Friday, July 24, 2009

சில நிகழ்வுகள் & சில எண்ணங்கள்

1. ஆஷஸ் சீரிஸ்
முதல் போட்டியை தட்டுத்தடுமாறி இங்கிலாந்து டிரா செய்த போது, இரண்டாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து வெல்லும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் ப்ளிண்ட்டாப்பின் 5 விக்கெட்டுகள், ஸ்வானின் 4 விக்கெட்டுகள், ஸ்டாராசின் முதல் இன்னிங்ஸ் 161 போன்றவை இங்கிலாந்தின் ஹைலைட்ஸ். மொத்தத்தில் 2005 போல் இன்னொரு விறுவிறுப்பான ஆஷஸ் தொடர் நமக்காக காத்திருக்கிறது. இங்கிலாந்து இதை வென்று, ஓய்வு பெறும் பிளிண்ட்டாப்புக்கு பரிசாய் தருமா?

2. அச்சமுண்டு & நாடோடிகள்
இரண்டுமே சமீபத்தில் வந்து வரவேற்பை பெற்றுள்ள நல்ல படங்கள். இன்னும் நான் பார்க்க வில்லை. இம்மாதிரியான வித்தியாசமான, நல்ல படங்களை மக்கள் ஆதரிப்பது ஆரோக்கியமான நிகழ்வு. இந்த வார இறுதியில் பார்க்கலாமென்று சத்யம், ஐநாக்ஸ் இணைய தளத்தில் பார்த்தால் டிக்கெட் கிடைக்க வில்லை. இரு படங்களுமே இரு தியேட்டர்களிலும் ஒரு நாளைக்கு ஒரு காட்சி மட்டுமே இருக்கிறது. அது ஏனென்று புரியவில்லை. இன்னும் கூடுதலாக வார இறுதிகளிலாவது காட்சிகள் வைக்கலாமே?

3. முதல்வரின் வீடு மருத்துவமனையாகிறது
இன்றுதான் செய்தித்தாளில் பார்த்தேன். முதல்வர் மற்றும் அவரது மனைவியின் வாழ்நாளிற்கு பிறகு, அவரது வீடு ஏழைகளுக்கு இலவசமாய் மருத்துவ வசதி அளிக்கும் மருத்துவமனையாய் மாறுகிறது. இதற்கு முதல்வர் அவரது குடும்பத்தினரிடமும் ஒப்புதல் பெற்று விட்டாராம். மிக அருமையான காரியத்தை செய்திருக்கும் முதல்வருக்கு, மனமார்ந்த பாராட்டுகள், இது ஒரு நல்ல தொடக்கமாய் இருக்கட்டும்.

4. பீகாரில் பெண் துன்புறுத்தல்
இன்று தொலைக்காட்சியில் பார்த்தேன். என்ன விஷயமென்று தெளிவாய் தெரியவில்லை. ஒரு பெண்ணை நிறைய ஆண்கள் சேர்ந்து கொண்டு, மார்க்கெட் போன்ற ஒரு பகுதியில் துன்புறுத்துகிறார்கள். ஒருவர் கையை இழுக்கிறார், ஒருவர் அடிக்கிறார். டிராபிக் போலீஸ்காரர் வேறு வேடிக்கை பார்க்கிறார். அந்த பெண் தவறு செய்திருந்தாலும், காவல்துறையில் புகார் செய்யலாமே தவிர, நாமே சட்டத்தை கையில் எடுக்கலாமா? பெண் என்று இல்லை, ஆணாக இருந்தாலும் நாம் கும்பலாய் சேர்ந்து கொண்டு துன்புறுத்த சட்டத்தில் இடமில்லையை, மனிதாபிமானத்திலும் இடமில்லையே!!

Thursday, July 02, 2009

பசங்க - யதார்த்தமான படமா?

படம் வந்து ஒரு மாதமாகி விட்டதால், உதயம் தியேட்டரில் அதிக கூட்டமில்லை. பின் மூன்று வரிசைகள் மட்டுமே நிறைந்திருந்தது. இப்படி கொஞ்ச நாள் கழித்துச் செல்வதில் சில சவுகரியங்கள் உள்ளன. ப்ளாக்கில் டிக்கெட் வாங்கத் தேவையில்லை. தியேட்டர் டிக்கெட் க்யூவில் நெரிசலில் நின்று அடிபடத் தேவையில்லை. படம் பார்க்கும் போது விசிலடிச்சான் குஞ்சுகளில் தொல்லை இருக்காது. கூட்டத்தால், தியேட்டர் ஏசி எபெக்ட் குறைந்து காணப் படாது.

படத்தை பற்றி நிறைய விமர்சனங்களை படித்திருந்ததால் ஓரளவுக்கு கதையின் போக்கு முன்பே தெரியும், அதனால் சில விஷயங்களை முழுமையாய் ரசிக்க முடிவதில்லை.

படம் முழுவதும் சற்றே மிகைப் படுத்தப் பட்ட யதார்த்தம் தெரிகிறது (உதாரணமாய் வீட்டின் சொந்தக்காரர் பார்க்கும் போது, பையன்கள் பூந்தொட்டிகள் வைத்து அழகு படுத்துவது, பட ஆரம்பத்தில் பையன்களை பற்றி கிராமத்து பெரிசுகள் போலிஸ் ஸ்டேசனில் கம்ப்ளெயிண்ட் செய்வது, சடாரென்று மனம்மாறி அன்புகரசுவின் அப்பா, அம்மா சமாதானாமாய் செல்வது)

இருந்தாலும் படத்தை ரசிக்க முடிகிறது. அன்புக்கரசு ஐஏஸ் என்று சிறுவன் சொல்வதும், போதும் பொண்ணு, பக்கடா போன்ற பெயர்களும், அவற்றிற்கான பெயர்க் காரணங்களும் ரசிக்க வைக்கின்றன.

கதையின் ஊடே வரும் காதல் நன்றாக இருக்கிறது. இருந்தாலும், இருவருக்குமிடையே காதல் வருவதற்கான காரணங்கள் பலமானதாயில்லை. அடுத்தடுத்து வரும் சம்பங்கள் படத்தை அழகாய் நகர்த்திச் செல்கின்றன.

கிளைமேக்ஸ் படு சினிமாத்தனம், எப்படி வில்லனாய் வரும் சிறுவன் திடிரென்று மனம் திருந்துகிறான்?

வெளியே வரும்போது, நல்லதொரு படத்தை பார்த்த திருப்தி இருக்கிறது.