சோம்பேறி பையன் நான். நினைத்ததையெல்லாம் எழுதுபவன். கதை, கவிதை, கார்ட்டூன், விமர்சனங்கள் என்று எனது அலம்பலுக்கு ஒரு எல்லையே இல்லை.. ஏழு வருடங்களாக வலைப்பதிகிறேன்.. அமெரிக்காவில் வசிக்கிறேன்..
Thursday, May 31, 2012
என்றுமே இளமையாக இருக்க வேண்டுமா??
முகநூலில் (Facebook) நிரம்பி வழியும் ஏராளமான மொக்கை செய்திகள்/குறிப்புகள் நடுவே சில சமயம் நன்முத்துகளும் கிடைக்கும். எனது நண்பரின் நண்பர் பகிர்ந்த கருத்து இது, மூலம் எங்கிருந்து என தெரியவில்லை.
ஓரடி நடவேன், ஈரடி கடவேன், இருந்து உண்ணேன், படுத்து உறங்கேன்
அனைவருக்கும் என்றும் இளமையாகவே இருக்க வேண்டும் என்ற என்ற ஆசை இருக்கும். அதற்கு சான்றோர்கள் மிகவும் எளிய ஒரு வழியை கூறுகின்றனர். ஓரடி நடவேன், ஈரடி கடவேன், இருந்து உண்ணேன், படுத்து உறங்கேன் என்பதே அது, அதற்கான விளக்கம் ஓரடி நடவேன்.. நமது உடம்பின் நிழல் கால் அளவில் ஓர் அடியாக இருக்கும் உச்சிப்பொழுது நேரத்தில் நான் வெளியில் நடக்க மாட்டேன். உச்சி வெயில் ஆகாது. ஈரடி கடவேன் - அதாவது, ஈர அடி கடவேன், ஈரமான இடங்களில் நீண்ட நேரம் நிற்பதோ, நடப்பதோ கூடாது என்பதால் அப்படி நடக்க மாட்டேன். இருந்து உண்ணேன் - ஏற்கெனவே நான் சாப்பிட்ட உணவு வயிற்றில் இருக்கும் போதே மேலும் உண்ண மாட்டேன். நன்கு ஜீரணமான பின்புதான் மறுபடியும் சாப்பிடுவேன். படுத்து உறங்கேன் - தூக்கம் வந்த பிறகுதான் படுக்கைக்கு செல்வேன். படுத்துக் கொண்டு தூக்கம் வரவில்லையே என நினைத்தபடி படுக்கையில் கிடக்கமாட்டேன். இதுவே நீண்டநாள் இளமையோடு வாழும் ரகசியம் என குறிபிடுகின்றனர் சான்றோர்.
Wednesday, May 30, 2012
பழூர் காராச்சேவு 5/29/2012 - பில்லா, சாரு, பவர் ஸ்டார், ஐபிஎல்-5, சினிமா
பில்லா - 2 இசை
சில நாட்களாக பில்லா - 2 பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன். சாதாரணமாய் லேப்டாப் ஸ்பீக்கரில் கேட்கும் போது அவ்வளவாக கவரவில்லை. ஆனால் போஸ் போன்ற நல்ல ஹெட்செட்டில் கேட்கும் போது, பாடலே மாறி விடுகிறது. இப்போதைக்கு மதுரைப் பொண்ணும், இதயமும் ஃபேவரிட். சில மாதங்கள் முன்பு இப்படித்தான் மங்காத்தா பாடல்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன், ஆனால் தற்போது அந்த பாடல்கள் என்னை கவருவது இல்லை. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, இருபது வருடங்களுக்கு முன்பு வந்த இளையராஜாவின் 'சொர்க்கமே என்றாலும்', 'செண்பகமே' போன்ற பாடல்கள் இப்போதும் என்னைக் கவருவது ஆச்சரியமே!!
சாரு நிவேதிதாவின் வழக்கு எண் 18/9 விமர்சனம்
ஏகப்பட்ட மசாலா திரைப்படங்களுக்கு நடுவில் கொஞ்சம் நன்றாக ஏதாவது திரைப்படம் வெளிவந்தால், அதை சாரு தனது வலைத் தளத்தில் கிழிப்பது ஒரு ஃபேஷனாகி விட்டது. படத்தை 10 நிமிடம் கூட பார்க்க முடிய வில்லையாம், இடைவேளையில் எழுந்து வெளியே வந்து விட்டாராம். இவரது தேகம் நாவலை யாராவது பாதி மட்டும் படித்து விட்டு விமர்சித்தால் ஒத்துக் கொள்வாரா? என் போன்ற சாதாரண சினிமா ரசிகனுக்கு வழக்கு நல்ல படம்தான்!!
