Tuesday, August 22, 2006

C. அருண் s/o சந்திரசேகரன் - V 2.0

சோம்பேறி பையன் பதட்டமாக இருந்தான். அலுவலகத்தில் ஏதாவது வேலை செய்யச் சொன்னாலே பதட்டமாகி விடுவது, சோம்பேறி பையனின் வழக்கம். சம்பளம் கொடுக்கிறார்கள் அல்லவா, போனால் போகிறதென்று ஏதாவது செய்து வைப்பான். ஆனாலும் இன்று பதட்டமாய் இருந்ததற்கு காரணம் தேன்கூடு போட்டிக்காக அவன் எழுதிய கவிதைக்கும், கதைக்கும் கிடைத்த வரவேற்புதான்(?)!.

நண்பர் அருண்.சியிடமிருந்து மின்னஞ்சல் வந்தது "என்னய்யா, உன்னோட கதைக்கு நான் பாராட்டி எழுதின பின்னூட்டத்தை போட்டுட்டீங்க, ஆனா கவிதையை கொஞ்சம் திட்டி எழுதின பின்னூட்டத்தை போடவே இல்லை வலைப்பதிவில்??". நண்பரிடம் ப்ளாக்கர் கணக்கு இல்லாததால், மின்னஞ்சலில் பின்னூட்டம் அனுப்புவார்.

"அதெல்லாமில்லை, நான்கைந்து பின்னூட்டங்கள் வந்து சேர்ந்தவுடன், அவற்றிற்கு பதிலளிக்கும் போது, உங்கள் பின்னூட்டத்தையும் வெளியிட்டு விடுகிறேன்" - சோம்பேறி பையன்.

"சரி, பரவாயில்லை, நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன், எப்படியிருக்கிறதென்று பாருங்கள்" - அருண் சி.

மின்னஞ்சலில் வந்த அந்த கவிதைதான் இது.

*****

கயரிட்ட காலணியைக் கழற்றியும்
கயிற்றால் கட்டியது போல் வலிக்குது - கால்கள்
நீண்ட நேரம் நிற்பதால் கடுக்குது

எப்போது வருவாய்

முதுகில் இருந்து சுமையை இறக்கியும்
மலையைத் தாங்குவதாய் கனக்குது - சுமை
மனதிலிருந்து இறங்க மறுக்குது

எப்போது வருவாய்

உப்பு நீரை
கொலை செய்யத் துடிக்குறேன்
விழியிலிருந்து குழியில் தள்ளி

எப்போது வருவாய்

தலையில் எண்ணெய் பிசுக்குது
வயிறு பசிக்குது
துக்கம் மட்டுமல்ல
தூக்கமும் கண்களைத் தழுவுது

எப்போது வருவாய்

காய்வதும் தேய்வதும்
நிலவு மட்டுமல்ல

எப்போது வருவாய்

வழி மேல் விழி வைத்தன்றி
வாசல் நிலையில் நிலையின்றி
தலை சாய்த்து நிற்கின்றேன்
தவம் செய்து தவிக்கின்றேன்

எப்போது வருவாய் அம்மா!!!
அலுவலகத்திலிருந்து - என்னை
தழுவுவதற்கு
எப்போது வருவாய் அம்மா!!!

*****

நண்பர் அருண்.சி மும்பையில் வேலை பார்த்த போது அறிமுகமானவர். கும்பகோணத்துக் காரர், திருச்சியில் படித்து வளர்ந்தவர். தற்போது ஹைதராபாத்தில் பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலை செய்கிறார். அவருடைய கவிதை இது. அற்புதமான கவிதைக் கருவை சுலபமாக, அழகாக சொல்லியிருக்கிறார். கடைசி வரிகளைப் படித்தவுடன், திரும்பவும் ஒரு முறை கவிதையைப் படிக்க வைக்கிறார். கவிதையென்றாலே அது காதலைப் பற்றியதுதான் என்று நினைத்துக் கொண்டிருந்த சோம்பேறி பையனுக்கு, கவிதைக்கு களங்கள் பலப்பல என்று நினைவூட்டுகிறார். வாழ்த்துக்கள் அருண்.சி, தொடர்ந்து எழுதுங்கள் !!

