Friday, July 02, 2010

தூய தமிழ் சொற்கள் நடைமுறைக்கு ஒத்துவருமா?

ஒரு வாரம் முன்பு தினமலரில் படித்தேன். சென்னையில் அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என அரசாங்கம் உத்தரவு போட்டுள்ளதாம். அதையொட்டி கடைக்காரர்களும் தூய தமிழில் பெயர் வைக்கிறார்களாம்.

ஐஸ்கிரீம் என்பதற்கு பனிக்குழையம் என்று போட்டிருந்தார்கள். பனிக்கூழ்/பனிக்குழையம் எந்த சொல் சரியானது? இப்படி எழுதினால் எத்தனை மக்களுக்கு புரியும்? எதனால் தமிழ் சொற்கள் தமிழ் மக்களுக்கே புரியாத நிலை வந்தது? ஒருவேளை இப்படி ஒரு பத்து ஆண்டுகள் தூய தமிழை எங்கும் நடைமுறைப் படுத்தினால் அனைவரும் பழக்கப் படுத்திக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அலுவலக விஷயமாக இஸ்ரேல் சென்றிருந்தேன். அங்கு ஹீப்ரூ மொழி நடைமுறையில் உள்ளது. ஹீப்ரூவும் தமிழ் மொழி போன்றே பழைமையான மொழியே. அங்கே மக்கள் அனைவரும் அனைத்திலும் ஹீப்ரூவையே பயன் படுத்துகின்றனர். கடைகள், கணிப்பொறிகள், மொபைல் போன்கள், பில்கள் அனைத்திலும் ஹீப்ரூ. விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் ஹீப்ரு மொழியில் உள்ளது. ஆனால் தமிழில் இல்லை. இது வருத்தமளிக்கக் கூடியது. இதற்கு காரணம் எனக்கு தெரிய வில்லை.

நம்மால் ஏன் தமிழ் மொழியை எங்கும் பயன்படுத்த முடியவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன என கருதுகிறேன். நமது ஆங்கில மோகம், தமிழில் படித்தால், பயன் படுத்தினால் கேவலம் என்று நினைக்கிறோம். மொபைல் போனில் (கைப்பேசியில்) குறுஞ்செய்திகள் தமிழில் அனுப்பலாம், ஆனால் எத்தனை போன்கள் இவ்வசதியை பெற்றுள்ளன? எத்தனை மக்கள் பயன்படுத்துகிறார்கள்?

தமிழ் படங்களை எடுத்துக் கொள்ளுங்களேன். இப்போது கேளிக்கை வரி விலக்கால் எல்லா படங்களும் தூய தமிழில் பெயர் வைக்கின்றன. இல்லா விட்டால் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், வாரணம் ஆயிரம், பெண் சிங்கம் போன்ற பெயர்களெல்லாம் வந்திருக்குமா? ஆனால் படத்தில் பெயரில் மட்டுமே தமிழ். மற்றபடி காட்சிகள் எல்லாம் மேல்நாட்டு கவர்ச்சி கலாச்சாரம்தான்.

பள்ளிக்கூடங்கள், நம்மில் எத்தனை பேர் குழந்தைகள் தமிழ்வழிக் கல்வி கற்க வைக்கிறோம்? அப்படி படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு என்பதை அரசாங்கம் உறுதி செய்யுமா? இப்போது கூட செம்மொழி மாநாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று அறிவித்து இருக்கிறார்கள்.

தமிழில் எல்லாவித கல்வியும் கற்க முடியுமா? ஒரு உதாரணத்திற்கு கணிப்பொறியியல் தமிழில் கற்க முடியுமா? அதற்கான அனைத்து தொழில்நுட்ப கலைச்சொற்களும் நம்மிடம் உள்ளனவா? Operating System, Business Analysis, Optimization Techniques, Sorting, Random number போன்றவற்றிற்கு சரியான தமிழ் கலைச்சொற்கள் என்ன? அவை எத்தனை தூரம் பிரபலமாயிருக்கின்றன?