நீயா நானா கோபிநாத் - பவர் ஸ்டார் சண்டை
பவர் ஸ்டார் என்ற அப்பிராணியை விஜய் டிவியில் கோபிநாத் சீரியஸாக கலாய்த்தார். எவ்வளவு வம்பிலிழுத்தாலும், பொறுமை இழக்காமல் சிரித்துக் கொண்டே பதில் கூறிய பவர் ஸ்டார் என்னை கவர்ந்தார். ஆனந்தத் தொல்லை யு.எஸ்ஸில் ரிலிசானால் பார்க்க முடிவு செய்திருக்கிறேன் :)
ஐபிஎல் - 5
ஏகப்பட்ட புகார்கள்களுடன் ஐபிஎல் - 5 முடிவடைந்திருக்கிறது. சென்னை இறுதி போட்டிக்கு வந்தது மேட்ச் ஃபிக்ஸிங் என்று இணையத்தில் 357 பேர் சத்தியம் செய்திருக்கிறார்கள். இவர்களில் 356 பேராவது அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் விடாமல் தொடர்ந்து பார்ப்பார்கள். எனவே கிரிக்கெட் தொடர்ந்து வாழும்!! அது ஃபிக்ஸிங்கோ என்னவோ, எனக்கு முடிவு முன்பே தெரியாத வரை சுவாரசியம்தான், அதனால் தொடர்ந்து பார்ப்பேன் என்றார் பிலாசாபி பிரபாகரன், அதையே நானும் வழிமொழிகிறேன்.
தி ஷஷாங்க் ரிடம்ஸன்
இப்போதுதான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். அருமையான படம். நீண்ட காலம் சிறையில் வாழும்/வாடும் இரு நண்பர்கள் மற்றும் சில சம்பவங்களை சுவாரசியமாக படமாக்கி இருக்கின்றனர். இதை யாராவது தமிழில் எடுக்கலாமே?
Friday, May 18, 2012
தூக்கம் தொலைத்த இரவுகளில் எழுதிய கவிதைகள் - Part 2
முகப் புத்தகத்தில்
நண்பனின் குறுஞ்செய்தி
முகம்தான் நினைவில் இல்லை...
மச்சான் என்போம்
மச்சி என்போம்
தலைவா என்போம்
பாஸ் என்போம்
நண்பேன்டா என்போம்
உனக்காக உயிரையே
கொடுப்பேன் என்போம்
அடுத்தவரிடம் அறிமுகம் செய்கையில்
ஆருயிர் நட்பென்போம்
ஐம்பது ரூபாய் கடன் கேட்டால்
இப்ப ரொம்ப டைட் மச்சி என்போம்!!!!
நேற்று என் பள்ளிநாளைய நண்பர் முருகானந்தம்
வீட்டிற்கு வந்திருந்தார்...
இடைவிடாத மழையில்,
சளித் தொந்தரவையும் பொருட் படுத்தாது
என்னைப் பார்க்க ஆர்வமுடன் வந்திருக்கிறார்...
டீக்கான கோட் சூட்
விலை உயர்ந்த வாட்ச்
ரேபான் கூலிங் கிளாஸ்
நுனிநாக்கு ஆங்கிலம்
பிராண்டட் ஷூ
அவ்வப்போது சிணுங்கிடும் பிளாக்ஃபெர்ரி...
நிறைய பேசினோம்
ஒபாமா
உலகப் பொருளாதாரம்
ரவா லட்டு செய்முறை
பிஸ்ஸா நல்லதா
உயரும் டாலர் மதிப்பு....
பள்ளி நாட்களில் தொலைத்த
என் நண்பன் 'முருகேசு'வை
தேடிக் கொண்டேயிருந்தேன்
அவர் கிளம்பும் வரை....
கிளம்புகையில் மூக்குசளியை
கையால் துடைத்து
அநிச்சையாய் மேஜைக்கடியில் தடவினார்.....
'முருகேசு' என்று கட்டியணைத்துக் கொண்டேன்!!
செல்பேசியில் சிக்கனமாய்
"ஈவினிங் ஷாப்பிங் போலாமா?"
என்று குறுஞ்செய்தி
அனுப்பும் மனைவியிடம்
எப்படி காட்டுவேன்
லே-ஆஃப் லெட்டரை??
அவ்வையாரின் ஆத்திச்சூடி
பாரதியாரின் பாப்பா பாட்டு
கம்பரின் ராமாயணம்
அகநானூறு
புறநானூறு
ஜெயகாந்தன்
ஞானக்கூத்தன்
புதுமைப் பித்தன்
சுஜாதா
எல்லோரையும் நாளையிலிருந்து படிக்கின்றேன்,
இப்போது அவசரமாய் படித்து விடுகிறேன் குமுதம் - 'லைட்ஸ் ஆன்'!!!
இங்கே க்ளிக்கவும்: தூக்கம் தொலைத்த இரவுகளில் எழுதிய கவிதைகள் - Part 1
இதற்கு வரும் பின்னூட்டங்களைப் பொறுத்தே, அதாவது எத்தனை பின்னூட்டம் வருகிறதோ அத்தனை நாட்கள் கழித்து அடுத்த செட் கவிதைகள் வெளிவரும்.. so உங்கள் தலைவிதி உங்கள் கையில் :-)))
Thursday, May 17, 2012
பழூர் காராச்சேவு - 5/16/2012
இது மட்டுமல்ல, இன்னும் நிறைய விஷயங்களில் அமெரிக்கா நமக்கு நேரெதிர்தான். சாலையில் வலது பக்கம் பயணிப்பது (நாம் இடது பக்கம் - keep left), கரண்ட் சுவிட்ச் மேலே இழுத்தால் ஆன் (கீழே ஆஃப்).