***

இந்த இடுகையின் முதல் பதிப்பிற்கு ஒரு பின்னூட்டமும் வராததால், பயந்து போன நண்பர் அருணின் மின்னஞ்சல் இது

innum oru comment kooda illai...namma kavithaiavulo mosamava irukku.....ennala unga peru keturumpola...onnum kedurathukku perusa illai.....i thinkovvoru varthaiya irunthathoda effectunnu oru chinnasanthegam...if possible re-publish panni irukkurathaunga web nambargal kitta sollavum.....illayaraja mothomotha music vasikkum pothu current ponathu than enakkuninappu varuthu...sathiya sothanai :-(

arun c

***

சங்க அரசியல்களும், உட்டாலக்கடி வலைப்பதிவு வேலைகளும் அருணுக்கு இன்னும் பழக்கமாக வில்லை..

ஆதலால் நண்பர்களே, கவிதையைப் படித்து விட்டு ஆல்ட் F4 போட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடாமல், ஓரிரு வார்த்தையாவது கவிதையை பாராட்டியோ, திட்டியோ பின்னூட்டம் இடுங்கள், அது நண்பர் அருண்.சியை ஊக்குப்படுத்துவதாக இருக்கும். அவரும் ஒரு புது வலைப்பதிவை ஆரம்பிக்கலாம்.

***

இந்த இடுகை சிற்சிறு மாற்றங்களுடன், மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.

Monday, August 14, 2006

ஜெண்டில்மேன் - தேன்கூடு-போட்டி சிறுகதை

சங்கர் அரைத் தூக்கத்தில் இருந்தான். டிவியில், வணக்கம் தமிழகத்தில் போன வாரம் தற்கொலைக்கு முயன்ற நடிகை தமிழ்நாட்டு முன்னேற்றத்தைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள். சங்கர், கற்பனையில் அவளுடன் டூயட் பாட ஆரம்பித்த மைக்ரோ நொடியில், பையன் போர்வையை விலக்கி, முகத்தின் அருகில் வந்து 'அப்பா, இந்த கணக்கு எப்படி போடறதுன்னு சொல்லி கொடுங்கப்பா...' என்று இழுத்தான். 'போய் அம்மாகிட்ட கேளுடா, அப்பாவுக்கு ஆபிஸ்க்கு டைம் ஆய்டுச்சி' என்ற படியே, பாத்ரூமுக்கு ஓடினான் சங்கர். 'டைலாமோ, டைலாமோ...' பாடல் ஷவர் சத்தத்தையும் மீறி வழிந்தது.

குளித்து முடித்து விட்டு டிரஸ் பண்ணும்போது, சித்ரா வந்து 'ஏங்க, ஈவினிங் ஆபிஸ்ல இருந்து வந்தவுடனே பிக்-பஜார் போய்ட்டு வந்துருவோமா, மளிகை சாமானெல்லாம் வாங்கனுங்க...' என்றாள்.

'ஏண்டி அதான் நேத்தே சொன்னேன்ல, நீ போய்ட்டு வந்துடு, பகல்ல சும்மாதான இருக்க..'

'ஹூக்கும், என்னைக்கு நீங்க வீட்டுக்கு வேலை செஞ்சிருக்கீங்க, பக்கத்து வீட்டு சோம்பேறி பையனை பாருங்க, பொண்டாட்டி ஆசைப்பட்டான்னு புனேயிலிருந்து பாம்பே போய் வடாபாவ் வாங்கிட்டு வந்து தர்ரார்!!!' என்று புலம்பியபடியே சித்ரா, சமையலறைக்கு நகர்ந்தாள்.

டிரஸ் பண்ணி விட்டு வந்து, டிபன் சாப்பிட டைனிங் டேபிளில் உட்கார்ந்தான். சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பா இருமிக் கொண்டே 'ஏம்ப்பா சங்கரு, போன வாரம் டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரை இன்னும் வாங்கிட்டு வரலையேப்பா, இன்னைக்காவது வாங்கிட்டு வாயேன்...' என்றார்.

