Sunday, November 29, 2009

கற்றது தமிழ் (மட்டுமல்ல)

இன்று மாலை கலைஞர் தொலைக்காட்சியில் 'கற்றது தமிழ்' திரைப்படத்தை ஒளிபரப்பினார்கள். சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

சில காட்சிகள், வசனங்கள் நன்றாக இருந்தன, இருந்தாலும் ஒரு டாகுமெண்டரி படம் போலத்தான் இருந்தது.

கருணாஸ் ஜீவாவிடம் மாட்டிக் கொண்டு தவிப்பதும், தப்பிக்க வழி தேடுவதும், நண்பரிடம் மொபைலில் பேசுவதும் இயல்பாய் இருந்தது.

ஆனந்தியின் 'நிஜமாத்தான் சொல்றீயா?' வசனமும், காட்சிப் படுத்திய விதமும் அருமை!




மகாராஷ்டிராவில் ஒரு குக்கிராமத்துக்கு ஆனந்தியை தேடிச் செல்வதும் நன்றாக காட்சிப் படுத்தப் பட்டிருந்தது. நானும் முன்பு மகாராஷ்டிராவில் (மும்பை மற்றும் புனே) பணிபுரிந்து கொண்டிருந்த போது ஒரு சில கிராமங்களுக்கு சென்றிருக்கிறேன். ஒரு காட்சியில் மகாராஷ்டிரா மாநில சிவப்பு நிற அரசு பேருந்தை பார்த்தவுடன் எனக்கு நிறைய பழைய ஞாபகங்கள் வந்து அலை மோதின.

படத்தில் தமிழை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள நினைப்பவனையும், அதனை சமூகம் ஏளனப் படுத்துவதையும் காட்டியிருக்கிறார்கள். அக் கருத்து உண்மைதானல்லவா? இன்று தமிழ் மட்டும் படித்தவனுக்கு என்ன வேலை வாய்ப்பு இருக்கிறது. எம். ஏ, எம் பில் தமிழ் படித்தால் ஏதேனும் பல்கலைக்கோ, கல்லூரிக்கோ பேரசிரியாராய் செல்லலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவல்லவா? சினிமாவுக்கு பாட்டெழுத தமிழ் பட்டப் படிப்பு தேவையில்லை என நினைக்கிறேன். தமிழ் மட்டுமே படித்து தற்காலத்தில் பிழைக்க முடியாது என்றே கருதுகிறேன்.

ஆதலால் ஏதேனும் தொழில் நுட்ப அறிவு அவசியம் தேவை. பிற மாநில/நாட்டு மக்களுடன் உரையாடுவதற்கு ஆங்கில மொழியறிவும் அவசியம் என்றே கருதுகிறேன்.

தமிழ் மட்டுமே படித்தவருக்கு வேறு ஏதேனும் வேலை வாய்ப்புகள் இருக்கிறதா என்று கூறுங்களேன்!

Sunday, November 22, 2009

யாருமற்ற ஞாயிறு

மதிய வெயில்
மவுனமாய் பொழியும்
ஞாயிறன்று
இணையத்தில்
அர்த்தமற்று தேடும்போதுதான்
உணர்ந்தேன்
உந்தன் பிரிவை!!

<<>>

நீ
நான்
மற்றும்
வேறு எவரிமில்லா
பிரபஞ்சம்
இவை போதுமெனக்கு,
வெறெதுவும் வேண்டாம்!

<<>>

என் உயிரில்லாவிடினும்
நான் உயிர் வாழ்வேன்,
உன் உயிர் என்னிலல்லவா
கலந்திருக்கிறது!

<<>>

பணம்,
புகழ்,
அழகு,
செல்வாக்கு
அதிகாரம்
மது
மாது
சூதாடுதல்
என
எல்லா போதைகளையும்
விட
அதிகமானது
காதலெனும் போதை!

Sunday, November 15, 2009

சன் டிவி - பெப்ஸி கலை நிகழ்ச்சிகள் - சில கேள்விகள்

சன் டிவி சனி, ஞாயிறு என்று ப்ரைம் டையத்தில் ஒளிபரப்ப இருந்த போதே நினைத்தேன், விளம்பர மழை பொழியப் போகிறதென்று! அதேதான் நடந்தது! இரண்டு நிகழ்வுகளுக்கொரு முறை விளம்பரம், இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ஒவ்வொரு விளம்பர இடைவேளைக்கு முன்பு அடுத்து வரப்போவது என்று இரண்டு நிமிடங்களுக்கு ப்ரீவியு கொடுத்ததுதான் :-)

என்ன செய்வது, என் சகதர்மினி இதைப் பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். வெளியே வேறு மழை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது. சுஜாதாவின் வண்ணத்துப் பூச்சியின் வேட்டை புத்தகத்தை எடுத்து வைத்து கொண்டு உட்கார்ந்து விட்டேன்.

டி. ராஜேந்தர் மேடையில் கலக்கினார். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் வந்ததை குறிப்பிட்ட அவர், முதல் படமான உயிரில்லவரை உஷாவிலிருந்து ஒரு பாடலைப் பாடி, பிறகு வாயாலும் ம்யூசிக் கொடுத்து திகிலடித்தார். பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, விஜயிலிருந்து ஸ்ரேயா வரை விழுந்து விழுந்து ஏன் சிரித்தனர், என்று புரியவில்லை :-)

கவுண்டமணி வந்து எல்லோருக்கும் நன்றி சொல்லி, அவர் ஸ்டைலில் சலம்பினார், உற்சாகபானம் சாப்பிட்டிருப்பார் போல் தெரிந்தது.

சிம்புவும், நயன் தாராவும் அருகருகே உட்கார்ந்து கொண்டு, சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன திரும்பவும் ராசியாகி விட்டார்களா என்று தெரியவில்லை :-) இன்னொரு வல்லவன் படம் வருமா?

திடிரென்று பார்த்தால் ஆர்யா நயன் தாரவுக்கும், ஸ்ரேயாவுக்கும் மத்தியில் உட்கார்ந்து கொண்டிருந்தார், சிம்பு பாதியில் சென்று விட்டாரா?

விழா மொத்தமே 3 மணி நேரம் தான் நடந்திருக்கும், அதை 7 மணி நேரத்திற்கு ஓளிபரப்பும் திறமை சன் டிவிக்கு மட்டுமே வரும்!!

நடுவில் திடிரென்று நளினி, குயிலி, அனுராதா போன்ற முன்னாள் நாயகிகள் நடனமாடி பயமுறுத்தினார்கள். இந்த ஐடியா யார் கொடுத்தது என்று தெரியவில்லை, நிச்சயமாய் சண்டிவியில் பேப்பர் போட்டிருப்பார் (ரிசைனிங் லெட்டர் கொடுத்து, ரிலிவீங் பீரியடில் இருப்பவர்) என்று நினைக்கிறேன் :-)

நடுவில் பிரபு வந்து ஏதோ கோபமாய் பேசினார் (என்னவென்று சரியாக புரியவில்லை). என்னால்தான் விஜய், சூர்யா வந்தார்கள் என்றார். அவர்களை கேமிராவில் காமியுங்கள் என்றார். வஞ்சப் புகழ்ச்சி அணியா??

இந்த கலைநிகழ்ச்சிகளின் மூலம் வசூலான பணத்தைக் கொண்டு, ஏழைத் தொழிலாளர்களுக்காக ஏதோ கட்டடம் கட்டப் போகிறார்கள் என நினைக்கிறேன், நோக்கம் நல்ல விதமாய் நிறைவேறினால் சரி!!