Wednesday, July 28, 2010

மருத்துவமும் வியபாரமா? -- நண்பருக்கு நேர்ந்த உண்மை அனுபவம்

எனது அலுவலக நண்பருக்கு சொத்தைப் பல். ஒரு வருடத்திற்கு முன்பு சென்னை - போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். இங்கே ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி கடைசி வருட மாணவர்களும் பணிபுரிவர் (இண்டர்ன்ஷிப்). பீஸ் கிடையாது, 20 ரூபாய் குடுத்து பதிவு செய்து கொண்டால் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் (நண்பரின் கூற்று). சொத்தைப் பல்லை எடுத்து விட்டு, அவ்விடத்தில் சிமெண்ட் வைத்து அடைத்தார்களாம் (சிமெண்ட்டுக்கு மட்டும் 70 ரூபாய் கொடுத்தார், வேறெதுவும் செலவில்லை).

இப்போது ஒரு மாதத்திற்கு முன்பு சிமெண்ட் எடுத்துக்கொண்டு வந்து விட்டது. நண்பருக்கு சற்று பயம் திரும்பவும் ராமச்சந்திரா செல்ல. சரி, வேறு ஏதாவது மருத்துவமனைக்கு செல்லலாம் என்று நண்பர்களிடம் விசாரித்து இருக்கிறார்.

ஒரு நண்பரின் மூலமாக தாம்பரத்தில் இருக்கும் ஒரு பல் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். தலைமை மருத்துவர், அந்த நண்பருக்கு தெரிந்தவராம். போய் பல்லைக் காட்டியிருக்கிறார். எக்ஸ்ரே எடுத்திருக்கிறார்கள். தலைமை மருத்துவர் பார்த்து விட்டு, சொத்தைப் பல் எடுத்த பகுதிக்கு கீழேயும் பாதிக்கப் பட்டிருக்கிறது, இன்னும் சிறிது நாட்களில் வேர் வரை பரவி விட்டால், தாங்க முடியா வலி ஏற்படும், எனவே ரூட் கானல் ட்ரீட்மெண்ட் செய்து கொள்ளுங்கள் என்றாராம். நண்பர் எவ்வுளவு செலவாகும் என்று கேட்டிருக்கிறார். 3000 ரூபாய் ஆகும் என்றிருக்கிறார் டாக்டர்.

இவர் எனக்கு தற்போது ரூட் கானல் டிரீட்மெண்ட் தேவையில்லை. சொத்தைப் பல் இருந்த இடத்தை மட்டும் அடைத்து விடுங்கள் என்றிருக்கிறார், வலி வந்தால் பிறகு வந்து அந்த் ட்ரீட்மெண்ட் செய்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். டாக்டர் ஒத்துக் கொள்ளவில்லை. நிறைய பேசி நண்பரை கன்வின்ஸ் செய்ய முயற்சித்து இருக்கிறார். அரை மணி நேரத்திற்கு பிறகு, அரை மனதோடு சரி, அடுத்த வாரம் வாருங்கள், சொத்தைப் பல் இருந்த இடத்தை அடைத்து விடலாம் என்று வரச் சொல்லி இருக்கிறார். நண்பர் திரும்பி வரும் முன், ரிசப்ஷனிஸ்ட்டிடமும் ரூட் கானல் ட்ரீட்மெண்ட்டுக்கு எவ்வுளவு செலவாகும் என்று கேட்டார். ரிசப்ஷனிஸ்ட் 2500லிருந்து 3000 வரை செலவாகும் என்றாராம்.

திரும்பவும் அடுத்த வாரம் நண்பர் மருத்துவமனைக்கு சென்ற போது, தலைமை மருத்துவர் இல்லை. வேறு ஒரு உதவி மருத்துவர் நண்பரையும், எக்ஸ்ரேவையும் சோதனை செய்திருக்கிறார். பார்த்து விட்டு, அவரும் ரூட் கானல் டிரீட்மெண்ட் செய்து கொள்ளுங்கள் என்றிருக்கிறார். நண்பரோ “இல்லை, பிறகு பார்த்துக் கொள்கிறேன், தலைமை மருத்துவரிடம் ஏற்கனவே கூறிவிட்டேன், அவரும் சொத்தைப் பல் இருந்த இடத்தை மட்டும் அடைக்க ஒப்புக்கொண்டு இப்போது வரக் கூறினார்” என்றார். டாக்டர் ஒத்துக் கொள்ள வில்லை. இல்லை, உங்களுக்கு சொத்தை நிரம்ப புரையோடி இருக்கிறது, நீங்கள் ரூட் கானல் டிரீட்மெண்ட் செய்து கொள்வதுதான் நல்லது என்று என்னென்னவோ ஒரு மணி நேரம் பேசி நண்பரை கன்வின்ஸ் செய்து விட்டார். நண்பர் திரும்பவும் அதற்கு ஆகும் செலவை டாக்டரிடமும், ரிசப்ஷனிட்டிடமும் கன்பர்ம் செய்து கொண்டு (ரூபாய் 3000) முதல் சிட்டிங் (ரூ 500 கொடுத்து விட்டு) செய்து கொண்டார். 4 முதல் 5 சிட்டிங் வரவேண்டுமாம். 4-வது சிட்டிங்கின் போது 2000 ரூபாய் கட்டி இருக்கிறார்.

கடைசி சிட்டிங்கின் போது பீஸ் கட்ட சென்ற போது இன்னும் 1500 ரூபாய் பேலன்ஸ் தர வேண்டும் என்றார்களாம் (ஏற்கனவே 2500 கட்டி விட்டார், ஆரம்பத்தில் கூறிய செலவு தொகையான 3000 ரூபாய்க்கு இன்னும் 500 ரூபாயே மீதி தரவேண்டும்). நண்பர் அதிர்ச்சி அடைந்து எதற்கு 1500, இன்னும் 500 தானே தரவேண்டும் என்று கேட்டதற்கு ரிசப்ஷனிஸ்ட் கூலாக 3000 ரூபாய் ட்ரிட்மெண்ட்டுக்கு, 1000 ரூபாய் டாக்டர் பீஸ் (ரூட் கானல் டிரீட்மெண்ட் செய்ய சர்வீஸ் சார்ஜ்) என்றிருக்கிறார்.

நண்பருக்கோ சரியான ஆத்திரம். ஆரம்பத்தில் ஏன் சொல்லவில்லை, மொத்தம் 3000 ரூபாய்தானே ஆகும் என்றீர்கள், தலைமை மருத்துவர் கூட அதுதானே கூறினார் என்று சண்டை போட்டு இருக்கிறார். ரிசப்ஷனிஸ்ட் ஒத்துக் கொள்ள வில்லையாம். அங்கிருந்த மற்ற ஊழியர்களும் ஒத்துக் கொள்ள வில்லையாம். ஒரு மணி நேர விவாதத்திற்கு பிறகு நண்பர் தலைமை மருத்துவருக்கு மொபைலில் பேசி இருக்கிறார். அவரும் ஆமாம் 4000 ரூபாய்தான் என்று இருக்கிறார். நண்பருக்கு அவரிடம் சண்டை போட விருப்பமில்லை (அவரது நண்பருக்கு தெரிந்தவர், மேலும் மெத்தப் படித்த டாக்டர்). சிறிது நேர உரையாடலுக்கு பின்பு, சரி 500 ரூபாய் குறைத்துக் கொண்டு, 3500 ரூபாய்க்கு செட்டில் செய்து விடுங்கள் என்றிருக்கிறார் தலைமை மருத்துவர். விதியை நொந்து கொண்டு நண்பர் பணத்தை செட்டில் செய்து விட்டு வந்திருக்கிறார். என்னிடம் சென்ற வாரம் இந்த கதையைக் கூறி புலம்பினார். சரி இதனை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ளலாம், மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறி இப்போது எழுதி இருக்கிறேன்,