'இந்த வீட்ல எல்லாத்துக்கும் நானே வேணும்னு எதிர்பார்த்தா எப்படி, பக்கத்து தெருவில்தானே கடை இருக்கு.. போய் வாங்கித் தொலைக்கக் கூடாதா?' என்று எரிந்து விழுந்தான்.

அவசரமாக சாப்பிட்டு விட்டு, ஷூ மாட்டிக் கொண்டு அபார்ட்மெண்ட் கீழே வந்தான். அபார்ட்மெண்ட் செகரட்டரி, அவனைப் பார்த்து கையசைத்து, 'சங்கர் சார், இந்த சனிக்கிழமை வக்கீல் வீட்டுக்கு போய்ட்டு வந்துருவோமா, நம்ம ஹவுசிங் சொசைட்டியை ரிஜிஸ்டர் பண்ணனும்ல..' என்றார்.

'சாரி சார், இந்த வாரம் நான் கொஞ்சம் பிசி.. நீங்க தேர்டு ப்ளோர் சிவா சாரைக் கூப்பிட்டுகிட்டு போங்களேன்..' என்றுவிட்டு அவர் பதிலைக் கூட எதிர்பார்க்காமல், யமஹாவில் பறந்தான். 'குடும்ப உறவுகளே, பிரச்சினைதான்.... கல்யாணம் பண்ணாமலே இருந்திருக்கலாம்...' என்று நினைத்துக் கொண்டே பாத்திமா நகர் சிக்னலை, வழக்கம்போல் ஜம்ப் செய்தான்.

அலுவலகத்தில் நுழைந்த சங்கர், காலியாயிருக்கும் கம்யூட்டரை தேர்வு செய்து, ஹெட்போனை தலையில் மாட்டியபடி காலில்(call) நுழைந்தான் "குட்மார்னிங் சார்.... ஐ ம் ஷங்கர், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் எக்ஸியூட்டிவ்....மே ஐ நோ இன் வாட் வே ஐ கேன் ஹெல்ப் யூ ?.........."

*******

எக்ஸ்ட்ரா நோட்ஸ் (முடிவை புரிந்து கொள்ளாதவர்களுக்கு மட்டும்)

ஈவண்ட் மேனேஜ்மெண்ட் என்பது நிகழ்ச்சி மேலாண்மை. அதாவது உங்கள் வீட்டில் ஒரு பெரிய பர்த்டே பார்ட்டி வைக்கறீர்கள் என்றால், நீங்கள் சங்கர் மாதிரி நிகழ்ச்சி மேலாளர்களை அணுகி பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்து வீட்டு, சன் டிவியில் டாப் டென் மூவிஸ் பார்க்கலாம், இல்லாவிடில் உலகத் தொலைக்காட்சிகளில் ஆயிரத்து ஓராவது முறையாக ஸ்டார் மூவிஸ் போடும் மம்மி ரிட்டர்ன்ஸை பார்க்கலாம். சங்கர் உங்கள் பார்ட்டிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் (காய்கறி வாங்குவது, சமையற்காரர் வைப்பது, போலிஸ் பர்மிஷன் வாங்குவது, மைக்செட் வைப்பது, இண்ட்டீரியர் டிசைனிங் செய்வது, எமர்ஜென்சி மெடிக்கல் உதவி ஏற்பாடு செய்து, லைட்டிங், இன்விடேசன் அடிப்பது, etc...) செய்து தருவார். இவ்வுளவு வேலைகளையும் இழுத்துப்போட்டு கொண்டு செய்யும் திறமையுடைய ஜெண்டில்மேன் சங்கர், வீட்டில் ஒரு துரும்பைக் கூட.........

Friday, August 11, 2006

தங்கைக்கோர் கீதம் - தேன்கூடு-போட்டி கவிதை

நீ பிறக்கும் முன்
அம்மாவின் வயிற்றில் இருந்த போதே,
நான் உன்னிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டேன்...

எப்போதாவது அம்மாவின் மடியில்
படுக்க வரும்போது,
பாப்பா வயிற்றில் தூங்குகிறாள் என்று கூறி
நான் படுப்பதை அம்மா தடுப்பாள்...
அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டு
உன்னைத் திட்டுவேன்...

நீ பிறந்த பின்பும்,
உனக்குத்தான் நிறைய செல்லம் கொடுப்பாள்..
என் மீது கவனிப்பும், செல்லமும் குறைந்ததால்
விவரமறியா சிறு வயதில்,
உன்மீது எனக்கொரு சிறு பொறாமை...

கொஞ்சம் வளர்ந்த பின்
தின்பண்டங்களுக்காக இருவரும்
சண்டை போட்டுக் கொள்வோம்...

விளையாட்டுச் சாமான்களுக்காக
நாம் சண்டை போட்டுக் கொள்ளாத
நாட்களே இல்லை...

வீட்டில் ஏதாவது பொருளை உடைத்து விட்டு
இருவரும் அடுத்தவரை குறை சொல்வோம்
இருவருக்கும் பொதுவாக அடி கிடைக்கும்...

கான்வென்ட்டில் இருந்து உன்னை
தினமும் மாலையில் அழைத்து வரும்போது
உன்னை மிரட்டிக் கொண்டே வருவேன்...

பள்ளிக் கூடத்தில் சேர்ந்த பின்
சிலேட்டிலிருக்கும் உன் வீட்டுப் பாடத்தை நான் அழிப்பதும்
என் வீட்டுப் பாடத்தை நீ அழிப்பதும் தினமும் நடக்கும்...

நான் பண்ணும் அடங்களை
அம்மாவிடம் தினமும் தவறாது போட்டுக் கொடுப்பாய்,
அம்மா திட்டி விட்டு நகர்ந்ததும்
நான் உன்னை அடிப்பேன்,
தேவைக்கதிகமான சத்தத்துடன் அழுவாய் நீ...

அம்மாவுக்கு தெரியாமல் நான்
தெருவில் விளையாட போகும்போது
என்னை தைரியம் கூறி அனுப்பி விட்டு
சிஐடியாய் அம்மாவுக்கு தெரிவிப்பாய்...
அம்மாவிடம் நான் அடி வாங்குவதை
ஒளிந்து நின்று ரசிப்பாய்...

இரவு உணவாக உப்புமா சாப்பிடும் போது
சிறு பெண்ணென்று, உனக்கு
வெல்லம் அதிகமாகவே கிடைக்கும்...
என் மீது பரிதாபப் பட்டு
சிறுதுண்டொன்றை எனக்கும் கொடுப்பாய்...

தாத்தா வீட்டு ஊஞ்சலில்
யார் அதிக நேரம் ஆடுவது என்று
தினமும் போட்டி நடக்கும், உனக்கும் எனக்கும்...

நான் நகரத்திற்கு படிக்கச் சென்றவுடன்
நான் ஊருக்கு திரும்பும் போதெல்லாம்
அம்மாவுடன், நீயும் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருப்பாய்..

வா என்று பாசத்துடன் அழைத்து விட்டு
வீட்டினில் நீ நுழைந்தவுடன்
திரும்பவும் ஆரம்பிக்கும், நம்மிருவருக்குமிடையே யுத்தம்...

இருவரும் வளர, வளர
இடைவெளி அதிகமானது...
செல்ல சண்டைகள் குறைந்து போனது...
இருப்பினும் குறையவில்லை பாசம்...

இப்போது உனக்கு திருமணமாகி விட்டது...
முன்புபோல் உன்னோடு சண்டையிட முடியவில்லை...
புதிதாய் கிடைத்த உன் உறவுகளோடு
நீ மகிழ்ச்சியாய் இருப்பது எனக்கும் மகிழ்ச்சியே...

இப்போதும், நீ அத்தானுடன் விடுமுறையில்
நம் வீட்டுக்கு வரும்போது
உன்னுடன் சண்டைபோட காத்துக் கொண்டிருக்கிறேன்...
ஏனெனில் சண்டைகளெல்லாம் சண்டைகளல்ல...

உனக்கும் புரிந்திருக்கும், என் தங்கையே,
உறவுகள் சிற்சிறு செல்லமான
சண்டைகளாலும் பலமடைகின்றன...

