Monday, October 30, 2006

இன்று திங்கள் கிழமை..

'இன்று வெள்ளிக்கிழமை...' என்ற காதலியின் கவிதையை கடந்த இடுகையில் பார்த்தோமல்லவா, இப்போது அதற்கு பதில் சொல்லும் விதத்தில் வரும் காதலனின் கவிதையை அனுபவியுங்கள் !

<<<>>>

இன்று திங்கள் கிழமை,
நாளை செவ்வாய் கிழமை,
ஒவ்வொரு முறையும்
வாங்கிக் கொடுக்கும் குளிர்பானங்கள்,
கூட்டிச் செல்லும் திரைப்படங்கள்,
உணவருந்தும் குளிரூட்டப்பட்ட விடுதிகள்,
கணக்கிலடங்கா பரிசுப் பொருட்கள்,
மணிக்கு இருமுறை தொலைபேசி அழைப்புகள்,
அளவில்லா இணைய அரட்டைகள்,
இவைகளால் கரையும் என் வங்கி சேமிப்பு,
எல்லாம் நினைவிற்கு வருகிறதடி
உன்னை பார்த்தவுடன், என் காதலி !!

<<<>>>

Friday, October 27, 2006

இன்று வெள்ளிக்கிழமை...



இன்று வெள்ளிக்கிழமை,
நாளை சனிக்கிழமை,
நாளை மறுநாள் ஞாயிறு,
நம் பெயர்கள்,
தோழிகளின் பெயர்கள்,
நம் செல்பேசி எண்கள்,
மின்னஞ்சல் கடவுச்சொல்,
பணம் வழங்கும் அட்டையின் கடவு எண்,
நேற்று நாம் பார்த்த திரைப்படத்தின் கதை....
எல்லாம் நினைவில் உள்ளதடா
உன்னை பார்க்கும் வரை, என் காதலா !!

<<<<<>>>>>

புகைப்பட உதவி : நண்பர் ராகவேந்தர், புனே.

Tuesday, October 24, 2006

விறுவிறுப்பாகும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள்

இந்தியாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் லீக் போட்டிகளில், எதிர்பார்த்த படியே சில எதிர்பாராத முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இதில் முக்கியமானது, ஆஸ்திரேலியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் கொடுத்த ஆப்பு!ஆப்புகளில் அடுத்த இடத்தை பிடிப்பது, தென்னாப்ரிக்காவுக்கு நியூசிலாந்து கொடுத்தது.


லீக் சுற்றில் முதல் போட்டியில், இந்தியா தட்டுத் தடுமாறி இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்திய பந்துவீச்சாளர்கள், சிறப்பாக ஆடி இங்கிலாந்தை 125 ரன்களில் ஆல் அவுட்டாக்கிய போதும், பேட்டிங்கில் 6 விக்கெட்டுகளை இழந்துதான் இந்தியா வெற்றி பெற முடிந்தது. சேவக் டிவெண்ட்டி20 நினைப்பில் ஆடுவதை மாற்றிக் கொண்டால் இந்தியா பிழைக்கும்!

+: பதான் ஃபார்முக்கு திரும்பியது, முனாப் பட்டேல், பவாரின் பந்துவீச்சு
-: டிராவிட், தோனியின் ஃபார்ம், இங்கிலாந்தின் பேட்டிங்

இரண்டாம் போட்டியில் நியுசிலாந்து ப்ளெமிங் தயவில் 195 ரன்கள் எடுத்தது. ஆனால் தென்னாப்ரிக்கா மில்ஸ், ஓரம், படேல் போன்றோரின் பந்துவீச்சில் 108 ரன்களில் வீழ்ந்தது சற்று எதிர்பாரததே!

-: தென்னாப்ரிக்காவின் 'டுபாக்கூர்' பேட்டிங்

மூன்றாம் போட்டியில் பலவித குழப்பங்களில் சிக்கியிருந்த பாகிஸ்தான், பயங்கர ஃபார்மில் இருந்த இலங்கையை வீழ்த்தியது. நல்ல ஸ்கோரை எட்டியிருந்தும், பலமான பாகிஸ்தான் பேட்டிங்கை எதிர்கொள்ள முடியவில்லை, இலங்கைக்கு.

