Friday, January 14, 2011

எனது 150வது பதிவு: படித்தேன், ரசித்தேன்: கேபிள், ஜாக்கி, பிலாசபி & சுஜாதா

இவ்வாறான பதிவுகளின் (100, 200வது பதிவு) வழமையாய் கொசுவத்தி சுத்தாமல், நான் சமீபத்தில் படித்து, ரசித்த சில வலைப்பதிவுகளை பற்றி எழுதியிருக்கிறேன். நீங்களும் படித்து ரசியுங்கள். கீழே வரும் நான்கு பதிவர்களுமே பெயருக்கு முன் அடைமொழி வைத்திருப்பது தற்செயல்தான் எனவே நம்ப விரும்புகிறேன்!!




இவ்வுளவு காலம் (6 வருடங்கள்) நான் வலைப்பதிவுகளில் நீடித்திருப்பதே, ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியம்தான். சில ஆண்டுகளுக்கு முன் தூக்கம் தொலைத்த ஓர் இரவில் நான் எழுதிய பின்வரும் கவிதை இதற்கான காரணத்தைச் சரியாக பிரதிபலிக்கிறது என்றே இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.








வலைப்பதிவுகளிலிருந்து
மீளலாமென்றுதான் நினைக்கிறேன்
ஒவ்வொரு பின்னூட்டமிடும் போதும்...
இ-கலப்பையை கணிணியில்
பார்க்கும் போதெல்லாம் குறுகுறுக்கிறது
பாழாய்ப் போன மனசு...
ஒவ்வொரு இடுகைக்கும் வரும்
ஒன்றிரண்டு பின்னூட்டங்களும்,
என்றாவது ஒருநாள் நட்சத்திரமாய்
தமிழ்மணத்தில் வலம்வரும் நப்பாசையும்,
இருக்கும்வரை இருந்தே தீருவேன்...
ஏனென்றால் நண்பர்களே,
போதை மதுவிலும், மாதுவிலும் மட்டுமல்ல...






படித்தேன், ரசித்'தேன்'

சுஜாதா தேசிகன்: கை நிறைய காண்டம்


6 வருடங்களுக்கு முன்பு எனக்கு தமிழ் மணத்தையும், வலைப் பதிவுகளையும் அறிமுகப் படுத்தியவர், சுஜாதாவின் சீடர். இப்போது பெயரை குருவுக்கு செய்யும் மரியாதையாய் சுஜாதா தேசிகன் என்று மாற்றி இருக்கிறார். புதிய தளம் பிரமாதமாய் இருக்கிறது. இவரது அனுபவங்களை சுவாரசியமாய் நகைச்சுவையுடன் எழுத்தில் வடிப்பதில் வல்லவர். மற்றுமோர் வெளிநாட்டு வேலை அனுபவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். கை நிறைய கிடைத்த காண்டத்தை என்ன செய்தார்/எப்படி செலவழித்தார் என்று சொல்லவே இல்லை!!




ஜாக்கி சேகர்: தமிழக போலிசிடம் மாட்டினால் என்ன செய்யவேண்டும்?

ஜாக்கிசானின் ரசிகர், கடலூரில் இருந்து சென்னைக்கு வந்து இங்கு கலக்கிக் கொண்டிருப்பவர். வெகு இயல்பாய், ரசிக்கக் கூடிய சில எழுத்துப் பிழைகளுடன் இவர் எழுதும் சாண்ட்விச் பதிவுகளின் ரசிகன் நான். இவர் இங்கே எழுதும் நான்வெஜ் ஜோக்குகள் எனக்குப் பிடிக்கும் என்று சொல்ல விரும்ப வில்லை. இவரிடமிருந்து மற்றுமோர் நகைச்சுவை நிஜ அனுபவப் பதிவு இது, நிச்சயம் உங்களுக்கு பயன்படும்.




பிலாசபி பிரபாகரன்: டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்


மனது விட்டு சிரிக்க வைத்த மற்றுமோர் மொக்கை பதிவு. பொங்கல் விடுமுறையிலும் ஓட்டு வாங்கும் வித்தை அறிந்த சாமார்த்தியசாலி!! படித்துப் பாருங்கள், மறக்காமல் டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுங்கள்!!




கேபிள் சங்கர்: சினிமா வியாபாரம் தொடர்


திரைப்பட விமர்சனங்களால் பிரபலமானவர், இவரது பதிவை படித்துவிட்டுத்தான் சமீப காலங்களில் படத்துக்குச் செல்கிறேன். சினிமா தொழிலைப் பற்றி இவர் எழுதி வெளிவந்த சினிமா வியாபாரம் என்ற புத்தகமும், வலைப் பதிவுகளும் சூப்பர் ஹிட். இப்போது இரண்டாம் பாகமாய் இவரும், நண்பர்களும் எடுத்து நடத்திய தியேட்டர் அனுபவங்களை பற்றி எழுதி வருகிறார். சுவாரசியமாய் இருக்கிறது. நிச்சயமாய் ஆர்யா, சந்தானம் காம்பினேஷனில் இதையே ஒரு திரைப்படமாக்கும் சாத்தியம் உள்ள தொடர் & கரு. கேபிளாரே இதை எடுப்பாரா, காலம்தான் பதில் சொல்லும்!!




இவ்வளவு படித்த பிறகும், கொசுவத்தி வேண்டும் என்கின்ற பொறுமைசாலிகளுக்கு எனது 100வது பதிவு கொசுவத்தி இங்கே!!




ஓட்டு போடுவது பற்றி விரிவாக, சுருக்கமாக, மத்யமாக தமிழ்மணம், தெலுகுமணம், கன்னடாமணம், இண்ட்லி, இட்லி, தோசையிலும், பிபிசி, சன் டிவி, விஜய் டிவியிலும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர். இருந்தாலும், உங்க ஓட்டை உங்க இஷ்டப்படி பயன்படுத்தலாம், ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை.. A, B, C, D என்று கமெண்ட்டாவது போட்டுச் செல்லுங்கள். ஏதோ பாத்துச் செய்ங்க மக்கா!!


No comments: