Tuesday, December 21, 2010

அலைவரிசை அமைச்சர் - ஸ்பெசல் கார்ட்டூன்

தமிழகத்தைச் சேர்ந்த தொலைத்தொடர்பு மத்திய அமைச்சர்களுக்கு ஏதோ பூர்வஜென்ம சாபம் தொடர்கிறது என்றே நினைக்கிறேன். முன்பு தயாநிதி மாறன், இப்பொழுது ராசா.வாசகர் கரெக்சன்: அமைச்சரல்ல, முன்னாள் அமைச்சர் :-)

அவியல் – 21/12/2010: டெண்டுல்கர், சாரு நிவேதிதா & கடலை சட்னி

டெண்டுல்கர் 50-வது டெஸ்ட் செஞ்சுரியை அடித்து சாதனை செய்துள்ளார். வாழ்த்துக்கள்! ஆனால் செஞ்சுரியன் டெஸ்ட்டில் 4-வது நாள் இறுதியிலும், 5-ம் நாள் காலையிலும் டெயில் எண்டர்களை காப்பாற்றி இன்னிங்ஸை நீட்டிக்க எந்த வித முயற்சியையும் மேற்கொள்ள வில்லை. குறைந்த பட்சம் 5-ம் நாள் காலையில் பேட்டை கண்ணாபின்னாவென்று சுழற்றி இன்னும் கொஞ்சம் ரன்கள் சேர்த்திருக்க முயற்சித்து இருக்கலாம். இன்னிங்ஸ் தோல்வியையாவது தவிர்த்திருக்கலாமே? தென்னாப்ரிக்க கேப்டன் ஸ்மித் கூட இதையே மேட்ச் முடிந்ததும் கூறினார். என்னாச்சு டெண்டுல்கர் சார்??


சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழாவில் மிஸ்கின் நந்தலாலாவை பற்றி 20 நிமிடம் பேசிவிட்டு, போகிற போக்கில் சாருவின் தேகம் நாவலை சரோஜாதேவி புத்தகம் போலிருக்கிறது என்று பேசிவிட்டு சென்றது சாருவிற்கும், அவரது ரசிகர்களுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மிஸ்கின் செய்தது தவறுதான்.

சாரு தனது வலைத்தளத்தில் நந்தலாலாவில் இளையராஜா இசை பெரும்பாலான இடங்களில் கேவலமாய் இருந்தது என்று எழுதியதாகவும், அதனை மிஸ்கின் எடுத்து விடுமாறு சொன்னதால், வலைத்தளத்தில் இருந்து எடுத்து விட்டேன் என்றும் எழுதியிருக்கிறார். ஏன் எடுத்தீர்கள் சாரு? நீங்கள்தான் உங்களது எழுத்தில் எவருக்காகவும், எதற்காகவும் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன் என்று இருப்பவராயிற்றே? உங்களது கருத்தை எதற்காக மிஷ்கினுக்காகவும், நந்தலாலா என்ற நல்ல படத்திற்காகவும் மாற்றிக் கொண்டீர்கள்? இதையே அடுத்தவர்கள் சமரசம் செய்து கொண்டால் உங்களது வலைத்தளத்தில் கிழித்து விடுவீர்கள் அல்லவா? என்னாச்சு சாரு சார்??
கடலை சட்னி சாப்பிட்டு இருக்கிறீர்களா? பச்சை வேர்க் கடலையை வறுத்து, உப்பு, புளி, மிளகாய் வைத்து அரைத்து சப்பாத்திக்கோ, இட்லிக்கோ தொட்டுக் கொள்ளலாம், சுவையாக இருக்கும், ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள், பிடித்து விடும்!!


Sunday, December 19, 2010

2010: எனக்குப் பிடித்த 10 திரைப்படங்கள்..