+: பாகிஸ்தானின் பேட்டிங், அப்துல் ரசாக்கின் ஆல்ரவுண்ட் திறமை
-: இலங்கையின் வேகப்பந்து வீச்சு, முரளியை ஓவராக சார்ந்திருப்பது

நான்காவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஆஸ்திரேலியா இந்திய ஆடுகளங்களில் சுமாராகத்தான் ஆடும். மிக அதிகமான தன்னம்பிக்கை சில சமயங்களில் காலை வாரி விடுவதுமுண்டு. மார்டன், லாரா பேட்டிங்கில் ஜோலிக்க, பவுலிங்கில் 'ஹாட்ரிக்' டெய்லர் தனியாளாக கலக்கினார். 10 ரன்களில் வெற்றியை கோட்டை விட்டது ஆஸ்திரேலியா.

+: வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சு

ஐந்தாவது போட்டியில் நியுசிலாந்தை, இலங்கை வீழ்த்தியது. முரளியின் சுழலில் நியுசிலாந்து 165 ரன்களில் பணிய, அதை அநாயாசமாக 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலங்கை வென்றது.

+: இலங்கையின் சுழல் & பேட்டிங்
-: நியுசியின் 'பரத நாட்டிய' பேட்டிங்

ஆறாவது போட்டியில் 'ஆஷஸ்' அணிகள் மோதின. எதிர்பார்த்த படியே ஆஸ்திரேலியா இங்கிலாந்தை சொல்லி வைத்து வீழ்த்தியது. 87 ரன்களுக்கு விக்கெட் இழப்பில்லாமல் இருந்து, 159 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட்டானதற்கு காரணம் 'ஆஷஸ்' ஞாபகமா?இனிமேலாவது 'ஆஷஸ்' சீரிஸுக்கு ஓவர் பில்டப் கொடுப்பதை இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் நிறுத்தலாம். ப்ளிண்டாபை பார்த்தால் 'இம்சை அரசன் காமெடி வடிவேலு'தான் ஞாபகத்திற்கு வருகிறார். Right person in wrong place ?? வழக்கம் போல் ஏகப்பட்ட சவால்கள் விட்டு, பரிதாபமாக தோற்றது இங்கிலாந்து. ஆஸ்திரேலியாவும் சுமாராகத்தான் ஆடியது, இருந்தாலும் இங்கிலாந்தின் தயவால் வெற்றி பெற்றது.

-: இங்கிலாந்து அணியின் அணுகுமுறை

<<<>>>

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் முடிவால், விறுவிறுப்பாகி உள்ளது சாம்பியன்ஸ் ட்ராபி. இங்கிலாந்தை தவிர மற்ற ஏழு அணிகளும் இன்னமும் கோப்பைக் களத்தில் உள்ளன. எனது தற்போதைய கணிப்புப் படி பாகிஸ்தான், இலங்கை, இந்தியா, வெஸ்ட் இண்டிஸ் அணிகள் அரையிறுதி போட்டியில் இடம் பிடிக்கலாம். உங்களோட சாய்ஸ் என்ன ??

Friday, October 20, 2006

மற்றும் ஓர் தீபாவளி வாழ்த்து....

:-)))o

தீப ஓளி வீசும்
பண்டிகைத் திருநாளாம்
தீபாவளியை
இனிதே கொண்டாடி
மகிழ்ந்திட வாழ்த்துகிறோம் !!


:-)))o

அன்புடன்,
'சுறுசுறுப்பான' சோம்பேறி பையன்

<<<>>>>

தீபாவளி சம்பந்தமாய் வந்த பெரும்பாலான இணைய இடுகைகளில் சென்று பின்னூட்டம் இட்டாகி விட்டது. நண்பர்களுக்கெல்லாம் மின்னஞ்சலிலும், செல்பேசி குறுஞ்செய்திகளிலும் வாழ்த்து அனுப்பி விட்டோம். உறவினர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தாயிற்று. இருந்தாலும் எம் போன்ற கவிஞர்களுக்கு(?) அழகு தீபாவளியை ஓர் கவிதையுடன் கொண்டாடுவதே! இதோ....

