Tuesday, September 19, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 61 to 65

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்

1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40, 41 to 45, 46 to 50, 51 to 55, 56 to 60


61. லிஃப்ட் கொடுத்தவர்கள் - சிறுகதை - அஹமது சுபைர்

நல்ல வேலை கிடைக்க உதவி செய்த கல்லூரி நண்பனையும், நேர்முகத் தேர்வுக்கு லிப்ட் கொடுத்த அறிமுகமில்லாதவரையும் மறக்காத அனுபவக் கதை. "..போடா லூஸு...அவன் முகத்தில முழிச்சதால தான் நான் டெஸ்ட்ல பாசானேன். அவன் முகத்தில முழிச்சாதான் இன்டெர்வியூ நல்லா பண்ண முடியும்..." போன்ற வரிகள் சிரிக்க வைக்கின்றன. கதையின் பின்குறிப்பு மனதைத் தொடுகிறது. சிறுகதை, நெகிழ்வு !!

மதிப்பெண் : 75 / 100

*****

62. ஒரு தலைப்புச் செய்தி - சிறுகதை - நடராஜன் ஸ்ரீனிவாசன்

நக்சலைட் ஒருவனின் நாசவேலைக்கான பயணத்தையும், அவன் மாட்டிக் கொள்வதையும் பற்றிய கதை. வித்தியாசமான கதைக்களம். இருந்தாலும் சற்று அலுப்பு தட்டுகிறது. துரவர், சீருந்து போன்ற தூய தமிழ்(?) வார்த்தைகள் ரசிக்கவும், யோசிக்கவும் வைக்கின்றன. கடைசி வரி நச். சிறுகதை, வித்தியாசம் !!

மதிப்பெண் : 78 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

...இதற்கு முதல் பரிசு கிடைக்கவில்லையெனில்....போட்டி நடுவர்களைச் சந்தேகிப்பதைத் தவிர வேறு வழியில்லை! என் வோட்டு நிச்சயம்!

- SK

*****


63. லிப்ட் கிடைக்குமா மீனாட்சிக்கு? - நிகழ்வு - barath

பாலியல் தொழிலாளி ஒருவளின் குழந்த வரைந்த ஓவியத்தையும், அவர்களின் வாழ்க்கையையும் பற்றிய அற்புதமான படைப்பு. படைப்பின் கருத்தும், எழுதிப்பட்ட விதமும் நெகிழ்வு. "இவர்களில் எத்தனைபேரின் குழந்தைகளுக்கு தந்தை என்ற உறவு கிடைத்திருக்கிறது என்பது தெரியவில்லை." போன்ற வரிகள் சுடுகின்றன. இக்குழந்தைகளுக்கு கல்வியறிவு கிடைக்க சமூகம் உதவ வேண்டுகிறார். நிகழ்வு, சமூக அக்கறை !!

மதிப்பெண் : 85 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

கட்டாயம் வாழ்க்கையில் லிப்ட் கிடைக்க வேண்டியது இவர்களுக்குதான். பெரியோர் செய்யும் தவறின் தண்டணையை இந்த பிஞ்சுகள் சுமக்க வேண்டியுள்ளது மிக கொடுமை.

- அனுசுயா

*****


64. மீட் த பெஸ்ட் ஃப்ரெண்ட் - சிறுகதை - சரவ்

இரு நண்பர்கள் ஓரிடத்தில் (எங்கே என்பது சஸ்பென்ஸ்) சந்தித்து கொள்கிறார்கள். அவர்களின் உரையாடல், அவர்களில் ஒருவர் எப்படி அங்கே வந்தார் என்பதை சுவாரஸ்யமாக(?) சொல்லியிருக்கிறார். பின்புலத்தில் ஒரு ஜொள்ளான விபத்து. க்ளைமேக்ஸ் கலக்கல். படித்ததும், திரும்பவும் ஒருமுறை கதையை படிக்க வைக்கிறார் (வேறு புரிதலோடு). "ஜானத்தன், ‘அதுசரி மாப்ள, நீ எப்டிடா இங்க?.." போன்றவற்றை இரண்டாம் முறையில் நிறையவே ரசிக்கலாம். சிறுகதை, ஜொள் !!

மதிப்பெண் : 80/ 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

ஒரு த்ரில்லர் கதை எழுதலாம்-னு ஆரம்பிச்சேன். கொஞ்சம் ஜொள்ளரா ஆய்டுச்சு!!

- சரவ்

*****


65. மொழிபெயர்ப்பு - சிறுகதை - நடராஜன் ஸ்ரீனிவாசன்

தூய தமிழ் வார்த்தைகளுடன் எளிமையான ஓர் கதை. சேவைப் பொறியாளனான அசோகன், ஓரிரவில் சந்திக்கும் சம்பவம்தான் கதை. "..மீண்டும் அந்த பூனைக் குரல் வந்தது. இல்லை! அது பூனை இல்லை!!அசோகனுக்கு மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன." போன்ற வரிகள் திரில்லை (பயத்தை) அதிகமாக்குகின்றன. எதிர்பாராத, யதார்த்தமான க்ளைமேக்ஸ். சிறுகதை, உருக்கம் !!

மதிப்பெண் : 74 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக இடுங்கள். நன்றி !

*****

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 56 to 60

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்

1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40, 41 to 45, 46 to 50, 51 to 55


56. எங்க வீட்டு ராமாயணம் - சிறுகதை - சிதம்பரகுமாரி

அப்பா வாங்கிக் கொடுத்த புது சைக்கிளில் ஊர் சுற்றப் போகும் சிறு பெண், அவளை சுற்றிய உலகம் என்று செல்லும் கதை. சிறுபெண்ணின் கற்பனையில் வரும் சம்பவங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. விலங்குகளுக்கு பெயர் கொடுத்திருப்பது ரசிக்க வைக்கிறது. "..மேரி தான் சிரிப்பை அடக்கி, அந்த யானையை பார்த்து கேட்டாள், "அடப்பாவி, உன்னோட கல்யாணதுக்குமாடா லேட்டா வருவ?" மாப்பிள்ளை ராமு வெட்கப்பட்டு சிரிக்க.." போன்ற வரிகள் சிரிக்க வைக்கின்றன. ராமாயணம், குழந்தைகளுக்கு !!

மதிப்பெண் : 75 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

keerthana yeppadi vetuku vanda avalukuthan vali theriyathe?mathapadi kathai fulla reeel

- Kavitha

*****

57. பாகிஸ்தானியுடன் ஒரு லிஃப்ட் - அனுபவம் - உமா கதிர்

வேலை தேடி துபாய் சென்ற இடத்தில், ஓர் பாகிஸ்தானியருடன் பயணிக்கிறார். இது தொடர்பான சம்பவங்களும், உரையாடல்களும் அனுபவமாக எழுதியிருக்கிறார். இயல்பாக செல்லும் படைப்பில் "..வந்திட்டேன்னு சொல்றத விட வீட்லருந்து அனுப்பிட்டாங்கன்னுதான் சொல்லணும். வந்த புதிதில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை என்பது தெளிவாகவே புரிந்துவிட்டது.." என்று பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் மாறுவது சற்று நெருடுகிறது. "நீங்க நினக்கற மாதிரி எல்லாரும் அப்படிப்பட்டவங்க கிடையாது. ஒருசிலர் செய்கிற தவறுகளால் ஒட்டுமொத்த பழியும் மக்கள் மேல வந்திடுது." போன்றவை சிந்திக்க வைக்கின்றன. அனுபவம், வாழ்க்கைப் பயணம் !!

மதிப்பெண் : 76 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

தம்பி, நல்ல பதிவு
//தங்கமான மனசு அந்த ரிஸப்ஷனிஸ்ட் பொண்ணுக்கு. //
அப்படியா :)) ??

- சந்தோஷ்

*****

58. பதிவுக்கு மேய்க்கி - பதிவு - bsubra786

லிப்ட் என்ற தலைப்பில் வலைப்பதிவுகளில் இடுகைகள் வந்தால் எப்படியிருக்கும் என படம்பிடித்து காட்டியிருக்கிறார். ஈ.தமிழ், கில்லி, தேர்தல் 2006, தடிப்பையன் போன்ற வலைப்பதிவுகளில் வரும்/வந்த(?) இடுகைகள் என்று சிலவற்றை எழுதியிருக்கிறார். "பிரிட்டிஷாருக்கு பதில் அமெரிக்கர், இந்தியாவை ஆண்டிருந்தால் 'கொஞ்சம் எலிவேட்டர் கிடைக்குமா?' என்று கொங்கு ராசா தலைப்பிருப்பார்...", "இந்த மாதிரி பிற வலையகங்களில் இருந்து உருவி எழுதுவதை லிஃப்ட் எழுத்து என்பார்கள்." என்று நெடுக தொடரும் கிண்டல் பதிவு பற்றிய குழப்பத்தையும்(?) மீறி சிரிக்க வைக்கிறது. எதிர்காலம் 2036க்கும் ஓர் பகுதியில் பயணித்திருக்கிறார். மொத்தத்தில் பதிவுக்கு மேய்க்கி, மெகா புதிர் !!

மதிப்பெண் : 75 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

சரவ், பதிவெழுதி இரண்டு நாளாகியும் எவரும் சீந்தாத நிலையில் நண்பருடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.
'உன் கதை படிச்சேன்... ஒன்னுமே புரியலை'
'ஒரு ரெண்டு பேருக்காவது வெளங்கும்னு தோணுது!?'
'ஒன்று நீ... சரி! அந்த இன்னொருவர் எவர்?'
ஏதோ, மற்றொரு வாசகராவது ரசித்ததில் பெருத்த மகிழ்ச்சி :)

- Boston Bala

*****

59. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - கவிதை - வலைஞன்

வாழ்க்கை மீதுள்ள நம்பிக்கை பற்றிய கவிதை. எளிமையான, சிற்சிறு வரிகள் கவிதைக்கு பலம்.
"எட்டாத தூரத்தில் சிகரம்
எட்டுமென்ற நம்பிக்கை
எனக்குரம்... " போன்றவை ரசிக்க வைக்கின்றன. கவிதை, நம்பிக்கை !!

மதிப்பெண் : 78 / 100

*****

60. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - இருவரிக் கதை - வலைஞன்

இரண்டு வரிகளில் ஒரு அருமையான கதை. க்ளைமேக்ஸ் நச். தேர்ந்தெடுத்த வார்த்தைகள், களம், முடிவு என அசத்துகிறது கதை. நிச்சயம் படிக்க வேண்டும். கதை, கலக்கல் !!

மதிப்பெண் : 84 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக இடுங்கள். நன்றி !

*****

Monday, September 18, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 51 to 55

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்

1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40, 41 to 45, 46 to 50


51. சர்தார்ஜி ஜோக் ஒன்று....கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - ஜோக் - ramkumarn
படு கடியான சிறியதொரு ஜோக். இருந்தாலும் மனம் விட்டு சிரிக்கலாம். தலைப்புடன் சரியாக பொருந்துகிறது. ஜோக், கடிச் சிரிப்பு !!

மதிப்பெண் : 72 / 100

*****

52. லிப்டாக இருக்கிறேனே..! - சிறுகதை - வசந்த்

ரொம்ப கண்டிப்பாக பள்ளி மாணவர்களை நடத்தும் ஓர் டீச்சரின் கதை. ஒரு பிரச்சினையால் இன்னொரு பள்ளிக்கு செல்கின்ற டீச்சர் அங்கே மனம் மாறுகிறார். எளிமையாக, அமைதியாக செல்கிறது கதை. "..ஆனா நாம எல்லா வசதிகளும் இருந்தும், எந்தக் குறை யில்லாம இருந்தும் சாதனை செய்ய யோசிக்கிறோம். முன்னேற எண்ணம் இல்லாம இருக்கோம்.." போன்ற வரிகள் சிந்திக்க வைக்கின்றன. சிறுகதை, மனமாற்றம் !!

மதிப்பெண் : 79 / 100

*****

53. அவன் கண்விடல் - சிறுகதை - குந்தவை வந்தியத்தேவன்

இராணுவத்தில் வேலை பார்க்கும் ஓர் இளைஞன், அவன் சந்தித்து பழகும் அழகிய இளம்பெண் என்று கதை நகர்கிறது. நீளமான வாக்கியங்கள் சற்று அலுப்பைத் தருகின்றன. இதையும் தாண்டி, "சாதாரணமான விஷயமாக அவள் செய்த இதை சாதாரணமா நான் எடுத்துக்கொள்ள நிறைய நேரம் பிடித்தது." போன்ற வரிகளை ரசிக்கலாம். க்ளைமேக்ஸ் எதிர்பார்த்ததே. திருத்தப்பட்ட குறள், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. சிறுகதை, மசாலா !!

மதிப்பெண் : 80 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

ஒரிஜினல் குறள்:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

- சரவ்

*****

54. கடவுள் கேட்ட லிஃப்ட் - சிறுகதை - சேவியர்

லிஃப்ட் கேட்டு வரும் கடவுள், அவருக்கு காரில் லிஃப்ட் தந்து, பேசிய படியே வரும் சராசரி மனிதன், நடுவே நடக்கும் சம்பவங்கள் என வித்தியாசமான கதைக்களம். கடவுளுக்கும், மனிதனுக்கும் நடக்கும் உரையாடல்கள் சிந்திக்க வைக்கின்றன. "நம்பிக்கையில்லாத உலகில் வாழ்ந்து வாழ்ந்து உங்களுக்கு யாரையுமே நம்ப முடியாமல் போய் விட்டது. யாராவது பாராட்டினால் கூட எதையோ எதிர்பார்த்து தான் பாராட்டுகிறான் என்று நினைக்கிறீர்கள்.." போன்றவை நிஜமான சுய பரிசோதனை. யதார்த்தமான முடிவு. கடவுள், தத்துவம் !!

மதிப்பெண் : 82 / 100

*****

55. அவள் - சிறுகதை - நிர்மல்

விலைமாது ஒருவளை வீட்டுக்கு கூட்டி வந்து விடும் நண்பன், அதனால் ஏற்படும் சங்கடங்கள் என நகரும் கதை. "கணேசனுக்கு தலைசூடு அதிகமானது. அவனுக்கும், சண்முகத்துக்கும் வீட்டு வாடகை மற்றும் செலவு கணக்கு தவிர எந்த சொந்தமும் கிடையாது. இவளோ ஓரே வரியில் இரண்டு மாமா போடுகிறாள்..." போன்றவை சிரிக்க வைக்கின்றன. முடிவென்று ஏதுமில்லாமல் சிற்சிறு சம்பவங்களால் நகர்கிறது. சிறுகதை, பொழுதுபோக்கு !!

மதிப்பெண் : 71 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

//என்ன சொல்றதுன்னே தெரியல.//
"
"
"

- அமுதன்

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக இடுங்கள். நன்றி !

*****

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 46 to 50

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்

1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40, 41 to 45


46. எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? - 2 - தொடர்கதை - யோசிப்பவர்

டைம் மிஷினுடன் எதிர்காலத்துக்கு பயணிக்கும் சாப்ட்வேர் இளைஞனின் கதை. டைம் மெஷினில் செல்லும்போது இன்னோர் இளைஞன் லிப்ட் கேட்கிறான். எதிர்காலத்தின் லைப்ரரிக்கு செல்கிறார் கதாநாயகன், அங்கே இன்னோர் பெண்னுடன் லிப்ட்டில் பயணிக்க போவதாக இந்த பாகம் முடிவடைகிறது. அடுத்தடுத்த பாகங்களை எதிர்பார்க்கலாம். கதைக்களம், வர்ணனைகள் கதைக்கு பலம். சஸ்பென்ஸ் போதிய அளவுக்கு உள்ளது. தொடர்கதை, அறிவியல் எதிர்பார்ப்பு !!

மதிப்பெண் : 77 / 100

*****

47. காடனேரி விளக்கு - சிறுகதை - MSV Muthu

அருமையான த்ரில் கதை. காடனேரி விளக்கு நிறுத்தத்திலிருந்து காடனேரி கிராமத்துக்கு இரவு 12 மணிக்கு நடந்து செல்கிறான் ஓர் இளைஞன். அதைச் சுற்றி சம்பவங்களை த்ரில் விறுவிறுப்போடு கலந்திருக்கிறார். வெவ்வேறு பகுதிகளாக சம்பவங்களைக் கொடுத்து, கடைசியில் வாசகர்களையே கதையின் போக்கை ஊகிக்க விடுவது ரசிக்க வைக்கிறது. "பயணிகள் 'தேவதை இளம் தேவி' என்ற பாடலைக்கூட இரசிக்காமல் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்." போன்ற வரிகள் கதையின் த்ரில்லை சற்று விலக்குகின்றன. காடனேரி விளக்கு, ஒளிர்கிறது !!

