Friday, May 18, 2012

தூக்கம் தொலைத்த இரவுகளில் எழுதிய கவிதைகள் - Part 2

நீண்ட நாட்களாகவே கவிதைகள் எழுதுவது போல் கனவு வரும், கனவு கலைந்து எழுந்தால் பல் துலக்கி, பஸ் படித்து ஆபிசுக்கு சென்று விடுவேன். அப்படியும் அடித்துப் பிடித்து ஓரு சில கவிதைகளை (வரிகளை) கிறுக்கி விட்டேன். படித்துத்தான் பாருங்களேன். நடிகர் பார்த்திபன் சில வருடங்களுக்கு முன்பு 'கிறுக்கல்கள்' என்று ஒரு கவிதை தொகுதி வெளியிட்டார். அந்த டிரெண்டில் இந்த கவிதைகளுக்கு கிறுக்கோ கிறுக்கல்கள் என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்தால், நமது ப்ளாக்குக்கு வரும் ஓரிருவரும் வரமாட்டார்கள் என்பதால் இப்படி ஃபேன்சியாக ஓரு தலைப்பு. இந்த கிறுக்கல்களை படித்து நீங்கள் தூக்கம் தொலைக்காமல் இருந்தால் சரி!!!

முகப் புத்தகத்தில்
நண்பனின் குறுஞ்செய்தி
முகம்தான் நினைவில் இல்லை...

மச்சான் என்போம்
மச்சி என்போம்
தலைவா என்போம்
பாஸ் என்போம்
நண்பேன்டா என்போம்
உனக்காக உயிரையே
கொடுப்பேன் என்போம்
அடுத்தவரிடம் அறிமுகம் செய்கையில்
ஆருயிர் நட்பென்போம்
ஐம்பது ரூபாய் கடன் கேட்டால்
இப்ப ரொம்ப டைட் மச்சி என்போம்!!!!

நேற்று என் பள்ளிநாளைய நண்பர் முருகானந்தம்
வீட்டிற்கு வந்திருந்தார்...
இடைவிடாத மழையில்,
சளித் தொந்தரவையும் பொருட் படுத்தாது
என்னைப் பார்க்க ஆர்வமுடன் வந்திருக்கிறார்...
டீக்கான கோட் சூட்
விலை உயர்ந்த வாட்ச்
ரேபான் கூலிங் கிளாஸ்
நுனிநாக்கு ஆங்கிலம்
பிராண்டட் ஷூ
அவ்வப்போது சிணுங்கிடும் பிளாக்ஃபெர்ரி...
நிறைய பேசினோம்
ஒபாமா
உலகப் பொருளாதாரம்
ரவா லட்டு செய்முறை
பிஸ்ஸா நல்லதா
உயரும் டாலர் மதிப்பு....
பள்ளி நாட்களில் தொலைத்த
என் நண்பன் 'முருகேசு'வை
தேடிக் கொண்டேயிருந்தேன்
அவர் கிளம்பும் வரை....
கிளம்புகையில் மூக்குசளியை
கையால் துடைத்து
அநிச்சையாய் மேஜைக்கடியில் தடவினார்.....
'முருகேசு' என்று கட்டியணைத்துக் கொண்டேன்!!

செல்பேசியில் சிக்கனமாய்
"ஈவினிங் ஷாப்பிங் போலாமா?"
என்று குறுஞ்செய்தி
அனுப்பும் மனைவியிடம்
எப்படி காட்டுவேன்
லே-ஆஃப் லெட்டரை??

அவ்வையாரின் ஆத்திச்சூடி
பாரதியாரின் பாப்பா பாட்டு
கம்பரின் ராமாயணம்
அகநானூறு
புறநானூறு
ஜெயகாந்தன்
ஞானக்கூத்தன்
புதுமைப் பித்தன்
சுஜாதா
எல்லோரையும் நாளையிலிருந்து படிக்கின்றேன்,
இப்போது அவசரமாய் படித்து விடுகிறேன் குமுதம் - 'லைட்ஸ் ஆன்'!!!

இங்கே க்ளிக்கவும்: தூக்கம் தொலைத்த இரவுகளில் எழுதிய கவிதைகள் - Part 1

இதற்கு வரும் பின்னூட்டங்களைப் பொறுத்தே, அதாவது எத்தனை பின்னூட்டம் வருகிறதோ அத்தனை நாட்கள் கழித்து அடுத்த செட் கவிதைகள் வெளிவரும்.. so உங்கள் தலைவிதி உங்கள் கையில் :-)))

5 comments:

Anonymous said...

ellamae sumardhan..

பழூர் கார்த்தி said...

நன்றி அனானி, அடுத்த முறை இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன்!!

அரவிந்த் குமார்.பா said...

anaithum nandru..
innum ethir paarkirom..

பழூர் கார்த்தி said...

நன்றி அரவிந்த்!! அப்ப பார்ட்- 3, பார்ட் - 4 எல்லாம் எழுதலாம்றீங்க!! :)

Anonymous said...

nee nalla varuva ya nalla varuva