Tuesday, August 24, 2010

கணவன் மனைவி விவாதத்தில் வெல்வது யார்?

இதோ இங்கே கீழிருக்கும் படத்தைப் பாருங்கள். கணவன் மனைவி விவாதத்தில் வெல்வது யார்? திருமணமானவுடனேயே கணவனின் பேச்சு செல்லாக் காசாகி விடுகிறதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சொல்லுங்களேன். ஒருவேளை, இப்படம் உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளியுங்கள் :-))


Tuesday, August 10, 2010

கிரிக்கெட்: IND vs NZ - இன்றைய போட்டியில் யாரெல்லாம் கலக்குவார்கள்?

ஒருவழியாய் டெஸ்ட் தொடரை கஷ்டப்பட்டு இந்தியா சமன் செய்து விட்டது. ஆனாலும் தொடர் முழுதும் இலங்கை கையே ஓங்கியிருந்ததை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இப்போது ஒருநாள் தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கிறேன்.நியுசிலாந்து அணியில் வெட்டோரி, மெக்கல்லம், ரைடர் போன்றோர் இல்லை, கிட்டத்தட்ட அனுபவமில்லா ஒரு கத்துக்குட்டி அணி போலவே காட்சியளிக்கிறது. எனவே இந்தியா, இலங்கை இறுதிப் போட்டியை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

இந்திய அணியில் சேவக் ஏற்கனவே பயங்கர ஃபார்மில் இருப்பதால், ஒருநாள் தொடரில் தொடர்ந்து கலக்குவார் என நினைக்கிறேன். இன்றைய போட்டியில் சேவக், ஓஜா, ரெய்னா, ரோகித் சர்மா(?) போன்றோர் ஜொலிப்பார்கள் என நினைக்கிறேன். சேவக் ஒரு டபுள் செஞ்சுரி அடிச்சா நல்லாயிருக்கும். முதலில் பேட்டிங் எடுத்தால் ஜெயிக்க நிறைய வாய்ப்பு. பார்ப்போம். நீங்க என்ன நினைக்கிறீங்க?? இந்தியா ஜெயிச்சுடுமா? யார் மேன் ஆப் தி மேட்ச்?? சொல்லுங்களேன் J

Sunday, August 08, 2010

மெல்லியதாய் பெய்யும் மழை..

கவிதை: மெல்லியதாய் பெய்யும் மழை..

முன்னைப் போலில்லாமல்

மாலையில்

சடுதியில் வீடு திரும்ப முடிகிறது..

மெல்லியதாய் பெய்யும்

மழையை

நம் வீட்டின் முற்றத்தில்

ரசிக்க முடிகிறது..

ஓய்வு நேரங்களில்

புத்தகமோ, மெல்லிசையோ

வாசிக்க முடிகிறது..

நீ அருகிலில்லா

நினைவோடை

எக்கணமாவாது

தென்படும்போது

அப்பொழுதில்

முடிகிறது அந்நாள்!!

Thursday, August 05, 2010

தீவாளிக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு!!

இரண்டு மூன்று நாட்களாகவே ஒரே பரபரப்பாக இருந்தது. அலுவலகத்தில் எல்லோரும் தீபாவளிக்கு எப்போது ஊருக்கு போகிறீர்கள், பஸ்ஸா, ட்ரெயினா, காரா? டிக்கெட் புக் பண்ணியாச்சா என்று விசாரித்தவாறு இருந்தார்கள். செய்தித்தாள்களில் முந்தின நாட்களுக்கான டிக்கெட் காலியாயிடுச்சு என்று செய்திகள் வேறு.

