Monday, August 14, 2006

ஜெண்டில்மேன் - தேன்கூடு-போட்டி சிறுகதை

சங்கர் அரைத் தூக்கத்தில் இருந்தான். டிவியில், வணக்கம் தமிழகத்தில் போன வாரம் தற்கொலைக்கு முயன்ற நடிகை தமிழ்நாட்டு முன்னேற்றத்தைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள். சங்கர், கற்பனையில் அவளுடன் டூயட் பாட ஆரம்பித்த மைக்ரோ நொடியில், பையன் போர்வையை விலக்கி, முகத்தின் அருகில் வந்து 'அப்பா, இந்த கணக்கு எப்படி போடறதுன்னு சொல்லி கொடுங்கப்பா...' என்று இழுத்தான். 'போய் அம்மாகிட்ட கேளுடா, அப்பாவுக்கு ஆபிஸ்க்கு டைம் ஆய்டுச்சி' என்ற படியே, பாத்ரூமுக்கு ஓடினான் சங்கர். 'டைலாமோ, டைலாமோ...' பாடல் ஷவர் சத்தத்தையும் மீறி வழிந்தது.

குளித்து முடித்து விட்டு டிரஸ் பண்ணும்போது, சித்ரா வந்து 'ஏங்க, ஈவினிங் ஆபிஸ்ல இருந்து வந்தவுடனே பிக்-பஜார் போய்ட்டு வந்துருவோமா, மளிகை சாமானெல்லாம் வாங்கனுங்க...' என்றாள்.

'ஏண்டி அதான் நேத்தே சொன்னேன்ல, நீ போய்ட்டு வந்துடு, பகல்ல சும்மாதான இருக்க..'

'ஹூக்கும், என்னைக்கு நீங்க வீட்டுக்கு வேலை செஞ்சிருக்கீங்க, பக்கத்து வீட்டு சோம்பேறி பையனை பாருங்க, பொண்டாட்டி ஆசைப்பட்டான்னு புனேயிலிருந்து பாம்பே போய் வடாபாவ் வாங்கிட்டு வந்து தர்ரார்!!!' என்று புலம்பியபடியே சித்ரா, சமையலறைக்கு நகர்ந்தாள்.

டிரஸ் பண்ணி விட்டு வந்து, டிபன் சாப்பிட டைனிங் டேபிளில் உட்கார்ந்தான். சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பா இருமிக் கொண்டே 'ஏம்ப்பா சங்கரு, போன வாரம் டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரை இன்னும் வாங்கிட்டு வரலையேப்பா, இன்னைக்காவது வாங்கிட்டு வாயேன்...' என்றார்.

'இந்த வீட்ல எல்லாத்துக்கும் நானே வேணும்னு எதிர்பார்த்தா எப்படி, பக்கத்து தெருவில்தானே கடை இருக்கு.. போய் வாங்கித் தொலைக்கக் கூடாதா?' என்று எரிந்து விழுந்தான்.

அவசரமாக சாப்பிட்டு விட்டு, ஷூ மாட்டிக் கொண்டு அபார்ட்மெண்ட் கீழே வந்தான். அபார்ட்மெண்ட் செகரட்டரி, அவனைப் பார்த்து கையசைத்து, 'சங்கர் சார், இந்த சனிக்கிழமை வக்கீல் வீட்டுக்கு போய்ட்டு வந்துருவோமா, நம்ம ஹவுசிங் சொசைட்டியை ரிஜிஸ்டர் பண்ணனும்ல..' என்றார்.

'சாரி சார், இந்த வாரம் நான் கொஞ்சம் பிசி.. நீங்க தேர்டு ப்ளோர் சிவா சாரைக் கூப்பிட்டுகிட்டு போங்களேன்..' என்றுவிட்டு அவர் பதிலைக் கூட எதிர்பார்க்காமல், யமஹாவில் பறந்தான். 'குடும்ப உறவுகளே, பிரச்சினைதான்.... கல்யாணம் பண்ணாமலே இருந்திருக்கலாம்...' என்று நினைத்துக் கொண்டே பாத்திமா நகர் சிக்னலை, வழக்கம்போல் ஜம்ப் செய்தான்.

அலுவலகத்தில் நுழைந்த சங்கர், காலியாயிருக்கும் கம்யூட்டரை தேர்வு செய்து, ஹெட்போனை தலையில் மாட்டியபடி காலில்(call) நுழைந்தான் "குட்மார்னிங் சார்.... ஐ ம் ஷங்கர், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் எக்ஸியூட்டிவ்....மே ஐ நோ இன் வாட் வே ஐ கேன் ஹெல்ப் யூ ?.........."

*******

எக்ஸ்ட்ரா நோட்ஸ் (முடிவை புரிந்து கொள்ளாதவர்களுக்கு மட்டும்)

ஈவண்ட் மேனேஜ்மெண்ட் என்பது நிகழ்ச்சி மேலாண்மை. அதாவது உங்கள் வீட்டில் ஒரு பெரிய பர்த்டே பார்ட்டி வைக்கறீர்கள் என்றால், நீங்கள் சங்கர் மாதிரி நிகழ்ச்சி மேலாளர்களை அணுகி பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்து வீட்டு, சன் டிவியில் டாப் டென் மூவிஸ் பார்க்கலாம், இல்லாவிடில் உலகத் தொலைக்காட்சிகளில் ஆயிரத்து ஓராவது முறையாக ஸ்டார் மூவிஸ் போடும் மம்மி ரிட்டர்ன்ஸை பார்க்கலாம். சங்கர் உங்கள் பார்ட்டிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் (காய்கறி வாங்குவது, சமையற்காரர் வைப்பது, போலிஸ் பர்மிஷன் வாங்குவது, மைக்செட் வைப்பது, இண்ட்டீரியர் டிசைனிங் செய்வது, எமர்ஜென்சி மெடிக்கல் உதவி ஏற்பாடு செய்து, லைட்டிங், இன்விடேசன் அடிப்பது, etc...) செய்து தருவார். இவ்வுளவு வேலைகளையும் இழுத்துப்போட்டு கொண்டு செய்யும் திறமையுடைய ஜெண்டில்மேன் சங்கர், வீட்டில் ஒரு துரும்பைக் கூட.........

9 comments:

ஜயராமன் said...

அழகான குறுங்கதை.

முடிவில் ஒரு பொட்டாக சர்ப்ரைஸ் வைத்தது 'அடே' போட வைத்தது.

மெலிதாக இழையோடும் நகைச்சுவை நன்றாக இருக்கிறது.

இன்னும் கொஞ்சம் விஸ்தரித்து எழுதியிருந்தால் மெருகு கூடும்.

அலுவலக வேலையில் பல புலிகள் தன் வீட்டு அதே காரியத்தில் பூஜ்யம் என்பது தெரிந்த கதைதான் (நம்ப வீட்டிலும் அதே கதைதான்...).

சோம்பேறி பையனின் வடா பாவ் உங்களுக்கே ஓவராக தெரியலை?

மொத்தத்தில் "பலே!!"

நன்றி

manu said...

இன்னும் புரியலையா? அவருக்குப்
பெரிய ஈவந்ட்ஸ் தான் பார்த்துக்கொள்ள முடியும்.
இந்த மாதிரி சின்ன வீட்டு விஷயங்களைப் பார்க்க சொன்னா எப்படி சார்?
அங்கே சம்பளம் கொடுக்கராங்க.
வீட்டிலே கொடுப்பாங்களா?
:-))
வாழ்த்துக்கள்.

தம்பி said...

ஹா ஹா ஹா !!

நல்லா சிரிச்சேன்!, அதே நேரத்தில கொஞ்சமா சிந்திக்கவும் இடமிருக்கு.

கப்பி பய said...

:)

நல்லா இருக்கு சோம்பேறி பையன்..

// பக்கத்து வீட்டு சோம்பேறி பையனை பாருங்க, பொண்டாட்டி ஆசைப்பட்டான்னு புனேயிலிருந்து பாம்பே போய் வடாபாவ் வாங்கிட்டு வந்து தர்ரார்!!!//

இது கொஞ்சம் ஓவர் :))

பழூர் கார்த்தி said...

நன்றி ஜயராமன், விஸ்தரித்து எழுதினால், சிறுகதையின் நீளம் அதிகமாகி விடுமே...

***

மனு, வீட்டிலும் சம்பளம் வேண்டுமா, அன்பு, பாசம், குடும்பம் என்று சம்பளத்துக்கும் மேலே நிறைய கிடைக்கின்றதே...

***

தம்பி, சிறுகதை உங்களை சிந்திக்க வைத்ததென்றால் சந்தோசமே...

***

கப்பி பய, சோம்பேறி பையன் வடாபாவ் நகைச்சுவைக்காக எழுதப்பட்டது, நன்றி...

ஜெஸிலா said...

சோம்பேறி பையனை மிஞ்சிய படு சோம்பேறி போல தெரிது சங்கர்?

dondu(#4800161) said...

இதே கதையை உல்டா செய்து மனைவி ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் செய்பவராக அமைத்து நம் சங்கர் மாதிரி நடந்து கொண்டிருந்தால் என்னென்ன கமெண்டுகள் சீறிக் கிளம்பியிருக்கும் என்பதை யோசியுங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

tbr.joseph said...

நல்லாருந்திச்சிங்க..

எனக்கு ஒரு பெண் மேரேஜ் கவுன்சிலர தெரியும்.. யார் விவாகரத்துன்னு போனாலும் பேசி சமாளிச்சி வழிக்கு கொண்டு வந்துருவார்.

ஆனா அவரே கணவருடன் ஒரு வருடத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் விவாகரத்து வாங்கியவர் என்பது என்னைப் போன்ற வெகு சிலருக்கே தெரியும்..

அலுவல் வேறு வாழ்க்கை வேறுதான்..

பழூர் கார்த்தி said...

ஆம் ஜெஸிலா, அப்படியும் வைத்துக் கொள்ளலாம் :-)

***

டோண்டு, சுவாரஸ்யமான கோணத்தில் சிந்தித்து இருக்கிறீர்கள், நல்ல யோசனை..

***

ஜோசப், அலுவலும், வாழ்க்கையும் வேறுவேறுதான், இருந்தாலும் வீட்டிற்கும் சற்று உதவலாமே...

***

நண்பர் அருண் மின்னஞ்சலில் அனுப்பிய பின்னூட்டம் :
அற்புதம்...கலக்குங்கள்.....சிறுகதை
"நச்" என்று உள்ளது.

***

நன்றி அருண்.