Wednesday, August 22, 2012

ரஜினி இன்னும் எத்தனை நாளைக்கு ஹீரோவாக நடிக்கப் போகிறார்?
முன் குறிப்பு: ரஜினி ஹீரோவாய் நடிப்பதைப் பற்றிய எனது கருத்துக்கள், பதிவின் பிற்பகுதியில் உள்ளன.


ஈமு கோழிகளும், அரசாங்கமும்

தலைமறைவாயிருக்கும் பண்ணை உரிமையாளர்களால் கைவிடப்பட்ட ஈமு கோழிகளை அரசாங்கமே வளர்த்து, நன்கு வளர்ந்த பின் விற்று அதில் வரும் வருவாயில் வளர்த்ததற்கான செலவை ஈடு செய்து கொண்டு, அப் பண்ணையில் முதலீடு செய்தவர்களுக்கும் திருப்பித் தருமாம்.

இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று புரியவில்லை. வளர்ந்த ஈமு கோழிகளை யார் வாங்குவர்? கறிக்காக வாங்க அதிகம் பேர் விரும்ப மாட்டார்கள். எத்தனை பேருக்கு ஈமு கறி பிடிக்கிறது? எத்தனை ஹோட்டல்களில் ஈமு கறி விற்கின்றனர்?

ஏற்கனவே அரசாங்கத்திற்கு இருக்கும் வேலைகள் போதாதென்று இதை வளர்ப்பதற்கு ஒரு துறை, வேலையாட்கள், அதிகாரிகள், தீவணம் வாங்குவதில் ஊழல் என்று இன்னும் நிறைய தலைவலிகள்தான் கிளம்பும்.

எனவே இப்படியெல்லாம் ஆகாயத்தில் கோட்டை கட்டாமல், இருக்கிற ஈமு கோழிகளையெல்லாம் இந்தியா முழுக்க இருக்கும் மிருகக் காட்சி சாலைகளுக்கு அனுப்பி விடலாம்!!சிவாஜி 3D


சிவாஜி படத்தை 3-டியில் மறு உருவாக்கம் செய்திருப்பதாக செய்திகள் படித்தேன். நல்லது. கோச்சடையான் கூட 3-டி படம்தான் என கேள்விப் பட்டேன். இவ்வாறான 3-டி படங்களை தமிழ்நாட்டில் எத்தனை தியேட்டர்களில் பார்க்க இயலும்? என் கணிப்பில் சென்னை சத்யம், ஐமேக்ஸ் போன்று ஒரு 15 - 20 தியேட்டர்கள்தான் 3-டி வசதியுடன் இருக்கும். இவ்வுளவு செலவு செய்து 20 தியேட்டர்களில் மட்டும் வெளியிட்டால் தாங்குமா? அல்லது 3-டியுடன் 2-Dயும் எடுத்து வெளியிடுவார்களா? ஒரு நான்கைந்து வருடங்களில் எல்லா தியேட்டர்களும் 3-டியாக மாறிவிடும் என நினைக்கிறேன். அப்படி வந்தால் லத்திகா-பார்ட் 2 3-டியில் பார்க்க ஆவலாய் இருக்கிறென் :)
ரஜினி இன்னும் எத்தனை நாளைக்கு ஹீரோவாக நடிக்கப் போகிறார்?

ரஜினி - ஹீரோ? அனேகமாக டெண்டுல்கர் எப்போது ஓய்வு பெறப் போகிறார் என்பதற்கு சமமான இன்னொரு விடைதெரியா கேள்வி இது. இன்னும் எத்தனை படங்கள் காதலியுடன் மரத்தை சுற்றிவந்து பாடப் போகிறார்? 

ஹிந்தியில் அமிதாப் பச்சனை எடுத்துக் கொள்ளுங்களேன், எவ்வுளவு வித்தியாசமான, குணசித்திர வேடங்களில் நடித்து கலக்குகிறார் (பா, சீனி கம், பிளாக், சர்க்கார்)? இம்மாதிரி ரஜினியும் நடிக்கலாமே? கதை, திரைக்கதை நன்றாக இருந்தால் நிச்சயம் மக்கள் ரசிப்பார்கள். ஏன் ஹீரோவாகவே நடியுங்களேன், ஆனால் காதலியுடன் பூங்காவில் பாட்டுப் பாடி, முத்தம் வாங்க வேண்டாம் (எந்திரன்), ரசிக்க முடிய வில்லை. 

