ஐயா, இந்த படத்தில் ஆயிரம் குறைகள் இருக்கலாம், இருந்தாலும் ஆதரியுங்கள். இல்லாவிடில் வேட்டைக்காரன்களிடமிருந்தும், ஆதவன்களிடமிருந்தும் தமிழ் சினிமாவை மீட்க இயலாது.
இதோ நட்சத்திர பதிவாளரின் கேள்விகளுக்கு பதில்கள்..
//தனது கடைசி வாரிசைக் காப்பாற்றுவதற்காகவும், சோழவம்சத்தை என்றென்றும் துலங்கச் செய்யவும், நினைக்கும் அந்த சோழ ராஜா எதற்காக பாண்டியரிடமிருந்து அபகரித்த அவர்களின் குல தெய்வச் சிலையையும் இளவலோடு சேர்த்து ஒளித்து வைக்க வேண்டும்? //
சோழருக்கும் பாண்டியருக்கும் ஏற்கனவே இருந்துவரும் பகையால் குலதெய்வ சிலை பாண்டியருக்கு கிடைக்கக் கூடாது என்று ஒளித்து வைக்கிறார்கள். அச்சிலை சோழரோடு இருந்தால்தானே அவர்களுக்கு பெருமை, எனவே சோழ இளவலோடு சிலையையும் எடுத்துச் செல்கின்றனர். மேலும் போரில் தோற்கும்போது வேறு இடத்தில் சிலையை ஒளித்து வைக்க சந்தர்ப்பம் இல்லாது இருந்திருக்கலாம்.
//அப்படியானால் முதலில் போன பிரதாப் ஆராய்ச்சி எதுவும் செய்யப் போகவில்லையா? வியட்நாமிற்கு சென்னையிலிருந்து கப்பலில்தான் போக வேண்டுமா? //
பிரதாப் போத்தன் ஆராய்ச்சி செய்து சோழரின் தீவை அடைந்து விட்டார், ஆனால் அங்கே சிறையில் மாட்டிக் கொண்டார். அவரைத் தேடிச் செல்வதாய் ரீமாசென் கூறினாலும், ரீமாவின் உண்மையான நோக்கம் அங்கே சென்று சோழரை அழிப்பதும், குலதெய்வ சிலையை மீட்பதும்தான். எனவேதான் மத்திய மந்திரியின் செல்வாக்கினாலும், ராணுவ உயர் அதிகாரி துணையுடனும் (இவர்களைனைவரும் பாண்டியர்கள்) பெரும் படையோடும், ஆயுதங்களோடும் செல்கிறார். எனவேதான் கப்பலில் செல்கின்றனர்.
//ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் இராணுவத்தினரின் உயிருக்கு அரசாங்கம் பொறுப்பேற்காது தொல்பொருள் ஆராய்ச்சி திட்டத் தலைவி அறிவிக்க முடியுமா? //
நியாயமான கேள்வி, இந்த வசனமே தேவையில்லை படத்திற்கு.
//ஜெராக்ஸ், மைக்ரோஃபிலிம், எல்லாம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு அளிக்கப்படாததா? பழைய கால அரிய ஓலைச்சுவடிகளை அப்படியே தூக்கிக்கொண்டு சுற்றுவதுதான் எந்தவகை ஆராய்ச்சி? //
அந்த ஓலைச்சுவடி ஆண்ட்ரியாவுடைய தனிப்பட்ட சொத்து, அதனால் அவர் எடுத்து வருகிறார். மேலும் காட்சியின் நம்பகத்தன்மைக்காக ஓலைச்சுவடியை காட்டுகிறார்கள். ஒருவேளை ஜெராக்ஸை காட்டியிருந்தால் நீங்கள் இதே கேள்வியை 'இவ்வுளவு செலவு செய்து படமெடுப்பவர்கள் ஓர் ஓலைச்சுவடியை காட்ட முடியாதா?' என்று கேட்டிருப்பீர்கள்.
//அப்படி அவர்கள் என்னதான் தொழில் செய்கிறார்கள்? வேளாண்மை, வணிகம், மீன்பிடிப்பது என்று எதுவும் செய்கிறார்களா? //
500 வருடங்களாக மழை பெய்யவில்லை. ஆதாலால் விவசாயமில்லை. இறைச்சியை வேட்டையாடி பகிர்ந்து உண்ணுகிறார்கள்.
//வீர சைவர்களான சோழர்கள் கல்வெட்டு வழக்கில் ‘லிங்க தரிசனம்’ என்றெல்லாம் வாமாச்சார வழக்குகள் பேசுவார்களா? //
ஏன், வீர சைவர்கள் இம்மாதிரி பேசக்கூடாதா? ஆபாசமாக ஒன்றும் பேசவில்லையே, நகைச்சுவையாகத்தானே சொல்கிறார்.
