Sunday, January 31, 2010

கோவா - வெற்றிப் படமா??

  • இயக்குநரின் முந்தைய இரு படங்களினால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். கோவா எதிர்பார்ப்பை நிறைவேற்ற வில்லை. சற்று ஏமாற்றம்தான்.
  • படம் மிக மெதுவாய் செல்கிறது. கோவா வந்ததிலிருந்தே பார்ட்டி, குடி, கும்மாளம் என்று தொடர்ந்து காட்சிகள் அதே தொனியிலேயே வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது. திரைக்கதை தெளிவானதாய், வலுவாய் இல்லை.
  • பிரேம்ஜிதான் படத்தில் நிஜ கதாநாயகன். சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், அவரது காமெடி படத்திற்கு ஓவர்டோஸ்.
  • பிரேம்ஜி போடும் சண்டையில் புலி உறுமுது வேட்டைக்காரன் பாடலும், அவரது சண்டையும் சூப்பர். தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. இதேபோல் ஆங்காங்கே சில படங்களை நக்கல் அடித்திருக்கிறார்கள்.
  • ஹோமோசெக்ஸை முதன்முதலில் தமிழ் சினிமாவில் பார்க்கிறோம். ஓரளவுக்கு நகைச்சுவையாய் காண்பிக்க முயற்சித்து இருக்கிறார்கள். கொஞ்சம் ஆபாசத்தை தவிர்த்திருக்கலாம்.
  • படத்தின் பாடல்கள் ஒன்றுமே மனதில் ஒட்ட வில்லை. கோவா பாடல் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை. படத்தின் ஆரம்ப பாடல் தமிழ் டிவி சீரியல்களை நினைவூட்டியது.
  • படம் நகரங்களில் கொஞ்சம் ஓடலாம். பி, சி செண்டர்களில் வரவேற்பு இருக்காது.
  • வெங்கட் பிரபு, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!!

<<>>

படத்தை மாயாஜாலில் பார்த்தேன். டிக்கெட் விலை ரூ 120. இணையத்தில் பதிவு செய்தால் ரூ 140. 20 ரூபாய் கூடுதல் சற்று அதிகம்தான். சத்யம், அபிராமி, கமலா போன்றவற்றில் 10 ரூபாய்தான் அதிகம், இணையத்திற்கு. ஏன் இந்த அதிக விலை என்று தெரியவில்லை. டாய்லெட்டும் சரியாக பராமரிக்கப் பட வில்லை. சென்னையில் சத்யம் மட்டுமே ஒரு நிறைவான தியேட்டர் அனுபவத்தை தருகிறது.

Saturday, January 30, 2010

வார இறுதி கொத்து பரோட்டோ - 01/30

கோவா, தமிழ்படம் இரண்டுமே ரிலீஸாகி ஓரளவுக்கு பாஸிடிவ் விமர்சனங்களை பார்க்க, படிக்க, கேட்க முடிகிறது, இரண்டையுமே பார்க்க வேண்டும். இரண்டு படங்களுமே வழமையான தமிழ் சினிமா பார்முலாவிலாவிலிருந்து விலகி எடுக்கப் பட்ட படங்கள என்பது சுவாரசியமானதே. தமிழ் சினிமா நிஜமாகவே அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்று நினைக்கிறேன் (ஆயிரத்தில் ஒருவன் இன்னொரு உதாரணம்).

<<>>

ஜோடி நம்பர் ஒன், ராஜா யாரு ராணி 6, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளின் மத்தியில், சில நல்ல டிவி நிகழ்ச்சிகளும் வருகின்றன. விஜய் டிவியின் நீயா, நானா விவாத நிகழ்ச்சி நான் விரும்பிப் பார்க்கும் ஒன்று. மற்றொன்று கலைஞர் டிவியில் வரும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சி.

<<>>

நீயா நானா விவாதத்தில் வீட்டு வேலைக்காரிகள் அடுத்த வீட்டு விவகாரங்களை சொல்வதைப் பற்றியும், கிசுகிசுக்களை பரப்புவதைப் பற்றியுமான விவாதம் வந்தது. உங்கள் வீட்டு வேலைக்காரி எவ்வுளவு தூரம் பேசுகிறார் என்பது நீங்கள் அனுமதிப்பதை பொறுத்ததே என்றார் கோபிநாத். அருமையான கருத்தல்லவா? உங்களுக்கே அடுத்த வீட்டு விவகாரங்கள், கிசுகிசுக்களை கேட்க விருப்பமிருப்பதால்தானே, வேலைக்காரி அதைப் பற்றி கதை வைக்க அனுமதிக்கிறீர்கள்.

<<>>

சென்னையில் நிறைய மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள் வந்து விட்டன. இருந்தாலும் இன்னமும் கிண்டி, போரூர், வேளச்சேரி, வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் ஏன் மல்ட்டிப்ளெக்ஸ்கள் எதுவும் வரவில்லை?

<<>>

வார இறுதியை அட்டகாசமாய் கொண்டாடுங்கள்!!
வெளிச் செல்லும் முன், உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே!!

Tuesday, January 26, 2010

நட்சத்திர பதிவாளர் ஸ்ரீதருக்கு, ஆயிரத்தில் ஒருவனின் பதில்கள்

ஆயிரத்தில் ஒருவனை ஏன் ஆதரிக்க வேண்டும்?

ஐயா, இந்த படத்தில் ஆயிரம் குறைகள் இருக்கலாம், இருந்தாலும் ஆதரியுங்கள். இல்லாவிடில் வேட்டைக்காரன்களிடமிருந்தும், ஆதவன்களிடமிருந்தும் தமிழ் சினிமாவை மீட்க இயலாது.

இதோ நட்சத்திர பதிவாளரின் கேள்விகளுக்கு பதில்கள்..

//தனது கடைசி வாரிசைக் காப்பாற்றுவதற்காகவும், சோழவம்சத்தை என்றென்றும் துலங்கச் செய்யவும், நினைக்கும் அந்த சோழ ராஜா எதற்காக பாண்டியரிடமிருந்து அபகரித்த அவர்களின் குல தெய்வச் சிலையையும் இளவலோடு சேர்த்து ஒளித்து வைக்க வேண்டும்? //

சோழருக்கும் பாண்டியருக்கும் ஏற்கனவே இருந்துவரும் பகையால் குலதெய்வ சிலை பாண்டியருக்கு கிடைக்கக் கூடாது என்று ஒளித்து வைக்கிறார்கள். அச்சிலை சோழரோடு இருந்தால்தானே அவர்களுக்கு பெருமை, எனவே சோழ இளவலோடு சிலையையும் எடுத்துச் செல்கின்றனர். மேலும் போரில் தோற்கும்போது வேறு இடத்தில் சிலையை ஒளித்து வைக்க சந்தர்ப்பம் இல்லாது இருந்திருக்கலாம்.

//அப்படியானால் முதலில் போன பிரதாப் ஆராய்ச்சி எதுவும் செய்யப் போகவில்லையா? வியட்நாமிற்கு சென்னையிலிருந்து கப்பலில்தான் போக வேண்டுமா? //

பிரதாப் போத்தன் ஆராய்ச்சி செய்து சோழரின் தீவை அடைந்து விட்டார், ஆனால் அங்கே சிறையில் மாட்டிக் கொண்டார். அவரைத் தேடிச் செல்வதாய் ரீமாசென் கூறினாலும், ரீமாவின் உண்மையான நோக்கம் அங்கே சென்று சோழரை அழிப்பதும், குலதெய்வ சிலையை மீட்பதும்தான். எனவேதான் மத்திய மந்திரியின் செல்வாக்கினாலும், ராணுவ உயர் அதிகாரி துணையுடனும் (இவர்களைனைவரும் பாண்டியர்கள்) பெரும் படையோடும், ஆயுதங்களோடும் செல்கிறார். எனவேதான் கப்பலில் செல்கின்றனர்.

//ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் இராணுவத்தினரின் உயிருக்கு அரசாங்கம் பொறுப்பேற்காது தொல்பொருள் ஆராய்ச்சி திட்டத் தலைவி அறிவிக்க முடியுமா? //

நியாயமான கேள்வி, இந்த வசனமே தேவையில்லை படத்திற்கு.

//ஜெராக்ஸ், மைக்ரோஃபிலிம், எல்லாம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு அளிக்கப்படாததா? பழைய கால அரிய ஓலைச்சுவடிகளை அப்படியே தூக்கிக்கொண்டு சுற்றுவதுதான் எந்தவகை ஆராய்ச்சி? //

அந்த ஓலைச்சுவடி ஆண்ட்ரியாவுடைய தனிப்பட்ட சொத்து, அதனால் அவர் எடுத்து வருகிறார். மேலும் காட்சியின் நம்பகத்தன்மைக்காக ஓலைச்சுவடியை காட்டுகிறார்கள். ஒருவேளை ஜெராக்ஸை காட்டியிருந்தால் நீங்கள் இதே கேள்வியை 'இவ்வுளவு செலவு செய்து படமெடுப்பவர்கள் ஓர் ஓலைச்சுவடியை காட்ட முடியாதா?' என்று கேட்டிருப்பீர்கள்.


