Thursday, September 06, 2012

மனைவியை சமாளிப்பது எப்படி? – ஓர் அனுபவ அலசல்


மனைவியை சமாளிப்பது எப்படி? – ஓர் அனுபவ அலசல்


சில மாதங்களுக்கு முன்பு பழனி கந்தசாமி ஐயா, மனைவியை சமாளிப்பதற்கு சில டிப்ஸ் கொடுத்திருந்தார் (அந்த டிப்ஸ் இங்கே. அவர் சிறந்த அனுபவசாலி, அருமையான குறிப்புகளை அந்த பதிவில் அள்ளி தெளித்திருந்தார். அவரளவுக்கு இல்லாவிட்டாலும், நானும் என்னுடைய கொஞ்ச (4 வருட) அனுபவத்தை வைத்து சில குறிப்புகளை உங்களுக்கு வழங்குகிறேன். அதனை படித்து, பயன்படுத்தி மகிழுங்கள்.

இருந்தாலும் இவையெல்லாம் ஆலோசனைகளே, இவற்றை செயல்படுத்துவது உங்கள் சாமார்த்தியத்தில்தான் இருக்கிறது. அதாவது “நீச்சல் அடிப்பது எப்படி” என்ற புத்தகத்தை படித்து நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா? அதுபோல் இவையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு, பிற்காலத்தில் அனுபவப் பட்டு தெளிவதே நன்று.

திருமணமாகாத பையன்கள், படித்து விட்டு ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொண்டால், பிற்காலத்தில் உதவியாக இருக்கும்!



முதல் பாயிண்ட் மற்றும் முக்கியமானது: சமையல். மனைவியின் சமையலில் எப்போதும் குற்றமே சொல்லக் கூடாது. அதற்காக ரொம்ப ஆஹா, ஓஹோ என்று அளவுக்கதிகமாக பாராட்டினாலும் சந்தேகம் வந்து விடும். ஆதலால் அடக்கி வாசியுங்கள், தேவையான அளவுக்கு பாராட்டுங்கள். ‘சூப்பரா இருக்கு, இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருந்தால் ஊரையே தூக்கிடும்’ – போன்ற மிதமான பாராட்டுகள்/ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப் படலாம்.

முக்கிய குறிப்பு: மனைவியின் சமையலை எப்போதும் மற்றவர்கள் சமையலோடு ஒப்பிடக் கூடாது, முக்கியமாக “என்ன இருந்தாலும் எங்க அம்மா வைக்கிற சாம்பார் மாதிரி வரல’ என்று சொன்னால் போச்சு, புயல் சின்னம் உருவாகி உங்களுக்கு ஒரு வாரம் சாப்பாடு கிடைக்காமல் போகலாம்.




இன்னொரு விஷயம், உங்கள் மனைவியே வாலன்டியராக வந்து ஒப்பிடும் கேள்வி கேட்டாலும் நீங்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது. உதாரணமாக மனைவி ஒரு நாள் உப்புமா செய்திருக்கிறார். நாம் சாப்பிடும் போது “என்னங்க, உப்புமா எப்படி இருக்கு? உங்கம்மா செய்றது மாதிரி இருக்கா?” என்ற கேள்வி வந்தால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் எப்படி பதில் சொன்னாலும் மாட்டிக் கொள்வீர்கள்.

அதாவது நீங்கள் ஆமா, அப்படியே எங்கம்மா உப்புமா மாதிரி இருக்கு அப்படின்னு சொன்னால், உங்க மனைவி "ஆமா, உங்களுக்கு எப்பவும் உங்கம்மா ஞாபகம்தான்.. உங்கம்மா ஒரு வண்டி எண்ண ஊத்தூவாங்க, நான் எப்படி அரை கரண்டி எண்ண ஊத்தி, அருமையா செஞ்சிருக்கேன், அதை புல்லா கட்டு கட்டிபுட்டு உங்கம்மா உப்புமாவாம்.. உப்புமா" என்று அருள்வாக்கு தருவார்.