மதிப்பெண் : 84 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

பங்காளி! பக்கத்துல உள்ள எங்க அரசபட்டி, கரிசல்குளம் எல்லாத்தையும் விட்டுட்டீங்க.

- கார்மேகராஜா

*****

48. கண்டிப்பாடா செல்லம்.. - சிறுகதை - ramkumarn

எத்தனை கதைகள் வந்தாலும், காலேஜ் காதல் கதைகள் மட்டும் அலுப்பதே இல்லை. இன்னுமோர் காலேஜ் காதல் கதை. உணர்வு பூர்வமாக வார்த்தைகளை, உரையாடல்களை வரைந்து விளையாடி இருக்கிறார். "ஒவ்வொரு புன்னகைக்கும் ஒரு கவிதை சேமித்துக் கொண்டிருந்தான்" போன்ற வரிகள் புருவம் உயர்த்த வைக்கின்றன. "அவள் தலையை வருடியபடியே சொன்னான் அவன், கண்டிப்பாடா செல்லம்" என்று முடியும் க்ளைமேக்ஸ் அற்புதம். சிறுகதை, செண்டிமெண்ட் கலக்கல் !!

மதிப்பெண் : 88 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

அந்த பையனும் ஒரு செமஸ்டர்ல ஃபெயிலாகி அப்பறம் மீண்டு வந்தது கொஞ்சம் மனசுக்கு சந்தோஷமா இருந்துச்சு. நான் பாத்து அப்படியே சீரழிஞ்சவங்க தான் அதிகம்.

- வெட்டிப்பயல்

*****

49. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - சிறுகதை - மாதங்கி

சின்னஞ்சிறு கதை. அழகான முடிவு. கதையின் கடைசி வரிகள் நிஜமாகவே எதிர்பாராதது. "..இப்படி ஆள்அரவம் இல்லாத இடத்தில் வாகனம் ரிப்பேர் ஆகி மாட்டிக்கொண்டாகிவிட்டது. தகவல்தொடர்பு சாதனம் வேலை செய்யவில்லை..." போன்றவற்றை இரண்டாம் முறை படிக்கும்போது நிறையவே ரசிக்கலாம். சிறுகதை, சூப்பரப்பூ !!

மதிப்பெண் : 89 / 100

*****

50. நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - சிறுகதை - முரட்டுக்காளை

மற்றுமோர் விண்வெளி அறிவியல் கதை. வர்ணனைகளில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். இ-யுனிட்ஸ், டைட்டன் கிரகம் என்று கதை படு வித்தியாசமாக பயணிக்கிறது. "ஜூபிட்டர் கிரகத்தைச் சுற்றும் பல நிலாக்களில் யுரோப்பாவும் ஒன்று. அங்கு ஒரு நாள் என்பது 85 மணி நேரங்கள் கொண்டது. மூன்று 24 மணி நேர பூமி-நாட்களில்..." போன்றவை வாசகரை விண்வெளி சூழ்நிலைக்கு இழுத்துச் செல்கின்றன. க்ளைமேக்ஸ் எதிர்பார்த்ததே !!

மதிப்பெண் : 75 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக இடுங்கள். நன்றி !

*****

Friday, September 15, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 41 to 45

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்

1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40


41. ஆனா ஆவன்னா... - கவிதை - ஜி.கௌதம்

மாணவர்களை நன்கு பாடம் சொல்லிக் கொடுத்து, அவர்கள் வாழ்க்கையில் உயர காரணமான ஆசிரியரைப் பற்றிய கவிதை. மாணவர்கள் எல்லோரும் நல்ல பொருளாதார நிலைமையில், ஏணியான ஆசிரியரோ கடைநிலையில். இந்த வேறுபாட்டை அழகாக சித்தரிக்கிறது. கவிதைநடை சற்று குறைவாய், உரையாடல் போல் தோற்றமளிப்பது சிறு பலவீனம். கவிதை, சிந்தனை !!

மதிப்பெண் : 75 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

ஏறிய வழியே
திரும்பிப் பார்த்தேன்
அதே இடத்தில
திடமாய் நின்று
என்னைப் பார்த்து சிரித்தது
ஏணி!

- ILA(a)இளா

*****

42. சோம்பேறி பையன் - சிறுகதை - கோவி.கண்ணன்

சோம்பேறியான கணவனை ஆலோசனை கூறி நல்வழிப் படுத்தி, வாழ்க்கையில் உயரவைக்கும் மனைவி, மனைவி சொல்படி நடந்து வெற்றியடையும் கணவனைப் பற்றிய கதை. அமைதியான நீரோடை போல் எளிமையாக செல்கிறது கதை. இதுவே கதைக்கு பலம். "என் மனைவி என்மீது நம்பிக்கை வைத்து படிப்படியாக என் காலடியில் அமைத்த ஏணி என்னை உயரத்தில் கொண்டு நிறுத்தியிருந்து" என்று முடியும்போது கதை, நிறைவு !!

மதிப்பெண் : 80 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

தம்பி...! மாதா மாதம் போட்டி நடத்தினால் அப்பறம் கதைக்கு எங்கே போவது. விக்ரமன் அவதாரம் எடுக்க வேண்டியதுதான் !

- கோவி.கண்ணன்

*****

43. லிப்ட் ப்ளீஸ் - 1 - 2 - 3!!! - தொடர்கதை - வெட்டிப்பயல்

க்ரைம் நாவல் போல் ஒரு தொடர்கதை. இரு வருடங்களுக்கு முன் பண்ணிய ஒரு விபத்தை நினைத்து அதிலிருந்து சற்று மனம் குழம்பி திரிகிறார் கதை நாயகன். மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்று மறுமுறை திரும்ப வரும்முன் மனக் குழப்பத்தால் இறக்கிறார். இதை திரில், க்ரைம் மசாலா தூவி பரிமாற முயற்சித்திருக்கிறார். "அவரோட மிட் பிரைனும் பான்ஸ்ம் இருக்குற ஏரியா அஃபக்ட் ஆகியிருக்கு" போன்றவைக்கு உழைத்திருக்கிறார். பகுதிகளை சரியான முறையில் தெளிவாக முடிக்காதது சிறுகுறை. க்ளைமேக்ஸ் வாசகர்களை சற்று குழப்புகிறது. கதையை விட, முடிவை விளக்கம் சொல்லி போட்ட பதிவு சூப்பர். மொத்தத்தில் கதை, ரசிக்கும்படியான குழப்பம் !!

மதிப்பெண் : 74 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

அனைத்து பின்னூட்டங்களும், தவிப்போடு அனைத்திற்கும் பதிலளித்த படைப்பாளியும்..


*****

44. கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா - சிறுகதை - pavanitha

தந்தைக்கும் மகனுக்குமிடையேயான பாசத்தையும், பரிவையும் சொல்லும் கதை. வாழ்க்கைப் படியில் ஏற்றி விட்ட தந்தையை மறக்காது, நன்றிக் கடன் செலுத்தும் மகன், பாசத்தை கொட்டும் தந்தை என்று கலக்கலான கதைக்களம். உரையாடல்கள், சம்பவங்கள் திடிர் திடீரென தாவி ஓடுவது சிறுகுறை. "டேய் ராஜ்,இந்த வருஷம் உனக்கு ரொம்ப ராசிடா. புது வண்டி அப்புறம் இப்ப கேம்பஸ் இன்டர்வியுல நல்ல வேலை. நடத்துடா." போன்ற உரையாடல்களின் மூலம் தாவுகின்ற கதையில் பலவீனங்கள் சில பலமாக மாறுகின்றன. சிறுகதை, சிறப்பான களம் !!

மதிப்பெண் : 76 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

கதை நல்லா 'நீட்'டா வந்துருக்குங்க. வாழ்த்து(க்)கள்

- துளசி கோபால்

*****

45. லிப்ட் கிடைக்குமா? - கவிதை - madhumitha

ஒவ்வோர் மனிதனுக்குள்ளும் இருக்கும் லிப்ட் ஆபரேட்டரைப் பற்றிய அழகிய கவிதை. நல்ல களம் கவிதைக்கு. வார்த்தைகளில் விளையாடியிருக்கிறார்.
"கிறுகிறுக்கும் உணர்வினை
ரசனையை
மகிழ்வை
புழுக்கத்தை
வெளிக்காட்டாது
இயந்திர மனிதனாய்" போன்ற வரிகளை ரசிக்கலாம். கவிதை, சுய பரிசோதனை !!

மதிப்பெண் : 78 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி !

*****

Wednesday, September 13, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 36 to 40

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்
1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35


36. சபலம் - சிறுகதை - saran

பேய்களைப் பற்றிய பயம் கொண்ட முதிர் இளைஞரின்(?) கதை. "தொலைக்காட்சிகளில் 'horror' மூவிஸ் வந்தால் கூட, எப்படியேனும் எனது மனைவியையும் இரு குழந்தைகளையும் சமாளித்துவிட்டு வேறு சேனல் மாற்றிவிடும் அளவுக்கு நான் தைரியசாலி" என்ற வரிகளில் சிரிக்க முடிகிறது. க்ளைமேக்ஸ் சற்று ஏமாற்றம். சபலம், சற்று நேரத்திற்கு !!

மதிப்பெண் : 69 / 100

*****

37. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - சிறுகதை - Udhayakumar

நகைச்சுவை கலந்த த்ரில்(?) கதை. இரவு 8 மணிக்கு மெயின்ரோட்டிலிருந்து வீட்டிற்கு 10 நிமிடம் தனியாக நடக்கும் ஓர் இளைஞனுக்கு நிகழும் சம்பவம்தான் கதை. நகைச்சுவை மசாலா பூசிய வர்ணனைகளுடன் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார். "..நான் அவ ஞாபகாமாய்த்தான் வைத்திருக்கிறேன் என ரீல் விட்டு என் கஞ்சத்தனத்தை மறைத்துக் கொண்டிருக்கிறேன்", "..யாருக்காவது மிஸ்ஸுடு கால் குடுப்போம், திரும்ப பேசினா ஈராக், இஸ்ரேன்னு எப்படியாவது ஒப்பேத்திட்டு வீடு வரைக்கும் போய் சேர்ந்துட வேண்டியதுதான்" போன்ற வரிகள் மெலிதாக சிரிக்க வைக்கின்றன. கிண்டலான முடிவு. சிறுகதை, புன்சிரிப்பு !!

மதிப்பெண் : 76 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

நீ தேறுவது கஷ்டம்தான்...

- வல்லவன்

*****

38. konjam lift kidaikkuma?? - கவிதை - Rajalukshmi

புதிய வலைப்பதிவாளர் உற்சாகத்துடன் களத்தில் இறங்கி இருக்கிறார். வாழ்த்தி வரவேற்போம். வாழ்க்கையில் நடக்கும் சிற்சிறு சம்பவங்களில் உள்ள லிப்ட்டுகளை அழகான கவிதையாக்க முயற்சித்து இருக்கிறார். முதல் படைப்பாதலால் சிற்சிறு எழுத்துப் பிழைகளை (முதல் கவிதை உங்கள் வலைப்பில் வந்தால்.. - வலைப்பூவில் ??, கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா பீலிஸ் - ப்ளீஸ் ??) மழலை சொல் போல் ரசித்து மறக்கலாம். மொத்தத்தில்
கவிதை, முயற்சி !!

மதிப்பெண் : 60 / 100

*****

39. லாந்தர் விளக்கு - சிறுகதை - வசந்த்

கிராமத்து த்ரில்லர் கதை. வெவ்வெறு பகுதிகளாக எழுதி, அதை இணைத்திருக்கும் விதம் அழகு. இயல்பான உரையாடல்கள் ரசிக்க வைக்கின்றன. "ரெண்டு தலமுறைக்கு முன்னாடி, எல்லாம் இங்கிருந்து போனவங்களாம். அதனால தமிழ்ப் பேரு தான்." போன்ற ஜஸ்டிபிகேஷன் வரிகளை வாசகர்களேயே ஊகிக்க விட்டு, தவிர்த்திருக்கலாம். க்ளைமேக்ஸ் அருமை. சிறுகதை, த்ரில்லர் மசாலா !!

மதிப்பெண் : 74 / 100

*****

40. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 5 - தொடர்கதை - ராசுக்குட்டி

முந்தைய பகுதிகளைப் போலவே துள்ளியோடும் இளமை. காலேஜ் படிப்பதிலிருந்து ஆரம்பித்து, காலேஜ் வாழ்க்கை, சைட், கட்டடித்து படம் பார்ப்பது, புரொபசர்களை கலாய்ப்பது, காதல், வேலை என்று வெவ்வேறு பருவங்களை அழகாக இணைத்து கல்யாணத்தில் செட்டிலாகிறது கதை. "உன் ரெஸ்யூமே எனக்கு அனுப்பி விடு எங்க project ல அடுத்த மாசம் மேய்க்கிறதுக்கு ஆள் வேணும்னாய்ங்க முயற்சி செஞ்சு பாப்போம்" போன்ற வரிகள் மென்பொருள் துறையாளர்களையும் ரசிக்க வைக்கிறது. தொடர்கதை, இளமை !!

மதிப்பெண் : 82 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

கற்க கற்க...ன்னு ஒரு வார்த்தை போடறதுக்காக பாட்டுக்கே லிங்க் கா??? இது கொஞ்சம் ஓவர்

- Anonymous

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி !

*****

Tuesday, September 12, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 31 to 35

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள் 1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30

31. முனி அடி - சிறுகதை - செந்தில் குமார்

பாலியல் வன்முறைக்குள்ளாக்கப் படும் ஓர் சிறுமியின் கதை. உரையாடல்களாலும், வர்ணனைகளாலும் கிராம மக்களை, அவர்களின் வாழ்க்கை முறையை கண்முன் கொண்டு வருகிறார். "சாலையின் இரு புறங்களிலும் நடு உடம்பில் 48, 49 என அரசாங்க பச்சைக் குத்தப் பட்ட புளியமரங்கள், வாழ்க்கை தத்துவத்தை பிரதிபலிக்கும் மேடு, பள்ளங்கள் நிறைந்த சாலை" போன்றவை ரசிக்க வைக்கின்றன. ""ஒத்த கிளி பெத்து....என் உசுரயே.. நான் கொடுத்து...." என்று கவிதை மனதைப் பிழிகிறது. முனி அடி, யதார்த்தமான அடி !!

மதிப்பெண் : 86 / 100

*****

32. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 4 - தொடர்கதை - ராசுக்குட்டி

இதற்கான விமர்சனத்தை சென்ற பகுதியிலேயே பார்த்து விட்டோம் !

*****

33. விரல் பிடிப்பாயா..? - சிறுகதை - வசந்த்

மகனுக்காக தியாகங்கள் நிறைய செய்து, இப்போது தனிமையில் வாடும் பெரியவரின் கதை. எளிமையாய் கால மாற்றங்களை காட்டி இருக்கிறார். "காலம் ரொம்ப மாறிக்கிட்டு இருக்குமா.. இப்பெல்லாம் இங்கிலீஸ் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கணும்மா.." என்று மகனை பெரிய ஸ்கூலில் சேர்த்ததை தந்தை நியாயப் படுத்துவது, நிறைவு. "நான் அவளோட அமெரிக்கா போகத் தான் போறேன்.. அவருக்கு மாசாமாசம் பணம் அனுப்பிடறேன்.." என பையன் சொல்லும் போது, நமக்கும் கோபம் வருவது, கதையின் வெற்றி. விரல் பிடிப்பாயா, மனதை பிடிக்கிறது !!

மதிப்பெண் : 82 / 100

*****

34. அண்ணே..லிப்ட் அண்ணே..! - சிறுகதை - வசந்த்

லிப்ட் கொடுப்பதைப் பற்றி, கலக்கலாக ஓரு சிறுகதை. யார், யாருக்கு கொடுக்கிறார்கள் என்பது சஸ்பென்ஸ். கடைசி பாராவை படித்ததும், மீண்டும் கதையை படிக்க வைக்கிறார். வித்தியாசமான கோணம், எண்ணங்கள், இயல்பான உரையாடல்கள். "நாளைக்கு சுத்தம் பண்ணும் போது சின்னசாமிகிட்ட சொல்லணும்.இனிமேல இவனுங்களுக்கு லிப்டே குடுக்கக் கூடாது" போன்றவற்றை இரண்டாம் முறையில்(படிக்கும்போது) ரசிக்கலாம். சிறுகதை, சிறகடிப்பு !!

