இரண்டு நாட்களாய் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் சிறுகதைத் தொகுப்பை படித்து வருகிறேன். அனைத்து கதைகளுமே அட்டகாசமாய் இருக்கின்றன.
கதையை படிக்கும்போது, நம்மையுமே ஸ்ரீரங்கத்து சித்திரை வீதிகளிலும், தேரடி முட்டியிலும் கூடவே கூட்டிச் செல்கிறார். ஏதோ அவரது பக்கத்து வீட்டில் இருந்து அனைத்தையும் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.
கடைசி இரண்டு கதைகளான காதல் கடிதம் மற்றும் மறு' வில் அவரது பாட்டியின் கேரக்டரைஷேஷன் அற்புதமானது, அது கதையல்ல நிஜமென்றே தோன்றுகிறது.
தெருமுனை விளையாட்டுகளை, முக்கியமாக தெரு கிரிக்கெட்டை மிக சுவாரசியமாக சுஜாதா ஒருவரால் மட்டுமே சொல்ல முடியும் என தோன்றுகிறது.
ரங்கு, அவரது கடை, கோபாலன், மல்லிகா, பத்தனா ஐயர், குண்டு ரமணி, வரது, வீர ராகவன், கிருஷ்ண மூர்த்தி போன்ற அவரது பாத்திரங்கள், இப்பதிவு எழுதும்போதும், இன்னும் வெகு நாட்களுக்கும் என் நினைவில் இருப்பார்கள்.
சுஜாதாவின் மற்ற நாவல்கள் சிலதையும் நான் படித்திருக்கிறேன், படித்து கொண்டிருக்கிறேன். எனக்கென்னவோ, மற்ற அவரது நாவல்களை விட ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஒரு படி மேல் என்னை குதுகலப் படுத்துவதாகவே தோன்றுகிறது. இதில் வரும் நகைச்சுவை, சமூகப் பார்வைகள், நேரடி வர்ணணைகள், கதாபாத்திரங்கள் எல்லாமே மிகவும் பரிச்சயப் பட்டவை, நாம் நேரில் சந்தித்தவையாக இருக்கின்றன. மேலும் நம் அனைவரது சிறுவயது வாழ்க்கையை நினைவுபடுத்துவதும், ஒரு காரணம்.
என்றாவது ஒருநாள் பூவுலகை விடுத்து, மேலுலகு செல்லும் போது, நான் அங்கு சுஜாதாவை சந்திக்க நேர்ந்தால், இவ்வுளவு அற்புதமான வாசிப்பனுபவம் கொடுத்தற்காக, அவருக்கு சொல்லுவேன் "தேங்க்ஸ், ஸார்!!!".