ஒருவேளை நீங்கள் "எங்கம்மா உப்புமா மாதிரி இல்லை"ன்னு சொன்னா உடனே "உங்களுக்கு நான் செய்றது எல்லாம் புடிக்குமா? உங்கம்மா ஒரு குண்டான் எண்ண ஊத்தி செஞ்சாதான் புடிக்கும், பயத்துல தலைய தலைய ஆட்டிகிட்டு ஆஹா ஓஹோன்னு பாராட்டுவீங்க.. உங்களுக்கெல்லாம் வாய்க்கு ருசியா செஞ்சி போடறேன் பாருங்க என்ன சொல்லனும்" என்று சலித்துக் கொள்வார்.

ஆதாலால் உங்களதுஆன்ஸர் இதுதான்: ஹி ஹி...

இதே கேள்வி உங்கள் அம்மாவும் பக்கத்தில் இருக்கும்போது வந்தால் இன்னும் ஆபத்து. ஆதலால் “நீங்க ரெண்டு பேரு சமைக்கறதும் நல்லா இருக்கு, ரெண்டு பேரும அவங்கவங்க ஸ்டைல்ல ஸ்பெசலா, அருமையா சமைக்கறீங்க” என்று அடித்து விடவும்.


மனைவியின் “ஏங்க இந்த டிரஸ்ல நான் அழகா இருக்கேனா?” என்ற கேள்வி அபாயகரமான கேள்வி. “ஆமாம்மா, அப்படியே அனுஷ்கா மாதிரி இருக்கே” என்று சொன்னால் மூன்றாம் உலகப்போர் மூண்டு விடும். அப்ப எல்லா “அனுஷ்கா” படத்தையும் வச்ச கண்ணு வாங்காம பாத்து ஜொள்ளு விட்டுகிட்டு இருக்கீங்களா என்று கோக்கு மாக்காக கேள்வி ஏவுகணை வந்துவிழும். ஆதலால் ஜாக்கிரதையாக “சூப்பரா இருக்கேம்மா” என்றோ “அசத்தல்” என்றோ பதில் தரலாம்.

முக்கியமாக தீபாவளிக்கு டிரஸ் வாங்கினால் அம்மாவுக்கு 2000 ரூபாய் புடவை என்றால், மனைவிக்கு டிரஸ் செலவு 2000 ரூபாய்க்கு மேல்தான் இருக்க வேண்டும் (குறைந்த பட்சம் 2001 மனைவியை மகிழ்ச்சியாக்கும்). அந்த விலையை அம்மாவிடம் (தனியாக) கூறும்போது 1999 என்றுதான் கூற வேண்டும்.




எல்லா அம்மாக்களுமே பையன் திருமணம் ஆன பிறகு நிறைய மாறிட்டான் என உறுதியாக நம்புவார்கள். நாமும் கொஞ்சம் போல மாறித்தான் இருப்போம் (அதாவது டீசண்டாக ட்ரஸ் பண்ணுவது, புல் ஹேண்ட் சட்டை போடுவது, சினிமாவுக்கு, ஊருக்கு ரிசர்வ் செய்து செல்வது ஆபிசில் இருந்து சீக்கிரம் வருவது). அதை அம்மா அடிக்கடி “பையன் 2008 க்கு அப்புறம் ஒரேடியா மாறிட்டான்” என உங்களிடமோ, உறவினரிடமோ புலம்புவார்கள். மனைவி அதைக் கேட்டு நிச்சயம் கடுப்பாவார்கள். தனிமையில் இருக்கும்போது மனைவியிடம் “செல்லம், நான் முன்னாடி பொறுக்கி பையனா, பொறுப்பில்லாம இருந்தேன், இப்ப நீ வந்துதான் என்ன நல்ல பொறுப்பான, புத்திசாலி கணவனா மாத்திட்ட என்பதைத்தான் அம்மா அப்படி புகழுறாங்க” என்று சமாளிக்க வேண்டும்.




