Friday, September 30, 2005

என் பெயர் 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்' V 2.0 - Reloaded

இந்திய கிரிக்கெட் கேப்டன் கங்குலிக்கும் ட்வெண்ட்டி செகண்ட்ஸிற்கும் என்ன சம்பந்தம் என்பதை கடைசி பாராவில் கண்டு பிடிக்கலாம். "ட்வெண்ட்டி செகண்ட்ஸ், எப்படிய்யா இருக்க?" என்று நண்பரிடமிருந்து எனக்கு வந்த ஓரு தொலைபேசி அழைப்பே இந்த பதிவுக்கு காரணம்.

அலுவலகத்தில் முன்பிருந்த இடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாறி விட்டேன். அதாவது இடம் எண் 1W59-ல் இருந்து 1W41-க்கு மாறி விட்டேன். 1W41-ல் 4+1 = 5. எண் கணிதம்(நியூமராலஜி) எல்லாம் பார்த்ததில் சாதகமாக ஒன்றும் இல்லாததால், எண் கணிதம் எல்லாம் டுபாக்கூர் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். இந்த இட மாற்றத்தால், இரண்டு மூன்று நாட்களாக வேலை நிறைய இருந்ததால் வலைப்பதிவு பக்கம் வர முடியவில்லை.

கங்குலி - சேப்பல் விவகாரம் படு ஜோராக போய்க் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய செய்திகள் இது தொடர்பாக வெளிவருகின்றன. சேப்பல் கிரிக்கெட் போர்டுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சலை நண்பர் ஒருவர் எனக்கு முன் செலுத்தினார்(Forward). அதில் உள்ள விஷயங்களைப் படித்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது. இந்திய கிரிக்கெட் வாழ்க!

சென்ற முறை தீபாவளிக்கு, ஊருக்கு புகைவண்டியில் நண்பர்களுடன் சென்றேன். மும்பையிலிருந்து சென்னைக்கு 24 மணிநேரப் பயணம் (சென்னை - தாதர் எக்ஸ்பிரஸ்). எங்களது குழுவில் 13 பேர். பொழுது போவதற்காக 'பாட்டுக்கு பாட்டு' (அந்தாக்ஸரி) விளையாடினோம். கர்ண கொடூரமாக பாடி புகைவண்டியயே கதிகலங்க வைத்ததில், சென்னை வருவதற்குள் மிகவும் பிரபலமாகி விட்டேன்!

'பாட்டுக்கு பாட்டு' போதாதென்று 'சைகை மொழி' (Dumb Charades) வேறு விளையாடினோம். ஆடுபவர்கள் இரு குழுவாகப் பிரிந்து கொள்ள வேண்டும். குழுவிலுள்ள ஒருவருக்கு மற்றொரு குழு ரகசியமாக ஓர் திரைப்படத்தின் பெயரைச் சொல்லும். அவர் சைகை மூலமாக அவர் குழுவிலுள்ள மற்றவர்களுக்கு படத்தின் பெயரை புரிவிக்க வேண்டும். புரிந்து கொண்டு சரியாக படத்தின் பெயரைச் சொன்னால் ஒரு பாயிண்ட் (மதிப்பெண்) கிடைக்கும். பிறகு இந்த குழு சொல்ல மற்றொரு குழு கண்டுபிடிக்கும்.

சிக்கலான சில விதிமுறைகளும் உண்டு. வாயசைக்கக் கூடாது. எழுத்துக்களை சைகை முறையில் காண்பிக்கக் கூடாது. இந்த விளையாட்டில்தான் நான் சலம்பிக் கொண்டிருந்தேன். எங்கள் குழுவில் வேண்டுமென்றே 'குலே பகவாலி' போன்ற பழைய புரிவிக்க கடினமான திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்தோம். எதிரணி கேள்விப் பட்டிராத ஆங்கில திரைப்படங்களை கொடுத்துக்கொண்டிருந்தது.

ஒருமுறை எதிரணி 'Raiders of the Lost Ark' என்ற ஆங்கிலப் படத்தை என்னிடம் கூறி எனது அணிக்கு சைகையில் புரிவிக்ககூறினர். நமக்கு தமிழே தடுமாறும் இதில் ஆங்கிலம் வேறா என்று நொந்து கொண்டே, எனது அணிக்கு இந்த படத்தை புரிவிக்கமுயற்சி செய்தேன். இதில் 'Raiders' மற்றும் 'Lost' வார்த்தைகளை புரிவித்து விட்டேன். ஆனால் 'Ark' என்பதை புரிவிக்க அரை மணி நேரம் போராடினேன். வில் மாதிரியெல்லாம் சைகை செய்தேன். அணியிலுள்ளவர்களுக்கு புரிய வில்லை.

அப்போது எதிரணியைச் சேர்ந்த நண்பி ஒருவர் 'அரக்கோணம்' வந்துருச்சிடா என்றார் (புகைவண்டி சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது). உடனே அந்த வார்த்தையை சுட்டிக்காட்டி அதிலிருந்து 'Ark' என்ற வார்த்தையை எடுத்தோம். இப்படி அரக்கோணத்திலிருந்து 'Ark' எடுத்ததற்காக எனக்கு ஒரு விருது கொடுத்தால் நன்றாயிருக்கும்.