சாலையில் வலதுபக்கம் பயணிப்பது அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான நாடுகள் வலதுபக்க பயணம்தான். இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற ஒருசில நாடுகளில் மட்டுமே இடதுபக்க பயணம். இதற்கு ஒரு பெரிய காரணம் உள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அந்நாளில் 6 முதல் 8 குதிரைகள் கூடி இழுக்கக்கூடிய பெரிய குதிரை வண்டிகளை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர் இடது பக்க கடைசி குதிரையில் அமர்ந்து வண்டியை ஓட்டும்போது எல்லா குதிரைகளையும் வலது கையிலுள்ள சாட்டையால் கட்டுப் படுத்துவார். வண்டியில் ஓட்டுநருக்கு இருக்கை இருக்காது.
அவ்வாறு இடது பக்க குதிரையில்(left most horse) உட்கார்ந்து ஓட்டுபவருக்கு எதிர்ப்புறம் வரும் வாகனங்கள் இடது புறம் வந்தால், வலப்புறம் செல்பவர் குதிரைகளை கட்டுப் படுத்தவும் அவரது கண்பார்வையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதற்கும், இடித்து விடாமல் ஓட்டவும் வசதியாக இருக்கும். இப்படி ஆரம்பித்ததுதான் வலப்பக்க பயணம்.
ஆஸ்திரேலியா என்பதை ஏன் ஈழத்தமிழில் அவுஸ்திரேலியா என்று கூறுகின்றனர்? கதைப்பது = பேசுவது, எங்கடே = எம் என இம்மாதிரி ஈழத்தமிழ் வார்த்தைகளுக்கு அகராதி ஏதெனும் உள்ளதா?
handloom என்றால் கைத்தறி என்று தெரியும், powerloom என்பதற்கு தமிழ்ச்சொல் தெரியுமா? விடை: பொறித்தறி!! சுஜாதா வழங்கிய கலைக்களஞ்சியம் ஒன்றில் படித்தது (கற்றதும் பெற்றதும் - 2003).
எனது மகன் நன்றாக வாசிப்பான் - இந்த வாக்கியத்தில் உள்ள பிழை என்ன?? 'எனது மகன்' என்று வரக்கூடாது, தொல்காப்பிய இலக்கண விதிகளின்படி, உயர்தினையின் முன் -அது- என வரக்கூடாது. 'எனக்கு மகன்' என்று சொல்லலாம். எனது வீடு என்று சொல்லலாம், எனது மகன் எனக் கூடாது. இது கலைஞர் எழுதிய தொல்காப்பிய விளக்கத்தில் இருந்து எடுத்தாளப் பட்டது.
இன்னொரு குறிப்பு: வாழ்த்துக்கள் - தவறான பிரயோகம், வாழ்த்துகள் என்பதே சரி!!
களவும் கற்று மற - என்ற ஒரு பழமொழியை அடிக்கடி பலர் கூற கேட்டு இருப்பீர்கள். ஆனால் சரியான பழமொழி அதுவல்ல. சரியான பழமொழி: களவும், கத்தும் மற - இதுவே சரி. களவு - திருடுவது, கத்து - புறங்கூறுதல். திருடுவதையும், பிறர் மேல் புறங்கூறுதலையும் (பழிச்சொல்) மறந்து விடு என்பதை அர்த்தம். இது ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது.
ஐபிஎல்லில் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு வருமா? நம்மவர்கள் எப்போதுமே - சாகும் நேரத்தில் சங்கரா, சங்கரா - என்றே விளையாடி அடுத்த சுற்றுக்கு வருவர். அப்படி இம்முறையும் வந்தால் செயிண்ட் லூவிஸ் பிள்ளையாருக்கு, பிஸ்ஸா (pizza) படைப்பதாய் கனவில் வேண்டிக் கொண்டிருக்கிறேன்!!!
அது சரி, இந்த பதிவிற்கு ஏன் பழூர் காராச்சேவு என்று பெயர்?? பதிவர்கள் அவியல், குவியல், ஒயின்ஷாப், சாண்ட்வெஜ் என்று எல்லா பக்கமும் கவர் செய்து விட்டதால் காராச்சேவு என்று எனக்கு பிடித்த ஒரு பதார்தத்தையும், பழூர் என்பது எனது ஊர் ஆதலால் அதனையும் சேர்த்து விட்டேன்!!!
Friday, May 13, 2011
தமிழகத் தேர்தல் 2011 - சில செய்திகளும், சில கமெண்ட்சும்
கமெண்ட்: கோவாலு, உங்க கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லியா? உங்கள கடல்ல தள்ளினாக் கூட கட்டுமரமா மிதப்பீங்க போலிருக்கே!!
அதிமுக கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது.
வடிவேலு: அப்ப நானாத்தான் மாட்டிட்டனா??
கொளத்தூரில் முடிவு தள்ளிவைப்பு, மெஷின் கோளாறால் இழுபறி
ஸ்டாலின்: நமக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்குதோ??
கலைஞர்: தமிழக மக்கள் எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து விட்டார்கள்
அப்ப இனிமே இளைஞன், பொன்னர் சங்கர் மாதிரி நிறைய படம் கொடுப்பீங்க போலிருக்கே, பாவம்தான் நாங்க!!
தேமுதிக 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர் கட்சியாகிறது.