உங்கள் பெற்றோரும், மனைவியின் பெற்றோரும் ஒரே ஊரில் வசித்தால் இன்னும் பிரச்சினை நிறைய. அதாவது நீங்கள் உங்கள் ஊரிலிருந்து அவர்கள் வசிக்கும் ஊருக்கு சென்றால் “யார் வீட்டிற்கு முதலில் செல்வது” என்று சண்டை எழும். “யார் வீட்டில் அதிக நேரம் இருப்பது” என்பது அடுத்த சண்டை. இருவரது வீட்டிலும் சமமான அளவு தங்க முயலலாம். எந்தெந்த உறவினர் வீட்டு விஷேசங்களுக்கு செல்வது என்பதும் ஒரு முக்கிய தலைவலியாக திகழும். இம்மாதிரி நிறைய சண்டைகள் மனைவி கண்ணீருடன் “ஹூம்.. உங்களுக்கு என் வீட்டுக் காரங்கன்னாலே ஒரு இளக்காரம்தான்…” என்று சிணுங்குவதும், நாம் அவரை சமாதானப் படுத்தி, அவர் விருப்பம் போல் விடுமுறை கழிக்கும்படியும் நடக்கும்!




நீங்கள் கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சில பல ஈகோ மோதல்கள் உருவாகும். உதாரணமாக குமுதம் வாரப்பத்திரிக்கை வாங்கினால் கூடவே குமுதம் சினேகிதி மனைவிக்காகவும், குமுதம் பக்தி அம்மாவுக்காகவும் வாங்கி வர வேண்டும். இதில் எதை மறந்தாலும் உங்களுக்கு ஆபத்துதான்.

ஆபீசில் வேலை நேரத்தில், மனைவியிடமிருந்து இ-மெயில் வந்தால் உடனே ரெஸ்பாண்ட் பண்ணாமல், கொஞ்ச நேரம் கழித்து ரிப்ளை பண்ணவும் – “மீட்டிங்ல பயங்கர பிசி, உன் மெயில் பாத்ததும் உடனே ரிப்ளை பண்ணனும்னு தோனுச்சு.. அதான்..” என்று சொன்னால் அனுதாப அலை அள்ளி வீசும்.


வேலை கொஞ்சம் குறைவாக இருந்தால், வீட்டுக்கு (அ) மனைவியின் அலுவலகத்திற்கு போன் போட்டு மனைவியிடம் பாசமாக பேசவும். “டிபன், லஞ்ச் சாப்டாச்சா? வேலை எப்படி இருக்கும்மா இன்னிக்கு? இன்னைக்கு நீ பண்ண பிரசெண்டேஷன் எப்படி போச்சு” போன்ற கரிசனமான வார்த்தைகள் மனைவியின் உள்ளத்தை உருக்கி விடும். பேச்சில் அப்பப்போ மானே, தேனே, பொன்மானே போட்டுக் கொள்ளவும்.

உங்கள் அலுவலகத்தில் நடப்பதை அவ்வப்போது சென்சார் செய்து சொல்லி விடுவது உத்தமம். புதிதாக வரும் அழகு பதுமைகளின் விவரங்களை பட்டும் படாமல் சொல்வது நலம். உங்கள் அலுவலகத்தில் நீங்கள் எவ்வுளவுதான் சோப்ளாங்கியாக இருந்தாலும், அவ்வப்போது மனைவிடம் “இன்னைக்கும் ஒரு கஷ்டமான வேலை வந்துச்சா, மேனேஜர் என்னைக் கூப்பிட்டு இதை நீங்க ஒருத்தர்தான் நம்ப கம்பெனியில் பண்ண முடியும்னு சொல்லி கொடுத்தாருமா” என்று பில்டப் கொடுக்கவும்.





நீங்கள் வலைப்பதிவர் ஆதலால், இரவு 12 மணிக்கு தூக்க கலக்கத்திலும் யாராவது நம்ம பதிவுக்கு ஓட்டு, கமெண்ட்டு போடறாங்களா என்று முழித்து முழித்து பார்த்து கொண்டிருக்கும் போது, மனைவி அந்த பக்கமாக வந்தால் உடனே ஆல்ட் + டேப் போட்டு ஸ்கிரினுக்கு ஆபிஸ் மெயில் பாக்ஸை கொணர்ந்து விட்டு “எவ்ளோ வேலைதான் நான் ஒரு ஆளு பாக்கறது” என்று அலுத்துக் கொள்ளவும். இது மனைவியிடம் நம்ம புருஷனை நம்பிதான் அவர் ஆபீசே இயங்குது என்று ஒரு பிம்பத்தை உருவாக்க உதவும். மனுசன் என்னாமா வேலை பாக்குறாரு என்று ஒரு அனுதாபம் நம் மேல் கூடும்.




