Tuesday, April 24, 2007

கிரிக்கெட் - இந்த வாரம்

ஒரு வழியாக கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. இன்று நடக்கும் அரையிறுதி போட்டியில் இலங்கையும், நியுசிலாந்தும் மோதுகின்றன. ஆட்டம் நடக்கும் ஜமைக்கா மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால் இரு அணிகளிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிப்பதில் அதிகப் பங்கு வகிப்பர் என்று நம்பலாம்.

தற்போதைய ஃபார்மில் இறுதி போட்டிக்கு செல்ல, இலங்கைக்கே வாய்ப்பு அதிகம். அனுபவ வாஸ், அதிரடி மாலிங்கா, சுழற்புயல் முரளிதரன் என பந்துவீச்சிலும், ஜெயசூர்யா, சங்ககரா, ஜெயவர்த்தனே போன்ற அனுபவ வீரர்களால் மட்டையடியிலும் (பேட்டிங்) இலங்கை ஜொலிக்கிறது.

நாளை நடக்க இருக்கும் இன்னொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்காவை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா இன்னும் ஒருமுறை இறுதிப் போட்டியில் விளையாட தயாராக உள்ளது.

இறுதிப் போட்டியில் எனது கணிப்பு : ஆஸ்திரேலியா - இலங்கை, உங்கள் கணிப்பு என்னவென்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!

உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் காற்று வாங்குகின்றன. லாரா ஓய்வுபெற்ற வெஸ்ட் இண்டிஸ் - இங்கிலாந்து போட்டியை தவிர மற்ற பெரும்பாலான போட்டிகளில் பார்வையாளர்கள் மிகவும் குறைவே! அதிகமான டிக்கெட் விலை ஒரு காரணமாக சொல்லப் பட்டாலும், எனக்கென்னவோ காரணம் வெறெங்கோ உள்ளதாகப் படுகிறது, உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்!

வங்கதேசத்திற்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி தேர்வாகி விட்டது. ராகுல் டிராவிட் கேப்டனாக, இளமையான(?) அணி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. டெண்டுல்கர், கங்குலி, ஹர்பஜன், அகார்கர், பதான் போன்றோர் கழட்டி விடப் பட்டுள்ளனர். டிராவிட் தேர்ந்தெடுக்கப் பட்டதும் கேள்விக் குறியே! அடுத்த உலகக் கோப்பையை மனதில் வைத்து இளமையான ஒருவரை கேப்டனாக தேர்ந்தெடுத்திருக்கலாம். யுவராஜ் சிங், சரியான தேர்வாக இருந்திருப்பார்.

Thursday, April 12, 2007

'தி' என்றால் திருச்சி...




நேற்று நண்பர் ஒருவரிடமிருந்து செல்பேசியில் குறுஞ்செய்தி வந்தது "I m going 2 TRY this wknd". நண்பர் திருச்சியை சேர்ந்தவர் என்பதால், அவர் இந்த வார இறுதியில் திருச்சிக்கு செல்கிறார் என்பதை உடனே புரிந்து கொள்ள முடிந்தது.

திருச்சிராப்பள்ளி என்பதே திருச்சியின் முழுப்பெயர். பழங்காலத்தில் திரு. சிராப்பள்ளி என்று பழக்கத்தில் இருந்து வந்தது, காலப்போக்கில் திருச்சிராப்பள்ளி என்று மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி என்னும் பெயர், எப்போது திருச்சி என சுருக்கமாக வழங்க ஆரம்பிக்கப் பட்டது என்று தெரியவில்லை. ஒருவேளை பேருந்துகளிலும், மற்ற பெயர் பலகைகளிலும் எழுதுவதற்கு சுலபமாக கடந்த 40 - 50 வருடங்களுக்குள்ளாகவே இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்கலாம்.

திருச்சியின் பெயர் மட்டுமல்லாமல், தஞ்சாவூர் என்பது தஞ்சை என்றும், கும்பகோணம் என்பது குடந்தை என்றும், திருநெல்வேலி என்று நெல்லை என்றும், பாண்டிச்சேரி என்பது பாண்டி என்றும் அழகாக சுருக்கப்பட்டுள்ளன. எனக்கென்னவோ சுருக்கப்பட்டுள்ள பெயர்களை விட, உண்மையான முழுப்பெயர்களே கவர்ச்சியாக உள்ளதாக உணறுகின்றேன்.

இப்போது இணைய அரட்டை, செல்பேசி குறுஞ்செய்திகளெல்லாம் வந்துவிட்ட பிறகு திருச்சி என்பதைக் கூட TRY என்றோ try. என்றோ இன்னும் சுருக்கி பயன் படுத்துகிறார்கள். ஒருவேளை எதிர்காலங்களில் இதுவும் கூட இன்னும் சுருங்கி திருச்சியை 'T' அல்லது 'தி' என்று பயன் படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்(how are you) என்பதை h r u? என்று கேட்கிறார்கள். இதை விடவும் இணைய அரட்டைகளில் ASL என்னும் அறிமுகம் செய்து கொள்ளும் வார்த்தை பிரபலம். ASL என்றால் Age, Sex & Location.

குறுஞ்செய்திகளில் சென்னை என்பது CHN என குறிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி வந்தால் (இன்னமும் ஏன் வரவில்லை?) சென்னையை எவ்வாறு குறிப்பிடுவார்கள் என்று யோசித்தால் விடை புலப்பட வில்லை. 'செ' என்று குறிப்பிட முடியுமா? உதாரணத்திற்கு ஜெயங்கொண்டம் என்ற ஊரின் பெயரை 'ஜெ' என்று சொல்ல முடியுமா? ஜெ என்றால் இன்று வரை ஜெயலலிதாவை மட்டுமல்லவா குறிக்கிறது.

திருச்சியில் தில்லைநகர் என்ற இடத்தின் பெயரை தி.நகர் என்று சில பேருந்து பலகைகளில் பார்க்கலாம். இதுவே சென்னையில் தி.நகர் என்றால் தியாகராஜ நகர் என புரிந்து கொள்ள வேண்டும். மேலும் திருச்சியில் வயலூர், புத்தூர், உறையூர், திருவரங்கம் போன்றவற்றை எப்படி சுருக்க முடியும் என்று தெரியவில்லை.

எது எப்படியிருந்தாலும், தி என்றால் திருச்சி என்பது உடனே சாத்தியமாக வேண்டும் என்றால் ரஜினியின் அடுத்த படத்தில் ஒரு பாட்டு வைத்து விடலாம் 'தி என்றால் திருச்சி... ர என்றால் ரஜினி...', எஸ்பிபி மூச்சு விடாமல் பாடுவது ஒரு சரணம் வைத்து விட்டால் அப்புறம் கேட்கவா வேண்டும். உலகம் முழுக்க தி என்றால் திருச்சி என்று தெரிந்து விடும், என்ன சொல்கிறீர்கள்?

Thursday, April 05, 2007

'பல்லேலக்கா' சிவாஜி !!!!


எல்லாரும் சிவாஜியை பத்தி பதிவு போடறாங்க, நாமும் நம்ம பங்குக்கு ஒரு பதிவு போடலேன்னா எங்க பீல்ட் அவுட் ஆயிடுவோமான்னு பயமா இருக்கு... வந்ததுதான் வந்துட்டீங்க, படிச்சுட்டு ஏதாவது திட்டிட்டு போங்களேன்!


ரெண்டு வருஷமா பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்து ஒரு வழியா சிவாஜி பாட்டெல்லாம் ரிலிஸ் ஆயிடுச்சு. புனே ரஸ்தாபேட் ஏரியாவுல அதிகாரப்பூர்வ (அபிஷியல்) சிடியே கிடைக்குது. 125 ரூவாங்கிறது கொஞ்சம் அதிகந்தான் இருந்தாலும் ரஹ்மான் - ஷங்கர் - ரஜினிகாந்த் காம்பினேஷன் இருக்கிறதால நம்ம ப்ரண்ட் வாங்கிட்டு வந்துட்டாரு!


ஏழு பாட்டுங்க இருக்குங்க. முதல் தடவை கேட்கறப்பவே மூனு நாலு பாட்டுங்க பச்சக்கன்னு அட்ராக்ட் பண்ணிடுச்சுங்க. 'அதிரடி..தீ..'ன்னு ஆரம்பிக்கிற ரஹ்மான் பாட்டு நாலு தடவ கேட்டப்புறம் பரவாயில்லை போல இருக்கு. பாட்டு வரியெல்லாம் கேரண்ட்டியா புரிஞ்சுக்கவே முடியாது.

ரெண்டாவது பாட்டு 'பல்லேலக்கா' சூப்பரோ சூப்பர். 'சூரியனோ சந்திரனோ...'ன்னு ஆரம்பிச்சு எஸ்பிபி 'காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்..'ன்னு எண்ட்டர் ஆவராரு பாருங்க, அட்டகாசம். இப்ப எழுதறப்பவே எனக்கு புல்லரிக்குது, தியேட்டர்ல பிச்சு உதறும்னு நினைக்கிறேன். ஓப்பனிங் சாங் இதுதான். சந்திரமுகி 'தேவுடா.. தேவுடா..' மாதிரியே இதுவும் கலக்கும் பாருங்க.


'சஹானா சாரல்..' பாட்டு சூப்பர் மெலடி. உதித் நாரயணனும், சின்மயியும் போட்டு போட்டுட்டு கலக்கி இருக்காங்க. பாட்டு வரிகளெல்லாம் தெளிவா கேட்க முடிவதே ஒரு பெரிய சாதனைதான். 'மார்கழிப் பூவே' பாட்டுக்கு அப்புறம் ரஹ்மானோட நெக்ஸ்ட் மெலடி ரேங்க் இதுக்குத்தான்னு நான் (நான் மட்டும்தான்) நினைக்கிறேன்..


'சஹாரா பூக்கள்..' பாட்டு சோகமான மெலடி. விஜய் யேசுதாஸ், கோமதி ஸ்ரீ (யாருங்க இந்த பொண்ணு, புதுசா ??) பாடியிருக்காங்க. பாடல் ஓகே ரகம். ரொம்ப மெதுவா, இழுக்கறாப்ல இருக்கு.


