Saturday, November 26, 2005

நம்ம ஊர் திருச்சி

மலைக்கோட்டை மாநகரம் திருச்சிராப்பள்ளியைப் பத்தித்தாங்க பேசப் போறேன். ரொம்ப நாளாச்சுங்க நம்ம ஊரைப் பத்தி பேசி. அதான் கொஞ்சம் நினைவலைகளில் நனையலாமேன்னு உங்ககிட்ட பேசறேன். நான் பொறந்தது ஜெயங்கொண்டம் பக்கத்துல ஒரு கிராமத்துலங்க. திருச்சியிலதான் படிச்சேன். 1991 -லிருந்து 1998 வரைக்கும் அங்கதாங்க இருந்தேன். வாங்க, நடந்துகிட்டே பேசுவோம்!

ஏங்க, திருச்சின்னா உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும் ? மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், காவேரி, முக்கொம்பு, கல்லணைன்னு எதுவாச்சும் ஞாபகத்துக்கு வருதுல்லியா ? எனக்கு ஒரு ஐஸ்கீரீம் கடைதாங்க ஞாபகத்துக்கு வரும்.
  • வனிலா ஐஸ்கீரீம் ரூ 1.50
  • சாக்லேட் ஐஸ்கீரீம் ரூ 2.00
  • புரூட்சாலட் ஐஸ்கீரீம் ரூ 2.00
இதுதாங்க ஐஸ்கீரீம் மெனு. எங்கே தெரியுமா ? திருச்சி தெப்பக்குளம் போஸ்ட் ஆபிஸ் பக்கத்துல 'மைக்கேல்ஸ் & சன்'னுன்னு ஒரு கடை இருக்குங்க (இப்ப கூட இருக்குதுங்க, இப்ப திருச்சியிலேயே நிறைய இடங்கள்ள கிளைகள் திறந்துட்டாங்க). இந்த கடை ரொம்ப பிரபலங்க. சின்ன கடைதான். ஒரு இருபது பேர்தான் உட்காரலாம் ஒரே சமயத்தில. ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் ஐஸ்கீரீம். நாங்கல்லாம் ஸ்கூல் படிக்கிறப்ப தினமும் சாயந்திரம் இங்க வந்துருவோம்.

நான் செயிண்ட் ஜோஸப் காலேஜ்லதாங்க படிச்சேன். காலேஜ் படிச்சப்பவும் இங்கதாங்க வருவோம். இந்த கடைக்கு பின்னாடி ஹோலிகிராஸ் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரி, எதிர்த்தாப்ல பிசப் ஹிபர் பள்ளி, பக்கத்துல செயிண்ட் ஜோஸப் பள்ளி மற்றும் கல்லூரின்னு ஓரே இளைஞர்கள் கூட்டமாத்தான் இருக்கும் எப்பவும். பக்கத்துலதான் மலைக்கோட்டை. அங்க சுத்திப் பாக்க வர்ரவுங்க கூட இங்கே வருவாங்க. இப்ப ஒரு ரூவா விலை ஏத்தியிருக்காங்க. எனக்கு தெரிஞ்சு உலகத்துலேயே குறைந்த விலைக்கு தரமான ஐஸ்கீரீம் கிடைக்கிற இடம் இதுதான் நினைக்கிறேங்க. நீங்க திருச்சிதானா ? இல்லைன்னா ஒரு தடவை திருச்சி போயிட்டு வாங்களேன், சூப்பர் ஊருங்க !

என் கல்யாணத்துக்கு இந்த ஐஸ்கீரிம் கடையில்தான் டீரிட் கொடுக்கலாம்னு இருக்கேன். 100 பேர் சாப்பிட்டாலும் ரூ 1000க்கும் மேல பில் வராது. என்ன சொல்றீங்க ?

இந்த கடைக்கு பின்னால இருக்குற தெருவுலதாங்க 'பனானா லீஃப்' ன்னு ஒரு ஹோட்டல் இருக்குங்க. சாப்பாடு தலை வாழை இலைல சூப்பரா போடுவாங்க. எல்லா வெரைட்டிஸூம் இங்க கிடைக்கும்ங்க. ஆனா அசைவம் கிடையாதுன்னு நினைக்கிறேன். சரியா ஞாபகம் இல்லீங்க !

