Friday, September 30, 2005

என் பெயர் 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்' V 2.0 - Reloaded

இந்திய கிரிக்கெட் கேப்டன் கங்குலிக்கும் ட்வெண்ட்டி செகண்ட்ஸிற்கும் என்ன சம்பந்தம் என்பதை கடைசி பாராவில் கண்டு பிடிக்கலாம். "ட்வெண்ட்டி செகண்ட்ஸ், எப்படிய்யா இருக்க?" என்று நண்பரிடமிருந்து எனக்கு வந்த ஓரு தொலைபேசி அழைப்பே இந்த பதிவுக்கு காரணம்.

அலுவலகத்தில் முன்பிருந்த இடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாறி விட்டேன். அதாவது இடம் எண் 1W59-ல் இருந்து 1W41-க்கு மாறி விட்டேன். 1W41-ல் 4+1 = 5. எண் கணிதம்(நியூமராலஜி) எல்லாம் பார்த்ததில் சாதகமாக ஒன்றும் இல்லாததால், எண் கணிதம் எல்லாம் டுபாக்கூர் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். இந்த இட மாற்றத்தால், இரண்டு மூன்று நாட்களாக வேலை நிறைய இருந்ததால் வலைப்பதிவு பக்கம் வர முடியவில்லை.

கங்குலி - சேப்பல் விவகாரம் படு ஜோராக போய்க் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய செய்திகள் இது தொடர்பாக வெளிவருகின்றன. சேப்பல் கிரிக்கெட் போர்டுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சலை நண்பர் ஒருவர் எனக்கு முன் செலுத்தினார்(Forward). அதில் உள்ள விஷயங்களைப் படித்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது. இந்திய கிரிக்கெட் வாழ்க!

சென்ற முறை தீபாவளிக்கு, ஊருக்கு புகைவண்டியில் நண்பர்களுடன் சென்றேன். மும்பையிலிருந்து சென்னைக்கு 24 மணிநேரப் பயணம் (சென்னை - தாதர் எக்ஸ்பிரஸ்). எங்களது குழுவில் 13 பேர். பொழுது போவதற்காக 'பாட்டுக்கு பாட்டு' (அந்தாக்ஸரி) விளையாடினோம். கர்ண கொடூரமாக பாடி புகைவண்டியயே கதிகலங்க வைத்ததில், சென்னை வருவதற்குள் மிகவும் பிரபலமாகி விட்டேன்!

'பாட்டுக்கு பாட்டு' போதாதென்று 'சைகை மொழி' (Dumb Charades) வேறு விளையாடினோம். ஆடுபவர்கள் இரு குழுவாகப் பிரிந்து கொள்ள வேண்டும். குழுவிலுள்ள ஒருவருக்கு மற்றொரு குழு ரகசியமாக ஓர் திரைப்படத்தின் பெயரைச் சொல்லும். அவர் சைகை மூலமாக அவர் குழுவிலுள்ள மற்றவர்களுக்கு படத்தின் பெயரை புரிவிக்க வேண்டும். புரிந்து கொண்டு சரியாக படத்தின் பெயரைச் சொன்னால் ஒரு பாயிண்ட் (மதிப்பெண்) கிடைக்கும். பிறகு இந்த குழு சொல்ல மற்றொரு குழு கண்டுபிடிக்கும்.

சிக்கலான சில விதிமுறைகளும் உண்டு. வாயசைக்கக் கூடாது. எழுத்துக்களை சைகை முறையில் காண்பிக்கக் கூடாது. இந்த விளையாட்டில்தான் நான் சலம்பிக் கொண்டிருந்தேன். எங்கள் குழுவில் வேண்டுமென்றே 'குலே பகவாலி' போன்ற பழைய புரிவிக்க கடினமான திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்தோம். எதிரணி கேள்விப் பட்டிராத ஆங்கில திரைப்படங்களை கொடுத்துக்கொண்டிருந்தது.

ஒருமுறை எதிரணி 'Raiders of the Lost Ark' என்ற ஆங்கிலப் படத்தை என்னிடம் கூறி எனது அணிக்கு சைகையில் புரிவிக்ககூறினர். நமக்கு தமிழே தடுமாறும் இதில் ஆங்கிலம் வேறா என்று நொந்து கொண்டே, எனது அணிக்கு இந்த படத்தை புரிவிக்கமுயற்சி செய்தேன். இதில் 'Raiders' மற்றும் 'Lost' வார்த்தைகளை புரிவித்து விட்டேன். ஆனால் 'Ark' என்பதை புரிவிக்க அரை மணி நேரம் போராடினேன். வில் மாதிரியெல்லாம் சைகை செய்தேன். அணியிலுள்ளவர்களுக்கு புரிய வில்லை.

அப்போது எதிரணியைச் சேர்ந்த நண்பி ஒருவர் 'அரக்கோணம்' வந்துருச்சிடா என்றார் (புகைவண்டி சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது). உடனே அந்த வார்த்தையை சுட்டிக்காட்டி அதிலிருந்து 'Ark' என்ற வார்த்தையை எடுத்தோம். இப்படி அரக்கோணத்திலிருந்து 'Ark' எடுத்ததற்காக எனக்கு ஒரு விருது கொடுத்தால் நன்றாயிருக்கும்.


இந்த விளையாட்டில்தான் எதிரணியிடம் சவால் விட்டோம் / விட்டேன், "எந்த படப்பெயரை வேண்டுமானாலும் கூறுங்கள், 20 செகண்ட்ஸில் கண்டு பிடிக்கிறோம்". ஒவ்வொரு முறை ஆடும் போது, கை சொடுக்கிக் கொண்டே '20 செகண்ட்ஸ்தான், முடிக்கிறோம்' என்று கூறியதால் எனக்கு 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்' என்று நண்பர்கள் பெயர் வைத்து விட்டார்கள். இப்போதும் நண்பர்களின் கைத்தொலைபேசியில் (Cell phone) பார்த்தால் எனது கைத்தொலைபேசி எண் 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்' என்றே சேமிக்கப் பட்டிருக்கும்!

இந்த 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்' என்ற பெயர் நம்ம கிரிக்கெட் கேப்டன் 'கங்குலி'க்கும் பொருந்தும். ஏனென்றால் நம்ம தலைவர் இப்ப எல்லாம் பேட்டிங் பிடிக்கப் போனால் 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்தான்' அதற்கு மேல் நிற்பதில்லை, அவுட்டாகி டிரஸ்ஸிங் ரூமுக்கு ஓடி வந்து ஜூஸ் குடிக்கிறார். அதனால் கங்குலிதான் தற்போதைக்கு 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்' ! என்ன, நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்கள்தானே?