ரஜினி அப்பவே தமிழக மக்களை இனிமே ஆண்டவனாலும் காப்பாத்த முடியாதுன்னு இதை நினைச்சுத்தான் சொன்னாரோ? என்ன கொடுமை சரவணன் இது??
சட்டசபை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்படும்
ஆரம்பிச்சீட்டிங்களா? இன்னும் ரிசல்ட்டே முழுசா வரலையே?
Monday, January 17, 2011
18+ படங்கள் மற்றும் சில பின்குறிப்புகள்..
18+ பதிவு போடுவது பற்றி இங்கு ஒரு பெரிய விவாதமே நடந்து வருகிறது. சிலர் இந்த மாதிரியெல்லாம் பதிவிடக் கூடாது, ஏனென்றால் இணையம் சிறுவர்களுக்கு மிக எளிதாய் கிடைக்கிறது, அவர்கள் இம்மாதிரி பதிவுகளை எல்லாம் படித்து கெட்டுப் போய் விடுகிறார்கள் என்கின்றனர். 18+ என்று பதிவிடுவதே ஒரு நிறைய ஹிட் கிடைக்க உதவும் மளிவான விளம்பரம்தான் என்று குறை கூறுகின்றனர்.
இன்னும் சிலர், அம்மாதிரியெல்லாம் இல்லை. சிறுவர்களை இணையவெளியில் உலவ விடும்போது கண்காணிக்க வேண்டும், இல்லாவிட்டில் இணைய இணைப்பே கொடுக்காதீர்கள் என்கின்றனர். மேலும் இக்காலத்து சிறுவர்கள் நம்மை விட விவரமாக, உலக விவகாரங்களை தெரிந்து வைத்திருக்கின்றனர். நாம் பதிவு போடாவிட்டாலும், கூகுளில் போய் தேடி எளிதாய் ஆபாச வலைத்தளங்களுக்கு அவர்களுக்கு செல்லத் தெரியாதா என்கின்றனர்.
கருத்துச் சுதந்திரம் பெருகிவரும் இவ்வேளையில் இவற்றையெல்லாம் எப்படி கட்டுப்படுத்துவது என்று யோசிப்பதே தவறு. உலகம் தன்னைத்தானே பார்த்து, ரசித்து, திருத்தி கொண்டு முன்னேறலாம், இல்லையெனில் கலாச்சாரம் சற்று மாறுபடலாம்.
இப்போது 18+ படங்களுக்கு செல்வோமோ, இதை கற்பிக்கும் நோக்கத்தில்தான் இங்கே கொடுத்திருக்கிறேன், இதைப் பார்த்து ஆபாசம் என்று துள்ளிக் குதிக்க நினைப்பவர் இப்போது ஒதுங்கிக் கொள்ளலாம்.
.
.
.
பின்குறிப்பு: சரி, 18+ படங்களை பார்த்து ரசித்தீர்களா? ஏதேனும் புதிதாய் கற்றுக் கொண்டீர்களா? மீண்டும் இன்னொரு 18+ பதிவோடு நாளை சந்திப்போமா?? :-))
ஓட்டு போடுவது பற்றி விரிவாக, சுருக்கமாக, மத்யமாக தமிழ்மணம், தெலுகுமணம், கன்னடாமணம், இண்ட்லி, இட்லி, தோசையிலும், பிபிசி, சன் டிவி, விஜய் டிவியிலும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர். இருந்தாலும், உங்க ஓட்டை உங்க இஷ்டப்படி பயன்படுத்தலாம், ஏதோ பாத்துச் செய்ங்க மக்கா!!
Friday, January 14, 2011
எனது 150வது பதிவு: படித்தேன், ரசித்தேன்: கேபிள், ஜாக்கி, பிலாசபி & சுஜாதா
இவ்வுளவு காலம் (6 வருடங்கள்) நான் வலைப்பதிவுகளில் நீடித்திருப்பதே, ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியம்தான். சில ஆண்டுகளுக்கு முன் தூக்கம் தொலைத்த ஓர் இரவில் நான் எழுதிய பின்வரும் கவிதை இதற்கான காரணத்தைச் சரியாக பிரதிபலிக்கிறது என்றே இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
![]() | வலைப்பதிவுகளிலிருந்து மீளலாமென்றுதான் நினைக்கிறேன் ஒவ்வொரு பின்னூட்டமிடும் போதும்... இ-கலப்பையை கணிணியில் பார்க்கும் போதெல்லாம் குறுகுறுக்கிறது பாழாய்ப் போன மனசு... ஒவ்வொரு இடுகைக்கும் வரும் ஒன்றிரண்டு பின்னூட்டங்களும், என்றாவது ஒருநாள் நட்சத்திரமாய் தமிழ்மணத்தில் வலம்வரும் நப்பாசையும், இருக்கும்வரை இருந்தே தீருவேன்... ஏனென்றால் நண்பர்களே, போதை மதுவிலும், மாதுவிலும் மட்டுமல்ல... |
படித்தேன், ரசித்'தேன்'
சுஜாதா தேசிகன்: கை நிறைய காண்டம்
6 வருடங்களுக்கு முன்பு எனக்கு தமிழ் மணத்தையும், வலைப் பதிவுகளையும் அறிமுகப் படுத்தியவர், சுஜாதாவின் சீடர். இப்போது பெயரை குருவுக்கு செய்யும் மரியாதையாய் சுஜாதா தேசிகன் என்று மாற்றி இருக்கிறார். புதிய தளம் பிரமாதமாய் இருக்கிறது. இவரது அனுபவங்களை சுவாரசியமாய் நகைச்சுவையுடன் எழுத்தில் வடிப்பதில் வல்லவர். மற்றுமோர் வெளிநாட்டு வேலை அனுபவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். கை நிறைய கிடைத்த காண்டத்தை என்ன செய்தார்/எப்படி செலவழித்தார் என்று சொல்லவே இல்லை!!