திருச்சியில நிறைய தரமான ஹோட்டல்கள் இருக்குங்க. இருந்தாலும் ரோட்டோர நைட் கடைகளும் நிறைய இருக்குங்க. இந்த மாதிரி ரோட்டு கடையில இட்லி, தோசை, பரோட்டா எல்லாம் சாப்பிட்டு ஒரு நாலு ஆம்லெட், ஆஃப்பாயில் சாப்பிடற சுகமே சுகந்தாங்க. அவ்வுளவு அருமையா இருக்கும் !

என்னடா இவன் சாப்பாடைப் பத்தியே பேசிக்கிட்டு இருக்கானேன்னு பாக்குறீங்களா ? கோச்சுக்காதீங்க, எனக்கு சாப்பாடைப் பத்தித்தான் எப்பவும் நினைவு.

இப்ப திருச்சியில உள்ள சுற்றுலா தளங்கள் பற்றி பேசுவோமா ? மலைக்கோட்டைதாங்க முதல்ல. நீங்க மெயின்கார்டுகேட்ல இறங்கனீங்கன்னா அப்படியே எதிர்த்தாப்ல நடந்து போயிறலாம். மலைவாசல் கீழே டிக்கெட் வாங்கிகிட்டு (ரூ 2) விநாயகர் ஒருத்தரு இருப்பாரு, அவர கும்புட்டுட்டு அப்படியே படிகள்ள ஏறீனீங்கன்னா, தாயுமானவர் கோயில் வருங்க. நல்லா பொறுமையா சுத்திப்பாத்துட்டு இன்னும் கொஞ்சம் மேல ஏறீனீங்கன்னா மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு வந்துருவீங்க. மொத்தம் 470 படியோ என்னமோ. மேல ஏறினப்புறம் திருச்சியவே பாக்கலாம். பிரமாண்டமா இருக்கும். காத்து பிச்சிகிட்டு வரும் பாருங்க, இதாங்க பூலோக சொர்க்கம் !

மெயின்கார்டுகேட் எதிர்த்தாப்ல, எங்க செயிண்ட் ஜோஸப் கல்லூரி வளாகத்துலேயே ஒரு பெரிய பழமையான சர்ச் இருக்குங்க. நான் காலேஜ் படிச்சப்ப அடிக்கடி இங்க போவோம். ரொம்ப உயரமானது. மலைக்கோட்டை உயரம் வரும்னு நினைக்கிறேன். இந்த சர்ச்சும் ரொம்ப நல்லா இருக்கும்ங்க.

அப்புறம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுங்க. ஆசியாவிலேயே உயரமான கோபுரம்ன்னு சொல்றாங்க. நல்லா இருக்கும்ங்க கோயில். அரங்கநாதர் பள்ளிகொண்ட நிலையில் பரவசப் படுத்துவாருங்க. நம்ம சுஜாதா சார் ஸ்ரீரங்கம் பத்தி நிறைய சொல்லியிருக்கார், நீங்க படிச்சிருக்கிங்களா ? நம்ம தேசிகன் கூட ஸ்ரீரங்கம் சொக்கப்பானைன்னு ஒரு பதிவு போட்ருந்தாருங்க. சூப்பர் கோயிலுங்க, நீங்க பார்த்தே ஆகனும்.

திருவானைக்காவல் சிவன் கோயிலும் பெரிய, பழைமையான கோயில். இங்க சிவபெருமான் நிலத்துக்கு கீழ எப்பவும் தண்ணீருக்கு மத்தியில் இருப்பாருங்க. சூப்பரா இருக்கும். அப்புறம் மதியம் 12 மணிக்கு இங்க கோமாதா பூஜை ஒன்னு செய்வாங்க, ஐயர் புடவை கட்டிட்டு வந்து செய்வாருங்க. நமக்கு இது பத்தி மேம்போக்காதாங்க தெரியும்.

