Saturday, April 25, 2009

சென்னை ஆட்டோகாரர்களை என்ன செய்யலாம்?

எங்கள் வீட்டிலிருந்து (ராமாபுரம், சென்னை) கோயம்பேடு செல்ல நேரடி பஸ் வசதி கிடையாது. கிண்டி சென்று அங்கே வேறு பஸ் பிடித்து கோயம்பேடு செல்லலாம், ஒரு மணி நேரம் ஆகும். ஆனால் வளசரவாக்கம், சாலிகிராமம், சின்மயா நகர் வழியே குறுக்கே சென்றால் 7 கிமீ தூரம்தான், 15 நிமிடத்தில் சென்று விடலாம், டிராபிக் இருக்காது. எனவே ஆட்டோவில் செல்வதைத்தான் விரும்புவோம்.

ஒவ்வொரு முறை நாங்கள் ஊருக்கு செல்ல கோயம்பேடு செல்ல எத்தணிக்கும் போதெல்லாம் ஆட்டோ ஓட்டுனருடன் பெரும் பேசமே நடக்கும். வாய் கூசாமல் பெரும்பாலானோர் 150 ரூபாய் கேட்கிறார்கள், எந்த ஊர் நியாயம் என்றே தெரியவில்லை. 7 கிமீ தூரத்திற்கு 150 ரூபாயா? நான் மும்பையில் இருந்த போது ஒரு கி.மீ தூரத்திற்கு 9 ரூபாய் கொடுத்ததாய் ஞாபகம். அந்த கணக்கில் பார்த்தால் 63 ரூபாய்தான் வருகிறது. இப்போது டீசல் விலை வேறு 4 ரூபாய் (இரு தடவையாய்) குறைந்து இருக்கிறது. கேட்டால் டிராபிக் இருக்கும், திரும்பி வர ஆள் இருக்காது என்று ஆயிரம் காரணங்கள் கூறுகிறார்கள். பேரம் பேசி 100 ரூபாய்க்கோ, 120 ரூபாய்க்கோ ஒவ்வொரு முறையும் செல்கிறோம்.

சென்னையில் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்? மும்பையில், புனேயில் இப்படி இல்லையே, நியாயமாய் மீட்டர் போடுகிறார்களே. இவர்களை என்ன செய்தால் திருத்தலாம், யோசனை சொல்லுங்களேன்?

Friday, April 10, 2009

யாவரும் நலம் - திரைப்பார்வை

சத்யம் தியேட்டரில், நாங்களும் படத்தை பார்த்து விட்டோம்.

+
நல்ல, இயல்பான திரைக்கதை
பாசாங்கில்லாத, இயல்பான நடிப்பு
வித்தியாசமான கதை
திறமையான ஒலி, ஒளிப்பதிவு

-
ஏற்கனவே பலரும் கூறிய இரு சிறு தவறுகள்:
1. ஒரு பாட்டில், பீச்சில் மாதவன் குடும்பத்தினர் விளையாடும் போது வரும் காட்சியில் அருகில் உள்ள சாட் கடையில், ஹிந்தியில் பெயர் பலகை, மும்பையில் வசித்த எனக்கு ஜூஹூ பீச் என்று அப்பட்டமாக தெரிகிறது
2. மருத்துவமனையில், மாதவன் ஹிந்து பேப்பரை வாங்கி டிவி நிகழ்ச்சி நிரலை பார்க்கும் போது தமிழில் தெரியும் நிகழ்ச்சி நிரல்

வேறொன்றும் தோன்றவில்லை, வித்தியாசமான, இயல்பான திகில் படம், நன்றாக எடுத்திருக்கிறார்கள்!

Wednesday, April 01, 2009

எனது நூறாவது இடுகை: தேசிகன்

வணக்கம் நண்பர்களே! இது, எனது நூறாவது இடுகை. வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்றரை வருடங்களுக்கு பிறகு, நூறாவது இடுகையை தற்போதுதான் எழுதியிருக்கிறேன். என்னுடைய சோம்பேறித் தனம்தான் இவ்வுளவு தாமதத்திற்கு காரணம். இவ்வுளவு தூரம் நான் தொடர்ந்து எழுதி வருவதே அதிசயம்தான். என்னுடைய ஒவ்வொரு இடுகைக்கும் வரும் ஒன்றிரண்டு பின்னூட்டங்களே, என்னை இன்னமும் தொடர்ந்து எழுத தூண்டுகின்றன என நினைக்கிறேன்.

