Friday, July 21, 2006

இம்சை அரசனும், ஒசாமா பின்லேடனும் சந்திப்பு

ஒசாமா பின்லேடன், நமது இம்சை அரசன் 23-ம் புலிகேசியை சந்திக்க இந்தியா வருகிறார். இம்சை அரசனின் அரண்மணையில் இருவரும் சந்தித்து பேசுகின்றனர்.

ஒசாமா : அமெரிக்காவ, இந்த மேப்ல இருந்தே அழிச்சுடுணும்...

புலிகேசி : அந்த பொறுப்ப எங்கிட்ட விட்டுடு.... அமைச்சரோட அஞ்சாவது பொண்ணு ஸ்கூல் பேக்ல இருந்து திருடின ரப்பர் இன்னும் எங்கிட்டதான் இருக்கு...

ஒசாமா : !!!!!!!!!!




பின்குறிப்பு 1 : இதை எனக்கு மின்னஞ்சல் செய்த நண்பர் ராகவேந்திராவுக்கு நன்றி !!

பின்குறிப்பு 2 : இந்த இடுகைக்கும், தீவிரவாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. ISP நண்பர்கள் அவசரப்பட்டு தடை செய்திட வேண்டாம் :-) !!

Thursday, July 13, 2006

இஸ்ரேலில் சோம்பேறி பையன் - பாகம் 2

முந்தைய பாகத்தில் : மும்பையிலிருந்து விமானத்தில் கிளம்பியது முதல் திறந்த வாய் மூடவில்லை (முதல் வெளிநாட்டு பயணமாச்சே). இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இறங்கி 'பசேல்' ஹோட்டலுக்கு நண்பர்களுடன் பயணிக்கிறேன். ஹோட்டல் ரிஷப்சனை அணுகிய போது...

'மன்னிக்கவும், உங்களுக்கு இந்த ஹோட்டலில் இடமில்லை..' அழகிய பெண் ரிசப்ஷனிஸ்ட் வாயசைத்ததை கேட்டு எனக்கு லேசாக மயக்கம் வந்தது. மயக்கம் தவிர்க்க கோலிசோடா தேடிக் கொண்டிருந்த நொடிகளில், ரிசப்ஷனிஸ்ட் தொடர்ந்தாள் "உங்களுக்கு 'தால்' ஹோட்டலில் ரூம் புக் செய்திருக்கிறோம், நீங்கள் இங்கிருந்து அங்கு போவதற்கு நாங்களே டாக்சி ஏற்பாடு செய்து விடுகிறோம், சிரமத்திற்கு மன்னியுங்கள்". 'இட்ஸ் ஓகே..ஹி..ஹி..' இது நான்.



இது டெல் அவிவ் கடற்கரை. ஹோட்டல் தால் (TAL) ஹயர்கான் வீதியில் கடற்கரை ஓரமாக உள்ளது. 10 தளங்களுடன் கூடிய அருமையான ஹோட்டல். இரு நிமிட நடையில் கடற்கரையை அடைந்து விடலாம். கடற்கரையை நம்மூர் மெரினாவுடனோ, மும்பை ஜூகுவுடனோ ஒப்பிட்டு நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை. ஒரே வரியில் சொன்னால் 'பூலோக சொர்க்கம்'.



மேலே நீங்கள் பார்ப்பது இஸ்ரேலில் ஓடும் பஸ். எல்லாமே அரசாங்கத்தைச் சேர்ந்ததுதான். தனியார் பஸ்கள் இல்லை. யுஎஸ் போலவே 'கீப் ரைட்' வண்டியோட்டும் நடைமுறை. பஸ், கார்களில் 'ஸ்டியரிங்' (தமிழ்ல என்னங்க) இடது முன்பக்கம் இருக்கின்றன. அழகான, புதிய, நன்கு பராமரிக்கப்படும் பஸ்கள். வழித்தடங்கள், இறங்கும் இடம் தெரிவிக்கும் பலகை அனைத்திலும் 'ஹீப்ரு' மொழியே. 20-25 பேர் மட்டுமே உட்கார முடியும்.



இது லாட்டரிக் கடை. பாருங்கள், எவ்வுளவு ஜோராக உள்ளதென்று. கடையின் முன் நிற்பது எனது நண்பர். இஸ்ரேலிலும் நம்பர் லாட்டரி உண்டு. ஒருநாள் அலுவலகம் முடிந்து திரும்பும் போது, சிறுமி ஒருவள் (8 அல்லது 9 வயது இருக்கும்) லாட்டரி வாங்கிக் கொண்டிருந்தாள். 'ஃபாரின் ஃபாரின்தான்' என்று நினைத்துக் கொண்டே நகர்ந்து விட்டேன்.



இரண்டு இஸ்ரேல் இளம்பெண்கள் ஒய்வெடுக்கின்றனர். இஸ்ரேலில் அனைத்து இளம்பெண்களும் அழகாக உள்ளனர் (அல்லது எனக்கு அப்படி தோன்றுகிறது). 18 வயதில் ராணுவத்திற்கு கட்டாயமாக அனுப்பப் படுவதாலும், அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்களாலும் எல்லாருமே 'ஜில்'லென்று உள்ளனர். (பெண்கள் மட்டுமல்ல, ஆண்களுமே ஸ்மார்ட்டாக, தொப்பையில்லாமல் சல்மான் கான் போலுள்ளனர்). பெண்கள் உடைகளும் ரொம்பவே மாடர்ன்தான், மிகக் குறைவான உடைகளை மட்டுமே நிறைய பெண்கள் அணிகின்றனர்.

இஸ்ரேலில் நிறைய தமிழ் வலைப்பதிவாளர்கள் இருப்பதாக தெரியவில்லை. எனக்குத் தெரிந்து வஜ்ரா சங்கர் இருக்கிறார். வேறு யாராவது இருப்பது தெரிந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். ஆனால் நான் அங்கே இருந்தபோது யாரையும் சந்திக்க இயலவில்லை. அடுத்த முறை பார்ப்போம்.


இஸ்ரேல் பற்றி நிறைய தமிழ் வலைப்பதிவுகள் வந்துள்ளன. சர்ச்சைக்குறிய விஷயங்களில்லாமல், இஸ்ரேலின் சுற்றுலாத்தளங்களை / பயண அனுபவங்களை பற்றிய பதிவுகள் குறைவே (என நினைக்கிறேன்).

வஜ்ரா சங்கர் தனது வலைப்பதிவில்புகைப்படத்துடன் சில இடுகைகளை, அருமையான விவரங்களுடன் இட்டுள்ளார். தள முகவரி http://sankarmanicka.blogspot.com/

வேறாதாவது தமிழ் வலைப்பதிவுகள் சுற்றுலா - இஸ்ரேல் பற்றி இருந்தால், நண்பர்கள் பின்னூட்டத்தில் முகவரி தரலாம்.

ஷபாத் பற்றியும், ஹோட் - ஹசரான் பற்றியும் அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாமே !!

Friday, July 07, 2006

இஸ்ரேலில் சோம்பேறி பையன் - பாகம் 1

'டெல் அவிவ் விமான நிலையத்தை நெருங்கி விட்டோம். பயணிகள் இடுப்புப் பட்டையை இறுக்கிக் கொள்ளுங்கள். இனிய இஸ்ரேலிய அனுபவத்திற்கு ராயல் ஜோர்டான் உங்களை வாழ்த்துகிறது..' விமானியின் குரல் ஒலிபெருக்கியில் மெலிதாக வழிந்தது. ஜோர்டான் நாட்டு தலைநகரம் அம்மானிலிருந்து கிளம்பிய முப்பது நிமிட பயணத்தில் டெல் அவிவ் நகரத்தை அடைந்து விட்டோம்.


புனேயிலுள்ள தொலைத்தொடர்பு மென்பொருள்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் சோதனையாளனாக வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்தில், அலுவலக வேலைக்காக இஸ்ரேல் செல்ல வேண்டியதாகி விட்டது (அட்ரா சோம்பேறி அட்ரா, ஆங்கிலக் கலப்பில்லாமல் எவ்ளோ பெரிய வாசகம்ம்ம்ம்).

புனேயிலிருந்து மும்பைக்கு சென்று, மும்பையிலிருந்து ஜோர்டானின் அம்மானுக்கு வந்திறங்கினோம். உடனடி இணைப்பு விமானத்தில் இடமில்லாததால், 30 மணிநேரம் அம்மானில் 'க்வீன் அலியா' விடுதியில் தங்கியிருந்து விட்டு இஸ்ரேலுக்கு பயணித்தோம். நான் சென்று திரும்பியது ஒரு மாதத்திற்கு முன்பு, தற்போதுள்ள அளவுக்கு நிலைமை அப்போது மோசமில்லை(?).

டெல் அவிவ் நகரத்தில் 'பென் குரியன்' விமான நிலையத்தில் இறங்கிய மறுவினாடியே விமான நிலையத்தின் பிரமாண்டம் இனம்புரியாத ஓர் உணர்ச்சிக் கலவையை ஏற்படுத்தியது. முதல் வெளிநாட்டு பயணம், சென்ற வேலையை நல்லபடியாக முடித்துவிட்டு திரும்ப வேண்டுமே என்று சிந்தனை ஓடியது. மிகப்பெரிய, சுத்தமான, அழகான, அமைதியான(!) விமான நிலையம் பென் குரியன். நாட்டு முன்னேற்றத்திற்காக பாடுபட்ட 'பென் குரியன்' என்ற தலைவர் பெயர் விமான நிலையத்திற்கு வைக்கப் பட்டுள்ளது.

'நீங்கள் ஏதாவது பயங்கர ஆயுதங்களை வைத்துள்ளீர்களா ?' இமிக்ரேஷன் (இதற்கு தமிழில் என்ன?) அதிகாரி கேட்டபோது தூக்கி வாரிப் போட்டது. ஊரிலிருந்து புறப்படும்போதே அயல்நாட்டு கலாச்சார வகுப்புகளில் தெளிவாக சொல்லி இருந்தார்கள். இமிக்ரேஷன் கேள்விகளுக்கு அதிபுத்திசாலித்தனமாக ஏதாவது உளறி வைக்காமல் எளிமையாக பதிலை சொல்லவும் என்று. விசாரணையை முடித்து விட்டு வெளியே வந்தேன்.

இஸ்ரேல் நாட்டு தலைநகரம் ஜெருசலம். மிகச் சிறிய நாடு. மக்கள் தொகை 65 லட்சம் என கேள்விப் பட்டேன் (மும்பையை விடக் குறைவு). எப்போதும் பதட்டமான மத்திய கிழக்கு பகுதியின் அரசியல் சூழலில், சுற்றியுள்ள நாடுகளில் ஜோர்டானுடன் மட்டுமே நட்புறவு. பாலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்சினை பற்றி நான் ஏதாவது கருத்து சொன்னால், பின்னி பெடலெடுக்க தமிழ்மணம் நண்பர்கள்(!) தயாராக உள்ளதால் 'நோ கமெண்ட்ஸ்'.

இஸ்ரேல் நாட்டு கரன்சி 'ஷக்கீல்' (ஷகீலா அல்ல..) என்று அழைக்கப் படுகிறது. ஒரு ஷக்கீலின் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 10 ரூபாய். நமது ஊர் பைசா போல் அங்கு 'அகோரட்' நாணயம். 100 அகோரட், 1 ஷக்கிலுக்கு சமம். இஸ்ரேலுக்கு புறப்படும்போதே செலவுக்கு அலுவலகம் அமெரிக்க டாலர்கள் கொடுத்தனர் (அப்ப்ப்ப்பா, டாலரை தொட்டு பார்த்துட்டோம்ல..). விமான நிலையத்திலேயே கொஞ்சம் டாலரை ஷக்கீலாக மாற்றிக்கொண்டு வெளியே வந்து டாக்சி பிடித்து 'ஹயர்க்கான் ரோட்டுல ஹோட்டல் பேசல் போப்பா' என்றோம்.

டாக்சி டிரைவர் எங்களை ஏற இறங்க பார்த்து விட்டு, அப்படி ஒரு ஹோட்டலே இஸ்ரேலில் இல்லை என்று சூடமேற்றி சத்தியம் செய்யாத குறையாக சொன்னார். என்னாடா இது, அலுவலகத்தில் இந்த ஹோட்டலதான பதிவு பண்ணி அட்ரஸ் வேறு கொடுத்து விட்ருக்காங்க என்று மூளையை (இல்பொருள் உவமைதான்...) கசக்கிக் கொண்டிருந்த போது இஸ்ரேல்காரர் ஒருவர் சீட்டை வாங்கிப் பார்த்து விட்டு 'இது பேசல் அல்ல. ஹோட்டல் பசேல் (BASEL)' என்றார். 'சரிதான்..விளங்கிடும்டா...' என்று ஒருவழியாக ஹோட்டலை வந்தடைந்தோம்.

ஹயர்க்கான் டெல் அவிவ் நகர கடற்கரையை ஒட்டிய அழகான பெரிய வீதி. டெல் அவிவ்வின் பெரிய ஹோட்டல்கள் நிறைய இங்கே உள்ளன. நமது இந்திய தூதரகம் இங்கேதான் உள்ளது. ஹோட்டல் உள்ளே சென்றதும் நடக்கப்போகும் கூத்தை அறியாமல் உற்சாகமாக ரிசப்சனை அணுகுகிறோம். அப்ப்ப்பா, ஒருவழியா ஹோட்டலை வந்து சேர்ந்தாச்சு. கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு உங்களையெல்லாம் பாகம் - 2ல் சந்திக்கிறேனே !!

பாகம் - 2ல்

இஸ்ரேலிலுள்ள தமிழ் வலைப்பதிவாளர்கள்
இஸ்ரேல் பற்றிய தமிழ் வலைப்பதிவுகள்
டெல் அவிவ் - ஜாபா சுற்றுப்பயணம்
ஹோட் ஹோசரானிலுள்ள அலுவலகத்தை பற்றி..
'ஷபாத்' என்றால் என்ன?

பின் குறிப்பு

இஸ்ரேல் பயண அனுபவங்களை தொடர்ந்து எழுதி இம்சை அரசன் 24ம் புலிகேசி ஆகலாம் என்று ஒரு உத்தேசம் உள்ளது. நண்பர்களின் பின்னூட்ட ஆதரவைப் பொறுத்து பாகங்கள் சுருக்கவோ, அதிகரிக்கவோ படும். ஆகவே அய்யா, அம்மா, நல்லதோ, கெட்டதோ ஏதாவது இரண்டு வரி பின்னூட்டம் போட்டு, வளர்கின்ற வலைப்பதிவாளரை(அட்ரா, அட்ரா.. 'வ'வுக்கு 'வ' எதுகை மோனை) தமிழ் மணத்தில் வாழ வையுங்கள் (திரும்பவும், 'வ'வுக்கு 'வ') !!