நண்பர்களே, எனது கேள்விகள் சில

  1. நண்பர் சொத்தைப் பல் இருந்த இடத்தை அடைக்க மட்டுமே சென்றிருக்கிறார். அவரை எக்ஸ்ரே அது, இதுவென்று பயமுறுத்தி ரூட் கானல் டிரீட்மெண்ட் செய்து கொள்ள கட்டாயப் படுத்தியது ஏன்?
  2. அவருடைய மெடிக்கல் கண்டிஷனுக்கு நிஜமாகவே ரூட் கானல் டிரீட்மெண்ட் அவசியமா? அதை எப்படி நாம் உறுதி படுத்திக் கொள்ளலாம்? இம்மாதிரி மருத்துவ விஷய்ங்களை நாம் எப்படி cross verify பண்ணலாம்? நம்முடைய அறியாமையை பயன்படுத்தி பணம் பண்ணும் நோக்கத்துடன் டாக்டர்கள் விளையாடலாமா?
  3. முந்தின வாரம் தலைமை டாக்டர் சொத்தைப் பல் இருந்த இடத்தை அடைக்க ஒப்புக்கொண்டு விட்ட பிறகு திரும்பவும் ஏன் அடுத்த வாரம், உதவி டாக்டர் பழைய பல்லவியை (ரூட் கானல் டிரீட்மெண்ட்) பாடியிருக்கிறார்? ஏன் ஒரு மணி நேரம் வாதடி, நண்பரை கன்வின்ஸ் செய்திருக்கிறார்?
  4. ஆரம்பத்தில் ஏன் மருத்துவமனையில் 3000 ரூபாய்தான் செலவாகும் என்றார்கள்? இந்த செலவை எப்படி நிர்ணயிக்கிறார்கள். ஏதாவது standard உள்ளதா? ரூட் கானல் டிரீட்மெண்ட்டுக்கு நிஜமாகவே 3000 ரூபாய் என்பது நியாயமான தொகைதானா? இதை நாம் எப்படி cross verify செய்யலாம்?
  5. ஆரம்பத்தில் 3000 ரூபாய்தான் என்று சொல்லிவிட்டும், டிரிட்மெண்ட்டின் கடைசி கட்டத்தில் ஏன் 4000 ரூபாய் என்றார்கள்? (1000 ரூபாய் டாக்டர் பீஸை ஏன் முன்பே தெளிவாய் சொல்ல வில்லை?. இப்படி மறைமுகமாய் கட்டணம் பிடுங்கவது ஒரு மருத்துவமனைக்கு அழகா?
  6. 4000 ரூபாய் என்ற பீஸ் எப்படி தலைமை மருத்துவரிடம் மொபைலில் பேசியவுடன் 3500 என்று குறைந்தது? உண்மையான தொகை என்ன?

இதுதான் இன்றைய மருத்துவத்தின் உண்மையான நிலை. நிறைய மருத்துவமனைகள் (எல்லாமும் அல்ல) வியபார மையங்களாகி விட்டன. எதையும் நம்ப முடியவில்லை. சென்னையில் இருக்கும் கார்ப்பரேட் மருத்துவ மனைகளுக்கோ சென்றால், நீங்கள் காலி என்பதே உண்மை. அரசாங்கம் இதெயெல்லாம் முறைப்படுத்த இயலுமா? இதற்கெல்லாம் தீர்வு காணாமால், இலவச காப்பீட்டுத் திட்டங்களால் பெரிய பயன் இல்லை!!

Saturday, July 10, 2010

சாரு நிவேதிதா: DON’T STARE AT MY SHOES

இன்று மாலை சென்னை தேவநேயப் பாவணர் அரங்கில், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு நடந்த கருத்தரங்கு நடைபெற்றது. அந்நிகழ்ச்சித் துளிகள்..

மாலை 5:30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப் பட்டிருந்த விழா, தமிழ் கலாச்சாரத்தின் படி சரியாக 630 மணிக்கு துவங்கியது.

நான் 6 மணிக்கு சென்றபோது, மனுஷ்யபுத்திரன் தேநீர் அருந்தி கொண்டிருந்தார், அவருக்கு வணக்கம் தெரிவித்து அரங்கின் உள்ளே சென்றேன். கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் டீ, தண்ணீர் பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என நினைக்கிறேன், நான் தேநீர் அருந்த வில்லை.

அரங்கு எளிமையாய், அழகாய் இருந்தது, ஏசி செய்யப் பட்டது. இருக்கைகள் சத்யம் தியேட்டர் போல் வசதியாய் இருந்தன. இவ்வுளவு செலவழித்து ஒரு எழுத்தாளருக்கு பாராட்டு விழா நடத்திய உயிர்மை மற்றும் மணற்கேணி பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள் & நன்றிகள் பலகோடி!!

