Sunday, September 11, 2005

* அண்டங்காக்கா கொண்டக்காரி *

போன வாரம் வலைப்பதிவை தமிழ்மணத்தில் சேர்த்ததும் ஆபிஸில் இருக்கும் நண்பர்களுக்கு போன் செய்து தெரிவித்தேன். ஆகா.. நல்ல காரியம் செய்தாய், நாங்கள் படும் கஷ்டத்தை (எனது பதிவுகளை படிப்பதை) தமிழ் கூறும் (வலைப்பதிவர்) நல்லுலகமும் படட்டும் என்று ஆசி வழங்கினார்கள். போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும் என்று நோட்பேடை திறந்து இந்த பதிவை எழுத ஆரம்பித்து விட்டேன்.

பதிவு ஆரம்பித்ததைக் கொண்டாட நண்பர்களுக்கு டீ (சத்தியமாக டீ மட்டும்தான்..) வாங்கிக் கொடுத்தது, நன்றாகவே வேலை செய்தது. அப்படியே அரசல் புரசலாக செய்தி பரவி, ஹிந்திக் காரர்கள் கூட வந்து கை கொடுத்தார்கள். பெரிய எழுத்தாளன் நான், கவிதையெல்லாம் கூட எழுதுவேன்(!) என்று அடித்து விட்டதில் பக்கத்து சீட்டு பஞ்சாபி பைங்கிளி 'நைஸ் டு ஸி யு ரைட்டிங் யா..' என்றது. இதற்கு என்ன அர்த்தம் என்று 'ஆர்ச்சிஸ்' கிரிட்டிங் கார்டு (ஐ லவ் யூ என்று ரோஜாப்பூ படம் போட்டிருக்கிறது) வாங்கி யோசித்துக் கொண்டிருக்கிறேன். ராகுகாலம் எமகண்டம் எல்லாம் பார்த்து, சுபயோக சுபதினத்தில் பைங்கிளியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அடி வாங்காமல் பிழைத்திருந்தால், அடுத்த பதிவை எழுதுகிறேன்.

மூளையை ரொம்ப கசக்கி, நிறைய டீ, தம் எல்லாம் அடித்து ஹைக்கூ கவிதை ஒன்றை உருவாக்கினேன். ஒரிஜினல் ஹைக்கூ கவிஞர்கள் கவிதையைப் பார்க்காமல் உடனடியாக அடுத்த பாரவுக்கு செல்லவும்.

நண்பனின் காதலி
அழகாய் இருப்பதை பார்த்ததும்
நட்பை மறந்தது மனசு...

இந்த ஹைக்கூவை படித்துவிட்டு பாராட்டி பின்னூட்டம் போடும் நண்பர்களுக்கு சீக்கிரம் கேர்ள் பிரண்டோ / பாய் பிரண்டோ கிடைக்க மும்பை சித்தி விநாயகரிடம் வேண்டிக் கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறேன். திருமணமானவர்கள் முயற்சி செய்யவேண்டாம்.

தீபாவளிக்கு ஊருக்குப் போக டிரெயின் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டேன். இன்னும் 40 நாட்களே உள்ளன, ஊருக்கு போக. ஊருக்கு போவது என்றாலே ஒரே ஜாலிதான். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று பொழுது போகும். மிச்சமிருக்கும் நேரத்தில் நண்பர்களிடம் மும்பையை பற்றி நிறைய கதை விட வேண்டும். என்னிடம் ஆதிகால மொபைல் போன் ஒன்று (சின்ன ஆன்ட்டனா கூட இருக்கும், ஆபிஸில் கொடுத்த போன்) உள்ளது. எங்க ஊர் அப்பாவியான நல்ல மக்கள் நிறைய பேர் இருக்கிற ஊர். அங்கே இந்த மொபைல் போனை எடுத்துட்டு போய், கிடைக்கிற கால்வாசி சிக்னலில் நாலு மிஸ்கால், நாலு மெஸெஜ் அனுப்புற சுகமே தனிதான்... அப்புறம் நமக்கு தெரிஞ்ச ஆங்கில வார்த்தையெல்லாம் மொபைல்ல பேசறப்ப எடுத்து விடனும்.. 'துரை இங்கிலிபீஸ் எல்லாம் பேசுது'ன்னு கோவை சரளா ஒரு படத்தில் சொல்வாரே, அப்படி சொல்லி வியப்பார்கள் எனது ஊர் மக்கள், ரொம்ப வெள்ளந்தியானவர்கள் !

போன முறை ஊருக்கு ப்ளைட்டில் போனேன், ப்ளைட்டில் ஏறியவுடன் ஒரே மஜாவாக இருந்தது. என்னை, சார் என்று ரொம்ப மரியாதையாக கூப்பிட்ட போது கூச்சமாக இருந்தது. மூன்று முறை என்னை திட்டிக் கொண்டே (எந்த ஊருய்யா உனக்கு) கூல்ட்ரிங்க்ஸ் கொடுத்தார்கள். என்ன ஒரே குறை, ப்ளைட் பறக்கும்போது, நல்லா காற்று வருமென்று சைடு ஜன்னலை திறந்து விட சொன்னேன், கடைசி வரை திறந்து விடவே இல்லை. குட்டை பாவாடையில் அழகாக இருந்த 'ரீட்டா' என்ற பணிப்பெண்ணை எனக்கு மிகவும் பிடித்திருந்தது (யாரத்தான் பிடிக்காது உனக்கு? - மனசாட்சியின் குரல்). மொபைல் நம்பரோ, இ-மெயில் அட்ரஸோ கேட்கலாம் என நினைத்தேன். ப்ளைட் நின்றவுடன் ஆள் வைத்து அடிப்பார்களோ என்று பயம் வந்ததால், ஜெண்டில்மேன் ஆகி விட்டேன்.

பதிவுகளைப் படித்த நண்பர்கள் ஏன் ஒரே சொந்த கதை, சோகக் கதையாய் எழுதுகிறாய், நிகழ்கால சம்பவங்களை எழுதலாமே என்று கேட்டார்கள். நிகழ்கால சம்பங்களை பிறர் மனம் புண்படாதவாறு விமர்சித்து எழுதுவது கஷ்டம். நான் அறிவுரை கூறும்படியோ, விளையாட்டு விமர்சனத்தையோ, திரைப்பட விமர்சனத்தையோ எழுதினால், நண்பர்கள் ஆல்ட் + F4 போட்டு விட்டு கருடபுராணம் படிக்க போய்விடுவார்கள். என் கடந்த காலத்தை எழுதும்போது, இஷ்டம் போல் கதை விடலாம். ஆதலால் நான் பார்த்த, ரசித்த, அனுபவித்த சம்பவங்களை கொஞ்சம் கற்பனை கலந்து, நகைச்சுவையாய் எழுதலாம் என நினைக்கிறேன். அவ்வப்போது திரைப்படங்களையும், விளையாட்டையும் தொட்டுக் கொள்கிறேன்!

மும்பையில் நண்பர்கள் அவ்வப்போது வாஷி மேகராஜ், முலுண்ட் ஆட்லேப்ஸ் என்று ஆங்கிலப்படம் பார்க்கச் செல்வார்கள், நான் அந்த பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன். போய் பார்த்தாலும் புரியாதென்பதே காரணம். நான் பார்த்து புரிந்து கொண்ட ஒரே ஆங்கிலப் படம் 'டைட்டானிக்' தான். அது கூட சன் டிவியில் டப் பண்ணிப் போட்ட போது பார்த்த பிறகுதான் புரிந்தது. இந்த 'மேட்ரிக்ஸ்' படத்தை இதுவரைக்கும் 13 தடவை ஸ்டார் மூவிஸ்ஸிலும், ஹச்பிஓவிலும் பார்த்து விட்டேன். ஒரு மண்ணும் புரியவில்லை. ஒருவேளை சன் டிவியில் போடறப்போ புரியுமோ என்னவோ?