நீங்கள் என்னதான் ஆதி காலத்து நோகியா 1100 போனை வைத்துக் கொண்டிருந்தாலும், உங்கள் மனைவிக்கு ஒரு சாம்சங் கேலக்ஸியோ, ஐபோனா வாங்கி கொடுத்து விட வேண்டும். அப்போதுதான் நமக்கு மரியாதை. அதில் போஸ்ட்பெய்ட் சிம் கனெக்‌ஷனையே வைக்க வேண்டும். அப்போதுதான் மனைவி அவரது அம்மாவுடனோ, அக்கா தங்கைகளிடமோ சீரியல்களை பற்றி விவாதிக்க முடியும். அப்புறம் அவர்கள் சரவணன் மீனாட்சி, அரசி (சீரியல்கள்) பார்க்க வசதியாக ஒரு எல்.சி.டி டிவியோ அல்லது எல்.இ.டி டிவியோ அமைத்திட வேண்டும். சாதா டிவியில் அவ்வுளவு துல்லியமில்லை என்பது அவர்களது நம்பிக்கை.



இன்னும் நிறைய விஷயங்கள் இதிலேயே எழுதினால் இது ஒரு நாவல் போல ஆகி விடும். எனவே இத்துடன் தொடரும் போட்டு முடித்து விடுகிறேன். இதைப் படிக்கும் கோடானு கோடி பதிவர் பெருமக்கள் தங்களுடைய “மனைவி சமாளிப்பு” அனுபவங்களை பின்னூட்டங்களாகவோ அல்லது தொடர் பதிவாகவோ எழுத வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்!





முக்கிய பின் குறிப்பு 1: இந்த பதிவை ஒரு காமெடிக்காக எழுதினாலும், பெண்கள் நம் நாட்டின் கண்கள், மனைவியும் அம்மாவும் நமது இரு கண்கள், அதில் மனைவியே வலது கண் என்பதை நீங்கள் எல்லாரும் அறிவீர்கள் என நம்புகிறேன். அதுதான் எனது உறுதியான கருத்தும். ஆதலால் இதனை படிக்கும் லட்சோப லட்ச தாய்மையுள்ளம், அன்புள்ளம் கொண்ட பெண் பதிவர்கள், வாசகர்கள் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம், முக்கியமாக தத்தம் வீடுகளில் பூரிக் கட்டை எங்குள்ளது என்பதை கண்டிப்பாக தேடக் கூடாது என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முக்கிய பின் குறிப்பு 2: இந்த பதிவை எனது வீட்டம்மாவும் (ஹவுஸ் பாஸ்) படிப்பார்கள் என்பதற்காக மட்டுமே மு.பி.குறிப்பு 1 எழுதியுள்ளதாக யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம்!!

படங்கள் - நன்றி: tag-pictures.com & funnythreat.com வலைத் தளங்கள்

ஓட்டு போடுவது, பின்னூட்டம் இடுவது பற்றி விரிவாகசுருக்கமாகமத்யமாக தமிழ்மணம்தெலுகுமணம்கன்னடாமணம்இண்ட்லிஇட்லிதோசையிலும்பிபிசிசன் டிவிவிஜய் டிவியிலும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர்இருந்தாலும்உங்க ஓட்டை, பின்னூட்டத்தை உங்க இஷ்டப்படி பயன்படுத்தலாம்ஏதோ பாத்துச் செய்ங்க மக்கா!! J






18 comments:

suresh said...

இதே பதிவை உங்கள் அம்மாவிடம் காட்டுவீர்களா?

திண்டுக்கல் தனபாலன் said...

அது சரி... ஒரு புத்தகம் போடலாமே... ஹா.. ஹா..

