Friday, December 30, 2005

விருதுகள் - 2005

ஒவ்வோரு ஆண்டின் இறுதியிலும் செய்தி ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அந்த ஆண்டின் சிறந்தவைகளை பட்டியலிடுவது வழக்கம். இதோ நமது பட்டியல் !

தமிழ் திரையுலகம்
 • திரைப்படம் - தவமாய் தவமிருந்து
 • குணசித்திர நடிகர் - ராஜ்கிரன் (தவமாய் தவமிருந்து)
 • நகைச்சுவை நடிகர் - விவேக் (அன்னியன்)
 • கதாநாயகன் - விக்ரம் (அன்னியன்)
 • கதாநாயகி - அசின் (கஜினி)
 • திரைப்பட இசை - ஹாரிஸ் ஜெயராஜ் (அன்னியன்)
 • பாடல் - மயிலிறகே - வாலி (அ..ஆ)
 • இயக்குனர் - சேரன் (தவமாய் தவமிருந்து)
 • திரைக்கதை - சந்திரமுகி (வாசு)

விளையாட்டு
 • கிரிக்கெட் வீரர் - இர்ஃபான் பதான்
 • டென்னிஸ் வீராங்கனை - சானியா மிர்சா
தொலைக்காட்சி
 • நீள்தொடர் - மெட்டி ஒலி (சன்)
 • தொடர் - சிதம்பர ரகசியம் (சன்)
 • நகைச்சுவை காட்சிகள் - ஷோ டைம் (ஜெயா)
 • செய்திகள் - என்.டி.டிவி
 • விளையாட்டு - சீ. ஸ்போர்ட்ஸ்
 • நிகழ் தொடர் - அரட்டை அரங்கம் (சன்)
 • பழைய பாடல்கள் - தேனமுது (ஜெயா)
 • பாடல் வரிசையமப்பு - சூப்பர் 10 (சன்)

அரசியல் & சமூகம்
 • அமைப்பு - இந்திய தேர்தல் ஆணையம் (பீகார் தேர்தலுக்காக)
 • நகரம் - மும்பை (26/7 பேரழிவிலிருந்து மீண்டு வந்ததற்காக), பெங்களூர் (கணினி தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள்)
 • ஏழை மக்கள் மறுவாழ்வு - மும்பை (சேரி மக்களுக்கு 53000 வீடுகளை கட்டிக்கொடுத்ததற்காக)
 • தொலைபேசி நிறுவனம் - ரிலையன்ஸ் (இந்திய அளவில்), ஏர்செல் (தமிழக அளவில்), டாடா (வாழ்நாள் இலவசம் - உள்வரும் அழைப்புகள்)
 • மென்பொருள் நிறுவனம் - இன்ஃபோசிஸ்
 • நிர்வாகத் தலைவர் - நாராயணமூர்த்தி (இன்ஃபோசிஸ்)
 • மாநிலம் - தமிழகம் (சாலை வசதிகள், தூய்மையான கோயம்பேடு பேருந்து நிலையம், அரசு நிர்வாகம் மற்றும் ஒரளவுக்கு திறம்பட செயல்பட்ட
  பேரழிவு நிவாரணப் பணிகள் மற்றும் சமாளிப்பிற்காக (வெள்ள நிவாரண சாவுகள் தவிர்த்து))

பின்குறிப்பு : இவை முழுவதும் என் கவனத்திற்குள்ளான செய்திகளின் / ரசனைகளின் மீதான மதிப்பீடு மட்டுமே. இவைகளிலிருந்து நீங்கள் மாறுபட்டால் பின்னூட்டங்களில் உங்கள் கருத்துகளை இடலாம். மேலும் விருதுகளை தெரிவிக்கலாம் !!

Tuesday, December 27, 2005

வாசனையுடன் ஓர் பதிவு

வலைப்பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் ! கடுமையான வேலைப்பளுவின் காரணமாக நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின் இப்போது பதிவிடுகிறேன்.

கடந்த இருபது நாட்களில் நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன. இந்தியா, இலங்கையை கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக வென்றது. சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிகளில் மரண அடி வாங்கியுள்ளது. பாரளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பதவி பறிபோயுள்ளது. சுனாமி நினைவுதினமன்று பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளை வெளியிட்டன. தமிழ்நாட்டில் வெள்ள நிவாரணம் வாங்க வந்தவர்களிடம் கூட்ட நெரிசல் ஏற்பட்டு நிறைய பேர் இறந்தனர். வழக்கம்போல் அரசு தொலைக்காட்சியும், எதிர்க்கட்சி தொலைக்காட்சியும் இதை முடிந்த அளவுக்கு அரசியலாக்கின.வலைப்பதிவுகள் வழக்கம்போல் வெளிவந்தன.


2005ம் வருடத்தில் இந்தியாவில் நிறைய சோக சம்பவங்கள் நடந்து விட்டன. மும்பையில் மழை, வெள்ள அழிவுகள், காஷ்மீரில் பூகம்பம், குஜராத், ஒரிஸ்ஸாவில் மழை, வெள்ளம், தமிழ்நாட்டில் வெள்ள அழிவுகள், கூட்ட நெரிசல் பலிகள், பாரளுமன்ற பிரதிநிதிகள் பதிவிபறிப்பு என நிறைய
சம்பவங்கள் நடந்து விட்டன. இவைகளிலிருந்து மக்களும், அரசாங்கமும் பாடம் கற்று, எதிர்காலத்திலாவது இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ள ஓரளவாவது தயார்நிலையில் இருக்க வேண்டும். 2006ம் வருடம் உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும் தர இறைவனை பிரர்த்திப்போம். மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள் !


கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே கவிதை என்ற பெயரில் ஏதாவது கிறுக்குவது வழக்கம். இதோ வாசனைக் கவிதையை வாசியுங்கள், ஏதாவது புரிந்தால் பின்னூட்டத்தில் கெட்ட வார்த்தைகள் தவிர்த்து, மற்ற வார்த்தைகளில் எனக்கு எழுதுங்கள் !


வாசனை


தூக்கம் வர மறுத்த ஓரிரவில்

ஞாபகம் வந்தது உன் வாசனை..

பேருந்தில் உன் தோள் மேல் கைபோட்டு

நெருங்கி உட்கார்ந்திருந்த போது வந்த வாசனை..

வாசனைத் திரவியங்கள் உபயோகப் படுத்தும்

பழக்கமில்லாத உன்னை, உன் வாசனையினால்

இன்னும் பிடித்துப் போனது, எனக்கு...

உன் பெயரை எங்காவது பார்க்கும்போதும்

படிக்கும்போதும், ஞாபகத்தில் வருவது

உன் உருவமும், வாசனையும்தான்..

இன்றும் கூட எப்போதாவது தொலைபேசியில்

உன்னுடன் பேசினால், பேசி முடித்து விட்டு

முகர்ந்து பார்க்கிறேன், உன் வாசனையை...

எங்கோ பிறந்தோம், எங்கோ வளர்ந்தோம்..

ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்தோம்..

உனக்கும், எனக்கும் நம்மை பிடிக்கும் முன்பே

பிரிந்து விலகினோம்...எதனால் நாம் பிரிந்தோம்..

மறுபடியும் சேருவோமா..காரணம்

தெரிய வில்லை, புரிய வில்லை...

இருப்பினும் தூக்கம் வராத இரவுகளில்,

இன்னமும் நுகர்கிறேன், உன் வாசனையை !!!

Thursday, December 08, 2005

கிரிக்கெட் - திருச்சி - கணிப்பொறி - பயணம்

நண்பர் 'பத்ரி' தொடங்கியிருக்கும் கிரிக்கெட் வலைப்பதிவில் நானும் உறுப்பினராகி விட்டேன். இன்று ஒரு பதிவு சச்சினைப் பற்றி எழுதியிருக்கிறேன். அதற்கான சுட்டி இங்கே 'சச்சின் - டெல்லி - 35 ?'

திருச்சியைப் பற்றி எழுதிய பதிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பதிவின் இரண்டாம் பாகம் தயாரகிறது. கூடிய சீக்கிரம் வெளியிட்டு விடலாம்.

நேற்று இரவு என்.டி.டிவியில் மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் - இன்போசிஸ் நாராயணமூர்த்தி - பிரணாய் ராயின் கலந்துரையாடல் ஒளிபரப்பானது. 1.7 பில்லியன் டாலர் மைக்ரோசாப்ட் இந்தியாவில் முதலீடு செய்யப் போவதாக செய்தி வந்துள்ளது. பில்கேட்ஸின் பேச்சில் செயற்கை தன்மை நிறைய இருப்பது போல் எனக்கு தோன்றியது. மூர்த்தி இயல்பாக பேசினார். கொஞ்ச நேரம் பார்த்து விட்டு ஜெயா டிவி 'ஷோ டைம்' நிகழ்ச்சிக்கு சென்று விட்டோம்.

மும்பையில் கன்சோலியிலிருந்து சான்படாவிற்கு மாறி விட்டேன். தினமும் அலுவலகத்திற்கு மின்சார தொடர்வண்டியில்தான் (ட்ரெயின்) வருகிறேன். பயணம் சுவாரசியமாக இருக்கின்றது, கூட்டமே இல்லை. இத்தடம் (தானே - வாஷி) புதிதாகையால் கூட்டம் இல்லை.

7 வருடங்கள் கழித்து கல்லூரி நண்பனை சந்திக்க முடிந்தது. தற்போது இவர் என்னுடனே தங்கியிருக்கிறார். மும்பை பன்னாட்டு வங்கி ஒன்றில் பணி புரிகிறார். தினமும் கல்லூரி நாட்களைப் பற்றி பேசி நினைவலைகளில் நனைந்து கொண்டிருக்கிறோம். சுவாரசியமான சம்பவங்கள் பதிவுகளாக வெளிவரும் வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்மணத்தில் நட்சத்திர பதிவுகள் கலக்கிக் கொண்டிருக்கின்றன. தருமி, கோ. கணேஷ், ஜோ போன்றவர்களின் ராஜபாட்டையை தொடர்ந்து குழலியும் இந்த வாரம் கலக்கிக் கொண்டிருக்கிறார். வாழ்த்துக்கள் நட்சத்திரமாய் கலக்கியவர்களுக்கும், கலக்கப் போகின்றவர்களுக்கும் !!!