Friday, December 14, 2007

நிசப்தமாய் இருக்கிறது என் கவிதைகள்!!


காற்று
வெயில்
குளிர்
பனி
மழை
என எதுவுமே
இல்லாமல்
நிசப்தமாய்
இருக்கிறது
நீ அருகில் இல்லா
வெறுமை
உணர்த்தும் புரிதல்கள்!!

<<>>

உன்
கண்ணில் இருந்து
வெளிவரும்
ஒவ்வொரு கண்ணீர்துளியும்
கீழே விழுமுன்
தாங்குவேன்
என் நெஞ்சில்;
கவலைகளை
கண்ணீராய் வெளியேற்று
என் கண்மணியே!!

<<>>

காத்திருப்பது
மட்டும் சுகமல்ல
காதலில்;
இன்ப துன்பங்களை
பகிர்ந்து கொள்வதிலும்
இருக்கிறது
உளமார்ந்த காதல்!!

<<>>

ஒவ்வொரு நொடியும்
மெதுவாய்த்தான்
நகர்கிறது,
இருந்தாலும் ரசிக்கிறேன்
உன்னை தரிசிக்கும்
கணம் நெருங்குவதால்!!

Saturday, September 08, 2007

புனேவிலிருந்து விடைபெறுகிறேன்...

ஏப்ரல் 16, 2006ம் தேதியிலிருந்து புனேயில் வாழத்தொடங்கிய நான், செப்டம்பர் 11, 2007 அன்று புனேவிலிருந்து விடைபெறுகிறேன். புதிய அலுவலகம் சென்னையில் உள்ளது. 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் வசிக்கப் போவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறேன்.



புனே மிகவும் அருமையான, அமைதியான ஊர். மலைகளுக்கு நடுவில் அற்புதமான க்ளைமேட்டுடன் கூடிய ஊர். போக்குவரத்து, சாலை வசதிகள் மட்டும் கொஞ்சம் குறைவு புனேயில். மற்றபடி அருமையான ஊர். இவ்வுளவு அருமையான ஊரை விட்டு வருவதும், நல்ல அலுவலகத்தை விட்டு வருவதும் சிறு வருத்தத்தை அளித்தாலும், தாய் தமிழ்நாட்டு மண்ணை மீண்டும் தழுவச் செல்வது அவ்வருத்தத்தை மறையச் செய்கிறது.



புனேயில் வசித்து வரும் அனைத்து தமிழ் வலைப்பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி & வாழ்த்துக்கள்!!



மீண்டும் உங்கள் அனைவரையும் சென்னையில் சந்திக்க விரும்புகிறேன், நன்றி & வணக்கம்!!

Wednesday, September 05, 2007

நம்ம ஊர் திருச்சி - பாகம் 3



திருச்சியைப் பற்றிய கடந்த பதிவுகள்

திருச்சி 1
திருச்சி 2


தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே, திருச்சியிலும் வெயில் அதிகம். வேண்டுமானால் பகலில் வெளியில் அதிகம் சுற்றாமல், சமாளித்துக் கொள்ளலாம்.

சத்திரம் பஸ் ஸ்டாண்ட், மெயின் கார்டு கேட், தெப்பக்குளம், என்.எஸ்.பி ரோடுகளில் நிறைய தரமான உணவுக் கூடங்கள் (ஹோட்டல்கள்) உள்ளன.ரகுநாத், ஆர்ய பவன், வஸந்த பவன், கேரளா மெஸ், பனானா லீப் போன்றவை குறிப்பிடத் தக்கவை.

பிரபல ஆபரணம் மற்றும் துணிக்கடைகள்
சாரதாஸ்
தைலாஸ்
ஆனந்தாஸ்
சென்னை சில்க்ஸ்
கல்யாணி கவரிங்
லஷ்மி ஜுவல்லர்ஸ்
தம்பு (செருப்புகள், பெல்ட்டுகள்)

இப்போது இன்னும் நிறைய கடைகள் வந்து விட்டன. என்.எஸ்.பி ரோடு சென்றால், தரமான துணிகளை நியாயமான விலைக்கு வாங்க வாய்ப்புகள்
நிறைய உள்ளன. அப்புறம் இப்ப திருச்சிக்கு சென்னை சில்க்ஸ் வந்துருச்சு, அதுவும் சாரதாஸ விடாத மக்கள் கூட நகரும் படிக்கட்டு(Esclater) பார்க்குற ஆசையில் துணிய அள்ளிட்டு போறாங்க.

திருச்சியின் நடுவே ஓடும் இரு பெரும் ஆறுகள் காவிரி மற்றும் கொள்ளிடம். மிகப் பிரமாண்டமான ஆறுகள், முழு வேகத்துடன் ஓடுவதை
கல்லணை மற்றும் முக்கொம்பில் ரசிக்கலாம். போன வருடம் பெய்த மழையின் போது இரு ஆறுகளும் நிரம்பி ஓடின என நண்பர்கள் தெரிவித்தனர். வெள்ளமேற்பட்டால் சமாளிப்பது சற்று கடினமே. ஆனால் வருடத்தில் பல நாட்கள் காவிரி, கொள்ளிடம் தண்ணீரே இல்லாமல் இருக்கும்.

பனானா லீப் ஹோட்டல் பற்றிக் கூறும்போது நண்பர் அருண்.சி 'Banana leaf do serve non-veg. Infact i go there only for non-veg. " என்று அந்த ஹோட்டல் அசைவ உணவு வகைகளையும் அருமையாக படைப்பதை நினைவு கூறுகிறார். இந்த ஹோட்டல் ஹோலிகிராஸ் காலேஜ் அருகே மெயின்கார்டு கேட் (பெரிய மலைக்கோட்டை கதவு) எதிரில் உள்ளது.

திருச்சி வெயிலைப் பற்றி நண்பி மலர் கூறும்போது "Trichy veyilum oru sorkkam than ...athu 0 degree kulirla vaduravangalukku than theriyum !!!" என்று பரவசப்படுகிறார். மலர் தற்போது ஜப்பானில் இருக்கிறார். 0 டிகிரியில் இருக்கும்போது, வெயிலின் அருமை புரியுமல்லாவா !

மாம்பழச்சாலை என்ற இடத்தில், உலகின் அனைத்து விதமான மாம்பழங்களும் சீசனின் போது கிடைக்கும். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிடத்தில் பேருந்தில் (லால்குடி, சமயபுரம், மண்ணச்ச நல்லூர்) சென்று விடலாம். திருச்சியில் கிடைக்கும் சிறப்பான உணவு வகைகளைப் பற்றி வலைப்பதிவர், நண்பர் தேசிகன் "ரமா கபே, ரமணா பேக்கரி, மாம்பழச்சாலை மாம்பழம், காந்தி மார்கேட், வசந்த பவன் பரோட்டா, பாலக்கரை பிரமனந்தா சர்பத் கடை, பிமநகர் மோர்கடை... என்று அடுக்கிக்கொண்டே போகலாம்" என்று நினைவூட்டுகிறார்.

