Thursday, May 31, 2012

என்றுமே இளமையாக இருக்க வேண்டுமா??


முகநூலில் (Facebook) நிரம்பி வழியும் ஏராளமான மொக்கை செய்திகள்/குறிப்புகள் நடுவே சில சமயம் நன்முத்துகளும் கிடைக்கும். எனது நண்பரின் நண்பர் பகிர்ந்த கருத்து இது, மூலம் எங்கிருந்து என தெரியவில்லை.



ஓரடி நடவேன், ஈரடி கடவேன், இருந்து உண்ணேன், படுத்து உறங்கேன்


அனைவருக்கும் என்றும் இளமையாகவே இருக்க வேண்டும் என்ற என்ற ஆசை இருக்கும். அதற்கு சான்றோர்கள் மிகவும் எளிய ஒரு வழியை கூறுகின்றனர். ஓரடி நடவேன், ஈரடி கடவேன், இருந்து உண்ணேன், படுத்து உறங்கேன் என்பதே அது, அதற்கான விளக்கம் ஓரடி நடவேன்.. நமது உடம்பின் நிழல் கால் அளவில் ஓர் அடியாக இருக்கும் உச்சிப்பொழுது நேரத்தில் நான் வெளியில் நடக்க மாட்டேன். உச்சி வெயில் ஆகாது. ஈரடி கடவேன் - அதாவது, ஈர அடி கடவேன், ஈரமான இடங்களில் நீண்ட நேரம் நிற்பதோ, நடப்பதோ கூடாது என்பதால் அப்படி நடக்க மாட்டேன். இருந்து உண்ணேன் - ஏற்கெனவே நான் சாப்பிட்ட உணவு வயிற்றில் இருக்கும் போதே மேலும் உண்ண மாட்டேன். நன்கு ஜீரணமான பின்புதான் மறுபடியும் சாப்பிடுவேன். படுத்து உறங்கேன் - தூக்கம் வந்த பிறகுதான் படுக்கைக்கு செல்வேன். படுத்துக் கொண்டு தூக்கம் வரவில்லையே என நினைத்தபடி படுக்கையில் கிடக்கமாட்டேன். இதுவே நீண்டநாள் இளமையோடு வாழும் ரகசியம் என குறிபிடுகின்றனர் சான்றோர்.

Wednesday, May 30, 2012

பழூர் காராச்சேவு 5/29/2012 - பில்லா, சாரு, பவர் ஸ்டார், ஐபிஎல்-5, சினிமா


பில்லா - 2 இசை

சில நாட்களாக பில்லா - 2 பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன். சாதாரணமாய் லேப்டாப் ஸ்பீக்கரில் கேட்கும் போது அவ்வளவாக கவரவில்லை. ஆனால் போஸ் போன்ற நல்ல ஹெட்செட்டில் கேட்கும் போது, பாடலே மாறி விடுகிறது. இப்போதைக்கு மதுரைப் பொண்ணும், இதயமும் ஃபேவரிட். சில மாதங்கள் முன்பு இப்படித்தான் மங்காத்தா பாடல்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன், ஆனால் தற்போது அந்த பாடல்கள் என்னை கவருவது இல்லை. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, இருபது வருடங்களுக்கு முன்பு வந்த இளையராஜாவின் 'சொர்க்கமே என்றாலும்', 'செண்பகமே' போன்ற பாடல்கள் இப்போதும் என்னைக் கவருவது ஆச்சரியமே!!


சாரு நிவேதிதாவின் வழக்கு எண் 18/9 விமர்சனம்

ஏகப்பட்ட மசாலா திரைப்படங்களுக்கு நடுவில் கொஞ்சம் நன்றாக ஏதாவது திரைப்படம் வெளிவந்தால், அதை சாரு தனது வலைத் தளத்தில் கிழிப்பது ஒரு ஃபேஷனாகி விட்டது. படத்தை 10 நிமிடம் கூட பார்க்க முடிய வில்லையாம், இடைவேளையில் எழுந்து வெளியே வந்து விட்டாராம். இவரது தேகம் நாவலை யாராவது பாதி மட்டும் படித்து விட்டு விமர்சித்தால் ஒத்துக் கொள்வாரா? என் போன்ற சாதாரண சினிமா ரசிகனுக்கு வழக்கு நல்ல படம்தான்!!