வில்லனாக நடியுங்களேன், நிச்சயம் அசத்துவீர்கள். சந்திரமுகியில் லக லக லகாவும், எந்திரனில் சிட்டியும்தான் (வில்லன்) எங்களுக்கு பிடித்திருந்தது. சும்மா கமர்ஷியல் காரணங்களை கூறி ஜல்லியடிக்க வேண்டாம், அதை தாண்டும் உயரம் உங்களுக்கு உள்ளது. முன்வருவாரா ரஜினி? அதை ஏற்றுக் கொள்வார்களா விசிலடிச்சான் குஞ்சுகள்?


விவசாயம் இனி மெல்ல சாகும்?

ஊரில் உள்ள உறவினர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன், இன்னமும் மேட்டூர் அணை திறக்காதது பற்றியும், ஆற்றில் தண்ணீர் இல்லாததால் விவசாயம் (நெல் நடவு) செய்ய முடியாததை கூறி வருத்தப் பட்டார். ஜூன் மாதமே திறந்திருக்க வேண்டியது, 3 மாதங்களாகியும்   தண்ணீர் திறக்காதது வருத்தமானதே, வருண பகவான்தான் கருணை காட்ட வேண்டும். ஏற்கனவே இருக்கும் விளைநிலங்கள் எல்லாம் ப்ளாட்கள் ஆகும் போது, மிச்சமிருக்கும் விவசாயிகளை இயற்கை ரொம்பவே சோதிக்கிறது, நன்கு மழை பெய்து, அணை நிரம்பி, தண்ணீர் திறந்துவிட இறைவனை பிரார்திப்பதைத் தவிர வேறு என்ன செய்யலாம்?

15 comments:

ராஜ் said...

பாஸ்,
ரஜினி ரொம்பவே நல்ல நடிகர், அமிதாப்பை விட :) . ஆனா ரஜினியால இந்த காலகட்டத்துல கண்டிப்பா அமிதாப் ஹிந்தியில பண்ணுற கதாபாத்திரங்கள் மாதிரி பண்ணவே முடியாது. ஏன்னா அவரோட தீவிர ரசிகர்களால் அவர் அமிதாப் மாதிரி வயசான கேரக்டர்ல ஏதுக்கவே மாட்டாங்க. அதுவும் இல்லாம ரஜினி பொன் முட்டை இடுற வாத்து. அவரை சுத்தி இருபவங்க அவ்வளவு சீக்கிரமா அவரை அறுத்திட மாட்டாங்க.. :)
சிவாஜி-3D கூட அந்த வாத்தை வச்சு காசு பார்க்கிற வேலை தான்.

வவ்வால் said...

பழுவூர் கார்த்தி,

சூப்பர் ஸ்டார் ஓடுற குதிரை மட்டும் இல்லை ஜெயிக்கிற குதிரையாகவும் இருப்பதால் அனைவரும் பணம் கட்ட தயாராக இருக்கிறார்கள், அதனை அவரின் வாரிசுகளும் பயன்ப்படுத்திக்கொள்ள நினைப்பதே ராணா, கோச்சடையான் என உருமாறியிருக்கிறது. சூப்பர் ஸ்டாரும் எத்தனையோ பேருக்கு வியாபாரம் செய்துக்கொடுத்துவிட்டோம் நம் வாரிசுகளுக்கும் செய்ததாக்க இருக்கட்டும் என செய்துக்கொடுக்கிறார்.

குதிரை வேகமாக ஓடும் வரை ஓடட்டும் என அதனை யாரும் நிறுத்த முயலமாட்டார்கள், எப்போது ஓட்டம் குறையுதோ அப்போது ஓய்வு கொடுக்கப்படும். எனவே சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் பணம் கொட்டும் வரைக்கும் தொடரும்,பின்னரே அவர் கதாநாயகனாக நடிப்பதை விட்டு கேரக்டர் ரோல் செய்யலாம் அல்லது அவருக்கு பிடித்த ஆன்மீகம் போகலாம். எனது அனுமானம் அவர் ஆன்மீகத்திற்கு போய்விடுவார் என்றே நினைக்கிறேன்,அமிதாப்பச்சன் போல இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட மாட்டார்.

கோச்சடையான் மற்றும் சிவாஜி3டி யாக மாற்றுவது குறித்து எனது முந்தையப்பதிவுகளையும் பாருங்கள்.

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சினிமா ரகசியம்-2:2D to 3D conversion.

# வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: கோச்சடையானில் ரஜினி நடிப்பது நிஜமா?
---------

விவசாயத்தின் நிலை நாளுக்கு நாள் நலிவடைந்தே வருகிறது,நீர் கிடைத்து விவசாயம் செய்தாலும் சரியான விலை இல்லை, இடுப்பொருட்கள் விலை ஏற்றம், விவசாய தொழிலாளர் சம்பள உயர்வு, என பல சிக்கல்கள்.

அவ்வப்போது பருவ மழை பொய்த்து இன்னும் சிக்கலாக்குகிறது. ஒரு சிறிய கிண்ணம் அளவு தயிர் சாதம் 50 ரூ என்றாலும் உணவகத்தில் வாங்க தயாராக மக்கள் இருக்கிறார்கள், ஆனால் விவசாயியின் விளைச்சலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என கவலைப்படுவதில்லை, குறைந்த பட்ச ஆதரவு விலையை விவசாயிக்கு ஏற்றிக்கொடுத்தால் விலைவாசி உயரும் என்பார்கள், ஆனால் ஒரு கிலோ அர்சியை வியாபாரி 45-50 ரூக்கு எப்போதும் விற்றுவருவதை உணரமாட்டார்கள். விவசாயிடம் குறைவான விலைக்கு வாங்கி அதிக விலைக்கு வியாபாரி விற்று லாபம் சம்பாதிக்கவே தற்போதைய அரசின் ஆதரவு விலை உதவுகிறது.

எனது விவசாயம் சார்ந்த பதிவுகளில் இதனை விரிவாக சொல்லி இருக்கிறேன்,நேரம் இருப்பின் பாருங்கள்.

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பசி!

பழூர் கார்த்தி said...

ராஜ், உங்க கருத்துக்கு நன்றி! ரஜினி பொன்முட்டையிடும் வாத்து என்பது உண்மைதான், ஆனாலும் கொஞ்சம் வித்தியாசமாக நடித்து ரிஸ்க் எடுக்கலாம் (கதை, திரைக்கதை சரியாக அமைந்தால் பெரும்பானமை ரசிகர்கள்/மக்கள் விரும்புவர் என நினைக்கிறேன்). பார்க்கலாம்!!

பழூர் கார்த்தி said...

வவ்வால், உங்க கருத்துக்கு நன்றி!

// எனது அனுமானம் அவர் ஆன்மீகத்திற்கு போய்விடுவார் என்றே நினைக்கிறேன்,அமிதாப்பச்சன் போல இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட மாட்டார். //

ஓ, அப்படியும் நடக்கலாம். ஒருவேளை இரண்டாம் இன்னிங்ஸ் எடுத்தால், மக்களுக்கு நல்ல விருந்து இருக்கும். முள்ளும் மலரும் போன்று பல்சுவை நடிப்பால் மிளிர்வார் என்பதில் சந்தேகமில்லை..


உங்களது பதிவுகளை நிச்சயம் படிக்கிறேன், நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் உள்ளது... வேதனை அளிக்கும் தகவல்...

ரஜினி M.G.R. மாதிரி...

கமல் சிவாஜி மாதிரி... (வித்தியாசமாக நடித்து ரிஸ்க் எடுக்க)

பழூர் கார்த்தி said...

உங்க கருத்துக்கு நன்றி தனபாலன்!

//
ரஜினி M.G.R. மாதிரி...
கமல் சிவாஜி மாதிரி... (வித்தியாசமாக நடித்து ரிஸ்க் எடுக்க)//

உண்மைதாங்க!

ஹாரி பாட்டர் said...

எல்லாருடைய எதிர்பார்ப்பும் அது தான்.. ஆனால் நீங்க ஏன் அமிதாப் ஓடு ஒப்பிடிங்க என்று புரியல.. ஏன்னா அமிதாப் வேற திரையுலகம் ரஜினி வேற திரையுலகம்.. அமிதாப் வசூலில் முதல் நாயகனாக இருக்கும் போது இடைவெளி விடவில்லையே நண்பா.. ஆய்ந்து ஓய்ந்த பிறகு தான் இந்த பகுதிக்கு திரும்பினார்.. (ஆனால் இன்றும் அமிதாப் படம் என்றால் தனி மார்கெட் இருக்கிறது).. வவ்வால் , ராஜ் சொன்னது போல அப்பிடி மாறி நடிக்கிற படங்கள் ரஜினியை குப்புற தள்ளும் என்பதும் தெரியும்.. பிறகு முயற்சிக்க மாட்டார்கள்.. எனது விருப்பமும் THE SHAWSHANK REDEMPTION போல ஒரு படத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்பது தான்

