Saturday, September 17, 2005

சானியா மிர்சாவும், பனி விழும் மலர் வனமும்

இந்த மாதிரி குண்டக்க, மண்டக்க என்று தலைப்பு வைப்பதின் ஒரே நோக்கம், தலைப்பு வித்தியாசமாய் இருக்கிறதே என்றாவது நிறைய பேர் வந்து பார்ப்பார்கள் அல்லவா? இருந்தாலும் தலைப்பை நியாயப் படுத்தும் வகையில் அது சம்பந்தமாய் ஏதாவது எழுதி விடுவேன், நம்புங்கள்!

வலைப்பதிவு துவங்கும் போது, என்ன பெயர் வைக்கலாம் என்று சன் டிவியில் இரவு 11 மணிக்கு வரும் 'புத்தம் புதுசு' பார்த்துக் கொண்டே யோசித்தேன். 'பனி விழும் மலர் வனம்', 'வசந்த முல்லை', 'வெண்ணிலா' என்று நிறைய பெயர்களை யோசித்தேன். இந்த மாதிரியெல்லாம் இலக்கியத் தரமாக பெயர் வைத்தால், நமது இமேஜிற்கு ஒத்து வராது என்று 'சோம்பேறி பையனின் எண்ணங்கள்' என்று வைத்து விட்டேன்!

பெருவாரியான இந்திய விளையாட்டு ரசிகர்களைப் போலவே, எனக்கும் கிரிக்கெட் என்றால் ரொம்ப பிடிக்கும். இருந்தாலும் சமீப காலமாக இந்திய அணி விளையாடுவதைப் பார்த்தால், கருடபுராணத்தில் இம்மாதிரி விளையாடுவதற்கு ஏதாவது தண்டனை இருக்குமா என்று தேடத் தோன்றுகிறது. இப்போது கூட இந்தியா ஸிம்பாப்வேயில் தடவித் தடவிதான் ஆடிக் கொண்டிருக்கிறார்கள், பேசாமல் டென்னிஸுக்கு மாறிவிடலாம என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சானியா மிர்சா வேறு அழகாய் இருக்கிறார். சர்வதேசப் பட்டியலில் 34வது இடத்திற்கு வந்து, கலக்கிக் கொண்டிருக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் என் கனவில் வந்து 'ராரா..' என்று சந்திரமுகி ஜோதிகா போல் ஆடினாலும் ஆடுவார் என்று பட்சி சொல்லுகிறது!

சென்ற பதிவில் குறிப்பிட்ட பஞ்சாப் பைங்கிளியிடம் இன்னும் கிரிட்டிங்ஸ் கார்டு கொடுக்க வில்லை. ஒருவேளை ஒத்து வராவிட்டால், அடுத்த விண்ணப்பம் சானியா மிர்சாவிடம் போடலாம் என்று உத்தேசம். ஆந்திரா அல்லுடுவாகி விடலாம். யாராவது அவரது மின்னஞ்சல் முகவரி வைத்திருந்தால் கொடுங்களேன், முயற்சி செய்கிறேன். ஓர் தமிழ் வலைப்பதிவு எழுத்தாளனுக்கு இத்தனை சோதனையா? 'பாரடி பராசக்தி' என்று பாரதி ரேஞ்சில் கவிதை பாட நாக்கு துடிக்கிறது!

சென்ற வாரம் நண்பர் ஒருவரின் இல்லத்திற்கு சென்றிருந்தேன். நண்பர் தமிழ்நாட்டில் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். அவருக்கு சமீபத்தில் (5 மாதம் முன்பு) பெண் குழந்தை பிறந்து , இப்போதுதான் மும்பைக்கு அழைத்து வந்துள்ளார். அந்த குழந்தையைப் பார்க்கச் சென்றேன். போனவன் சும்மா இல்லாமல் தமிழில் வாழ்த்துப்பா ஒன்றையும் (நாந்தான் பெரிய கவிஞனாச்சே...) எழுதி எடுத்துச் சென்றேன்.

மகாமகக் கரையில் பிறந்து
மகாராஷ்டிரா மண்ணை மிதித்திருக்கும்
மலரே, வருக !

இதே அந்த வாழ்த்துப்பாவின் ஆரம்பம். இந்த ஸ்டைலில் இரண்டு பக்கத்திற்கு எழுதி இருந்தேன். முழு கவிதையையும் இங்கே வெளியிட்டால் நீங்கள் ஆல்ட் F4 போட்டு விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

வாழ்த்துப்பா கஷ்டப்பட்டு சொந்தமாக எழுதியது என்பதால் அதன் முதல் இரண்டு மூன்று அடிகளை மட்டும் குழந்தையின் காதில் வேதம் ஓதுவது போல் ஓதினேன். அப்போது அழ ஆரம்பித்த குழந்தைதான், இன்னும் அழுகையை நிறுத்தவில்லையாம். நண்பர் இப்போதெல்லாம் தள்ளி நின்றே என்னை நலம் விசாரிக்கிறார். ஆதலால் தற்காலிகமாக கவிதை எழுதுவதை நிறுத்தி வைத்துள்ளேன். உங்கள் நல்ல நேரம், பிழைத்தீர்கள்!

