Tuesday, August 22, 2006

C. அருண் s/o சந்திரசேகரன் - V 2.0

சோம்பேறி பையன் பதட்டமாக இருந்தான். அலுவலகத்தில் ஏதாவது வேலை செய்யச் சொன்னாலே பதட்டமாகி விடுவது, சோம்பேறி பையனின் வழக்கம். சம்பளம் கொடுக்கிறார்கள் அல்லவா, போனால் போகிறதென்று ஏதாவது செய்து வைப்பான். ஆனாலும் இன்று பதட்டமாய் இருந்ததற்கு காரணம் தேன்கூடு போட்டிக்காக அவன் எழுதிய கவிதைக்கும், கதைக்கும் கிடைத்த வரவேற்புதான்(?)!.

நண்பர் அருண்.சியிடமிருந்து மின்னஞ்சல் வந்தது "என்னய்யா, உன்னோட கதைக்கு நான் பாராட்டி எழுதின பின்னூட்டத்தை போட்டுட்டீங்க, ஆனா கவிதையை கொஞ்சம் திட்டி எழுதின பின்னூட்டத்தை போடவே இல்லை வலைப்பதிவில்??". நண்பரிடம் ப்ளாக்கர் கணக்கு இல்லாததால், மின்னஞ்சலில் பின்னூட்டம் அனுப்புவார்.

"அதெல்லாமில்லை, நான்கைந்து பின்னூட்டங்கள் வந்து சேர்ந்தவுடன், அவற்றிற்கு பதிலளிக்கும் போது, உங்கள் பின்னூட்டத்தையும் வெளியிட்டு விடுகிறேன்" - சோம்பேறி பையன்.

"சரி, பரவாயில்லை, நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன், எப்படியிருக்கிறதென்று பாருங்கள்" - அருண் சி.

மின்னஞ்சலில் வந்த அந்த கவிதைதான் இது.

*****

கயரிட்ட காலணியைக் கழற்றியும்
கயிற்றால் கட்டியது போல் வலிக்குது - கால்கள்
நீண்ட நேரம் நிற்பதால் கடுக்குது

எப்போது வருவாய்

முதுகில் இருந்து சுமையை இறக்கியும்
மலையைத் தாங்குவதாய் கனக்குது - சுமை
மனதிலிருந்து இறங்க மறுக்குது

எப்போது வருவாய்

உப்பு நீரை
கொலை செய்யத் துடிக்குறேன்
விழியிலிருந்து குழியில் தள்ளி

எப்போது வருவாய்

தலையில் எண்ணெய் பிசுக்குது
வயிறு பசிக்குது
துக்கம் மட்டுமல்ல
தூக்கமும் கண்களைத் தழுவுது

எப்போது வருவாய்

காய்வதும் தேய்வதும்
நிலவு மட்டுமல்ல

எப்போது வருவாய்

வழி மேல் விழி வைத்தன்றி
வாசல் நிலையில் நிலையின்றி
தலை சாய்த்து நிற்கின்றேன்
தவம் செய்து தவிக்கின்றேன்

எப்போது வருவாய் அம்மா!!!
அலுவலகத்திலிருந்து - என்னை
தழுவுவதற்கு
எப்போது வருவாய் அம்மா!!!

*****

நண்பர் அருண்.சி மும்பையில் வேலை பார்த்த போது அறிமுகமானவர். கும்பகோணத்துக் காரர், திருச்சியில் படித்து வளர்ந்தவர். தற்போது ஹைதராபாத்தில் பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலை செய்கிறார். அவருடைய கவிதை இது. அற்புதமான கவிதைக் கருவை சுலபமாக, அழகாக சொல்லியிருக்கிறார். கடைசி வரிகளைப் படித்தவுடன், திரும்பவும் ஒரு முறை கவிதையைப் படிக்க வைக்கிறார். கவிதையென்றாலே அது காதலைப் பற்றியதுதான் என்று நினைத்துக் கொண்டிருந்த சோம்பேறி பையனுக்கு, கவிதைக்கு களங்கள் பலப்பல என்று நினைவூட்டுகிறார். வாழ்த்துக்கள் அருண்.சி, தொடர்ந்து எழுதுங்கள் !!

***

இந்த இடுகையின் முதல் பதிப்பிற்கு ஒரு பின்னூட்டமும் வராததால், பயந்து போன நண்பர் அருணின் மின்னஞ்சல் இது

innum oru comment kooda illai...namma kavithaiavulo mosamava irukku.....ennala unga peru keturumpola...onnum kedurathukku perusa illai.....i thinkovvoru varthaiya irunthathoda effectunnu oru chinnasanthegam...if possible re-publish panni irukkurathaunga web nambargal kitta sollavum.....illayaraja mothomotha music vasikkum pothu current ponathu than enakkuninappu varuthu...sathiya sothanai :-(

arun c

***

சங்க அரசியல்களும், உட்டாலக்கடி வலைப்பதிவு வேலைகளும் அருணுக்கு இன்னும் பழக்கமாக வில்லை..

ஆதலால் நண்பர்களே, கவிதையைப் படித்து விட்டு ஆல்ட் F4 போட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடாமல், ஓரிரு வார்த்தையாவது கவிதையை பாராட்டியோ, திட்டியோ பின்னூட்டம் இடுங்கள், அது நண்பர் அருண்.சியை ஊக்குப்படுத்துவதாக இருக்கும். அவரும் ஒரு புது வலைப்பதிவை ஆரம்பிக்கலாம்.

***

இந்த இடுகை சிற்சிறு மாற்றங்களுடன், மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.

3 comments:

Udhayakumar said...

நல்லா இருக்குங்க... இதே மாதிரி நான் ஒன்னு எழுதிருக்கேன்.

நாமக்கல் சிபி said...

கவிதை நன்றாக இருக்கிறது.

(உம்மைத் திட்ட வார்த்தைகளே கிடைக்க வில்லை :( )

பழூர் கார்த்தி said...

நன்றி உதயகுமார் & சிபி, உங்கள் பாராட்டை அருணும் படித்திருப்பார் என நினைக்கிறேன்

***

ஆனாலும் இன்னும் நிறைய பேர் வந்து அருணை ஊக்கப் படுத்தினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் (புதிய வலைப்பதிவாளரல்லாவா, கூடிய சீக்கிரம் ப்ளாக் ஆரம்பித்து விடுவார், அப்போது நம் விளையாட்டை வைத்துக் கொள்ளலாம் :-)