Sunday, June 20, 2010

ராவணன் – சினிமா விமர்சனம்





எந்த தமிழ்படத்தையுமே முதல் வாரத்தில் பார்ப்பதை நான் விரும்புவதில்லை. படம் பார்த்த நான்கு நண்பர்களை கேட்டு விட்டோ, வலைப்பதிவிலோ, டிவியிலோ, வாரப் புத்தகங்களில் வரும் விமர்சனங்களை கேட்டு விட்டு நல்ல, வித்தியாசமான படம் என்றால்தான் செல்வேன். ஆனால் ராவணன் பற்றிய எதிர்பார்ப்புகள், மணிரத்னம், ரெஹ்மான், விக்ரம் கூட்டணி என்னை சற்றே சஞ்சலப் படுத்தியது. படம் நிச்சயம் வித்தியாசமாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சற்றே அசட்டையாய் கடந்த புதன் இரவு வலையில் மேய்ந்த போது கிடைத்தது வடபழனி கமலாவில் டிக்கெட்.

எதிர்பார்ப்பை ஏமாற்ற வில்லை ராவணன். அருமையாய் இருக்கிறது படம். நான் முழுக்க முழுக்க ரசித்தேன்.

ஆரம்ப காட்சியே அமர்க்களம், அவ்வுளவு பெரிய போட்டில் விக்ரம் வந்து ஐஸ்வர்யா இருக்கும் சிறிய போட்டை மூழ்கடிக்கும் போது, நாமே மூழ்கிப்போவது போல் ஓர் உணர்வு. படத்தில் பெரும்பாலான காட்சிகளில் தண்ணீர். மழை, நீர்விழ்ச்சி, மலைகள் என ஒளிப்பதிவாளர் அசத்தியிருக்கிறார். புனே பக்கத்தில்தான் எங்கோ படம் பிடித்திருக்கிறார்கள். மஹாராஷ்ராவில் இம்மாதிரி நிறைய பசுமையான மலைகளும், மலை சார்ந்த இடங்களும் உண்டு.

ஒரு காட்சியில் பஸ் வரும், ஐஸ்வர்யா அதில் ஏறி விக்ரமை சந்திக்க வருவார். அந்த பஸ் மகாராஷ்டிரா மாநில அரசு பஸ் (BEST) என்று நினைக்கிறேன், பஸ் கலர் நான் 4 ஆண்டுகள் மும்பையிலும், புனேயிலும் வசித்தபோது பரிச்சயம்.

கதை சாதாரண கடத்தல் கதைதான். ஆனால் அதை எடுத்த விதமும், திரைக்கதையும், தொழில் நுட்பமும் அசத்தல். இந்திய சினிமாவை நிச்சயமாய் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல முயற்ச்சிகிறது. ஒளிப்பதிவு, இசை, பின்னணி இசை, கலை என்று அனைவரும் சிரத்தையாய் உழைத்திருக்கிறார்கள்.

விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ் மூன்று பேருமை நன்றாக நடித்திருக்கிறார்கள். விக்ரம் வழக்கம்போலவே வீரா கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். டண்டண் டண் டண்டனக்கா என்று அவர் சொல்லும்போது தியேட்டரே அதிர்கிறது, ரசிக்க முடிகிறது. அற்புதமான முகபாவங்கள், உடல் மொழிகள் என மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்திருக்கிறார் இன்றைய அடைமொழி சூரப்புலிகளின் முன்பு. ஐஸ்வர்யா ராயும், விக்ரமிற்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். அவருடைய கண்கள்தான் எத்தனை கதைகள் பேசுகின்றன?? எவ்வுளவு அருமையாய் நடனமாடுகிறார்? குரல் கொடுத்தவர் ரோகினியா? கொஞ்சம் பொருந்தவில்லை.

கார்த்திக், பிரபு இருவரும் தனக்கு கொடுத்த வேலையை சரியாய் செய்திருக்கிறார்கள், இருந்தாலும் கார்த்திக்கை மரத்துக்கு மரம் தாவ விட்டதெல்லாம், கொஞ்சம் ஓவர். பாடல்கள் அனைத்தும் முன்பே ஹிட், தியேட்டரில் பார்க்கவும் நன்றாக இருக்கிறது. குறைகளே இல்லையா? இருக்கிறது, முதல்பாதி சற்று விறுவிறுப்பு குறைவு. இருப்பினும் படத்தை பார்த்து ரசிக்கலாம். நிச்சயம் இந்திய சினிமா பெருமைப் படக்கூடிய படம். இந்தியில் அபிஷேக்கும், விக்ரமும் எப்படி நடித்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாய் இருக்கிறது, பார்த்து விட்டு மீண்டும் உங்களை சந்திக்கிறேன்!!

Saturday, June 19, 2010

துரைசிங்கம் -- Stole my heart

நான் சூர்யாவின் ரசிகன் அல்ல. வழமையான மசாலா படங்களை விரும்பி பார்ப்பவனும் அல்ல. அதனால் சிங்கம் படத்தை இத்தனை நாளும் பார்க்க வில்லை. இப்படி ஒரு வார இறுதி வெள்ளி மாலையில் சிங்கத்தை பார்ப்பேனென்று ஒரு திட்டமும் இல்லை.


ஏற்கனவே நிறைய வலைப்பதிவுகளிலும், புத்தகங்களிலும் விமர்சனம் படித்து விட்டதால் அதிக எதிர்பார்ப்பில்லாமல் சென்றேன். வடபழனி கமலா தியேட்டர் - ஸ்கீரின் 2 ஓர் சிறிய நல்ல தியேட்டர். நீங்கள் எப்போது கமலா தியேட்டர் சென்றாலும் அதன் அதிபர் வி.என். சிதம்பரத்தை பார்க்கலாம். இன்றும் அவரைப் பார்த்தேன். யாரோ ஒரு நண்பருக்கு தியேட்டரை சுற்றிக் காட்டி ஏதோ விளக்கிக் கொண்டிருந்தார்.

சிங்கம் முழுக்க முழுக்க சூர்யாவின் படம். படம் முழுக்க அவரது ஆதிக்கம்தான். சூர்யா ஓரு உண்மையான போலிஸ் ஆபிசர் போல் அட்டகாசமாய் இருக்கிறார். நன்றாக உடற்பயிற்சி செய்து உடம்பை டிரிம்மாக டெவலப் செய்து வைத்திருக்கிறார். துரைசிங்கம் பாத்திரத்தில் நச்சென்று பொருந்தி இருக்கிறார். வசனங்களை பேசுவதிலும், காதல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் தூள் கிளப்பி இருக்கிறார்.

பாடல்கள் எல்லாம் சுமார்தான். சிங்கம், சிங்கம் பாட்டு நன்றாக இருக்கிறது. சூர்யா இவ்வுளவு நன்றாக நடிப்பார் என்று எதிர்பார்க்க வில்லை. என்னைக் கேட்டால் இதுதான் சூர்யாவின் பெஸ்ட் படம் என்பேன்.

அனுஷ்கா அழகாய் இருக்கிறார், நன்றாக ஆடுகிறார். உயரம்தான் சூர்யாவுடன் ஒத்துவர வில்லை. இருந்தாலும் எப்படியோ சமாளித்திருக்கிறார்கள்.

ஆதவனில் வடிவேலு என்றால் இதில் விவேக்குடன் வெளுத்துக் கட்டி இருக்கிறார். அளவான காமெடி, செண்டிமெண்ட், காதல், ஆக்சன் காட்சிகள் என ஒரு சூப்பர் விறுவிறுப்பான மசாலைவை கொடுத்திருக்கிறார் ஹரி. வாழ்த்துக்கள்!! படம் சூப்பர் ஹிட்டாகி விட்டது. கமலாவில் இன்று மாலையும் அரங்கு நிரம்பி இருந்தது.

Sunday, June 06, 2010

யாஹூ மெசேஞ்சர் அனுபவம்

என் பெயர் சாமிங்க. எனக்கு பாட்சா ரஜினி மாதிரி இன்னொரு பெயர் உண்டுங்க. அது ஆறுச்சாமி இல்லைங்க, அறுவைச் சாமி! என்னோட நண்பர்கள் என்னை செல்லமா மொக்கச் சாமின்னு கூப்பிடுவாங்க. இன்னும் வேற மாதிரியில்லாமும் கூப்பிடுவாங்க, அதெல்லாம் சபையில சொல்ல முடியாதுங்க :-)

என்னோட திறமை என்னான்னா எந்த விஷயமுமே இல்லாம என்னால தொடர்ந்து பலமணி நேரம் மொக்க போட முடியுங்க. இதுக்கும் நான் இப்ப பிசினஸ் அனலிஸ்டா வேலையில் இருக்கறதுக்கும் சம்பந்தம் இருக்கா இல்லையான்னு தெரியலிங்க.

நான் வந்து 2001 ல் யாஹூ அக்கவுண்ட் ஆரம்பிச்சேங்க. 2003ல் ரிலையன்ஸ் பாம்பேயில் ஜாயின் பன்ண பிறவுதான் டெயில் யாஹூ மெயில், சாட் எல்லாம் உபயோகப் படுத்த ஆரம்பிச்சேங்க. ஒரு ஆர்வத்தில் எல்லா நண்பர்களோட யாஹூ அட்ரஸையும் வாங்கி என்னோட சேத்துக்கிட்டேங்க.

ஆனா பாருங்க, நான் எப்ப மெசேஞ்சர் உள்ள நுழைஞ்சாலும் (sign in), onlineல இருக்கிற எல்லா நண்பர்களையும் காட்டும். ஆனா பாருங்க ஒரே நிமிஷத்தில் எல்லா மஞ்ச விளக்கும் அணைஞ்சு போய்டும், எல்லா நண்பர்களும் காணாம போனமாதிரி காட்டும். நானும் ரொம்ப நாளைக்கு இது ஏதோ சாப்ட்வேர் ப்ரச்சினை, நம்ம கம்பெனியில் ப்ளாக் பண்ணியிருக்காங்க போல அப்ப்டின்னு நினைச்சுட்டேன்.

அன்னைக்கு ஒரு நாளு ப்ரவுசிங் செண்டருக்கு போய், யாஹூ மெசேஞ்சருக்குள்ள போனா அங்கயும் இப்படித்தான் நடந்தது. எல்லா நண்பர்களுமே ஒரே நிமிஷத்தில ஆப்லைன் போய்ட்டாங்க. அப்பதாங்க புரிஞ்சுது, இந்த பயபுள்ளைக (என் நண்பர்கள்தான்) என்னை ஆன்லைன்ல பாத்தவுடனே “அய்யய்யோ சாமி வந்துட்டான், சாமி வந்துட்டான்” அப்பிடின்னு அடிச்சு புடிச்சு லாக் ஆப் ஆயிடாறங்க இல்லைன்னா இன்விசிபிள் போயிடறாங்க. இப்ப கூட கீழே பாருங்க, இந்த சோகத்தை..



அப்படியே எவனாவது ஆன்லைன்ல மறந்து போய் இருந்தாலும், நான் ஹாய் அப்படின்னு அடிச்சு வுடனேயே idle ஆயிடறாங்க. இவங்களை எப்படி வழிக்கு கொண்டு வரலாம்னு சொல்லுங்களேன், ப்ளீஸ்!!!