ஒருவேளை அப்படியே தமிழில் கல்வி கற்கும் வாய்ப்பிருந்தாலும், அதை படித்து வருபவர்களுக்கு எவ்விதமான வேலை வாய்ப்புகள் உள்ளன? மேல்நாட்டு, அந்நிய கம்பெனிகளில் தமிழ் வழி டிகிரி செல்லுபடியாகுமா? நிச்சயமாக ஆங்கிலம் அறிந்தவர்கள், ஆங்கில வழிக் கல்வியை அல்லவா அவர்கள் விரும்புவார்கள்.

எனவே நடைமுறையில் தூயதமிழ் சொற்கள் என்பது கானல் நீரே.

என்னிடம் மேற்சொன்ன கேள்விகளுக்கெல்லம் விடையில்லை. உங்களிடமும் இல்லாமலிருக்கலாம். ஆனால் இக்கேள்விகளுக்கான பதிலை தேட வேண்டிய நேரம் வந்துவிட்டது போன்றே தோன்றுகிறது!!

18 comments:

Advocate P.R.Jayarajan said...

வரும் நண்பரே...

குடந்தை அன்புமணி said...

//கணிப்பொறிகள், மொபைல் போன்கள், பில்கள் அனைத்திலும் ஹீப்ரூ. விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் ஹீப்ரு மொழியில் உள்ளது. ஆனால் தமிழில் இல்லை.//
உங்கள் குறையைப் போக்கும் விதமாக நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் இலவசமாக குருவட்டு வழங்கப்பட்டிருக்கிறதாம். அந்த குருவட்டு (சி.டி) கிடைக்காதவர்கள் கீழே உள்ள தொடர்பில் (லிங்கில்) சென்று (பதிவிரக்கம்)இலவசமாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.
http://www.ildc.gov.in/GIST/htm/ocr_spell.htm

கோவி.கண்ணன் said...

//Operating System, Business Analysis, Optimization Techniques, Sorting, Random number போன்றவற்றிற்கு சரியான தமிழ் கலைச்சொற்கள் என்ன? அவை எத்தனை தூரம் பிரபலமாயிருக்கின்றன?//

Operating System - இயக்கச் செயலி
Business Analysis - தொழில் ஆய்வு
Optimization Techniques - தொகு(ப்பு) (அ) முறைமை நுட்பம்
Random number - வரிசையற்ற எண்கள்

பழூர் கார்த்தி said...

உங்கள் கருத்திற்கும், நம்பிக்கைக்கும் நன்றி Advocate P.R.Jayarajan!

இதை நடைமுறைப் படுத்த வேண்டியது நம் கடமை!!

உதாரணத்திற்கு உங்களது வலைப்பதிவு பெயரை(ப்ளாக்) பெயரை தமிழில் வைக்கலாமே, அது ஆங்கிலத்தில் உள்ளதே. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் தயவுசெய்து, இதை ஒரு நட்புரிமையிலேயே சொல்கிறேன் :-)

பழூர் கார்த்தி said...

உங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றி குடந்தை அன்புமணி!! நானும் குடந்தை அருகேயுள்ள ஒரு கிராமம்தான் (தா. பழூர்)..

இந்த குருவட்டில் என்னென்ன உள்ள? எப்படியாயினும்,நிச்சயமாக இது ஒரு நல்ல மகிழ்ச்சி தரும் நிகழ்வே, முன்னேற்றமே!!

பழூர் கார்த்தி said...

கோவி. கண்ணன், தமிழாக்கத்திற்கு நன்றி!! ஏற்கனவே எழுத்தாளர் சுஜாதா இம்மாதிரி தமிழ் படுத்துதலில் ஈடு பட்டிருந்தார்/ஆர்வம் கொண்டு முன்நடத்தினார். இம்மாதரியான தமிழ் கலைச்சொற்களுக்கு ஏதேனும் வலைத்தளம் உள்ளதா? புத்தகங்கள் உள்ளனவா?

ராம்ஜி_யாஹூ said...

me the 7th

FloraiPuyal said...

http://valavu.blogspot.com

பழூர் கார்த்தி said...

ராம்ஜீ_யாஹூ, நன்றி! உங்க பின்னூட்டத்தையே தமிழில் சொன்னால் எப்படி? "நான் ஏழாவது மனிதனா" :-) இப்படி ஒரு தமிழ்ப் படம் உள்ளதள்ளவா?

பழூர் கார்த்தி said...