என்னை மாதிரி தென் மாவட்டத்திலிருந்து வந்து சென்னையில் வேலை செய்பவர்களுக்கு இது ஒரு பெரிய சவால்தான். பண்டிகை காலங்களில் ஊருக்கு போக டிரெயின் டிக்கெட் புக் பண்ணுவது என்பது மிகப்பெரிய சாதனை. டிக்கெட் கிடைத்து விட்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி J

நேரில் சென்று கவுண்டரில் புக் செய்ய காலையில் 5 மணிக்கே சென்று க்யூவில் நிற்க வேண்டும். அப்படியும் உங்கள் முறை வரும்போது டிக்கெட் கிடைக்காமல், வெயிட்டிங் லிஸ்ட் ஆகலாம். இண்டர்நெட்டில் புக் செய்யலாம், ஆனால் சமயத்தில் IRCTC வெப்சைட் காலை வாரிவிட்டு விடும். நம்ப முடியாது. ஏஜண்ட் புக் பண்ண காலை 8 முதல் 9 மணிவரை தடை செய்து விட்டதால் அங்கேயும் போக முடியாது.

எனவே சாபூத்ரி போட்டு இண்டர்நெட்டில் நமது அதிர்ஷ்டத்தை சோதனை செய்ய முடிவு செய்தேன். இரு நாட்களுக்கு முன்பே மொபைலில் ரிமைண்டர் எல்லாம் வைத்தாயிற்று J

இன்று காலை 715

படுக்கையிலிருந்து எழுந்தாச்சு, காலைக் கடன்களை முடித்துவிட்டு, அம்மா கையால் ஒரு ஸ்ட்ராங் டிகாஷன் காபி குடிச்சாச்சு, பேப்பர் ஹெட்லைன்ஸ் பாத்தாச்சு..

காலை 750

லேப்டாப் ஆன் பண்ணி, IRCTC சைட் திறந்தேன். ஆஹா, சைட் பிரச்சினை பண்ணாம ஓப்பன் ஆயிடுச்சே.. இன்று இனிய நாள்தான் என்று மனதுக்குள் சுகிசிவம் சொன்னார் J

காலை 756

3 நவம்பர்க்கான மலைக்கோட்டை show availability முயற்சி செய்தபோது இன்னும் டைம் ஆகவில்லை என்றது

காலை 801

திரும்பவும் show availability, 470 டிக்கெட்டுகள் என்றது.. ஆஹா..

காலை 802

உடனே மலைக்கோட்டை எக்ஸ்பிரஸை தேர்வு செய்து, புக் செய்தேன்.. பேரெல்லாம் கொடுத்த பிறகு பார்த்தால் 428 டிக்கெட் என்றது. ஐயோ, புக்காகி விட வேண்டுமே ஒரே டென்ஷன். சிலசமயம் பணம் எடுக்கும்போது சொதப்பி விடும். அப்பா ஒரு வழியா பேங்க் டிரான்சாக்ஷன் எல்லாம் முடிந்து, சரியா புக் ஆயிடுச்சு.. ஹூர்ர்ர்ர்ர்ரேரேரே J

அப்பா ஒருவழியா 3 நவம்பர் நைட் டிரெயின் புக் பண்ணியாச்சு, திரும்ப ரிட்டர்னுக்கு வரும் திங்களன்று ட்ரை பண்ணனும். முக்கியமா ஒரு விஷயம், ஆபிசில் நவம்பர் 5 மட்டும்தான் ஹாலிடே, 4ம் தேதி லீவு கொடுக்கனும், மேனேஜர் கால்லயவாது விழுந்துரலாம், எம்பெருமானே காப்பாத்துப்பா J

பின் குறிப்பு: இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடுபவர்கள் எல்லாருக்கும் ஏதாவது ஒரு ட்ரெயினில் டிக்கெட் கிடைக்க பிரார்த்தனை செய்து கொள்ள இருக்கிறேன், ஆதலால்...... J

Tuesday, August 03, 2010

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்தியாவுக்கு தேவையா?

ஏகப்பட்ட அமளிகளுக்கு இடையே காமன்வெல்த் போட்டிகள் இன்னும் இரு மாதங்களில் இந்தியாவில் தொடங்க இருக்கின்றன. இன்னும் சில மைதானங்கள் முழுமையாக தயாராக வில்லை. ஏற்கனவே தயாரன மைதானங்களில் வசதிகள் உலகத்தரத்தில் முழுமையாய் இல்லை என ஏகப்பட்ட புகார்கள் எழுந்துள்ளன.