இந்த வாரக் கவிதை (கவிதைக்கு சொந்தக்காரர் நண்பர் அரவிந்த்)

செருப்பு

பாதங்களைக் காக்கும்
கடவுளுக்கு இடம்
கோயிலுக்கு வெளியில் !

Wednesday, September 21, 2005

ஸிம்பாப்வே கிரிக்கெட் அணி கலைப்பு

சற்றுமுன் கிடைத்த தகவல். கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி. ஸிம்பாப்வே கிரிக்கெட் அணி மொத்தமும், நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் தொடர் முடிந்ததும் கலைக்கப் பட உள்ளது. வருங்காலத்தில் கிரிக்கெட் என்ற சொல்லே ஸிம்பாப்வேயில் இருக்காது. ஸிம்பாப்வே கிரிக்கெட் கூட்டமைப்பும் (ZCU) இத்துடன் கலைக்கப் படுகிறது. ஸிம்பாப்வே அணியின் கேப்டன் 'தைபு'வும், மூத்த வீரர் 'ஸ்டீரிக்'கும், இது குறித்து கேட்கப் பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டனர். ஸிம்பாப்வே நாட்டின் தலைவர் (பிரசிடண்ட்) 'ராபர்ட் முகபே' இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்த நாள் ஸிம்பாப்வே கிரிக்கெட்டிற்கு ஒரு சோகமான, மறக்க முடியாத நாள்" என்று குறிப்பிட்டு உள்ளார். இதற்கான காரணத்தை கேட்கையில் அவர் கூறியதாவது "இது ஸிம்பாப்வே நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு, கிரிக்கெட் அணி மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தேசமும் இதற்காக வேதனைப் படுகிறது. ஸிம்பாப்வே மக்கள் மனமொடிந்து போயுள்ளனர். வரிசையாக எல்லா அணிகளிடமும் மோசமாகத் தோற்றாலும், நாங்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்திருப்போம், ஆனால் இந்திய அணியின் கேப்டன் 'கங்குலி' எங்களுக்கு எதிராக சதம் (செஞ்சுரி) அடித்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதை, எங்களால் தாங்க இயலவில்லை! இதை மட்டுமே இப்போது, என்னால் கூற இயலும்."

ஆதாரம் : ரியுட்டர்ஸ் செய்தி நிறுவனம்

பின் குறிப்பு : இந்த தகவல் எனக்கு மின்னஞ்சலில் முன்செலுத்தப்(Forward) பட்டது. உபயம் : நண்பர் அருண்.

Saturday, September 17, 2005

சானியா மிர்சாவும், பனி விழும் மலர் வனமும்

இந்த மாதிரி குண்டக்க, மண்டக்க என்று தலைப்பு வைப்பதின் ஒரே நோக்கம், தலைப்பு வித்தியாசமாய் இருக்கிறதே என்றாவது நிறைய பேர் வந்து பார்ப்பார்கள் அல்லவா? இருந்தாலும் தலைப்பை நியாயப் படுத்தும் வகையில் அது சம்பந்தமாய் ஏதாவது எழுதி விடுவேன், நம்புங்கள்!

வலைப்பதிவு துவங்கும் போது, என்ன பெயர் வைக்கலாம் என்று சன் டிவியில் இரவு 11 மணிக்கு வரும் 'புத்தம் புதுசு' பார்த்துக் கொண்டே யோசித்தேன். 'பனி விழும் மலர் வனம்', 'வசந்த முல்லை', 'வெண்ணிலா' என்று நிறைய பெயர்களை யோசித்தேன். இந்த மாதிரியெல்லாம் இலக்கியத் தரமாக பெயர் வைத்தால், நமது இமேஜிற்கு ஒத்து வராது என்று 'சோம்பேறி பையனின் எண்ணங்கள்' என்று வைத்து விட்டேன்!

பெருவாரியான இந்திய விளையாட்டு ரசிகர்களைப் போலவே, எனக்கும் கிரிக்கெட் என்றால் ரொம்ப பிடிக்கும். இருந்தாலும் சமீப காலமாக இந்திய அணி விளையாடுவதைப் பார்த்தால், கருடபுராணத்தில் இம்மாதிரி விளையாடுவதற்கு ஏதாவது தண்டனை இருக்குமா என்று தேடத் தோன்றுகிறது. இப்போது கூட இந்தியா ஸிம்பாப்வேயில் தடவித் தடவிதான் ஆடிக் கொண்டிருக்கிறார்கள், பேசாமல் டென்னிஸுக்கு மாறிவிடலாம என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சானியா மிர்சா வேறு அழகாய் இருக்கிறார். சர்வதேசப் பட்டியலில் 34வது இடத்திற்கு வந்து, கலக்கிக் கொண்டிருக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் என் கனவில் வந்து 'ராரா..' என்று சந்திரமுகி ஜோதிகா போல் ஆடினாலும் ஆடுவார் என்று பட்சி சொல்லுகிறது!

சென்ற பதிவில் குறிப்பிட்ட பஞ்சாப் பைங்கிளியிடம் இன்னும் கிரிட்டிங்ஸ் கார்டு கொடுக்க வில்லை. ஒருவேளை ஒத்து வராவிட்டால், அடுத்த விண்ணப்பம் சானியா மிர்சாவிடம் போடலாம் என்று உத்தேசம். ஆந்திரா அல்லுடுவாகி விடலாம். யாராவது அவரது மின்னஞ்சல் முகவரி வைத்திருந்தால் கொடுங்களேன், முயற்சி செய்கிறேன். ஓர் தமிழ் வலைப்பதிவு எழுத்தாளனுக்கு இத்தனை சோதனையா? 'பாரடி பராசக்தி' என்று பாரதி ரேஞ்சில் கவிதை பாட நாக்கு துடிக்கிறது!

சென்ற வாரம் நண்பர் ஒருவரின் இல்லத்திற்கு சென்றிருந்தேன். நண்பர் தமிழ்நாட்டில் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். அவருக்கு சமீபத்தில் (5 மாதம் முன்பு) பெண் குழந்தை பிறந்து , இப்போதுதான் மும்பைக்கு அழைத்து வந்துள்ளார். அந்த குழந்தையைப் பார்க்கச் சென்றேன். போனவன் சும்மா இல்லாமல் தமிழில் வாழ்த்துப்பா ஒன்றையும் (நாந்தான் பெரிய கவிஞனாச்சே...) எழுதி எடுத்துச் சென்றேன்.

மகாமகக் கரையில் பிறந்து
மகாராஷ்டிரா மண்ணை மிதித்திருக்கும்
மலரே, வருக !

