Wednesday, September 07, 2005

பெய்யெனப் பெய்யும் மழை

இந்த கட்டுரை ஒரு மாதத்திற்கு முன்பு எழுதப் பட்டது. இப்போதுதான் இந்த வலைப் பக்கத்தில் இடம் பெறுகிறது.


26/07/2005 05:12 PM


ஜூலை 26ம் தேதி, மாலை 4 மணிக்கு அலுவலகத்தில் எங்கள் அனைவருக்கும் ஒரு மின்னஞ்சல் வந்தது, கனமழையின் காரணமாக மாலை 4:30 மணிக்கு ஊழியர்கள் வீடு திரும்பலாம் என்று. மும்பையில் வசிப்பவர்களுக்கு மழைக்காலத்தில் இது வழக்கமான ஒன்றுதான். 5 மணிக்கு சக ஊழியர் ஒருவரின் காரில் கிளம்பி விட்டேன். கேட் நம்பர் ஒன்றின் வழியே வெளியே போனால், தண்ணீர் அதிகமாக உள்ளது என்று தகவல் வந்ததால், கேட் நம்பர் மூன்றின் வழியே வெளிவந்தவுடன், மழையின் உக்கிரம் புரிந்து விட்டது. கேட்டின் வலதுபுறம், கார் திரும்பியவுடன் ஒன்றரை அடிக்கு தண்ணீர் இருந்தது. சிறிது நேரத் தயக்கத்திற்கு பிறகு நண்பர் தைரியமாக வெள்ளத்தின் நடுவே காரை செலுத்தினார். கடந்து வந்து, கன்சோலியின் ஜான்'ஸ் பிரிட்ஜ் நிறுத்தத்தில் இறங்கினேன். கன்சோலியின் கூவம் கரை புரண்டு ஒடிக் கொண்டிருந்தது. மழை மிகத் தீவிரமாக பெய்து கொண்டிருந்தது. இன்னும் அரைமணி நேரம் மழை தொடர்ந்து பெய்தால், கன்சோலியில் வெள்ளம் வந்து விடும். யோசிக்கிறேன், என்ன செய்யலாம் ?

28/07/2005 11:01 AM


டைம்ஸ் ஆப் இண்டியா வலைத்தளத்தில் தலைப்புச் செய்தி : மும்பையில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட கார்களில் இருந்து வெளியே வர முடியாமல், 21 பேர் பலி. கார்களில் உள்ள செண்ட்ரல் ஆட்டோ லாக்கிங் சிஸ்டம் மற்றும் பவர் விண்டோ சிஸ்டம் செயலற்றுப் போனதால் வெளியே வர முடிய வில்லை. சில கார்களில் ஏசி சிஸ்டம் வெடித்ததுள்ளன. நினைத்துப் பாருங்கள், காரின் வெளியே வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது, கார் கதவுகள் திறக்க முடியவில்லை. கண்ணாடிகளை உடைக்க முடிய வில்லை, மூச்சு முட்டுகிறது. வாழ்வின் கடைசி நொடிகளில், அவர்கள் என்ன வேதனை அனுபவதிருப்பார்கள் ?


26/07/2005 06:30 PM


கன்சோலியில் வீட்டுக்கு சென்ற போது, வீட்டில் மின்சாரம் இல்லை. காலையிலிருந்து மின்சாரம் இல்லை என்று தெரிய வந்தது. உடனே வீட்டிலுள்ள எல்லா வாளிகளிலும் தண்ணீர் பிடித்து வைத்து விட்டு, உடை மாற்றிக் கொண்டு, கோப்பர்கைரனேயில் நண்பர்களின் வீட்டிற்கு சென்று விட்டேன். நடந்து செல்லும் போது, சாலைகளில் ஒரடிக்கு மேல்வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. பேருந்து நிறுத்தங்களில் மக்கள் கூட்டம். சாலைகளில் நிறைய பேர் நடந்து செல்கின்றனர். மழை கனமாக பெய்கிறது. எங்கும் மின்சாரம் இல்லை. பிரளயம் வந்து விட்டதா?