2005 ஜூனில் வேலை குறைவாயிருந்த ஒரு அலுவலக மதியத்தில் பொழுது போகாமல் இணையத்தில் ‘Writer Sujatha Novels’ என்று தேடிய பொழுது வந்த ஒரு லிங்க் என்னை தேசிகனின் வலைத்தளத்திற்கு அழைத்துச் சென்றது. அவருடைய சில இடுகைகளை படித்தேன், அப்படியே அங்கிருந்து தமிழ்மணம் சென்று நிறைய இடுகைகளை படிக்க ஆரம்பித்தேன். நாமும் எழுதலாமே என்று ஆர்வம் வந்தது. தேசிகனை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, எப்படி எழுதுவது என்று கேட்டு, ஒரு வழியாக 2005-ஆகஸ்டில் ஒரு வலைப்பதிவினை ஆரம்பித்தேன்.

எனது முதல் இடுகை - நண்பர்களுக்காக ஒரு பதிவு..

முதல் பின்னூட்டத்தினை, தேசிகன் அளித்தார் “சண்டை போடாமல் நிறைய எழுதுங்கள்”.

இன்று வரையிலும் இதை பின்பற்றி வருகிறேன். இதுவரையிலும் யாரிடமும் சண்டை போட்டதில்லை, எனது கருத்துகளை நாகரீகமாகவும், பிறர் மனம் புண்படாதவாறும்தான் இடுகையோ, பின்னூட்டமோ எழுதி வருகிறேன்.

வலைப்பதிவு ஆரம்பித்த போது ரொம்ப மஜாவாக இருந்தது. பெரிய எழுத்தாளராகி விட்டோம் என்று ஒரே மகிழ்ச்சி. பார்க்கும் நபரிடமெல்லாம் ப்ளாக் அட்ரஸைக் கொடுத்து, அவசியம் படித்து பின்னூட்டம் போடுங்கள் என்றேன். என்னைக் கண்டாலே அலறி அடித்து ஓட ஆரம்பித்தனர் என் நண்பர்கள் :-)

எனது முதல் இடுகைக்கு, தேசிகனைத் தவிர பாஸ்டன் பாலாவும், டோண்டுவும் பின்னூட்டினார்கள். நன்றி, வலைப்பதிவு முன்னோடிகளே!

ஆரம்பத்தில் சோம்பேறி பையன் என்ற பெயரில் எழுதினேன், பின் திருமணத்திற்கு பெண் பார்க்க ஆரம்பித்தவுடன் பெயரை மாற்றிக் கொண்டேன் :-)

நிறைய வரவேற்பினை பெற்ற, எனது சில இடுகைகள்

நம்ம ஊர் திருச்சி
தூக்கம் தொலைத்த இரவுகளில் எழுதிய கவிதைகள்
தயாநிதி மாறன் - அன்றும் & இன்றும் - கார்ட்டூன்
மின் அஞ்சல் ரகசியங்கள்
அம்பியும், அன்னியனும்... Version 2.0
கருப்பு எம்.ஜி.ஆர் அழைக்கிறார்
உள்ளாட்சித் தேர்தல் 2006 - கார்ட்டூன்
சென்னையின் ப்ளஸ்கள்(+)
என் மனைவிக்காக, ஓர் கவிதை

வலைப்பதிவில் நான் சாதித்தது என்ன?

பெரிதாக ஒன்றுமில்லை. என் மனதுக்கு எழுத தோன்றியவற்றை எழுதினேன். கவிதை, கதை, சினிமா விமர்சனம், கார்ட்டூன், வாழ்க்கை அனுபவங்கள் என கலந்து கட்டி அடித்தேன். 2006 செப்டம்பரில் தேன்கூடு நடத்திய போட்டியில் கலந்து கொண்ட 80 இடுகைகளை படித்து விமர்சனம் செய்ததைத்தான் சாதனையாக கருதுகிறேன். வேலைப்பளுவிற்கு நடுவில் ஒரு 25 நாட்களில் 80 இடுகைகளை படித்து, விமர்சனம் எழுதி மதிப்பெண் அளிப்பது சுலபமானதல்ல என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என கருதுகிறேன்.