//வில்லனாக நடியுங்களேன், நிச்சயம் அசத்துவீர்கள். சந்திரமுகியில் லக லக லகாவும், எந்திரனில் சிட்டியும்தான் (வில்லன்) எங்களுக்கு பிடித்திருந்தது.//

அப்ப கடைசி மூன்றில் ரெண்டு படம் ஓகே

//ஆனால் காதலியுடன் பூங்காவில் பாட்டுப் பாடி, முத்தம் வாங்க வேண்டாம் (எந்திரன்), ரசிக்க முடிய வில்லை. //
விசிலடிக்கும் குஞ்சுகள் கூட இதை விட மேலிருப்பதை தான் ரசித்தார்கள் என்று நினைக்கிறேன்..

ஹாரி பாட்டர் said...

உங்க மற்ற பதிவுகள் உண்மையிலே சூபரா இருக்கு நேரம் கிடைக்கும் போது மிகுதியையும் வாசித்து முடிக்கிறேன் அண்ணா

T.N.MURALIDHARAN said...

விவசாயம் எவ்வளவு முக்கியம் என்பதை மக்களை உணர வைக்கவேண்டும். விவசாயி பட்டினியோடு இருப்பது நாட்டுக்கு அவமானம்.இயற்கையும் சதி செய்வது துரதிர்ஷ்டம்தான்.

பதிவு நல்லா இருக்கு கார்த்தி.

பழூர் கார்த்தி said...

ஹாரிபாட்டர், உங்க கருத்திற்கு நன்றி!

// எனது விருப்பமும் THE SHAWSHANK REDEMPTION போல ஒரு படத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்பது தான் //

ஆஹா.. நன்றாக இருக்கும்.. அதில் ஹீரோவுக்கு நண்பராக வருவாரே, அந்த கேரக்டருக்கு யார் நடித்தால் நன்றாக இருக்கும் - சத்யராஜ்? சரத்பாபு?

//உங்க மற்ற பதிவுகள் உண்மையிலே சூபரா இருக்கு நேரம் கிடைக்கும் போது மிகுதியையும் வாசித்து முடிக்கிறேன் அண்ணா//

நன்றி!பழூர் கார்த்தி said...

T.N.MURALIDHARAN, உங்க கருத்திற்கு நன்றி!

எனது தந்தை, பாட்டணார் எல்லாரும் விவசாயம் செய்தவர்கள்தான்.. விவசாயத்தின் நிச்சயமற்ற தன்மை, தந்தையாருக்கு முதுமைத் தளர்ச்சியினால் நிலத்தை விற்றுவிட்டோம்..

Doha Talkies said...

அவரின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது தான் மிகப்பெரிய கேள்வி?
அப்படி அவர் நடித்து அந்தப்படம் flop ஆகி விட்டது என்றால், உடனே ரஜினியின் மாஸ் குறைந்து விட்டதா என்று கேள்வி எழுப்புவார்கள்.
அந்த ரிஸ்க் வேண்டாம் என்று தான் அவர் அந்த வட்டத்தை விட்டு வெளியே வராமல் இருக்கிறார் போல..
பதிவு அருமை நண்பரே.
http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

பழூர் கார்த்தி said...

உங்க கருத்துக்கு நன்றி தோகா டாக்கீஸ்!!

பழனி.கந்தசாமி said...

ஈமு கோழிகளைப்பற்றி என் கருத்து. அரசாங்கத்தைப் பற்றி நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. மக்ளுக்கு என்ன சொன்னால் இனிப்பாக இருக்கும் என்று தெரிந்து அதைச் சொல்பவர்கள்தான் ஆட்சிக்கு வரமுடியும். அந்தக் காலத்தில் தி.மு.க. காரர்கள் "காட்டவேண்டியதைக் காட்டி பெற வேண்டியதைப் பெறுவோம்" என்று பிரசாரம் செய்தது ஞாபகம் இருக்கா?

பழூர் கார்த்தி said...

பழனி. கந்தசாமி ஐயா, உங்க கருத்துக்கு நன்றி!