Thursday, August 10, 2006

ஹட்ச் நெட்வொர்க் ஏன் வீக்காக உள்ளது ?

ஒரு தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருவது சாதாரணமான காரியமல்ல. போட்டிகள் நிறைந்த இந்த துறையில் விளம்பரங்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. ஆனால், சில சமயம் விளம்பரங்களே, பலவீனமாகவும் ஆகி விடுகின்றன.

தற்போதெல்லாம் ஹட்ச் நெட்வொர்க் ஏன் வீக்காக(பலவீனமாக) உள்ளது என்ற காரணம் தெரியவந்துள்ளது.







மின்னஞ்சலில் முன்செலுத்தியவர் : நண்பர் கணேசன் சாமிநாதன்.

Wednesday, August 09, 2006

கவனாமாயிருங்கள், இது உங்களுக்கும் நடக்கலாம் !





இன்று ரக்-ஷா பந்தன் தினம். பெண்கள், தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டி உறவைக் கொண்டாடும் தினம். கவனாமாயிருங்கள் நண்பர்களே, இது இன்று உங்களுக்கும் நடக்கலாம். அழகான பெண்களைப் பார்த்தால் தூர ஓடி விடுங்கள். அதிகம் பெண்கள் கூடும் ஷாப்பிங் மால் போன்ற இடங்களை இன்று தவிர்ப்பது நல்லது. முழுக்கை சட்டை போட்டு வெளியில் நடமாடுங்கள்.

விஜய் 'நேருக்கு நேர்' படத்தில் ஹீரோயின் கவுசல்யாவிடம் சென்று 'ஏன், எங்களுக்கெல்லாம் ராக்கி கட்டி விட மாட்டீங்களா?' என்று கலாய்ப்பார். இதன் பிறகு 'அகிலா..அகிலா..' என்று சூப்பர் பாட்டு ஒன்று வரும்.

இதேபோல் நானும், இன்று அலுவலக பேருந்தில் ஏறி மேற்சொன்ன வசனத்தை கூறினேன் (ஹிந்தியில்தான் - புனேவில் தமிழ் தெரிந்த பெண்கள் குறைவு). அடுத்த வினாடியே, என் இரு கைகள் முழுவதிலும், விதவிதமான ராக்கிகள், நான் கதறக் கதற கட்டப்பட்டன. இதனால், நான் கூடிய சீக்கிரம் இந்த அலுவலகத்திலிருந்து மாறிவிடலாமென்று இருக்கிறேன்.

ஆகவேதான், இந்த எச்சரிக்கைப் பதிவு. கவனாமாயிருங்கள் நண்பர்களே !! சொந்த சகோதரியிடம் மட்டும் ராக்கி கட்டிக் கொள்ளுங்கள் !

அழகான பெண் ராக்கி கட்ட வந்தால், எப்படி எஸ்கேப் (தப்பி ஓடுவது) ஆவது என்று பின்னுட்டத்தில் யோசனை கூறுங்கள். பின்னூட்டமளிப்பவர்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் ப்ளாஸ்டிக் குடம் வழங்கப் படும் !!!

படத்திற்கு நன்றி: தினமலர்

Tuesday, August 08, 2006

என் பெயரில் போலி வலைப்பதிவு

என் பெயரில், எனது புகைப்படத்தையும் இணைத்து, போலி ஆபாச வலைப்பதிவுத் தளம் ஒன்று சமீபத்தில் உருவாகியுள்ளது. மேலும் அந்த போலி எனக்கு மின்னஞ்சலில் "டோண்டுவுக்கு நீ அடிக்கடி பின்னூட்டுவதால் உனக்கு நான் கொடுக்கும் சிறப்புப் பரிசு இது." என மிரட்டல் விடுத்துள்ளார்.

எனது உண்மையான வலைப்பதிவு முகவரி http://lazyguy2005.blogspot.com/

எனது உண்மையான ப்ளாக்கர் எண் 11015751

எனது உண்மையான மின்னஞ்சல் முகவரி swami.plr@gmail.com

எனது உண்மையான ப்ளாக்கர் பெயர் சோம்பேறி பையன் (போலி வலைப்பதிவில் சோம்பேறிபையன் (without space) என்று உள்ளது).

போலி வலைப்பதிவு பற்றி சென்ற வாரம் எனக்கு தமிழ்மணத்திலுள்ள நண்பர்கள் தெரிவித்தனர். ஆகவே, வலைப்பதிவாளர்கள், நண்பர்கள் கவனமாக இருக்கவும். ஏதாவது சந்தேகத்துக்குரிய, ஆபாசமான பின்னூட்டம் வந்தால்,
மட்டுறுத்த வேண்டாம். எனக்கு மின்னஞ்சலில் அதை தெரிவித்து, தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்!!

மேலும் இதைப்பற்றி ப்ளாக்கரில் புகார் தெரிவித்துள்ளேன்.

பின்குறிப்பு: இந்த பதிவை சென்ற வாரம் பதிவிட்டு, தலைப்பு நீளம் காரணமாக அது நீக்கப்பட்டு விட்டது. எனவே, திரும்பவும் மீள்பதிவு செய்துள்ளேன்.

Tuesday, August 01, 2006

தூக்கம் தொலைத்த இரவுகளில் எழுதிய கவிதைகள்

எப்போதாவது
பின்னிரவுகளில்
விழித்தெழும் போது,
திரும்பவும் தூக்கம்
என் கண்களைத்
தழுவும் வரையில்
தவழ்கிறேன், உன் நினைவுகளில்...
தூங்கியபின் கனவில்
திரும்பவும் நீ...

***

மருத்துவர் ஆலோசனையின் படி
இயற்கை காற்று வாங்க,
வைத்திருக்கிறேன் என் கணிணியில்
சீனரி வால்பேப்பர்...

***

கடிதங்கள்,
கைத்தொலைபேசி அழைப்புகள்,
குறுஞ்செய்திகள்,
மின்னஞ்சல்கள்,
வலைப் பதிவுகள்
ஒவ்வொன்றும்
சங்கீதமாகின்றன,
உன் பெயரைத் தாங்கி வரும்போது...

***

வலைப்பதிவுகளிலிருந்து
மீளலாமென்றுதான் நினைக்கிறேன்
ஒவ்வொரு பின்னூட்டமிடும் போதும்...
இ-கலப்பையை கணிணியில்
பார்க்கும் போதெல்லாம் குறுகுறுக்கிறது
பாழாய்ப் போன மனசு...
ஒவ்வொரு இடுகைக்கும் வரும்
ஒன்றிரண்டு பின்னூட்டங்களும்,
என்றாவது ஒருநாள் நட்சத்திரமாய்
தமிழ்மணத்தில் வலம்வரும் நப்பாசையும்,
இருக்கும்வரை இருந்தே தீருவேன்...
ஏனென்றால் நண்பர்களே,
போதை மதுவிலும், மாதுவிலும் மட்டுமல்ல...

***

தூங்கும் போதும்
மடிக்கணிணியை
இதயத்துக்கு அருகிலேயே
வைத்திருக்கிறேன்...
டெஸ்க்டாப் வால்பேப்பரில்
நீயே இருப்பதால்....

***

எத்தனை கடிதங்கள்..
எத்தனை தொலைபேசி அழைப்புகள்..
எத்தனை மின்னஞ்சல்கள்..
எத்தனை குறுஞ்செய்திகள்..
எத்தனை மின் அரட்டைகள்..
இத்தனையுமா காட்டினாய், உன் தந்தையிடம் ?
அடியா ஒவ்வொன்றும், இடி...
அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்,
காதலிக்காதவர்கள் கோழைகள்...

***

சுடும் நிலவு
சுடாத சூரியன்
அழாத குழந்தை
இனிக்கும் மிளகாய்
இனிக்காத சர்க்கரை
வரிப்பிடித்தமில்லா சம்பளம்
போலிகளில்லா தமிழ்மணம்
அடிக்காத மனைவி
அமைதியான உலகம்
அனைத்தையும் காணலாம்
ஐம்பத்தைந்தே ரூபாயில்,
கிங்பிஷர் ஸ்ட்ராங் பீர்...

***