<<<>>>>

புத்தம்புது ஆடைகள்,
விதவிதமான திண்பண்டங்கள்,
வீடுகொள்ளா உறவினர்கள்,
பயமுறுத்தும் அதே சமயத்தில்
ஆர்வமூட்டும் வெடிகள்,
வானொலி செய்திகளில் வரும்
பிரபலங்களின் வாழ்த்துகள்,
தெருமுழுக்க சிதறி கிடக்கும்
பட்டாசு காகிதங்கள்,
காற்றில் மிதந்து வரும்
வெடிவாசனையுடன் கூடிய புகை,
பரவசமூட்டும் பண்டிகை
கொண்டாடங்கள்...
இவையனைத்தும் இல்லாமல்
மடிக்கணினியில் உலாவும் இணையம்,
கைத்தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள்,
தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சிகள்,
அடுக்குமாடி அண்டைவீட்டாரின் 'ஹேப்பி திவாளி',
மெக்டொனால்ட்ஸின் பிஸ்ஸா
என்று கழியும் எங்களுக்கு
இத்தீபாவளி திருநாள்....
இருந்தாலும் அடுத்த தீபாவளியை
எதிர்நோக்கி ஆர்வமாய் காத்திருப்போம் !!!!

<<<>>>>

தீபாவளியை ஊருக்கு சென்று வீட்டோடு கொண்டாட இயலாத, எம் போன்ற எண்ணற்ற பேச்சிலர் நண்பர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம் !!

<<<>>>>

Thursday, October 19, 2006

என்னடா சொல்கிறாய், நீ ???



காதல் கவிதைகள் பெரும்பாலும் ஆணின் பார்வையிலேயே எழுதப் படுகின்றன. ஆனால் பெண்களின் உணர்வுகள், பார்வைகளுடன் வெளிவந்திருக்கும் காதல் கவிதைகள் குறைவே! அகநானூறு போன்ற தமிழ் இலக்கியங்களில் தலைவியின்(பெண்களின்) காதல் பாங்கு அழகுடன் விளக்கப் படுகின்றது! இக்கவிதை அத்தகைய ஓர் முயற்சியே!

<<<<<<>>>>>>

தூக்கமே வருவதில்லை...
அப்படியே வந்தாலும்
தூக்கத்தில் சிரிக்கிறேன்
என்கிறார்கள் தோழிகள்....
கனவுகளிலும்
உன் ஞாபகம்தான்...

பசிக்கிறது....
ஆனால் எதுவும் சாப்பிட பிடிக்க வில்லை...
தட்டில் கை அலை பாய்கிறது...

படிக்கும் போதும்,
எழுதும் போதும்,
குளிக்கும் போதும்
பயணிக்கும் போதும்,
எப்போதும் உன் ஞாபகம்தான்..

கண்ணாடியை பார்க்கும்போதெல்லாம்
என்னில் உன்னை பார்க்கிறேன்...
ஆதலால் கண்ணாடியைப் பார்த்து
பேசிக் கொண்டிருக்கிறேன்
உன்னிடம் பேசுவதாய் நினைத்து....

தோழிகளுடன் உரையாடும் போதும்
திடீர் திடீரென
உன்னைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவதால்
தடங்கலிடும் விவாதங்களால்,
விவாதப் பொருளாகிறேன் நான்...

என் செல்பேசியில் வரும்
ஒவ்வொரு குறுஞ்செய்தியும்
உன்னையே ஞாபகப் படுத்துவதால்
செல்பேசிக்கு கிடைக்கின்றன கூடுதல் முத்தங்கள்...
கூடவே அலுவலக தோழிகளின் வியப்பு பார்வைகள்...

தினமும் முன்செலுத்தப்படும் மின்னஞ்சல்களில்
எங்காவது உன் பெயர் இருந்தால்,
அதற்காகவே சேமிக்கப்படுகின்றன
அவ்வஞ்சல்கள், என் கணிணியில்...

குளித்துவிட்டு உடல் துடைக்காமல்
ஆடையணிந்து அலுவலகம் கிளம்பும்
சம்பவங்கள்
அடிக்கடி நிகழ்கின்றன...

உலகம் என்னை கோமாளி என்கிறது..
என்னடா சொல்கிறாய் நீ ??

<<<<<<>>>>>>

நண்பர் சிறில் அலெக்ஸ், தனது 'தேன்' வலைப்பதிவுத் தளத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பு அளித்து, அத்தலைப்பில் ஏதாவது எழுதச் சொல்கிறார். அவர் அக்-13 அளித்த கோமாளி என்ற தலைப்பே இக்கவிதைக்கான தூண்டுதல். அவருக்கும், கவிதைக்கான படத்தை மின்னஞ்சலில் முன்செலுத்திய நண்பர் கிருஷ்ணா ராஜப்பாவிற்கும் நன்றிகள் பலப்பல !!

<<<<<<>>>>>>

//உலகம் என்னை கோமாளி என்கிறது..
என்னடா சொல்கிறாய் நீ ??//

உலகம் கவிதை நாயகியை கோமாளி என்று சொல்வது இருக்கட்டும், இம்மாதிரி காதலில் மூழ்கி புற உலகத்தை மறந்திருக்கும் காதலர்களை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ??

<<<<<<>>>>>>

Tuesday, October 17, 2006

கவிதைக்கு மெய் அழகு...

1


முருகன்..
கணேசன்..
இயேசு..
அல்லா..
அனுமான்..
பாலாஜி..
சிவன்..
எத்தனை பெயர்கள் இறைவா உனக்கு !!
ஒன்றிற்காவது இருக்கிறதா கடன் அட்டை* ??

~~~~~

* கடன் அட்டை - கிரெடிட் கார்டு

<<<<<>>>>>

2


ஸ்ரீராமஜெயம்
ஸ்ரீராமஜெயம்
ஸ்ரீராமஜெயம்
...
...
...
ஸ்ரீராமஜெயம்
நூற்றியெட்டு முறை
எழுதி அனுப்பினேன் மின்னஞ்சலை
ஸ்ரீராமர்@இந்திரலோகம்.காம் !!!
முகவரி சரியில்லை என திரும்பி
வந்து விட்டது,
யாராவது சொல்லுங்களேன்
ஸ்ரீராமர் எங்கேயிருக்கிறார் என்று ???

<<<<<>>>>>

3


நாட்டில் எங்கும் ஊழல் பெருகி விட்டது..
அரசியல்வாதிகள் ரொம்பவும் மோசம்..
என
பயணச்சீட்டில்லாமல் ரயிலில் பயணிப்பவர்
நிஜமாகவே கவலைப் படுகிறார் !!

<<<<<>>>>>

4


நாற்பதாயிரம் சம்பளம் வாங்கும்
கணிணி மென்பொருளாளர்
நான்கு ரூபாய்க்காக காய்கறிக் கடையில்
பேரம் பேசி, சண்டை போட்டு வெல்கிறார்...
வீட்டிற்கு வந்ததும்,
பெண் தோழியிடம் செல்பேசியில்
நாற்பது நிமிடங்கள் கதைக்கிறார் !!!

<<<<<>>>>>

5


நேரம் போவதே தெரியாமல்
எத்தனையோ நாட்கள்
தொலைபேசியில் கதைத்திருக்கிறோமடி,
உன் தங்கையே நீ அறிமுகப் படுத்தும் வரை...
இப்போதெல்லாம்
உன்னை நினைத்துப் பார்க்கக் கூட
நேரமில்லை !!

<<<<<>>>>>


பின்குறிப்பு : உங்களுக்கு எந்த கவிதை ரொம்ப பிடித்திருக்கிறது என்பதை பின்னூட்டத்தில் (எண்ணை மட்டும்) மறக்காமல் சொல்லுங்கள் !! எதுவுமே பிடிக்கவில்லையென்றால் சிரிப்பான் ஒன்றை போட்டு விடுங்களேன் :-)) கவிதைகளை மேம்படுத்த மாறுதல் ஆலோசனைகளும் வரவேற்கப் படுகிறது!

Friday, October 13, 2006

நில், கவனி, யோசி..

"சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளிலிருந்து சமூகம் விடுதலையடைய வேண்டும். இக்குறிக்கோளை அடைய என் உயிரையும் தியாகம் செய்ய தயாரக இருக்கிறேன். மாணவர்களாகிய நீங்களே, நாளைய சமுகத்தை மாற்றப் போகும் தூண்கள், எனவே இத்தகைய வேறுபாடுகளை களைந்து, படிப்பால், உழைப்பால் முன்னேறி வாழ்க்கையில் நீங்கள் வெற்றிநடை போட வாழ்த்துகிறேன் !!" பலத்த கைதட்டல்களுக்கு இடையே மேடைப் பேச்சை முடித்துக் கொண்டு கீழே இறங்கினார் முத்துமாணிக்கம்.

முத்துமாணிக்கம் மலைக்கோட்டை மாநகரின் பிரபல தொழிலதிபர். திருச்சி கைலாசபுரம் அருகே பெல் நிறுவனத்தைச் சார்ந்து இயங்கும் ஓர் பெரிய தொழிற்சாலைக்கு சொந்தக்காரர். சில, பல கல்விக்கூடங்களையும் நடத்தி வருகிறார். லயன்ஸ், எக்ஸ்னோரா மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் தலைவராகவோ, பொருளாளராகவோ, செயலாளராகவோ இருக்கிறார். தொண்டு நிறுவனம் ஒன்று, இவருடைய சேவையைப் பாராட்டி 'சமூகக் காவலர்' என்று பட்டம் கூட கொடுத்திருக்கிறது. திருச்சியில் புகழ்பெற்ற ஓர் கல்லூரி ஆண்டுவிழாவில்தான் மேற்கண்டவாறு பேசிவிட்டு அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்.

அலுவலகத்தில் நுழைந்து இருக்கையில் அமர்ந்தவுடன், காரியதரிசி உள்ளே வந்து "சார், ஷிப்ட் சூப்பர்வைசர் வேலைக்கு இண்டர்வியூ முடிந்து விட்டது, மூன்று பேர் கடைசி லெவல் வரை வந்து இருக்கிறார்கள். நீங்கள் இறுதி இண்டர்வியூ நடத்திவிட்டால் மூவரில் ஒருவரை தேர்ந்தெடுத்து விடலாம்..." என்றார்.

முத்துமாணிக்கம் "எனக்கு இப்போ நேரமில்லை, அவங்களைப் பத்திய விபரங்களை கொண்டு வாங்க.." என்றார்.

"...சார்.. அந்த மூணு பேர்ல ஒருத்தன் நம்ப ஜாதி பையன்..." - காரியதரிசி.

"அப்ப, அந்த பையனையே அப்பாயிண்ட் பண்ணிடுங்க.." என்றார் சமூகக் காவலர் முத்துமாணிக்கம் !!

***

தேன்கூடு - தமிழோவியம் இணைந்து நடத்தும் அக்டோபர் மாத போட்டிக்கான சிறுகதை.

Monday, October 09, 2006

மழைச்சாரலில் நனைந்த கவிதைகள்