பதிவை முடிக்கும் வேளை வந்து விட்டது. என்னடா இவன் 'அண்டங்காக்கா கொண்டக்காரி' என்று தலைப்பை வைத்துவிட்டு அதைப் பற்றி எதுவுமே எழுதவில்லையே என்று அடிக்க வர வேண்டாம். இரண்டாவது பாரவில் பஞ்சாபி பைங்கிளியிடம் கிரிட்டிங்ஸ் கார்டு கொடுக்கப் போகிறேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? ஒருவேளை பார்ட்டி ஒர்க்கவுட் ஆகிவிட்டால், 'ரெமோ' விக்ரம் போல் 'அண்டங்காக்கா கொண்டக்காரி..ரண்டக்க..ரண்டக்க' என்று டூயட் பாடலாம் என்று இருக்கிறேன். ஒர்க்கவுட் ஆகாவிட்டால், 'எங்கே செல்லும் இந்த பாதை...' என்று 'சேது' விக்ரமாகி விட வேண்டியதுதான் !!!

13 comments:

சுரேஷ் கண்ணன் said...

All the best. keep writing.

Srimangai(K.Sudhakar) said...

நல்ல பதிவுகள். மிகவும் ரசித்தேன். நகைச்சுவை பதிவுகளுக்கு சுவை கூட்டுகிறது. பஞ்சாபி பைங்கிளியுடன் அடுத்த காதலர்தினத்தில் ஜாலியாக மகாபலேஷ்வர் சென்றுவர வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். நேரமிருக்கையில் தொடர்புகொள்ளவும் - kasturisudhakar@yahoo.com

செல்வராஜ் (R.Selvaraj) said...

அட! நல்லா இருக்குங்க உங்க எழுத்து. இழையோடியிருக்கும் நகைச்சுவை படிக்க இதமாய் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். பஞ்சாப் பைங்கிளியிடம் அடிவாங்காதிருக்க வாழ்த்துக்கள்!

karthik said...

வனக்கம்,
சமிபத்தில்தான் உங்கள் வலைதளத்தை பார்த்தேன்,உங்கள் வலைதளம் அருமையாக உள்ளது,பஞ்சாப் பைங்கிளியிடம் அடிவாங்காதிருக்க வாழ்த்துக்கள்!

கார்த்திக

பழூர் கார்த்தி said...

பின்னூட்மிட்ட, மின்னஞ்சல் அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி !

Anonymous said...

The Blog is well structured but there shud be something in the title bar instead of some lank square boxes.
Andankakka Kondakari article was qiite interesting.All the best fo r ur proposal.Keep writing also genral topics like how n where n Indian cricket team can improve something abt Sania Mirza,APJ KALAM something abt gud n bad politicians,Katrina apart from personal so that we can have some general knowledge too

Suresh babu said...

Good one.. :-)

அரசு said...

அருமை!
ஒரு மாதுவினால்
சாது சேதுவாகாமல்
ரண்டக்க..ரண்டக்க'
என்று டூயட் பாட
வாழ்த்துக்கள்.

Dubukku said...

haha nice one...
nalla ezhuthi irukkeeenga :)

பழூர் கார்த்தி said...

அரசு, எதுகை மோனையில கலக்கிருக்கீங்க, வாழ்த்துக்கு நன்றி.

டுபுக்கு, எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான் :-))

Balamourougane said...

சமிபத்தில்தான் உங்கள் வலைதளத்தை பார்த்தேன், அருமை

தொடரவும் -

அழகாய் நண்பனின் காதலி

மறந்தது நட்பு

idhu eppadi ?!!

பழூர் கார்த்தி said...

நன்றி பாலா.. ரொம்ப நாள் கழித்து இன்று திரும்பவும் இப்பதிவை படித்துப் பார்த்தேன்.. நல்லாத்தான் இருக்கு :-)

அன்பு said...

எப்படிய்ய இதை முன்னரே படிக்காமவிட்டேன்... செம ஜாலி மச்சி..:)
கலக்கல்.