FloraiPuyal, வளவு தளம் அருமையாக உள்ளது, அறிமுகப் படுத்தியதற்கு நன்றி! உங்க பெயரை தமிழில் எப்படி கூறுவீர்கள்? சொல்லுங்களேன் :-)

ராஜா said...

கார்த்தி,

Advocate P.R. Jayarajan-ன் வலைப்பதிவின் பெயரை தமிழில் வைக்க சொன்ன நீங்கள், உங்களது வலைப்பதிவின் பெயரை தமிழில் வைக்கவில்லையே :)

உங்களை குறை சொல்வதற்காக இதை கூறவில்லை. பிறரிடம் மாற்றத்தை எதிர்பார்க்கும் முன், அதை நம்மிடமிருந்து முதலில் ஆரம்பிக்கலாமே.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நிறைய வலைதலங்கள் இருக்கின்றன.
கூகிள் போன்ற தேடு பொறிகள் இருக்கின்றன. இல்லை என்று நீங்கள் கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை.

நமக்கு தேடல் மட்டுமே தேவை!

பழ(வழ)க்கப்படுத்திக்கொண்டால் சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்

Indian said...

//Operating System, Business Analysis, Optimization Techniques, Sorting, Random number போன்றவற்றிற்கு சரியான தமிழ் கலைச்சொற்கள் என்ன? //

// இம்மாதரியான தமிழ் கலைச்சொற்களுக்கு ஏதேனும் வலைத்தளம் உள்ளதா?//

காண்க திரு. இராம.கி அவர்களின் வளவு வலைப்பதிவு.

பழூர் கார்த்தி said...

ராஜா,

உங்க கருத்திற்கு நன்றி!

//கார்த்தி,

Advocate P.R. Jayarajan-ன் வலைப்பதிவின் பெயரை தமிழில் வைக்க சொன்ன நீங்கள், உங்களது வலைப்பதிவின் பெயரை தமிழில் வைக்கவில்லையே :)//

எனது வலைப்பதிவின் பெயர் "பழூரானின் பக்கங்கள்". இது தமிழில்தானே உள்ளது? எதை நீங்கள் தமிழில் வைக்கச் சொல்கிறீர்கள்? தயவுசெய்து விளக்கவும், நிச்சயம் சரி செய்கிறேன்.. மாற்றம் என்பது நம்மிடமிருந்து ஆரம்பமாக வேண்டும் என்ற கருத்தில் எனக்கும் முழு உடன்பாடு உண்டு, நன்றி!

பழூர் கார்த்தி said...

அத்திவெட்டி ஜோதிபாரதி,

உங்க பின்னூட்டத்திற்கு நன்றி! நீங்கள் கூறிய வழியில் நடைமுறையில் தமிழை இன்னும் பிரபலப் படுத்துவோம்!!

பழூர் கார்த்தி said...

Indian,

உங்க கருத்திற்கும், தகவலுக்கும் நன்றி! ஏற்கனவே Floraipuyalம் இத்தளத்தை அறிமுகப் படுத்தியுள்ளார், நன்றி!

ஸ்ரீகாந்த் _தமிழ் said...

ஒரு சின்ன சந்தேகம் ... Operating System, Business Analysis, Optimization Techniques, Sorting, இதெல்லாம் உபயோக படுத்த போறது வெளி நாட்டுகாரங்க கிட்ட ..அவங்க கூட தான் வியாபாரம் பண்ணனும் ... எதற்காக இந்த வார்த்தைங்கள மொழி பெயர்க்கணும்????வெளி நாடு செல்லும் மோகம் எத்தனை பேருக்கு இல்லை ???? அப்டி செல்ல விரும்புபவர்கள் ஆங்கிலம் தெரியாமல்அங்கே போய் என்ன செய்வார்கள் ?
எதையும் செய்றதுக்கு முன்னாடி ஏன் செய்றோம்னு பாக்க வேண்டியது அவசியம் ஆகிறது ... வீட்டில் சாதரணமாக உரையாடும் போது தமிழில் பேசினாலே போதாதா ?????

பழூர் கார்த்தி said...

ஸ்ரீகாந்த் _தமிழ், உங்க கருத்திற்கு நன்றி! நடைமுறை வாழ்க்கையில் தமிழை நிறைய பயன்படுத்தினாலே தமிழ் நிறைய வளரும் என்கிற உங்க கருத்திற்கு நான் உடன் படுகிறேன்!!