இந்திரா பார்த்தசாரதி மற்றும் ஞானக்கூத்தன் முன்பே வந்து விட்டனர். மற்ற விருந்தினர்கள், சிறப்பு பேச்சாளர்கள் சற்று தாமதமாக வந்தனர். இந்திரா (வேறோரு பெண்மணி), ஞானக்கூத்தன், அ.ராமசாமி, இமையம், எஸ். ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், ரவிக்குமார் (மணற்கேணி ஆசிரியர்) ஆகியோர் இந்திரா பார்த்தசாரதியை பற்றியும், அவரது படைப்புகளைப் பற்றியும் பாராட்டிப் பேசினர்.

இ.பா ஏற்புரை வழங்கி நகைச்சுவையாய் பேசினார்.

விழாவிற்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா சரியாய் துவங்கும் நேரத்திற்கு சற்று முன்பே வந்தார். விழா முடிவதற்கு சற்று முன்பே கிளம்பி போய் விட்டார். அவருடன் பேசலாம் என்று நினைத்து ஏமாற்றமடைந்தேன்.

சாரு நிவேதிதா வெகு இளமையாய் இருந்தார். ரவுண்ட் நெக் டி-ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட், ரிம்லெஸ் கண்ணாடி என்று படு யூத்தாக இருந்தார். அவரது டி-ஷர்ட்டில் “DON’T STARE AT MY SHOES” என்று போட்டிருந்தது, அப்படி என்ன என்று ஷூவை எட்டிப் பார்ப்பதற்குள் என்னை கடந்து சென்று விட்டார்.

எஸ். ராமகிருஷ்ணன் கூட சாரு எப்போதும் இளமையாய் காட்சியளிக்கிறார் என்று பேச்சிலேயே பொறாமைப் பட்டார்.

ஞானக்கூத்தன் சாருவுக்கும் டாக்டர் பட்டம் கொடுத்தாலும் கொடுத்து விடுவார்கள் என்று நகைச்சுவையாய் பேசினார், சாரு ரசித்திருப்பார் என நினைக்கிறேன்.

மனுஷ்ய புத்திரன் “சாரு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாய் உடனே பேசி விடுவார்” என்று கூறி பாராட்டினார்.

அரங்கில் பேசிய அனைவருமே, தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பத்தில்லை என்று வருத்தப் பட்டனர்.

இந்திரா பார்த்தசாரதியின் போலந்து அனுபவங்கள் பற்றிய நாவலையும், நந்தன் கதை போன்ற நாடகங்களையும் அனைவரும் சிலாகித்தனர். அவரது படைப்புகள் எதையும் நான் படித்ததில்லை. ஆனால் இனிமேல் படிப்பேன், படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த கருத்தரங்கு உண்டாக்கியது, அதுவே இக்கருத்தரங்கின் வெற்றி! பல்லாண்டு பல்லாண்டு வாழ்க, இ.பா!!

Wednesday, July 07, 2010

BSNL தந்த இன்ப அதிர்ச்சி!

நான் BSNLன் அகல அலைவரிசை இணைய இணைப்பு பெற்றுள்ளேன். இரு வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன். சேவை திருப்திகரமாகவே உள்ளது. நான் வைத்திருப்பது Home Combo 299 என்கிற ப்ளான்.

கடந்த இரு வாரங்களாக Broadband அடிக்கடி disconnect ஆகி வந்தது. ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒருமுறை disconnect ஆகி விடும். பொறுத்து பொறுத்து பார்த்து மூன்று நாட்களுக்கு முன்பு இரவு 11 மணிக்கு வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு போன் செய்தேன். முதல் ஆச்சரியம், லைனில் பேசியவர் பொறுமையாக, அன்பாக பேசினார். என்ன பிரச்சினை என்று கேட்டுக் கொண்டு நிச்சயம் சரி செய்து விடுகிறோம் சார், 24 மணிநேரத்தில் உங்களுக்கு ஸ்டேட்டஸ் தெரிவிக்கிறோம் என்றார். கம்ப்ளெயிண்ட் நம்பரை நான் கேட்காமலேயே கொடுத்தார்.