இதே அந்த வாழ்த்துப்பாவின் ஆரம்பம். இந்த ஸ்டைலில் இரண்டு பக்கத்திற்கு எழுதி இருந்தேன். முழு கவிதையையும் இங்கே வெளியிட்டால் நீங்கள் ஆல்ட் F4 போட்டு விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

வாழ்த்துப்பா கஷ்டப்பட்டு சொந்தமாக எழுதியது என்பதால் அதன் முதல் இரண்டு மூன்று அடிகளை மட்டும் குழந்தையின் காதில் வேதம் ஓதுவது போல் ஓதினேன். அப்போது அழ ஆரம்பித்த குழந்தைதான், இன்னும் அழுகையை நிறுத்தவில்லையாம். நண்பர் இப்போதெல்லாம் தள்ளி நின்றே என்னை நலம் விசாரிக்கிறார். ஆதலால் தற்காலிகமாக கவிதை எழுதுவதை நிறுத்தி வைத்துள்ளேன். உங்கள் நல்ல நேரம், பிழைத்தீர்கள்!

இங்கிலாந்து அட்டகாசமாய் ஆடி 'ஆஷஸ்' கிரிக்கெட் தொடரை, 18 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றுள்ளனர். லண்டனில் பெரிய வெற்றி ஊர்வலமெல்லாம் கூட நடந்தது. இந்தியா ஸிம்பாப்வேயுடன் டெஸ்ட் தொடரை வென்று வந்தால், இங்கே கூட இந்த மாதிரி வெற்றி பேரணியெல்லாம் நடத்தலாம், ஏனென்றால் தற்போதைய நிலைமைக்கு ஸிம்பாப்வேயை வென்றாலே, இந்தியாவுக்கு பெரிய சாதனைதான்!

என்னமோ போங்க, நானும் ஒவ்வொரு கிரிக்கெட் தொடரையும் விழுந்து விழுந்து பார்க்கிறேன். இந்தியா கோப்பை வாங்கறதத்தான் பார்க்க முடியவில்லை. இப்படி தொடர்ந்து பார்த்து, இந்திய கிரிக்கெட்டை ஆதரிக்கின்ற எனக்கு, யாராவது விருது கொடுத்தா தேவலை!

Sunday, September 11, 2005

* அண்டங்காக்கா கொண்டக்காரி *

போன வாரம் வலைப்பதிவை தமிழ்மணத்தில் சேர்த்ததும் ஆபிஸில் இருக்கும் நண்பர்களுக்கு போன் செய்து தெரிவித்தேன். ஆகா.. நல்ல காரியம் செய்தாய், நாங்கள் படும் கஷ்டத்தை (எனது பதிவுகளை படிப்பதை) தமிழ் கூறும் (வலைப்பதிவர்) நல்லுலகமும் படட்டும் என்று ஆசி வழங்கினார்கள். போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும் என்று நோட்பேடை திறந்து இந்த பதிவை எழுத ஆரம்பித்து விட்டேன்.

பதிவு ஆரம்பித்ததைக் கொண்டாட நண்பர்களுக்கு டீ (சத்தியமாக டீ மட்டும்தான்..) வாங்கிக் கொடுத்தது, நன்றாகவே வேலை செய்தது. அப்படியே அரசல் புரசலாக செய்தி பரவி, ஹிந்திக் காரர்கள் கூட வந்து கை கொடுத்தார்கள். பெரிய எழுத்தாளன் நான், கவிதையெல்லாம் கூட எழுதுவேன்(!) என்று அடித்து விட்டதில் பக்கத்து சீட்டு பஞ்சாபி பைங்கிளி 'நைஸ் டு ஸி யு ரைட்டிங் யா..' என்றது. இதற்கு என்ன அர்த்தம் என்று 'ஆர்ச்சிஸ்' கிரிட்டிங் கார்டு (ஐ லவ் யூ என்று ரோஜாப்பூ படம் போட்டிருக்கிறது) வாங்கி யோசித்துக் கொண்டிருக்கிறேன். ராகுகாலம் எமகண்டம் எல்லாம் பார்த்து, சுபயோக சுபதினத்தில் பைங்கிளியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அடி வாங்காமல் பிழைத்திருந்தால், அடுத்த பதிவை எழுதுகிறேன்.

மூளையை ரொம்ப கசக்கி, நிறைய டீ, தம் எல்லாம் அடித்து ஹைக்கூ கவிதை ஒன்றை உருவாக்கினேன். ஒரிஜினல் ஹைக்கூ கவிஞர்கள் கவிதையைப் பார்க்காமல் உடனடியாக அடுத்த பாரவுக்கு செல்லவும்.

நண்பனின் காதலி
அழகாய் இருப்பதை பார்த்ததும்
நட்பை மறந்தது மனசு...

இந்த ஹைக்கூவை படித்துவிட்டு பாராட்டி பின்னூட்டம் போடும் நண்பர்களுக்கு சீக்கிரம் கேர்ள் பிரண்டோ / பாய் பிரண்டோ கிடைக்க மும்பை சித்தி விநாயகரிடம் வேண்டிக் கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறேன். திருமணமானவர்கள் முயற்சி செய்யவேண்டாம்.

தீபாவளிக்கு ஊருக்குப் போக டிரெயின் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டேன். இன்னும் 40 நாட்களே உள்ளன, ஊருக்கு போக. ஊருக்கு போவது என்றாலே ஒரே ஜாலிதான். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று பொழுது போகும். மிச்சமிருக்கும் நேரத்தில் நண்பர்களிடம் மும்பையை பற்றி நிறைய கதை விட வேண்டும். என்னிடம் ஆதிகால மொபைல் போன் ஒன்று (சின்ன ஆன்ட்டனா கூட இருக்கும், ஆபிஸில் கொடுத்த போன்) உள்ளது. எங்க ஊர் அப்பாவியான நல்ல மக்கள் நிறைய பேர் இருக்கிற ஊர். அங்கே இந்த மொபைல் போனை எடுத்துட்டு போய், கிடைக்கிற கால்வாசி சிக்னலில் நாலு மிஸ்கால், நாலு மெஸெஜ் அனுப்புற சுகமே தனிதான்... அப்புறம் நமக்கு தெரிஞ்ச ஆங்கில வார்த்தையெல்லாம் மொபைல்ல பேசறப்ப எடுத்து விடனும்.. 'துரை இங்கிலிபீஸ் எல்லாம் பேசுது'ன்னு கோவை சரளா ஒரு படத்தில் சொல்வாரே, அப்படி சொல்லி வியப்பார்கள் எனது ஊர் மக்கள், ரொம்ப வெள்ளந்தியானவர்கள் !