மதிப்பெண் : 87 / 100

*****

35. முன்னாவும் ,சில்பாவும். - சிறுகதை - umakarthick

ஒரு பெண்ணுக்கு லிப்ட் கொடுத்து, பழக்கமாகி, காதலாகி திசைமாறிய(?) ஓர் இளைஞனின் கதை. காலேஜ் பேச்சிலர்ஸின் வாழ்க்கையை நன்றாக படம்பிடித்து காட்டியிருக்கிறார். "எங்க குரூப்ல பசங்க யாருக்காது பிறந்த நாளுன்னா அவனவன் அந்த அளவுக்கு சந்தோச படுவான்,அன்னைக்கு நைட் ரூமில பசங்க எல்லாரும் சேர்ந்து அவனுக்கு பொதுமாத்து (அதாங்க போர்வைய மூடி அவனை வந்தவன் போனவன்லாம் அடிக்குறது) போட்டு அப்புறம் அவன்கிட்ட இருக்கிற பணத்தலாம் எடுத்து ஒருத்தனை சரக்கு வாங்க அனுப்பி,இன்னொருத்தன பீப் ப்ரை வாங்க அனுப்பி அக்கவுன்ட்ல சிகரெட், புரோட்டா முட்டை பொரியல் எல்லாம் வாங்கி, ஒரு ரூம க்ளீன் பண்ணி ,கம்ப்யூட்டர்ல பாட்டை சவுண்டா வச்சி தண்ணி, கண்ணீர், வாந்தி.... அப்படின்னு கும்மி அடிப்போம்" போன்ற வரிகள் அசத்துகின்றன. க்ளைமேக்ஸ் கதை நடுவிலேயே வந்துவிடுகிறது. சம்பவங்களை அதன் போக்கிலேயே விவரித்து விளையாடியுள்ளார். முன்னா, மனதை தொடுகிறான் !!

மதிப்பெண் : 86 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி !

*****

Monday, September 11, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 26 to 30

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள் 1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25


26. சில்லென்று ஒரு காதல் - சிறுகதை - நெல்லை சிவா

பெண் பார்க்கப் போகும் சாப்ட்வேர் இளைஞனின் கதை, துள்ளியோடும் நீரோடை போல் பயணிக்கிறது. "வசந்தின்னு முழுப்பெயர் சொல்லி கூப்பிடலாமா, இல்லல 'வசு' ன்னு அழைக்கலமா" போன்ற வரிகளை ரசிக்கலாம். வர்ணனைகளை குறைத்து, உரையாடல்களிலேயே நகர்கிறது கதை. "'வர்ரப்ப பாண்டி பஜார் வழியே வா.. நாயுடு ஹால் பக்கத்துல மூணு மணிக்கெல்லாம் ஃப்ரெஷ் மல்லிப்பூ வந்திருக்கும். ஒரு 20 முழம் வாங்கிக்கோ" போன்ற யதார்த்தமான வரிகள், கதைக்கு பலம். க்ளைமேக்ஸ், முன்பே யூகிக்க முடிகிறது. சில்லென்று ஒரு காதல், ஜில் & இளமை !!

மதிப்பெண் : 86 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

"ஜிவ்வுன்னு ஒரு கதை" நல்லா இருந்தது.இதை கதைங்கறதை விட திரைக்கதைன்னு சொல்லாம். நல்லா ரசிக்க முடிந்தது. வாழ்த்துகள்.

- TAMIZI

*****

27. எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? - 1 - தொடர்கதை - யோசிப்பவர்

டைம் மிஷினுடன் எதிர்காலத்துக்கு பயணிக்கும் சாப்ட்வேர் இளைஞனின் கதை. அறிவியல் புனைவுகள் சுவாரஸ்யம். "அதே இருபது பதினாறில்தான், இந்த டைம் டிராவல் வண்டி கண்டு பிடிக்க பட்டது." போன்ற வரிகளால் வாசகரை யோசிக்க வைக்கிறார். "மிக நுண்ணிய வார்ம் ஹோல்ஸ் (புழுத்துளைகள்), இந்த பேரண்டத்தில் பல", ", ஃப்யூவல் கம்பஸ்ஸன் சேம்பரின் உள்ளே பொருத்த வேண்டிய 'ZRD அனலைஸரை' பொருத்த ஆரம்பித்தேன்." போன்ற வரிகளை ரசிக்கலாம். விறுவிறுப்பாக செல்லும் கதை, அடுத்த பாகங்களையும் எதிர்பார்க்க வைக்கிறது. தொடர்கதை, எதிர்பார்ப்பு !!

மதிப்பெண் : 79 / 100

*****

28. மம்மி..மம்மி.. - சிறுகதை - வசந்த்

விலங்குகளின் மனதை ஓர் தாயின் மூலமாக சொல்லி இருக்கிறார். நேர்த்தியாக அதை, 'லிப்ட்' உடன் இணைத்திருக்கிறார். இருப்பினும், ஓர் உரையாடலாகவே முடிந்து விடுவது சிறு பலவீனம். "நாளைக்கு நாம ஜூக்கு வந்து அம்மா மயில், குட்டி மயில்கிட்ட என்ன பேசுதுனு சொல்லுவனாம்.." போன்ற வரிகள் மனதில் நிற்கின்றன. 'மம்மி..மம்மி', குழந்தை !!

மதிப்பெண் : 68 / 100

*****

29. லிப்ட்டு ஸ்கிரிப்டு ஆக்ட்டு - நையாண்டி - kappiguy

விகடன் 'ரவுசுபாண்டி' பாணியில், லிப்ட் தலைப்பில் சினிமா உருவாக்குவதாக பிரபலங்களை கலாய்த்திருக்கிறார். பல இடங்களில், வாய்விட்டு சிரிக்க வைக்கிறார். "நாம இந்த லிப்ட் மேட்டரை உள்ள கொண்டு வந்தா தசாவதாரத்துக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இப்ப இருந்தே விமர்சன பதிவு போட ஆரம்பிச்சுடுவாங்க. படத்துக்கு பப்ளிசிட்டி கண்ணாபின்னான்னு எகிறும்" போன்றவை வெடிச் சிரிப்பு. "அப்படியே 'நிற்க நிற்க லாரி நிற்கலிப்ட் கொடுப்பான் இவன்' னு டைட்டில் பாட்டு போடறோம்", என்று சொல்லிக் கொண்டே போகலாம். "'சிவாஜி தருவான் லிப்ட், நீ தமிழ்நாட்டுக்கு கிடைத்த கிப்ட்' " என்று ரசிக்கவும் வைக்கிறார். படைப்பின் நீளம், சிறு பலவீனம். இருந்தாலும், இந்த படைப்பு, சிரிப்பு கண்ணா சிரிப்பு !!

மதிப்பெண் : 90 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

கவிதை, டைரக்ஷன் ரெண்டும் எட்டிப் பாக்குது - அப்போ தமிழ் திரையுலகுக்குக் கெடச்ச இன்னொரு பேரரசு - டைரக்டர் கவிஞர் ஐயா கப்பியரசு அவர்கள். :)

- கைப்புள்ள

*****

30. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 3 - தொடர்கதை - ராசுக்குட்டி

இதற்கான விமர்சனத்தை சென்ற பகுதியிலேயே பார்த்து விட்டோம் !

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி !

*****

Sunday, September 10, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 21 to 25

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள் 1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20


21. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - க(வி)தை - இளா

கவிதையுடன் கலந்த கதை. கணவனை இழந்த இளம்பெண்ணுக்கும், இன்னொரு இளைஞனுக்கும் இயல்பாய் ஏற்படும் நட்பு, காதலாய் மாறி வாழ்க்கையாய் பயணிப்பதை அழகாக கவிதையாக சொல்லி இருக்கிறார். கதையாய் மாறுகின்ற ஒரு பாரா சற்று பொருந்த வில்லை. யதார்த்தமான சம்பங்களை கோர்த்து
"குறும்புடன் அவள் "கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?" என்றாள்.
"வாழ்க்கைக்குமா?" என்றேன் மனதில் கொண்ட தைரியத்துடன்." என்று ரசிக்க வைக்கிறார். கவிதை, கால மாற்றம் !!

மதிப்பெண் : 84 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

இதைப் போய் படிக்காமல் விட்டுவிட்டேனே :-( அருமையான நடை... போட்டியெல்லாம் எதுக்குப்பா... எடுத்து முதல் பரிச கொடுங்கப்பா ;)

- வெட்டிப்பயல்

*****

22. சாந்தியக்கா - நிகழ்வு - பாலபாரதி

பத்திரிக்கையாளர் சந்தித்த ஓர் நிகழ்வினை உருக்கமாக எழுதி இருக்கிறார். "நம்பிக்கையும், எதிர்பார்ப்புக்களும் இல்லாத வாழ்வு சூன்யமானது." என்பது போன்ற தேர்ந்தெடுத்த வார்த்தைகள் விறுவிறுப்பு. குடும்பத்தால் ஒதுக்கப்பட்டு விலைமாதுவாய் காலம் தள்ளும் பெண்ணை மீட்டு வந்து மறுவாழ்வு அமைத்துக் கொடுத்ததை அடக்கமாக விவரிக்கிறார். "யாராவது ஓரே ஒரு ஆம்பள கெடச்சாக்கூட அவன் காலடியிலேயே கெடப்பேங்க." போன்ற வரிகள் சுடுகின்றன. கூர்மையான உரையாடல்கள் பலம். 'சாந்தியக்கா', நம்பிக்கை தரும் உருக்கம் !!

மதிப்பெண் : 92 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

கதைகள் கற்பனையில் வருவதை விட சொந்த வாழ்வில் பாதிப்பு ஏற்படுத்திய சம்பவங்கள், நபர்களைப் பற்றி எழுதும் போது அதன் அழுத்தம் தனிதான் பாலா.

- Kuppusamy Chellamuthu

*****

23. இதுவேறுலகம் - கதை - நடராஜன் ஸ்ரீனிவாசன்

பிசிஓ வைத்திருக்கும் கண் தெரியாத செல்வத்தையும், அவரை உயர்த்திய அவருடைய நண்பரையும் பற்றிய கதை. வித்தியாசமான சில வர்ணனைகள் ரசிக்க வைக்கின்றன. "ஆண்வியர்வை வாடைக்கும் பெண் வியர்வை வாடைக்கும் அவனுக்கு வேறுபாடு தெரியும். இதை வைத்தே பலவற்றை அவன் கண்டு பிடிப்பான்." போன்ற வரிகள் பார்வையற்றவர்களின் உலகத்திற்கு நம்மையும் இட்டுச் செல்கின்றன. அகக்கிழத்தி, நயனம், யாக்கை என்று புதிய(?) சொற்களையும் அறிமுகம் செய்கிறார். இது வேறுலகம், நிஜமாகவே !!

மதிப்பெண் : 76 / 100

*****

24. நிலா நிலா ஓடி வா! - சிறுகதை - luckylook

அட்டகாசமான விண்வெளியியல் கதை. பூமியிலிருந்து, விண்வெளிக்கு பயணம் செல்லும் ஓர் குழுவின் கதை. "புவியீர்ப்புக் குறைக்கப்பட்ட அறையில் பயிற்சி எடுத்தும் கூட நிலவில் இயங்குவது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது", "ஒரு இரவு ஒரு பகல் மாற பூமியின் கணக்கில் 27 நாட்கள் ஆகிறது இங்கே..." போன்ற வரிகள் கதைக்கு பின்னாலுள்ள உழைப்பை நினைவூட்டுகின்றன. கதை நடுவில் திரில்லாக வேகமாக பயணிக்கிறது. வித்தியாசமான, சற்று கிண்டலான முடிவு. சிறுகதை, விறுவிறுப்பு !!

மதிப்பெண் : 81 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

நல்ல கதை... //க்ரிஷ் பதிலளித்தான் "2069"//விண்வெளிக்கு சென்றால் வயது கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே ? அது எந்த அளவுக்கு உண்மை ??

- செந்தழல் ரவி

*****

25. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 2 - தொடர்கதை - ராசுக்குட்டி

இதற்கான விமர்சனத்தை சென்ற பகுதியிலேயே பார்த்து விட்டோம் !

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள்! முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி !

*****

Friday, September 08, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 16 to 20

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள் 1 to 5, 6 to 10, 11 to 15

16. சின்னதாக ஒரு லிப்ட் - சிறுகதை - யதா

கிராமத்தில் படித்து, பட்டதாரியாய் அங்கேயே பள்ளியில் வேலை பார்க்கும் இளைஞனின் கதை. சமூக பொறுப்புணர்வு, கிராம/சமுதாய மக்களின் முன்னேற்றம், காதல், எதிர்காலம் பற்றிய நம்பிக்கை என்று கதை நகர்கிறது. "படிப்பு கம்மியா இருக்கறதுதான் இவங்க எல்லாருமே இப்படி குறுகிய புத்தியில இருக்கக் காரணம்.", "எல்லாரையும் நல்ல நிலைக்கு நாம கொண்டு போற மாதிரி ஒரு நிலைக்கு நான் போகணும் சார்" போன்ற உரையாடல்கள் சிந்திக்க வைக்கின்றன. எதிர்பார்த்த, அமைதியான ஆனால் நம்பிக்கையான முடிவு. 'சின்னதாக ஒரு லிப்ட்', சிந்திப்பு.

மதிப்பெண் : 82 / 100

*****

17. லிஃப்ட் - சிறுநிகழ்வு - மகேந்திரன்.பெ

எனக்கு ரொம்பவும் பிடித்த படைப்பு, அளவின் காரணமாக :-). ஓர் சிறிய, நகைச்சுவை நிகழ்வை சுருக்கமாய் சொல்லி இருக்கிறார். சரியான காமெடி.இந்த 'லிஃப்ட்' வெடிச் சிரிப்பு !!

மதிப்பெண் : 73 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

அந்தக் குசும்பன் என் வகுப்பில் படித்தவனாகத்தான் இருக்கவேண்டும்.! ஒரு சின்ன க்ளு மட்டும் கொடுக்கவும். யாரென்று கண்டு பிடித்து விடுகிறேன்.

- வாத்தியார் SP.VR.SUBBIAH

*****

18. கொஞ்சம் உடன் அழைத்துச் செல்வீர்களா..? - நாடகம் / உரையாடல் - வசந்த்

கலக்கலான வரலாற்று நாடகம். தூய தமிழ் உரையாடல்களும், பழங்கால உவமை மொழிகளும் தூள் கிளப்புகின்றன. அழகழகான வாக்கியங்களை வைத்து தமிழ்த் தோரணை கட்டி இருக்கிறார். உரையாடல்கள் சில நீண்டு, சற்று சலிப்பைத் தருவது சிறுகுறை. "கொழுகொம்புடன் நிற்கும் தாமரை இல்லாமல் குள நீர் தேங்கி தான் என்ன?" போன்றவை ரசிக்க வைக்கின்றன. மொத்தத்தில் இது சரித்திர ஞாபகம் !!

மதிப்பெண் : 78 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

:)) எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..

- சிறில் அலெக்ஸ்

*****

19. அன்புத் தோழி, திவ்யா..! - சிறுகதை - வசந்த்

படைப்பாளரின் வேகமும், ஆர்வமும் வியக்க வைக்கிறது. இது இம்மாத போட்டியில் இவருடைய நான்காவது படைப்பு. பாராட்டுக்கள். ஸ்கூலில் முதல் ரேங்க் வாங்கும் மாணவனின் எண்ண ஓட்டங்களுடன் கதை ஆரம்பிக்கிறது. "கணக்கு டீச்சராய் வர வேண்டியவர், பேங்கில் உட்கார்ந்து ஊரார் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார்." போன்ற வரிகளுடன் சிரிக்கலாம். பள்ளி நண்பர்களிடம் இருக்கும் நட்பை அழகாக கையாண்டு இருக்கிறார். முடிவு, எதிர்பார்த்ததே. 'அன்புத் தோழி, திவ்யா..', நம்பிக்கை !!

மதிப்பெண் : 80 / 100

*****

20. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1, 2, 3, 4 - - தொடர்கதை - ராசுக்குட்டி

வித்தியாசமாக தொடர்கதையுடன் வந்திருக்கிறார். காலேஜ் படிக்கும், இளமை துள்ளும் ரவுடி(?) மாணவனிடமிருந்து துவங்குகிறது கதை. மெல்லிய கிண்டல் தொணி கதை முழுவதும் கூடவே பயணிக்கிறது. "உன் ஓட்ட வண்டியில பின்னாடி உக்காந்துகிட்டு எங்க பிடிச்சுக்கறது.. உன்ன பிடிச்சுக்கலாம்னா கோவப்படுவ.." போன்ற உரையாடல்கள் விறுவிறுப்பை கூட்டுகின்றன. "கைதூக்கி விட நண்பர்களிருக்கையில் எனக்கென்ன மனக்கவலை" என்று செண்டிமெண்டையும் சற்று தெளித்திருக்கிறார். நடுநடுவே காதல். தொடர் ஒவ்வொன்றையும் தொடர்பில்லாத வெவ்வேரு சம்பவங்களால் இணைத்திருப்பது நல்ல யுத்தி. மொத்தத்தில் தொடர்கதை, காலேஜ் ஸ்பெசல் மசாலா !!

மதிப்பெண் : 83 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

ELLAME okay..ana andha hero peru why raasu..?

- Anitha Pavankumar

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி !

*****

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 11 to 15

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும் இந்த பகுதியின் நோக்கம் !

கடந்த விமர்சனங்கள் 1 to 5 6 to 10

11. லூர்து - சிறுகதை - அபுல் கலாம் ஆசாத்

சற்றே பெரிய சிறுகதை. சினிமாவில் பாட்டெழுத ஆசைப்படும் ஷேக் அலியிடமிருந்து கதை துவங்குகிறது. எளிமையான வார்த்தைகளைக் கொண்டு நிதானமாக நகர்கிறது கதை. "'ஏண்டா சம்பாத்தியம் பத்தலயா. கொமரு வூட்டுல உக்காந்தீக்குது நான்லொடா சம்பாத்தியத்த யோசன பண்ணனும்" போன்ற வட்டார மொழிநடை கதைக்கு பலம். "தறி நாடாவைச் சுற்றியல்ல தனது வாழ்க்கை..." போன்ற வரிகள், கதையின் மையப்போக்கை தீவிரப் படுத்துகின்றன. சினிமா கனவுகளை "எத்தினி வர்சம் அல்லாடி போன வர்சந்தான் மேளத்த மெல்லத் தட்டு மாமால ஒரு பீஸ் கெட்சுது" என்று
நகைச்சுவையையும் தெளித்திருக்கிறார். க்ளைமேக்ஸ் எதிர்பாராத, ஆச்சரியமான முடிவு. இதை அருமையாக கதையுடன் இணைத்திருப்பது ரசிக்க வைக்கிறது. லூர்து, நிதானம் !!

மதிப்பெண் : 82 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

பாய்.. சொல்லி அடிக்கிறதுன்னா இது தானா? பொறுமையா படிச்சுட்டு, மறுபடி வர்றேன்.. :)

- ராசா (Raasa)

*****

12. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - சிறுகதை - Krishnaraj.S

நகைச்சுவையை மையமாகக் கொண்டு வந்திருக்கும் சிறுகதை. இயல்பான உரையாடல்களால், கதைக்குள் நாம் எளிதாக ஒன்ற முடிகிறது. "இந்தப்பெரிசு ஹெட்மாஸ்டர்கிட்ட மாட்டுனா , அது ஆடி அசைஞ்சு போய்ச் சேர்றதுக்குள்ளே அரை மணி நேரம் ஆகும்." போன்ற வரிகளின் மூலம் புன்முறுவல் பூக்க வைக்கிறார். வர்ணனைகளில் சில தூய தமிழிலும், சில பேச்சு தமிழிலும் இருப்பது சற்று நெருடுகிறது "இச்சம்பவம் நடந்தது எனக்கு ஏழு அல்லது எட்டு வ்யது இருக்கும்போது" / "நமக்கு ஆங்கிலப்புலமை வளத்தி உட்டதே இவருதான்". கதை முழுக்க இழையோடும் மெல்லிய நகைச்சுவை, கதைக்கு பலம். கிருஷ்ணராஜின் சிறுகதை, எளிமை !!

மதிப்பெண் : 77 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

ஆஹா பெருசு, இன்னமும் சின்னப்பிள்ளத்தனமா பேசிக்கிட்டே இருக்கீங்களே.

- gowrikrishna

*****

13. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - கவிதை - வசந்த்

சின்னஞ் சிறிய கவிதை. அளவாக, அழகாக இருக்கிறது. கவிதையின் மையக்கருத்தை ஓரிரு அடிகளிலேயே தெரிவிக்கிறார்.
"கடல் கரையைக் கேட்பதில்லை.
ஆண்டாண்டு காலமாய்
அலைகள் கொண்டு
உள் நுழைகிறது." என்று எளிமையாய் எழுதி ரசிக்க வைக்கிறார். எளிமை கவிதையின் பலம், வர்ணனைகள் இல்லாமல், நேரடி நிகழ்வாய் இருப்பது சிறு பலவீனம். கவிதை, கருத்துச் சிறப்பு !!

மதிப்பெண் : 70 / 100

*****

14. லிஃப்ட் குடுக்கலியோ லிஃப்ட் - சிறுகதை - சனியன்

மெலிதான நகைச்சுவை இழையோட, எளிமையாய் வந்திருக்கும் கதை. ஆரம்பம் முதலே பரபரப்பாய் நகரும் கதையின் போக்கை வாசகரை ஊகிக்க விடாமல் நகர்த்தி சென்றிருப்பது கதையின் பலம். க்ளைமேக்ஸ் எதிர்பாராத, ரசிக்கும் படியான முடிவு. உரையாடல்களிலும், வர்ணனைகளிலும் கிண்டல் தொணியை புகுத்தி, புன்முறுவல் பூக்க வைக்கிறார்.
"ஒரு
வெட்டி நாயே
வெட்டியாய் நாய்
வளர்க்கிறதே...
ஆச்சரியக்குறி." போன்ற கவிதை(?) வரிகள் அசத்துகின்றன. சிறுகதை, மசாலா பொழுதுபோக்கு !!

மதிப்பெண் : 78 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

சோம்பேறிப்பையன், படிச்ச 200 பேர்ல சோம்பேறித்தனப்படாம பின்னூட்டம் கொடுத்திருக்கீங்க.

- சனியன்

*****

15. இன்னா சார்? - சிறுகதை - வசந்த்

மெட்ராஸ் பேச்சுத் தமிழ் கதை முழுவதும் புகுந்து விளையாடுகிறது. கதையை விட, உரையாடல் மொழிதான் மனதில் பதிகிறது. நகைச்சுவையாக சில சம்பவங்களையும் கட்டி இருக்கிறார். "போன தபா, ஒரு வேலயா அடயாராண்ட போயிருந்தேனா, அங்க புட்ச்சேன் மனோகர் சார. இன்னா வூடுன்றெ நீ? சும்மா சோக்கா இருந்ச்சு சார்." என்று ஓர் லிப்ட் ஆபரேட்டரின் பார்வையில் கதை அமைதியாய் செல்கிறது. சிறுகதை, சிரிப்பு.

மதிப்பெண் : 71 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி !

*****

Thursday, September 07, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 6 to 10

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள் 1 to 5

6. ஐந்து வெண்பாக்கள் - வெண்பா - அபுல் கலாம் ஆசாத்

மீண்டுமொரு வெண்பா படைப்பு, சென்ற படைப்பின் ஆங்கிலக் கலப்பிற்காக தூய தமிழில் புகுந்து விளையாடி இருக்கிறார். சில வாக்கியங்களுக்கு அர்த்தம் புரியாவிட்டாலும், ஒருவாறு ஊகித்து படிக்க வைக்கிறார்.
"வல்லமை பெற்றிருந்தும் வாயடைத் தேயிருக்கும்
நல்லவ ராலேதும் நன்மையுண்டோ - கொல்லுலையாய்
நெஞ்சக் கனலெழுப்பி நேர்மைக்கு வாள்பிடிக்க
கொஞ்சம் கிடைக்காதோ கோல் !" போன்ற வெண்பாக்கள் மூலம் சிந்திக்கவும் வைக்கிறார். வெண்பா, தேனிசைத் தமிழில் அமிழ்ந்த இனிப்புப்பா !!

மதிப்பெண் : 73 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

இது இது இதைத்தான் எதிர்பார்த்தேன். முதல் வாக்கு என்னுடையதுதான் உங்களுக்கு.பெரியவங்க சொன்னா கேட்டுக்கணூமா? எளக்கியவாதியா ஆவுறதா 'எண்ணமே' இல்லையா?

- ஆசிப் மீரான்

*****

7. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - கவிதை - சேவியர்

எளிமையான வார்த்தைகளைப் போட்டு இயல்பாக செதுக்கியிருக்கிறார் கவிதையை. சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லி அழகூட்டுகிறார். பயண நடுவில் லிப்ட் கேட்பவர்கள் பற்றியும், லிப்ட் கொடுக்க நினைப்பவரின் நியாயமான தயங்கல்களையும் தெளித்திருக்கிறார்.
"தேவர்களும்
அசுரர்களும்
ஒரே சீருடையில் அலையும்
நகரத்துச் சாலைகளில்" போன்ற வரிகளின் மூலம் ரசிக்க வைக்கிறார். கவிதை, இயல்பு !!

மதிப்பெண் : 75 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

nall iruku kadaisi paravai innum koormaiyana varthaigalal alangarithaal nalaa irukum

- karthick

*****

8. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - சிறுகதை - demigod

கலக்கலான கிரைம் கதை. "ஆள் அரவம் இல்லாத, அடர்ந்த மரங்களை இரு புறமும் கொண்ட நேர் கோட்டுச் சாலை. இரவின் வீரியமான குளிர்பனி திரையைக் கிழித்துக் கொண்டு, சீரான வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது அந்த அம்பாசிடர் கார்" ஆரம்பத்திலேயே ஆர்வத்தை தூண்டுகிறார். வர்ணணைகளும், உரையாடல்களும் சமச்சீராக பரவியிருக்கின்றன. "பேய் பிசாசு எல்லாம் இருக்கோ இல்லையோ? ஆனா எல்லாருக்கும் பயம்னு ஒன்னு இருக்கிறது உண்மை. என்ன, எந்த ஒரு கட்டத்துல எல்லை மீறி பயத்தை வெளிக்காட்டுறாங்கறதுல மட்டும்தான் மனுசங்க வேறுபடுறாங்க.” என்று நடுநடுவே தத்துவத்தையும் தெளிக்கிறார். க்ளைமேக்ஸ் எதிர்பாராத நகைச்சுவை. ஆங்கிலப் படங்கள் முடிவது போல், முடிவில் ஒரு ட்விஸ்ட்
வைக்கிறார். ஆக மொத்தத்தில் சிறுகதை, கிரைம் சிறப்பு !

மதிப்பெண் : 87 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

Good one! Good pace to narrate this witty tale.The title could have been different though. Best of Luck.

- Harish

*****

9. கொஞ்சம் தூக்கி விடலாம்! - சமூக ஆலோசனை - யதா

மிகவும் அருமையான நோக்கமுடைய படைப்பு. சமூக முன்னேற்றத்துக்காக உதவும் மனமுள்ளவர்களுக்கு, உதவும் வழிமுறைகளை, சிற்சிறு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சில சமூகத்தொண்டு நிறுவனங்களின் வலை முகவரிகளையும் வெளியிட்டு இருக்கிறார். யதார்த்தமான சில அறிவுரைகளையும் "உதா: உங்களூர் பள்ளிக்கு ட்யூப் லைப் போடத்தேவையிருக்கலாம். (ட்யூப் லைட் வெளிச்சம் தெரியாத அளவுக்கு பெயிண்ட் அடிக்கிற வேலையெல்லாம் வேணாமே ப்ளீஸ்!)" வழங்கி இருக்கிறார். போட்டிகளைத் தாண்டி எல்லாரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய படிப்பு,இந்த படைப்பு !!

மதிப்பெண் : 93 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

Nalla Ennam Ungalukku. Nalla PAthivum kooda. Uthava ninaippavargalukku oru thoondugol thaan ungal pathivu.

- மா.கலை அரசன்

*****

10. லிஃப்டாவது கிடைக்குமே! - சமூக நிகழ்வு - ஜி.கௌதம்

அரவாணிகள் சம்பந்தமான ஓர் பயங்கர நிஜ நிகழ்வை நேர்த்தியாக விவரித்திருக்கிறார். காதலர்களின் பார்வையில் ஆரம்பித்து ""ஆபிஸ்ல கொஞ்சம் வேலையிருக்கு" என்றாள் அவள். "கொஞ்சற வேலையா?" என நான்" போன்ற உரையாடல்களின் மூலம் நகைச்சுவைக் கதையோ/நிகழ்வோ என நினைக்க வைக்கிறார். போகப்போக படைப்பில் சூடு பிடிக்கிறது, திகில் தாண்டவமாடுகிறது. "குடிசையின் நட்ட நடுவே ஆறடி நீளத்துக்கு ஆழமாக
வெட்டப் பட்டிருந்த குழியை அப்போதுதான் கவனித்தேன். தோண்டிக் குவித்த மண்மேடு பீதி கொடுத்தது" போன்ற வர்ணனைகள் மூலம் அமானுஷ்ய சூழலுக்கு வாசகரை இழுத்துச் செல்கிறார். சற்று பிசகினாலும் ஆபாச முத்திரை குத்தப்பட்டு விடக்கூடிய நிகழ்வில் தேவைக்கதிகமான வர்ணனைகளோ, உரையாடல்களோ இல்லாமல், அடக்கி வாசிக்கிறார். நிகழ்வின் பயங்கரத்தை வாசகருக்கு எளிமையாக உணர்த்துகிறார். "எங்களுக்கு முறையா ஒரு அங்கீகாரம் கொடுத்து மனுஷியா மதிக்காத இந்த கவர்ன்மென்ட்டத்தான் கேட்கணும். " என்பதன் மூலம் அரவாணிகளை அங்கீகரிக்காமல் ஒதுக்கி வைக்கும் சமூகத்தையும், அரசாங்கத்தையும் லேசாக சாடியிருக்கிறார். மொத்தத்தில் 'லிஃப்டாவது கிடைக்குமே', திகில் அக்கறை !!

மதிப்பெண் : 90 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

பலமான இதயமுள்ளவர்களே அதிர்ச்சியடையும் சேதி இது. கடைசி லிப்ட் மட்டும் எனக்கு போட்டிக்காக இடைச்சொருகலாக படுகிறது. இயல்பான நடைக்கும் சமூக அவலத்தை எழுத முனைந்ததற்கும் என் வாழ்த்துக்கள்

- Vignesh

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும் படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி !

*****

Monday, September 04, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 1 to 5

1. சார் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - சிறுநிகழ்வு - சிமுலேஷன்

வித்தியாசமான படைப்பு, சரியான கடியுடன் டிவியில் பார்த்த ஓர் நிகழ்வை சுவையாக சொல்லியிருக்கிறார். சீரியல் திரைக்கதை போல் இருக்கிறது. முடிவு சற்று ஏமாற்றமளித்தாலும், நிறைய பேரை படிக்க வைத்திருக்கிறார். மொத்தத்தில் வித்தியாசம், படைப்பில் மட்டும் !!

மதிப்பெண் : 65 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

மொத கதையே, கடியா ???? விளங்கிரும்கோவ் :-)))
இருந்தாலும் நிறைய பேரை வந்து படிக்க வச்சருக்கீங்க போல இருக்கே, போனாப்போவுது... வாழ்த்துக்கள் :-)
நல்ல லிப்ட்டுதான் போங்க, உங்க ப்ளாக் ஹிட் கவுண்ட்டருக்கு !!!

- சோம்பேறி பையன்

*****

2. லிஃப்ட் - சிறுகதை - Cyril Alex

எளிமையான சிறுகதை, அழகாக சுருக்கமாக சொல்லியிருக்கிறார். 'சாலை ஆறாய் உருகியோடிக்கொண்டிருந்தது', 'கிராமத்தின் நிதானம் வாழ்க்கையை அனுபவமாக்குகிறது', 'கோடையின் நாட்டியமாய் கானல். தெளிந்த ஓடையில் விழுந்த பிம்பங்களைப் போலக் காட்சியளித்தது' போன்ற வர்ணணைகள் ரசிக்க வைக்கின்றன. கதையின் முடிவில் யதார்த்தத்தை புரிய வைக்கிறார். அழுத்தம் சற்று குறைவாயிருந்தாலும், அழகாக இருக்கிறது லிஃப்ட், சிறில் தந்திருக்கும் கிஃப்ட் !!

