Wednesday, August 29, 2007

தமிழ் வலைப்பதிவுகளில் முதன்முறையாய்...

தமிழ் வலைப்புதிவுகளில் முதன்முறையாய் ஒரு Interactive Crime Thriller (ஊடாடும் குற்ற திகில்) சிறுகதையை அனுபவிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன். கதையின் பாதி பகுதி இங்கே இருக்கிறது. இந்த கதையின் முடிவை (climax) கூறப்போவது நீங்கள்தான்.


எனக்கு ராஜேஷ்குமார், சுபா ஸ்டைலில் ஒரு க்ரைம் திரில்லர் எழுத ரொம்ப நாட்களாய் ஆசை. சரிதான் முயற்சிப்போமே என்று சென்ற வருடம் தேன்கூடு போட்டிகளின் போது ஒரு கதையை எழுத ஆரம்பித்தேன். அந்த கதையில் முதல் மூன்று பகுதிகளை கீழே கொடுத்திருக்கின்றேன்.


கதையை முதலில் படியுங்கள். பிறகு கதை எப்படி தொடர்ந்து சென்று முடிந்திருக்கும் என்பதை பின்னூட்டத்தில் 3-4 வரிகளில் எழுதுங்கள். நேரமும், ஆர்வமும் இருந்தால் கதையின் தொடர்ச்சியை தனிப் பதிவாகவும் இட்டு, இங்கே லிங்க் கொடுத்து விடுங்கள்.


Come on, let's interact !!!!


<<<>>>


{{விளையாடாமல் வேட்டையாடு}} - க்ரைம் சிறுகதைPart - 1


நவிமும்பை வாஷி ட்ரெயின் ஸ்டேசன் அந்த அதிகாலை வேளையிலும் பரபரப்பாய் இருந்தது. கருஞ்சிவப்பு நிறத்தில் வழிந்திருந்த ரத்தம் தண்டவாளத்தை ஒட்டி உறைந்திருந்தது. இரண்டு அடி இடைவெளியில், விழுந்திருந்த இளம்பெண்ணின் சுடிதாரில் ரத்தம் திட்டு திட்டாய் இருந்தது. கம்யூட்டர் டெஸ்க்டாப் ஐகான்கள் போல் மக்கள் சிதறி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.


வாக்கிங் வந்திருந்த பெரியவர் தற்காலிமாக ஆஸ்த்மாவை மறந்து விட்டு "காலம் ரொம்ப கெட்டுக் கிடக்கு.. யாராவது போலிசுக்கு சொல்லுங்கப்பா" என்றார். கூடியிருந்தவர்களில் சிலர் அவசரமாக விலகினர். கேர்ள் ப்ரண்டுக்காக காத்துக் கொண்டிருந்த ஜீன்ஸ் இளைஞன் செல்போனில் "கமான்யா, சீக்கிரம் வாப்பா, பொணமெல்லாம் ஸ்டேசன்ல கிடக்கு, எப்ப ட்ரெயின் எடுக்கப்போறான்னே தெரியல, இன்னிக்கு 'சக்தே இண்டியா' படம் பாத்தாப்பலதான்" என்று அலுத்துக் கொண்டிருந்த நொடிகளில் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள்கள் புடை சூழ வந்தார்.


"போட்டாகிராபர், பாரன்சிக் ஆளுங்க, டாக் ஸ்குவாட் எல்லாரையும் வரச் சொல்லுய்யா.. காலங்காத்தாலயே பொணத்து முகத்துல முழிக்க வேண்டியதா இருக்கு....பேசாம கம்ப்யூட்டர் படிச்சிட்டு, சாப்ட்வேர் கம்பெனில ப்ளாக் எழுதிகிட்டு இருந்திருக்கலாம்.." என்ற இன்ஸ்பெக்டர் குனிந்து கர்சீப்பால் கையை சுற்றிக்கொண்டு ஹேண்ட்பேகை எடுத்தார். வேலை பார்த்த கம்பெனியின் அடையாள அட்டை, கிரெடிட், டெபிட் கார்டுகள், ஸ்டிக்கர் பொட்டுகள், இத்யாதி, இத்யாதி...


கம்பெனி அடையாள அட்டையில் பெயர் பார்த்தார் "வந்தனா ராஜசேகர், Emp Id: 78292"


<<<>>>Part - 2


பிரகாஷ் லேட்டஸ்ட் ஹிட் பாலிவுட் நடிகையுடன் "கஜுராரே, கஜூராரே..." என்று டூயட் பாடிக்கொண்டிருந்த போது எங்கோ தொலைவில் செல்போன் ரிங்கியது. போர்வையை விலக்கி செல்போனை காதில் வைத்தான். "ஹாய் பிரகாஷ், என்னடா இன்னுமா தூங்கிகிட்டு இருக்க? எந்திருச்சி, ஜிம்முக்கு போடா ராஸ்கல், 10 கிலோ எடையை குறைச்சாதான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்.." என்று வந்தனாவின் குரல் தேனாய் வழிந்தது.


"இதோ எந்திருச்சுட்டேன், எங்க இருக்க இப்ப?" என்றான் பிரகாஷ்."வாஷி ஸ்டேசன்ல வெய்ட் பண்ணிகிட்ருக்கேன், 5:12 தானே ட்ரெயின் இன்னும் வரலே.." - வந்தனா"சரி, கரெக்டா ஆபிஸ் போய்சேரு.. நான் ஜிம்முக்கு கிளம்பறேன்.... வச்சிரட்டுமா..ஒரே ஒரு முத்தம் கொடேன்..." - பிரகாஷ்.வந்தானாவின் வெட்கப்படும் "போடா, திருட்டு ராஸ்கல்" உடன் கால் கட்டானது.


<<<>>>Part - 3


ஆறுமுகம் காபி குடித்துக் கொண்டே மும்பை தமிழ் டைம்ஸை பார்வையால் மேய்ந்தார். செல்போன் வைப்ரேஷனில் அதிர்ந்தது. நம்பர் பார்த்தார். புதிதாக இருந்தது. ஏற்கனவே நம்பர் செல்போனில் இருந்தால் பெயர் வருமே என யோசித்துக் கொண்டே எடுத்தார்.


"சார்...வி1 தான் பேசறேன்...வெல்டிங் பண்ணியாச்சு.. இப்ப பன்வேல்ல இருக்கேன்.. ஹைதராபாத் பஸ்லதான் உக்காந்துருக்கேன்...." என்று எதிர்முனையில் குரல் கரகரத்தது.


"...ஏய்.. உன்னை போன் பண்ண வேண்டாம்னு சொன்னேன்ல..." என்றார் ஆறுமுகம். வியர்த்த நெற்றியை தோள் துண்டால் துடைத்தார்.


"இல்ல சார்... நேத்து நைட் வாஷி ஸ்டேசன்ல ஏர்டெல்காரன் ஏதோ விளம்பர ஸ்டால் வச்சி, ஃப்ரியா சிம்கார்டு கொடுத்துகிட்டு இருந்தான்..இதுல 10 ரூவாய்க்கு டாக்டைம் இருக்குன்னான்.. அதான் அந்த நம்பர இப்ப போட்டு உங்கிள்ட பேசிகிட்டு இருக்கேன்.. பேசி முடிச்சவுடனே தூக்கி போட்டுடறேன்"


"சரி சரி.. காலை கட் பண்ணு, ஹைதராபாத் போய்ட்டு 2-3 நாள் கழிச்சி எஸ்டிடீ பூத்ல இருந்து எனக்கு போன் பண்ணு.." என்று கட் செய்தார் ஆறுமுகம்.


<<<>>>இவ்வுளவுதாங்க.... இப்ப நீங்க அசத்த ஆரம்பிங்க :-)))

என் கேள்விகளுக்கு என்ன பதில்?

1. 'பூங்கதவே.. தாழ் திறவாய்...' என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது?

2. சச்சின் டெண்டுல்கர் மொத்தம் எத்தனை டெஸ்ட் சதங்கள் இதுவரை எடுத்துள்ளார்?

3. ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதியாக பதவி வகித்த காலம் எந்த வருடத்திலிருந்து எந்த வருடம் வரை?

4. டைரக்டர் 'ஷங்கர்' இதுவரை எத்தனை படங்களை இயக்கியுள்ளார்?

5. இந்தியா ஒலிம்பிக் ஹாக்கியில் கடைசியாக தங்கம் வாங்கிய வருடம் எது?

6. இந்தியாவில் எந்த மாநிலம் சமீபத்தில், கடைசியாக உருவாக்கப் பட்டது? எந்த வருடம்?

Thursday, August 23, 2007

திருச்சிராப்பள்ளி

திருச்சியைப் பற்றிய எனது முந்தைய பதிவுகள்

திருச்சி 1
திருச்சி 2

திருச்சி நினைவுகள் தொடர்ந்து சுழலும்...

