ஒரு வாரம் முன்பு தினமலரில் படித்தேன். சென்னையில் அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என அரசாங்கம் உத்தரவு போட்டுள்ளதாம். அதையொட்டி கடைக்காரர்களும் தூய தமிழில் பெயர் வைக்கிறார்களாம்.
ஐஸ்கிரீம் என்பதற்கு பனிக்குழையம் என்று போட்டிருந்தார்கள். பனிக்கூழ்/பனிக்குழையம் எந்த சொல் சரியானது? இப்படி எழுதினால் எத்தனை மக்களுக்கு புரியும்? எதனால் தமிழ் சொற்கள் தமிழ் மக்களுக்கே புரியாத நிலை வந்தது? ஒருவேளை இப்படி ஒரு பத்து ஆண்டுகள் தூய தமிழை எங்கும் நடைமுறைப் படுத்தினால் அனைவரும் பழக்கப் படுத்திக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.
நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அலுவலக விஷயமாக இஸ்ரேல் சென்றிருந்தேன். அங்கு ஹீப்ரூ மொழி நடைமுறையில் உள்ளது. ஹீப்ரூவும் தமிழ் மொழி போன்றே பழைமையான மொழியே. அங்கே மக்கள் அனைவரும் அனைத்திலும் ஹீப்ரூவையே பயன் படுத்துகின்றனர். கடைகள், கணிப்பொறிகள், மொபைல் போன்கள், பில்கள் அனைத்திலும் ஹீப்ரூ. விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் ஹீப்ரு மொழியில் உள்ளது. ஆனால் தமிழில் இல்லை. இது வருத்தமளிக்கக் கூடியது. இதற்கு காரணம் எனக்கு தெரிய வில்லை.
நம்மால் ஏன் தமிழ் மொழியை எங்கும் பயன்படுத்த முடியவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன என கருதுகிறேன். நமது ஆங்கில மோகம், தமிழில் படித்தால், பயன் படுத்தினால் கேவலம் என்று நினைக்கிறோம். மொபைல் போனில் (கைப்பேசியில்) குறுஞ்செய்திகள் தமிழில் அனுப்பலாம், ஆனால் எத்தனை போன்கள் இவ்வசதியை பெற்றுள்ளன? எத்தனை மக்கள் பயன்படுத்துகிறார்கள்?
தமிழ் படங்களை எடுத்துக் கொள்ளுங்களேன். இப்போது கேளிக்கை வரி விலக்கால் எல்லா படங்களும் தூய தமிழில் பெயர் வைக்கின்றன. இல்லா விட்டால் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், வாரணம் ஆயிரம், பெண் சிங்கம் போன்ற பெயர்களெல்லாம் வந்திருக்குமா? ஆனால் படத்தில் பெயரில் மட்டுமே தமிழ். மற்றபடி காட்சிகள் எல்லாம் மேல்நாட்டு கவர்ச்சி கலாச்சாரம்தான்.
பள்ளிக்கூடங்கள், நம்மில் எத்தனை பேர் குழந்தைகள் தமிழ்வழிக் கல்வி கற்க வைக்கிறோம்? அப்படி படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு என்பதை அரசாங்கம் உறுதி செய்யுமா? இப்போது கூட செம்மொழி மாநாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று அறிவித்து இருக்கிறார்கள்.
தமிழில் எல்லாவித கல்வியும் கற்க முடியுமா? ஒரு உதாரணத்திற்கு கணிப்பொறியியல் தமிழில் கற்க முடியுமா? அதற்கான அனைத்து தொழில்நுட்ப கலைச்சொற்களும் நம்மிடம் உள்ளனவா? Operating System, Business Analysis, Optimization Techniques, Sorting, Random number போன்றவற்றிற்கு சரியான தமிழ் கலைச்சொற்கள் என்ன? அவை எத்தனை தூரம் பிரபலமாயிருக்கின்றன?
ஒருவேளை அப்படியே தமிழில் கல்வி கற்கும் வாய்ப்பிருந்தாலும், அதை படித்து வருபவர்களுக்கு எவ்விதமான வேலை வாய்ப்புகள் உள்ளன? மேல்நாட்டு, அந்நிய கம்பெனிகளில் தமிழ் வழி டிகிரி செல்லுபடியாகுமா? நிச்சயமாக ஆங்கிலம் அறிந்தவர்கள், ஆங்கில வழிக் கல்வியை அல்லவா அவர்கள் விரும்புவார்கள்.
எனவே நடைமுறையில் தூயதமிழ் சொற்கள் என்பது கானல் நீரே.
என்னிடம் மேற்சொன்ன கேள்விகளுக்கெல்லம் விடையில்லை. உங்களிடமும் இல்லாமலிருக்கலாம். ஆனால் இக்கேள்விகளுக்கான பதிலை தேட வேண்டிய நேரம் வந்துவிட்டது போன்றே தோன்றுகிறது!!