திருச்சியிலுள்ள பிரபலமான கலைக் கல்லூரிகள் சிலவற்றுக்கு பட்டப் பெயர்கள் உண்டு. ஜெயில் - ஜோசப், பியூட்டி - பிஷப், ஜாலி - ஜெமால் என்று கல்லூரிகளுக்கு நிக் நேம் உண்டு என்றும் தேசிகன் சிலாகிக்கிறார். வேறு கல்லூரிகளின்/கல்விக் கூடங்களின் பட்டப் பெயர்கள் தெரிந்தால்,
நண்பர்கள் கூறலாம்.

திருச்சியை பொறுத்த வரை கல்லூரி மாணவர்கள் இரண்டு ஏரியா பஸ்களைப் பார்த்தாலே பரவசப் படுவார்கள். அவை பெல் (BHEL) மற்றும் கே.கே நகர் பஸ்களே. ஏனென்றால் இந்த ஏரியாக்களில்தான் பிகர்கள் அதிகம் (தற்போது எப்படியென்று ட்ரெண்ட் தெரியவில்லை). தனியார் பஸ்கள் நிறைய உண்டு. டிஎஸ்டி, எம்ஆர்ஜி போன்று நிறைய பஸ் நிறுவனங்கள் உள்ளன. பஸ்கள் எல்லாம் புதிதாக, டேப் ரிகார்டர், எப்.ம் என்று கலக்கலாக இருக்கும். உறையூர், தில்லை நகர், பாலக்கரை, ஸ்ரீரங்கம் போன்ற ஏரியாக்களுக்கு நிறைய பஸ்கள் உண்டு. எல்லா ஏரியாக்களுக்கும்
போதுமான பஸ்கள், தொடர்ந்து உள்ளன.

மாலை நேரங்களில், சத்திரம் பேருந்து நிலையத்திலும், என்.எஸ்.பி ரோட்டிலும் கூட்டம் அலைமோதும். ஏகப்பட்டு பிளாட்பார கடைகள் பாப்கார்ன் முதல் பாப் பாடல்கள் சிடி வரை விற்பார்கள். தெப்பக்குளத்தில் இப்போது போட் விட்டிருக்கிறார்கள். இளைஞர்கள் அவரவர்கள் ரேஞ்சுக்கு
டைட்டானிக் ஹீரோ போல் கற்பனையில், போட்டில் மிதக்கிறார்கள். சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் திருச்சியில் மிகப்பிரபலம். இவர்கள் வைத்திருக்கும் கேண்டீனில் இனிப்புப் போளி (தமிழ்மணம் போலி இல்லீங்கோவ், தின்பண்டம்), ஜாங்கிரி, சமோசா போன்றவைகள் ருசியாக
கிடைக்கும்.

மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடை இப்போது திருச்சியில் நிறைய கிளைகளை திறந்துள்ளனர். ஆனால் ஐஸ்கிரிமின் தரம் தற்போது குறைந்து விட்டது என நண்பர்கள் பலரும் வருத்தப்படுகின்றனர்.

RTC Lodge ஹோட்டல் ரவா, வெங்காய ஊத்தப்பம், காபி, கந்தக பூமியின் காட்டமான வெய்யில், Golden Rock Loco shed, 80வயதான ஸ்டேட் பாங்க் ஆலமரம், 117 Infantry Battallion, அமெரிக்கன் ஆஸ்பத்திரி, பாலக்கரை ஆறுமுகம் ஹோட்டல் பரோட்டா, டவுன் ஸ்டேஷன் அய்யர்கடை இட்லி கடப்பா, ஸ்ரீரங்கம் அம்மாமண்டப படித்துறை, வருடமொருமுறை ஸ்ரீரங்கநாதர் வந்துபோகும் நாச்சியார் கோவில், திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில்,BHEL என்று திருச்சியைப் பற்றி எழுத நிறைய விஷயங்கள் உள்ளன. ஸ்ரீரங்கத்திலிருந்து ரங்கநாதர் பல்லக்கில் வருடமொருமுறை நாச்சியாரைப் பார்க்க உறையூர் நாச்சியார் கோவிலுக்கு வந்து போவார்.

திருச்சியை பற்றிய விபரங்களை ஓரளவுக்கு தொகுத்திருக்கிறேன். மேற்சொன்ன விபரங்களில் விடுபட்டவை, மாற்ற வேண்டியவற்றை நண்பர்களே, பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். மீண்டும் சந்திப்போம் !

புகைப்படங்கள், இணையத்தில் தேடி எடுக்கப் பட்டன. வல்பென், சுலேகா மற்றும் வேறு சில ஆதாரத் தளங்களுக்கு நன்றி!

Wednesday, August 29, 2007

தமிழ் வலைப்பதிவுகளில் முதன்முறையாய்...

தமிழ் வலைப்புதிவுகளில் முதன்முறையாய் ஒரு Interactive Crime Thriller (ஊடாடும் குற்ற திகில்) சிறுகதையை அனுபவிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன். கதையின் பாதி பகுதி இங்கே இருக்கிறது. இந்த கதையின் முடிவை (climax) கூறப்போவது நீங்கள்தான்.


எனக்கு ராஜேஷ்குமார், சுபா ஸ்டைலில் ஒரு க்ரைம் திரில்லர் எழுத ரொம்ப நாட்களாய் ஆசை. சரிதான் முயற்சிப்போமே என்று சென்ற வருடம் தேன்கூடு போட்டிகளின் போது ஒரு கதையை எழுத ஆரம்பித்தேன். அந்த கதையில் முதல் மூன்று பகுதிகளை கீழே கொடுத்திருக்கின்றேன்.


கதையை முதலில் படியுங்கள். பிறகு கதை எப்படி தொடர்ந்து சென்று முடிந்திருக்கும் என்பதை பின்னூட்டத்தில் 3-4 வரிகளில் எழுதுங்கள். நேரமும், ஆர்வமும் இருந்தால் கதையின் தொடர்ச்சியை தனிப் பதிவாகவும் இட்டு, இங்கே லிங்க் கொடுத்து விடுங்கள்.


Come on, let's interact !!!!


<<<>>>


{{விளையாடாமல் வேட்டையாடு}} - க்ரைம் சிறுகதை



Part - 1


நவிமும்பை வாஷி ட்ரெயின் ஸ்டேசன் அந்த அதிகாலை வேளையிலும் பரபரப்பாய் இருந்தது. கருஞ்சிவப்பு நிறத்தில் வழிந்திருந்த ரத்தம் தண்டவாளத்தை ஒட்டி உறைந்திருந்தது. இரண்டு அடி இடைவெளியில், விழுந்திருந்த இளம்பெண்ணின் சுடிதாரில் ரத்தம் திட்டு திட்டாய் இருந்தது. கம்யூட்டர் டெஸ்க்டாப் ஐகான்கள் போல் மக்கள் சிதறி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.


