Tuesday, August 03, 2010

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்தியாவுக்கு தேவையா?

ஏகப்பட்ட அமளிகளுக்கு இடையே காமன்வெல்த் போட்டிகள் இன்னும் இரு மாதங்களில் இந்தியாவில் தொடங்க இருக்கின்றன. இன்னும் சில மைதானங்கள் முழுமையாக தயாராக வில்லை. ஏற்கனவே தயாரன மைதானங்களில் வசதிகள் உலகத்தரத்தில் முழுமையாய் இல்லை என ஏகப்பட்ட புகார்கள் எழுந்துள்ளன.

நம் போன்ற ஓர் ஏழை (வளர்ந்து வரும்) நாட்டுக்கு இந்த போட்டிகளை நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்ன பெரிய புடலங்காய் பெருமை இப்போட்டிகளை நடத்துவதில்? நம் நாட்டு மக்கள் அனைவரும் அனைத்திலும் தன்னிறைவு அடைந்து விட்டனரா?

முதலில் அரசாங்கம் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் தர முடிகிறதா? இந்தியா முழுவதிலும் மின் பற்றாக்குறை உள்ளது. இங்கே சென்னையில் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது, ஆனால் ஜெயங்கொண்டம் அருகே உள்ள எங்கள் கிராமத்தில் தினமும் பலமணி நேரங்கள் மின் தடை இப்பவும் ஏற்படுகிறது. இந்த லட்சணத்தில் காமன்வெல்த் போட்டிகளை இவ்வுளவு மக்கள் வரிப்பணத்தை செலவழித்து நடத்த வேண்டுமா? இதற்கு ஆகும் செலவில் புதிய மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தலாமே?

புதிய மைதானங்கள் தயாராகின்றன. ஏற்கனவே இருக்கும் மைதானங்கள் மேம்படுத்த படுகின்றனவாம். இன்னும் நிறைய கட்டமைப்புகள் உருவாகின்றன. இதற்கு ஆகும் செலவில் இந்தியா முழுவதும் முக்கியமான நதிகளை இணைக்கலாமே, இதன்மூலம் விவசாயம் செழிக்க உதவலாமல்லவா? விளையாட்டு முக்கியமா அல்லது நாட்டு மக்களின் வாழ்வாதாரம் முக்கியமா? சரியான சத்துணவு இல்லாமல் 42 கோடி பேர் நம் நாட்டில் வாழ்கின்றனராம். இதற்கு ஏதாவது செய்யலாமே? வயிற்றில் ஈரத்துணி போட்டுக் கொண்டு தடகளப் போட்டிகளை நாம் பார்த்து ரசிக்க முடியுமா?

சரி, இச்செலவுகளை ஒழுங்காக செய்கின்றனாரா என்றால் அதுவும் இல்லை. நிறைய ஊழல் நடந்துள்ளதாக செய்தித்தாள்களில் படிக்கின்றோம். 7 லட்சம் விலையுடைய வாஷிங்மெஷினை 45 நாட்கள் வாடகைக்கு எடுக்க 9 லட்சம் கொடுத்துள்ளார்களாம், என்ன கொடுமைங்க இது? சுரேஷ் கல்மாடியை கேட்டால் எனக்கு எதுவும் தெரியாது, எல்லாம் ஒழுங்காத்தான் இருக்கு என்கிறார்.

இன்னும் சில மைதானங்கள் தயாரகவில்லை. சில மைதானங்களில் மேற்கூரை ஒழுகுகிறது, வெளிப்புற பாதைகளில் டைல்ஸ் ஒட்டப் பட வில்லை. ஒரே குப்பையும், கூளமுமாக இருக்கிறது. இப்படியெல்லாம் அரைகுறை வசதிகளுடன் காமன்வெல்த் போட்டிகளை நடத்தினால், உலக அரங்கில் நம் மானம் காற்றில் பறக்கும்.

இந்த லட்சணத்தில் ஒலிம்பிக் போட்டிகளை வேறு நடத்த நம்நாடு ஆசைப்படுகிறது, முதலில் காஷ்மிரையும், நக்சலைட்களையும் கவனிக்கலாம், பிறகு ஒலிம்பிக் குறித்து யோசிப்போம்!!