Tuesday, June 30, 2009

சன் டிவியே, உன் அழும்புக்கு எல்லையில்லையா?

சன் டிவி டாப்டென் சென்ற ஞாயிற்றுக்கிழமை யாராவது பார்த்தீர்களா? நான் பார்க்க வில்லை. இன்று மதியம் பெங்களூரிலிருந்து நண்பர் அருண் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.

சன் டிவியின் டாப் டென் மூவிஸ் நிகழ்ச்சியில், மாசிலாமணி முதலிடமாம். கடவுளே, இந்த கொடுமையை கேட்பாரில்லையா?? கொஞ்ச நாள் முன்பு தெனாவட்டு, ஆயுதம் செய்வோம் போன்ற படங்களையும் இதே மாதிரிதான் முதலிடத்தில் 'வைத்து' இருந்தனர் என நினைக்கிறேன்.

இப்படி பகிரங்கமாய் மோசடி செய்கின்றனரே, இதற்கு பேசாமல் இந்த நிகழ்ச்சியையே நிறுத்தி விடலாமே!! மக்கள் யாராவது இதை (இந்த ரேட்டிங்கை) நம்புகிறார்களா? என்னை பொறுத்த வரை, நான் நீண்ட நாட்களுக்கு முன்பே இந்நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். மாசிலாமணி, நிஜமாகவே முதலிடத்திற்கு தகுதிதானா? பசங்க, நாடோடிகள் போன்ற படங்களுக்கு சன் டிவி கொடுத்த ரேட்டிங் என்ன? யாராவது பார்த்தவர்கள் சொல்லுங்களேன்.

இப்படியே போனால், இன்னும் ஒரு வருடத்தில் டாப் டென் படங்களுமே சன் குழுமம் தயாரித்த படங்களே பிடித்து விடுமே! மக்கள் நம்பிக்கை இழந்து இந்நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி விடுவார்கள் என்று சன் டிவிக்கு தெரியாதா??

இதேபோல் விகடன் குழுமம் தயாரித்த வால்மீகி படத்துக்கு ஆனந்த விகடனில் வழங்கப்பட்ட மார்க் என்ன? விமர்சனம் வந்து விட்டதா? படம் சரியில்லை என கேள்விப்பட்டேன், சிவா மனசில சக்தி என்ற மொக்கைக்கே ஆனந்த விகடன் 40க்கு மேல் மதிப்பெண் அளித்ததாக ஒரு ப்ளாக்கில் படித்தேன், உண்மைதானா?

இம்மாதிரி ஊடகங்கள் தயாரிக்கும் படங்களுக்கு அவர்களே விமர்சனம், ரேட்டிங் போன்றவற்றை தரக்கூடாது என சட்டமியற்ற இயலுமா, சாத்தியாமா சொல்லுங்களேன்!

Monday, June 29, 2009

சென்னை - ஒரு பொன்மாலைப் பொழுதில்..

நீங்கள் புதிதாய்/சமீபத்தில் திருமணமானவரா? சமீபத்தில் என்றால் பத்து வருடங்களுக்குள்ளா? ஒரு வாரயிறுதி மாலைப்பொழுதை, அதிக செலவில்லாமல் மகிழ்ச்சியாய் வெளியில் சென்று அனுபவிக்க ஆசைப்படுபவரா? அப்படியானால், இந்த பதிவு உங்களுக்கானதே, மேலே படியுங்கள்! :-)

பெரும்பாலான பன்னாட்டு, உள்நாட்டு ஐடி, தொழில் நுட்ப கம்பெனிகளில், அரசு அலுவலகங்களில் சனி, ஞாயிறு இரு நாட்களும் விடுமுறை அளிக்கின்றனர். சனிக்கிழமை மாலையே உங்கள் துணைவியுடன், குழந்தைகளுடன் (இருந்தால்) வெளியே சென்று வர ஏற்ற சமயம். சனி மாலையென்றால் எல்லா தொ(ல்)லைக் காட்சி சானல்களிலும் உருப்படாத படங்களையும், எரிச்சலூட்டும் பாட்டு, டான்ஸ், அரட்டை நிகழ்ச்சிகளையும் போடுவார்கள். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி வெளியே சென்று வருவதுதான் :-)