வாக்கிங் வந்திருந்த பெரியவர் தற்காலிமாக ஆஸ்த்மாவை மறந்து விட்டு "காலம் ரொம்ப கெட்டுக் கிடக்கு.. யாராவது போலிசுக்கு சொல்லுங்கப்பா" என்றார். கூடியிருந்தவர்களில் சிலர் அவசரமாக விலகினர். கேர்ள் ப்ரண்டுக்காக காத்துக் கொண்டிருந்த ஜீன்ஸ் இளைஞன் செல்போனில் "கமான்யா, சீக்கிரம் வாப்பா, பொணமெல்லாம் ஸ்டேசன்ல கிடக்கு, எப்ப ட்ரெயின் எடுக்கப்போறான்னே தெரியல, இன்னிக்கு 'சக்தே இண்டியா' படம் பாத்தாப்பலதான்" என்று அலுத்துக் கொண்டிருந்த நொடிகளில் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள்கள் புடை சூழ வந்தார்.


"போட்டாகிராபர், பாரன்சிக் ஆளுங்க, டாக் ஸ்குவாட் எல்லாரையும் வரச் சொல்லுய்யா.. காலங்காத்தாலயே பொணத்து முகத்துல முழிக்க வேண்டியதா இருக்கு....பேசாம கம்ப்யூட்டர் படிச்சிட்டு, சாப்ட்வேர் கம்பெனில ப்ளாக் எழுதிகிட்டு இருந்திருக்கலாம்.." என்ற இன்ஸ்பெக்டர் குனிந்து கர்சீப்பால் கையை சுற்றிக்கொண்டு ஹேண்ட்பேகை எடுத்தார். வேலை பார்த்த கம்பெனியின் அடையாள அட்டை, கிரெடிட், டெபிட் கார்டுகள், ஸ்டிக்கர் பொட்டுகள், இத்யாதி, இத்யாதி...


கம்பெனி அடையாள அட்டையில் பெயர் பார்த்தார் "வந்தனா ராஜசேகர், Emp Id: 78292"


<<<>>>



Part - 2


பிரகாஷ் லேட்டஸ்ட் ஹிட் பாலிவுட் நடிகையுடன் "கஜுராரே, கஜூராரே..." என்று டூயட் பாடிக்கொண்டிருந்த போது எங்கோ தொலைவில் செல்போன் ரிங்கியது. போர்வையை விலக்கி செல்போனை காதில் வைத்தான். "ஹாய் பிரகாஷ், என்னடா இன்னுமா தூங்கிகிட்டு இருக்க? எந்திருச்சி, ஜிம்முக்கு போடா ராஸ்கல், 10 கிலோ எடையை குறைச்சாதான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்.." என்று வந்தனாவின் குரல் தேனாய் வழிந்தது.


"இதோ எந்திருச்சுட்டேன், எங்க இருக்க இப்ப?" என்றான் பிரகாஷ்.



"வாஷி ஸ்டேசன்ல வெய்ட் பண்ணிகிட்ருக்கேன், 5:12 தானே ட்ரெயின் இன்னும் வரலே.." - வந்தனா



"சரி, கரெக்டா ஆபிஸ் போய்சேரு.. நான் ஜிம்முக்கு கிளம்பறேன்.... வச்சிரட்டுமா..ஒரே ஒரு முத்தம் கொடேன்..." - பிரகாஷ்.



வந்தானாவின் வெட்கப்படும் "போடா, திருட்டு ராஸ்கல்" உடன் கால் கட்டானது.


<<<>>>



Part - 3


ஆறுமுகம் காபி குடித்துக் கொண்டே மும்பை தமிழ் டைம்ஸை பார்வையால் மேய்ந்தார். செல்போன் வைப்ரேஷனில் அதிர்ந்தது. நம்பர் பார்த்தார். புதிதாக இருந்தது. ஏற்கனவே நம்பர் செல்போனில் இருந்தால் பெயர் வருமே என யோசித்துக் கொண்டே எடுத்தார்.


"சார்...வி1 தான் பேசறேன்...வெல்டிங் பண்ணியாச்சு.. இப்ப பன்வேல்ல இருக்கேன்.. ஹைதராபாத் பஸ்லதான் உக்காந்துருக்கேன்...." என்று எதிர்முனையில் குரல் கரகரத்தது.


"...ஏய்.. உன்னை போன் பண்ண வேண்டாம்னு சொன்னேன்ல..." என்றார் ஆறுமுகம். வியர்த்த நெற்றியை தோள் துண்டால் துடைத்தார்.


"இல்ல சார்... நேத்து நைட் வாஷி ஸ்டேசன்ல ஏர்டெல்காரன் ஏதோ விளம்பர ஸ்டால் வச்சி, ஃப்ரியா சிம்கார்டு கொடுத்துகிட்டு இருந்தான்..இதுல 10 ரூவாய்க்கு டாக்டைம் இருக்குன்னான்.. அதான் அந்த நம்பர இப்ப போட்டு உங்கிள்ட பேசிகிட்டு இருக்கேன்.. பேசி முடிச்சவுடனே தூக்கி போட்டுடறேன்"


"சரி சரி.. காலை கட் பண்ணு, ஹைதராபாத் போய்ட்டு 2-3 நாள் கழிச்சி எஸ்டிடீ பூத்ல இருந்து எனக்கு போன் பண்ணு.." என்று கட் செய்தார் ஆறுமுகம்.


<<<>>>



இவ்வுளவுதாங்க.... இப்ப நீங்க அசத்த ஆரம்பிங்க :-)))

என் கேள்விகளுக்கு என்ன பதில்?

1. 'பூங்கதவே.. தாழ் திறவாய்...' என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது?

2. சச்சின் டெண்டுல்கர் மொத்தம் எத்தனை டெஸ்ட் சதங்கள் இதுவரை எடுத்துள்ளார்?

3. ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதியாக பதவி வகித்த காலம் எந்த வருடத்திலிருந்து எந்த வருடம் வரை?

4. டைரக்டர் 'ஷங்கர்' இதுவரை எத்தனை படங்களை இயக்கியுள்ளார்?

5. இந்தியா ஒலிம்பிக் ஹாக்கியில் கடைசியாக தங்கம் வாங்கிய வருடம் எது?

6. இந்தியாவில் எந்த மாநிலம் சமீபத்தில், கடைசியாக உருவாக்கப் பட்டது? எந்த வருடம்?

Thursday, August 23, 2007

திருச்சிராப்பள்ளி

திருச்சியைப் பற்றிய எனது முந்தைய பதிவுகள்

திருச்சி 1
திருச்சி 2

திருச்சி நினைவுகள் தொடர்ந்து சுழலும்...

Wednesday, August 22, 2007

திருச்சி - 2




மலைக்கோட்டை மாநகரான திருச்சிராப்பள்ளியைப் பற்றி சென்ற பதிவில் (திருச்சி - 1) பார்த்தோமல்லவா ! மேலும் நிறைய விவரங்களுடன் பல நண்பர்கள் பின்னூட்டமிட்டிருந்தனர். அந்த விவரங்களுடன் மீண்டும் ஒரு முறை திருச்சியைச் சுற்றிப் பார்க்கலாம், வாருங்கள் !

திருச்சியில் இரண்டு பெரிய பேருந்து நிலையங்கள் உள்ளன. சத்திரம் பேருந்து நிலையம் (மெயின் கார்டு கேட்) மற்றும் மத்தியப் பேருந்து நிலையம் (ஜங்சன்). ம.பே.நிலையத்திற்கு அருகே ரயில் நிலையம் உள்ளது. ம.பே.நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் செம்பட்டு விமான நிலையம் உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களுக்கு பஸ்/டிரெயின் வசதி உள்ளது. சென்னை, மதுரைக்கு விமான வசதிகளும் உள்ளன. இரண்டு பேருந்து நிலையத்திற்கு அருகிலும் நிறைய, நல்ல ஹோட்டல்கள் உள்ளன.



நாகநாதர் டீ ஸ்டால் என்று திருச்சியில் நிறைய டீக்கடைகளைப் பார்க்கலாம். டீ, காபி தவிர வாழைக்காய் பஜ்ஜி சட்னியோடு கொடுப்பார்கள் மாலை நேரங்களில். அவ்வுளவு சுவையாய் இருக்கும். தெப்பக்குளம் பகுதியில், நிறைய ரோட்டோர நூடுல்ஸ் கடைகளைப் பார்க்கலாம். எக் நூடுல்ஸ், வெஜ் நூடுல்ஸ், சிக்கன் நூடுல்ஸ் என்று மக்கள் பிரித்து மேய்வார்கள் (அப்படின்னா, நல்லா சாப்பிடுவாங்கன்னு அர்த்தம்).


திருச்சியில் நிறைய ட்யூசன் செண்டர்கள் உண்டு. பத்தாவது, பன்னிரண்டாவது மாணவர்களுக்கென, மேக்ஸ் செல்வராஜ், பிசிக்ஸ் ஆர்.சி, கெமிஸ்டரி ராஜா, பயாலஜி சுந்தர் என்று ஏரியா, ஏரியாவாக நிறைய பிரபலமான ஆசிரியர்கள் திருச்சியைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள் (கொண்டிருக்கிறார்கள்).


திருச்சியிலுள்ள முக்கியமான சுற்றுலாத் தளங்கள்


மலைக்கோட்டை, முக்கொம்பு, கல்லணை


முக்கியமான கோயில்கள்


ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவானைக்கோவில் சிவபெருமான், சமயபுரம் மாரியம்மன், குணசீலம் சிவபெருமான், மலைக்கோட்டை தாயுமானவர் & உச்சிப் பிள்ளையார், வயலூர் முருகன்.


முக்கியமான கல்விக்கூடங்கள்


என்.ஐ.டி (NIT, பழைய பெயர் REC)
கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி
பாரதிதாசன் பல்கலைக் கழகம்

இதைத் தவிர வேறு பல பிரபலமான கலைக் கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகளும், கணிணி கல்விக்கூடங்களும் உள்ளன.

திருச்சியில் பிறந்த / படித்த முக்கிய பிரபலங்கள்

முதல் குடிமகன் அப்துல் கலாம் (நான் படித்த ஜோசப் கல்லூரியில் படித்தவர்)
தமிழ் தொண்டாற்றிய கி.ஆ.பெ. விசுவநாதம் (திருச்சியில் பிறந்து, வளர்ந்து, வசித்தவர்)
எழுத்தாளர் சுஜாதா (ஜோசப் கல்லூரி)
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் (நேஷனல் கல்லூரி)
நடிகர் நெப்போலியன் (ஜோசப் கல்லூரி)
நடிகர் பைவ் ஸ்டார் பிரசன்னா (சாரநாதன் கல்லூரி)
சர்.சி.வி. ராமன் (உறுதியாக தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்)

*****

திருச்சி நினைவுகள் தொடர்ந்து சுழலும் :-)

Tuesday, August 21, 2007

சென்னையின் ப்ளஸ்கள்(+)

சிங்காரச் சென்னையில் செப்டம்பர்-11ம் தேதி கால்பதிக்கின்றேன். 1998-ல் பி.எஸ்.சி முடித்தவுடன் ஹைதராபாத் கிளம்பினேன். ஹைதராபாத்தில் ஐந்தரை வருடங்கள் இருந்து விட்டு மும்பை கிளம்பினேன். ஹைதராபாத்தில் இருந்த நாட்களில் உருப்படியாக எம்.சி.ஏ படித்து முடித்தேன். நவி மும்பையில் இரண்டேகால் வருடங்கள் வாசம். பிறகு ஏப்ரல்-2006ல் புனே வந்தேன். இப்போது இங்கிருந்து கிளம்பி சென்னை மாநகரத்தில் வசிக்கப் போகிறேன்.

நமது அலுவலகம் சென்னை புறநகரில் உள்ளதால் போக்குவரத்து, தண்ணீர் பிரச்சனைகள் அவ்வளவாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

1991-லிருந்து 1998 வரை திருச்சியில் வசித்தேன். இப்போது மீண்டும் 9 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு அதுவும் சென்னைக்கு வருவது ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொஞ்சம் thrilled கொஞ்சம் excited. ஆனால் சென்னையின் தண்ணீர் பஞ்சத்தையும், climateடையும் நினைத்தால் கொஞ்சம் scared.

சென்னைக்கு வருவதால் நான் கருதும் ப்ளஸ்கள் (+)
1. சொந்த ஊருக்கு (கும்பகோணம்) பக்கம், அடிக்கடி சென்று வரலாம். பெற்றோர், உறவினர்களை அடிக்கடி சந்திக்கலாம்.
2. வார இறுதிகளில் கட்டாயம் தமிழ் சினிமா
3. விகடன், குமுதம், குங்குமம், கல்கி, தினமலர், தினத்தந்தி போன்றவற்றை சூடாக படித்து விவாதிக்கலாம்
4. டீக்கடை வெட்டி அரட்டை
5. தாவணி/சுடிதார், மல்லிகைப் பூவுடன் மங்களகரமான/அழகான இளம்பெண்கள்
6. நைட்டு கடைகளில் கொத்து பரோட்டா, குஸ்கா, ஆம்லெட், இட்லி, etc....
7. வலைப்பதிவர் சந்திப்பு, பட்டறை என்று நாமும் நம் பங்குக்கு பட்டையை கிளப்பலாம்

இதைத் தவிர நீங்களும் ஏதாவது + சொல்லுங்களேன்
+ மட்டுமே :-)

Friday, August 03, 2007

தேநீருடன் பருகச் சில கவிதைகள்

1

புதிது புதிதாய்
காதல் கவிதைகள் புனைய
புனைப்பெயரை
தேடி அலைந்த போதுதான்
கண்டேன் உன்னை....
கண்டது முதல்
மறந்தேன்
சொந்தப் பெயரையும்...