இங்கிலாந்து அட்டகாசமாய் ஆடி 'ஆஷஸ்' கிரிக்கெட் தொடரை, 18 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றுள்ளனர். லண்டனில் பெரிய வெற்றி ஊர்வலமெல்லாம் கூட நடந்தது. இந்தியா ஸிம்பாப்வேயுடன் டெஸ்ட் தொடரை வென்று வந்தால், இங்கே கூட இந்த மாதிரி வெற்றி பேரணியெல்லாம் நடத்தலாம், ஏனென்றால் தற்போதைய நிலைமைக்கு ஸிம்பாப்வேயை வென்றாலே, இந்தியாவுக்கு பெரிய சாதனைதான்!

என்னமோ போங்க, நானும் ஒவ்வொரு கிரிக்கெட் தொடரையும் விழுந்து விழுந்து பார்க்கிறேன். இந்தியா கோப்பை வாங்கறதத்தான் பார்க்க முடியவில்லை. இப்படி தொடர்ந்து பார்த்து, இந்திய கிரிக்கெட்டை ஆதரிக்கின்ற எனக்கு, யாராவது விருது கொடுத்தா தேவலை!

10 comments:

Anonymous said...

வாழ்த்துப்பா....
பார்த்துப்பா...
சானியா மிதிச்சா தாங்கமட்டீங்க... :)

ஜெகதீஸ்வரன் said...

அதற்குள், மேட்ச் ஃபிக்ஸிங் அது இதுன்னு எதொ விசயம் கசிகிறதே !?!?! அப்படியும் இருக்குமோ ??

Anonymous said...

vara vara unga alambalukku alave illama pochu

பழூர் கார்த்தி said...

இருக்கலாம் ஜெகதீஸ்வரன், இந்தியா அபாரமாக ஆடி நியுசிலாந்தை (முத்தரப்பு தொடரில்) வென்ற போதே
சந்தேகமாக இருந்தது !!!

பழூர் கார்த்தி said...

அரசு, பின்னூட்டமிடறதுல கலக்குறீங்க,
எப்படியோ எனது சோம்பேறித்தனத்தை
அங்கீகரித்ததற்கு நன்றி :-)

பழூர் கார்த்தி said...

உங்க ஆசிர்வாதம்தான் எனக்கு தேவை, டுபுக்கு சார் :-))

Sundari said...

hi lazyboy..
first time unga blog padichen..
really enjoyable writing... pl continue the good work

தருமி said...

சோம்பேறிப் பையனாரே,

முதல் கட்டுரையை வாசித்துப் பார்ப்போமேன்னு ஆரம்பிச்சேன்.....அப்டியே கடைசி வரை இழுத்துக்கிட்டு போய்ட்டீங்க...

வாழ்க..
நம்ம தமிழ்மண ஸ்டைலில் சொல்லணும்னா..'கலக்குங்க...'

உங்க பேருக்கும் -சோம்பேறிப்பையன் - நீங்கள் ரசிக்கும் கிரிக்கெட் விளையாட்டுக்கும் தொடர்பு உண்டுதானே? (அப்பப்போ கிரிக்கெட் ரசிகர்களை சீண்டணும்போல் இருக்கும்.)

Nagarathinam said...

நண்பா,
உங்கள் வலைப்பூ அருமை. உங்கள் மனதில் பட்டதை அருமையாக எழுதி உள்ளீர்கள்...
நான் மதுரையில் வசிக்கிறேன்.
தங்களைப் பற்றி அறிய ஆர்வம்.
நண்பன், நாகரத்தினம்
snagarathinam@gmail.com

பழூர் கார்த்தி said...

சுந்தரி, பின்னூட்டத்திற்கு நன்றி.

தருமி, கிரிக்கெட் சோம்பேறிகளின் விளையாட்டு என்று சொல்கிறீர்களா என்ன? பாத்து சார், கங்குலி காதுல விழுந்துடப் போவுது :-))

நாகரத்தினம், பாராட்டிற்கு நன்றி.

கேன்சரியனே, பின்னூட்டத்திற்கு நன்றி,
சலம்பலே இப்பத்தாம்லே ஆரம்பிச்சிருக்கு....