சரி வெளியே செல்லலாம் என்றால் எங்கே செல்வது? நீங்கள் ஸ்பென்சர், சிட்டி செண்டர் போன்ற மெகாமால்களுக்கு செல்லலாம், ஆனால் அங்கே சென்று வந்தால் நமது பர்ஸ் காலியாவது நிச்சயம். என்னதான், உங்களது மனைவி ‘சும்மா சென்று வரலாம், விண்டோ ஷாப்பிங் செய்வோம்’ என்று சொன்னாலும் மயங்கி விடாதீர்கள். அங்கெ சென்றால் ஆயிரத்தெட்டு offers போட்டிருப்பார்கள், அதாவது 4 ஜீன்ஸ் வாங்கினால் ஒரு ஜீன்ஸ் இலவசம் (4 ஜீன்ஸின் விலை ரூ 4000) மற்றும் 2 டிசைனர் சாரி வாங்கினால் ஒன்று இலவசம் (இரண்டு சாரியின் விலை ரூ 8000) போன்ற உட்டாலக்கடி offerகள்.

கழுதை, அதைக்கண்டால் நீங்களும் உங்கள் மனைவியும் மதிமயங்கி கண்டது, கடையது வாங்கித் தள்ளி விடுவீர்கள். கிரெடிட் கார்டு என்றொரு பூதம் இருப்பதால், நமக்கும் செலவழிப்பது தெரியாமல் கன்னாபின்னாவென்று ஸ்வைப் (ஸ்வைப் செய்வது - இதற்கு தமிழ்ச்சொல் என்ன?) செய்து விடுவோம். அதுவும் குழந்தைகளோடு சென்றால் கேட்கவே வேண்டாம், சும்மா அந்த பொம்மையை வாங்கிக்கொடு, இந்த டீசர்ட்டை வாங்கிக்கொடு என்று பிய்த்து பீராய்ந்து விடுவார்கள். இது மட்டுமல்லாமல், ஏதாவது திண்பண்டம் வேறு வாங்கிக் கொடுக்க வேண்டும். ஐஸ்கிரீம் எதை எடுத்தாலும், 50 ரூபாய்க்கு கீழே இருக்காது. என்னடா இது உலகமென்று, தர்க்க ரீதியாக யோசிக்கத் துவங்கி விடுவீர்கள் :-)

இதை விட்டுத் தள்ளுங்கள், சினிமாவிற்கு செல்லலாம் என்றால், அதுவும் அபாயகரமான யோசனைதான். சத்யம், மாயாஜால் போன்ற மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்களுக்கு என்றால் உங்கள் கதி அதோ கதிதான், டிக்கெட் ஒன்றில் விலை 120 ரூபாய், குடும்பத்தில் 4 பேர் என்றால் 500 ரூபாய் காலி, இண்டர்வெல்லில் வழக்கம்போல் குழந்தைகளுக்காகவோ, மனைவிக்காகவோ கூல்டிரிங்க்ஸ், பாப்கார்ன், ஸ்னாக்ஸ் வகையறாக்கள் 200 ரூபாயாவது ஆகிவிடும். உதயம், கமலா போன்ற மிடில்கிளாஸ் தியேட்டர்களுக்கு சென்றால் ஒரளவுக்கு தப்பிக்கலாம் :-)

இதற்கெல்லாம் உள்ள ஒரே உத்தமமான மாற்று வழி கடற்கரைக்கு செல்வதுதான், சென்னை மக்களுக்கு கடவுள் தந்த செலவில்லாத மகத்தான பொழுதுபோக்கு தலம் பீச்தான்.
மெரினா பீச், சாந்தோம் பீச், பெசண்ட் நகர் பீச், திருவான்மியூர் பீச் என்று ஏராளமான கடற்கரைகள் நம்மை வா, வாவென்று அழைக்கின்றன. அற்புதமான கடற்காற்று உங்களை ஆபீஸ் மேனெஜர் தொல்லை, project deadline (இதற்கு தமிழில் என்ன?) கவலைகள், வீட்டுக்காரன் மிரட்டல் போன்ற லவூதீக விஷயங்களை தற்காலிமாய் மறக்க வைக்கும்  என்னதான் சுண்டல், தேங்காய், மாங்காய், பட்டாணி, சோன்பப்டி வகையறாக்கள் வாங்கித் தின்றாலும், 100 ரூபாய்க்கு மேல் உத்தரவாதமாய் செலவில்லை.