1

மழை பொழியும் பின்னிரவுகளில்
சுடச்சுட தேநீருடன்
வராந்தாவில் நின்றபடியே
மழையை ரசிக்கும்போதும்
ஞாபகத்திற்கு வருவதில்லை,
வீடில்லாமல் மழையில் நனைந்தபடியே
தெருவில் உறங்கும் மக்களின் வாழ்க்கை !!

***

2

நேரம் போவதே தெரியாமல்
எத்தனையோ நாட்கள்
தொலைபேசியில் கதைத்திருக்கிறோம்,
உன் தங்கையை நீ அறிமுகப் படுத்தும் வரை...
இப்போதெல்லாம்
உன்னை நினைத்துப் பார்க்கக் கூட
நேரமில்லை !!

***

3

மழையில் நனையும் கார்
நடுவீதியில் நின்றவுடன்
கூப்பிடாமலேயே ஓடிவந்து
தள்ளிவிடும் தெருவில் வசிக்கும் சிறுவர்கள்...
பிச்சைக்காரருக்கு
சூடான சாதம் போடும்
பக்கத்து வீட்டு பாட்டி...
வழி தெரியாமல் தவிக்கும்
வெளியூர் காரருக்கு
கூடவே வந்து பஸ் ஏற்றி
விடும் கடலை விற்பவர்...
கீழே தவற விட்ட பணத்தை
கூப்பிட்டு எடுத்துக் கொடுக்கும்
வழிப்போக்கர்...
இவர்களுக்காக
இன்னும் இருக்கிறது ஆகாயம் !!!!

***

கடைசிக் கவிதை தமிழ்ச் சங்க போட்டிக்காக எழுதப் பட்டது. உங்களுக்கு எந்த கவிதை ரொம்ப பிடித்திருக்கிறது என்பதை பின்னூட்டத்தில் (எண்ணை மட்டும்) மறக்காமல் சொல்லுங்கள் !! எதுவுமே பிடிக்கவில்லையென்றால் சிரிப்பான் ஒன்றை போட்டு விடுங்களேன் :-))

Friday, October 06, 2006

மினி உலகக் கோப்பை கிரிக்கெட் - முன்னோட்டம்

கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் மீண்டும் நாளையிலிருந்து(அக்-7)ஆரம்பமாகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள் நாளையிலிருந்து இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் தொடங்குகின்றன. இதற்கான முன்னோட்டமே இந்த இடுகை.

இலங்கை, மேற்கிந்திய தீவுகள், கென்யா & வங்காளதேச அணிகள் தகுதிச் சுற்றில் மோதுகின்றன. இதில் இலங்கை & மேற்கிந்திய தீவுகள் அணிகள் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து பாகிஸ்தான், தென்னாப்ரிக்க அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது. இந்தியாவிற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. 2005ல் இந்தியா பிரகாசிக்க காரணமான பதான், தோனி போன்றோரின் ஃபார்ம் கவலை தரும் அம்சம். பந்துவீச்சில் அணி மிகப் பலவீனமாக உள்ளது.

இங்கிலாந்து அணி ப்ளிண்டாப், வான், ஜோன்ஸ் போன்றோர் இல்லாமல் தடுமாறி வருகிறது. நியுசிலாந்து அச்சுறுத்தும் அளவுக்கு இல்லை. இலங்கை முரளி, வாஸ், ஜெயசூர்யா போன்றோரின் ஆட்டத்தைப் பொறுத்து போட்டி தரும்.

போட்டிகள் அனைத்தும் சோனி-மேக்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகின்றன. திருவிழாவுக்கு தயாராகுங்கள்.

கோப்பையை வெல்ல என்னோட சாய்ஸ் ஆஸ்திரேலியாதான், உங்களோட சாய்ஸ் என்னன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க !!!

***

இந்த இடுகை சோம்பேறி பையனின் வலைத்தளத்திலும், கிரிக்கெட் கூட்டுப் பதிவிலும் பதிவிடப்படுகிறது.

Thursday, October 05, 2006

உள்ளாட்சித் தேர்தல் 2006 - கார்ட்டூன்

உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளன. சிக்குன்குனியா நோய் தீவிரமடைந்துள்ள இந்நிலையில் எதிர்க்கட்சிகள் இதையே ஆயுதமாக எடுத்துள்ளன. அரசாங்கமோ, நோயின் தீவிரத்தை உணராமல் சப்பைக்கட்டு கட்டி வருகிறது. தேன்கூடு போட்டியின் இந்த மாத தலைப்பைப் பார்த்தவுடன் இது குறித்து, என் மனதில் உதித்த கார்ட்டூன் இது.

கார்ட்டூனைப் பார்த்து, ரசித்து உங்கள் கருத்தை மறவாமல் சொல்லுங்கள். அனேகமாக தமிழ் வலைப்பதிவுகளில் இதுவே முதல் கார்ட்டூன் என நினைக்கிறேன், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் !!



***

தேன்கூடு-தமிழோவியம் அக்-06க்கான போட்டிக்கான கார்ட்டூன்.