போன முறை ஊருக்கு ப்ளைட்டில் போனேன், ப்ளைட்டில் ஏறியவுடன் ஒரே மஜாவாக இருந்தது. என்னை, சார் என்று ரொம்ப மரியாதையாக கூப்பிட்ட போது கூச்சமாக இருந்தது. மூன்று முறை என்னை திட்டிக் கொண்டே (எந்த ஊருய்யா உனக்கு) கூல்ட்ரிங்க்ஸ் கொடுத்தார்கள். என்ன ஒரே குறை, ப்ளைட் பறக்கும்போது, நல்லா காற்று வருமென்று சைடு ஜன்னலை திறந்து விட சொன்னேன், கடைசி வரை திறந்து விடவே இல்லை. குட்டை பாவாடையில் அழகாக இருந்த 'ரீட்டா' என்ற பணிப்பெண்ணை எனக்கு மிகவும் பிடித்திருந்தது (யாரத்தான் பிடிக்காது உனக்கு? - மனசாட்சியின் குரல்). மொபைல் நம்பரோ, இ-மெயில் அட்ரஸோ கேட்கலாம் என நினைத்தேன். ப்ளைட் நின்றவுடன் ஆள் வைத்து அடிப்பார்களோ என்று பயம் வந்ததால், ஜெண்டில்மேன் ஆகி விட்டேன்.

பதிவுகளைப் படித்த நண்பர்கள் ஏன் ஒரே சொந்த கதை, சோகக் கதையாய் எழுதுகிறாய், நிகழ்கால சம்பவங்களை எழுதலாமே என்று கேட்டார்கள். நிகழ்கால சம்பங்களை பிறர் மனம் புண்படாதவாறு விமர்சித்து எழுதுவது கஷ்டம். நான் அறிவுரை கூறும்படியோ, விளையாட்டு விமர்சனத்தையோ, திரைப்பட விமர்சனத்தையோ எழுதினால், நண்பர்கள் ஆல்ட் + F4 போட்டு விட்டு கருடபுராணம் படிக்க போய்விடுவார்கள். என் கடந்த காலத்தை எழுதும்போது, இஷ்டம் போல் கதை விடலாம். ஆதலால் நான் பார்த்த, ரசித்த, அனுபவித்த சம்பவங்களை கொஞ்சம் கற்பனை கலந்து, நகைச்சுவையாய் எழுதலாம் என நினைக்கிறேன். அவ்வப்போது திரைப்படங்களையும், விளையாட்டையும் தொட்டுக் கொள்கிறேன்!

மும்பையில் நண்பர்கள் அவ்வப்போது வாஷி மேகராஜ், முலுண்ட் ஆட்லேப்ஸ் என்று ஆங்கிலப்படம் பார்க்கச் செல்வார்கள், நான் அந்த பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன். போய் பார்த்தாலும் புரியாதென்பதே காரணம். நான் பார்த்து புரிந்து கொண்ட ஒரே ஆங்கிலப் படம் 'டைட்டானிக்' தான். அது கூட சன் டிவியில் டப் பண்ணிப் போட்ட போது பார்த்த பிறகுதான் புரிந்தது. இந்த 'மேட்ரிக்ஸ்' படத்தை இதுவரைக்கும் 13 தடவை ஸ்டார் மூவிஸ்ஸிலும், ஹச்பிஓவிலும் பார்த்து விட்டேன். ஒரு மண்ணும் புரியவில்லை. ஒருவேளை சன் டிவியில் போடறப்போ புரியுமோ என்னவோ?

பதிவை முடிக்கும் வேளை வந்து விட்டது. என்னடா இவன் 'அண்டங்காக்கா கொண்டக்காரி' என்று தலைப்பை வைத்துவிட்டு அதைப் பற்றி எதுவுமே எழுதவில்லையே என்று அடிக்க வர வேண்டாம். இரண்டாவது பாரவில் பஞ்சாபி பைங்கிளியிடம் கிரிட்டிங்ஸ் கார்டு கொடுக்கப் போகிறேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? ஒருவேளை பார்ட்டி ஒர்க்கவுட் ஆகிவிட்டால், 'ரெமோ' விக்ரம் போல் 'அண்டங்காக்கா கொண்டக்காரி..ரண்டக்க..ரண்டக்க' என்று டூயட் பாடலாம் என்று இருக்கிறேன். ஒர்க்கவுட் ஆகாவிட்டால், 'எங்கே செல்லும் இந்த பாதை...' என்று 'சேது' விக்ரமாகி விட வேண்டியதுதான் !!!

Wednesday, September 07, 2005

பெய்யெனப் பெய்யும் மழை

இந்த கட்டுரை ஒரு மாதத்திற்கு முன்பு எழுதப் பட்டது. இப்போதுதான் இந்த வலைப் பக்கத்தில் இடம் பெறுகிறது.


26/07/2005 05:12 PM


ஜூலை 26ம் தேதி, மாலை 4 மணிக்கு அலுவலகத்தில் எங்கள் அனைவருக்கும் ஒரு மின்னஞ்சல் வந்தது, கனமழையின் காரணமாக மாலை 4:30 மணிக்கு ஊழியர்கள் வீடு திரும்பலாம் என்று. மும்பையில் வசிப்பவர்களுக்கு மழைக்காலத்தில் இது வழக்கமான ஒன்றுதான். 5 மணிக்கு சக ஊழியர் ஒருவரின் காரில் கிளம்பி விட்டேன். கேட் நம்பர் ஒன்றின் வழியே வெளியே போனால், தண்ணீர் அதிகமாக உள்ளது என்று தகவல் வந்ததால், கேட் நம்பர் மூன்றின் வழியே வெளிவந்தவுடன், மழையின் உக்கிரம் புரிந்து விட்டது. கேட்டின் வலதுபுறம், கார் திரும்பியவுடன் ஒன்றரை அடிக்கு தண்ணீர் இருந்தது. சிறிது நேரத் தயக்கத்திற்கு பிறகு நண்பர் தைரியமாக வெள்ளத்தின் நடுவே காரை செலுத்தினார். கடந்து வந்து, கன்சோலியின் ஜான்'ஸ் பிரிட்ஜ் நிறுத்தத்தில் இறங்கினேன். கன்சோலியின் கூவம் கரை புரண்டு ஒடிக் கொண்டிருந்தது. மழை மிகத் தீவிரமாக பெய்து கொண்டிருந்தது. இன்னும் அரைமணி நேரம் மழை தொடர்ந்து பெய்தால், கன்சோலியில் வெள்ளம் வந்து விடும். யோசிக்கிறேன், என்ன செய்யலாம் ?

28/07/2005 11:01 AM


டைம்ஸ் ஆப் இண்டியா வலைத்தளத்தில் தலைப்புச் செய்தி : மும்பையில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட கார்களில் இருந்து வெளியே வர முடியாமல், 21 பேர் பலி. கார்களில் உள்ள செண்ட்ரல் ஆட்டோ லாக்கிங் சிஸ்டம் மற்றும் பவர் விண்டோ சிஸ்டம் செயலற்றுப் போனதால் வெளியே வர முடிய வில்லை. சில கார்களில் ஏசி சிஸ்டம் வெடித்ததுள்ளன. நினைத்துப் பாருங்கள், காரின் வெளியே வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது, கார் கதவுகள் திறக்க முடியவில்லை. கண்ணாடிகளை உடைக்க முடிய வில்லை, மூச்சு முட்டுகிறது. வாழ்வின் கடைசி நொடிகளில், அவர்கள் என்ன வேதனை அனுபவதிருப்பார்கள் ?


26/07/2005 06:30 PM


கன்சோலியில் வீட்டுக்கு சென்ற போது, வீட்டில் மின்சாரம் இல்லை. காலையிலிருந்து மின்சாரம் இல்லை என்று தெரிய வந்தது. உடனே வீட்டிலுள்ள எல்லா வாளிகளிலும் தண்ணீர் பிடித்து வைத்து விட்டு, உடை மாற்றிக் கொண்டு, கோப்பர்கைரனேயில் நண்பர்களின் வீட்டிற்கு சென்று விட்டேன். நடந்து செல்லும் போது, சாலைகளில் ஒரடிக்கு மேல்வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. பேருந்து நிறுத்தங்களில் மக்கள் கூட்டம். சாலைகளில் நிறைய பேர் நடந்து செல்கின்றனர். மழை கனமாக பெய்கிறது. எங்கும் மின்சாரம் இல்லை. பிரளயம் வந்து விட்டதா?


29/07/2005 10:25 AM


டைம்ஸ் ஆப் இண்டியா வலைத்தளத்தில் செய்தி : வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட மக்களுக்கு/பயணிகளுக்கு சகபயணிகள், அருகாமையில் வசிக்கும் மக்கள் உதவி செய்தனர். பேருந்துகள் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட பகுதிகளில் அருகாமையில் வசிக்கும் சிலர் தங்கள் வீடுகளிலிருந்து, பிஸ்கட், பிரட் மற்றும் பழங்களை கொடுத்து உதவியுள்ளனர். சிலர் ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு, உணவு சமைத்து கொடுத்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்கள் ஒருவொருக்கருவர் உதவி செய்து, மீண்டு வந்துள்ளனர். மக்களிடையே உதவும் மனப்பான்மை குறைய வில்லை என்பதுமனதுக்கு ஆறுதலளிக்கும் செய்தி.

26/07/2005 10:00 PM


கோப்பர்கைரனே நண்பர்களுடன் சாப்பிடக் கிளம்புகின்றேன். மழை மிகத் தீவிரமாக பெய்கிறது. உணவு விடுதியில் கூட்டம் இல்லை. மின்சாரமும் இல்லை. சாப்பிட்டு விட்டு திரும்பும் போது, குடை பிடித்திருந்தாலும், உடம்பு முழுவதும் நனைந்து விட்டது. திரும்பும் போது நினைத்துக் கொள்கிறேன் : வீடில்லாமல் தெருவில், நடைபாதையில் வசிப்பவர்களுக்கு எவ்வளவு சிரமம் இருக்கும், இம்மாதிரி சூழ்நிலையில் எங்கே போயிருப்பார்கள், அனைவரும் ?


28/07/2005 11:20 AM


மும்பை கோரேகான், அந்தேரி பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி 2500 எருமைகள் பலி. எருமைகள் நன்கு நீந்தக் கூடியவைதான். ஆனால் அவைகள் சங்கிலியுடன் பிணைக்கப் பட்டிருந்ததால் தப்பிக்க முடிய வில்லை. எருமைப் பண்ணை உரிமையாளர்கள் ஏன் எருமைகளை விடுவிக்க வில்லை? மனிதர்களின் சுயநலத்திற்கு வாயில்லா ஜீவன்கள் பலியாகி விட்டன. இது தவிர 15000 ஆடுகளும் பலியாகி விட்டதாக கேள்வி.


பின் குறிப்பு


இவை தவிர, இன்னும் பற்பல செய்திகளை நீங்கள் செய்தித் தாள்களின் மூலமும், தொலைக்காட்சியின் மூலமும்அறிந்திருப்பீர்கள். மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் என்னைப் பாதித்தவைகளில் சில. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு எத்தனையோ மக்கள் உயிரிழந்தனர். வீடிழந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. மகாரஷ்டிராவின் மேற்கு பகுதி முழுவதும் பாதிக்கப் பட்டாலும், மாநிலத் தலைநகரான மும்பையின் பாதிப்புக்களுக்கே செய்தி ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தன. நிறைய நிலச் சரிவுகள் ஏற்பட்டன. மூன்று நாட்களுக்கு மும்பை வெளி உலகத்திலிருந்து துண்டிக்கப் பட்டது.15000 கோடி நஷ்டம் என்று செய்தி வந்துள்ளது. மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போது அரசாங்கம் விரைந்து செயல்பட வில்லை என்று கருத்துகள் எழுந்துள்ளன. இப்பேரழிவிற்கு முக்கியமாக பின்வருபவனற்றை காரணமாகக் கூறலாம்.


* மும்பையின் பாதாள சாக்கடைகள் பழமையானவை. டிரைனேஜ் சிஸ்டம் சரியாக இல்லை.

* நீரை உறியும் சக்தியுடைய கடலோர மாங்குரோவ் காடுகள் ஆக்ரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டு விட்டன.

* கடந்த நூறாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான மழைப்பொழிவு.

* விரைந்து செயல்பட முடியாத அரசாங்கம்

* பெருகிவரும் மக்கள் தொகை, அதனால் ஏற்படும் ஆக்ரமிப்புகள்

* நிலச்சரிவு ஏற்படும் அபாயமறிந்தும், முறையற்ற குடியுருப்புகளை ஏற்படுத்தும் மக்களின் அறியாமை மற்றும் ஏழ்மை.


மும்பையில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. வெகு விரைவில் மும்பை இழந்த உற்சாகத்தைப் பெறக்கூடும். ஆனால் வெள்ளத்தினால் உயிரழந்தவர்களின்/பாதிக்கப் பட்டவர்களின் வீடுகளில் இயல்பு நிலை திரும்புமா? எவ்வாறு அவர்களின் வாழ்க்கைப் பயணம் அமையப் போகிறது ? காலம்தான் பதில் சொல்ல வேண்டும் !

Saturday, September 03, 2005

அம்பியும், அன்னியனும்... Version 2.0

இந்த பதிவு ஒரு மாதத்திற்கு முன்பே எழுதப் பட்டது. சற்றே திருத்தப்பட்டு Version 2.0 ஆகவெளிவருகிறது.