Wednesday, August 22, 2007

திருச்சி - 2
மலைக்கோட்டை மாநகரான திருச்சிராப்பள்ளியைப் பற்றி சென்ற பதிவில் (திருச்சி - 1) பார்த்தோமல்லவா ! மேலும் நிறைய விவரங்களுடன் பல நண்பர்கள் பின்னூட்டமிட்டிருந்தனர். அந்த விவரங்களுடன் மீண்டும் ஒரு முறை திருச்சியைச் சுற்றிப் பார்க்கலாம், வாருங்கள் !

திருச்சியில் இரண்டு பெரிய பேருந்து நிலையங்கள் உள்ளன. சத்திரம் பேருந்து நிலையம் (மெயின் கார்டு கேட்) மற்றும் மத்தியப் பேருந்து நிலையம் (ஜங்சன்). ம.பே.நிலையத்திற்கு அருகே ரயில் நிலையம் உள்ளது. ம.பே.நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் செம்பட்டு விமான நிலையம் உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களுக்கு பஸ்/டிரெயின் வசதி உள்ளது. சென்னை, மதுரைக்கு விமான வசதிகளும் உள்ளன. இரண்டு பேருந்து நிலையத்திற்கு அருகிலும் நிறைய, நல்ல ஹோட்டல்கள் உள்ளன.நாகநாதர் டீ ஸ்டால் என்று திருச்சியில் நிறைய டீக்கடைகளைப் பார்க்கலாம். டீ, காபி தவிர வாழைக்காய் பஜ்ஜி சட்னியோடு கொடுப்பார்கள் மாலை நேரங்களில். அவ்வுளவு சுவையாய் இருக்கும். தெப்பக்குளம் பகுதியில், நிறைய ரோட்டோர நூடுல்ஸ் கடைகளைப் பார்க்கலாம். எக் நூடுல்ஸ், வெஜ் நூடுல்ஸ், சிக்கன் நூடுல்ஸ் என்று மக்கள் பிரித்து மேய்வார்கள் (அப்படின்னா, நல்லா சாப்பிடுவாங்கன்னு அர்த்தம்).


திருச்சியில் நிறைய ட்யூசன் செண்டர்கள் உண்டு. பத்தாவது, பன்னிரண்டாவது மாணவர்களுக்கென, மேக்ஸ் செல்வராஜ், பிசிக்ஸ் ஆர்.சி, கெமிஸ்டரி ராஜா, பயாலஜி சுந்தர் என்று ஏரியா, ஏரியாவாக நிறைய பிரபலமான ஆசிரியர்கள் திருச்சியைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள் (கொண்டிருக்கிறார்கள்).


திருச்சியிலுள்ள முக்கியமான சுற்றுலாத் தளங்கள்


மலைக்கோட்டை, முக்கொம்பு, கல்லணை


முக்கியமான கோயில்கள்


ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவானைக்கோவில் சிவபெருமான், சமயபுரம் மாரியம்மன், குணசீலம் சிவபெருமான், மலைக்கோட்டை தாயுமானவர் & உச்சிப் பிள்ளையார், வயலூர் முருகன்.


முக்கியமான கல்விக்கூடங்கள்


என்.ஐ.டி (NIT, பழைய பெயர் REC)
கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி
பாரதிதாசன் பல்கலைக் கழகம்

இதைத் தவிர வேறு பல பிரபலமான கலைக் கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகளும், கணிணி கல்விக்கூடங்களும் உள்ளன.

திருச்சியில் பிறந்த / படித்த முக்கிய பிரபலங்கள்

முதல் குடிமகன் அப்துல் கலாம் (நான் படித்த ஜோசப் கல்லூரியில் படித்தவர்)
தமிழ் தொண்டாற்றிய கி.ஆ.பெ. விசுவநாதம் (திருச்சியில் பிறந்து, வளர்ந்து, வசித்தவர்)
எழுத்தாளர் சுஜாதா (ஜோசப் கல்லூரி)
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் (நேஷனல் கல்லூரி)
நடிகர் நெப்போலியன் (ஜோசப் கல்லூரி)
நடிகர் பைவ் ஸ்டார் பிரசன்னா (சாரநாதன் கல்லூரி)
சர்.சி.வி. ராமன் (உறுதியாக தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்)

*****

திருச்சி நினைவுகள் தொடர்ந்து சுழலும் :-)

Tuesday, August 21, 2007

சென்னையின் ப்ளஸ்கள்(+)