2

வலைப்பதிவுகளில் கை
வலிக்கும் வரை
எழுதித் தள்ளி விட்டேன்..
எல்லா போட்டிகளிலும்
கலந்து கொண்டிருக்கிறேன்..
நட்சத்திரமோ,
பரிசுகளோ,
வலை நிறைய பின்னூட்டங்களோ
கைக்கெட்ட வில்லை...
இருப்பினும்
வலை தொடர்வேன் நான்...
தாய்மொழியில் எழுதுவது
சுவாசிப்பது போலல்லவா..
தொடர்ந்து சுவாசிப்பதற்கு
காரணம் வேண்டுமா என்ன?

3

புன்னகைதான் உனக்கு
சிறந்த பொன் நகை
என்று
கூறிக் கூறியே
என் நகைகளையெல்லாம்
ஒவ்வொன்றாய்
களவாடி சென்றாயே...
திருமணமானதும்
திசைமாறிப் போவதா காதல்?

4

மழை பொழியும்
ஓர் பின்னிரவில்
தேநீருடன் பருக
கவிதைகள்
சிலவற்றை தேடி
அலைந்த போதுதான்,
தெரிந்து கொண்டேன்
உன் புகைப்படம்
உணர்த்தும்
எண்ணிலா புரிதல்களை!!!



*****
பின்னூட்டத்தில் உங்களுக்கு பிடித்த கவிதையின் எண் எதுவென்பதை மறவாமல் எழுதுங்கள்!! எதுவுமே தேறாவிட்டால் '0' என்று கூறுங்களேன் :-) இனிமையான வார இறுதிக்கு வாழ்த்துக்கள்!

Thursday, July 26, 2007

தயாநிதி மாறன் - அன்றும் & இன்றும் - கார்ட்டூன்



கார்ட்டூன்கள் வரைவதில் அனுபவம் அதிகமில்லை. இருந்தாலும் ஆர்வம் அதிகம் உண்டு. உங்கள் கருத்தை அவசியம் எதிர்பார்க்கிறேன், அது ஒரு ஸ்மைலியாக இருந்தாலும்!

Wednesday, July 25, 2007

சில பதிவர்களிடம் சில கேள்விகள்

ஊரெல்லாம் ஒரே கேள்விப் பதிவுகளாகவும், போட்டிப் பதிவுகளாகவும் இருப்பதால் நாமும் நம் பங்குக்கு ஏதாவது ஒரு பதிவு பதியாவிட்டால் என்னாவது நம் பெருமை! இதோ கேள்விகள், சம்பந்தப் பட்ட பதிவர்கள் மட்டுமல்ல, வேறு எவரேனும் கூட பதில் கூறலாம். இக்கேள்விகள் விளையாட்டுக்கல்ல; உண்மையான, நேர்மையான பதிலைக் கூறுங்கள்.

1. செந்தழல் ரவி
அது என்ன 'செந்தழல்' ரவி? செந்தழல் என்பது என்ன? உங்கள் ஊர்ப் பெயரா அல்லது காரணப் பெயரா? நிழல்கள் ரவி மாதிரி இருக்க வேண்டும் என்று செந்தழல் ரவி என்று பெயர் வைத்துக் கொண்டீர்களா?

2. தேசிகன்
எழுத்தாளர் சுஜாதா உங்களுக்கு எப்போதிலிருந்து பழக்கம்? எப்படி இந்தளவுக்கு பழக்கமானார்? உங்கள் உறவுக்காரரா அவர்?

3. டோண்டு
மகரநெடுங்குழைக்காதன் என்பவர் யார்? கடவுளா, எந்த கடவுள்? அவருக்கு இப்பெயர் எப்படி வந்தது?

4. பாஸ்டன் பாலா
ஈ.தமிழ் வலையகத்தில் முன்பு போல் இப்போதெல்லாம் தினமும் பதிவுகள் வருவதில்லையே ஏன்? நீங்கள்தான் இட்லிவடை என்று வதந்தி கிளம்ப காரணம் என்னவாக இருக்கலாம்?

5. லக்கிலுக்
உங்கள் பெயரை தமிழ் படுத்தினால் எப்படி வைக்கலாம்? 'அதிர்ஷ்டப் பார்வை' என்றா? லக்கி என்பதற்கான தூய தமிழ் சொல் என்ன? அதிர்ஷ்டம் என்பது வடமொழிச் சொல் அல்லவா?

பதிவர்களே, பதில்களை வீசுங்கள், பரிசுகளை(?) வெல்லுங்கள்!!
கேள்விகள் தொடரும்.....

Tuesday, July 24, 2007

திருமண வாழ்க்கை - ஓவியம்




மேலே உள்ள படம் சிந்தாநதி நடத்தும் ஓவியப் போட்டிக்காக வரையப்(?) பட்டது. இது முன் நவீனத்துவ ஓவியமாகியதால் யாரும் புரியவில்லை என்று கேள்வி எதுவும் கேட்கக் கூடாது. உங்களுக்கு என்னவெல்லாம் புரிகிறது என்று பின்னூட்த்தில் கூறலாம். சிறந்த பின்னூட்டத்திற்கு பிளாஸ்டிக் குடம் பரிசளிக்கும் எண்ணம் உள்ளது :-)


பின்குறிப்பு: எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் கூடிய சீக்கிரம் ஆகிவிடும் போல் தோன்றுகிறது.

Saturday, July 21, 2007

இந்திய கிரிக்கெட் - மற்றுமோர் சொதப்பல்

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்கிஸில் 201 ரன்களுக்கு ஆல் அவுட். இங்கிலாந்து 97 ரன்கள் லீடிங். ஜாபர் 58 ரன்கள், சச்சின் 37, கங்குலி 34 ரன்கள். புயல் விக்கெட் கீப்பர் தோனி டக் அவுட் ஆகி 'அதிருதுல்ல...' என்று பெவிலியன் திரும்பினார். கேப்டன் டிராவிட் 2 ரன்கள் எடுத்ததே சாதனை என்று நினைக்கிறார் போலும்.

தினேஷ் கார்த்திக் இங்கிலாந்து பிட்ச்சுகளில் ஒப்பனர் வேலைக்கு ஒத்து வர மாட்டார். ஏதோ பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை பிட்ச்சுகளில் வேண்டுமானால் கார்த்திக்கை வைத்து ஒப்பேத்தலாம். இந்தியாவில் வேறு ஸ்பெசலிஸ்ட் ஓப்பனர்களே இல்லையா, என்ன??

217/1 என்றிருந்த இங்கிலாந்து 298 ரன்களில் ஆல் அவுட் ஆன போதே எங்கோ இடித்தது. சரிதான், நமது வீரர்கள் திடீர் உத்வேகம் பெற்று இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கி விட்டார்கள் என்று மகிழ்ந்து உச்சி முகர்வதற்குள் பேட்டிங்கில் சொதப்பி விட்டனர். ஆரம்பத்தில் இருந்தே தொடரும் கதைதான் இது. வெளிநாட்டு தொடர்களில் அதுவும் பந்து ஸ்விங் ஆகும் பிட்ச்சில் இந்தியாவின் பருப்பு எப்போதுமே வேகாது. இப்போதும் இப்படித்தான் இருக்கிறது.