//சோழர்கள் பத்தாம் நூற்றாண்டிலும் கலப்பேயில்லாத சுத்த கருப்பு வண்ணதிலேயே இருக்கிறார்களாமா?//
ஒரு கற்பனைக்காக அப்படி இருக்கக் கூடாதா?
//வியட்நாம் பக்கத்திலிருக்கும் ஒரு ஆதிவாசிக் கூட்டம் கறுப்பாக இருக்கிறது. இன்னொரு ஆதிவாசிக் கூட்டம் சிவப்பு வண்ணத்தில் இருக்கிறார்களே? //
வேறேதாவது பகுதியின் ஆதிவாசிக் கூட்டமாயிருக்கலாம், அல்லது அவர்கள் ஏதேனும் சாயம் பூசிக் கொண்டிருக்கலாம்.
// கொலைசெய்யப் கத்தியோடு பாய்ந்து வரும ஆதிவாசிக் கூட்டத்தைப் பார்த்துவிட்டும் ‘hold fire' என்று சொல்லிக் கொண்டே இருக்கும் இராணுவ கமாண்டருக்கு எங்கே ட்ரெய்னிங் கொடுக்கிறார்கள்? இந்திய இராணுவத்தினரிடம் SLRம், கையெறி குண்டையும் தவிர வேறு ஆயுதமே இல்லையாமா? //
நல்ல கேள்வி, கமாண்டர், ஆதிவாசிகள் சும்மா பயமுறுத்துகிறார்கள் என்று நினைத்திருக்கலாம், கணித்தது தவறாய் இருந்திருக்கலாம்.
இவ்வுளவுதான் எனது பதில்கள். இவை அனைத்துமே நான் யோசித்து, அனுமானப் படுத்தியதுதான். இவற்றிற்கு வேறுவிதமான விளக்கங்களும் இருக்கலாம். எனக்கும் சில கேள்விகள் உள்ளன, சில பகுதிகள் தெளிவாய் புரியவில்லை.
இருப்பினும் நாம் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும், வேட்டைக்காரன்களிடமிருந்தும், ஆதவன்களிடமிருந்தும் தமிழ் சினிமாவை மீட்பதற்காக!!
9 comments:
/காட்சியின் நம்பகத்தன்மைக்காக ஓலைச்சுவடியை காட்டுகிறார்கள். ஒருவேளை ஜெராக்ஸை காட்டியிருந்தால் நீங்கள் இதே கேள்வியை 'இவ்வுளவு செலவு செய்து படமெடுப்பவர்கள் ஓர் ஓலைச்சுவடியை காட்ட முடியாதா?' என்று கேட்டிருப்பீர்கள்./
:-)))
////ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் இராணுவத்தினரின் உயிருக்கு அரசாங்கம் பொறுப்பேற்காது தொல்பொருள் ஆராய்ச்சி திட்டத் தலைவி அறிவிக்க முடியுமா? ////
பல ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் ஜேம்ஸ் பாண்ட் உயிருக்கு அரசு பொறுப்பேற்காது...,
:-))
கார்த்தி அவர்களுக்கு,
பதில்களுக்கு நன்றி.
எனது பதிவிலேயே பின்னூட்டத்தி்ல் விரிவாக உரையாடல் நடந்திருக்கிறது. இருப்பினும் தனிப் பதிவாக நீங்கள் இட்டிருப்பதால் இங்கும் சில விளக்கங்கள் இடுகிறேன்.
குலதெய்வச் சிலை:
நீங்கள் வரலாறு படித்திருந்தால் உங்களுக்கு இந்தக் கேள்வியின் அடிப்படை புரிந்திருக்கும். அதைப் பற்றிய உரையாடல் எனது இடுகையிலும் இருக்கிறது.
ஒரு அரச குடும்பம் இன்னொரு அரச குடும்பத்தை இகழச் செய்யும் முயற்சியாக குலதெய்வச் சிலையை கடத்துகிறார்கள். ஆனால் அதனால் என்ன பயன் என்பதை பார்வையாளனுக்கு தெரிய வேண்டுமில்லையா? அதுவும் உயிரையும், குலத்தின் கடைசி வாரிசையும் காக்க வேண்டிய அந்த தருணத்திலும் ஒரு சிலைக்கு என்ன முக்கியத்துவம்? அந்த சிலை பாண்டியருக்கு கிடைத்தால் என்ன பிரச்சினை ஏற்படும்? பாண்டியர்கள் சக்தி கூடி சோழர்களை அழித்து விடுவார்களா?
