Tuesday, April 24, 2007

கிரிக்கெட் - இந்த வாரம்

ஒரு வழியாக கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. இன்று நடக்கும் அரையிறுதி போட்டியில் இலங்கையும், நியுசிலாந்தும் மோதுகின்றன. ஆட்டம் நடக்கும் ஜமைக்கா மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால் இரு அணிகளிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிப்பதில் அதிகப் பங்கு வகிப்பர் என்று நம்பலாம்.

தற்போதைய ஃபார்மில் இறுதி போட்டிக்கு செல்ல, இலங்கைக்கே வாய்ப்பு அதிகம். அனுபவ வாஸ், அதிரடி மாலிங்கா, சுழற்புயல் முரளிதரன் என பந்துவீச்சிலும், ஜெயசூர்யா, சங்ககரா, ஜெயவர்த்தனே போன்ற அனுபவ வீரர்களால் மட்டையடியிலும் (பேட்டிங்) இலங்கை ஜொலிக்கிறது.

நாளை நடக்க இருக்கும் இன்னொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்காவை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா இன்னும் ஒருமுறை இறுதிப் போட்டியில் விளையாட தயாராக உள்ளது.

இறுதிப் போட்டியில் எனது கணிப்பு : ஆஸ்திரேலியா - இலங்கை, உங்கள் கணிப்பு என்னவென்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!

உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் காற்று வாங்குகின்றன. லாரா ஓய்வுபெற்ற வெஸ்ட் இண்டிஸ் - இங்கிலாந்து போட்டியை தவிர மற்ற பெரும்பாலான போட்டிகளில் பார்வையாளர்கள் மிகவும் குறைவே! அதிகமான டிக்கெட் விலை ஒரு காரணமாக சொல்லப் பட்டாலும், எனக்கென்னவோ காரணம் வெறெங்கோ உள்ளதாகப் படுகிறது, உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்!

வங்கதேசத்திற்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி தேர்வாகி விட்டது. ராகுல் டிராவிட் கேப்டனாக, இளமையான(?) அணி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. டெண்டுல்கர், கங்குலி, ஹர்பஜன், அகார்கர், பதான் போன்றோர் கழட்டி விடப் பட்டுள்ளனர். டிராவிட் தேர்ந்தெடுக்கப் பட்டதும் கேள்விக் குறியே! அடுத்த உலகக் கோப்பையை மனதில் வைத்து இளமையான ஒருவரை கேப்டனாக தேர்ந்தெடுத்திருக்கலாம். யுவராஜ் சிங், சரியான தேர்வாக இருந்திருப்பார்.

No comments: