Saturday, February 28, 2009

ஸ்ரீரங்கத்து தேவதைகளில் சுஜாதா

இரண்டு நாட்களாய் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் சிறுகதைத் தொகுப்பை படித்து வருகிறேன். அனைத்து கதைகளுமே அட்டகாசமாய் இருக்கின்றன.

கதையை படிக்கும்போது, நம்மையுமே ஸ்ரீரங்கத்து சித்திரை வீதிகளிலும், தேரடி முட்டியிலும் கூடவே கூட்டிச் செல்கிறார். ஏதோ அவரது பக்கத்து வீட்டில் இருந்து அனைத்தையும் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.

கடைசி இரண்டு கதைகளான காதல் கடிதம் மற்றும் மறு' வில் அவரது பாட்டியின் கேரக்டரைஷேஷன் அற்புதமானது, அது கதையல்ல நிஜமென்றே தோன்றுகிறது.

தெருமுனை விளையாட்டுகளை, முக்கியமாக தெரு கிரிக்கெட்டை மிக சுவாரசியமாக சுஜாதா ஒருவரால் மட்டுமே சொல்ல முடியும் என தோன்றுகிறது.

ரங்கு, அவரது கடை, கோபாலன், மல்லிகா, பத்தனா ஐயர், குண்டு ரமணி, வரது, வீர ராகவன், கிருஷ்ண மூர்த்தி போன்ற அவரது பாத்திரங்கள், இப்பதிவு எழுதும்போதும், இன்னும் வெகு நாட்களுக்கும் என் நினைவில் இருப்பார்கள்.

சுஜாதாவின் மற்ற நாவல்கள் சிலதையும் நான் படித்திருக்கிறேன், படித்து கொண்டிருக்கிறேன். எனக்கென்னவோ, மற்ற அவரது நாவல்களை விட ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஒரு படி மேல் என்னை குதுகலப் படுத்துவதாகவே தோன்றுகிறது. இதில் வரும் நகைச்சுவை, சமூகப் பார்வைகள், நேரடி வர்ணணைகள், கதாபாத்திரங்கள் எல்லாமே மிகவும் பரிச்சயப் பட்டவை, நாம் நேரில் சந்தித்தவையாக இருக்கின்றன. மேலும் நம் அனைவரது சிறுவயது வாழ்க்கையை நினைவுபடுத்துவதும், ஒரு காரணம்.

என்றாவது ஒருநாள் பூவுலகை விடுத்து, மேலுலகு செல்லும் போது, நான் அங்கு சுஜாதாவை சந்திக்க நேர்ந்தால், இவ்வுளவு அற்புதமான வாசிப்பனுபவம் கொடுத்தற்காக, அவருக்கு சொல்லுவேன் "தேங்க்ஸ், ஸார்!!!".

Thursday, February 26, 2009

கிசுகிசு என்பது தமிழ்ச் சொல்லா??

இன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும் போது பேருந்தில் பண்பலை வானொலி கேட்டுக் கொண்டிருந்தேன்.

பெரும் மோசடி செய்த பிரபல் ஐடி கம்பெனியின் பேரில் படமெடுத்த ஹீரோவை வைத்து அடுத்த படம் செய்ய யாரும் முன்வரவில்லையாம், அதனால் அவரே சொந்த படம் திரும்பவும் எடுக்கிறாராம்.

சரி அந்த கதையை விடுங்கள்.

கிசுகிசு என்பது தமிழ்ச்சொல்லா? இல்லையெனில், இதற்கு சரியான தமிழ்ச்சொல் என்ன?

துணுக்கு - என்பதற்கான தமிழ்ச்சொல் என்ன?

கேரட் என்ற காய்கறியின் தமிழ்ச் சொல் என்ன? அப்படி ஏதும் இல்லையெனில், ஏன் இல்லை? கேரட், ஆப்பிள், பீன்ஸ் போன்ற காய்கறிகளுக்கு ஏன் தமிழில் பெயர் வைக்க வில்லை?

எல்லோரும் வந்து பதில் சொல்லுங்கள், விவாதிக்கலாம்!!

Wednesday, February 25, 2009

டி-௨0 கிரிக்கெட் - இந்தியா தோற்றது ஏன்?

  • சேவக் - கம்பிர் தொடக்க ஜோடி சரியாக விளையாடி ரன்கள் குவிக்க இயலாதது. கடந்த இரு ஆண்டுகளில், இந்தியா வெற்றிபெற்ற போட்டிகளில், இந்த ஜோடியின் பங்களிப்பு மகத்தானது.
  • இரண்டு போட்டியிலும் டாஸ் தோற்று, இந்தியா ஸ்கோர் சேஸ் பண்ண முடியாமல் போனது.
  • தோனியிடமிருந்து பெரிய அளவில் பங்களிப்பு இல்லை, அவரது டைமிங் இரண்டாவது போட்டியில், படு மோசம், முப்பது பந்துகளில், இருபத்தெட்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது அவரால்.
  • சரியான திட்டமிடல் இல்லாதது. இரு போட்டிகளிலுமே பேட்டிங் ப்ளான் இல்லை.
  • இஷாந்த் ஷர்மா, ஷகீர் கான் கூட்டணி எதிர்பார்த்த அளவில் சோபிக்காதது.
  • ஒரு சரியான ஆல்ரவுண்டர் இல்லாதது.
  • பின் குறிப்பு: சில விமர்சனங்களில், இந்தியாவின் புதிய உடை ராசியில்லை என்று கூறுகிறார்கள். இன்று சுனில் கவாஸ்கர் கூட இதையே கூறி இருக்கிறார். இதை விட அபத்தமான காரணம் வேறெதுவும் இருக்க முடியாது.

Tuesday, February 24, 2009

எங்கே எனது கவிதை??

அருகருகே குடியிருந்தோம்..
நித்தமும்
ஒருவர் முகத்தில் ஒருவர் விழிப்போம்..
வழமையாய் காலையில்
ஒரே மிதிவண்டியில் ஆற்றுக்கு செல்வோம்
செல்லும் போது நீயும்,
திரும்பும் போது நானும் ஓட்டுவோம்,
கேட்டால் எதிர்காற்றில் உன்னால் அழுத்த முடியாதென்பாய்..
என் பேனா மூடியில் பேப்பர் அடைத்து
கொண்டபோது, நீயே தண்ணீர் ஊற்றி எடுத்துத் தந்தாய்..
கிட்டிப் புல் விளையாடும் போது,
நான் எதிரணியில் இருந்தால்,
மெதுவாய் அடிப்பாய் நான் கேட்ச் பிடிக்க வசதியாய்..
ஏதாவது ஒரு பலகாரம் உங்கள் வீட்டில் செய்தால்,
உடனே எனக்கு கொடுக்க ஓடோடி வருவாய்..
உனக்கு ஓர் பம்பரம் வாங்கினால்,
எனக்கும் ஒன்று வாங்கி வருவாய் நான் கேட்காமலே..
வீட்டுப் பாடம் எழுத நேரமில்லா
சில மதிய உணவு இடைவேளைகளில்
எனக்காக நீ அவசரமாய் வாய்ப்பாட்டை சிலேட்டில் கிறுக்குவாய்..
உன் வீட்டிற்கு வரும் உறவினர் குழந்தைகளை
என் வீட்டிற்கும் அழைத்து வந்து
என்னை அறிமுகப் படுத்துவாய்..
பள்ளிக் கூடத்தில் எப்போதும் என்னருகே
அமர்ந்திருப்பாய்..
கோயிலுக்கும், சினிமாவுக்கும்,
சந்தைக்கும், விளையாட்டிற்கும்
நானில்லாமல் எங்கும் தனியாய் சென்றதில்லை நீ..
கல்லூரி பருவத்தில்
வேறிடத்தில் நீ படிக்க நேரிட்ட போதும்,
என்னுடன் தினமும் உரையாடுவாய்.
தினசரி கதைகளை தெரிவிப்பாய்..
இருவரும் நகரத்திற்கு வந்து
வேலையில் சேர்ந்தும் தொடர்பில் இருந்தோம்..
திருமணம், பிள்ளைப்பேறு,
வளைகாப்பு, மகளின் மஞ்சள் நீராட்டு
என வைபவங்கள்
உன் வீட்டிலும், என் வீட்டிலும் நடந்தேறின..
ஒவ்வொன்றிலும் என் ஆலோசனையை கேட்டாய் நீ..
இப்படியாய் நம் வாழ்வு
செவ்வனே சென்று கொண்டிருந்த போது
திடிரென, பூவுலகு எய்தினாய் நீ!!
நண்பா,
இத்தனை நாளாய் தினம் தினம்
பார்த்து, பழகிய உன் அருகாமை இல்லாமல்
வெறுமையாய் நகர்கிறது என் வாழ்வு,
எப்போது நாம் மீண்டும் சந்திப்போம்,
சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ?

Sunday, February 22, 2009

சன் டிவியே, மனசாட்சி இருக்கிறதா??

இன்று (ஞாயிறு) காலையில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். தர்ம பத்தினியின் தொணதொணப்பு தாங்காமல் (ஹிஹிஹி, எப்போதும் கணிப்பொறியை கட்டிக் கொண்டு மாரடிக்கிறேனாம்), சற்று நேரம் கணிப்பொறியை மூடிவிட்டு, டிவியை ஆன் செய்தேன். நேரம் காலை ஒன்பது ஐம்பத்தைந்து.

சன் டிவியில் டாப் டென் மூவிஸ் ஓடிக் கொண்டிருந்தது. இரண்டாம் இடம் 'வெண்ணிலா கபடி குழு'வை பார்த்து ரசித்தேன். நல்ல படம்தான். அடுத்ததாக முதலிடம் பிடித்த படத்தை காட்டியபோது மிகுந்த அதிர்ச்சி. ஹார்ட் அட்டாக் வந்தது போலிருந்தது, கண்ணீர் கொட்டியது. ஏனென்றால் முதலிடமென் சன் டிவி அறிவித்த படம் 'படிக்காதவன்'.

படு மொக்கையான படம். பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு விட்டது. சன் டிவி பிக்சர்ஸ் வெளியீடு என்பதற்காக என்ன வேண்டுமானாலும் ரேங்கிக் குடுப்பதா? என்ன அநியாயம் இது? எப்படி ரேங்கிங்கை நிர்ணயிக்கிறார்கள்? இப்படித்தான் சில நாட்கள் முன்பு தெனாவட்டு, திண்டுக்கல் சாரதியையும் முதலிடத்தில் அறிவித்தார்கள்.

சன் டிவியே, உனக்கு மனசாட்சியே இல்லையா????

தேன்கூடு திரட்டி என்னானது?

இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் வலைப்பதிவு உலகத்திற்கு வந்திருக்கிறேன். எனது முந்தைய பதிவில் வலைப்பதிவு உலகத்தின் இந்த இரண்டு வருடத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி வினவி இருந்தேன். அதில் எவரும் தேன்கூடு திரட்டி பற்றி சொல்லவில்லை. யாராவது சொல்லுங்களேன், என்னானது இத்தளம்? 2007ல் தேன்கூடு திரட்டி மிக அருமையாக செயல் பட்டுக் கொண்டிருந்ததே, நிறைய போட்டிகள் எல்லாம் வைத்தார்களே. எங்கே போயிற்று தேன்கூடு?

Saturday, February 21, 2009

அஹம் பிரம்மாஸ்மி ? - நான் கடவுளா? - படம் குறித்த கேள்விகள்

1. ஆர்யா அட்டகாசமாக நடித்திருக்கிறார் அல்லது வாழ்ந்திருக்கிறார், ஆனால் அவரது கேரக்டர் முழுமை பெறாதது போல் தோன்றுகிறதல்லவா?

2. பூஜா, பாலாவின் முந்தைய கதாநாயகிகளையே ஞாபகப்படுத்துகிறார், முக்கியமாக பல இடங்களில், நந்தாவின் லைலாவையே பார்க்கும் படி இருப்பது, படத்தின் பலமா அல்லது பலவீனமா?

3. காவல் நிலையத்தில் நடக்கும் காமெடி காட்சி (மிமிக்ரி, எம்ஜிஆர் - சிவாஜி - நயந்தாரா டான்ஸ்) படத்தில் எவ்விதத்திலும் ஒட்ட வில்லையே?

4. பூஜா பாடுவதாக தோன்றும் சில பாடல்கள், வெவ்வேறு குரல்களில் வருகின்றனவே (வயதான குரல் பாடல்) அவருக்கு பொருந்த வில்லையல்லவா?

5. கிளைமேக்ஸில் பூஜாவின் சிதைந்த முகத்தில் மேக்கப் என்பது அப்பட்டமாக தெரிகிறதே, ஏன் இந்த இடறல்?

6. கடைசி காட்சியில் தாண்டவன் ஏன் தனியாக வந்து சண்டை போடுகிறான், எங்கே அவனது அடிப்பொடிகள், இன்ஸ்பெக்டர்?

இதற்கெல்லாம் பாலாதான் பதில் சொல்லவேண்டும் என்பதில்லை, இதை படிக்கும் நீங்கள் சொல்லுங்களேன்..

Thursday, February 19, 2009

பழைய பதிவர்களெல்லாம் எங்கே??

தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு வந்து இருக்கிறேன், 2005-2006 ல் பார்த்து, படித்து பழகிய நிறைய பதிவர்களை தற்போதைய இடுகைகளில் சந்திக்க முடியவில்லை. அவர்க்ளெல்லாம் எங்கே சென்றார்கள், இன்றும் எழுதுகிறீர்களா??

1. கோ. கணெஷ்
2. டி.பி.ஆர். ஜோசப்
3. தருமி
4. துளசி கோபால்
5. ஞான வெட்டியான்
6. டுபுக்கு

இன்னும் பல பதிவர்கள் ஞாபகம் வரவில்லை. இவர்களின் links கொடுக்க முடியுமா?

தேன்கூடு திரட்டி தளம் என்னானது? தமிழ்மணத்தை தவிர வேறு aggregators வந்து பிரபலமாகி உள்ளதா??

போலி பிரச்சினை தீர்ந்து விட்டதா??

தமிழ் வலைப் பதிவில் வேறு ஏதாவது முன்னேற்றங்கள்? Improvements/updates/rules?

தயவுசெய்து சொல்லுங்களேன்...

Wednesday, February 18, 2009

வெண்ணிலா கபடி குழு - விமர்சனம் அல்ல

சென்னை ராமாபுரத்தில் இருப்பவர்களுக்கு மிக அருகே உயர்தர மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் எதுவும் கிடையாது. சத்யம் 12 km, ஐநாக்ஸ் 14 km, மாயாஜால் 30 km. கிண்டியிலோ, போரூரிலோ ஏன் எதுவும் இல்லை?

உதயம் 5 km ல் உள்ளது. இதை விட்டால், சாதாரண ஆனால் நல்ல தியேட்டர் வடபழனி கமலா, சாலிகிராமம் ஏவிஎம் ராஜேஸ்வரி என இரண்டும் உள்ளன.

இதில் கமலா தியேட்டருக்கு மட்டும் online booking வசதி உள்ளது (தற்போதிய படம்: வில்லு). உதயம் தியேட்டரில் வார இறுதியில் புதிய படம் பார்க்க, 2 - 3 நாட்கள் முன்பே நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் அனைத்து மல்டிப்ளெக்ஸ் மற்றும் சாதா தியேட்டர்களிலும் பைக் நிறுத்த Rs 10 டிக்கெட். ஐநாக்ஸில் Rs 15 என நினைக்கிறேன்.

இதை எல்லாம் அலசி ஆராய்ந்து ஏவிஎம் போக முடிவெடுத்தோம். ஒரு ஞாயிறு மாலை முதல் வகுப்பு டிக்கெட் Rs. 40 க்கு வாங்கி சென்றால் அரங்கமே நிரம்பி வழிகிறது. சிறுவர்கள், சிறுமிகள், குழந்தைகள், பெரியவர்கள், மாணவர்கள் என்று கலந்து பட்ட கூட்டத்தில் படம் பார்ப்பதே ஓர் அற்புதமான அனுபவம்.

ஒரு வருடத்திற்கு முன்பு படம் பெயரை கேள்விப் பட்ட போதே படத்தை பார்க்க வேண்டும் என நினைத்து இருந்தேன். படத் தயாரிப்பாளர் ஒரு NRI யாம். எனது நண்பரின் நண்பராம்.

தியேட்டரில் இருக்கைகள் சற்று குறுகலாக உள்ளன. முன் சீட்டுகாரர் தலை மறைக்கிறது. ஆனால் காற்று நன்றாக வருகிறது. சரி, 40 ரூபாய்க்கு புஷ்பேக் சீட்டா கிடைக்கும் என்று சமாதானம் செய்து கொண்டேன்.

சரி படத்திற்கு வருவோம். படம் 35 mm மில் ஆரம்பித்த போது பயந்து விட்டேன், சரிதான் சின்ன பட்ஜெட் படம் என்று 35 mm மில் எடுத்து விட்டார்களா. ஆனால் கொஞ்ச நேரத்தில் ஆய் போகும் பசங்கள் பெரியவர்கள் ஆகும் போது விரியும் ஸ்க்ரீன் அழகு.

ஹீரோவும், ஹீரோயினும் கண்களால் பேசிக் கொள்வதை ரசிக்கலாம். ஒரு சில விமர்சனங்களில், இதை கிண்டல் செய்கிறார்கள். இதுதானே இயல்பு, இப்படித்தானே எங்கள் கிராமத்தில் இப்போதும் இளசுகள் பேசிக் கொள்கின்றன. அது போல் ஹீரோயின் கிராமத்து பெண்ணாயிருப்பினும் வாயாடிக்க வில்லையாம். யார் சொன்னது, எல்லா கிராமத்து பெண்களும் வாயாடிகள் என்று? பாதி கிராமத்து பெண்கள் அடக்கமான, அமைதியானவர்களே, நிறைய வெட்க படுபவர்களே. வேண்டுமானால் எங்கள் கிராமத்திற்கு வந்து பாருங்கள். மேலும் இந்த படத்தில் ஹீரோயின் மதுரை, டவுன் பெண்ணல்லவா.


கபடி ஆட்டத்தை இன்னும் பிரமாதமாய் காட்டியிருக்கலாம். ஒரே பாட்டில் சாதா அணி, சூப்பர் டீம் ஆவது சினிமாவில் மட்டுமே நடக்கும். ஹீரோ இயல்பாய் நடித்து இருக்கிறார். காமெடி நன்றாக இருக்கிறது. யதர்த்தமான கதை, திரைக்கதை. மக்களை குடும்பத்துடன் திரை அரங்கிற்கு அழைத்து வந்திருப்பது இயக்குனரின் வெற்றி.


திருவிழா கொண்டாட்டங்கள் அழகு. ஜாதி பற்றிய வசனங்கள் கைதட்டலை அள்ளுகின்றன. இசை, பரவாயில்லை.

படத்தின் ஊடே வரும் விரசமில்லா காமெடியை வாய் விட்டு சிரித்து ரசிக்கலாம். எல்லோரும் சொல்வது போல் பரோட்டா காமெடிதான் சூப்பர் என்றாலும், மேலும் நிறைய உள்ளன. ஸ்லோ சைக்கிள் ரேசில் படு வேகமாய் ஓட்டும் சீன், உரியடிக்கும் சீனில் மாமியார் மண்டையை உடைப்பது, படாத இடத்தில் பட்டுடப் போகுது என்று மனைவி சொல்லும் இடம், கபடி வீரரின் உறவு முறையை சொல்லும் மதுரைக் காரர் என அமர்க்களப் படுத்தியுள்ளனர்.

கபடி கோச் ஆக வருபவர் அசத்தி இருக்கிறார், "என்னடே சொல்லுதே, நீ ஆடுறியா" என்ற மொழி பிரயோகமும், உடல் அசைவுக்களுமாய் இயல்பாய் நடித்து இருக்கிறார்.

நடுவில் பக்கத்து ஊர் காரர்கள், பழைய பகையை தீர்க்க தண்ணி அடித்து கொண்டு சலம்பி கொண்டிருப்பதை அடிக்கடி காட்டும் போதே தெரிந்து விடுகிறது, அவர்கள் அடிக்க போவதில்லை என்று, இந்த சீன்களை வெட்டி இருக்கலாம்.

வழக்கமாய் துடுக்கு பெண்ணாய் வரும் சரண்யா, இதில் அடக்கமாய் வருவது வித்தியாசமாய், ரசிக்கும் படியாய் இருக்கிறது, well done madam!

கடைசியில் ஹீரோ ஏன் சாகிறார் என்று யாரும் தலையை பிய்த்து கொள்ள வேண்டாம், ஏதோ டைரக்டர் ஆசை பட்டு விட்டார், விட்டு விடுங்கள்.

வெண்ணிலா கபடி குழு - நின்று விளையாடி இருக்கிறது!!!