நீயா நானா கோபிநாத் - பவர் ஸ்டார் சண்டை

பவர் ஸ்டார் என்ற அப்பிராணியை விஜய் டிவியில் கோபிநாத் சீரியஸாக கலாய்த்தார். எவ்வளவு வம்பிலிழுத்தாலும், பொறுமை இழக்காமல் சிரித்துக் கொண்டே பதில் கூறிய பவர் ஸ்டார் என்னை கவர்ந்தார். ஆனந்தத் தொல்லை யு.எஸ்ஸில் ரிலிசானால் பார்க்க முடிவு செய்திருக்கிறேன் :)


ஐபிஎல் - 5

ஏகப்பட்ட புகார்கள்களுடன் ஐபிஎல் - 5 முடிவடைந்திருக்கிறது. சென்னை இறுதி போட்டிக்கு வந்தது மேட்ச் ஃபிக்ஸிங் என்று இணையத்தில் 357 பேர் சத்தியம் செய்திருக்கிறார்கள். இவர்களில் 356 பேராவது அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் விடாமல் தொடர்ந்து பார்ப்பார்கள். எனவே கிரிக்கெட் தொடர்ந்து வாழும்!! அது ஃபிக்ஸிங்கோ என்னவோ, எனக்கு முடிவு முன்பே தெரியாத வரை சுவாரசியம்தான், அதனால் தொடர்ந்து பார்ப்பேன் என்றார் பிலாசாபி பிரபாகரன், அதையே நானும் வழிமொழிகிறேன்.


தி ஷஷாங்க் ரிடம்ஸன்

இப்போதுதான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். அருமையான படம். நீண்ட காலம் சிறையில் வாழும்/வாடும் இரு நண்பர்கள் மற்றும் சில சம்பவங்களை சுவாரசியமாக படமாக்கி இருக்கின்றனர். இதை யாராவது தமிழில் எடுக்கலாமே?

Friday, May 18, 2012

தூக்கம் தொலைத்த இரவுகளில் எழுதிய கவிதைகள் - Part 2

நீண்ட நாட்களாகவே கவிதைகள் எழுதுவது போல் கனவு வரும், கனவு கலைந்து எழுந்தால் பல் துலக்கி, பஸ் படித்து ஆபிசுக்கு சென்று விடுவேன். அப்படியும் அடித்துப் பிடித்து ஓரு சில கவிதைகளை (வரிகளை) கிறுக்கி விட்டேன். படித்துத்தான் பாருங்களேன். நடிகர் பார்த்திபன் சில வருடங்களுக்கு முன்பு 'கிறுக்கல்கள்' என்று ஒரு கவிதை தொகுதி வெளியிட்டார். அந்த டிரெண்டில் இந்த கவிதைகளுக்கு கிறுக்கோ கிறுக்கல்கள் என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்தால், நமது ப்ளாக்குக்கு வரும் ஓரிருவரும் வரமாட்டார்கள் என்பதால் இப்படி ஃபேன்சியாக ஓரு தலைப்பு. இந்த கிறுக்கல்களை படித்து நீங்கள் தூக்கம் தொலைக்காமல் இருந்தால் சரி!!!

முகப் புத்தகத்தில்
நண்பனின் குறுஞ்செய்தி
முகம்தான் நினைவில் இல்லை...

மச்சான் என்போம்
மச்சி என்போம்
தலைவா என்போம்
பாஸ் என்போம்
நண்பேன்டா என்போம்
உனக்காக உயிரையே
கொடுப்பேன் என்போம்
அடுத்தவரிடம் அறிமுகம் செய்கையில்
ஆருயிர் நட்பென்போம்
ஐம்பது ரூபாய் கடன் கேட்டால்
இப்ப ரொம்ப டைட் மச்சி என்போம்!!!!