மறுநாள் 10 மணிக்கு எனக்கு மொபைலில் கால் வந்தது, நான் மீட்டிங்கில் இருந்ததால் எடுக்க வில்லை. 12 மணிக்கு திரும்பவும் கால் வந்தது, BSNL ராமாபுரத்தில் (எனது ஏரியாவில் இருந்து) இருந்து பேசி விபரம் கேட்டார்கள். என்னவென்று பார்க்கிறோம் சார், உங்கள் லைனில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம் என்றார்கள். மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பும் போது மாலை 630 மணி, அபார்ட்மெண்ட் வாசலில் ரோட்டோரமாக இருக்கும் BSNL இணைப்புப் பெட்டியைத் திறந்து இருவர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

சாலையில் வெளிச்சம் குறைவால், கையில் டார்ச்சுடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். நூற்றுக் கணக்கான ஒயர்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தன. ஏதோ அபார்ட்மெண்ட் அருகில் பூமியில் கேபிள் அறுந்து கிடந்ததால், மாற்று கேபிள் பொறுத்தி அதிலிருந்து இணைப்பு கொடுத்தார்கள். நான் அருகே சென்று விசாரித்த போது, அபார்ட்மெண்ட்டில் உள்ள பாதி இணைப்புகளை சரி செய்து விட்டதாகவும் (மொத்தம் 256 வீடுகள்), மீதி வீடுகளின் இணைப்புகளை நாளை சரி செய்து விடுவதாகவும், பொறுமையாகவும், பொறுப்பாகவும் பதில் கூறினர்.

நான் எனது தொலைபேசி எண்ணைக் கூறி, அதை கொஞ்சம் சோதனை செய்யுங்கள், சரி செய்து விட்டீர்களா என்று கேட்டேன். ஏற்கனவே இருட்டி விட்டது, அவர்கள் கிளம்பும் நிலையில் சோர்வாக இருந்த போதும், எனது வேண்டுகோளை தட்டாமல், 5 நிமிடத்தில் எனது இனைப்பையும் சரி செய்தார்கள், உடனடியாக எனது இல்லத்திற்கு போன் செய்து சோதனை செய்யக் கூறினர், நான் போன் செய்து பார்த்து இயங்குவதை உறுதி செய்தேன். அவர்களுக்கு நன்றி கூறி வீட்டுக்கு வந்தேன்.

மறுநாள் காலை மறுபடியும் போன் செய்து, எனது புகார் திருப்திகரமாய் சரி செய்யப் பட்டு விட்டதா என்று உறுதி செய்து கொண்டனர், வேறு ஏதாவது புகார் இருந்தாலும் தெரிவிக்குமாறு கூறினர். அன்றிலிருந்து இணைய இணைப்பும் பக்காவாகி விட்டது. ஜிமெயிலில் ஜி என்று டைப் செய்தாலே ஜிமெயிலே திறந்து விடுகிறது. அவ்வுளவு வேகம், அருமை! மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது, வாழ்க BSNL! எதற்கெடுத்தாலும் பொதுத்துறையை, அவர்களின் சேவையை திட்டுபவர்களே, இதற்கு என்ன சொல்கிறீர்கள்??

பின் குறிப்பு: ஆனாலும் தொலைத்தொடர்பில் தனியார் உள்ளே வந்து போட்டி அதிகமாகி விட்ட நிலையில், தங்களை, தங்கள் வேலை, எதிர்காலத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் BSNL தொழிலாளர்களை இப்படி மாற்றி இருக்கலாம், எப்படி இருந்தாலும் அவர்களளப் பாராட்டலாம் அல்லவா?

Friday, July 02, 2010

தூய தமிழ் சொற்கள் நடைமுறைக்கு ஒத்துவருமா?

ஒரு வாரம் முன்பு தினமலரில் படித்தேன். சென்னையில் அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என அரசாங்கம் உத்தரவு போட்டுள்ளதாம். அதையொட்டி கடைக்காரர்களும் தூய தமிழில் பெயர் வைக்கிறார்களாம்.