ஜாக்கி சேகர்: தமிழக போலிசிடம் மாட்டினால் என்ன செய்யவேண்டும்?
ஜாக்கிசானின் ரசிகர், கடலூரில் இருந்து சென்னைக்கு வந்து இங்கு கலக்கிக் கொண்டிருப்பவர். வெகு இயல்பாய், ரசிக்கக் கூடிய சில எழுத்துப் பிழைகளுடன் இவர் எழுதும் சாண்ட்விச் பதிவுகளின் ரசிகன் நான். இவர் இங்கே எழுதும் நான்வெஜ் ஜோக்குகள் எனக்குப் பிடிக்கும் என்று சொல்ல விரும்ப வில்லை. இவரிடமிருந்து மற்றுமோர் நகைச்சுவை நிஜ அனுபவப் பதிவு இது, நிச்சயம் உங்களுக்கு பயன்படும்.
பிலாசபி பிரபாகரன்: டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்
மனது விட்டு சிரிக்க வைத்த மற்றுமோர் மொக்கை பதிவு. பொங்கல் விடுமுறையிலும் ஓட்டு வாங்கும் வித்தை அறிந்த சாமார்த்தியசாலி!! படித்துப் பாருங்கள், மறக்காமல் டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுங்கள்!!
கேபிள் சங்கர்: சினிமா வியாபாரம் தொடர்
திரைப்பட விமர்சனங்களால் பிரபலமானவர், இவரது பதிவை படித்துவிட்டுத்தான் சமீப காலங்களில் படத்துக்குச் செல்கிறேன். சினிமா தொழிலைப் பற்றி இவர் எழுதி வெளிவந்த சினிமா வியாபாரம் என்ற புத்தகமும், வலைப் பதிவுகளும் சூப்பர் ஹிட். இப்போது இரண்டாம் பாகமாய் இவரும், நண்பர்களும் எடுத்து நடத்திய தியேட்டர் அனுபவங்களை பற்றி எழுதி வருகிறார். சுவாரசியமாய் இருக்கிறது. நிச்சயமாய் ஆர்யா, சந்தானம் காம்பினேஷனில் இதையே ஒரு திரைப்படமாக்கும் சாத்தியம் உள்ள தொடர் & கரு. கேபிளாரே இதை எடுப்பாரா, காலம்தான் பதில் சொல்லும்!!
இவ்வளவு படித்த பிறகும், கொசுவத்தி வேண்டும் என்கின்ற பொறுமைசாலிகளுக்கு எனது 100வது பதிவு கொசுவத்தி இங்கே!!
ஓட்டு போடுவது பற்றி விரிவாக, சுருக்கமாக, மத்யமாக தமிழ்மணம், தெலுகுமணம், கன்னடாமணம், இண்ட்லி, இட்லி, தோசையிலும், பிபிசி, சன் டிவி, விஜய் டிவியிலும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர். இருந்தாலும், உங்க ஓட்டை உங்க இஷ்டப்படி பயன்படுத்தலாம், ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை.. A, B, C, D என்று கமெண்ட்டாவது போட்டுச் செல்லுங்கள். ஏதோ பாத்துச் செய்ங்க மக்கா!!
பொங்கல் பண்டிகை: இந்த பதிவை படிக்காதீங்க..

நன்றி: photobucket.com
தமிழக அரசு தைத் திருநாளை புத்தாண்டு பிறப்பாக கொண்டாடுமாறு கூறியுள்ளது, ஆனாலும் மக்கள் சித்திரை திருநாளைத்தான் புத்தாண்டாய் கொண்டாடும் மனநிலையில் உள்ளனர். மேலும் நமது பாரம்பரிய பண்டிகைகளை நாம் கொண்டாடும் விதமும், மனநிலையும் மாறி வருகிறது. ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் அளவுக்கு நாம் தமிழ் புத்தாண்டையோ, பொங்கலையோ கொண்டாடுவதில்லை. பெரும்பாலும் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதே நம் பண்டிகைக் கால வேலையாக உள்ளது.
எங்கள் அபார்ட்மெண்ட்டில் சற்று பரவாயில்லை. பொங்கல் விளையாட்டுக்கள் சிலவற்றை குழந்தைகளுக்காக வருடா வருடம் நடத்துகின்றனர். உறி அடித்தல், கோலப்போட்டி, மாறுவேடம், ஸ்லோ சைக்கிள் ரேஸ் போன்ற போட்டிகள் இந்த வருடமும் நடக்கின்றன.
