Thursday, July 26, 2007

தயாநிதி மாறன் - அன்றும் & இன்றும் - கார்ட்டூன்கார்ட்டூன்கள் வரைவதில் அனுபவம் அதிகமில்லை. இருந்தாலும் ஆர்வம் அதிகம் உண்டு. உங்கள் கருத்தை அவசியம் எதிர்பார்க்கிறேன், அது ஒரு ஸ்மைலியாக இருந்தாலும்!

Wednesday, July 25, 2007

சில பதிவர்களிடம் சில கேள்விகள்

ஊரெல்லாம் ஒரே கேள்விப் பதிவுகளாகவும், போட்டிப் பதிவுகளாகவும் இருப்பதால் நாமும் நம் பங்குக்கு ஏதாவது ஒரு பதிவு பதியாவிட்டால் என்னாவது நம் பெருமை! இதோ கேள்விகள், சம்பந்தப் பட்ட பதிவர்கள் மட்டுமல்ல, வேறு எவரேனும் கூட பதில் கூறலாம். இக்கேள்விகள் விளையாட்டுக்கல்ல; உண்மையான, நேர்மையான பதிலைக் கூறுங்கள்.

1. செந்தழல் ரவி
அது என்ன 'செந்தழல்' ரவி? செந்தழல் என்பது என்ன? உங்கள் ஊர்ப் பெயரா அல்லது காரணப் பெயரா? நிழல்கள் ரவி மாதிரி இருக்க வேண்டும் என்று செந்தழல் ரவி என்று பெயர் வைத்துக் கொண்டீர்களா?

2. தேசிகன்
எழுத்தாளர் சுஜாதா உங்களுக்கு எப்போதிலிருந்து பழக்கம்? எப்படி இந்தளவுக்கு பழக்கமானார்? உங்கள் உறவுக்காரரா அவர்?

3. டோண்டு
மகரநெடுங்குழைக்காதன் என்பவர் யார்? கடவுளா, எந்த கடவுள்? அவருக்கு இப்பெயர் எப்படி வந்தது?

4. பாஸ்டன் பாலா
ஈ.தமிழ் வலையகத்தில் முன்பு போல் இப்போதெல்லாம் தினமும் பதிவுகள் வருவதில்லையே ஏன்? நீங்கள்தான் இட்லிவடை என்று வதந்தி கிளம்ப காரணம் என்னவாக இருக்கலாம்?

5. லக்கிலுக்
உங்கள் பெயரை தமிழ் படுத்தினால் எப்படி வைக்கலாம்? 'அதிர்ஷ்டப் பார்வை' என்றா? லக்கி என்பதற்கான தூய தமிழ் சொல் என்ன? அதிர்ஷ்டம் என்பது வடமொழிச் சொல் அல்லவா?

பதிவர்களே, பதில்களை வீசுங்கள், பரிசுகளை(?) வெல்லுங்கள்!!
கேள்விகள் தொடரும்.....

Tuesday, July 24, 2007

திருமண வாழ்க்கை - ஓவியம்
மேலே உள்ள படம் சிந்தாநதி நடத்தும் ஓவியப் போட்டிக்காக வரையப்(?) பட்டது. இது முன் நவீனத்துவ ஓவியமாகியதால் யாரும் புரியவில்லை என்று கேள்வி எதுவும் கேட்கக் கூடாது. உங்களுக்கு என்னவெல்லாம் புரிகிறது என்று பின்னூட்த்தில் கூறலாம். சிறந்த பின்னூட்டத்திற்கு பிளாஸ்டிக் குடம் பரிசளிக்கும் எண்ணம் உள்ளது :-)


பின்குறிப்பு: எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் கூடிய சீக்கிரம் ஆகிவிடும் போல் தோன்றுகிறது.

Saturday, July 21, 2007

இந்திய கிரிக்கெட் - மற்றுமோர் சொதப்பல்

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்கிஸில் 201 ரன்களுக்கு ஆல் அவுட். இங்கிலாந்து 97 ரன்கள் லீடிங். ஜாபர் 58 ரன்கள், சச்சின் 37, கங்குலி 34 ரன்கள். புயல் விக்கெட் கீப்பர் தோனி டக் அவுட் ஆகி 'அதிருதுல்ல...' என்று பெவிலியன் திரும்பினார். கேப்டன் டிராவிட் 2 ரன்கள் எடுத்ததே சாதனை என்று நினைக்கிறார் போலும்.

தினேஷ் கார்த்திக் இங்கிலாந்து பிட்ச்சுகளில் ஒப்பனர் வேலைக்கு ஒத்து வர மாட்டார். ஏதோ பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை பிட்ச்சுகளில் வேண்டுமானால் கார்த்திக்கை வைத்து ஒப்பேத்தலாம். இந்தியாவில் வேறு ஸ்பெசலிஸ்ட் ஓப்பனர்களே இல்லையா, என்ன??

217/1 என்றிருந்த இங்கிலாந்து 298 ரன்களில் ஆல் அவுட் ஆன போதே எங்கோ இடித்தது. சரிதான், நமது வீரர்கள் திடீர் உத்வேகம் பெற்று இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கி விட்டார்கள் என்று மகிழ்ந்து உச்சி முகர்வதற்குள் பேட்டிங்கில் சொதப்பி விட்டனர். ஆரம்பத்தில் இருந்தே தொடரும் கதைதான் இது. வெளிநாட்டு தொடர்களில் அதுவும் பந்து ஸ்விங் ஆகும் பிட்ச்சில் இந்தியாவின் பருப்பு எப்போதுமே வேகாது. இப்போதும் இப்படித்தான் இருக்கிறது.

