Thursday, February 14, 2013

காதலர் தினம் - அறியாத தகவல்கள், அரிய புகைப்படங்கள்


இப்படியெல்லாம் தலைப்பு வைத்து நானும் ஒரு பிரபல பதிவராகலாம்னு முடிவு பண்ணி விட்டேன் (அத நீ முடிவு பண்ண கூடாதுய்யா, நாங்கதான் முடிவு பண்ணனும் என்கிற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது :) )

காதலர் தினம்னா என்ன? அதன் பின்னனி என்ன? நமது கலாச்சாரத்திற்கு இம்மாதிரி கொண்டாட்டங்கள் தேவையா, என்ன மாதிரி பரிசு வழங்கலாம் போன்ற விஷயங்களை கீழே பார்ப்போம்..

காதலர் தினம் பிறந்த கதை

 


காதலர் தினத்துக்கு முன்னோடியாக கருதப்படும் வேலன்டைன் துறவி, ரோம் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர். ரோம் அரசர் இரண்டாம் கிளாடியஸ், இளைஞர்களை போர் களத்திற்கு அழைத்தார். அதற்கு வரவேற்பில்லாததால், அவர்களின் திருமணத்திற்கு தடை விதித்தார் எனவும், இதற்கு மாறாக வேலன்டைன் எனும் பாதிரியார் இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார் எனவும், ஆத்திரமடைந்த அரசர், வேலன்டைனுக்கு மரண தண்டனை விதித்ததாகவும் கூறப்படுகிறது. பின் அவரது நினைவு நாளையே "வேலன்டைன் தினமாக' இளைஞர்கள் கொண்டாட தொடங்கினர். 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான், வேலன்டைன் தினம் முழுவதும் காதலர் தினமாக மாறியது. (நன்றி: தினமலர்)

இந்தியாவில் காதலர் தினம்

மேற்கத்திய நாடுகளில் நீண்ட நாட்களாக கொண்டாடிக் கொண்டிருந்தாலும், இந்தியாவில் சமீப காலத்தில்தான் பிரபலமாகி வருகிறது. கணினி யுகத்தில், உலகலாவிய இணைய இணைப்பில் கலாச்சார மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. காதலர்கள், இளைஞர்கள் மத்தியிலும், மீடியா, வணிக நிறுவனங்களும் நன்றாக கல்லா கட்ட ஆரம்பித்திருக்கின்றன. சில தான்தோன்றி கலாச்சார காவல் அமைப்புகள் இக் கொண்டாட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி '15 நிமிட புகழுக்கு' ஆசைப் படுகின்றன.

காதலர் தினம் இந்தியாவிற்கு தேவையா?

நிச்சயமா தேவைதாங்க. மேல்நாட்டு கலாச்சாரங்களில் நல்லவையும் இருக்கின்றன,  கெட்டவையும் இருக்கின்றன. நாம் நல்லவைகளை எடுத்துக் கொண்டு, தீயவைகளை ஒதுக்குவோமே. நம் காதலியுடனோ, மனைவியுடனோ (அ) துணைவியுடனோ அன்பை பரிமாறிக் கொள்வதில் என்ன தவறு இருக்கு? இனிப்பு, சாக்லேட்டுகள், வாழ்த்து அட்டைகள், ட்ரஸ், பரிசுப் பொருட்களை நமது வாழ்க்கைத் துணைக்கு வாங்கிக் கொடுத்து அன்பை, அன்னியோன்யத்தை வளர்த்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. திருமணமாகாமல் தற்போது காதலித்து வரும் காதலர்களும் இதை நாகரீகமாக கொண்டாடுவதை தடை செய்யக் கூடாது.

காதலர் தின ஜோக்குகள்





காதலர் தினத்திற்கு என்ன பரிசு வழங்கலாம்?

இதைப் படிக்கிற நீங்களும் ஒரு ப்ளாக்கர் (blogger) என்றால் கவிதை ஒன்றை எழுதி காதலருக்கு தாருங்கள், அதுதான் அருமையான பரிசு (ஏதோ காசு மிச்சும் புடிக்க வழின்னு நினைக்காதீங்க, மத்த பொருட்களை கடையில் வாங்கலாம், ஆனால் கவிதையை வாங்க முடியுமா?). இதோடு வேறு பரிசுப் பொருட்களும் கொடுக்கலாம்.


  • வாழ்த்து அட்டைகள்
  • இனிப்பு/சாக்லேட்டுகள்
  • ட்ரஸ்
  • கைக் கடிகாரம்
  • மொபைல்/டேப்ளட்
  • கவிதை


நமக்குத்தான் கல்யாணமாயிடுச்சே, இனிமே என்ன காதலர் தினம்னு அலட்சியமா இருந்திடாதீங்க? உங்க கணவனுக்கோ/மனைவிக்கோ காதலோட ஒரு காஃபி போட்டுக் குடுத்தா, அது கூட ஒரு பரிசுதான். காலையில மனைவி எழும்முன் சீக்கிரம் எழுந்து சூடா ஒரு காஃபி போட்டு மனைவியை எழுப்பி கொடுத்து 'ஐ லவ் யூ'ன்னு சொல்லுங்களேன், அப்புறம் பாருங்க, வாழ்க்கையே சந்தோஷமாயிடும்.

கடைசியா ஒன்னு, இந்த காதல்/அன்பு/அக்கறை எல்லாம் இன்னைக்கு ஒருநாள் மட்டுமல்ல, எல்லா நாளிலும் கடைப் பிடிச்சீங்கன்னா உங்க வாழ்க்கையே சூப்பராயிடும்! வாழ்க்கைத் துணையை மட்டுமல்ல, சக மனிதர்களையும் மதியுங்க, நேசிங்க! காதலர் தினத்துக்கு மரியாதை செலுத்துங்க!

காதலர் தின வாழ்த்துகள்!



Wednesday, February 13, 2013

நானும் கடவுளும் உரையாடிய தருணங்கள்



நான்
எனது நிழல்
மற்றும் கடவுள்
முடிவிலா உரையாடல்
நிசப்தம் எங்கள் மொழி
மூச்சுக் காற்று துவர்க்கிறது
சாளரம் வழியே குளிர் காற்று
மேகத்தை கடந்து மிதக்கும் போது
கலைந்து போனது கனவு....

***




நீண்டு கொண்டேயிருந்த
ஓர் நள்ளிரவில்
நானும்
 கடவுளும்
எதிரெதிரே அமர்ந்து
தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம்
இன்றோ
நேற்றோ
நேற்று முன்தினமோ
உன்னை அனைவருக்கும்
அறிமுகப் படுத்துவேன்
என்று உரையாடிக் கொண்டிருக்கும்
கணத்தில்
கரைந்து போனார் கடவுள்!!

***

நான்
என்னை
நீக்கிய தருணத்தில்
கடவுள்
சற்றே அருகே வந்தார்.

***

தியானம்
அடர்ந்த நிசப்தம்
மெதுவாக மனக்குதிரையில்
தூரத்தில் அருவமாய்
கடவுள்
துரிதமாய் எட்டிப் பிடிக்குமுன்
விட்டுச் சென்றார்!

***



Monday, February 11, 2013

விஸ்வரூபம் - திரைப்பார்வை


ஒரு தமிழ் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகும் முன் பிற மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் வெளியாகும் என்றோ, அதனை நான் பார்த்து ரசிப்பேன் என்றோ கனவில் கூட நினைத்ததில்லை.

நான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறேன். கடந்த ஒரு வருடத்தில் நான் திரை அரங்கிற்கு சென்று பார்த்த ஒரே படம் 'பீட்சா'. அதுவும் சென்னைக்கு விடுமுறையில் (இரு மாதங்களுக்கு முன்பு) வந்த பொழுது மாயாஜாலில் பார்த்தது.

விஸ்வரூபம் டிடிஹெச் மற்றும் தமிழகத் தடையினால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஜனவரி 25 - வெள்ளியன்று அமெரிக்காவில் ரிலீசானாலும், எங்கள் நகரத்தில் ரிலீசாக வில்லை. 26 சனி காலை நண்பர் ஒருவர் குறுந்தகவல் கொடுத்திருந்தார், ப்ரைவேட் ஸ்க்ரீனிங்கில் அன்று இரு ஷோக்கள் (shows) உள்ளன என்று. டிக்கெட் விலை சற்று அதிகம்தான் $16. உடனே எடுத்து விட்டேன்.



தமிழகத்தில் மக்கள் நிறைய சிரமப்பட்டு ஆந்திராவிற்கோ, கேரளாவிற்கோ சென்று பார்த்துள்ளனர். ஆனால் எம்பெருமான் கருணையினால் எனக்கு அவ்வுளவு சிரமமில்லை. வீட்டிலிருந்து 8 மைல் தொலைவில் தியேட்டர். இரவு 9 மணி ஷோவிற்கு 8:30க்கு சென்று அமர்ந்தேன். நல்ல பெரிய தியேட்டர் (மல்ட்டிப்ளெக்ஸ்), 300 இருக்கைகள் இருக்கலாம். ஒலி, ஒளி அமைப்புகள் நன்றாக இருந்தன.

நிறைய எதிர்பார்ப்புகள் இல்லை. ஏற்கனவே வந்த விமர்சனங்களை படித்திருந்தேன். கமல் நன்றாக நடித்திருந்தார் என்று கூறுவது கடல் நீர் துவர்க்கிறது என்பதற்கு சமம். அதுதான் அனைவரும் அறிந்த விஷயமாயிற்றே! அறிமுகப் பாடலும், காட்சியமைப்பும் அருமை. 'பாப்பாத்தியம்மா - சிக்கன்' டயலாக்கை தவிர்த்திருக்கலாம், வலிந்து திணிக்கப் பட்டது போல் தோன்றுகிறது.

முதல் இருபது நிமிடங்கள் காமெடியாய் ஆரம்பித்தாலும், கமலின் விஸ்வரூப காட்சிக்கு பிறகு சீரியஸாகி விடுகிறது. அதன்பிறகு என் போன்ற சாதாரண ரசிகனை பிடித்து வைக்கக் கூடிய சுவாரசியங்கள் குறைவே.

ஆப்கானிஸ்தான் காட்சிகள் சற்று மெதுவாக நகர்கின்றன. அங்கே நடப்பதையும், அமெரிக்காவில் நடப்பதையும் மாற்றி மாற்றி காட்டும் உத்தி நன்று.

ஆனால் காட்சிகளை நாம் புரிந்து கொண்டு தொடர்வது சற்று கடினம்தான். இந்த சீசியம், ட்ர்ட்டி பாம், மைக்ரோவேவ் ஒவன் வைத்து பாம் வெடிப்பதை தவிர்ப்பது என்பதெல்லாம் மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு பாமர ரசிகனுக்கு புரியுமா என்பது சந்தேகம்தான். இதை அவனுக்கும் புரியவைக்க கமல் எவ்வித முயற்சியும் எடுக்க வில்லை.



படத்தில் நிறைய கேள்விகள் உள்ளன. சில முடிச்சுகள் சரியாக அவிழ்க்கப் படவில்லை. கமல் ஆரம்பத்தில் திட்டமிடும்போது இரு பாகங்களாக திட்டமிட்டிருக்க மாட்டார். எல்லாவற்றையும் எடுத்துவிட்டு எடிட் செய்யும் போது நிறைய காட்சிகள் இருந்திருக்கும், ஆதலால் இரு பாகங்கள் என நினைக்கிறேன். எனவை படத்தின் முடிச்சுகள் சில இரண்டாம் பாகத்தில் அவிழலாம். அப்பாகத்தையும் பார்த்தால் ஒரு முழுமையான உணர்வு நமக்கு கிடைக்கலாம்.

படத்தில் புத்திசாலித்தனமான காட்சியமைப்புகள் உள்ளன. தேவையான அளவுக்கு இசை, பின்னனியிசை. ஓலி, ஒளிப்பதிவு அபாரம். ஆனால் திரைக்கதை சரியாக அமையவில்லை. இன்னமும் சற்று தெளிவாக, சுவாரசியமாக, வேகமாக அமைத்திருக்கலாம். ஒரு திரில்லர் கதைக்குரிய வேகமோ, பரபரப்போ இல்லாதது சற்று ஏமாற்றம்தான்.

ஒரு காட்சியில் ஒரு ஆப்ரிக்க இளைஞன் (பிற்பாடு அவனே குண்டு வைக்கப் போகிறான்) ஒருவன் தனது உடம்பை, அந்தரங்க பாகத்தை ஷேவ் (shave) செய்து  கொள்கிறான். அதை எதற்கு காட்டுகிறார்? ஏதாவது கேரக்டரை ஸ்தாபிக்கிறாரா? இக்காட்சியில் மறைமுகக் குறீயீடு ஏதாவது உள்ளதா என்று புரியவில்லை.

ஆண்ட்ரியா, நாசர் போன்றோரின் கேரக்டர்களும், அவற்றின் தேவையும் சரியாக அமைய வில்லை. கிளைமேக்ஸ் பரபரப்பாய் இல்லாமல் சாதாரணமாக முடிந்து விடுவது ஏமாற்றமே.

வழக்கமான தமிழ் சினிமாவாய் குத்துப் பாட்டு, இரட்டை அர்த்த காமெடி இல்லாமல் ஒரு வித்தியாசமான கதைக் களத்துக்காகவும், டெக்னிக்கல் விஷயங்களுக்காகவும் கமலை பாராட்டலாம்! எனக்கு படம் பிடித்திருந்தது, எல்லோருக்கும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை!