Friday, February 24, 2006

சங்கிலித் தொடர் பதிவு - ஜோசப் & டோண்டுவிடமிருந்து

மூன்று நாட்களாய் அலுவலகத்தில் நிறைய வேலை இருந்ததால் தமிழ்மணம் பக்கம் வரமுடியவில்லை. திடீரென்று நேற்று மாலை தமிழ்மணத்தை திறந்த போது, சங்கிலித்தொடர் பதிவுகள் நிறைய தென்பட்டன. தெரிந்த விளையாட்டுதான், புது வடிவத்தில். சங்கிலித்தொடரில் என்னை அன்பால் இழுத்த ஜோசப் மற்றும் டோண்டுவிற்கு நன்றி !

பிடித்த நான்கு விஷயங்கள்

1. சினிமா பார்ப்பது / விமர்சிப்பது : சினிமா பெரும்பாலானோருக்கு பிடித்த பொழுதுபோக்குதான். சினிமா பார்ப்பதும், சினிமா பார்க்க வருபவர்களை பார்ப்பதும் எனக்கு இன்னமும் பிடித்தமான விஷயம்தான். ஆனால் தியேட்டரில்தான் சினிமா பார்க்க பிடிக்கும்.

2. கிரிக்கெட் பார்ப்பது / விளையாடுவது / விமர்சிப்பது : ஊரிலிருந்த வரை கிராமத்து கிரிக்கெட்டான கிட்டிப்புல்லின் ரசிகன் நான். திருச்சிக்கு படிக்க வந்தவுடன், கிரிக்கெட்டுக்கு மாறிவிட்டேன். இப்போதும் நமது கிரிக்கெட் பதிவுகளை 'கிரிக்கெட் கூட்டுப்பதிவில்' காணலாம்.

3. பழைய பாடல்கள் கேட்பது : பொதுவாக பாடல்கள் கேட்பது பிடிக்கும். பழைய பாடல்கள் இன்னும் ரொம்பவே பிடிக்கும். ஜெயா டிவியில் இரவு 11 மணியிலிருந்து 12 மணிவரை ஒலிபரப்பும் தேன்கிண்ணம் நிகழ்ச்சியின் பரம ரசிகன். நேற்று கூட 'கங்கைக் கரை தோட்டம்...' பாடலில் என்னையே மறந்தேன்.

4. தமிழ் வலைப்பதிவுகள் படிப்பது / படைப்பது : ஆறு மாதமாகத்தான் தமிழ்மணம் பழக்கம். தேசிகன் அறிமுகப் படுத்தினார். அவருதவியுடன் வலைப்பதிவையும் ஆரம்பித்தேன். முன்பெல்லாம் ஆனந்த விகடன், குமுதம், தினமலர், தினமணி, வெப் உலகம், ரீடிஃப் என்று எல்லா தமிழ் வலைத்தளங்களுக்கும் செல்வேன். இப்போதெல்லாம் தமிழ்மணத்திற்கே நேரம் போதவில்லை. டோண்டு சொல்வது போல், தமிழ்மணத்தைப் பார்க்காவிட்டால், கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடுகிறது. தமிழ்மணத்தை உருவாக்கி, நிர்வாகித்து, பங்களித்து வரும் நண்பர்கள், வலைப்பதிவர்கள் அனைவருக்கும் நன்றி !

பிடித்த நான்கு படங்கள்

1. அன்பே சிவம்
2. தவமாய் தவமிருந்து
3. குருதிப்புனல்
4. காக்க காக்க

பிடித்த நான்கு பாடல்கள்

1. சென்னை செந்தமிழ் (எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி)
2. நானொரு சிந்து (சிந்து பைரவி)
3. சின்ன சின்ன ஆசை (ரோஜா)
4. பச்சைக்கிளிகள் தோளோடு (இந்தியன்)

பிடித்த நான்கு இடங்கள்

1. டி. பழூர் (நான் பிறந்து வளர்ந்த கிராமம்)
2. திருச்சி (பள்ளி, கல்லூரி படிப்பு)
3. ஹைதராபாத் (முன்பு வேலை பார்த்த இடம் - 5 வருடங்கள்)
4. மும்பை (தற்போது வேலை பார்க்கும், வசிக்கும் இடம்)

பிடித்த வலைப்பதிவாளர்கள்

நிறைய பேரை பிடிக்குமென்பதால் வகைப்படுத்தி எழுதுகிறேன். இன்னும் நிறைய வலைப்பதிவுகள் ஞாபகத்தில் இல்லாததால், எழுத முடியவில்லை. நண்பர்கள், பொறுத்தருளுக.