நம் போன்ற ஓர் ஏழை (வளர்ந்து வரும்) நாட்டுக்கு இந்த போட்டிகளை நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்ன பெரிய புடலங்காய் பெருமை இப்போட்டிகளை நடத்துவதில்? நம் நாட்டு மக்கள் அனைவரும் அனைத்திலும் தன்னிறைவு அடைந்து விட்டனரா?

முதலில் அரசாங்கம் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் தர முடிகிறதா? இந்தியா முழுவதிலும் மின் பற்றாக்குறை உள்ளது. இங்கே சென்னையில் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது, ஆனால் ஜெயங்கொண்டம் அருகே உள்ள எங்கள் கிராமத்தில் தினமும் பலமணி நேரங்கள் மின் தடை இப்பவும் ஏற்படுகிறது. இந்த லட்சணத்தில் காமன்வெல்த் போட்டிகளை இவ்வுளவு மக்கள் வரிப்பணத்தை செலவழித்து நடத்த வேண்டுமா? இதற்கு ஆகும் செலவில் புதிய மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தலாமே?

புதிய மைதானங்கள் தயாராகின்றன. ஏற்கனவே இருக்கும் மைதானங்கள் மேம்படுத்த படுகின்றனவாம். இன்னும் நிறைய கட்டமைப்புகள் உருவாகின்றன. இதற்கு ஆகும் செலவில் இந்தியா முழுவதும் முக்கியமான நதிகளை இணைக்கலாமே, இதன்மூலம் விவசாயம் செழிக்க உதவலாமல்லவா? விளையாட்டு முக்கியமா அல்லது நாட்டு மக்களின் வாழ்வாதாரம் முக்கியமா? சரியான சத்துணவு இல்லாமல் 42 கோடி பேர் நம் நாட்டில் வாழ்கின்றனராம். இதற்கு ஏதாவது செய்யலாமே? வயிற்றில் ஈரத்துணி போட்டுக் கொண்டு தடகளப் போட்டிகளை நாம் பார்த்து ரசிக்க முடியுமா?

சரி, இச்செலவுகளை ஒழுங்காக செய்கின்றனாரா என்றால் அதுவும் இல்லை. நிறைய ஊழல் நடந்துள்ளதாக செய்தித்தாள்களில் படிக்கின்றோம். 7 லட்சம் விலையுடைய வாஷிங்மெஷினை 45 நாட்கள் வாடகைக்கு எடுக்க 9 லட்சம் கொடுத்துள்ளார்களாம், என்ன கொடுமைங்க இது? சுரேஷ் கல்மாடியை கேட்டால் எனக்கு எதுவும் தெரியாது, எல்லாம் ஒழுங்காத்தான் இருக்கு என்கிறார்.

இன்னும் சில மைதானங்கள் தயாரகவில்லை. சில மைதானங்களில் மேற்கூரை ஒழுகுகிறது, வெளிப்புற பாதைகளில் டைல்ஸ் ஒட்டப் பட வில்லை. ஒரே குப்பையும், கூளமுமாக இருக்கிறது. இப்படியெல்லாம் அரைகுறை வசதிகளுடன் காமன்வெல்த் போட்டிகளை நடத்தினால், உலக அரங்கில் நம் மானம் காற்றில் பறக்கும்.

இந்த லட்சணத்தில் ஒலிம்பிக் போட்டிகளை வேறு நடத்த நம்நாடு ஆசைப்படுகிறது, முதலில் காஷ்மிரையும், நக்சலைட்களையும் கவனிக்கலாம், பிறகு ஒலிம்பிக் குறித்து யோசிப்போம்!!

Monday, August 02, 2010

எந்திரன் பாடல்களின் மற்றுமோர் விமர்சனம்

ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கின்றன எந்திரன் பாடல்கள். மிக அதிகமான விலைக்கு வாங்கப் பட்டிருக்கிறது. இண்டர்நெட் டவுண்லோடு காலத்தில் இவ்வுளவு அதிகமான விலைக்கு வாங்கி எப்படி கட்டுப் படியாகும் என்று புரியவில்லை. FM ரேடியோக்கள், டிவி சானல்கள் ஒவ்வொரு முறை பாடல் ஒளிபரப்பும் போது ஏதாவது ராயல்டி தொகை கொடுக்குமா என்ன?

