிரி வகைத் தலைப்புகள்

  • கொத்து பரோட்டா (கேபிள் சங்கர்)
  • வானவில் (மோகன் குமார்)
  • அஞ்சறைப் பெட்டி (சங்கவி)


***

மாணவர்கள் செய்வது சரியா - ஒரு ஆதங்கம்

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள், மாணவர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் சாலையில் செல்லும் பேருந்தில் போட்ட ஆட்டம் இது. படத்தைப் பாருங்கள். இன்றைய தினமலரில் வந்த செய்தி இது.இதில் என்ன தவறு, இதெல்லாம் ஒரு ஜாலிக்காக, நானும் கல்லூரிக் காலத்தில் இப்படி இருந்தவந்தான் என்பவர்களுக்கு சில சிந்தனைத் துளிகள்

1. மாணவர் தேர்தல் என்பது என்ன? கல்லூரியில் மாணவர்களை ரெப்ரசண்ட் பண்ண, அவர்களுக்காக குரல் கொடுக்க, சேவை செய்ய ஒரு தளம். அதில் வெற்றி பெற்றதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?

2. அப்படியே நீங்கள் மகிழ்ச்சியின் விளைவாய் கொண்டாட விரும்பினாலும், கல்லூரியிலோ (அ) உங்கள் வீட்டிலோ (அ) ஒரு வளாகத்திலோ (ஹாஸ்டல்) அமைதியாக, மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் கொண்டாடலாமே?

3. இப்படி சாலையில் வந்து பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கு இடையூறு செய்யலாமா? அதற்கு உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்?

4. படத்தை மற்றுமொரு முறை பாருங்கள், பேருந்தில் இப்படி கூரைக்கு மேலேயும், பக்கவாட்டு ஜன்னல்களிலும் இருந்து கொண்டு பயணிக்கலாமா? உங்களது உயிருக்கு அல்லவா ஆபத்து?

5. ஒரு சில மாணவர்களைப் பாருங்கள், சட்டையை துறந்து வீரமாக போஸ் கொடுக்கின்றனர், இது ஒரு நாகரிகமான செயலா?

6. இவர்கள் ரோட்டில் ஆட்டம் போடுவதன் மூலம், பின்னால் வரும் வாகனங்களையும் அல்லவா தடுக்கின்றனர்.

இவையெல்லாம் உங்களை பெற்றெடுத்து, வியர்வை சிந்தி உழைத்த பணத்தில் உங்களை கல்லூரிக்கு அனுப்பி, அவன் பெரிய ஆளாக வருவான் என கனவு கண்டு கொண்டிருக்கும் பெற்றோருக்கு பெருமை சேர்க்குமா என்ன? நம்பிக்கை தருமா என்ன?

மாணவச் செல்வங்களே, இம்மாதிரி புகழ், பதவி, அரசியல் விளையாட்டுகள் தற்போது உங்களுக்கு வேண்டாம், படிப்பில் கவனம் செலுத்தி, முடித்து ஒரு வேலையை (அ) சுய தொழிலை தேடிக் கொள்ளுங்கள். அதில் வெற்றி பெற்று பிறகு மொத்தமாய் கொண்டாடலாம்!

***

கோவையில் டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் கரப்பான் பூச்சி இருந்ததாம். ஒருவேளை நமது அரசாங்கமே மக்களின் மதுப் பழக்க வழக்கத்தை குறைக்க, இம்மாதிரி நடவடிக்கை எடுத்திருக்கிறதோ, என்னமோ!! இனிமே தமிழக அரசை யாரும் குறை கூற வேண்டாம் :)

***

வரதட்சினை கேட்போருக்கு 7 ஆண்டு சிறை - என மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறதாம். அப்படியா இந்த 2G, 3G ஊழல், நிலக்கரி, கிரானைட் ஊழலுக்கெல்லாம் ஏதெனும் சட்டம் கொண்டு வர திட்டம் உள்ளதா என்று யாராவது கேட்டுச் சொல்லுங்களேன்.

***

எனக்கு ஓட்டுகளில் நம்பிக்கை இல்லை, ஆனால் உங்கள் பின்னூட்டம் உங்கள் கருத்தை எனக்கு சொல்லும், என்னையும் தொடர்ந்து எழுத ஊக்குவிக்கும். ஆதலால்...

***


நன்றி: படம் & தகவல்: தினமலர்

***