அனுபவங்கள் / மீள் நினைவுகள் / சமூகம்

1. டோண்டு
2. டி.பி.ஆர்.ஜோசப்
3. தருமி
4. 'தாட்ஸ் இன் தமிழ்' பத்ரி

நகைச்சுவை / நையாண்டி

1. டுபுக்கு
2. இட்லி வடை
3. முத்து (தமிழினி)
4. பினாத்தல் சுரேஷ்

நிகழ்வுகள் / கதைகள் / பயண அனுபவங்கள்

1. தேசிகன்
2. புனே செப்புப் பட்டயம் மோகன்தாஸ்
3. கடற்புறத்தான் ஜோ
4. எண்ண கிறுக்கல்கள் செல்வராஜ்

சங்கிலித் தொடரில், நான் அழைக்க விரும்புபவர்கள்

1. தேசிகன்
2. ரஷ்யா இராமநாதன்
3. 'தாட்ஸ் இன் தமிழ்' பத்ரி
4. கோ. கணேஷ்

Thursday, February 16, 2006

கருப்பு எம்.ஜி.ஆர் அழைக்கிறார்

தலைப்பை படித்தவுடன், அரசியலை எதிர்பார்த்து வரும் நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு. இது அரசியல் பற்றிய பதிவல்ல. சாப்பாட்டில் ஊறுகாய் போல், இப்பதிவிலும் அரசியல் உண்டு. பொறுமையாக படியுங்கள் !

தங்கையின் திருமணத்திற்காக 15 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்றிருந்தேன். விடுமுறை நாட்களில் பல சுவையான, மகிழ்ச்சியான சம்பவங்களும், சில கசப்பான அனுபவங்களும் கிடைத்தன. அவற்றிலிருந்து இதோ உங்களுக்காக, சில செய்தித் துளிகள்.

மும்பையிலிருந்து சென்னைக்கு தாதர் விரைவுவண்டியிலும், சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு ராக்போர்ட் விரைவுவண்டியிலும் பதிவு செய்திருந்தேன். தாதர் பயணிகளுக்கான உணவு / திண்பண்டங்கள் வழங்கும் சேவையில் நன்றாக செயல்பட்டது. வண்டியும், கழிவறைகளும் ஓரளவுக்கு சுத்தமாக இருந்தன. ஆனால் ராக்போர்ட் விரைவுவண்டியில் முந்தைய நாளிரவும், மறுநாள் காலையிலும் திண்பண்டங்கள், பானங்கள் எதுவுமே வரவில்லை. காலையில் கும்பகோணம் 7:30 மணிக்கு வந்து சேரும் வரை காபி கூட அருந்த முடிய வில்லை.

கும்பகோணத்தில் ஆங்காங்கே சாலையமைக்கும் / செப்பனிடும் பணிகள் நடந்து வருகின்றன. எங்கள் ஊரில் கூட சிமெண்ட் சாலை அமைக்கப் பட்டுள்ளது. சாலைப் பணியாளர்கள் திரும்ப வந்ததாலா அல்லது தேர்தலுக்காகவா என்று புரியவில்லை.

எங்கள் கிராமத்தில் பள்ளி மாணவர்கள், மாணவிகள் நிறைய பேர் புது மிதிவண்டி வைத்திருந்தனர், அரசாங்கம் கொடுத்தது. சிலர் வெள்ள நிவாரண உதவித்தொகை, வேட்டி, சேலைகள் பெற்றிருந்தனர். இவை அனைத்தும் ஓட்டுகளாக மாறிவிடும் என்றே நினைக்கிறேன்.

சாலைப் பணியாளர்களை திரும்ப அழைத்தது, அரசு ஊழியர்களுக்கு சலுகைகள், கலைத்துறையினருக்கு விருதுகள் என அதிமுக அரசு 7 கட்சி கூட்டணிக்கு தலைவலியை கொடுத்து வருவதை கண்கூடாக பார்க்க முடிந்தது. மதிமுக வேறு மதில்மேல் பூனையாக இருந்து வருவது கருணாநிதிக்கு கவலையளிக்கும் விஷயமே.

நான் ஊரிலிருந்த போது எங்கள் கிராமத்திற்கு விஜயகாந்த் தேர்தல் சுற்றுப் பயணமாக வந்தார். 2000 பேர் கொண்ட கூட்டத்தில் தெளிவாக பேசினார். வேலையில்லா திண்டாட்டத்தை, லஞ்ச ஊழலை ஒழிப்பேன். சுகாதார வசதிகளை மேம்படுத்துவேன். ரேஷன் பொருட்களை வீடு வீடாக வினியோகிப்பேன், பட்டதாரி மாணவர்களுக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்குவேன் என்றெல்லாம் கூறினார். மக்கள் வெங்காய பகோடா தின்று கொண்டே அனைத்தையும் கேட்டு, சில சமயங்களில் கைதட்டி விட்டு, மெட்டி ஒலி பார்க்க வீட்டுக்கு சென்று விட்டனர். அனைவரின்
முகத்திலும் (என்னையும் சேர்த்து) ஒரு சினிமா நட்த்திரத்தை பார்த்த பரவசம் (மட்டுமே) தெரிந்தது.