இந்த விளையாட்டில்தான் எதிரணியிடம் சவால் விட்டோம் / விட்டேன், "எந்த படப்பெயரை வேண்டுமானாலும் கூறுங்கள், 20 செகண்ட்ஸில் கண்டு பிடிக்கிறோம்". ஒவ்வொரு முறை ஆடும் போது, கை சொடுக்கிக் கொண்டே '20 செகண்ட்ஸ்தான், முடிக்கிறோம்' என்று கூறியதால் எனக்கு 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்' என்று நண்பர்கள் பெயர் வைத்து விட்டார்கள். இப்போதும் நண்பர்களின் கைத்தொலைபேசியில் (Cell phone) பார்த்தால் எனது கைத்தொலைபேசி எண் 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்' என்றே சேமிக்கப் பட்டிருக்கும்!

இந்த 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்' என்ற பெயர் நம்ம கிரிக்கெட் கேப்டன் 'கங்குலி'க்கும் பொருந்தும். ஏனென்றால் நம்ம தலைவர் இப்ப எல்லாம் பேட்டிங் பிடிக்கப் போனால் 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்தான்' அதற்கு மேல் நிற்பதில்லை, அவுட்டாகி டிரஸ்ஸிங் ரூமுக்கு ஓடி வந்து ஜூஸ் குடிக்கிறார். அதனால் கங்குலிதான் தற்போதைக்கு 'ட்வெண்ட்டி செகண்ட்ஸ்' ! என்ன, நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்கள்தானே?

இந்த வாரக் கவிதை (கவிதைக்கு சொந்தக்காரர் நண்பர் அரவிந்த்)

செருப்பு

பாதங்களைக் காக்கும்
கடவுளுக்கு இடம்
கோயிலுக்கு வெளியில் !

8 comments:

Boston Bala said...

எதிரணி ஆங்கிலப் படங்களாக சொல்லியிருக்கிறார்களே... 'மேரிஸ்' ஆஃப் தமிழ்நாடா :-)

பழூர் கார்த்தி said...

ஆமாம் பாலா, எல்லாம் டுபாக்கூர்தான் :-)

வெளியில் ஆங்கிலப் படங்களாக கூறிவிட்டு, வீட்டில் சன் டிவியில் சீரியல் பார்ப்பார்கள் :-)

G.Ragavan said...

// வெளியில் ஆங்கிலப் படங்களாக கூறிவிட்டு, வீட்டில் சன் டிவியில் சீரியல் பார்ப்பார்கள் :-) //

ஹா ஹா ஹா

Ramya Nageswaran said...

Raiders of the lost ark கொடுத்து கடிச்ச பார்ட்டிகளோட திரும்ப dumb charades விளையாடும் வாய்ப்பு கிடைச்சதுன்னா இதோ ஒரு லிஸ்ட்:

The Poseidon Adventure
The Bourne Identity
Apocalypse Now
Bride of Frankenstein

Alex Pandian said...

check it out for more fun
prempanix.blogspot.com

பழூர் கார்த்தி said...

ஆமாம் ராகவன், என்றாவது அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வீட்டுக்குப் போனால் தாவு தீர்ந்து விடும், மாலை 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை தொலைக்காட்சியில் மெகா தொடர்கள்தான் :-(
நடுவில் செய்திகள் வரும்போது கொஞ்சம் மூச்சு விடலாம் :-)
அதிலும் சன் செய்திகளையும், ஜெயா செய்திகளையும் மாறி மாறிப் பார்த்தால் கீழ்ப்பாக்கத்துக்கு சீக்கிரம் போக வாய்ப்பு அதிகம் .. லாஜிக் எல்லாம் பார்க்காமல் வாய்விட்டு சிரிக்கவே இந்த செய்திகளை தொடர்களுக்கு நடுவில் வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்

ரம்யா, நீங்கள் கொடுத்த லிஸ்ட்டை வைத்து எதிரணியை கலங்கடிக்கிறேன் :-)

அலெக்ஸ், சுட்டியை பின்பற்றி சென்று படித்த பிறகு, தலை இன்னும் அதிகமாக சுற்றுகிறது :-)

Dubukku said...

நானும் எனது அடுத்த பதிவில் இந்தப் பத்தி தான் ..கொஞ்சம் எழுதியிருக்கிறேன்...பாதியில் நிற்கிறது.

ஆனால் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கான விளையாட்டு...
ட்ரெயினில் க்ரூப்பாக போவதென்றாலே...இனிமையான அனுபவம் தான்

பழூர் கார்த்தி said...

//ட்ரெயினில் க்ரூப்பாக போவதென்றாலே...இனிமையான அனுபவம் தான் //

ஆமாம் டுபுக்கு, அது ஒரு அழகிய நிலாக்காலம், ஒவ்வொரு முறையும் தீபாவளிக்கு நண்பர்களுடனே ஊருக்கு பயணம், ஆனால் இம்முறை நான் மட்டும் தனியே :-(

பார்க்கலாம், பயணத்தில் பிகரொன்று மாட்டினால் நல்லாயிருக்கும் :-))