29/07/2005 10:25 AM


டைம்ஸ் ஆப் இண்டியா வலைத்தளத்தில் செய்தி : வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட மக்களுக்கு/பயணிகளுக்கு சகபயணிகள், அருகாமையில் வசிக்கும் மக்கள் உதவி செய்தனர். பேருந்துகள் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட பகுதிகளில் அருகாமையில் வசிக்கும் சிலர் தங்கள் வீடுகளிலிருந்து, பிஸ்கட், பிரட் மற்றும் பழங்களை கொடுத்து உதவியுள்ளனர். சிலர் ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு, உணவு சமைத்து கொடுத்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்கள் ஒருவொருக்கருவர் உதவி செய்து, மீண்டு வந்துள்ளனர். மக்களிடையே உதவும் மனப்பான்மை குறைய வில்லை என்பதுமனதுக்கு ஆறுதலளிக்கும் செய்தி.

26/07/2005 10:00 PM


கோப்பர்கைரனே நண்பர்களுடன் சாப்பிடக் கிளம்புகின்றேன். மழை மிகத் தீவிரமாக பெய்கிறது. உணவு விடுதியில் கூட்டம் இல்லை. மின்சாரமும் இல்லை. சாப்பிட்டு விட்டு திரும்பும் போது, குடை பிடித்திருந்தாலும், உடம்பு முழுவதும் நனைந்து விட்டது. திரும்பும் போது நினைத்துக் கொள்கிறேன் : வீடில்லாமல் தெருவில், நடைபாதையில் வசிப்பவர்களுக்கு எவ்வளவு சிரமம் இருக்கும், இம்மாதிரி சூழ்நிலையில் எங்கே போயிருப்பார்கள், அனைவரும் ?


28/07/2005 11:20 AM


மும்பை கோரேகான், அந்தேரி பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி 2500 எருமைகள் பலி. எருமைகள் நன்கு நீந்தக் கூடியவைதான். ஆனால் அவைகள் சங்கிலியுடன் பிணைக்கப் பட்டிருந்ததால் தப்பிக்க முடிய வில்லை. எருமைப் பண்ணை உரிமையாளர்கள் ஏன் எருமைகளை விடுவிக்க வில்லை? மனிதர்களின் சுயநலத்திற்கு வாயில்லா ஜீவன்கள் பலியாகி விட்டன. இது தவிர 15000 ஆடுகளும் பலியாகி விட்டதாக கேள்வி.


பின் குறிப்பு


இவை தவிர, இன்னும் பற்பல செய்திகளை நீங்கள் செய்தித் தாள்களின் மூலமும், தொலைக்காட்சியின் மூலமும்அறிந்திருப்பீர்கள். மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் என்னைப் பாதித்தவைகளில் சில. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு எத்தனையோ மக்கள் உயிரிழந்தனர். வீடிழந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. மகாரஷ்டிராவின் மேற்கு பகுதி முழுவதும் பாதிக்கப் பட்டாலும், மாநிலத் தலைநகரான மும்பையின் பாதிப்புக்களுக்கே செய்தி ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தன. நிறைய நிலச் சரிவுகள் ஏற்பட்டன. மூன்று நாட்களுக்கு மும்பை வெளி உலகத்திலிருந்து துண்டிக்கப் பட்டது.15000 கோடி நஷ்டம் என்று செய்தி வந்துள்ளது. மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போது அரசாங்கம் விரைந்து செயல்பட வில்லை என்று கருத்துகள் எழுந்துள்ளன. இப்பேரழிவிற்கு முக்கியமாக பின்வருபவனற்றை காரணமாகக் கூறலாம்.


* மும்பையின் பாதாள சாக்கடைகள் பழமையானவை. டிரைனேஜ் சிஸ்டம் சரியாக இல்லை.

* நீரை உறியும் சக்தியுடைய கடலோர மாங்குரோவ் காடுகள் ஆக்ரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டு விட்டன.

* கடந்த நூறாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான மழைப்பொழிவு.

* விரைந்து செயல்பட முடியாத அரசாங்கம்

* பெருகிவரும் மக்கள் தொகை, அதனால் ஏற்படும் ஆக்ரமிப்புகள்

* நிலச்சரிவு ஏற்படும் அபாயமறிந்தும், முறையற்ற குடியுருப்புகளை ஏற்படுத்தும் மக்களின் அறியாமை மற்றும் ஏழ்மை.


மும்பையில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. வெகு விரைவில் மும்பை இழந்த உற்சாகத்தைப் பெறக்கூடும். ஆனால் வெள்ளத்தினால் உயிரழந்தவர்களின்/பாதிக்கப் பட்டவர்களின் வீடுகளில் இயல்பு நிலை திரும்புமா? எவ்வாறு அவர்களின் வாழ்க்கைப் பயணம் அமையப் போகிறது ? காலம்தான் பதில் சொல்ல வேண்டும் !

No comments: