Tuesday, February 24, 2009

எங்கே எனது கவிதை??

அருகருகே குடியிருந்தோம்..
நித்தமும்
ஒருவர் முகத்தில் ஒருவர் விழிப்போம்..
வழமையாய் காலையில்
ஒரே மிதிவண்டியில் ஆற்றுக்கு செல்வோம்
செல்லும் போது நீயும்,
திரும்பும் போது நானும் ஓட்டுவோம்,
கேட்டால் எதிர்காற்றில் உன்னால் அழுத்த முடியாதென்பாய்..
என் பேனா மூடியில் பேப்பர் அடைத்து
கொண்டபோது, நீயே தண்ணீர் ஊற்றி எடுத்துத் தந்தாய்..
கிட்டிப் புல் விளையாடும் போது,
நான் எதிரணியில் இருந்தால்,
மெதுவாய் அடிப்பாய் நான் கேட்ச் பிடிக்க வசதியாய்..
ஏதாவது ஒரு பலகாரம் உங்கள் வீட்டில் செய்தால்,
உடனே எனக்கு கொடுக்க ஓடோடி வருவாய்..
உனக்கு ஓர் பம்பரம் வாங்கினால்,
எனக்கும் ஒன்று வாங்கி வருவாய் நான் கேட்காமலே..
வீட்டுப் பாடம் எழுத நேரமில்லா
சில மதிய உணவு இடைவேளைகளில்
எனக்காக நீ அவசரமாய் வாய்ப்பாட்டை சிலேட்டில் கிறுக்குவாய்..
உன் வீட்டிற்கு வரும் உறவினர் குழந்தைகளை
என் வீட்டிற்கும் அழைத்து வந்து
என்னை அறிமுகப் படுத்துவாய்..
பள்ளிக் கூடத்தில் எப்போதும் என்னருகே
அமர்ந்திருப்பாய்..
கோயிலுக்கும், சினிமாவுக்கும்,
சந்தைக்கும், விளையாட்டிற்கும்
நானில்லாமல் எங்கும் தனியாய் சென்றதில்லை நீ..
கல்லூரி பருவத்தில்
வேறிடத்தில் நீ படிக்க நேரிட்ட போதும்,
என்னுடன் தினமும் உரையாடுவாய்.
தினசரி கதைகளை தெரிவிப்பாய்..
இருவரும் நகரத்திற்கு வந்து
வேலையில் சேர்ந்தும் தொடர்பில் இருந்தோம்..
திருமணம், பிள்ளைப்பேறு,
வளைகாப்பு, மகளின் மஞ்சள் நீராட்டு
என வைபவங்கள்
உன் வீட்டிலும், என் வீட்டிலும் நடந்தேறின..
ஒவ்வொன்றிலும் என் ஆலோசனையை கேட்டாய் நீ..
இப்படியாய் நம் வாழ்வு
செவ்வனே சென்று கொண்டிருந்த போது
திடிரென, பூவுலகு எய்தினாய் நீ!!
நண்பா,
இத்தனை நாளாய் தினம் தினம்
பார்த்து, பழகிய உன் அருகாமை இல்லாமல்
வெறுமையாய் நகர்கிறது என் வாழ்வு,
எப்போது நாம் மீண்டும் சந்திப்போம்,
சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ?

5 comments:

நாமக்கல் சிபி said...

:(

யாருங்க உங்க ஃபிரண்டு!

உங்கள் சோகத்தில் நானும் பங்கேற்கிறேன்!

அபி அப்பா said...

//திடிரென, பூவுலகு எய்தினாய் நீ!!
நண்பா,
இத்தனை நாளாய் தினம் தினம்
பார்த்து, பழகிய உன் அருகாமை இல்லாமல்
வெறுமையாய் நகர்கிறது என் வாழ்வு,
எப்போது நாம் மீண்டும் சந்திப்போம்,
சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ? //

என்ன கார்த்தி! ஸ்தம்பிக்க வச்சுட்டீங்க! நண்பனை இழப்பது ரொம்ப கொடுமை! உங்கள் சோகத்தில் நானும் பங்கேற்கிறேன்!

பழூர் கார்த்தி said...

சிபி & அபி அப்பா,

கவிஞனுக்கு தேவை கற்பனை.. ஆதலால் இறந்த நண்பனை பற்றி நினைக்கும் இந்த சூழ்நிலை நிஜமல்ல..
தெளிவாக disclaimer கொடுக்காததற்கு மன்னிக்கவும்..
கவிதை உங்களுக்கு பிடித்திருக்குமென நினைக்கிறேன்..

நாமக்கல் சிபி said...

//கவிஞனுக்கு தேவை கற்பனை.. ஆதலால் இறந்த நண்பனை பற்றி நினைக்கும் இந்த சூழ்நிலை நிஜமல்ல//

அடங்கொய்யால!

Bhuvanesh said...

கமெண்ட்ஸ் படிக்காதவரை நானும் இது உண்மை என்று நினைத்து பீல் பண்ணிட்டேன்..

இப்போ ஏன் பீலிங்க்ஸ் எல்லாம் வேஸ்டா போச்சு!! (இருந்தும் மகிழ்ச்சிதான் !!)