இந்த பதிவிற்கு 'Alexandra' என்று தலைப்பு வைத்திருந்தால், இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் தமிழ்க் கட்டுரைக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கிறேன் என்று யாரவது தமிழ்க் குடிதாங்கிகள் போராட்டம் நடத்தினால் என்ன செய்வது என்று நினைத்து, தலைப்பை மாற்றி விட்டேன்.

உங்களுக்கெல்லாம் அலெக்ஸாண்டர் என்றவுடன் என்ன ஞாபகம் வரும்? வரலாற்றில் பல நாடுகளை படையெடுத்து வென்ற மாவீரர் அலெக்ஸாண்டர் ஞாபகத்திற்கு வருவார். அல்லது தமிழகத்தில் காவல்துறை டிஜிபி ஆக இருந்த அலெக்ஸாண்டர் ஞாபகத்திற்கு வரலாம். புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த அலெக்ஸாண்டர் படம் கூட ஞாபகத்திற்கு வரலாம். ஆனால் எனக்கு அலெக்ஸாண்ட(ரா)ர் என்றால், திருச்சி முல்லை தியேட்டர் ஞாபகத்திற்கு வரும். எதற்கென்று புரிய வில்லையென்றால், திருச்சிவாசிகளிடம் விளக்கம் கேட்கவும்.

காலேஜ் படிக்கும் காலத்திலிருந்து, நான் கவிதைகள் எழுதுவதுண்டு.

'பெய்கிறது மழை..
சாய்கிறது தழை..'
என்று ஒரு ரேஞ்சில் புதுக்கவிதைகள் எழுதி குவிப்பேன்.

நோட்டீஸ் பின்பக்கம், பஸ் டிக்கெட், தியேட்டர் டிக்கெட் என்று எது கிடைத்தாலும் எதாவது எழுதி, அதை கவிப்பேரரசு வைரமுத்து ரேஞ்சுக்கு ஒவ்வொரு வரியையும் இரண்டு தடவை சத்தம் போட்டு சொல்லி கருத்து கேட்டதால், உறவினர்கள் எங்கள் வீட்டுக்கு வருவதை குறைத்துக் கொண்டார்கள். பக்கத்து வீட்டுக் காரர்கள் காலி செய்து வேறு ஊர் சென்றார்கள். ஊரில் ஏதாவது வயசான கேஸ் ரொம்ப நாட்களாக இழுத்துக் கொண்டு கிடந்தால், என்னை அழைத்துச் சென்று கவிதை படிக்கச் சொல்வார்கள். மறுநாளே பால்தான். இருந்தும், என் கவிதை தாகம் குறைய வில்லை.

நண்பர்களின் ஊக்குவிப்பால், சில திருக்குறள்களை தற்காலத்திற்கு தக்கவாறு மறுவடிவமைத்தேன். அப்படி மறுவடிவமைத்த ஒரு குறளைப் பாருங்கள்.

குழலினிது யாழினிது என்பர் அவர்தம்
கேர்ள்பிரண்டினை கிஸ் அடிக்காதவர்.

சென்ற முறை எழுதியிருந்ததற்கு நிறைய பதில்கள் வந்தன. ஆயிரக்கணக்கான வாசகர்கள் பாராட்டி எழுதியிருந்தார்கள் என்று ஜல்லியடிக்க விரும்ப வில்லை. சில நண்பர்கள் மெயில் மூலமாகவும், சிலர் போனிலும், வேறு சிலர் நேரிலும் பாரட்டினார்கள்/திட்டினார்கள். கடிதத்தைப் படித்த, ரசித்த, கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி. உங்களுக்கு புரோக்கரேஜ் இல்லாமல் வீடு வாடகைக்கு கிடைக்கவும், Tax Deduct செய்யாத சம்பளம் கிடைக்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

திடீரென்று போன வாரம் ஆபிஸில் வேலை செய்ய வேண்டுமென்று சொல்லி விட்டார்கள். பழக்கமில்லாமததால் கஷ்டமாகி விட்டது. பேப்பர் படிக்க முடியாமல், டுபாக்கூர் மெயில்கள் படிக்க முடியாமல், கடலை போட முடியாமல் என்னடா வேலை இது என்று அக்தரைக் கண்ட கங்குலி போலாகி விட்டேன். தினமும் 12 பக்கத்திற்கு Project Status Report மெயிலில் பற்பல தவறுகளுடன் அனுப்பினேன். அதைப் படித்து நொந்து போய், என்னுடைய டீமில் 3 பேர் (Resignation) பேப்பர் போட்டார்கள். மிச்சமிருப்பவர்களை அடுத்த Projectல் பார்த்துக் கொள்வோம் என்று ரிப்போர்ட் அனுப்பவதை நிறுத்தி விட்டேன்.

Email பற்றிய பதிவால் சில சங்கடங்கள் ஏற்பட்டன. தொழில் ரகசியங்களை வெளியிடுகின்றேன் என்று சில நண்பர்கள் குறை கூறினர். அவர்கள் கருத்தும் சரிதான். அவர்களுக்கு சீக்கிரம் Girl Friends கிடைக்கட்டும் அல்லது திருமணமாகட்டும்.

குறை கூறுவது என்றவுடன், எனது காலெஜ் புரபசர் ஞாபகத்துக்கு வருகிறார். கிளாஸ் ரூமில் எப்போதாவது Fan நின்று விடும். உடனே பேன் இல்லாமல் வேர்க்கிறது, பாடம் கவனிக்க முடிய வில்லை என்று புரபசரிடம் புருடா விடுவோம். அவர் 5 நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள் என்பார். எதற்கென்று கேட்டால், 5 நிமிடத்தில் உங்களுக்கு வேர்ப்பது பழகிவிடும் என்பார்.

குறை கூறுவதில் சிலர் கில்லாடிகள் என்றால், சிலர் குறை தீர்ப்பதில் கில்லாடிகள். நான் திருச்சியில் காலெஜ் படிக்கும் காலத்தில் Computer Course சேர்ந்தேன். அங்கே C, C++ என்று கணிணி மொழிகள் கற்று தந்தார்கள் அல்லது கற்றுத்தர முயற்சி செய்தார்கள். Lab Session-னின் போது, 20 லைனில் C Program அடித்தால் 40 Errors காட்டும். உடனே கிரிக்கெட்டில் Third Ampire-க்கு காட்டும் Signal போல் கை காட்டி Lab Assistant-டை கூப்பிடுவோம். அவர் வந்து சரி செய்த பிறகு 52 Errors காட்டும். அவர் இது 'System problem', 'Compiler Malfunction', 'Software corruption' என்று குத்து மதிப்பாக ஏதாவது சொல்வார். அதான் அவரே சொல்லிவிட்டாரே என்று குரூப்பாக கிளம்பி முல்லை தியேட்டருக்கு 'Alexandra' படம் பார்க்க சென்று விடுவோம்.