ராஜ் said...

கார்த்தி,
ரொம்ப ரொம்ப எதார்த்தமா, முக்கா வாசி வீட்டுல நடக்கிறதை எழுதி இருக்கேங்க..ரொம்ப நல்லா இருந்திச்சு..
சில அனுபவங்கள் என்னோட வாழ்கையோட அப்படியே ஒத்து போகுது... :):) ஆபீஸ் அனுபவங்கள் எனக்கு நிறைய வாட்டி நடந்து இருக்கு..

பழூர் கார்த்தி said...

சுரேஷ், உங்க கருத்துக்கு நன்றி! கேள்விக்கு பதில்: ஹி ஹி.. :)

***

திண்டுக்கல் தனபாலன், உங்க கருத்துக்கு நன்றி! வலையுலகில் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்கள் புத்தகம் போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் :)

***

ராஜ், உங்க கருத்துக்கு நன்றி! ஆமாங்க இது நம்ம எல்லாருடைய வாழ்க்கையிலும் நடக்கிறதுதான்!

ப.கந்தசாமி said...

பிரமாதமா எழுதறீங்க, பாராட்டுகள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நீங்கள் வலைப்பதிவர் ஆதலால், இரவு 12 மணிக்கு தூக்க கலக்கத்திலும் யாராவது நம்ம பதிவுக்கு ஓட்டு, கமெண்ட்டு போடறாங்களா என்று முழித்து முழித்து பார்த்து கொண்டிருக்கும் போது, மனைவி அந்த பக்கமாக வந்தால் உடனே ஆல்ட் + டேப் போட்டு ஸ்கிரினுக்கு ஆபிஸ் மெயில் பாக்ஸை கொணர்ந்து விட்டு “எவ்ளோ வேலைதான் நான் ஒரு ஆளு பாக்கறது” என்று அலுத்துக் கொள்ளவும். இது மனைவியிடம் நம்ம புருஷனை நம்பிதான் அவர் ஆபீசே இயங்குது என்று ஒரு பிம்பத்தை உருவாக்க உதவும். மனுசன் என்னாமா வேலை பாக்குறாரு என்று ஒரு அனுதாபம் நம் மேல் கூடும்.//
நாலு வருஷத்துக்குள்ளயே நல்ல தேரிட்டீங்க!ஆபீஸ் வேலைய வீட்டில செஞ்சாலும் நீங்கதான் இளிச்சவாயனா?மத்தவங்க யாராவது வீட்டுக்கு கொண்டு வந்து செய்யாராங்களா ன்னு கேள்வி வரும்.
இவங்களுக்கு வீட்டில மட்டும் இளிச்சவாயனா இருக்கணும்.

Vetirmagal said...

இத்தன வருடமா கணவர் சொன்னதெல்லாம் நம்பிண்டு இருந்தேனே!

;-)

அருமை. நன்றிகள்.

பழூர் கார்த்தி said...

பழனி.கந்தசாமி ஐயா, உங்க கருத்திற்கு நன்றி! உங்க பதிவின் இன்ஸ்பிரேஷனில் எழுதப் பட்டதுதான் இது! உங்க மாதிரி அனுபவம் கொண்ட பெரியவர்கள் இந்த சப்ஜெக்டில் புத்தகம் எழுதினால் அது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் :)

***

முரளிதரன்,

//நாலு வருஷத்துக்குள்ளயே நல்ல தேரிட்டீங்க//

உங்க கருத்திற்கு நன்றி!

//இவங்களுக்கு வீட்டில மட்டும் இளிச்சவாயனா இருக்கணும்.//

ஹா ஹா.. அது மனைவி கணவனின் மேல் வைத்திருக்கும் ஒரு பொசசிவ்நெஸ், உரிமைங்க!! :)

***

பட்டு ராஜ்,
உங்க கருத்திற்கு நன்றி!

//இத்தன வருடமா கணவர் சொன்னதெல்லாம் நம்பிண்டு இருந்தேனே!//

முக்கிய பின் குறிப்பு 1 - ஐ படித்திருப்பீங்கன்னு நினைக்கிறேன் :)
உங்க வீட்டில் பூரிக்கட்டை எபெக்ட் இருக்கக் கூடாது என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் :))

வெங்கட் நாகராஜ் said...