கிராமங்களில் முன்பெல்லாம் மார்கழி மாதம் முழுதும் வாசலில் சாணம் தெளித்து கலர்பொடிகள் நிறைத்து கோலம் போடுவர். நடுவில் சாணம் சிறிது வைத்து அதன்மேல் பரங்கிப்பூ வைத்து அழகு படுத்துவர், பொங்கலோடு இந்த வைபவம் நிறைவு பெறும். இப்போது இந்த பழக்கம் குறைந்துவிட்டது.
பொங்கலுக்கு வரும் திரைப்படங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படங்கள் காவலன், ஆடுகளம், சிறுத்தை. இதைத் தவிர வேறு பெரிய படங்கள் வெளியாகிறதா என்று தெரியவில்லை. டிரெய்லர் பார்த்த போது, ஆடுகளம் ஹிட் ஆகலாம், காவலன் சுமாராய் போகலாம், சிறுத்தை: ப்ளாப் ஆகலாம் என்று கணிக்கிறேன், ஒரு வாரத்தில் தெரிந்து விடும், பார்ப்போம்!!
இந்த வருட புத்தகத் திருவிழாவில் சுய முன்னேற்ற உதவும் புத்தகங்கள் நிறைய விற்பனை ஆகிறதாம். அதிலும் விஜய் டிவி புகழ் கோபிநாத்தின் #இந்த புத்தகத்தை படிக்காதீங்க# என்ற புத்தகம் நிறைய விற்கிறதாம். அதன் பாதிப்பில்தான் இந்த பதிவின் தலைப்பு.. ஹிஹி
ஓட்டு போடுவது பற்றி விரிவாக, சுருக்கமாக, மத்யமாக தமிழ்மணம், தெலுகுமணம், கன்னடாமணம், இண்ட்லி, இட்லி, தோசையிலும், பிபிசி, சன் டிவி, விஜய் டிவியிலும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர். இருந்தாலும், உங்க ஓட்டை உங்க இஷ்டப்படி பயன்படுத்தலாம், ஏதோ பாத்துச் செய்ங்க மக்கா!!
Tuesday, December 21, 2010
அலைவரிசை அமைச்சர் - ஸ்பெசல் கார்ட்டூன்

வாசகர் கரெக்சன்: அமைச்சரல்ல, முன்னாள் அமைச்சர் :-)
அவியல் – 21/12/2010: டெண்டுல்கர், சாரு நிவேதிதா & கடலை சட்னி

சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழாவில் மிஸ்கின் நந்தலாலாவை பற்றி 20 நிமிடம் பேசிவிட்டு, போகிற போக்கில் சாருவின் தேகம் நாவலை சரோஜாதேவி புத்தகம் போலிருக்கிறது என்று பேசிவிட்டு சென்றது சாருவிற்கும், அவரது ரசிகர்களுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மிஸ்கின் செய்தது தவறுதான்.
சாரு தனது வலைத்தளத்தில் நந்தலாலாவில் இளையராஜா இசை பெரும்பாலான இடங்களில் கேவலமாய் இருந்தது என்று எழுதியதாகவும், அதனை மிஸ்கின் எடுத்து விடுமாறு சொன்னதால், வலைத்தளத்தில் இருந்து எடுத்து விட்டேன் என்றும் எழுதியிருக்கிறார். ஏன் எடுத்தீர்கள் சாரு? நீங்கள்தான் உங்களது எழுத்தில் எவருக்காகவும், எதற்காகவும் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன் என்று இருப்பவராயிற்றே? உங்களது கருத்தை எதற்காக மிஷ்கினுக்காகவும், நந்தலாலா என்ற நல்ல படத்திற்காகவும் மாற்றிக் கொண்டீர்கள்? இதையே அடுத்தவர்கள் சமரசம் செய்து கொண்டால் உங்களது வலைத்தளத்தில் கிழித்து விடுவீர்கள் அல்லவா? என்னாச்சு சாரு சார்??
கடலை சட்னி சாப்பிட்டு இருக்கிறீர்களா? பச்சை வேர்க் கடலையை வறுத்து, உப்பு, புளி, மிளகாய் வைத்து அரைத்து சப்பாத்திக்கோ, இட்லிக்கோ தொட்டுக் கொள்ளலாம், சுவையாக இருக்கும், ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள், பிடித்து விடும்!!
Sunday, December 19, 2010
2010: எனக்குப் பிடித்த 10 திரைப்படங்கள்..

இந்த வருடத்தில் நான் பார்த்து, ரசித்த எனக்குப் பிடித்த பத்து திரைப்படங்கள்:
1. மதராச பட்டிணம்
2. எந்திரன்
3. பாஸ் (எ) பாஸ்கரன்
4. அங்காடித் தெரு
5. விண்ணைத் தாண்டி வருவாயா
6. சிங்கம்
7. ஆயிரத்தில் ஒருவன்
8. ராவணன்
9. நந்தலாலா
10. மைனா
2010 தமிழ் சினிமாவிற்கு நல்ல வருடமென்றே நினைக்கிறேன், பெரிய பட்ஜெட் எந்திரனும், சிறிய பட்ஜெட் மைனா, அங்காடித் தெரு, நந்தலாலா போன்ற வித்தியாசமான திரைப்படங்களும் வந்து வெற்றி பெறுவதும்(?) ஆரோக்கியமான விஷயமல்லவா!!