நான் புனேயிலிருந்து சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்ததற்கு தமிழ் திரைப்படங்களை நிறைய பார்க்க வேண்டுமென்பதும் ஓர் காரணம். ஆதலால் நிறைய தமிழ்ப் படங்களை பார்த்து விடுகிறேன். இந்த ஆண்டும் நிறைய படங்களைப் பார்த்தேன். ஒரு சமயத்தில் நான்கு நாட்கள் தொடர்ந்து நான்கு தமிழ் படங்களைப் பார்த்து ரசித்தேன் (ஓர் இரவு என்ற வித்தியாசமான திகில் படத்தையும் சேர்த்து)..

இந்த வருடத்தில் நான் பார்த்து, ரசித்த எனக்குப் பிடித்த பத்து திரைப்படங்கள்:

1. மதராச பட்டிணம்
2. எந்திரன்
3. பாஸ் (எ) பாஸ்கரன்
4. அங்காடித் தெரு
5. விண்ணைத் தாண்டி வருவாயா
6. சிங்கம்
7. ஆயிரத்தில் ஒருவன்
8. ராவணன்
9. நந்தலாலா
10. மைனா
2010 தமிழ் சினிமாவிற்கு நல்ல வருடமென்றே நினைக்கிறேன், பெரிய பட்ஜெட் எந்திரனும், சிறிய பட்ஜெட் மைனா, அங்காடித் தெரு, நந்தலாலா போன்ற வித்தியாசமான திரைப்படங்களும் வந்து வெற்றி பெறுவதும்(?) ஆரோக்கியமான விஷயமல்லவா!!

Sunday, December 12, 2010

வரலஷ்மி நமோஸ்துதே என வேண்டவும் கூச்சமாயிருக்கிறது..ஞா
சா
என எழுத்துக்கள்
கலைந்து கொண்டே இருக்கின்றன
எதை எழுதுவது
எதை விடுவிப்பது
எதை உதறுவது
என்று யோசிப்பதிலேயே
பொழுதுகள் கழிவதால்
கவிதை ஏதும் வரவில்லை..
வரலஷ்மி நமோஸ்துதே என
வேண்டவும் கூச்சமாயிருக்கிறது..
சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள்
சடுதியில் திரும்பி வருகிறேன்.
ஓர் நல்ல கவிதை
அடுத்த நொடிப்பொழுதில் கூட
உருப் பெறலாம்!!


Monday, December 06, 2010

கொஞ்சம் கவிதை, கொஞ்சம் அரசியல்..

அலுவலகத்தின்
கண்ணாடிச் சுவர்களில்
வழிந்தோடும்
மழைத்துளிகளுக்குத் புரியுமா
பொருளாதாரா நெருக்கடியும்
அதனால் ஆட்குறைப்புக்காட்பட்ட
துப்புரவுத் தொழிளாலர்களின் வலியும்?


ஸ்பெட்க்ரம் ஊழலிலினால் திமுகவின் மதிப்பு மக்களிடையே சரிந்து வருவதாகக் கூறுகின்றனர். ஆனால் இதற்கு முன்பிலிருந்தே திமுகவின் மதிப்பு மக்களிடம் சரிந்து வருகிறது. இலவச டிவியும், கேஸ் அடுப்பும் மக்களை கொஞ்சம் சாந்தப் படுத்தியிருந்தாலும் நிறைய அதிருப்தி இந்த அரசாங்கத்தின் மேல் உள்ளது.

நூறு நாள் வேலைத்திட்டம் காரணமாய் / ஒரு ரூபாய் அரிசி திட்டத்தினால், எங்கள் கிரமாத்தில் கூலி/விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பது கடினமாயுள்ளது. வருபவர்களும் அநியாய கூலி கேட்கின்றனர். முன்பு 100 ரூபாய், இப்போது 200 ரூபாய். இதனால் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்குபவர்களும், அந்த அரிசி தரமானதாய் இல்லை என்று கூறுகின்றனர். ஒரு சில நகரங்களைத் தவிர, பெரும்பாலான இடங்களில் அரிசி தரமுடையதாய் இல்லை.

நிறைய இலவசங்கள் கொடுப்பதன் மூலம், தேவையான முன்னேற்றப் பணிகளை மேற்கொள்ள நிதிவசதி இல்லை. இப்போது மழையினால் பாதி தமிழகம் தவிக்கிறது, சரியான மழைநீர் வடிகால் வசதி சென்னையிலாவது உள்ளதா?

மின்சாரம் கேட்கவே வேண்டாம், சென்னை மக்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களும் மானாவாரியாக பாதிக்கப் பட்டுள்ளன.

குடும்ப அரசியல், மீடியாவை மொத்தமாக ஆக்ரமித்துள்ளது, என்கேபி ராஜா போன்றோரின் அயராத சமூகப் பணி, கனிமொழி, ராஜா, ராசாத்தி அம்மாளின் நீரா ராடியுவுடனான டெலிபோன் பேச்சுக்கள் என படு வலிமையான முட்கள் திமுக முன் குவிந்துள்ளன, ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க ரொம்ப கஷ்டப் பட வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்!!


Sunday, December 05, 2010

தேவர்மகன்: நிறைய மழை & கொஞ்சம் தேநீர்

தேவர்மகன் பாடல்

இஞ்சி இடுப்பழகி..
மஞ்ச சிவப்பழகி..
கள்ள சிரிப்பழகி..
மறக்க மனம் கூடுதில்லையே!!


மென்பொருளாளனின் கவிதைவழமையான ஓர் ஞாயிறு பிற்பொழுதில்
மழைச் சாறல்கள் தெளிக்கும்
எம் வீட்டு சாளரத்திலிருந்து
தோட்டத்தையும்,
மழைத்துளிகள் சொட்டும் மரங்களையும்,
மலர்களோடு உறவாடும் செடிகளையும்
அதிலமர்ந்து விளையாடிக் களிக்கும் பறவைகளையும்
சூடான ஆவி பறக்கும் தேநீரை அருந்திக் கொண்டே
பார்த்து ரசிக்கும் போதும்
தோணுவதேயில்லை
பணிக்குச் செல்லும் மனைவிக்கும் ஞாயிறு ஓய்வுநாளே என்பது!!!


ஆரோசிக்ஹா – பாண்டிச்சேரி வாசனை

கடந்த வார இறுதியில் பாண்டிச்சேரி சென்றிருந்தோம். அரபிந்தோ ஆசிரமத்திற்கு அருகே இருக்கிறது இந்த கடை. நிறைய வகையான வாசனை ஊதுவத்திகள், வாசனை மெழுகுவர்த்திகள் இயற்கையான முறையில் அரபிந்தோ ஆசிரம வாசிகளால் தயார் செய்யப்பட்டு இங்கே விற்கப்படுகின்றன.
3 மணி நேரம் வரை எரியும் நாகலிங்க பூ வாசனை கொண்ட ஊதுவத்திகள், ரோஜா, மல்லிகை, காபி மணம் கொண்ட ஊதுவத்திகள், ‘சர்ப்பரைஸ்’ என்ற பெயரில் என்ன வாசனை என்று பிரித்து பற்ற வைற்றால்தான் கண்டுபிடிக்க முடியும் என்ற வகை ஊதுபத்திகள் என்று நிறைய வகையான வாசனையாவியங்கள் உள்ளன.

கார்களில் வைக்கக்கூடிய காற்று புத்துணர்ச்சி அளிப்பான்கள், வீட்டில் பீரோ, துணிகளில் வைக்கக்கூடிய வாசனை புத்துணர்ச்சி அளிப்பான்கள் (Air Freshener types) என்று விதவிதமாய் நிறைய உள்ளன.

இவை தவிர்த்து ஊதுவத்தி ஸ்டாண்டுகளும், அலங்கார விளக்குகள் மற்றும் சில வகையான வாசனைப் பொருட்களும், வாசனை திரவியங்களும் கிடைக்கின்றன.

வகை, வகையாய் எங்களுக்கும், உறவினர்களுக்கும் வாங்கிக் கொண்டு காரில் ‘கேனல் ஸ்ட்ரீட்டில்’ திரும்பும் போது பாண்டிச்சேரியின் மணம் எங்களுக்கு நிரம்பவே பிடித்திருந்தது!!!