இப்போது என் அனுபவத்தை சொல்கிறேன், கேளுங்கள் :-)

ஒரு ஜூன் மாத மழை பெய்யும் சனிக்கிழமை மாலையில் நாங்கள் வெளியே சென்று வர முடிவெடுத்தோம் (போன வாரந்தாங்க அந்த சனிக்கிழமை, ஒரு சுஜாதா effect측¸ இப்படி எழுதுறதுதான் இப்போ பேஷன் :-))

மாலை 5 மணிக்கு கிளம்பினோம், கிளம்பிய போது லேசாக தூறல் விழுந்தது, பத்து நிமிடம்தான். குளுகுளுவென்று சென்னை ஊட்டி போல் மாறிவிட்டது. பைக்கில் ராமாபுரத்திலிருந்து கிண்டி, அடையார் வழியே பெசண்ட் நகர் பீச்சுக்கு சென்றோம்.

டிராபிக் போலீசார் பீட் அமைத்து, டிராபிக்கை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். பைக் நிறுத்த தனியே இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. பைக்கை நிறுத்தி விட்டு, மாங்காய், பட்டாணி சுண்டல் 15 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டோம் (முன்பு 10 ரூபாய், இப்போது 15 ரூபாயாகி விட்டது, விற்றவரிடம் கேட்டால் விலைவாசி பற்றிய பொழிப்புரை கிடைக்குமென்பதால் வாயை மூடிக்கொண்டு நடையைக் கட்டினோம்).

அப்படியே ஹாயாக பீச்சில் நடந்து வந்து கடலோரமாய் அமர்ந்தோம். சுமார் ஒரு மணிநேரம் காற்று வாங்கிக் கொண்டே கதை பேசிக் கொண்டிருந்தோம். குழந்தைகளோடு வந்திருக்கும் குடும்பங்கள், மணலில் வீடு கட்டும் குழந்தைகள், இளம்பெண்ணை குதிரையில் ஏற்றிக்கொண்டு ஜாய்ரைடு (இந்த தலைப்பில் சுஜாதா கதையொன்று எழுதியிருக்கிறார், படித்திருக்கிறீர்களா?) செல்லும் குதிரைக்காரர், சுண்டல் விற்கும் பையன், வண்டியில் பெரிய பெட்ரோமாக்ஸை கட்டி மணியடித்துச் செல்லும் சோன்பப்டிகாரர், சோளத்தை சுட்டு தீயில் வித்தை காட்டும் வண்டிக்காரர் என்று பீச்சே குதூகாலமாய் இருந்தது.

சோன்பப்டி ஒன்று (10 ரூபாய் ஒரு பொட்டலம்) வாங்கி ருசித்தோம், சுமாராய்த்தான் இருந்தது. 10 ரூபாய் என்ற ரேட்டால் ஏற்கனவே என்னை திட்டிக் கொண்டிருந்த என் மனைவி (ஹிஹி, சும்மா செல்லமாத்தான் திட்டினாங்க) சோன்பப்டியின் சுமாரான டேஸ்ட்டால் பத்ரகாளியானாள், அதன்பின் நடந்ததை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன் (எப்படித்தான் கரெக்டா ஏமாந்து போரீங்களோ, உங்க நெத்தியிலேயே எழுதியிருக்கே ஏமாற்றவர்ன்னு போன்ற வசனங்களை நீங்கள் யூகிக்கா விட்டால் நீங்கள் தமிழ்நாட்டில் வசிக்கவில்லை என்று அர்த்தம் :-)