// “என்ன இருந்தாலும் எங்க அம்மா வைக்கிற சாம்பார் மாதிரி வரல’ என்று சொன்னால் போச்சு, புயல் சின்னம் உருவாகி உங்களுக்கு ஒரு வாரம் சாப்பாடு கிடைக்காமல் போகலாம்.//

இது எல்லா வீட்டுலயும் நடக்கிறது தான்.. நீங்க நாலு வருஷம். நான் பத்து வருஷம்... :)))

நடக்கட்டும் நடக்கட்டும்....

மு.பி.கு. நல்லாத்தான் போடுறீக குறிப்பு!

Yaathoramani.blogspot.com said...

உண்மையில் டிப்ஸ் எல்லாம்
பயனுள்ளதாகவும் பயன்படுத்த முடிந்ததாக்வும்
சுமுகமான இல்லச் சூழலுக்கு அவசியம்
பயன்படுத்த வேண்டியதாகவும் உள்ளது
மிக குறைந்த வயதுடையவராக இருக்கிறீர்கள்
எப்படி இப்படி ஒரு அனுபவப் பதிவைக்
கொடுக்கமுடிந்தது
மனம் கவர்ந்த சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

பழூர் கார்த்தி said...

வெங்கட் நாகராஜ், உங்க கருத்துக்கு நன்றி!

//மு.பி.கு. நல்லாத்தான் போடுறீக குறிப்பு//

ஆமாங்க.. பின் குறிப்புகள் முக்கியம் அல்லவா? :))

****

ரமணி,
உங்க கருத்துக்கு நன்றி!

//சுமுகமான இல்லச் சூழலுக்கு அவசியம்
பயன்படுத்த வேண்டியதாகவும் உள்ளது//

ரொம்ப மகிழ்ச்சி, இவற்றை நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறேன், சூடான இடுகைகளில் வந்திருப்பதால் well received என்றே நினைக்கிறேன்..

//மிக குறைந்த வயதுடையவராக இருக்கிறீர்கள்
எப்படி இப்படி ஒரு அனுபவப் பதிவைக்
கொடுக்கமுடிந்தது//

ஹா ஹா.. உங்க பாராட்டுக்கு நன்றி! உண்மையான வயதை சொல்லக்கூடாது :) ஆனாலும் உங்களை மாதிரி பெரியவர்களின் நட்பினாலும், அனுபவங்களை கேள்விப் படுவதிலும், உறவினர் & நம் வீடுகளில் நடப்பதை பதிவு செய்திருக்கிறேன்.. நன்றி!!

எல் கே said...

ஹஹஹா... இதுக்குதான், நான் உன் சமையல் உங்க அம்மா ( வீட்டம்மாவின் அம்மா ) சமையல் அளவு இல்லை என சொல்லிடுவேன்.. எப்படி என் ஐடியா

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/it.html) சென்று பார்க்கவும்...

பழூர் கார்த்தி said...

எல்.கே, உங்க கருத்துக்கு நன்றி!

//ஹஹஹா... இதுக்குதான், நான் உன் சமையல் உங்க அம்மா ( வீட்டம்மாவின் அம்மா ) சமையல் அளவு இல்லை என சொல்லிடுவேன்.. எப்படி என் ஐடியா//


இது உண்மையிலேயே சூப்பரான ஐடியாதான், நானும் முயற்சி செய்கிறேன் :))

****

திண்டுக்கல் தனபாலன், தகவலுக்கு ரொம்ப நன்றி!

sandhyarun said...

kalakitteenga swami, entha sambavam ithai ungalai ezutha thoondiyathu?

அமுதா கிருஷ்ணா said...

அனுபவம் பேசுகிறது. ரசித்து படித்தேன்.

ஆனந்தன் said...

பல சந்தர்பங்களில் பேசாமல் இருந்து விடுவது நல்லது

ஆனந்தன் said...

பல சந்தர்பங்களில் பேசாமல் இருந்துவிடுவது நல்லது