மறுநாள் சுத்தமாக குளித்து வந்து, அதே புரோகிராமை ஆராய்வோம். சா-பூ-த்ரீ போட்டு நான்கைந்து கமாக்களை எடுத்து Compile செய்தால், 45 Errors காட்டும். அப்போது சீனு என்ற புத்திசாலி எங்கள் செட்டில் இருந்தான். அவனைக் கூப்பிட்டு காண்பித்தால், 3 நிமிடத்தில் எல்லா Error-களையும் எடுத்து விடுவான். என்னவென்று பார்த்தால், தலைவர் Error வரும் Lines எல்லாவற்றையும் Delete செய்து விடுகிறார். Compile செய்தால் 0 Errors என்று வரும். Run செய்தால் System shutdown ஆகி, corrupt ஆகி விடும்.

இப்படி எனக்கும் கம்பியூட்டருக்கும், ஐய்வஸ்ர்யா ராய் - சல்மான் கான் போல் பொருத்தம் இருந்தது. எப்படியோ அடித்துப் பிடித்து காலேஜ் முடித்து ஹைதராபாத் ஒடி வந்து விட்டேன். வேலைக்கு வந்த பிறகு கொஞ்சம் பொறுப்பு வந்து C, Oracle கற்றுக் கொண்டேன்.

சமீபத்தில் 'அந்நியன்' படம் பார்த்தேன். அதில் வரும் விக்ரம் போல எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். சாதாரணமாக 'அம்பி' விக்ரம் போல் சாதுவாக இருப்பார். சாப்பிடும் போது 'அந்நியன்' ஆகி விடுவார். தன் தட்டில் இருப்பது மட்டுமல்லாமல், பக்கத்து தட்டையும் ஒரு கை பார்த்து விடுவார். நானே வாழ்க்கை வெறுத்துப் போய், சாதம் சாப்பிடப் பிடிக்காமல், ரவா தோசை வாங்கி வருவேன். அதில் முக்கால் தோசை பிடுங்கி சாப்பிட்டு விட்டு 'Have a nice lunch, friend' என்பார்.

இன்னொரு நண்பர் இருக்கிறார். வாய் கூசாமல் பொய் சொல்வார். சம்பளத்திலிருந்து, Girl friends எண்ணிக்கை வரை பொய்யோ பொய் என்று சாதனை படைப்பார். அஜித்குமார் பக்கத்து வீடு என்பார். 10th Std Exam-ல் கணக்கில் நூற்றுக்கு நூறு என்பார். 45 + 35 எவ்வளவு என்றால், 5 நிமிடம் யோசித்து, உடம்பு சரியில்லை, நாளைக்கு சொல்கிறேன் என்று நழுவுவார். இப்போது இவர் ஒரு MNC-யில் HR Dept-ல் வேலை பார்க்கிறார், 'Right person for right job' !

எனது இன்னொரு நண்பர் ஒரு கெட்ட வார்த்தை களஞ்சியம். தமிழில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளையும் பட்டியல் போட்டு, எனக்கு இப்படியெல்லாம் கெட்ட வார்த்தை பேசினால் பிடிக்காதென்பார். அவர் வாயில் ஒரு நல்ல வார்த்தைக்கு இரண்டு கெட்ட வார்த்தை வரும் !

என்ன இருந்தாலும், இவர்களெல்லாம் எனது நண்பர்கள். இவர்களை விட்டுக் கொடுக்க முடியாது. நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள், நம் வாழ்க்கையில் எதாவது ஒரு Impact - பாதிப்பை எற்படுத்துகிறார்கள். எந்த ஒரு மனிதனுக்கும், Positives Negatives என இரண்டுமே இருக்கும். எதை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும் !

Thursday, September 01, 2005

மின் அஞ்சல் ரகசியங்கள் Version 2.0

நேற்று வலைப்பதிவிற்கான ப்ளாக் (Blog) தொடங்கியுவுடன் பெரிய எழுத்தாளராகி விட்டோம் என்று ஒரே மஜாவாக இருந்தது. அதே மப்பில் வீட்டிற்கு சென்று, இரவு படுத்த போது வெகுநேரம் தூக்கம் வரவில்லை. ஒருவழியாக தூங்கிய போது கலர் கலராக நிறைய கனவுகள் வந்தன. கனவில் சுஜாதா வந்து பேட்டி எடுத்தார். 'எப்படி இவ்வளவு சுவாரசியமாக எழுதுகிறீர்கள் ? வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன ?' என்று நிறைய கேள்விகள் கேட்டு ஆனந்த விகடன் 'கற்றதும் பெற்றதும்' ல் சிலாகித்து எழுதுவது போலவும், பெங்களூரில் தேசிகன் எனக்கு பாரட்டு விழா எடுப்பது போலவும் கனவுகள் வந்தன. புக்கர் விருது பெறுவதற்குள் தூக்கம் கலைந்து விட்டதால், எழுந்து சென்று விட்டேன் !

நேற்று எழுதிய முதல் பதிவைப் படித்து விட்டு, நண்பர்கள் சிலர் கடிந்து கொண்டனர் (அதாம்ப்பா..கெட்ட வார்த்தையில திட்டினாங்க...). நான் எழுதிய தூய (?) தமிழ் புரிய வில்லையாம். சரி, நம்ம ஸ்டைல்ல பூந்து விளையாண்டுருவோம் என்று இதை எழுத ஆரம்பித்து விட்டேன். அனைவருக்கும் புரியும் படியாக அமைய, ஓரிரு ஆங்கில வார்த்தைகள் நடுவில் வந்தாலும் OK என்பது என் கருத்து.

இந்த பதிவின் பின்வரும் பகுதிகள், ஒரு மாதத்திற்கு முன்பு எழுதப் பட்டவை. இங்கே ப்ளாக் தொடங்கும் முன், முரசு அஞ்சலில் எழுதி, நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புவேன். அதனை சிறிது திருத்தி Version 2.0 ஆக இங்கே வெளியுட்டுள்ளேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் (அதாம்ப்பா..Comments..) மூலம் தெரிவியுங்கள்!

இளம் வயதிலிருந்து, என் மாமாவிடம் தங்கி படித்ததால், பெற்றோருக்கு அடிக்கடி கடிதம் எழுதுவதுண்டு. காலேஜ் படிப்பு முடியும் வரை போஸ்ட் கார்டிலே எழுதிக் கொண்டிருந்தேன். வேலை கிடைத்து ஹைதராபாத் சென்றதும், இன்லாண்டு கார்டில் எழுத ஆரம்பித்தேன். முதலில் வாரம் ஒரு முறை எழுதத் தொடங்கி பின் மாதம் ஒரு முறை கடிதம் எழுதி அனுப்பினேன்.