Sunday, December 12, 2010
வரலஷ்மி நமோஸ்துதே என வேண்டவும் கூச்சமாயிருக்கிறது..

க
ட
அ
ஞா
சா
என எழுத்துக்கள்
கலைந்து கொண்டே இருக்கின்றன
எதை எழுதுவது
எதை விடுவிப்பது
எதை உதறுவது
என்று யோசிப்பதிலேயே
பொழுதுகள் கழிவதால்
கவிதை ஏதும் வரவில்லை..
வரலஷ்மி நமோஸ்துதே என
வேண்டவும் கூச்சமாயிருக்கிறது..
சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள்
சடுதியில் திரும்பி வருகிறேன்.
ஓர் நல்ல கவிதை
அடுத்த நொடிப்பொழுதில் கூட
உருப் பெறலாம்!!
Monday, December 06, 2010
கொஞ்சம் கவிதை, கொஞ்சம் அரசியல்..
கண்ணாடிச் சுவர்களில்
வழிந்தோடும்
மழைத்துளிகளுக்குத் புரியுமா
பொருளாதாரா நெருக்கடியும்
அதனால் ஆட்குறைப்புக்காட்பட்ட
துப்புரவுத் தொழிளாலர்களின் வலியும்?

ஸ்பெட்க்ரம் ஊழலிலினால் திமுகவின் மதிப்பு மக்களிடையே சரிந்து வருவதாகக் கூறுகின்றனர். ஆனால் இதற்கு முன்பிலிருந்தே திமுகவின் மதிப்பு மக்களிடம் சரிந்து வருகிறது. இலவச டிவியும், கேஸ் அடுப்பும் மக்களை கொஞ்சம் சாந்தப் படுத்தியிருந்தாலும் நிறைய அதிருப்தி இந்த அரசாங்கத்தின் மேல் உள்ளது.
நூறு நாள் வேலைத்திட்டம் காரணமாய் / ஒரு ரூபாய் அரிசி திட்டத்தினால், எங்கள் கிரமாத்தில் கூலி/விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பது கடினமாயுள்ளது. வருபவர்களும் அநியாய கூலி கேட்கின்றனர். முன்பு 100 ரூபாய், இப்போது 200 ரூபாய். இதனால் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்குபவர்களும், அந்த அரிசி தரமானதாய் இல்லை என்று கூறுகின்றனர். ஒரு சில நகரங்களைத் தவிர, பெரும்பாலான இடங்களில் அரிசி தரமுடையதாய் இல்லை.
நிறைய இலவசங்கள் கொடுப்பதன் மூலம், தேவையான முன்னேற்றப் பணிகளை மேற்கொள்ள நிதிவசதி இல்லை. இப்போது மழையினால் பாதி தமிழகம் தவிக்கிறது, சரியான மழைநீர் வடிகால் வசதி சென்னையிலாவது உள்ளதா?
மின்சாரம் கேட்கவே வேண்டாம், சென்னை மக்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களும் மானாவாரியாக பாதிக்கப் பட்டுள்ளன.
குடும்ப அரசியல், மீடியாவை மொத்தமாக ஆக்ரமித்துள்ளது, என்கேபி ராஜா போன்றோரின் அயராத சமூகப் பணி, கனிமொழி, ராஜா, ராசாத்தி அம்மாளின் நீரா ராடியுவுடனான டெலிபோன் பேச்சுக்கள் என படு வலிமையான முட்கள் திமுக முன் குவிந்துள்ளன, ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க ரொம்ப கஷ்டப் பட வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்!!
Sunday, December 05, 2010
தேவர்மகன்: நிறைய மழை & கொஞ்சம் தேநீர்
இஞ்சி இடுப்பழகி..
மஞ்ச சிவப்பழகி..
கள்ள சிரிப்பழகி..
மறக்க மனம் கூடுதில்லையே!!
மென்பொருளாளனின் கவிதை

வழமையான ஓர் ஞாயிறு பிற்பொழுதில்
மழைச் சாறல்கள் தெளிக்கும்
எம் வீட்டு சாளரத்திலிருந்து
தோட்டத்தையும்,
மழைத்துளிகள் சொட்டும் மரங்களையும்,
மலர்களோடு உறவாடும் செடிகளையும்
அதிலமர்ந்து விளையாடிக் களிக்கும் பறவைகளையும்
சூடான ஆவி பறக்கும் தேநீரை அருந்திக் கொண்டே
பார்த்து ரசிக்கும் போதும்
தோணுவதேயில்லை
பணிக்குச் செல்லும் மனைவிக்கும் ஞாயிறு ஓய்வுநாளே என்பது!!!
ஆரோசிக்ஹா – பாண்டிச்சேரி வாசனை

3 மணி நேரம் வரை எரியும் நாகலிங்க பூ வாசனை கொண்ட ஊதுவத்திகள், ரோஜா, மல்லிகை, காபி மணம் கொண்ட ஊதுவத்திகள், ‘சர்ப்பரைஸ்’ என்ற பெயரில் என்ன வாசனை என்று பிரித்து பற்ற வைற்றால்தான் கண்டுபிடிக்க முடியும் என்ற வகை ஊதுபத்திகள் என்று நிறைய வகையான வாசனையாவியங்கள் உள்ளன.