//அப்படி அவர்கள் என்னதான் தொழில் செய்கிறார்கள்? வேளாண்மை, வணிகம், மீன்பிடிப்பது என்று எதுவும் செய்கிறார்களா? //

500 வருடங்களாக மழை பெய்யவில்லை. ஆதாலால் விவசாயமில்லை. இறைச்சியை வேட்டையாடி பகிர்ந்து உண்ணுகிறார்கள்.

//வீர சைவர்களான சோழர்கள் கல்வெட்டு வழக்கில் ‘லிங்க தரிசனம்’ என்றெல்லாம் வாமாச்சார வழக்குகள் பேசுவார்களா? //

ஏன், வீர சைவர்கள் இம்மாதிரி பேசக்கூடாதா? ஆபாசமாக ஒன்றும் பேசவில்லையே, நகைச்சுவையாகத்தானே சொல்கிறார்.

//சோழர்கள் பத்தாம் நூற்றாண்டிலும் கலப்பேயில்லாத சுத்த கருப்பு வண்ணதிலேயே இருக்கிறார்களாமா?//

ஒரு கற்பனைக்காக அப்படி இருக்கக் கூடாதா?

//வியட்நாம் பக்கத்திலிருக்கும் ஒரு ஆதிவாசிக் கூட்டம் கறுப்பாக இருக்கிறது. இன்னொரு ஆதிவாசிக் கூட்டம் சிவப்பு வண்ணத்தில் இருக்கிறார்களே? //

வேறேதாவது பகுதியின் ஆதிவாசிக் கூட்டமாயிருக்கலாம், அல்லது அவர்கள் ஏதேனும் சாயம் பூசிக் கொண்டிருக்கலாம்.

// கொலைசெய்யப் கத்தியோடு பாய்ந்து வரும ஆதிவாசிக் கூட்டத்தைப் பார்த்துவிட்டும் ‘hold fire' என்று சொல்லிக் கொண்டே இருக்கும் இராணுவ கமாண்டருக்கு எங்கே ட்ரெய்னிங் கொடுக்கிறார்கள்? இந்திய இராணுவத்தினரிடம் SLRம், கையெறி குண்டையும் தவிர வேறு ஆயுதமே இல்லையாமா? //

நல்ல கேள்வி, கமாண்டர், ஆதிவாசிகள் சும்மா பயமுறுத்துகிறார்கள் என்று நினைத்திருக்கலாம், கணித்தது தவறாய் இருந்திருக்கலாம்.

இவ்வுளவுதான் எனது பதில்கள். இவை அனைத்துமே நான் யோசித்து, அனுமானப் படுத்தியதுதான். இவற்றிற்கு வேறுவிதமான விளக்கங்களும் இருக்கலாம். எனக்கும் சில கேள்விகள் உள்ளன, சில பகுதிகள் தெளிவாய் புரியவில்லை.

இருப்பினும் நாம் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும், வேட்டைக்காரன்களிடமிருந்தும், ஆதவன்களிடமிருந்தும் தமிழ் சினிமாவை மீட்பதற்காக!!

Thursday, January 14, 2010

தமிழ் தொலைக்காட்சிகளின் பொங்கல்

வலைப் பதிவாளர்களுக்கு, வலைப்பதிவு வாசகர்களுக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

எல்லா தொலைக்காட்சிகளிலுமே ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள்தான். காலை 6 - 7 மங்கல இசை, 7 - 8 நாட்டுப் புற பாடல்கள், 8 - 9 ஏதாவது ஒரு நடிகரின் பேட்டி
9 - 10 பட்டிமன்றம், 10 -ல் இருந்து திரைப்படங்கள், மாலை பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படங்களின் படைப்பாளிகள்/நடிக நடிகையர்களின் பேட்டிகள்.

காலையில் புஷ்பவனம் குப்புசாமி - அனிதாவின் நாட்டுப் புற பாடல்கள் நிகழ்ச்சி நன்றாக இருந்தது (ஜெயா டிவி என்று நினைக்கிறேன்). பாலிமர் டிவியில் லியோனி தலைமையிலான பட்டிமன்றம் சுவாரசியாக இருந்தது. விஜய் டிவியில் 12 மணிக்கு ஏர்டெல் சூப்பர் சிங்கர் விருதுகள் நிகழ்ச்சி நடந்தது. எனக்கு இம்மாதிரியான பாடல், டான்ஸ் நிகழ்ச்சிகள் பிடிக்கவே பிடிக்காது. மனைவி ஆவலாய் பார்த்ததால் விட்டுக் கொடுத்து விட்டேன்.

மாலையில் சன் டிவியில் போக்கிரி, கலைஞர் டிவியில் குருவி போடுகிறார்களாம். விஜய் டிவியில் காஞ்சிவரம் படம். இப்படியாக ஒரு வழியாக பொங்கல் நிகழ்ச்சிகள் முடிந்து விடும்.

நீங்கள் என்னென்ன நிகழ்ச்சிகள் பார்க்கிறீர்கள்?

பொங்கலுக்கு குட்டி, நாணயம், ஆயிரத்தில் ஒருவன் என்று மூன்று திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆயிரத்தில் ஒருவனை பார்க்க வேண்டும். மற்ற இரண்டும் வழமையான மசாலாவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன், பார்ப்போம்!!

Sunday, January 03, 2010

அவதார் - இப்படியொரு திரைப்படம் தமிழில் வருமா?

அனைவருக்கும் எனது இதயங் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த புத்தாண்டில் நான் வழக்கமாய் செய்யும் சிலவற்றை செய்யவில்லை.


1. 31-ம் தேதி இரவு 12 மணிவரை கண்விழித்திருக்க வில்லை. மாலையில் எங்களது அடுக்ககத்தில் (Apartment) சில கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னை புறநகர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜாங்கிட் வந்திருந்தார். இரவு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்துவிட்டு உறங்கி விட்டேன்.

2. புத்தாண்டு முதல் தேதியில் எவருக்கும் தொலைபேசியில் வாழ்த்து சொல்ல வில்லை. என்னை பொருத்த வரை புத்தாண்டின் முதல் நாளும் மற்ற எந்தவொரு நாளைப் போல் சாதாரணமானதே.

3. கோவிலுக்கு செல்ல வில்லை. வீட்டிலேயே கடவுளை வழிபட்டேன்.

<<>>இன்று மதியம் சத்யம் - சாந்தம் தியேட்டரில் அவதார் திரைப்படத்தை கண்டு ரசித்தோம். டிக்கெட் 120 ரூபாய், இணையத்தில் பதிவு செய்திருந்தோம். தியேட்டரில் 3D கண்ணாடிக்கென 20 ரூபாய் தனியே வாங்கிக் கொண்டனர். இதை டிக்கெட்டுடனேயே வாங்கியிருக்கலாமே என்று தோன்றியது. இணையத்தில் அவ்வசதி இல்லையோ?

அற்புதமான திரைப்படம் அவதார். வித்தியாசமான கதை, விறுவிறுப்பான தெளிவான திரைக்கதை. இப்படியெல்லாம் ஹாலிவுட் திரைஉலகினர் எப்படி சிந்திக்கிறார்கள் என்று பொறாமையும், ஏக்கமும் படவைக்கிறது. பாண்டாரா கிரகம், அதில் வாழும் மனிதர்கள், மிருகங்கள் என கிராபிக்ஸில் புகுந்து விளையாடி உள்ளனர். இப்படம் தயாரிக்க பத்து வருடம் ஆனதாம், அந்த உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

3Dயில் பார்த்தது ஓர் அற்புதமான அனுபவம். ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு மிஞ்சுகின்றன. பாண்டாரா காட்டில் ஹீரோ ஓடும்போதும், தாண்டும்போதும் நாமும் கூடவே தாண்டுவது போல் உணர்வு ஏற்பட்டது. இப்படியொரு ஆக்-ஷன் திரைப்படத்தில் அழகாக ஒரு காதலையும் சொல்லியிருக்கின்றனர்.

காட்சிகள் ஏற்படுத்திய பிரமிப்பினாலும், மொழி உச்சரிப்பினாலும் எனக்கு ஒரு சில இடங்களில் வசனம் புரியவில்லை, இருந்தாலும் ரசிக்க முடிந்தது. தியேட்டரை விட்டு வெளியே வரும்போது பிரமாண்டமான வேட்டைக்காரன், ஆதவன் போஸ்டர்கள் கண்ணில் பட்டதும் என்னுள் எழுந்தது கழிவிரக்கமா / சோகமா / கோபமா என்று சொல்லத்தெரிய வில்லை.

இப்படியொரு படம் தமிழில் வருமா? ஏன் அறிவியல் / தொழில்நுட்பம் / வானவியல் தொடர்பான திரைப்படங்களை தமிழில் எவரும் தயாரிக்க வில்லை? அதற்கான சூழ்நிலை இங்கே இல்லையா? உலக அளவிலான மார்க்கெட் (viewer ship) இல்லாததுதான் காரணமா?