Saturday, October 22, 2005

கிரிக்கெட்டுக்கும் தீபாவளிக்கும் என்ன தொடர்பு ?

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நாளை தீபாவளிக்காக ஊருக்கு கிளம்புகிறேன். எங்கள் ஊரில் இணைய வசதிகள் இல்லாததால், அடுத்த பத்து நாட்களுக்கு வலைப்பதிவு பக்கம் வர இயலாது. எனவே நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

()

சூப்பர் (டூபாக்கூர்) சீரிஸ் கிரிக்கெட்

ஆஸ்திரேலியா அணிக்கும் மற்ற அனைத்து நாடுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் கொண்ட உலக அணிக்கும் சூப்பர் சீரிஸ் கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் நடந்து முடிந்தது. ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் உலக அணியை அடித்து துவைத்த ஆஸ்திரேலியா, டெஸ்ட் போட்டியிலும் உலக அணியை துவைத்து காயப் போட்டது. இத்தனைக்கும் உலகின் சிறந்த வீரர்களை கொண்டது உலக அணி. டிராவிட், லாரா, இன்சாமம், காலிஸ், பிளிண்டாப் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் அடிமேல் அடி வாங்கியது உலக அணி. ஒவ்வொரு போட்டியிலும் படு மோசமாக தோல்வி பெற்று சாதனை படைத்தது. இவ்வுளவு அடி வாங்கயதைப் பற்றி கவலையே படாமல் உலக அணி வீரர்கள் ஷாப்பிங், பிக்னிக், டின்னர் என்று (டூரில் இருந்த போது) பொழுது போக்கி அவரவர் ஊருக்கு சென்று/வந்து 'இது ஒரு சிறந்த அனுபவம்' என்று பேட்டி கொடுக்கின்றனர். இதையெல்லாம் பற்றி கவலைப் படாமல் கிரிக்கெட் ரசிகர்களாகிய நாம் தொடர்ந்து நமது அணியை ஆதரிப்போம் !

()

பின்குறிப்பு : கிரிக்கெட்டுக்கும் தீபாவளிக்கும் தொடர்பு ஏதாவது உள்ளதா என்பதை பற்றி நண்பர்கள் தெரியப் படுத்தலாம். கெட்டவார்த்தையில் திட்டி மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம்.

Tuesday, October 11, 2005

கஜினி, தாண்டியா மற்றும் சில கவிதைகள் V 2.0 - Reloaded

மும்பை வாஷி மேகராஜில், நண்பர்களுடன் சென்று 'கஜினி'யையும், கஜினியைப் பார்க்க வந்தவர்களையும் பார்த்தோம். இதோ கஜினி பற்றிய திரைத் துளிகள்.

  • 'அன்னியன்' படத்துக்கு ரூ. 85 ஆக இருந்த டிக்கெட் விலை, 'கஜினி' படத்துக்கு ரூ. 100 ஆக எகிறி விட்டது.
  • தியேட்டரில் ஒலி அமைப்பு (சவுண்ட் சிஸ்டம்) சரியில்லை.
  • படத்தில் பங்குபெற்ற கலைஞர்களின் பெயர் போடும்போது, சூர்யாவை விட அஸினுக்கு அதிக விஸில்கள் கிடைத்தன.
  • இடைவேளையில் தின்ற சமோசா சூப்பர், இதற்காகவே இன்னொரு படம் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.
  • படம் இடைவேளைக்கு பிறகு சுவாரசியமாக இல்லை. கிளைமேக்ஸ் ஏமாற்றம்.
  • சூர்யா - அஸின் காதல் காட்சிகள் பிரமாதம், சூர்யா கலக்கியிருக்கிறார். நயன்தாராவைப் பற்றி சொல்ல எதுவுமில்லை.
  • 'சுற்றும் விழிச் சுடரே' மற்றும் 'ஒரு மாலை இளவெயில் நேரம்' பாடல்கள் அருமை. மற்ற பாடல்கள் வீண்.

நயன்தாராவை பற்றி எதுவும் சொல்லாததற்கு நிறைய நண்பர்கள் வருத்தப் பட்டனர். அவர்களுக்காக மேலும் சில திரைத் துளிகள் Version 2.0 வில் சேர்க்கப் பட்டன.

  • ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியை எப்படியெல்லாம் காட்டக் கூடாதோ, அப்படியெல்லாம் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
  • கிளைமேக்ஸ் காட்சியில் வரும் மழையில் நயன்தாராவை நனையவிட்டு கவர்ச்சி விருந்து படைத்துள்ளார்கள்.
  • சந்திரமுகி, ஐயா போன்ற படங்களில் வந்து நாகரீகமாக நடித்த நயன்தாராவை வெறும் கவர்ச்சி பொம்மையாக பயன்படுத்தியிருப்பது வருந்தத் தக்கது.

மொத்தத்தில் 'கஜினி' வெற்றியா, தோல்வியா என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் இது இன்னொரு 'ரமணா' இல்லை என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது.


தினமலரில் என் பெயர் வந்ததை மும்பையில் பாதி பேருக்கும், சொந்த ஊரான டீ. பழூரில் எல்லோருக்கும் தம்பட்டம் அடித்தாயிற்று. அலுவலகத்தில் சக ஊழியர்களும், நண்பர்களும் சற்று மரியாதையாக பார்க்கின்றார்கள். முடிந்தால் சன் டீவியில் ஒரு பேட்டி கொடுத்து விடலாமென்று இருக்கிறேன். பார்க்கலாம், சன் டீவிக்கு சீரியில்கள் நடுவே என் பேட்டியை ஒளிபரப்ப நேரமிருக்குமா, என்று.

நவராத்திரி விழாவை மும்பை மக்கள் 'தாண்டியா' நடனமாடி கொண்டாடி வருகின்றனர். எங்கள் பகுதியிலும் 'தாண்டியா' ஆடிவரும் இடத்திற்கு சென்றிருந்தேன். லேட்டஸ்ட் ஹிந்தி பாடல்களை (தாண்டியாவிற்கான பிரத்யோகமான இசையும் உண்டு) லோக்கல் ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பாட, மக்கள் படு உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தனர். M டீவி, V டீவி சானல்களைத் தாண்டி இளைஞர்களும், மெகா சீரியல்களைத் தாண்டி பெண்களும் வந்திருந்ததை வரவேற்க வேண்டும். நவராத்திரி விழாவின் பத்து நாட்களும், கோலாகலமாக மக்கள் பொது இடங்களில் கூடி விழாவைக் கொண்டாடுகின்றனர்.

கவிதை - 1 (உருவாக்கம் : நண்பர் அரவிந்த்)

தீக்குச்சி தீப்பெட்டியிடம் கேட்டதாம்,
உரசிக்கொள்வது நாமாக இருப்பினும்
பற்றிக்கொள்வது நான் மட்டுமா?

கவிதை - 2 (உருவாக்கம் : சோம்பேறி பையன்)

கைத்தொலைபேசியில் வரும் அழைப்புகளும்
சிற்சிறு (SMS) செய்திகளும்
கணினியில் வரும் மின்னஞ்சல்களும்
ஞாபகப் படுத்தா விட்டாலும்
எங்காவது உன் பெயரை பார்க்கும் போதும்
உனக்கு பிடித்த பாடலை கேட்கும் போதும்
மூழ்குகிறேன், உன் நினைவுகளால்!

Tuesday, October 04, 2005

என் பேரும் தினமலர்ல வந்துருச்சே...

தினமலர் 24 செப்டம்பர் செய்தித் தாளில் 'அறிவியல் ஆயிரம்' பகுதியில் சோம்பேறி பையனின் வலைப்பதிவைப் பற்றிய செய்திவந்துள்ளது. தொடர்பு சுட்டி http://dinamalar.com/2005sep24/flash.asp

நண்பர் 'கார்த்திக்' தொலைபேசியில் கூறியபோது நம்ப வில்லை. இணையத்தில் சென்று பார்த்தவுடன் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன். பல வாழ்த்துகளும், சில வசவுகளும் வந்தன. இரண்டு மணி நேரத்திற்கு ஒரே மஜாவாக இருந்தது. 'சுற்றும் விழிச் சுடரே..' என்று ஜீன்ஸ், கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு 'கஜினி' அஸினோடு பாட்டு பாடுவது போல் கனா கண்டேன்.

தினமலருக்கு நன்றிகள் பல. கேர்ள் ப்ரண்ட்ஸிடம் 'பெரிய எழுத்தாளராக்கும்' என்று தைரியமாக கதை விட ஆதாரம் கிடைத்து விட்டது. ஊருக்கு போன் செய்து, 24ம் தேதியிட்ட தினமலரை எடுத்து வைக்க சொல்ல வேண்டும். பெரிய கண்ணாடி ப்ரேம் போட்டு, ஹாலில் மாட்டலாம் என்று எண்ணம்.

இது சம்பந்தமான கோ. கணெஷின் வலைப்பதிவைப் படித்தேன். அவரது வலைப்பதிவைப் பற்றியும் மற்றும் வேறு சில நண்பர்களின் வலைப் பதிவுகளைப் பற்றியும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. வலைப் பதிவுகளைப் பற்றி செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது, அறிவியல் ஆயிரத்தை தினமும் கவனியுங்கள், நண்பர்களே.

ஆக மொத்தம், வலைப் பதிவர்களுக்கு பத்திரிக்கைகள் அங்கீகாரம் அளிக்க ஆரம்பித்துள்ள போக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனால் வலைப்பதிவர்களின் பொறுப்பும் கூடியுள்ளது. வித்தியாசமான, உபயோகமான தகவல்களை அளிக்க வேண்டும். தனி மனித துவேஷம் கூடாது. கிண்டலிலும் பிறர் மனம் புண்படாதவாறு எழுத வேண்டும். பார்ப்போம், கடைப் பிடிக்க முடிகிறதா என்று!

இன்றைய டுபாக்கூர் கவிதை

மழைத் துளிகளின் நடுவே
சூரியன் தேடி அலைந்த
போதுதான் பார்த்தேன்,
சூரியன் உன்
செல்போனில் FM-ஆக இருப்பதை!

பின் குறிப்பு : இந்த கவிதையைப் பாராட்டி பின்னூட்டம் போடும் நண்பர்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் பிளாஸ்டிக் குடம் பரிசளிக்கப் படும்!