மதிப்பெண் : 80 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

கற்பனைப் பாத்திரமென்றாலும், லிப்ட் கொடுத்த இளைஞன், ஏற்கெனெவே ஒரு முறை பட்ட கசப்பான அனுவத்தையும் மீறி, மனிதாபிமான உணர்வுடன் லிப்ட் கொடுத்துவிட்டு, எச்சரிக்கை கலந்த யதார்த்தத்துடன் பாக்கெட்டைச் சரி பார்த்திருப்பானோ என்று தோன்றியது.

- சிமுலேஷன்

*****

3. போட்டிக்காக - வெண்பா - அபுல் கலாம் ஆசாத்

ஆங்கில வார்த்தைகளைக் கலந்து, நகைச்சுவை பூச்சில் வெண்பாக்களை வரைந்து விளையாடி இருக்கிறார். வெண்பா ஏதுமறியா என் போன்ற பாமரர்களையும் "ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும்
டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3
பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன்
கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்!" என்பதன் மூலம் ரசிக்க/சிரிக்க வைக்கிறார். இலக்கணம் கொஞ்சம் தெரிந்துகொண்டு நாமும் வெண்பா களத்தில் இறங்கலாம் என உற்சாகமூட்டுகிறார். சில வார்த்தைகளுக்கு அழகாக சிறு குறிப்பும் கொடுத்திருக்கிறார். ஆசாத்தின் வெண்பா, விளையாட்டுப்பா !!

மதிப்பெண் : 70 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

ஆசாத் ஜி எங்கேயோ போயிட்டீங்க
ஆசாத் கஜல் உட்டா
அசராது வெண்பா போட்டா
ஆளெல்லாம் கூடிடுமே - நமக்கும்
கொஞ்சம் கிடைக்காதோ லிப்ட்

- மதுமிதா

*****

4. தவிப்பு - சிறுகதை - நெல்லை சிவா

படு ஸ்பீடாக பயணிக்கும் ஆங்கிலத் திரில்லர் போல் கதையை கொண்டு சென்றிருக்கிறார். இயல்பாக, வருணணைகள் அதிகமில்லாமல் பயணிக்கிறது கதை. "போற வழியிலே என் ஆள பிக்கப் பண்ணி, ஒரு காபி சாப்பிட்டுட்டு அவ எழுதப்போற எக்ஸாம்க்கு 'ஆல் த பெஸ்ட்' சொல்லிட்டு காலேஜ்ல ட்ராப் பண்ணனும்டா, கொஞ்சம் கருணை பண்ணுடா, மச்சி" போன்ற பரிச்சயமான உரையாடல்களுடன் கதைக்குள் நம்மை இழுத்து உட்கார வைக்கிறார். "வண்டி இழுத்துக் கொண்டே போய், நிறுத்த வேண்டிய கோட்டைத் தாண்டி நின்றது, சரியாக அங்கு நின்று கொண்டிருந்த ட்ராபிக் கான்ஸ்டபிள் முன்னால்..." என்று சஸ்பென்ஸை அதிகமாக்குகிறார். சுருக்கமாகவும், அழகாகவும் இருக்கிறது தவிப்பு, எக்ஸ்பிரஸ் சிறுகதை !!

மதிப்பெண் : 85 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

சைட் சமாச்சாரத்த தவிர, மத்த என்னோட அனுபவம்தான் இது கதையல்ல..நிஜம்... :)

- நெல்லை சிவா

*****

5. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - புதிர் - பினாத்தல் சுரேஷ்

இன்னுமொரு வித்தியாசமான படைப்பு. சில பிரபலங்கள் 'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா' கருத்தில் எழுதினால் எப்படியிருக்கும் என்று சிந்தித்து எழுதியிருக்கிறார். எந்தந்த பிரபலங்கள் எழுதினார்கள் என்று அழகாக புதிரும் போட்டிருக்கிறார். மணிரத்னமும், கருணாநிதியும் சடாரென கண்டுபிடிக்க முடிகிறது. மிகுதியை யோசிக்க வைக்கிறார். பிரபலங்களின் எழுத்துப் பாணியை இமிடேட் செய்வது, கம்பி மேல் நடப்பது போன்றது. சரியாக நடந்து, யோசிக்க வைக்கிறது படைப்பு, புதிர் சரியான சதிர். சவாலுக்கு தயார்.

மதிப்பெண் : 70 / 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

எதெது தப்புன்னு சொன்னாத்தானே அடுத்த முயற்சி செய்ய முடியும், இப்படி மொட்டையா நாலு தப்புன்னு சொன்னா நான் எங்கன்னு போய் தேடுவேன். நமக்கு பொது அறிவு கம்மிங்க!! வழக்கம்போலவே வித்யாசமா, குசும்போட தான் எழுதியிருக்கிறீர்.

- தம்பி

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும் படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக போடுங்கள் (என்னையும் உற்சாகப் படுத்த வேணாமா). நன்றி !

*****

Friday, September 01, 2006

தீவிரவாதிகளுக்கு நன்றி

தீவிரவாதிகள் என்றாலே சமூகம் அவர்களை கொடூரமானவர்களாக பார்க்கின்றது. ஆனால் சில சமயம் தீவிரவாதிகளும் அவர்களை அறியாமலேயே, நமக்கு நன்மைகள் ஏதாவது செய்து விடுகின்றனர்.

ராகா என்று எனக்கொரு நண்பர் இருக்கிறார். மென்பொருள் சோதனையாளராக இருக்கிறார். அலுவலுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். லண்டன் வழியே அமெரிக்கா - நியூயார்க். பின் டல்லாஸ் மாகாணத்திற்கு செல்ல வேண்டும். கிளம்புவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே பயண ஆயுத்தங்களை செய்ய ஆரம்பித்தார்.புனே பிக் பஜாருக்கு சென்று நூடுல்ஸ் பாக்கெட்டுக்கள் ஃபேமிலி பேக் - 4, பாசுமதி அரிசி 2 கிலோ, வத்தக்குழம்பு ரெடி மிக்ஸ் - 2 பாட்டில், ஊறுகாய் பாக்கெட்டுக்கள் - 2 இன்னும் பற்பல தின்பண்டங்கள். ஊரிலிருந்து அம்மாவை வரச்சொல்லி பருப்புப் பொடி, கொத்தமல்லி பொடி, கருவேப்பிலை பொடி,புளிக்காய்ச்சல் இன்னும் சில திரவ உணவுகள் அனைத்தும் தயார்.

ஊருக்கு கிளம்பும் முன் தின இரவு, நண்பரின் வாழ்க்கையில் விதி விளையாடியது. லண்டனில் விமானத்தை தகர்க்க திட்டமிட்ட தீவிரவாதிகள்(?) 12 பேர் கைது செய்யப்பட்டனர். லண்டன் - நியூயார்க் பிரயாண கெடுபிடிகள் அதிகமாக்கப்பட்டன. திரவ உணவுகள், வேறு திரவங்கள் ஹேண்ட் லக்கேஜில் எடுத்துச் செல்ல தடை செய்யப் பட்டன. செக்-இன் லக்கேஜில் எடுத்துச் செல்லலாம் என்றாலும், நண்பர் முன் ஜாக்கிரதையாக லக்கேஜை பாதியாகக் குறைத்து விட்டு (திண்பண்டங்கள் பெரும்பாலானவற்றை தவிர்த்து விட்டு) அமெரிக்கா சென்று விட்டார்.

இப்போது ப்ளாட்டில் இன்னொரு நண்பரும், நானும் வத்தக்குழம்பு மிக்ஸையும், பொடி வகையறாக்களையும் காலி செய்து கொண்டிருக்கிறோம். ரொம்ப சுவையாக உள்ளன, அமெரிக்கா போவதற்காக வாங்கியவை அல்லவா! அந்த தீவிரவாதிகளுக்கு ரொம்ப நன்றி !!! நீங்க என்ன சொல்றீங்க, நான் நன்றி சொல்றதுல ஒன்னும் தப்பில்லையே ????

*****

மும்பையில் வசிக்கும் நண்பர் அரவிந்த் சந்திரசேகரன் எழுதி அனுப்பிய கவிதை இது.


புதிர் ---- முத்தம் !


உரசல் ஒன்றுதான்
சத்தம் ஒன்றுதான் -
இவைகளின்
இனிமையான
இணைப்பால் ஏற்படும்
முத்தமும் ஒன்றுதான்.
உதடுகள் மாறும் போது
உணர்வுகளில் மாற்றம் ஏனோ!


***

Tuesday, August 22, 2006

C. அருண் s/o சந்திரசேகரன் - V 2.0

சோம்பேறி பையன் பதட்டமாக இருந்தான். அலுவலகத்தில் ஏதாவது வேலை செய்யச் சொன்னாலே பதட்டமாகி விடுவது, சோம்பேறி பையனின் வழக்கம். சம்பளம் கொடுக்கிறார்கள் அல்லவா, போனால் போகிறதென்று ஏதாவது செய்து வைப்பான். ஆனாலும் இன்று பதட்டமாய் இருந்ததற்கு காரணம் தேன்கூடு போட்டிக்காக அவன் எழுதிய கவிதைக்கும், கதைக்கும் கிடைத்த வரவேற்புதான்(?)!.

நண்பர் அருண்.சியிடமிருந்து மின்னஞ்சல் வந்தது "என்னய்யா, உன்னோட கதைக்கு நான் பாராட்டி எழுதின பின்னூட்டத்தை போட்டுட்டீங்க, ஆனா கவிதையை கொஞ்சம் திட்டி எழுதின பின்னூட்டத்தை போடவே இல்லை வலைப்பதிவில்??". நண்பரிடம் ப்ளாக்கர் கணக்கு இல்லாததால், மின்னஞ்சலில் பின்னூட்டம் அனுப்புவார்.

"அதெல்லாமில்லை, நான்கைந்து பின்னூட்டங்கள் வந்து சேர்ந்தவுடன், அவற்றிற்கு பதிலளிக்கும் போது, உங்கள் பின்னூட்டத்தையும் வெளியிட்டு விடுகிறேன்" - சோம்பேறி பையன்.

"சரி, பரவாயில்லை, நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன், எப்படியிருக்கிறதென்று பாருங்கள்" - அருண் சி.

மின்னஞ்சலில் வந்த அந்த கவிதைதான் இது.

*****

கயரிட்ட காலணியைக் கழற்றியும்
கயிற்றால் கட்டியது போல் வலிக்குது - கால்கள்
நீண்ட நேரம் நிற்பதால் கடுக்குது

எப்போது வருவாய்

முதுகில் இருந்து சுமையை இறக்கியும்
மலையைத் தாங்குவதாய் கனக்குது - சுமை
மனதிலிருந்து இறங்க மறுக்குது

எப்போது வருவாய்

உப்பு நீரை
கொலை செய்யத் துடிக்குறேன்
விழியிலிருந்து குழியில் தள்ளி

எப்போது வருவாய்

தலையில் எண்ணெய் பிசுக்குது
வயிறு பசிக்குது
துக்கம் மட்டுமல்ல
தூக்கமும் கண்களைத் தழுவுது

எப்போது வருவாய்

காய்வதும் தேய்வதும்
நிலவு மட்டுமல்ல

எப்போது வருவாய்

வழி மேல் விழி வைத்தன்றி
வாசல் நிலையில் நிலையின்றி
தலை சாய்த்து நிற்கின்றேன்
தவம் செய்து தவிக்கின்றேன்

எப்போது வருவாய் அம்மா!!!
அலுவலகத்திலிருந்து - என்னை
தழுவுவதற்கு
எப்போது வருவாய் அம்மா!!!

*****

நண்பர் அருண்.சி மும்பையில் வேலை பார்த்த போது அறிமுகமானவர். கும்பகோணத்துக் காரர், திருச்சியில் படித்து வளர்ந்தவர். தற்போது ஹைதராபாத்தில் பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலை செய்கிறார். அவருடைய கவிதை இது. அற்புதமான கவிதைக் கருவை சுலபமாக, அழகாக சொல்லியிருக்கிறார். கடைசி வரிகளைப் படித்தவுடன், திரும்பவும் ஒரு முறை கவிதையைப் படிக்க வைக்கிறார். கவிதையென்றாலே அது காதலைப் பற்றியதுதான் என்று நினைத்துக் கொண்டிருந்த சோம்பேறி பையனுக்கு, கவிதைக்கு களங்கள் பலப்பல என்று நினைவூட்டுகிறார். வாழ்த்துக்கள் அருண்.சி, தொடர்ந்து எழுதுங்கள் !!

***

இந்த இடுகையின் முதல் பதிப்பிற்கு ஒரு பின்னூட்டமும் வராததால், பயந்து போன நண்பர் அருணின் மின்னஞ்சல் இது

innum oru comment kooda illai...namma kavithaiavulo mosamava irukku.....ennala unga peru keturumpola...onnum kedurathukku perusa illai.....i thinkovvoru varthaiya irunthathoda effectunnu oru chinnasanthegam...if possible re-publish panni irukkurathaunga web nambargal kitta sollavum.....illayaraja mothomotha music vasikkum pothu current ponathu than enakkuninappu varuthu...sathiya sothanai :-(

arun c

***

சங்க அரசியல்களும், உட்டாலக்கடி வலைப்பதிவு வேலைகளும் அருணுக்கு இன்னும் பழக்கமாக வில்லை..

ஆதலால் நண்பர்களே, கவிதையைப் படித்து விட்டு ஆல்ட் F4 போட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடாமல், ஓரிரு வார்த்தையாவது கவிதையை பாராட்டியோ, திட்டியோ பின்னூட்டம் இடுங்கள், அது நண்பர் அருண்.சியை ஊக்குப்படுத்துவதாக இருக்கும். அவரும் ஒரு புது வலைப்பதிவை ஆரம்பிக்கலாம்.

***

இந்த இடுகை சிற்சிறு மாற்றங்களுடன், மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.

Monday, August 14, 2006

ஜெண்டில்மேன் - தேன்கூடு-போட்டி சிறுகதை

சங்கர் அரைத் தூக்கத்தில் இருந்தான். டிவியில், வணக்கம் தமிழகத்தில் போன வாரம் தற்கொலைக்கு முயன்ற நடிகை தமிழ்நாட்டு முன்னேற்றத்தைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள். சங்கர், கற்பனையில் அவளுடன் டூயட் பாட ஆரம்பித்த மைக்ரோ நொடியில், பையன் போர்வையை விலக்கி, முகத்தின் அருகில் வந்து 'அப்பா, இந்த கணக்கு எப்படி போடறதுன்னு சொல்லி கொடுங்கப்பா...' என்று இழுத்தான். 'போய் அம்மாகிட்ட கேளுடா, அப்பாவுக்கு ஆபிஸ்க்கு டைம் ஆய்டுச்சி' என்ற படியே, பாத்ரூமுக்கு ஓடினான் சங்கர். 'டைலாமோ, டைலாமோ...' பாடல் ஷவர் சத்தத்தையும் மீறி வழிந்தது.

குளித்து முடித்து விட்டு டிரஸ் பண்ணும்போது, சித்ரா வந்து 'ஏங்க, ஈவினிங் ஆபிஸ்ல இருந்து வந்தவுடனே பிக்-பஜார் போய்ட்டு வந்துருவோமா, மளிகை சாமானெல்லாம் வாங்கனுங்க...' என்றாள்.

'ஏண்டி அதான் நேத்தே சொன்னேன்ல, நீ போய்ட்டு வந்துடு, பகல்ல சும்மாதான இருக்க..'

'ஹூக்கும், என்னைக்கு நீங்க வீட்டுக்கு வேலை செஞ்சிருக்கீங்க, பக்கத்து வீட்டு சோம்பேறி பையனை பாருங்க, பொண்டாட்டி ஆசைப்பட்டான்னு புனேயிலிருந்து பாம்பே போய் வடாபாவ் வாங்கிட்டு வந்து தர்ரார்!!!' என்று புலம்பியபடியே சித்ரா, சமையலறைக்கு நகர்ந்தாள்.

டிரஸ் பண்ணி விட்டு வந்து, டிபன் சாப்பிட டைனிங் டேபிளில் உட்கார்ந்தான். சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பா இருமிக் கொண்டே 'ஏம்ப்பா சங்கரு, போன வாரம் டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரை இன்னும் வாங்கிட்டு வரலையேப்பா, இன்னைக்காவது வாங்கிட்டு வாயேன்...' என்றார்.

'இந்த வீட்ல எல்லாத்துக்கும் நானே வேணும்னு எதிர்பார்த்தா எப்படி, பக்கத்து தெருவில்தானே கடை இருக்கு.. போய் வாங்கித் தொலைக்கக் கூடாதா?' என்று எரிந்து விழுந்தான்.

அவசரமாக சாப்பிட்டு விட்டு, ஷூ மாட்டிக் கொண்டு அபார்ட்மெண்ட் கீழே வந்தான். அபார்ட்மெண்ட் செகரட்டரி, அவனைப் பார்த்து கையசைத்து, 'சங்கர் சார், இந்த சனிக்கிழமை வக்கீல் வீட்டுக்கு போய்ட்டு வந்துருவோமா, நம்ம ஹவுசிங் சொசைட்டியை ரிஜிஸ்டர் பண்ணனும்ல..' என்றார்.

'சாரி சார், இந்த வாரம் நான் கொஞ்சம் பிசி.. நீங்க தேர்டு ப்ளோர் சிவா சாரைக் கூப்பிட்டுகிட்டு போங்களேன்..' என்றுவிட்டு அவர் பதிலைக் கூட எதிர்பார்க்காமல், யமஹாவில் பறந்தான். 'குடும்ப உறவுகளே, பிரச்சினைதான்.... கல்யாணம் பண்ணாமலே இருந்திருக்கலாம்...' என்று நினைத்துக் கொண்டே பாத்திமா நகர் சிக்னலை, வழக்கம்போல் ஜம்ப் செய்தான்.

அலுவலகத்தில் நுழைந்த சங்கர், காலியாயிருக்கும் கம்யூட்டரை தேர்வு செய்து, ஹெட்போனை தலையில் மாட்டியபடி காலில்(call) நுழைந்தான் "குட்மார்னிங் சார்.... ஐ ம் ஷங்கர், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் எக்ஸியூட்டிவ்....மே ஐ நோ இன் வாட் வே ஐ கேன் ஹெல்ப் யூ ?.........."

*******

எக்ஸ்ட்ரா நோட்ஸ் (முடிவை புரிந்து கொள்ளாதவர்களுக்கு மட்டும்)

ஈவண்ட் மேனேஜ்மெண்ட் என்பது நிகழ்ச்சி மேலாண்மை. அதாவது உங்கள் வீட்டில் ஒரு பெரிய பர்த்டே பார்ட்டி வைக்கறீர்கள் என்றால், நீங்கள் சங்கர் மாதிரி நிகழ்ச்சி மேலாளர்களை அணுகி பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்து வீட்டு, சன் டிவியில் டாப் டென் மூவிஸ் பார்க்கலாம், இல்லாவிடில் உலகத் தொலைக்காட்சிகளில் ஆயிரத்து ஓராவது முறையாக ஸ்டார் மூவிஸ் போடும் மம்மி ரிட்டர்ன்ஸை பார்க்கலாம். சங்கர் உங்கள் பார்ட்டிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் (காய்கறி வாங்குவது, சமையற்காரர் வைப்பது, போலிஸ் பர்மிஷன் வாங்குவது, மைக்செட் வைப்பது, இண்ட்டீரியர் டிசைனிங் செய்வது, எமர்ஜென்சி மெடிக்கல் உதவி ஏற்பாடு செய்து, லைட்டிங், இன்விடேசன் அடிப்பது, etc...) செய்து தருவார். இவ்வுளவு வேலைகளையும் இழுத்துப்போட்டு கொண்டு செய்யும் திறமையுடைய ஜெண்டில்மேன் சங்கர், வீட்டில் ஒரு துரும்பைக் கூட.........

Friday, August 11, 2006

தங்கைக்கோர் கீதம் - தேன்கூடு-போட்டி கவிதை

நீ பிறக்கும் முன்
அம்மாவின் வயிற்றில் இருந்த போதே,
நான் உன்னிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டேன்...

எப்போதாவது அம்மாவின் மடியில்
படுக்க வரும்போது,
பாப்பா வயிற்றில் தூங்குகிறாள் என்று கூறி
நான் படுப்பதை அம்மா தடுப்பாள்...
அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டு
உன்னைத் திட்டுவேன்...

நீ பிறந்த பின்பும்,
உனக்குத்தான் நிறைய செல்லம் கொடுப்பாள்..
என் மீது கவனிப்பும், செல்லமும் குறைந்ததால்
விவரமறியா சிறு வயதில்,
உன்மீது எனக்கொரு சிறு பொறாமை...

கொஞ்சம் வளர்ந்த பின்
தின்பண்டங்களுக்காக இருவரும்
சண்டை போட்டுக் கொள்வோம்...

விளையாட்டுச் சாமான்களுக்காக
நாம் சண்டை போட்டுக் கொள்ளாத
நாட்களே இல்லை...

வீட்டில் ஏதாவது பொருளை உடைத்து விட்டு
இருவரும் அடுத்தவரை குறை சொல்வோம்
இருவருக்கும் பொதுவாக அடி கிடைக்கும்...

கான்வென்ட்டில் இருந்து உன்னை
தினமும் மாலையில் அழைத்து வரும்போது
உன்னை மிரட்டிக் கொண்டே வருவேன்...

பள்ளிக் கூடத்தில் சேர்ந்த பின்
சிலேட்டிலிருக்கும் உன் வீட்டுப் பாடத்தை நான் அழிப்பதும்
என் வீட்டுப் பாடத்தை நீ அழிப்பதும் தினமும் நடக்கும்...

நான் பண்ணும் அடங்களை
அம்மாவிடம் தினமும் தவறாது போட்டுக் கொடுப்பாய்,
அம்மா திட்டி விட்டு நகர்ந்ததும்
நான் உன்னை அடிப்பேன்,
தேவைக்கதிகமான சத்தத்துடன் அழுவாய் நீ...

அம்மாவுக்கு தெரியாமல் நான்
தெருவில் விளையாட போகும்போது
என்னை தைரியம் கூறி அனுப்பி விட்டு
சிஐடியாய் அம்மாவுக்கு தெரிவிப்பாய்...
அம்மாவிடம் நான் அடி வாங்குவதை
ஒளிந்து நின்று ரசிப்பாய்...

இரவு உணவாக உப்புமா சாப்பிடும் போது
சிறு பெண்ணென்று, உனக்கு
வெல்லம் அதிகமாகவே கிடைக்கும்...
என் மீது பரிதாபப் பட்டு
சிறுதுண்டொன்றை எனக்கும் கொடுப்பாய்...

தாத்தா வீட்டு ஊஞ்சலில்
யார் அதிக நேரம் ஆடுவது என்று
தினமும் போட்டி நடக்கும், உனக்கும் எனக்கும்...

நான் நகரத்திற்கு படிக்கச் சென்றவுடன்
நான் ஊருக்கு திரும்பும் போதெல்லாம்
அம்மாவுடன், நீயும் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருப்பாய்..

வா என்று பாசத்துடன் அழைத்து விட்டு
வீட்டினில் நீ நுழைந்தவுடன்
திரும்பவும் ஆரம்பிக்கும், நம்மிருவருக்குமிடையே யுத்தம்...

இருவரும் வளர, வளர
இடைவெளி அதிகமானது...
செல்ல சண்டைகள் குறைந்து போனது...
இருப்பினும் குறையவில்லை பாசம்...

இப்போது உனக்கு திருமணமாகி விட்டது...
முன்புபோல் உன்னோடு சண்டையிட முடியவில்லை...
புதிதாய் கிடைத்த உன் உறவுகளோடு
நீ மகிழ்ச்சியாய் இருப்பது எனக்கும் மகிழ்ச்சியே...

இப்போதும், நீ அத்தானுடன் விடுமுறையில்
நம் வீட்டுக்கு வரும்போது
உன்னுடன் சண்டைபோட காத்துக் கொண்டிருக்கிறேன்...
ஏனெனில் சண்டைகளெல்லாம் சண்டைகளல்ல...

உனக்கும் புரிந்திருக்கும், என் தங்கையே,
உறவுகள் சிற்சிறு செல்லமான
சண்டைகளாலும் பலமடைகின்றன...

Thursday, August 10, 2006

ஹட்ச் நெட்வொர்க் ஏன் வீக்காக உள்ளது ?

ஒரு தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருவது சாதாரணமான காரியமல்ல. போட்டிகள் நிறைந்த இந்த துறையில் விளம்பரங்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. ஆனால், சில சமயம் விளம்பரங்களே, பலவீனமாகவும் ஆகி விடுகின்றன.

தற்போதெல்லாம் ஹட்ச் நெட்வொர்க் ஏன் வீக்காக(பலவீனமாக) உள்ளது என்ற காரணம் தெரியவந்துள்ளது.







மின்னஞ்சலில் முன்செலுத்தியவர் : நண்பர் கணேசன் சாமிநாதன்.

Wednesday, August 09, 2006

கவனாமாயிருங்கள், இது உங்களுக்கும் நடக்கலாம் !





இன்று ரக்-ஷா பந்தன் தினம். பெண்கள், தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டி உறவைக் கொண்டாடும் தினம். கவனாமாயிருங்கள் நண்பர்களே, இது இன்று உங்களுக்கும் நடக்கலாம். அழகான பெண்களைப் பார்த்தால் தூர ஓடி விடுங்கள். அதிகம் பெண்கள் கூடும் ஷாப்பிங் மால் போன்ற இடங்களை இன்று தவிர்ப்பது நல்லது. முழுக்கை சட்டை போட்டு வெளியில் நடமாடுங்கள்.

விஜய் 'நேருக்கு நேர்' படத்தில் ஹீரோயின் கவுசல்யாவிடம் சென்று 'ஏன், எங்களுக்கெல்லாம் ராக்கி கட்டி விட மாட்டீங்களா?' என்று கலாய்ப்பார். இதன் பிறகு 'அகிலா..அகிலா..' என்று சூப்பர் பாட்டு ஒன்று வரும்.

இதேபோல் நானும், இன்று அலுவலக பேருந்தில் ஏறி மேற்சொன்ன வசனத்தை கூறினேன் (ஹிந்தியில்தான் - புனேவில் தமிழ் தெரிந்த பெண்கள் குறைவு). அடுத்த வினாடியே, என் இரு கைகள் முழுவதிலும், விதவிதமான ராக்கிகள், நான் கதறக் கதற கட்டப்பட்டன. இதனால், நான் கூடிய சீக்கிரம் இந்த அலுவலகத்திலிருந்து மாறிவிடலாமென்று இருக்கிறேன்.

ஆகவேதான், இந்த எச்சரிக்கைப் பதிவு. கவனாமாயிருங்கள் நண்பர்களே !! சொந்த சகோதரியிடம் மட்டும் ராக்கி கட்டிக் கொள்ளுங்கள் !

அழகான பெண் ராக்கி கட்ட வந்தால், எப்படி எஸ்கேப் (தப்பி ஓடுவது) ஆவது என்று பின்னுட்டத்தில் யோசனை கூறுங்கள். பின்னூட்டமளிப்பவர்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் ப்ளாஸ்டிக் குடம் வழங்கப் படும் !!!

படத்திற்கு நன்றி: தினமலர்

Tuesday, August 08, 2006

என் பெயரில் போலி வலைப்பதிவு

என் பெயரில், எனது புகைப்படத்தையும் இணைத்து, போலி ஆபாச வலைப்பதிவுத் தளம் ஒன்று சமீபத்தில் உருவாகியுள்ளது. மேலும் அந்த போலி எனக்கு மின்னஞ்சலில் "டோண்டுவுக்கு நீ அடிக்கடி பின்னூட்டுவதால் உனக்கு நான் கொடுக்கும் சிறப்புப் பரிசு இது." என மிரட்டல் விடுத்துள்ளார்.

எனது உண்மையான வலைப்பதிவு முகவரி http://lazyguy2005.blogspot.com/

எனது உண்மையான ப்ளாக்கர் எண் 11015751

எனது உண்மையான மின்னஞ்சல் முகவரி swami.plr@gmail.com

எனது உண்மையான ப்ளாக்கர் பெயர் சோம்பேறி பையன் (போலி வலைப்பதிவில் சோம்பேறிபையன் (without space) என்று உள்ளது).

போலி வலைப்பதிவு பற்றி சென்ற வாரம் எனக்கு தமிழ்மணத்திலுள்ள நண்பர்கள் தெரிவித்தனர். ஆகவே, வலைப்பதிவாளர்கள், நண்பர்கள் கவனமாக இருக்கவும். ஏதாவது சந்தேகத்துக்குரிய, ஆபாசமான பின்னூட்டம் வந்தால்,
மட்டுறுத்த வேண்டாம். எனக்கு மின்னஞ்சலில் அதை தெரிவித்து, தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்!!

மேலும் இதைப்பற்றி ப்ளாக்கரில் புகார் தெரிவித்துள்ளேன்.

பின்குறிப்பு: இந்த பதிவை சென்ற வாரம் பதிவிட்டு, தலைப்பு நீளம் காரணமாக அது நீக்கப்பட்டு விட்டது. எனவே, திரும்பவும் மீள்பதிவு செய்துள்ளேன்.

Tuesday, August 01, 2006

தூக்கம் தொலைத்த இரவுகளில் எழுதிய கவிதைகள்

எப்போதாவது
பின்னிரவுகளில்
விழித்தெழும் போது,
திரும்பவும் தூக்கம்
என் கண்களைத்
தழுவும் வரையில்
தவழ்கிறேன், உன் நினைவுகளில்...
தூங்கியபின் கனவில்
திரும்பவும் நீ...

***

மருத்துவர் ஆலோசனையின் படி
இயற்கை காற்று வாங்க,
வைத்திருக்கிறேன் என் கணிணியில்
சீனரி வால்பேப்பர்...

***

கடிதங்கள்,
கைத்தொலைபேசி அழைப்புகள்,
குறுஞ்செய்திகள்,
மின்னஞ்சல்கள்,
வலைப் பதிவுகள்
ஒவ்வொன்றும்
சங்கீதமாகின்றன,
உன் பெயரைத் தாங்கி வரும்போது...

***

வலைப்பதிவுகளிலிருந்து
மீளலாமென்றுதான் நினைக்கிறேன்
ஒவ்வொரு பின்னூட்டமிடும் போதும்...
இ-கலப்பையை கணிணியில்
பார்க்கும் போதெல்லாம் குறுகுறுக்கிறது
பாழாய்ப் போன மனசு...
ஒவ்வொரு இடுகைக்கும் வரும்
ஒன்றிரண்டு பின்னூட்டங்களும்,
என்றாவது ஒருநாள் நட்சத்திரமாய்
தமிழ்மணத்தில் வலம்வரும் நப்பாசையும்,
இருக்கும்வரை இருந்தே தீருவேன்...
ஏனென்றால் நண்பர்களே,
போதை மதுவிலும், மாதுவிலும் மட்டுமல்ல...

***

தூங்கும் போதும்
மடிக்கணிணியை
இதயத்துக்கு அருகிலேயே
வைத்திருக்கிறேன்...
டெஸ்க்டாப் வால்பேப்பரில்
நீயே இருப்பதால்....

***

எத்தனை கடிதங்கள்..
எத்தனை தொலைபேசி அழைப்புகள்..
எத்தனை மின்னஞ்சல்கள்..
எத்தனை குறுஞ்செய்திகள்..
எத்தனை மின் அரட்டைகள்..
இத்தனையுமா காட்டினாய், உன் தந்தையிடம் ?
அடியா ஒவ்வொன்றும், இடி...
அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்,
காதலிக்காதவர்கள் கோழைகள்...

***

சுடும் நிலவு
சுடாத சூரியன்
அழாத குழந்தை
இனிக்கும் மிளகாய்
இனிக்காத சர்க்கரை
வரிப்பிடித்தமில்லா சம்பளம்
போலிகளில்லா தமிழ்மணம்
அடிக்காத மனைவி
அமைதியான உலகம்
அனைத்தையும் காணலாம்
ஐம்பத்தைந்தே ரூபாயில்,
கிங்பிஷர் ஸ்ட்ராங் பீர்...

***

Friday, July 21, 2006

இம்சை அரசனும், ஒசாமா பின்லேடனும் சந்திப்பு

ஒசாமா பின்லேடன், நமது இம்சை அரசன் 23-ம் புலிகேசியை சந்திக்க இந்தியா வருகிறார். இம்சை அரசனின் அரண்மணையில் இருவரும் சந்தித்து பேசுகின்றனர்.

ஒசாமா : அமெரிக்காவ, இந்த மேப்ல இருந்தே அழிச்சுடுணும்...

புலிகேசி : அந்த பொறுப்ப எங்கிட்ட விட்டுடு.... அமைச்சரோட அஞ்சாவது பொண்ணு ஸ்கூல் பேக்ல இருந்து திருடின ரப்பர் இன்னும் எங்கிட்டதான் இருக்கு...

ஒசாமா : !!!!!!!!!!




பின்குறிப்பு 1 : இதை எனக்கு மின்னஞ்சல் செய்த நண்பர் ராகவேந்திராவுக்கு நன்றி !!

பின்குறிப்பு 2 : இந்த இடுகைக்கும், தீவிரவாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. ISP நண்பர்கள் அவசரப்பட்டு தடை செய்திட வேண்டாம் :-) !!

Thursday, July 13, 2006

இஸ்ரேலில் சோம்பேறி பையன் - பாகம் 2

முந்தைய பாகத்தில் : மும்பையிலிருந்து விமானத்தில் கிளம்பியது முதல் திறந்த வாய் மூடவில்லை (முதல் வெளிநாட்டு பயணமாச்சே). இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இறங்கி 'பசேல்' ஹோட்டலுக்கு நண்பர்களுடன் பயணிக்கிறேன். ஹோட்டல் ரிஷப்சனை அணுகிய போது...

'மன்னிக்கவும், உங்களுக்கு இந்த ஹோட்டலில் இடமில்லை..' அழகிய பெண் ரிசப்ஷனிஸ்ட் வாயசைத்ததை கேட்டு எனக்கு லேசாக மயக்கம் வந்தது. மயக்கம் தவிர்க்க கோலிசோடா தேடிக் கொண்டிருந்த நொடிகளில், ரிசப்ஷனிஸ்ட் தொடர்ந்தாள் "உங்களுக்கு 'தால்' ஹோட்டலில் ரூம் புக் செய்திருக்கிறோம், நீங்கள் இங்கிருந்து அங்கு போவதற்கு நாங்களே டாக்சி ஏற்பாடு செய்து விடுகிறோம், சிரமத்திற்கு மன்னியுங்கள்". 'இட்ஸ் ஓகே..ஹி..ஹி..' இது நான்.



இது டெல் அவிவ் கடற்கரை. ஹோட்டல் தால் (TAL) ஹயர்கான் வீதியில் கடற்கரை ஓரமாக உள்ளது. 10 தளங்களுடன் கூடிய அருமையான ஹோட்டல். இரு நிமிட நடையில் கடற்கரையை அடைந்து விடலாம். கடற்கரையை நம்மூர் மெரினாவுடனோ, மும்பை ஜூகுவுடனோ ஒப்பிட்டு நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை. ஒரே வரியில் சொன்னால் 'பூலோக சொர்க்கம்'.



மேலே நீங்கள் பார்ப்பது இஸ்ரேலில் ஓடும் பஸ். எல்லாமே அரசாங்கத்தைச் சேர்ந்ததுதான். தனியார் பஸ்கள் இல்லை. யுஎஸ் போலவே 'கீப் ரைட்' வண்டியோட்டும் நடைமுறை. பஸ், கார்களில் 'ஸ்டியரிங்' (தமிழ்ல என்னங்க) இடது முன்பக்கம் இருக்கின்றன. அழகான, புதிய, நன்கு பராமரிக்கப்படும் பஸ்கள். வழித்தடங்கள், இறங்கும் இடம் தெரிவிக்கும் பலகை அனைத்திலும் 'ஹீப்ரு' மொழியே. 20-25 பேர் மட்டுமே உட்கார முடியும்.



இது லாட்டரிக் கடை. பாருங்கள், எவ்வுளவு ஜோராக உள்ளதென்று. கடையின் முன் நிற்பது எனது நண்பர். இஸ்ரேலிலும் நம்பர் லாட்டரி உண்டு. ஒருநாள் அலுவலகம் முடிந்து திரும்பும் போது, சிறுமி ஒருவள் (8 அல்லது 9 வயது இருக்கும்) லாட்டரி வாங்கிக் கொண்டிருந்தாள். 'ஃபாரின் ஃபாரின்தான்' என்று நினைத்துக் கொண்டே நகர்ந்து விட்டேன்.



இரண்டு இஸ்ரேல் இளம்பெண்கள் ஒய்வெடுக்கின்றனர். இஸ்ரேலில் அனைத்து இளம்பெண்களும் அழகாக உள்ளனர் (அல்லது எனக்கு அப்படி தோன்றுகிறது). 18 வயதில் ராணுவத்திற்கு கட்டாயமாக அனுப்பப் படுவதாலும், அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்களாலும் எல்லாருமே 'ஜில்'லென்று உள்ளனர். (பெண்கள் மட்டுமல்ல, ஆண்களுமே ஸ்மார்ட்டாக, தொப்பையில்லாமல் சல்மான் கான் போலுள்ளனர்). பெண்கள் உடைகளும் ரொம்பவே மாடர்ன்தான், மிகக் குறைவான உடைகளை மட்டுமே நிறைய பெண்கள் அணிகின்றனர்.

இஸ்ரேலில் நிறைய தமிழ் வலைப்பதிவாளர்கள் இருப்பதாக தெரியவில்லை. எனக்குத் தெரிந்து வஜ்ரா சங்கர் இருக்கிறார். வேறு யாராவது இருப்பது தெரிந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். ஆனால் நான் அங்கே இருந்தபோது யாரையும் சந்திக்க இயலவில்லை. அடுத்த முறை பார்ப்போம்.


இஸ்ரேல் பற்றி நிறைய தமிழ் வலைப்பதிவுகள் வந்துள்ளன. சர்ச்சைக்குறிய விஷயங்களில்லாமல், இஸ்ரேலின் சுற்றுலாத்தளங்களை / பயண அனுபவங்களை பற்றிய பதிவுகள் குறைவே (என நினைக்கிறேன்).

வஜ்ரா சங்கர் தனது வலைப்பதிவில்புகைப்படத்துடன் சில இடுகைகளை, அருமையான விவரங்களுடன் இட்டுள்ளார். தள முகவரி http://sankarmanicka.blogspot.com/

வேறாதாவது தமிழ் வலைப்பதிவுகள் சுற்றுலா - இஸ்ரேல் பற்றி இருந்தால், நண்பர்கள் பின்னூட்டத்தில் முகவரி தரலாம்.

ஷபாத் பற்றியும், ஹோட் - ஹசரான் பற்றியும் அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாமே !!

Friday, July 07, 2006

இஸ்ரேலில் சோம்பேறி பையன் - பாகம் 1

'டெல் அவிவ் விமான நிலையத்தை நெருங்கி விட்டோம். பயணிகள் இடுப்புப் பட்டையை இறுக்கிக் கொள்ளுங்கள். இனிய இஸ்ரேலிய அனுபவத்திற்கு ராயல் ஜோர்டான் உங்களை வாழ்த்துகிறது..' விமானியின் குரல் ஒலிபெருக்கியில் மெலிதாக வழிந்தது. ஜோர்டான் நாட்டு தலைநகரம் அம்மானிலிருந்து கிளம்பிய முப்பது நிமிட பயணத்தில் டெல் அவிவ் நகரத்தை அடைந்து விட்டோம்.


புனேயிலுள்ள தொலைத்தொடர்பு மென்பொருள்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் சோதனையாளனாக வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்தில், அலுவலக வேலைக்காக இஸ்ரேல் செல்ல வேண்டியதாகி விட்டது (அட்ரா சோம்பேறி அட்ரா, ஆங்கிலக் கலப்பில்லாமல் எவ்ளோ பெரிய வாசகம்ம்ம்ம்).

புனேயிலிருந்து மும்பைக்கு சென்று, மும்பையிலிருந்து ஜோர்டானின் அம்மானுக்கு வந்திறங்கினோம். உடனடி இணைப்பு விமானத்தில் இடமில்லாததால், 30 மணிநேரம் அம்மானில் 'க்வீன் அலியா' விடுதியில் தங்கியிருந்து விட்டு இஸ்ரேலுக்கு பயணித்தோம். நான் சென்று திரும்பியது ஒரு மாதத்திற்கு முன்பு, தற்போதுள்ள அளவுக்கு நிலைமை அப்போது மோசமில்லை(?).

டெல் அவிவ் நகரத்தில் 'பென் குரியன்' விமான நிலையத்தில் இறங்கிய மறுவினாடியே விமான நிலையத்தின் பிரமாண்டம் இனம்புரியாத ஓர் உணர்ச்சிக் கலவையை ஏற்படுத்தியது. முதல் வெளிநாட்டு பயணம், சென்ற வேலையை நல்லபடியாக முடித்துவிட்டு திரும்ப வேண்டுமே என்று சிந்தனை ஓடியது. மிகப்பெரிய, சுத்தமான, அழகான, அமைதியான(!) விமான நிலையம் பென் குரியன். நாட்டு முன்னேற்றத்திற்காக பாடுபட்ட 'பென் குரியன்' என்ற தலைவர் பெயர் விமான நிலையத்திற்கு வைக்கப் பட்டுள்ளது.

'நீங்கள் ஏதாவது பயங்கர ஆயுதங்களை வைத்துள்ளீர்களா ?' இமிக்ரேஷன் (இதற்கு தமிழில் என்ன?) அதிகாரி கேட்டபோது தூக்கி வாரிப் போட்டது. ஊரிலிருந்து புறப்படும்போதே அயல்நாட்டு கலாச்சார வகுப்புகளில் தெளிவாக சொல்லி இருந்தார்கள். இமிக்ரேஷன் கேள்விகளுக்கு அதிபுத்திசாலித்தனமாக ஏதாவது உளறி வைக்காமல் எளிமையாக பதிலை சொல்லவும் என்று. விசாரணையை முடித்து விட்டு வெளியே வந்தேன்.

இஸ்ரேல் நாட்டு தலைநகரம் ஜெருசலம். மிகச் சிறிய நாடு. மக்கள் தொகை 65 லட்சம் என கேள்விப் பட்டேன் (மும்பையை விடக் குறைவு). எப்போதும் பதட்டமான மத்திய கிழக்கு பகுதியின் அரசியல் சூழலில், சுற்றியுள்ள நாடுகளில் ஜோர்டானுடன் மட்டுமே நட்புறவு. பாலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்சினை பற்றி நான் ஏதாவது கருத்து சொன்னால், பின்னி பெடலெடுக்க தமிழ்மணம் நண்பர்கள்(!) தயாராக உள்ளதால் 'நோ கமெண்ட்ஸ்'.

இஸ்ரேல் நாட்டு கரன்சி 'ஷக்கீல்' (ஷகீலா அல்ல..) என்று அழைக்கப் படுகிறது. ஒரு ஷக்கீலின் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 10 ரூபாய். நமது ஊர் பைசா போல் அங்கு 'அகோரட்' நாணயம். 100 அகோரட், 1 ஷக்கிலுக்கு சமம். இஸ்ரேலுக்கு புறப்படும்போதே செலவுக்கு அலுவலகம் அமெரிக்க டாலர்கள் கொடுத்தனர் (அப்ப்ப்ப்பா, டாலரை தொட்டு பார்த்துட்டோம்ல..). விமான நிலையத்திலேயே கொஞ்சம் டாலரை ஷக்கீலாக மாற்றிக்கொண்டு வெளியே வந்து டாக்சி பிடித்து 'ஹயர்க்கான் ரோட்டுல ஹோட்டல் பேசல் போப்பா' என்றோம்.

டாக்சி டிரைவர் எங்களை ஏற இறங்க பார்த்து விட்டு, அப்படி ஒரு ஹோட்டலே இஸ்ரேலில் இல்லை என்று சூடமேற்றி சத்தியம் செய்யாத குறையாக சொன்னார். என்னாடா இது, அலுவலகத்தில் இந்த ஹோட்டலதான பதிவு பண்ணி அட்ரஸ் வேறு கொடுத்து விட்ருக்காங்க என்று மூளையை (இல்பொருள் உவமைதான்...) கசக்கிக் கொண்டிருந்த போது இஸ்ரேல்காரர் ஒருவர் சீட்டை வாங்கிப் பார்த்து விட்டு 'இது பேசல் அல்ல. ஹோட்டல் பசேல் (BASEL)' என்றார். 'சரிதான்..விளங்கிடும்டா...' என்று ஒருவழியாக ஹோட்டலை வந்தடைந்தோம்.

ஹயர்க்கான் டெல் அவிவ் நகர கடற்கரையை ஒட்டிய அழகான பெரிய வீதி. டெல் அவிவ்வின் பெரிய ஹோட்டல்கள் நிறைய இங்கே உள்ளன. நமது இந்திய தூதரகம் இங்கேதான் உள்ளது. ஹோட்டல் உள்ளே சென்றதும் நடக்கப்போகும் கூத்தை அறியாமல் உற்சாகமாக ரிசப்சனை அணுகுகிறோம். அப்ப்ப்பா, ஒருவழியா ஹோட்டலை வந்து சேர்ந்தாச்சு. கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு உங்களையெல்லாம் பாகம் - 2ல் சந்திக்கிறேனே !!

பாகம் - 2ல்

இஸ்ரேலிலுள்ள தமிழ் வலைப்பதிவாளர்கள்
இஸ்ரேல் பற்றிய தமிழ் வலைப்பதிவுகள்
டெல் அவிவ் - ஜாபா சுற்றுப்பயணம்
ஹோட் ஹோசரானிலுள்ள அலுவலகத்தை பற்றி..
'ஷபாத்' என்றால் என்ன?

பின் குறிப்பு

இஸ்ரேல் பயண அனுபவங்களை தொடர்ந்து எழுதி இம்சை அரசன் 24ம் புலிகேசி ஆகலாம் என்று ஒரு உத்தேசம் உள்ளது. நண்பர்களின் பின்னூட்ட ஆதரவைப் பொறுத்து பாகங்கள் சுருக்கவோ, அதிகரிக்கவோ படும். ஆகவே அய்யா, அம்மா, நல்லதோ, கெட்டதோ ஏதாவது இரண்டு வரி பின்னூட்டம் போட்டு, வளர்கின்ற வலைப்பதிவாளரை(அட்ரா, அட்ரா.. 'வ'வுக்கு 'வ' எதுகை மோனை) தமிழ் மணத்தில் வாழ வையுங்கள் (திரும்பவும், 'வ'வுக்கு 'வ') !!

Saturday, April 08, 2006

IT திருக்குறள்கள்

திருக்குறளின் 134-வது அதிகாரம் சமீபத்தில் கண்டறியப் பட்டுள்ளது. அந்த அதிகாரத்தில் கணிணி, இணையம், மென்பொருள் மேம்பாடு போன்றவைகளைப் பற்றி திருக்குறள் அற்புதமாக விளக்குகின்றது. இந்த அதிகாரம் பின்வருமாறு..

Bug கண்டுபிடித்தாரே ஒருத்தர் அவர்நாண
Debug செய்து விடல்.

Copy-Paste செய்து வாழ்வாரே வாழ்வார்
மற்றவரெல்லாம் Codingகெழுதியே சாவர்.

எம்மொழி மறந்தார்க்கும் Job உண்டாம்
Jobஇல்லை "C"யை மறந்தார்க்கு.

Logic Syntax இவ்விரண்டும் கண்ணென்பர்
Program செய் பவர்.

Netடில் தேடி Copy அடிப்பதன்
மூளையிலிருந்து Logic யோசி.

பிறன் Code நோக்கான் எவனோ
அவனே Tech Fundu.

எதுசெய்யார் ஆயினும் Compileசெய்க செய்யாக்கால்
பின்வரும் Syntax Error.

எது தள்ளினும் Projectல் Requirement
தள்ளாமை மிகச் சிறப்பு.

Chatடெனில் Yahoo-Chat செய்க இல்லையேல்
Chatடலின் Chatடாமை நன்று.

Bench Project Email இம்மூன்றும்
Programmer வாழ்வில் தலை.

பின்குறிப்பு : இந்த திருக்குறள்களை நண்பர் மணி, ஹைதராபாத்திலிருந்து இரு மாதங்களுக்கு முன்பு அனுப்பினார். அவருக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. நண்பர்கள் மேலும் புதிய திருக்குறள்களை சிந்தித்து பின்னூட்டத்தில் இடலாம் !

Friday, February 24, 2006

சங்கிலித் தொடர் பதிவு - ஜோசப் & டோண்டுவிடமிருந்து

மூன்று நாட்களாய் அலுவலகத்தில் நிறைய வேலை இருந்ததால் தமிழ்மணம் பக்கம் வரமுடியவில்லை. திடீரென்று நேற்று மாலை தமிழ்மணத்தை திறந்த போது, சங்கிலித்தொடர் பதிவுகள் நிறைய தென்பட்டன. தெரிந்த விளையாட்டுதான், புது வடிவத்தில். சங்கிலித்தொடரில் என்னை அன்பால் இழுத்த ஜோசப் மற்றும் டோண்டுவிற்கு நன்றி !

பிடித்த நான்கு விஷயங்கள்

1. சினிமா பார்ப்பது / விமர்சிப்பது : சினிமா பெரும்பாலானோருக்கு பிடித்த பொழுதுபோக்குதான். சினிமா பார்ப்பதும், சினிமா பார்க்க வருபவர்களை பார்ப்பதும் எனக்கு இன்னமும் பிடித்தமான விஷயம்தான். ஆனால் தியேட்டரில்தான் சினிமா பார்க்க பிடிக்கும்.

2. கிரிக்கெட் பார்ப்பது / விளையாடுவது / விமர்சிப்பது : ஊரிலிருந்த வரை கிராமத்து கிரிக்கெட்டான கிட்டிப்புல்லின் ரசிகன் நான். திருச்சிக்கு படிக்க வந்தவுடன், கிரிக்கெட்டுக்கு மாறிவிட்டேன். இப்போதும் நமது கிரிக்கெட் பதிவுகளை 'கிரிக்கெட் கூட்டுப்பதிவில்' காணலாம்.

3. பழைய பாடல்கள் கேட்பது : பொதுவாக பாடல்கள் கேட்பது பிடிக்கும். பழைய பாடல்கள் இன்னும் ரொம்பவே பிடிக்கும். ஜெயா டிவியில் இரவு 11 மணியிலிருந்து 12 மணிவரை ஒலிபரப்பும் தேன்கிண்ணம் நிகழ்ச்சியின் பரம ரசிகன். நேற்று கூட 'கங்கைக் கரை தோட்டம்...' பாடலில் என்னையே மறந்தேன்.

4. தமிழ் வலைப்பதிவுகள் படிப்பது / படைப்பது : ஆறு மாதமாகத்தான் தமிழ்மணம் பழக்கம். தேசிகன் அறிமுகப் படுத்தினார். அவருதவியுடன் வலைப்பதிவையும் ஆரம்பித்தேன். முன்பெல்லாம் ஆனந்த விகடன், குமுதம், தினமலர், தினமணி, வெப் உலகம், ரீடிஃப் என்று எல்லா தமிழ் வலைத்தளங்களுக்கும் செல்வேன். இப்போதெல்லாம் தமிழ்மணத்திற்கே நேரம் போதவில்லை. டோண்டு சொல்வது போல், தமிழ்மணத்தைப் பார்க்காவிட்டால், கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடுகிறது. தமிழ்மணத்தை உருவாக்கி, நிர்வாகித்து, பங்களித்து வரும் நண்பர்கள், வலைப்பதிவர்கள் அனைவருக்கும் நன்றி !

பிடித்த நான்கு படங்கள்

1. அன்பே சிவம்
2. தவமாய் தவமிருந்து
3. குருதிப்புனல்
4. காக்க காக்க

பிடித்த நான்கு பாடல்கள்

1. சென்னை செந்தமிழ் (எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி)
2. நானொரு சிந்து (சிந்து பைரவி)
3. சின்ன சின்ன ஆசை (ரோஜா)
4. பச்சைக்கிளிகள் தோளோடு (இந்தியன்)

பிடித்த நான்கு இடங்கள்

1. டி. பழூர் (நான் பிறந்து வளர்ந்த கிராமம்)
2. திருச்சி (பள்ளி, கல்லூரி படிப்பு)
3. ஹைதராபாத் (முன்பு வேலை பார்த்த இடம் - 5 வருடங்கள்)
4. மும்பை (தற்போது வேலை பார்க்கும், வசிக்கும் இடம்)

பிடித்த வலைப்பதிவாளர்கள்

நிறைய பேரை பிடிக்குமென்பதால் வகைப்படுத்தி எழுதுகிறேன். இன்னும் நிறைய வலைப்பதிவுகள் ஞாபகத்தில் இல்லாததால், எழுத முடியவில்லை. நண்பர்கள், பொறுத்தருளுக.

அனுபவங்கள் / மீள் நினைவுகள் / சமூகம்

1. டோண்டு
2. டி.பி.ஆர்.ஜோசப்
3. தருமி
4. 'தாட்ஸ் இன் தமிழ்' பத்ரி

நகைச்சுவை / நையாண்டி

1. டுபுக்கு
2. இட்லி வடை
3. முத்து (தமிழினி)
4. பினாத்தல் சுரேஷ்

நிகழ்வுகள் / கதைகள் / பயண அனுபவங்கள்

1. தேசிகன்
2. புனே செப்புப் பட்டயம் மோகன்தாஸ்
3. கடற்புறத்தான் ஜோ
4. எண்ண கிறுக்கல்கள் செல்வராஜ்

சங்கிலித் தொடரில், நான் அழைக்க விரும்புபவர்கள்

1. தேசிகன்
2. ரஷ்யா இராமநாதன்
3. 'தாட்ஸ் இன் தமிழ்' பத்ரி
4. கோ. கணேஷ்

Thursday, February 16, 2006

கருப்பு எம்.ஜி.ஆர் அழைக்கிறார்

தலைப்பை படித்தவுடன், அரசியலை எதிர்பார்த்து வரும் நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு. இது அரசியல் பற்றிய பதிவல்ல. சாப்பாட்டில் ஊறுகாய் போல், இப்பதிவிலும் அரசியல் உண்டு. பொறுமையாக படியுங்கள் !

தங்கையின் திருமணத்திற்காக 15 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்றிருந்தேன். விடுமுறை நாட்களில் பல சுவையான, மகிழ்ச்சியான சம்பவங்களும், சில கசப்பான அனுபவங்களும் கிடைத்தன. அவற்றிலிருந்து இதோ உங்களுக்காக, சில செய்தித் துளிகள்.

மும்பையிலிருந்து சென்னைக்கு தாதர் விரைவுவண்டியிலும், சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு ராக்போர்ட் விரைவுவண்டியிலும் பதிவு செய்திருந்தேன். தாதர் பயணிகளுக்கான உணவு / திண்பண்டங்கள் வழங்கும் சேவையில் நன்றாக செயல்பட்டது. வண்டியும், கழிவறைகளும் ஓரளவுக்கு சுத்தமாக இருந்தன. ஆனால் ராக்போர்ட் விரைவுவண்டியில் முந்தைய நாளிரவும், மறுநாள் காலையிலும் திண்பண்டங்கள், பானங்கள் எதுவுமே வரவில்லை. காலையில் கும்பகோணம் 7:30 மணிக்கு வந்து சேரும் வரை காபி கூட அருந்த முடிய வில்லை.

கும்பகோணத்தில் ஆங்காங்கே சாலையமைக்கும் / செப்பனிடும் பணிகள் நடந்து வருகின்றன. எங்கள் ஊரில் கூட சிமெண்ட் சாலை அமைக்கப் பட்டுள்ளது. சாலைப் பணியாளர்கள் திரும்ப வந்ததாலா அல்லது தேர்தலுக்காகவா என்று புரியவில்லை.

எங்கள் கிராமத்தில் பள்ளி மாணவர்கள், மாணவிகள் நிறைய பேர் புது மிதிவண்டி வைத்திருந்தனர், அரசாங்கம் கொடுத்தது. சிலர் வெள்ள நிவாரண உதவித்தொகை, வேட்டி, சேலைகள் பெற்றிருந்தனர். இவை அனைத்தும் ஓட்டுகளாக மாறிவிடும் என்றே நினைக்கிறேன்.

சாலைப் பணியாளர்களை திரும்ப அழைத்தது, அரசு ஊழியர்களுக்கு சலுகைகள், கலைத்துறையினருக்கு விருதுகள் என அதிமுக அரசு 7 கட்சி கூட்டணிக்கு தலைவலியை கொடுத்து வருவதை கண்கூடாக பார்க்க முடிந்தது. மதிமுக வேறு மதில்மேல் பூனையாக இருந்து வருவது கருணாநிதிக்கு கவலையளிக்கும் விஷயமே.

நான் ஊரிலிருந்த போது எங்கள் கிராமத்திற்கு விஜயகாந்த் தேர்தல் சுற்றுப் பயணமாக வந்தார். 2000 பேர் கொண்ட கூட்டத்தில் தெளிவாக பேசினார். வேலையில்லா திண்டாட்டத்தை, லஞ்ச ஊழலை ஒழிப்பேன். சுகாதார வசதிகளை மேம்படுத்துவேன். ரேஷன் பொருட்களை வீடு வீடாக வினியோகிப்பேன், பட்டதாரி மாணவர்களுக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்குவேன் என்றெல்லாம் கூறினார். மக்கள் வெங்காய பகோடா தின்று கொண்டே அனைத்தையும் கேட்டு, சில சமயங்களில் கைதட்டி விட்டு, மெட்டி ஒலி பார்க்க வீட்டுக்கு சென்று விட்டனர். அனைவரின்
முகத்திலும் (என்னையும் சேர்த்து) ஒரு சினிமா நட்த்திரத்தை பார்த்த பரவசம் (மட்டுமே) தெரிந்தது.

கொள்ளிடம் ஆற்றில் நிறைய தண்ணீர். ஆனால் திருச்சியில் காவரி ஆறு வறண்டு காணப்படுகிறது. எங்கே போயிற்று அத்தனை நீரும், கடலுக்கா என்று தெரியவில்லை. எங்கள் கிராமத்திலும், சுற்றுப் புறங்களிலும், விவசாயத்தில் ஓரளவுக்கு நல்ல விளைச்சல்.

எங்கள் ஊரில் பி.ஸ்.என்.எல் டவர் போட்டு விட்டதால் பெரும்பாலோர் கையில் செல்போன் காணப்பட்டது. எஸ்.எம்.ஸ், மிஸ்டு கால், டாக் டைம் போன்ற பதங்களை பெரும்பாலோர் தெரிந்தும், தெரியாமலும் உபயோகித்து கொண்டிருந்தனர்.

கும்பகோணத்தில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களை பற்றி விசாரித்தேன். தவமாய் தவமிருந்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. டிஷ்யூம் பரவாயில்லை. ஆதி அவுட் என்ற தகவல்கள் கிடைத்தன. இதில் ஆதியை பற்றி நிறைய கிண்டல் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனக்கு வந்த ஓர் குறுஞ்செய்தி "ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.. ஆதி பார்த்தால் அன்றே சாவு !!!"


ஊரில் இருந்த போது, ஒரு மாலைப்பொழுதில் தமிழ்மணத்தைப் பார்க்கும் ஆவல் எழுந்ததால், ஊரிலிருந்த ஒரே இணையகத்திற்கு (Browsing Center)சென்றேன். இரண்டு கணிப்பொறிகள். ஓர் இளம்பெண், பள்ளி மாணவி ஒருவருக்கு எம்.ஸ் வோர்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். 'ப்ரவுசிங் பண்ணலாமா ??' இது நான். கைலி, சட்டை, ஸ்லிப்பர் செருப்புடன் நின்று கொண்டிருந்தேன். அந்த பெண் நம்பமுடியாமல் 'என்ன ? என்ன வேணும் உங்களுக்கு ?' என்றார். 'இல்ல.. ப்ரவுசிங் பண்ணனும்.. சிஸ்டம் இருக்கா ??' என்றேன். அரை மனதாக 'இருக்கு.. அம்பது ரூவா ஒரு மண்நேரத்துக்கு.. ஆனா அப்பப்ப டிஸ்கனெக்ட் ஆயிடும்.. போன் லைன் சரியில்ல.. பரவாயில்லயா ??' என்றார். அவர் அம்பது ரூவா என்று சொல்லும்போதே நான் திரும்ப ஆரம்பித்து விட்டேன், தமிழ்மணத்திற்கு என்ன, மும்பை சென்று பார்த்துக் கொள்ளலாம் !

எங்கள் ஊரான டி. பழூரிலிருந்து கும்பகோணம் செல்ல சாதரணமாக 75 நிமிடங்கள் ஆகும். தீபாவளி சமயத்தில் பெய்த மழையினால் சாலைகள் படுமோசமாக இருந்ததால், 120 நிமிடங்கள் பயணமாகி விட்டது. சண்முகம் பேருந்தில் இரண்டு டிவி பெட்டிகள் வைக்கப்பட்டு சிடி ப்ளேயரில் ரஜினி தேவுடா.. தேவுடா என்று ஆடிக் கொண்டிருந்தார். திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்ததில் கும்பகோணம் வந்ததே தெரியவில்லை. பக்கத்தில் உட்கார்த்திருந்த பால்காரர் '1234' எஸ்.எம்.எஸ் / குறுஞ்செய்தி கொடுத்து வந்த பதிலில் 'இந்தியா 120 ஃபார் 2, 24 ஒவர், டெண்டுல்கர் விளையாடறான்..' என்று நண்பருக்கு ரன்னிங் கமெண்ட்டரி கொடுத்தார். இந்தியா முன்னேறி வருகிறது என்று எனக்கு தோன்றிய போது சாலையில் 'கருப்பு எம்.ஜி.ஆர் அழைக்கிறார்' என்ற விஜயகாந்த் போஸ்டர் கண்ணில் பட்டது !

Wednesday, January 18, 2006

சோம்பேறி பையனுக்கு கவிதை எழுத தெரியுமா ?

நமக்கு கல்லூரி காலத்திலிருந்தே கவிதைகள் எழுத பிடிக்கும். கவிதைகள் ஏதாவது கிறுக்கி, அதை வைரமுத்து அளவுக்கு நான்கு முறை கரடுமுரடாக படித்து கருத்து கேட்பதால், நண்பர்கள் இப்போதும் என்னிடம் சற்று கவனமாகத்தான் இருப்பர். நமது டி.பி.ஆர். ஜோசப் 'சூரியன்' தொடர்கதை எழுதுகிறார் அல்லவா, அவர் தொடர்கதையின் அத்தியாயங்களுக்கு கவிதைகள் எழுதித் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தேன். இரு நாட்கள் முன்பு ஆறாம் அத்தியாயத்தை அனுப்பி அதற்கு தோதான ஓர் கவிதை கேட்டிருந்தார். நான் வழக்கம் போல் சோம்பேறித் தனமாக கூகுல் மின்னஞ்சல் பெட்டியை இரண்டு நாட்களாக திறவாமல், இன்றே பார்த்தேன். உடனே அவருக்கு ஓர் கவிதை அனுப்பி வைத்தேன். அது, இங்கே உங்கள் பார்வைக்கு..


சூரியன் முகம் பார்க்காது
தாமரை மலராது தெரியுமா
உன் முகம் பார்க்காமல்
நான் மலர மாட்டேன், தெரியுமா ?

தலைவனும், தலைவியும்
ஊடலோடு காதல் புரியும்
அகநானூற்று கவிதைகள் பலவுண்டு..
எதையேனும் தெரிந்திருப்பாயா ?

தெரிந்திருந்தால்
என்னை முழுமையாய்
புரிந்திருப்பாயோ ??

விளையாட்டாய் புரிந்த செயல்
வினையாய் முடிந்த வருத்தத்தில்
மனதார கேட்கிறேன், மன்னிப்பு
மலர்வாயா, மறப்பேன் என் தப்பு !

தலைவன் ஊரிலில்லாத பொழுது
பசலை நோயில் ஏங்கும்
தலைவி போல், ஏங்குகிறேன்
நான்உன் புறக்கணிப்பால்...

உன்னைக் காட்டிலும் எனக்கு
உன் திறமை பிடிக்கும்...
உன் கர்வம் பிடிக்கும்..
உன் திமிர் பிடிக்கும்..
உன் ஆணாதிக்கம் பிடிக்கும்..
உன் கோபம் பிடிக்கும்..
இத்தனையும் மீறி
உன் நற்குணம் பிடிக்கும்...

இத்தனையும் பிடித்ததாலேயே
உன்னை எனக்கு பிடித்தது...
உன்னையே எண்ணி தவிக்கும்
என்னை பிடிக்குமா, உனக்கு ?