வழமையான ஏ.ஆர்.ரகுமான் பாடல்களைப் போலவே, நான்கைந்து முறை கேட்ட பிறகே பாடல்கள் பிடிபடுகின்றன, சில பாடல்கள் பிடிக்கின்றன J

அரிமா அரிமா

இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும் என அசத்தலான வரிகளுடன் நம்மை இப்பாடல் உள்ளிழுக்கிறது. வைரமுத்துவின் வைர வரிகளை ஹரிஹரன் கலக்கலாக வடித்திருக்கிறார். இசையும் அருமை.

பூம் பூம் ரோபோடா

கொஞ்சம் சுமாரான பாடல்தான், ஏதோ ஆங்கிலப் பாடலை கேட்பது போலிருக்கிறது. பெண் குரல் யாரென்று தெரியவில்லை, வித்தியாசமாக இருக்கிறது.

எந்திரன் தீம் சாங்

வித்தியாசமாய் மேற்கத்திய இசையையும், இந்திய பாரம்பரிய இசையையும் கலந்து ரகுமான் கலக்கியிருக்கிறார். கேட்க நன்றாக இருக்கிறது.

இரும்பிலே ஒரு இதயம்

இன்னுமொரு மேற்கத்திய பாணிப் பாடல். ஆங்கில வரிகளுடன் ஆரம்பிக்கின்றது. கொஞ்சம் பரவாயில்லை, பாடியது ரகுமான்(?) என நினைக்கிறேன். பெண் பாடகி யார்? தமிழ் வரிகளையும் ஆங்கிலம் போலவே பாடி கொலை செய்கிறார் J

காதல் அணுக்கள்

இந்த ஆல்பத்தின் சூப்பரான பாடல். அருமையான துள்ளலான மெலோடி. ஆரம்பமாகும் இசையும், குரலும் அற்புதம். வைரமுத்து இப்படத்தில் எழுதிய மூன்று பாடல்களில் இதுவும் ஒன்று என நினைக்கிறேன். எனக்கு நிரம்ப பிடித்த பாடல்.

கிளிமாஞ்சாரோ

அருமையான ஆரம்பம், ஏதோ தென்னமரிக்க பாடலைப் போல ஆரம்பமாகிறது. துள்ளலான பாடல். பாடகர்களின் குரல் அருமையாக செட்டாகிறது. ஆனால் எங்கோ கேட்டது போலிருக்கிறது J வழக்கம் போலவே தமிழ் வரிகளை கடித்துக் குதறும் டிரெண்ட் இதிலும் இருக்கிறது.

புதிய மனிதா

படத்தின் ஆரம்ப பாடலாய் இருக்கலாம். ரகுமான்(?) குரலில் ஆரம்பமாகிறது. கொஞ்சம் மெதுவான பாடல், பின்னனி இசை அருமையாக இணைந்து இருக்கிறது. நான் கற்றது ஆறறிவு என்று எஸ்பிபி கலக்கி இருக்கிறார். ஆனால் துள்ளல் கொஞ்சம் குறைவு. ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யுமா என்று தெரியவில்லை.

முடிவுரை

மொத்தத்தில் பாடல்கள் சுமார்தான். எனது எதிர்பார்ப்பை ஈடு செய்யவில்லை. மேற்கத்திய பாணி இசையை குறைத்து இந்திய இசை வடிவங்களை அதிகரித்து இருக்கலாம். ஷங்கரின் படங்களில் பாடல்கள் மிகப்பெரிய பலமாய் இருக்கும். ஆனால் சிவாஜி படத்தில் பாடல்கள் அவ்வுளவு பிரபலமாக வில்லை. அதே போல்தான் இப்படமும் அமைந்திருக்கிறது. விண்ணைத் தாண்டி வருவாயா அளவுக்கு மற்றுமோர் இசை அற்புதத்தை ஷங்கர் இம்முறை ரகுமானிடம் வாங்க இயல வில்லை என்றே நினைக்கிறேன்!

எனக்கு பிடித்த பாடல்கள்: அரிமா அரிமா, காதல் அணுக்கள் J