பார்ப்போம், இரண்டாவது இன்னிங்ஸில் என்ன நடக்கிறதென்று!!!

Friday, July 20, 2007

புனே -> பெங்களூரூ -> கும்பகோணம்

புனேயிலிருந்து ஊருக்கு நான்கு நாட்கள் விடுமுறையில் செல்வது என்று முடிவெடுத்தவுடனேயே மலிவான விமானச்சீட்டு தேடும் படலம் தொடங்கி விட்டது. புனேயிலிருந்து சென்னைக்கு தற்போது நேரடி விமான
சேவையில்லை, பெங்களூரூ வழியாக செல்லலாம், ரூ 9000 பயணக் கட்டணம் திரும்ப வருவதற்கும் சேர்த்து, கிங்பிஷர் ஏர்வேசில் (இதனை தமிழ்ப் படுத்தினால் எப்படி இருக்கும், கிங்பிஷர் - அரச மீன் பிடிப்பவர் :-)). ஜெட் ஏர்வேசில் ரூ 10000 ஆகிறது. சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு 6 மணிநேரம் பயணம் செய்ய வேண்டும்.

ஆனால் புனே - பெங்களூரூ விமானக் கட்டணம் ரூ 3750 மட்டும்தான் (திரும்ப வருவதற்கும் சேர்த்து). ரீடிப் கட்டணதேடுதல் இணையத்தில் தேடி ஒருவழியாக இண்டிகோ விமானத்தில் பதிவு செய்து விட்டேன். பெங்களூரூ - கும்பகோணம் 10 மணிநேரப் பயணம், பரவாயில்லை பேருந்தில் பயணிக்கலாம் என்று முடிவாகி விட்டது.

புனேயிலிருந்து மாலை 5:25க்கு விமானம் கிளம்பியது. இண்டிகோ விமானச் சேவை பரவாயில்லை, டிக்கெட் குளறுபடிகளில்லை. இணையத்தளமும் நன்றாக, எளிமையாக உள்ளது. பயணத்தின் போது கொஞ்சம் விமானம் ஆட்டம் காட்டினாலும், சரியாக இரவு 7 மணிக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள் :-)

பெங்களூரூவிற்கு இதுவரை வந்ததில்லை. தேசிகன் வலைப்பக்களிலும்(பெண்களூர்), மற்ற வலைப்பதிவர்களின் வலைப்பக்கங்களிலும், செய்தி ஊடகங்களில் ஊரைப் பற்றி கேள்விப் பட்டதை தவிர வேறு அனுபவமில்லை. பரவாயில்லை, ஊர் நன்றாகத்தான் இருக்கிறது.

பெங்களூரூ விமானநிலையம் ஓரளவுக்கு சுத்தமாக உள்ளது. என்னை ஆச்சரியப் படுத்தியது இதுவல்ல, வெளியே வந்தவுடன் மெஜஸ்டிக்(கேம்ப்கவுடா) பேருந்து நிலையம் செல்வதற்கு ஆட்டோவைத் தேடினேன். ஆட்டோவிற்கான வரிசை முன்பு, ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் நின்று கொண்டு பயணிகளின் பெயர், செல்லுமிடம், செல்பேசி எண்ணை,
ஆட்டோ எண்ணை குறித்துக் கொண்டு வழியனுப்பி வைக்கிறார். அற்புதமான ஏற்பாடு. ஊர் தெரியாது புதிதாக வருபவர்களுக்கு இது பயனுள்ளது.

பெங்களூரூவில் சாலைகள் நன்றாக உள்ளன. ஓரளவுக்கு ஊரே சுத்தமாக உள்ளது (மும்பை, புனேவை ஒப்பிடும்போது).ஆட்டோகாரர் மீட்டர் போட்டு, 74 ரூபாய் (மீட்டர் சார்ஜ்) வாங்கிக் கொண்டு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார். ஆனால் டிராபிக் ரொம்பவும் அதிகம். விமான நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு 75 நிமிடத்திற்கு மேலாகி விட்டது (12 கிமீ மட்டுமே என்று நினைக்கிறேன்).

நான் பார்த்த வரையில் தமிழர்கள் நிறைய பேர் தென்பட்டனர். தமிழ் பத்திரிக்கைகளையும், செய்தித் தாள்களையும் கூட பார்க்க முடிந்தது. மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் இரவு 8:30க்கு கே.எஸ்.ஆர்.டி.சி ஏசி வசதிப் பேருந்து கும்பகோணத்திற்கு கிளம்புகிறது. ரூ 363 பயணக் கட்டணம். பேருந்து சுத்தமாக, வசதியாக உள்ளது. டிவி தொல்லை இல்லை. போர்த்திக் கொள்ள போர்வை, தண்ணீர் பாட்டில், முகம் துடைக்க டிஸ்யூ பேப்பர் போன்றவற்றை கொடுக்கின்றனர்.

சற்று கண்ணயர்ந்தால் 11 மணியளவில் கிருஷ்ணகிரி, காலை 5 மணிக்கு திருச்சி, 7 மணிக்கு கும்பகோணத்தில் கொண்டு சேர்த்து விடுகின்றனர். இவ்வண்டியைத் தவிர கேபிஎன் பேருந்தும் இருக்கிறது.

மூன்று நாட்கள் ஊரில் இருந்து விட்டு, திரும்பவும் கும்பகோணத்திலிருந்து, பெங்களூரூ. அங்கிருந்து புனே வந்து சேர்ந்து நண்பர்களிடம் 'அதிருதுல்ல....' என்றேன்!

Tuesday, April 24, 2007

கிரிக்கெட் - இந்த வாரம்

ஒரு வழியாக கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. இன்று நடக்கும் அரையிறுதி போட்டியில் இலங்கையும், நியுசிலாந்தும் மோதுகின்றன. ஆட்டம் நடக்கும் ஜமைக்கா மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால் இரு அணிகளிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிப்பதில் அதிகப் பங்கு வகிப்பர் என்று நம்பலாம்.

தற்போதைய ஃபார்மில் இறுதி போட்டிக்கு செல்ல, இலங்கைக்கே வாய்ப்பு அதிகம். அனுபவ வாஸ், அதிரடி மாலிங்கா, சுழற்புயல் முரளிதரன் என பந்துவீச்சிலும், ஜெயசூர்யா, சங்ககரா, ஜெயவர்த்தனே போன்ற அனுபவ வீரர்களால் மட்டையடியிலும் (பேட்டிங்) இலங்கை ஜொலிக்கிறது.

நாளை நடக்க இருக்கும் இன்னொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்காவை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா இன்னும் ஒருமுறை இறுதிப் போட்டியில் விளையாட தயாராக உள்ளது.

இறுதிப் போட்டியில் எனது கணிப்பு : ஆஸ்திரேலியா - இலங்கை, உங்கள் கணிப்பு என்னவென்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!

உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் காற்று வாங்குகின்றன. லாரா ஓய்வுபெற்ற வெஸ்ட் இண்டிஸ் - இங்கிலாந்து போட்டியை தவிர மற்ற பெரும்பாலான போட்டிகளில் பார்வையாளர்கள் மிகவும் குறைவே! அதிகமான டிக்கெட் விலை ஒரு காரணமாக சொல்லப் பட்டாலும், எனக்கென்னவோ காரணம் வெறெங்கோ உள்ளதாகப் படுகிறது, உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்!

வங்கதேசத்திற்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி தேர்வாகி விட்டது. ராகுல் டிராவிட் கேப்டனாக, இளமையான(?) அணி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. டெண்டுல்கர், கங்குலி, ஹர்பஜன், அகார்கர், பதான் போன்றோர் கழட்டி விடப் பட்டுள்ளனர். டிராவிட் தேர்ந்தெடுக்கப் பட்டதும் கேள்விக் குறியே! அடுத்த உலகக் கோப்பையை மனதில் வைத்து இளமையான ஒருவரை கேப்டனாக தேர்ந்தெடுத்திருக்கலாம். யுவராஜ் சிங், சரியான தேர்வாக இருந்திருப்பார்.

Thursday, April 12, 2007

'தி' என்றால் திருச்சி...




நேற்று நண்பர் ஒருவரிடமிருந்து செல்பேசியில் குறுஞ்செய்தி வந்தது "I m going 2 TRY this wknd". நண்பர் திருச்சியை சேர்ந்தவர் என்பதால், அவர் இந்த வார இறுதியில் திருச்சிக்கு செல்கிறார் என்பதை உடனே புரிந்து கொள்ள முடிந்தது.

திருச்சிராப்பள்ளி என்பதே திருச்சியின் முழுப்பெயர். பழங்காலத்தில் திரு. சிராப்பள்ளி என்று பழக்கத்தில் இருந்து வந்தது, காலப்போக்கில் திருச்சிராப்பள்ளி என்று மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி என்னும் பெயர், எப்போது திருச்சி என சுருக்கமாக வழங்க ஆரம்பிக்கப் பட்டது என்று தெரியவில்லை. ஒருவேளை பேருந்துகளிலும், மற்ற பெயர் பலகைகளிலும் எழுதுவதற்கு சுலபமாக கடந்த 40 - 50 வருடங்களுக்குள்ளாகவே இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்கலாம்.

திருச்சியின் பெயர் மட்டுமல்லாமல், தஞ்சாவூர் என்பது தஞ்சை என்றும், கும்பகோணம் என்பது குடந்தை என்றும், திருநெல்வேலி என்று நெல்லை என்றும், பாண்டிச்சேரி என்பது பாண்டி என்றும் அழகாக சுருக்கப்பட்டுள்ளன. எனக்கென்னவோ சுருக்கப்பட்டுள்ள பெயர்களை விட, உண்மையான முழுப்பெயர்களே கவர்ச்சியாக உள்ளதாக உணறுகின்றேன்.

இப்போது இணைய அரட்டை, செல்பேசி குறுஞ்செய்திகளெல்லாம் வந்துவிட்ட பிறகு திருச்சி என்பதைக் கூட TRY என்றோ try. என்றோ இன்னும் சுருக்கி பயன் படுத்துகிறார்கள். ஒருவேளை எதிர்காலங்களில் இதுவும் கூட இன்னும் சுருங்கி திருச்சியை 'T' அல்லது 'தி' என்று பயன் படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்(how are you) என்பதை h r u? என்று கேட்கிறார்கள். இதை விடவும் இணைய அரட்டைகளில் ASL என்னும் அறிமுகம் செய்து கொள்ளும் வார்த்தை பிரபலம். ASL என்றால் Age, Sex & Location.

குறுஞ்செய்திகளில் சென்னை என்பது CHN என குறிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி வந்தால் (இன்னமும் ஏன் வரவில்லை?) சென்னையை எவ்வாறு குறிப்பிடுவார்கள் என்று யோசித்தால் விடை புலப்பட வில்லை. 'செ' என்று குறிப்பிட முடியுமா? உதாரணத்திற்கு ஜெயங்கொண்டம் என்ற ஊரின் பெயரை 'ஜெ' என்று சொல்ல முடியுமா? ஜெ என்றால் இன்று வரை ஜெயலலிதாவை மட்டுமல்லவா குறிக்கிறது.

திருச்சியில் தில்லைநகர் என்ற இடத்தின் பெயரை தி.நகர் என்று சில பேருந்து பலகைகளில் பார்க்கலாம். இதுவே சென்னையில் தி.நகர் என்றால் தியாகராஜ நகர் என புரிந்து கொள்ள வேண்டும். மேலும் திருச்சியில் வயலூர், புத்தூர், உறையூர், திருவரங்கம் போன்றவற்றை எப்படி சுருக்க முடியும் என்று தெரியவில்லை.

எது எப்படியிருந்தாலும், தி என்றால் திருச்சி என்பது உடனே சாத்தியமாக வேண்டும் என்றால் ரஜினியின் அடுத்த படத்தில் ஒரு பாட்டு வைத்து விடலாம் 'தி என்றால் திருச்சி... ர என்றால் ரஜினி...', எஸ்பிபி மூச்சு விடாமல் பாடுவது ஒரு சரணம் வைத்து விட்டால் அப்புறம் கேட்கவா வேண்டும். உலகம் முழுக்க தி என்றால் திருச்சி என்று தெரிந்து விடும், என்ன சொல்கிறீர்கள்?

Thursday, April 05, 2007

'பல்லேலக்கா' சிவாஜி !!!!


எல்லாரும் சிவாஜியை பத்தி பதிவு போடறாங்க, நாமும் நம்ம பங்குக்கு ஒரு பதிவு போடலேன்னா எங்க பீல்ட் அவுட் ஆயிடுவோமான்னு பயமா இருக்கு... வந்ததுதான் வந்துட்டீங்க, படிச்சுட்டு ஏதாவது திட்டிட்டு போங்களேன்!


ரெண்டு வருஷமா பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்து ஒரு வழியா சிவாஜி பாட்டெல்லாம் ரிலிஸ் ஆயிடுச்சு. புனே ரஸ்தாபேட் ஏரியாவுல அதிகாரப்பூர்வ (அபிஷியல்) சிடியே கிடைக்குது. 125 ரூவாங்கிறது கொஞ்சம் அதிகந்தான் இருந்தாலும் ரஹ்மான் - ஷங்கர் - ரஜினிகாந்த் காம்பினேஷன் இருக்கிறதால நம்ம ப்ரண்ட் வாங்கிட்டு வந்துட்டாரு!


ஏழு பாட்டுங்க இருக்குங்க. முதல் தடவை கேட்கறப்பவே மூனு நாலு பாட்டுங்க பச்சக்கன்னு அட்ராக்ட் பண்ணிடுச்சுங்க. 'அதிரடி..தீ..'ன்னு ஆரம்பிக்கிற ரஹ்மான் பாட்டு நாலு தடவ கேட்டப்புறம் பரவாயில்லை போல இருக்கு. பாட்டு வரியெல்லாம் கேரண்ட்டியா புரிஞ்சுக்கவே முடியாது.

ரெண்டாவது பாட்டு 'பல்லேலக்கா' சூப்பரோ சூப்பர். 'சூரியனோ சந்திரனோ...'ன்னு ஆரம்பிச்சு எஸ்பிபி 'காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்..'ன்னு எண்ட்டர் ஆவராரு பாருங்க, அட்டகாசம். இப்ப எழுதறப்பவே எனக்கு புல்லரிக்குது, தியேட்டர்ல பிச்சு உதறும்னு நினைக்கிறேன். ஓப்பனிங் சாங் இதுதான். சந்திரமுகி 'தேவுடா.. தேவுடா..' மாதிரியே இதுவும் கலக்கும் பாருங்க.


'சஹானா சாரல்..' பாட்டு சூப்பர் மெலடி. உதித் நாரயணனும், சின்மயியும் போட்டு போட்டுட்டு கலக்கி இருக்காங்க. பாட்டு வரிகளெல்லாம் தெளிவா கேட்க முடிவதே ஒரு பெரிய சாதனைதான். 'மார்கழிப் பூவே' பாட்டுக்கு அப்புறம் ரஹ்மானோட நெக்ஸ்ட் மெலடி ரேங்க் இதுக்குத்தான்னு நான் (நான் மட்டும்தான்) நினைக்கிறேன்..


'சஹாரா பூக்கள்..' பாட்டு சோகமான மெலடி. விஜய் யேசுதாஸ், கோமதி ஸ்ரீ (யாருங்க இந்த பொண்ணு, புதுசா ??) பாடியிருக்காங்க. பாடல் ஓகே ரகம். ரொம்ப மெதுவா, இழுக்கறாப்ல இருக்கு.


'ஸ்டைல்..' பாட்டு ரொம்ப ஸ்டைலா இருக்கு. இருந்தாலும் 'ஒரு கூடை சன்லைட்..' அப்படிங்கிற வரியே வலைப்பதிவையெல்லாம் படிச்சுட்டு கேட்டாத்தான் புரியுது. பாட்டு வேற ரொம்ப வெஸ்டர்னா இருக்கு. என்னமோ போங்க..


'சிவாஜி' தீம் மியுசிக் சுமார்தான், சொல்றதுக்கு ஒன்னுமில்லை.


கடைசி பாட்டு 'வாஜி..வாஜி..சிவாஜி' கலக்கல் பாட்டு. ஹரிஹரன், மதுஸ்ரீ பட்டையை கிளப்பி இருக்காங்க. 'ஆம்பல்..ஆம்பல்..'ன்னு ஆரம்பிக்கிற பாட்டுல வார்த்தைகளெல்லாம் சூப்பரா வந்துருக்கு. சின்ன குழந்தைகளெல்லாம் முணுமுணுக்கப் போறாங்க இந்த பாட்டைத்தான்.


மொத்தத்தில பாட்டெல்லாம் நிறைய மார்க் வாங்கி படத்தை பற்றி எதிர்பார்ப்பை இன்னும் எக்கச்சக்கமாக எகிற வைச்சிக்குங்க. படம் மே - 17ம் தேதி ரிலிஸ்ன்னு சொல்றாங்க. அதுக்கு முன்னாடியே திருட்டு விசிடி வந்தாலும் வந்துரும். விசிடியை பார்க்காம, தியேட்டருக்கு போய் மக்களோட மக்களா படத்த பாருங்க, பாத்துட்டு வந்து நீங்களும் உங்க பங்குக்கு ஒரு விமர்சனப் பதிவு போட்ருங்க!!


கொசுறு தகவல்:


புனேயில் இருக்கும் எங்க ஆபிஸ் கேம்பஸ்லயும் ஷூட்டிங் நடந்திருக்கு. எங்க ஆபிஸ் இருக்கிற சைபர் சிட்டிதான் 'சிவாஜி யுனிவர்சிட்டி'யா படத்தில மாற்றப் பட்டிருக்கு. ரஜினி காலேஜ் திறக்கற சீனை படத்தில் பாத்துட்டு வந்து எப்படி இருக்குன்னு மறக்காம எனக்கு சொல்லுங்க!! எங்கயாவது ஒரு
ப்ரேம்ல நான் கூட இருக்கலாம்!!

Wednesday, April 04, 2007

கிரிக்கெட் உலகக்கோப்பை யாருக்கு?





முதலில் அரையிறுதிக்கு தகுதிபெறக் கூடிய அணிகளின் வாய்ப்புகளைப் பற்றி பார்ப்போம்.

சூப்பர்-8க்கு தகுதி பெற்ற அணிகளில் அயர்லாந்து, பங்களாதேஷ் ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. எனவே இவைகளை ஒதுக்கி விடலாம். வெஸ்ட் இண்டீஸ் தான் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. தற்போதைய ஃபார்மில் இதுவும் வெளியேறி விடும்.இங்கிலாந்தும் சுமாராகத்தான் காட்சி அளிக்கிறது. அயர்லாந்துடன் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றுள்ளது. எனவே இதற்கும் வாய்ப்புகள் குறைவு.

எனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியுசிலாந்து, இலங்கை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும். இவற்றில் முதலிடம் பெறும் அணி நான்காமிடம் பெறும் அணியிடமும், இரண்டாமிடம் பெறும் அணி மூன்றாமிடம் பெறும் அணியிடமும் மோதும். தற்போதைய நிலைமையின் படி, இரு அரையிறுதிகளிலும் தென்னாப்ரிக்கா - இலங்கை (A2 vs A3), ஆஸ்திரேலியா - நியுசிலாந்து (A1 vs A4) மோதுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.


இவற்றில் வென்று இறுதிப் போட்டியில் மோதுவதற்கு ஆஸ்திரேலியா & தென்னாப்ரிக்கா அணிகள் தயாராக உள்ளன. வாய்ப்பும், ஃபார்மும் கூட இவ்விரண்டு அணிகளுக்கே உள்ளன. ஆனாலும் அந்த நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அவையே முன்னேறலாம். இதெல்லாம்
சரி, இறுதிப்போட்டியில் யார் வெல்வார் என்று கேட்கிறீர்களா? தென்னாப்ரிக்கா வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை, பொறுத்திருந்து பார்ப்போமே!!

இந்த உலகக் கோப்பையின் சிறந்த வீரர் ஆவதற்கான வாய்ப்பு மேத்யூ ஹேடன், மெக்ராத், ஜெயசூர்யா, மாலிங்கா ஆகிய வீரர்களுக்கு அதிகமுள்ளது! இவ்வீரர்களில் முதல் மூவர் 30 வயதை தாண்டிய அனுபவ வீரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உங்கள் சாய்ஸ் (உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி, சிறந்த வீரர்) என்னவென்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!