பாண்டியனின் மணிமகுடமும், இரத்தினஹாரமும் இலங்கை மன்னனிடமிருந்து மீட்க சோழன் போராடிய கதை உண்டு. அது போல இந்த குலதெய்வச சிலையின் பின்னணி தெரிந்தால்
அதுவும் 800 வருடங்களுக்கு மேலாக ஒரு அரச வம்சம் தொலைந்த சிலையைத் தேடுகிறது என்னும் போது அந்த சிலையின் முக்கியத்துவம் கூடுகிறது. ஆனால் படத்தில் அந்தப் பகுதி சரியான முறையில் விவரிக்காததினால் நமக்கு ஒரு அசௌகரியம் உண்டாகிறது.
புதைபொருள் ஆராய்ச்சி என்பதற்காகத்தான் கூலிகள், பெரும் பெட்டிகள் என்று எடுத்துச் செல்கிறார்கள் இல்லையா? ஏனென்றால் அழிந்த ஒரு நகரத்தை அகழ்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. இராணுவத்தை விடுங்கள். அது பாதுகாப்பிற்கு என்றுச் சொல்லப்படுகிறது. ஆனால் ஆராய்ச்சிக்கு என்று நிறைய பேர் கூட்டமாக செல்கிறார்கள் இல்லையா?
ஒரு கதையில் transition என்பது மிகவும் முக்கியம். ஜெர்க் அடிக்கக்கூடாது. முன்னர் தொலைந்து போன ஆராய்ச்சியாளர் மிக எளிமையாகச் சென்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து போகிறவர்கள் பெரும் உபகரணங்களுடன் போகிறார்கள். எங்கோ ஏதோ மிஸ் ஆகிறது.
கப்பல் பயணம் என்பது பொதுவாக சாமாண்கள் மட்டும் கொண்டு செல்லும் ஒரு ட்ரான்ஸ்போர்டேஷனாக மாறிவிட்ட நிலை இன்று. மத்திய மந்திரியுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் அதிகாரம் உள்ள ஒரு திட்டத் தலைவி கப்பலில் சாமான்கள் அனுப்பிவிட்டு பிளேனில் குழுவோடு போவது இயல்பா?
படத்தின் இறுதிக்காட்சியில் ஹெலிகாப்டரில்தான் படைவீரர்கள் பலரும் வருகின்றனர். கப்பல் பயணம் என்பது ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற தலைப்பிற்கும், பாடலுக்கும் ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருப்பது ‘contrived story’ என்ற நிலையைக் காட்டுகிறது. அது ஒரு நெருடல் இல்லையா?
புதைபொருள் ஆராய்ச்சிதுறை என்பது என்ன? ஒரு பழங்கால ஓலைச்சுவடி அதுவும் ஒரு முக்கிய வரலாற்று சின்னத்திற்கான திறவுகோல் அங்கே வேலைசெய்யும் அதிகாரியின் தனிப்பட்ட சொத்தாக இருக்க முடியாதே நண்பரே.
// 'இவ்வுளவு செலவு செய்து படமெடுப்பவர்கள் ஓர் ஓலைச்சுவடியை காட்ட முடியாதா?' என்று கேட்டிருப்பீர்கள்.//
எனது கேள்விகளையோ எனது சிந்த்னையையோ நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.
செலவு பிரச்சினையில்லை நண்பரே. காட்சிகள் நெருடலில்லாமல் உங்களை புனைவுலகத்திற்குள் ஈர்க்க வேண்டும்.
பிற விஷயங்களுக்கு பிறகு நேரமிருப்பின் விளக்கம் தருகிறேன்.
சந்தனமுல்லை மற்றும் சுரேஷ் அவர்களுக்கு,
எனது பதிவிலேயே விரிவாக பல பின்னூட்டங்களும், விவாதங்களும் நடந்திருக்கின்றன. விளக்கம் வேண்டினால் அங்கும் நீங்கள் வந்து படிக்கலாம்.
ஜேம்ஸ் பாண்ட் கதைகளைப் பற்றி வேறு ஒரு தளத்தில் விரிவாகப் பேசலாம் சுரேஷ். அதற்கும் அகழ்வாராய்ச்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை :)
நண்பர்களே, கருத்திற்கு நன்றி
ஸ்ரீதர், நீண்ட விளக்கத்திற்கு நன்றி!
cinema vai cinema va parungappa, evano padam edukiran, evano sambarikiran, neega yenda nai madiri adichuttu sagareenga..
ethula, thirukkuraluku vilakkavurai kodutha madiri.. explanation vera..
padatha parthoma ponomannu ellama...
munnera valya parungappa..
உங்க கருத்திற்கு நன்றி, பெயரில்லா..
Post a Comment