உறையூர் வெக்காளி அம்மன் கோயில் (அம்மன் மேற்கூரையின்றி வெட்டவெளியில் இருப்பாள்), பஞ்சவர்ணசுவாமி கோயில்
போன்ற கோயில்களும் நல்லா இருக்கும்ங்க. அப்புறம் சமயபுரம் மாரியம்மன் கோயில், சொல்லி தெரிய வேண்டியதில்லை. அருமையான திருத்தலம், போயி பார்த்துட்டு வாங்க. குணசீலம், திருப்பைஞ்சலி கோயில்களும் பிராமாதனமானவை.

இன்னும் நிறைய கோயில்கள் இருக்குங்க திருச்சியில. யாராவது சொந்தக்காரங்க இருந்தாங்கன்னா, போய் ஒரு பத்து நாள் இருந்து சுத்திப் பாத்துட்டு வாங்க. கோயில்கள் மட்டுமில்லைங்க. முக்கொம்பு சூப்பரான சுற்றுலாத் தளம். கல்லணை பிரமாண்டமா இருக்கும். அதுவும் இப்ப காவிரியில் வேற தண்ணீர் முழுமையா ஓடிக்கிட்டிருக்கு, போய் பாத்தீங்கன்னா அசந்துருவீங்க !

திருச்சியில துணிக்கடைகள் பிரபலம்ங்க. சாரதாஸ், ஆனந்தாஸ், தைலா, சென்னை சில்க்ஸ், பாம்பே டையிங் ஷோரூம்ன்னு சின்னகடை வீதி போனீங்கன்னாலே கூட்டம் அலை மோதும்ங்க. தரமான துணிகளை குறைந்த விலைக்கு வாங்கலாங்க. மலைக்கோட்டை போற வழியிலதான் இவை அனைத்தும் இருக்குதுங்க.

சினிமா தியேட்டர்களுக்கு என்ன குறைச்சலா திருச்சியில ? நிறைய தியேட்டர்கள் இருக்குங்க. ஒரே காம்ப்ளெக்ஸ்ல (மாரீஸ்) 5 தியேட்டர்கள் இருக்குங்க. அப்புறம் ரம்பா, ஊர்வசி, சிப்பி, சோனா, மீனா, காவிரி இன்னும் நிறைய தியேட்டர்கள் ஞாபகம் இல்லைங்க.

நீங்க புதுப்படம் பாக்கணும்ன்னா மேல சொன்ன தியேட்டர்களுக்கு போகலாம், இல்ல செகண்ட் ரவுண்ட் ஓடற படம் பாக்கணும்னா லிட்டில் அருணா, ருக்மணி, ராமகிருஷ்ணா, வெங்கடேசா இப்படி தியேட்டர்கள் இருக்கு. ஆங்கிலப் படங்கள் பார்க்கனுமா, அதுக்கு சிப்பி, பிளாஸா இருக்குங்க. சீன் படம் பாக்கணுமா, முல்லை, கோஹீனூர் இருக்குங்க. இல்ல நீங்க தியேட்டர் போகப் பிடிக்கலையா, விசிடி நிறைய கிடைக்கும்ங்க, அப்புறம் என்ன, ஜமாய்க்க வேண்டியதுதான் !

இது எல்லாத்தையும் விடுங்க. படிப்புக்கு சிறந்த இடம் திருச்சிதாங்க. ஆண்களுக்காக செயிண்ட் ஜோஸப் பள்ளி மற்றும் கல்லூரி, பிசப் ஹீபர் பள்ளி மற்றும் கல்லூரி, நேசனல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, இ.ஆர் பள்ளிகள் இருக்குங்க. பெண்களுக்காக ஹோலி கிராஸ், இந்திரா காந்தி, எஸ்.ஆர்.சின்னு நிறைய இருக்குங்க. ஓரளவுக்கும் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள்ள தரமாவே படிப்பு சொல்லித் தராங்க. என்ன ஒன்னு, பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் கோ-எட் கிடையாது. அது ஒன்னுதாங்க எனக்கு வருத்தம். இது மட்டுமல்லாமல் கணிப்பொறி படிப்பிற்கான தனியார் கல்விக்கூடங்களும் இருக்குதுங்க.