வலைப்பதிவின் ப்ளஸ்கள் (என நான் கருதுவது)

நம் எழுத்தை அச்சில் பார்க்கும் அல்ப சந்தோஷம்
நாம் நினைத்ததை எழுதி, ஆரோக்கியமாக விவாதிக்க முடிவது
பத்திரிக்கைகளில் படிக்க முடியாத கருத்துக்கள், விவாதங்களை படிக்க முடிவது

வலைப்பதிவின் மைனஸ்கள் (என நான் கருதுவது)

சில சமயங்களில், நாம் எழுதிய கருத்தை எதிர்ப்பதாய் நினைத்துக் கொண்டு, நம்மை எதிர்ப்பது
மொக்கை பதிவாயிருந்தாலும், நண்பர் எழுதியிருந்தால் வரிந்து வரிந்து பின்னூட்டமிடுவது
இடுகைகளிலும் மூலம் சாதி, மத, இன துவேஷம்
ஆபாச, தனிநபர் துவேஷ பின்னூட்டங்கள்

புதியவர்களுக்கு அறிவுரை
சண்டை போடாமல் நிறைய எழுதுங்கள் :-)

சமர்ப்பணம்
எனக்கு வலைப்பதிவு உலகத்தை அறிமுகப்படுத்தி, பதிய கற்றுத்தந்து, உற்சாகப்படுத்திய நண்பர் தேசிகனுக்கு, இந்த நூறாவது பதிவை சமர்ப்பிக்கிறேன்.

நன்றிகள்

வலைப்பதிவு நண்பர்களே, நீங்கள் இதுவரை எனக்கு அளித்து வந்த ஆதரவிற்காகவும், இனிமேல் அளிக்கப்போகும் ஆதரவிற்கும் நன்றிகள் பலப்பல, இதுவரை வலைப்பதிவில் நான் பயணித்ததையும், இனிமேல் எப்படி பயணிக்க வேண்டும் என்பதையும், உங்கள் வலைப்பதிவு அனுபவங்களையும், உங்களது வேறு கருத்துகளையும், தயவுசெய்து பின்னூட்டமிடுங்கள். இவை என்னை உற்சாகப் படுத்தி, தொடர்ந்து எழுதச் செய்யும்.

நன்றி, மீண்டும் வாருங்கள்!!

இந்தியா - நியூசி டெஸ்ட் கிரிக்கெட் - 3வது போட்டி முன்னோட்டம்

இரண்டாவது போட்டியில் டிரா செய்தது பெரிய விஷயம். என்னதான் flat பிட்ச்சாக இருந்தாலும் இரண்டேகால் நாட்கள் விளையாடுவது என்பது சாதாரணமானதல்ல.

கம்பீர், லஷ்மணன், டிராவிட், சச்சின், யுவராஜ் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே. மூன்றாவது போட்டிக்கு தோனி அணிக்கு திரும்பி விடுவார் என எதிர்பார்க்கலாம்.

தினேஷ் கார்த்திக் கிடைத்த ஒரு வாய்ப்பையும் தவர விட்டு விட்டது வருத்தம்தான். இரண்டாவது போட்டியில் சேவக்கின் தலைமை சிலாகிக்கும்படி இல்லை. யுவராஜ் சிங் இரண்டு கேட்ச்சுகளை மிஸ் செய்யாமல் இருந்தால், போட்டியின் முடிவு வேறு மாதிரியும் இருந்திருக்க வாய்ப்புண்டு.

மூன்றாவது போட்டி நடக்கப்போகும் வெலிங்டன் பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமானது, எனவே இந்தியா தொடரை வெல்ல அருமையான வாய்ப்பு காத்துக் கொண்டுள்ளது.

சேவக் எல்லா பந்துகளை விளாச நினைப்பதை தவிர்க்கலாம். முதல் டெஸ்ட் வென்ற அதே அணியே மீண்டும் களமிறங்கலாம். இந்தியா பீல்டிங்கைல் அதிக கவனம் செலுத்த வேண்டும். பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச்சுகளில், பீல்டிங்கின் சிறு தவறுகள் கூட வெற்றிவாய்ப்பை தடுத்து விடும்.

பந்து வீச்சில் ஷாகிர், இஷாந்த், முனாப், ஹர்பஜன் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம். தோனியின் தலைமை நிச்சயம் அணியை ஊக்குவிக்கும். யுவராஜ் பார்முக்கு திரும்பியுள்ளது நன்மையே.

மூன்றாவது போட்டியை வென்று, தொடரையும் வென்று சரித்திரம் படைக்க இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!!