சிங்காரச் சென்னையில் செப்டம்பர்-11ம் தேதி கால்பதிக்கின்றேன். 1998-ல் பி.எஸ்.சி முடித்தவுடன் ஹைதராபாத் கிளம்பினேன். ஹைதராபாத்தில் ஐந்தரை வருடங்கள் இருந்து விட்டு மும்பை கிளம்பினேன். ஹைதராபாத்தில் இருந்த நாட்களில் உருப்படியாக எம்.சி.ஏ படித்து முடித்தேன். நவி மும்பையில் இரண்டேகால் வருடங்கள் வாசம். பிறகு ஏப்ரல்-2006ல் புனே வந்தேன். இப்போது இங்கிருந்து கிளம்பி சென்னை மாநகரத்தில் வசிக்கப் போகிறேன்.

நமது அலுவலகம் சென்னை புறநகரில் உள்ளதால் போக்குவரத்து, தண்ணீர் பிரச்சனைகள் அவ்வளவாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

1991-லிருந்து 1998 வரை திருச்சியில் வசித்தேன். இப்போது மீண்டும் 9 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு அதுவும் சென்னைக்கு வருவது ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொஞ்சம் thrilled கொஞ்சம் excited. ஆனால் சென்னையின் தண்ணீர் பஞ்சத்தையும், climateடையும் நினைத்தால் கொஞ்சம் scared.

சென்னைக்கு வருவதால் நான் கருதும் ப்ளஸ்கள் (+)
1. சொந்த ஊருக்கு (கும்பகோணம்) பக்கம், அடிக்கடி சென்று வரலாம். பெற்றோர், உறவினர்களை அடிக்கடி சந்திக்கலாம்.
2. வார இறுதிகளில் கட்டாயம் தமிழ் சினிமா
3. விகடன், குமுதம், குங்குமம், கல்கி, தினமலர், தினத்தந்தி போன்றவற்றை சூடாக படித்து விவாதிக்கலாம்
4. டீக்கடை வெட்டி அரட்டை
5. தாவணி/சுடிதார், மல்லிகைப் பூவுடன் மங்களகரமான/அழகான இளம்பெண்கள்
6. நைட்டு கடைகளில் கொத்து பரோட்டா, குஸ்கா, ஆம்லெட், இட்லி, etc....
7. வலைப்பதிவர் சந்திப்பு, பட்டறை என்று நாமும் நம் பங்குக்கு பட்டையை கிளப்பலாம்

இதைத் தவிர நீங்களும் ஏதாவது + சொல்லுங்களேன்
+ மட்டுமே :-)

Friday, August 03, 2007

தேநீருடன் பருகச் சில கவிதைகள்

1

புதிது புதிதாய்
காதல் கவிதைகள் புனைய
புனைப்பெயரை
தேடி அலைந்த போதுதான்
கண்டேன் உன்னை....
கண்டது முதல்
மறந்தேன்
சொந்தப் பெயரையும்...


2

வலைப்பதிவுகளில் கை
வலிக்கும் வரை
எழுதித் தள்ளி விட்டேன்..
எல்லா போட்டிகளிலும்
கலந்து கொண்டிருக்கிறேன்..
நட்சத்திரமோ,
பரிசுகளோ,
வலை நிறைய பின்னூட்டங்களோ
கைக்கெட்ட வில்லை...
இருப்பினும்
வலை தொடர்வேன் நான்...
தாய்மொழியில் எழுதுவது
சுவாசிப்பது போலல்லவா..
தொடர்ந்து சுவாசிப்பதற்கு
காரணம் வேண்டுமா என்ன?

3

புன்னகைதான் உனக்கு
சிறந்த பொன் நகை
என்று
கூறிக் கூறியே
என் நகைகளையெல்லாம்
ஒவ்வொன்றாய்
களவாடி சென்றாயே...
திருமணமானதும்
திசைமாறிப் போவதா காதல்?

4

மழை பொழியும்
ஓர் பின்னிரவில்
தேநீருடன் பருக
கவிதைகள்
சிலவற்றை தேடி
அலைந்த போதுதான்,
தெரிந்து கொண்டேன்
உன் புகைப்படம்
உணர்த்தும்
எண்ணிலா புரிதல்களை!!!*****
பின்னூட்டத்தில் உங்களுக்கு பிடித்த கவிதையின் எண் எதுவென்பதை மறவாமல் எழுதுங்கள்!! எதுவுமே தேறாவிட்டால் '0' என்று கூறுங்களேன் :-) இனிமையான வார இறுதிக்கு வாழ்த்துக்கள்!