பிறகு எனது கிராமத்தில், அடுத்த வீட்டில் போன் வந்த பிறகு, போன் செய்வது அதிகமாகி, கடிதப் போக்குவரத்து குறைந்தது. இருப்பினும் அவ்வப்போது வீட்டிற்கு கடிதம் எழுதுவது நிற்காது.

மும்பை வந்த பின், சில கடிதங்கள் எப்பொழுதாவது எழுதி அனுப்பினேன். மும்பையில் நான் தங்கி இருக்கும் கன்சோலியில் போஸ்ட் பாக்ஸ் இல்லாததால் (அ) போஸ்ட் பாக்ஸ் இருக்குமிடம் தெரியாததால், ஒவ்வொரு முறையும் கடிதத்தை Postbox-ல் சேர்க்க கோப்பர்கைரனே செல்ல வேண்டி இருந்தது. இது கடினமாக இருந்தது. இந்த சமயத்தில், எனக்கு மொபைல் போன் கிடைத்தது. போனில் அடிக்கடி வீட்டை தொடர்பு கொள்ள முடிந்ததால், கடிதம் எழுத அவசியமில்லாமல் போனது. இவ்வாறு நான் கடிதம் எழுதுவது, நின்று போனது.

படிப்படியாக கடிதம் எழுதுவது குறைந்து, நின்று போனாலும், டெக்னாலஜி காரணமாக மின்னஞ்சல் (Email), 1999-ல் எனக்கு அறிமுகமாகியது. நான் முதலில் Internet என்றால் ஏதோ மீனவர்கள் உபயோகப்படுத்தும் வலை என்றும், Email என்பது ஏதோ ஷாக் அடிக்கும் எலெக்ட்ரானிக் சமாச்சாரம் என்றும் நினைத்திருந்தேன். பின் நண்பர்கள் விளக்கியதும், பலரிடமும் Email Account உருவாக்குவது ப்ரீதான் (Free) என உறுதி செய்து கொண்டு, ஒருவாறாக Email Id ஒன்றினை கிரியேட் செய்த போது, ஹைதராபாத்தில் நாய்க்குட்டி கூட Email Id வைத்திருந்தது!

ஆரம்பத்தில் ஒரு ஆர்வத்தில், ஏழெட்டு வெப்சைட்களில் Email Account கிரியேட் செய்து வைத்தேன். ப்ரெண்ட்ஸ¤க்கு ஒன்று, பல கம்பெனிகளுக்கு Resume அனுப்ப ஒன்று, மொட்டை கடிதாசி எழுத ஒன்று. காதல் கடிதங்கள் எழுதுவதற்காகவே ஒரு Id வைத்திருந்தேன்.வாரம் பத்து காதல் கடிதங்கள் எழுதி வனஜா, கிரிஜா, சரிகா என்று மானாவாரியாக அனைவருக்கும் அனுப்பி விடுவேன். இந்த அனுபவங்கள் பற்றி பிறகு இன்னொரு கட்டுரை எழுதலாமென்று இருக்கிறேன், நீங்கள் கெட்ட வார்த்தையில் திட்டாமலிருந்தால்!

இவ்வாறு ஏழெட்டு Idகள் கிடைத்த பிறகு, தெருவில் போவோர், வருவோர் என அனைவரிடமும் Email Address கொடுத்தேன். பேப்பர் போடுபவர், செருப்பு தைப்பவர், காய்கறிக் காரர் என ஒருவர் விட வில்லை. அப்படி இருந்தும், ஒரு மெயில் கூட வர வில்லை. Account deactivate ஆகாமலிருக்க, நானே ஒரு Idயிலிருந்து, எனது இன்னொரு Idக்கு மெயில் அனுப்பி, அதைப் பிறகு Open செய்து, வியப்பேன்.

இது ஒரு பக்கமிருக்க, 13 பக்கத்திற்கு என் Resume தயார் செய்து, தெரிந்த, தெரியாத கம்பெனிக்கெல்லாம் அனுப்பினேன். கனவில் Microsoft, Intel, IBM, Infosys, Wipro என்று எல்லா கம்பெனிகளும் Interviewக்கு அழைத்தன. HR Roundடெல்லாம் முடிந்த பிறகு, பில்கேட்ஸ் என் கையைப் பிடித்து Microsoftல்தான் சேர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். கனவு கலைந்த பின், எழுந்து பல் தேய்த்து, குளித்து, பஸ் பிடித்து ஆபிஸ் சென்று விடுவேன்.

பார்க்கும் வெப்சைட்டில் எல்லாம் பேர் கொடுத்து வைத்ததால், நிறைய Advertisement Mails வர ஆரம்பித்தன. USAவில் எங்காவது Pizza கடை ஆரம்பித்தால் கூட எனக்கு மெயில் வந்தது. உலகத்திலுள்ள எல்லா பேங்குகளும் எனக்கு Credit Card கொடுக்க முன் வந்தன. வாயில் நுழையாத பெயர் போட்டு வந்த மெயில்கள், எனது Bank Account No. கேட்டன. Jane, Sucy, Andy போன்ற மேல்நாட்டுபெண்மணிகள் மெயிலில் என்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்தார்கள்.

என்னுடன் வேலை பார்த்தவர்களில், சில பையன்கள் ரவுசு அதிகம் பண்ணுவர். அவர்களுக்காக பெண்கள் பெயரில் மெயில் அனுப்பவதுண்டு. ஆரஞ்சு கலர் பேண்ட் சட்டையில் அம்சமாக உள்ளாய், மீசையை எடுத்து விட்டு, குளிர் கண்ணாடி அணிந்தால் ஹிரித்திக்ரோஷன் போலிருப்பாய் என்று இஷ்டத்துக்கு மெயில் அனுப்புவோம். பையன் அதை நம்பி மறுநாள் ஸ்டைலாக வருவான். Side Poseல் பார்த்தால் தெலுங்கு காமெடி ஹீரோ போலிருக்கும்!

இப்படி இண்டர்நெட் எனக்கு சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது. இவ்வாறாக பற்பல லீலைகள் புரிந்து ஒருவழியாக 2003 டிசம்பரில் மும்பை மாநகர் வந்து சேர்ந்தேன். இன்னும் பற்பல இண்டர்நெட் அனுபவங்கள் உள்ளன. அவற்றை வரும் வாரங்களில் ஒவ்வொன்றாக எழுதுகிறேன். மீண்டும் சந்திப்போம், நன்றி!