'ஸ்டைல்..' பாட்டு ரொம்ப ஸ்டைலா இருக்கு. இருந்தாலும் 'ஒரு கூடை சன்லைட்..' அப்படிங்கிற வரியே வலைப்பதிவையெல்லாம் படிச்சுட்டு கேட்டாத்தான் புரியுது. பாட்டு வேற ரொம்ப வெஸ்டர்னா இருக்கு. என்னமோ போங்க..


'சிவாஜி' தீம் மியுசிக் சுமார்தான், சொல்றதுக்கு ஒன்னுமில்லை.


கடைசி பாட்டு 'வாஜி..வாஜி..சிவாஜி' கலக்கல் பாட்டு. ஹரிஹரன், மதுஸ்ரீ பட்டையை கிளப்பி இருக்காங்க. 'ஆம்பல்..ஆம்பல்..'ன்னு ஆரம்பிக்கிற பாட்டுல வார்த்தைகளெல்லாம் சூப்பரா வந்துருக்கு. சின்ன குழந்தைகளெல்லாம் முணுமுணுக்கப் போறாங்க இந்த பாட்டைத்தான்.


மொத்தத்தில பாட்டெல்லாம் நிறைய மார்க் வாங்கி படத்தை பற்றி எதிர்பார்ப்பை இன்னும் எக்கச்சக்கமாக எகிற வைச்சிக்குங்க. படம் மே - 17ம் தேதி ரிலிஸ்ன்னு சொல்றாங்க. அதுக்கு முன்னாடியே திருட்டு விசிடி வந்தாலும் வந்துரும். விசிடியை பார்க்காம, தியேட்டருக்கு போய் மக்களோட மக்களா படத்த பாருங்க, பாத்துட்டு வந்து நீங்களும் உங்க பங்குக்கு ஒரு விமர்சனப் பதிவு போட்ருங்க!!


கொசுறு தகவல்:


புனேயில் இருக்கும் எங்க ஆபிஸ் கேம்பஸ்லயும் ஷூட்டிங் நடந்திருக்கு. எங்க ஆபிஸ் இருக்கிற சைபர் சிட்டிதான் 'சிவாஜி யுனிவர்சிட்டி'யா படத்தில மாற்றப் பட்டிருக்கு. ரஜினி காலேஜ் திறக்கற சீனை படத்தில் பாத்துட்டு வந்து எப்படி இருக்குன்னு மறக்காம எனக்கு சொல்லுங்க!! எங்கயாவது ஒரு
ப்ரேம்ல நான் கூட இருக்கலாம்!!

Wednesday, April 04, 2007

கிரிக்கெட் உலகக்கோப்பை யாருக்கு?





முதலில் அரையிறுதிக்கு தகுதிபெறக் கூடிய அணிகளின் வாய்ப்புகளைப் பற்றி பார்ப்போம்.

சூப்பர்-8க்கு தகுதி பெற்ற அணிகளில் அயர்லாந்து, பங்களாதேஷ் ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. எனவே இவைகளை ஒதுக்கி விடலாம். வெஸ்ட் இண்டீஸ் தான் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. தற்போதைய ஃபார்மில் இதுவும் வெளியேறி விடும்.இங்கிலாந்தும் சுமாராகத்தான் காட்சி அளிக்கிறது. அயர்லாந்துடன் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றுள்ளது. எனவே இதற்கும் வாய்ப்புகள் குறைவு.

எனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியுசிலாந்து, இலங்கை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும். இவற்றில் முதலிடம் பெறும் அணி நான்காமிடம் பெறும் அணியிடமும், இரண்டாமிடம் பெறும் அணி மூன்றாமிடம் பெறும் அணியிடமும் மோதும். தற்போதைய நிலைமையின் படி, இரு அரையிறுதிகளிலும் தென்னாப்ரிக்கா - இலங்கை (A2 vs A3), ஆஸ்திரேலியா - நியுசிலாந்து (A1 vs A4) மோதுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.


இவற்றில் வென்று இறுதிப் போட்டியில் மோதுவதற்கு ஆஸ்திரேலியா & தென்னாப்ரிக்கா அணிகள் தயாராக உள்ளன. வாய்ப்பும், ஃபார்மும் கூட இவ்விரண்டு அணிகளுக்கே உள்ளன. ஆனாலும் அந்த நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அவையே முன்னேறலாம். இதெல்லாம்
சரி, இறுதிப்போட்டியில் யார் வெல்வார் என்று கேட்கிறீர்களா? தென்னாப்ரிக்கா வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை, பொறுத்திருந்து பார்ப்போமே!!

இந்த உலகக் கோப்பையின் சிறந்த வீரர் ஆவதற்கான வாய்ப்பு மேத்யூ ஹேடன், மெக்ராத், ஜெயசூர்யா, மாலிங்கா ஆகிய வீரர்களுக்கு அதிகமுள்ளது! இவ்வீரர்களில் முதல் மூவர் 30 வயதை தாண்டிய அனுபவ வீரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உங்கள் சாய்ஸ் (உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி, சிறந்த வீரர்) என்னவென்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!