சொல்ல மறந்துட்டேன் பாருங்க, தரமான மருத்துவ கூடங்கள் (ஆஸ்பிடல்ஸ்) திருச்சியில் நிறைய இருக்குங்க. உறையூர்ல சி.எஸ்.ஐ அப்படின்னு ஒரு ஹாஸ்பிடல் இருக்குங்க. சூப்பரான ஹாஸ்பிடல். தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த நியாயமான செலவில் கிடைக்கும். அப்புறம் சீ.ஹார்ஸ் பணக்காரங்களுக்கு. கண் மருத்துவமனைகளும் நிறைய. இன்னும் நிறைய நல்ல ஹாஸ்பிடல்ஸ் இருக்குங்க.

ரோடுகள் எல்லாம் ஓரளவுக்கு நல்லா இருக்கும். வன்முறை, ரவுடித்தனம் அதிகம் இருக்காதுங்க. நல்ல ஊரு, சுத்தமான காத்து, காவிரித் தண்ணி, குறைந்த விலைவாசி (மற்ற தமிழக நகரங்களை ஒப்பிட்டால்), அமைதியான, மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடைய மக்கள் இதெல்லாம்தாங்க திருச்சி.

இப்ப சொல்லுங்க நீங்களே, திருச்சி பூலோக சொர்க்கம்தானே ? இதுவரைக்கும் திருச்சிக்கு போனதில்லைன்னா உடனே போயிட்டு வந்துருங்க. உங்களுக்கும் திருச்சியை புடிச்சுடுச்சுன்னா '+'ல்ல ஒரு குத்து விட்டுட்டு போங்களேன், புண்ணியமாப் போவும் !

Saturday, November 12, 2005

இந்திய கிரிக்கெட் அணியின் (திடீர்) முன்னேற்றம்

போன தொடர் வரை அடிமேல் அடி வாங்கி சாதனை படைத்து வந்த இந்திய அணி திடீரென்று வீறு கொண்டு எழுந்து, தற்போது நடக்கும் ஒருநாள் தொடரில் இலங்கை அணியை துவைத்து எடுக்கின்றது. இதற்கான காரணங்கள் என்ன என்று செய்தித் தாள்களும், தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு அலசி ஆராய்கின்றன. நாமும் நம் பங்குக்கு ஏதாவது ஆராய்ந்து வைப்போம்!

ஓர் அணியின் திறமையை ஒரு தொடரை வைத்து மதிப்பிட்டு விட முடியாது என்றாலும் இந்திய அணியின் தற்போதைய முன்னேற்றத்துக்கு பின்வருவனவற்றை காரணமாகச் சொல்லலாம்.
  • டிராவிட் - சேப்பல் கூட்டணியின் அணித்தலைமை
  • இளைஞர்களின் வரவும், இதனால் அணிக்கு கிடைத்த புத்துணர்ச்சியும்
  • எதிர்பாராத ஆட்ட வியூகங்கள்
  • ஒரு திட்டம் தோற்கும்போது, மாற்றுத்திட்டம் வைத்திருப்பது
  • அணி வீரர்களிடம் காணப்படும் போராட்ட குணம் மற்றும் தன்னம்பிக்கை
  • முன்னின்று வழிநடத்தும் டிராவிட்டின் பொறுப்பான அணுகுமுறை

இருந்தாலும் இவை அனைத்தும் இத்தொடரோடு முடிந்து விடுமா அல்லது இந்திய அணி தொடர்ந்து ஜொலிக்குமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். சவுரவ் கங்குலி அணிக்கு திரும்புவாரா, சேவக் மீண்டும் விலாசுவாரா என்று நிறைய கேள்விகளுக்கும் கொஞ்ச நாட்களில் பதில் தெரிய வரும். அதுவரைக்கும் வேறெதையும் பற்றி கவலைப் படாமல் நமது அணியின் சிறப்பான ஆட்டத்தை கண்டுகளிக்க நான் தயார், நீங்கள் தயாரா?