8 மணிபோல் அங்கேயிருந்து கிளம்பி, பொடிநடையாய் நடந்து வந்து மாதா கோயில் அருகே உள்ள முருகன் இட்லி கடைக்கு சென்றோம். சுடச்சுட இட்லி, ஆனியன் ஊத்தாப்பம், ப்ளெயின் தோசை, மெதுவடை, வெள்ளைப் பனியாரம் போன்றவற்றை தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெங்காய சாம்பார் போன்றவைகளின் உதவியால் உள்ளே தள்ளினோம் :-) (என்ன இதுக்காகவே சென்னையில் இருக்கனும் போல் தோனுமே). பில் எவ்வுளவு தெரியும், 103 ரூபாய்தான். நன்றாக உட்டுக்கட்டி விட்டு, வீடு திரும்பினோம்.

பின் குறிப்பு: பெசண்ட் நகர் முருகன் இட்லி கடைக்கு பக்கத்தில் ஒரு பேராபத்து உள்ளது. அது என்னவென்றால், பக்கத்தில்தான் Fab India என்று ஒரு பேமஸ் துணிக்கடை உள்ளது. என் மனைவி சாப்பிட்டு விட்டு அங்கே செல்வோம் என்று கூறினாள், நல்ல வேளை நாங்கள் சென்றபோது (சனி இரவு 9:30 மணி) கடையை மூடி விட்டார்கள், ஹப்பாடா தப்பித்தோம் என்று நினைத்துக் கொண்டேன் :-) ஆதலால் பீச்சிலிருந்து வெளியே வரும் நேரத்தை 8 மணிக்கு மேல் திட்டமிட்டால், நீங்கள் தப்பித்து விடலாம் :-)

இப்படியாக எங்கள் சனிக்கிழமை மாலை அவுட்டிங் (காதலிப்பவர்களுக்கு டேட்டிங்) நிறைவு பெற்றது. மொத்த செலவு பைக் பெட்ரோல் போக வர 25 கிமீ: 25 ரூபாய், சுண்டல் + சோன்பப்டி: 25 ரூபாய், நைட் டிபன் செலவு: 103 ரூபாய், ஆக மொத்தம் 153 ரூபாய் ஆகியிருந்தது.

இப்போ சொல்லுங்க, என்னோட வழி சரியானதுதானே!! என்ன ஒவ்வொரு வாரமும் பீச்சிற்கே செல்ல முடியாது. அதனாலென்ன, ஒரு வாரம் வண்டலூர் சூ (zoo) போங்க, இன்னொரு வாரம் முட்டுக்காடு போட்டிங் போங்க, இன்னொரு வாரம் காந்தி மண்டபம், கிண்டி பார்க் போய்ட்டு வாங்க, இப்படியாக போனால் இயற்கையை ரசித்த மாதிரியும் இருக்கும், செலவை குறைத்த மாதிரியும் இருக்கும் :-) அவ்ளோதாங்க, பொசுக்குன்னு விண்டோவை க்ளோஸ் பண்ணிடாதீங்க.. நீங்க உங்க அனுபவங்களையும், யோசனையையும் சொல்லிட்டு போங்க!! :-)

Sunday, June 28, 2009

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் - இன்றைய கிரிக்கெட் போட்டி - முன்னோட்டம்

இந்தியா டிவெண்ட்டி20 உலகக் கோப்பைத் தொடரில் சீக்கிரம் தோற்று வெளியேறிய போது வானத்திற்கும், பூமிக்குமாய் எகிறிக் குதித்தவர்களே, எங்கே இருக்கறீர்கள் நீங்களெல்லாம்? இப்போது சொல்லுங்கள், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதல் போட்டியை இந்தியா வென்று விட்டது. அநேகமாய் தொடரை வெல்லவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது.

முதல் போட்டியின் யுவராஜ் பேட்டிங்கை பார்த்தீர்களா? சும்மா கிரிக்கெட் மட்டையை கதாயுதம் போல் கையாண்டு ரதகளப் படுத்தினார். ஜெரோம் டெய்லர் முதல் 5 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்தவர், யுவராஜ் எனும் புயலில் சிக்கி ஆலை வாய் பட்ட கரும்பை போலாகி விட்டார். இரண்டு ஓவரில் 30 ரன்கள். இந்த போட்டியில் யுவராஜ் இறங்கினால், நான் விளையாட மாட்டேன் என்று அடம்பிடிகிறாராம் :-)

சரிதான், டெண்டுல்கர், சேவாக் இல்லை, பேட்டிங் வீக் என்று முடிவு செய்தவர்களுக்கு யுவராஜைத் தவிர தினேஷ் கார்த்திக், தோனி, பதான் போன்றவர்களும் தம் திறமையை நிரூபித்தனர். கம்பீர், ரோகித் ஷர்மாவும் நல்ல திறைமையான பேட்ஸ்மேன்களே, சீக்கிரம் பார்முக்கு வந்தால் இந்தியாவுக்கு நல்லது.

நமது பவுலிங்தான் வீக்காக உள்ளது. இஷாந்த் ஷர்மா சொதப்புகிறார், அவருக்கு பதிலாய் வேறு யாராவது வரலாம். ரவிந்திர ஜடேஜாவும் அவ்வுளவு எபெக்ட்டாக இல்லை, ரவி தேஜா வரலாம். பந்து வீச்சை பலப்படுத்தினால், தொடர் நமது பக்கம் எளிதாய் வந்து விழும்.

இன்றைய போட்டி இரவு 8 மணி இந்திய நேரத்துக்கு தொடங்குகிறது; பரபரப்பாய் இருக்குமென எதிர்பார்க்கலாம்! இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!! :-)

Saturday, June 27, 2009

கால்டாக்சி - சென்னையின் வரப்பிரசாதம்

கால்டாக்சி என்பதற்கு தமிழில் என்ன என்று சொல்லுங்களேன். அழைப்பு சிற்றுந்து எனலாமா?

சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஆட்டோகாரர்களின் அட்டகாசம் பற்றி எழுதியிருந்தேன். 7 கிமீ தூரத்திற்கு 120 ரூபாய் கூசாமல் கேட்கிறார்கள்.

இவர்களின் அட்டகாசத்தை ஒடுக்க ஒரு வழி கண்டு பிடித்து விட்டேன். அது என்னவென்றால் ஆட்டோவில் இனிமே முடிந்தவரை பயணிக்க கூடாது. எங்கே போனாலும் பைக் அல்லது கால் டாக்சியில் போவதென்று முடிவெடுத்தாயிற்று.

சென்ற வாரம் நுங்கம்பாக்கம் ஓட்டல் பாம்க்ரோவில் உறவினர் இல்ல திருமண ரிஷப்ஷன் இருந்தது. குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம் என முடிவெடுத்து கால் டாக்சி (FAST TRACK) புக் செய்தோம். கரெக்டான நேரத்திற்கு வந்து மொபைலில் அழைத்தார் டிரைவர்.

உள்ளே அமர்ந்தவுடனேயே மீட்டர் ஆன் செய்யப்பட்டது. வேறு பேச்சே இல்லை. முதல் 5 கிமீ தூரத்திற்கு 100 ரூபாய். மேற்கொண்டு ஒவ்வொரு கிமீ தூரத்திற்கும் 10 ரூபாய். வெயிட்டிங் சார்ஜ் (டிராபிக் சிக்னலில் வண்டி நின்றபோது) ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய். எங்கள் வீட்டிலிருந்து (ராமாபுரம்) நுங்கம்பாக்கம் ஹோட்டலுக்கு 10 கிமீ தூரத்திற்கு மீட்டர் காட்டிய தொகை 157 ரூபாய் கட்டி நிகழ்ச்சிக்கு சென்றோம்.

அருமையான சேவை, டாக்சி புக் செய்தவுடன், வண்டி எண், டிரைவர் பெயருடன் அவரது மொபைல் நம்பர் போன்ற விபரங்களுடன் SMS வந்தது.

மனதிற்கு நிறைவாய் இருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திரும்பவும் கால் டாக்சியிலே திரும்பி வந்தோம்.

நாங்க இனிமே எங்க போனாலும் கால் டாக்சிதான், அப்ப நீங்க??