கார்களில் வைக்கக்கூடிய காற்று புத்துணர்ச்சி அளிப்பான்கள், வீட்டில் பீரோ, துணிகளில் வைக்கக்கூடிய வாசனை புத்துணர்ச்சி அளிப்பான்கள் (Air Freshener types) என்று விதவிதமாய் நிறைய உள்ளன.
இவை தவிர்த்து ஊதுவத்தி ஸ்டாண்டுகளும், அலங்கார விளக்குகள் மற்றும் சில வகையான வாசனைப் பொருட்களும், வாசனை திரவியங்களும் கிடைக்கின்றன.
வகை, வகையாய் எங்களுக்கும், உறவினர்களுக்கும் வாங்கிக் கொண்டு காரில் ‘கேனல் ஸ்ட்ரீட்டில்’ திரும்பும் போது பாண்டிச்சேரியின் மணம் எங்களுக்கு நிரம்பவே பிடித்திருந்தது!!!
Monday, November 22, 2010
எனக்குப் பிடித்த பத்து நடிகர்களின் பத்து திரைப்படங்கள்..

நான் உலகத் திரைப்படங்களையோ, வேற்று மொழி திரைப்படங்களையோ நிறைய பார்த்தவன் இல்லை. மேட்ரிக்ஸ் படமே எனக்கு விஜய் டிவியில் தமிழில் பார்த்த பிறகுதான் பாதி புரிந்திருக்கிறது :-)
1. கமல் - அவ்வை சண்முகி
2. ரஜினி - எந்திரன்
3. சூர்யா - வாரணம் ஆயிரம்
4. ஆர்யா - மதராச பட்டினம்
5. வடிவேலு - வின்னர்
6. ஐஸ்வர்யா ராய் - ராவணன்
7. விக்ரம் - சாமி
8. திரிஷா - அபியும் நானும்
9. ஜாக்கிசான் - Rush Hour
10. அமிதாப் பச்சன் - சீனி கம்
இதை சாக்காக வைத்து பதிவர்கள் தொடர் பதிவு போட்டும், அனானிகள் இஷ்டத்திற்கு பின்னூட்டம் போட்டும் (கலாய்க்கலாம், ஆனால் நாகரிகமாக) கும்மியடிக்கலாம்!!! :-))
Sunday, November 21, 2010
சென்னை பிசாஹட்டின் புதிரான போக்கு..

Saturday, November 20, 2010
விஜய் டிவியின் சுவாரசியமான நிகழ்ச்சிகள்..

எனக்கு பிடித்த சில நிகழ்ச்சிகள்
- அது, இது, எது?
- ஒரு வார்த்தை ஒரு லட்சம்
- நீயா நானா?
- சூப்பர் சிங்கர் (இதில் வரும் குட்டிப்பையன் ஸ்ரீகாந்தை எனக்கு நிறைய, இயல்பான இனிப்பான பாடகர் மனோவை இன்னும் நிறையவும் பிடிக்கும்.)
- முன்பு தமிழ் பேச்சு என் உயிர் மூச்சு என்று ஒரு நிகழ்ச்சி வந்தது, இப்போது ஒளிபரப்பாகிறதா என்று தெரியவில்லை.
சன் டிவிக்கு சரியான போட்டியை அளிப்பது விஜய்தான் என்பது பொய்யில்லை அல்லவா?
Tuesday, August 24, 2010
கணவன் மனைவி விவாதத்தில் வெல்வது யார்?

Tuesday, August 10, 2010
கிரிக்கெட்: IND vs NZ - இன்றைய போட்டியில் யாரெல்லாம் கலக்குவார்கள்?
ஒருவழியாய் டெஸ்ட் தொடரை கஷ்டப்பட்டு இந்தியா சமன் செய்து விட்டது. ஆனாலும் தொடர் முழுதும் இலங்கை கையே ஓங்கியிருந்ததை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இப்போது ஒருநாள் தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கிறேன்.

நியுசிலாந்து அணியில் வெட்டோரி, மெக்கல்லம், ரைடர் போன்றோர் இல்லை, கிட்டத்தட்ட அனுபவமில்லா ஒரு கத்துக்குட்டி அணி போலவே காட்சியளிக்கிறது. எனவே இந்தியா, இலங்கை இறுதிப் போட்டியை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
இந்திய அணியில் சேவக் ஏற்கனவே பயங்கர ஃபார்மில் இருப்பதால், ஒருநாள் தொடரில் தொடர்ந்து கலக்குவார் என நினைக்கிறேன். இன்றைய போட்டியில் சேவக், ஓஜா, ரெய்னா, ரோகித் சர்மா(?) போன்றோர் ஜொலிப்பார்கள் என நினைக்கிறேன். சேவக் ஒரு டபுள் செஞ்சுரி அடிச்சா நல்லாயிருக்கும். முதலில் பேட்டிங் எடுத்தால் ஜெயிக்க நிறைய வாய்ப்பு. பார்ப்போம். நீங்க என்ன நினைக்கிறீங்க?? இந்தியா ஜெயிச்சுடுமா? யார் மேன் ஆப் தி மேட்ச்?? சொல்லுங்களேன் J