ஐஸ்கிரீம் என்பதற்கு பனிக்குழையம் என்று போட்டிருந்தார்கள். பனிக்கூழ்/பனிக்குழையம் எந்த சொல் சரியானது? இப்படி எழுதினால் எத்தனை மக்களுக்கு புரியும்? எதனால் தமிழ் சொற்கள் தமிழ் மக்களுக்கே புரியாத நிலை வந்தது? ஒருவேளை இப்படி ஒரு பத்து ஆண்டுகள் தூய தமிழை எங்கும் நடைமுறைப் படுத்தினால் அனைவரும் பழக்கப் படுத்திக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அலுவலக விஷயமாக இஸ்ரேல் சென்றிருந்தேன். அங்கு ஹீப்ரூ மொழி நடைமுறையில் உள்ளது. ஹீப்ரூவும் தமிழ் மொழி போன்றே பழைமையான மொழியே. அங்கே மக்கள் அனைவரும் அனைத்திலும் ஹீப்ரூவையே பயன் படுத்துகின்றனர். கடைகள், கணிப்பொறிகள், மொபைல் போன்கள், பில்கள் அனைத்திலும் ஹீப்ரூ. விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் ஹீப்ரு மொழியில் உள்ளது. ஆனால் தமிழில் இல்லை. இது வருத்தமளிக்கக் கூடியது. இதற்கு காரணம் எனக்கு தெரிய வில்லை.

நம்மால் ஏன் தமிழ் மொழியை எங்கும் பயன்படுத்த முடியவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன என கருதுகிறேன். நமது ஆங்கில மோகம், தமிழில் படித்தால், பயன் படுத்தினால் கேவலம் என்று நினைக்கிறோம். மொபைல் போனில் (கைப்பேசியில்) குறுஞ்செய்திகள் தமிழில் அனுப்பலாம், ஆனால் எத்தனை போன்கள் இவ்வசதியை பெற்றுள்ளன? எத்தனை மக்கள் பயன்படுத்துகிறார்கள்?

தமிழ் படங்களை எடுத்துக் கொள்ளுங்களேன். இப்போது கேளிக்கை வரி விலக்கால் எல்லா படங்களும் தூய தமிழில் பெயர் வைக்கின்றன. இல்லா விட்டால் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், வாரணம் ஆயிரம், பெண் சிங்கம் போன்ற பெயர்களெல்லாம் வந்திருக்குமா? ஆனால் படத்தில் பெயரில் மட்டுமே தமிழ். மற்றபடி காட்சிகள் எல்லாம் மேல்நாட்டு கவர்ச்சி கலாச்சாரம்தான்.

பள்ளிக்கூடங்கள், நம்மில் எத்தனை பேர் குழந்தைகள் தமிழ்வழிக் கல்வி கற்க வைக்கிறோம்? அப்படி படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு என்பதை அரசாங்கம் உறுதி செய்யுமா? இப்போது கூட செம்மொழி மாநாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று அறிவித்து இருக்கிறார்கள்.

தமிழில் எல்லாவித கல்வியும் கற்க முடியுமா? ஒரு உதாரணத்திற்கு கணிப்பொறியியல் தமிழில் கற்க முடியுமா? அதற்கான அனைத்து தொழில்நுட்ப கலைச்சொற்களும் நம்மிடம் உள்ளனவா? Operating System, Business Analysis, Optimization Techniques, Sorting, Random number போன்றவற்றிற்கு சரியான தமிழ் கலைச்சொற்கள் என்ன? அவை எத்தனை தூரம் பிரபலமாயிருக்கின்றன?

ஒருவேளை அப்படியே தமிழில் கல்வி கற்கும் வாய்ப்பிருந்தாலும், அதை படித்து வருபவர்களுக்கு எவ்விதமான வேலை வாய்ப்புகள் உள்ளன? மேல்நாட்டு, அந்நிய கம்பெனிகளில் தமிழ் வழி டிகிரி செல்லுபடியாகுமா? நிச்சயமாக ஆங்கிலம் அறிந்தவர்கள், ஆங்கில வழிக் கல்வியை அல்லவா அவர்கள் விரும்புவார்கள்.

எனவே நடைமுறையில் தூயதமிழ் சொற்கள் என்பது கானல் நீரே.

என்னிடம் மேற்சொன்ன கேள்விகளுக்கெல்லம் விடையில்லை. உங்களிடமும் இல்லாமலிருக்கலாம். ஆனால் இக்கேள்விகளுக்கான பதிலை தேட வேண்டிய நேரம் வந்துவிட்டது போன்றே தோன்றுகிறது!!