நேற்று என் பள்ளிநாளைய நண்பர் முருகானந்தம்
வீட்டிற்கு வந்திருந்தார்...
இடைவிடாத மழையில்,
சளித் தொந்தரவையும் பொருட் படுத்தாது
என்னைப் பார்க்க ஆர்வமுடன் வந்திருக்கிறார்...
டீக்கான கோட் சூட்
விலை உயர்ந்த வாட்ச்
ரேபான் கூலிங் கிளாஸ்
நுனிநாக்கு ஆங்கிலம்
பிராண்டட் ஷூ
அவ்வப்போது சிணுங்கிடும் பிளாக்ஃபெர்ரி...
நிறைய பேசினோம்
ஒபாமா
உலகப் பொருளாதாரம்
ரவா லட்டு செய்முறை
பிஸ்ஸா நல்லதா
உயரும் டாலர் மதிப்பு....
பள்ளி நாட்களில் தொலைத்த
என் நண்பன் 'முருகேசு'வை
தேடிக் கொண்டேயிருந்தேன்
அவர் கிளம்பும் வரை....
கிளம்புகையில் மூக்குசளியை
கையால் துடைத்து
அநிச்சையாய் மேஜைக்கடியில் தடவினார்.....
'முருகேசு' என்று கட்டியணைத்துக் கொண்டேன்!!

செல்பேசியில் சிக்கனமாய்
"ஈவினிங் ஷாப்பிங் போலாமா?"
என்று குறுஞ்செய்தி
அனுப்பும் மனைவியிடம்
எப்படி காட்டுவேன்
லே-ஆஃப் லெட்டரை??

அவ்வையாரின் ஆத்திச்சூடி
பாரதியாரின் பாப்பா பாட்டு
கம்பரின் ராமாயணம்
அகநானூறு
புறநானூறு
ஜெயகாந்தன்
ஞானக்கூத்தன்
புதுமைப் பித்தன்
சுஜாதா
எல்லோரையும் நாளையிலிருந்து படிக்கின்றேன்,
இப்போது அவசரமாய் படித்து விடுகிறேன் குமுதம் - 'லைட்ஸ் ஆன்'!!!

இங்கே க்ளிக்கவும்: தூக்கம் தொலைத்த இரவுகளில் எழுதிய கவிதைகள் - Part 1

இதற்கு வரும் பின்னூட்டங்களைப் பொறுத்தே, அதாவது எத்தனை பின்னூட்டம் வருகிறதோ அத்தனை நாட்கள் கழித்து அடுத்த செட் கவிதைகள் வெளிவரும்.. so உங்கள் தலைவிதி உங்கள் கையில் :-)))

Thursday, May 17, 2012

பழூர் காராச்சேவு - 5/16/2012

மேலே தலைப்பில் உள்ள தேதி (திகதி?)யை கவனித்தீர்களா? நமது ஊரில் தேதியை எழுதும் போது நாள்/மாதம்/வருடம் என்றே எழுதுவோம். ஆனால் இங்கே அமெரிக்காவில் மாதம்/நாள்/வருடம் என்று எழுதுவார்கள். கணிணி மென்பொருளில் சில சமயம் நிரலை உள்ளிடும் போது எங்களுக்கு குழப்பம் வந்துவிட்டால் கஷ்டம்தான், கவனமாக இருக்க வேண்டும்!!

இது மட்டுமல்ல, இன்னும் நிறைய விஷயங்களில் அமெரிக்கா நமக்கு நேரெதிர்தான். சாலையில் வலது பக்கம் பயணிப்பது (நாம் இடது பக்கம் - keep left), கரண்ட் சுவிட்ச் மேலே இழுத்தால் ஆன் (கீழே ஆஃப்).