கொள்ளிடம் ஆற்றில் நிறைய தண்ணீர். ஆனால் திருச்சியில் காவரி ஆறு வறண்டு காணப்படுகிறது. எங்கே போயிற்று அத்தனை நீரும், கடலுக்கா என்று தெரியவில்லை. எங்கள் கிராமத்திலும், சுற்றுப் புறங்களிலும், விவசாயத்தில் ஓரளவுக்கு நல்ல விளைச்சல்.

எங்கள் ஊரில் பி.ஸ்.என்.எல் டவர் போட்டு விட்டதால் பெரும்பாலோர் கையில் செல்போன் காணப்பட்டது. எஸ்.எம்.ஸ், மிஸ்டு கால், டாக் டைம் போன்ற பதங்களை பெரும்பாலோர் தெரிந்தும், தெரியாமலும் உபயோகித்து கொண்டிருந்தனர்.

கும்பகோணத்தில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களை பற்றி விசாரித்தேன். தவமாய் தவமிருந்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. டிஷ்யூம் பரவாயில்லை. ஆதி அவுட் என்ற தகவல்கள் கிடைத்தன. இதில் ஆதியை பற்றி நிறைய கிண்டல் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனக்கு வந்த ஓர் குறுஞ்செய்தி "ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.. ஆதி பார்த்தால் அன்றே சாவு !!!"


ஊரில் இருந்த போது, ஒரு மாலைப்பொழுதில் தமிழ்மணத்தைப் பார்க்கும் ஆவல் எழுந்ததால், ஊரிலிருந்த ஒரே இணையகத்திற்கு (Browsing Center)சென்றேன். இரண்டு கணிப்பொறிகள். ஓர் இளம்பெண், பள்ளி மாணவி ஒருவருக்கு எம்.ஸ் வோர்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். 'ப்ரவுசிங் பண்ணலாமா ??' இது நான். கைலி, சட்டை, ஸ்லிப்பர் செருப்புடன் நின்று கொண்டிருந்தேன். அந்த பெண் நம்பமுடியாமல் 'என்ன ? என்ன வேணும் உங்களுக்கு ?' என்றார். 'இல்ல.. ப்ரவுசிங் பண்ணனும்.. சிஸ்டம் இருக்கா ??' என்றேன். அரை மனதாக 'இருக்கு.. அம்பது ரூவா ஒரு மண்நேரத்துக்கு.. ஆனா அப்பப்ப டிஸ்கனெக்ட் ஆயிடும்.. போன் லைன் சரியில்ல.. பரவாயில்லயா ??' என்றார். அவர் அம்பது ரூவா என்று சொல்லும்போதே நான் திரும்ப ஆரம்பித்து விட்டேன், தமிழ்மணத்திற்கு என்ன, மும்பை சென்று பார்த்துக் கொள்ளலாம் !

எங்கள் ஊரான டி. பழூரிலிருந்து கும்பகோணம் செல்ல சாதரணமாக 75 நிமிடங்கள் ஆகும். தீபாவளி சமயத்தில் பெய்த மழையினால் சாலைகள் படுமோசமாக இருந்ததால், 120 நிமிடங்கள் பயணமாகி விட்டது. சண்முகம் பேருந்தில் இரண்டு டிவி பெட்டிகள் வைக்கப்பட்டு சிடி ப்ளேயரில் ரஜினி தேவுடா.. தேவுடா என்று ஆடிக் கொண்டிருந்தார். திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்ததில் கும்பகோணம் வந்ததே தெரியவில்லை. பக்கத்தில் உட்கார்த்திருந்த பால்காரர் '1234' எஸ்.எம்.எஸ் / குறுஞ்செய்தி கொடுத்து வந்த பதிலில் 'இந்தியா 120 ஃபார் 2, 24 ஒவர், டெண்டுல்கர் விளையாடறான்..' என்று நண்பருக்கு ரன்னிங் கமெண்ட்டரி கொடுத்தார். இந்தியா முன்னேறி வருகிறது என்று எனக்கு தோன்றிய போது சாலையில் 'கருப்பு எம்.ஜி.ஆர் அழைக்கிறார்' என்ற விஜயகாந்த் போஸ்டர் கண்ணில் பட்டது !