பார்ப்போம், இரண்டாவது இன்னிங்ஸில் என்ன நடக்கிறதென்று!!!

Friday, July 20, 2007

புனே -> பெங்களூரூ -> கும்பகோணம்

புனேயிலிருந்து ஊருக்கு நான்கு நாட்கள் விடுமுறையில் செல்வது என்று முடிவெடுத்தவுடனேயே மலிவான விமானச்சீட்டு தேடும் படலம் தொடங்கி விட்டது. புனேயிலிருந்து சென்னைக்கு தற்போது நேரடி விமான
சேவையில்லை, பெங்களூரூ வழியாக செல்லலாம், ரூ 9000 பயணக் கட்டணம் திரும்ப வருவதற்கும் சேர்த்து, கிங்பிஷர் ஏர்வேசில் (இதனை தமிழ்ப் படுத்தினால் எப்படி இருக்கும், கிங்பிஷர் - அரச மீன் பிடிப்பவர் :-)). ஜெட் ஏர்வேசில் ரூ 10000 ஆகிறது. சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு 6 மணிநேரம் பயணம் செய்ய வேண்டும்.

ஆனால் புனே - பெங்களூரூ விமானக் கட்டணம் ரூ 3750 மட்டும்தான் (திரும்ப வருவதற்கும் சேர்த்து). ரீடிப் கட்டணதேடுதல் இணையத்தில் தேடி ஒருவழியாக இண்டிகோ விமானத்தில் பதிவு செய்து விட்டேன். பெங்களூரூ - கும்பகோணம் 10 மணிநேரப் பயணம், பரவாயில்லை பேருந்தில் பயணிக்கலாம் என்று முடிவாகி விட்டது.

புனேயிலிருந்து மாலை 5:25க்கு விமானம் கிளம்பியது. இண்டிகோ விமானச் சேவை பரவாயில்லை, டிக்கெட் குளறுபடிகளில்லை. இணையத்தளமும் நன்றாக, எளிமையாக உள்ளது. பயணத்தின் போது கொஞ்சம் விமானம் ஆட்டம் காட்டினாலும், சரியாக இரவு 7 மணிக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள் :-)

பெங்களூரூவிற்கு இதுவரை வந்ததில்லை. தேசிகன் வலைப்பக்களிலும்(பெண்களூர்), மற்ற வலைப்பதிவர்களின் வலைப்பக்கங்களிலும், செய்தி ஊடகங்களில் ஊரைப் பற்றி கேள்விப் பட்டதை தவிர வேறு அனுபவமில்லை. பரவாயில்லை, ஊர் நன்றாகத்தான் இருக்கிறது.

பெங்களூரூ விமானநிலையம் ஓரளவுக்கு சுத்தமாக உள்ளது. என்னை ஆச்சரியப் படுத்தியது இதுவல்ல, வெளியே வந்தவுடன் மெஜஸ்டிக்(கேம்ப்கவுடா) பேருந்து நிலையம் செல்வதற்கு ஆட்டோவைத் தேடினேன். ஆட்டோவிற்கான வரிசை முன்பு, ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் நின்று கொண்டு பயணிகளின் பெயர், செல்லுமிடம், செல்பேசி எண்ணை,
ஆட்டோ எண்ணை குறித்துக் கொண்டு வழியனுப்பி வைக்கிறார். அற்புதமான ஏற்பாடு. ஊர் தெரியாது புதிதாக வருபவர்களுக்கு இது பயனுள்ளது.

பெங்களூரூவில் சாலைகள் நன்றாக உள்ளன. ஓரளவுக்கு ஊரே சுத்தமாக உள்ளது (மும்பை, புனேவை ஒப்பிடும்போது).ஆட்டோகாரர் மீட்டர் போட்டு, 74 ரூபாய் (மீட்டர் சார்ஜ்) வாங்கிக் கொண்டு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார். ஆனால் டிராபிக் ரொம்பவும் அதிகம். விமான நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு 75 நிமிடத்திற்கு மேலாகி விட்டது (12 கிமீ மட்டுமே என்று நினைக்கிறேன்).

நான் பார்த்த வரையில் தமிழர்கள் நிறைய பேர் தென்பட்டனர். தமிழ் பத்திரிக்கைகளையும், செய்தித் தாள்களையும் கூட பார்க்க முடிந்தது. மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் இரவு 8:30க்கு கே.எஸ்.ஆர்.டி.சி ஏசி வசதிப் பேருந்து கும்பகோணத்திற்கு கிளம்புகிறது. ரூ 363 பயணக் கட்டணம். பேருந்து சுத்தமாக, வசதியாக உள்ளது. டிவி தொல்லை இல்லை. போர்த்திக் கொள்ள போர்வை, தண்ணீர் பாட்டில், முகம் துடைக்க டிஸ்யூ பேப்பர் போன்றவற்றை கொடுக்கின்றனர்.

சற்று கண்ணயர்ந்தால் 11 மணியளவில் கிருஷ்ணகிரி, காலை 5 மணிக்கு திருச்சி, 7 மணிக்கு கும்பகோணத்தில் கொண்டு சேர்த்து விடுகின்றனர். இவ்வண்டியைத் தவிர கேபிஎன் பேருந்தும் இருக்கிறது.

மூன்று நாட்கள் ஊரில் இருந்து விட்டு, திரும்பவும் கும்பகோணத்திலிருந்து, பெங்களூரூ. அங்கிருந்து புனே வந்து சேர்ந்து நண்பர்களிடம் 'அதிருதுல்ல....' என்றேன்!