சாலையில் வலதுபக்கம் பயணிப்பது அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான நாடுகள் வலதுபக்க பயணம்தான். இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற ஒருசில நாடுகளில் மட்டுமே இடதுபக்க பயணம். இதற்கு ஒரு பெரிய காரணம் உள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அந்நாளில் 6 முதல் 8 குதிரைகள் கூடி இழுக்கக்கூடிய பெரிய குதிரை வண்டிகளை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர் இடது பக்க கடைசி குதிரையில் அமர்ந்து வண்டியை ஓட்டும்போது எல்லா குதிரைகளையும் வலது கையிலுள்ள சாட்டையால் கட்டுப் படுத்துவார். வண்டியில் ஓட்டுநருக்கு இருக்கை இருக்காது.

அவ்வாறு இடது பக்க குதிரையில்(left most horse) உட்கார்ந்து ஓட்டுபவருக்கு எதிர்ப்புறம் வரும் வாகனங்கள் இடது புறம் வந்தால், வலப்புறம் செல்பவர் குதிரைகளை கட்டுப் படுத்தவும் அவரது கண்பார்வையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதற்கும், இடித்து விடாமல் ஓட்டவும் வசதியாக இருக்கும். இப்படி ஆரம்பித்ததுதான் வலப்பக்க பயணம்.

ஆஸ்திரேலியா என்பதை ஏன் ஈழத்தமிழில் அவுஸ்திரேலியா என்று கூறுகின்றனர்? கதைப்பது = பேசுவது, எங்கடே = எம் என இம்மாதிரி ஈழத்தமிழ் வார்த்தைகளுக்கு அகராதி ஏதெனும் உள்ளதா?

handloom என்றால் கைத்தறி என்று தெரியும், powerloom என்பதற்கு தமிழ்ச்சொல் தெரியுமா? விடை: பொறித்தறி!! சுஜாதா வழங்கிய கலைக்களஞ்சியம் ஒன்றில் படித்தது (கற்றதும் பெற்றதும் - 2003).

எனது மகன் நன்றாக வாசிப்பான் - இந்த வாக்கியத்தில் உள்ள பிழை என்ன?? 'எனது மகன்' என்று வரக்கூடாது, தொல்காப்பிய இலக்கண விதிகளின்படி, உயர்தினையின் முன் -அது- என வரக்கூடாது. 'எனக்கு மகன்' என்று சொல்லலாம். எனது வீடு என்று சொல்லலாம், எனது மகன் எனக் கூடாது. இது கலைஞர் எழுதிய தொல்காப்பிய விளக்கத்தில் இருந்து எடுத்தாளப் பட்டது.

இன்னொரு குறிப்பு: வாழ்த்துக்கள் - தவறான பிரயோகம், வாழ்த்துகள் என்பதே சரி!!

களவும் கற்று மற - என்ற ஒரு பழமொழியை அடிக்கடி பலர் கூற கேட்டு இருப்பீர்கள். ஆனால் சரியான பழமொழி அதுவல்ல. சரியான பழமொழி: களவும், கத்தும் மற - இதுவே சரி. களவு - திருடுவது, கத்து - புறங்கூறுதல். திருடுவதையும், பிறர் மேல் புறங்கூறுதலையும் (பழிச்சொல்) மறந்து விடு என்பதை அர்த்தம். இது ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது.

ஐபிஎல்லில் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு வருமா? நம்மவர்கள் எப்போதுமே - சாகும் நேரத்தில் சங்கரா, சங்கரா - என்றே விளையாடி அடுத்த சுற்றுக்கு வருவர். அப்படி இம்முறையும் வந்தால் செயிண்ட் லூவிஸ் பிள்ளையாருக்கு, பிஸ்ஸா (pizza) படைப்பதாய் கனவில் வேண்டிக் கொண்டிருக்கிறேன்!!!

அது சரி, இந்த பதிவிற்கு ஏன் பழூர் காராச்சேவு என்று பெயர்?? பதிவர்கள் அவியல், குவியல், ஒயின்ஷாப், சாண்ட்வெஜ் என்று எல்லா பக்கமும் கவர் செய்து விட்டதால் காராச்சேவு என்று எனக்கு பிடித்த ஒரு பதார்தத்தையும், பழூர் என்பது எனது ஊர் ஆதலால் அதனையும் சேர்த்து விட்டேன்!!!