Friday, July 20, 2007

புனே -> பெங்களூரூ -> கும்பகோணம்

புனேயிலிருந்து ஊருக்கு நான்கு நாட்கள் விடுமுறையில் செல்வது என்று முடிவெடுத்தவுடனேயே மலிவான விமானச்சீட்டு தேடும் படலம் தொடங்கி விட்டது. புனேயிலிருந்து சென்னைக்கு தற்போது நேரடி விமான
சேவையில்லை, பெங்களூரூ வழியாக செல்லலாம், ரூ 9000 பயணக் கட்டணம் திரும்ப வருவதற்கும் சேர்த்து, கிங்பிஷர் ஏர்வேசில் (இதனை தமிழ்ப் படுத்தினால் எப்படி இருக்கும், கிங்பிஷர் - அரச மீன் பிடிப்பவர் :-)). ஜெட் ஏர்வேசில் ரூ 10000 ஆகிறது. சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு 6 மணிநேரம் பயணம் செய்ய வேண்டும்.

ஆனால் புனே - பெங்களூரூ விமானக் கட்டணம் ரூ 3750 மட்டும்தான் (திரும்ப வருவதற்கும் சேர்த்து). ரீடிப் கட்டணதேடுதல் இணையத்தில் தேடி ஒருவழியாக இண்டிகோ விமானத்தில் பதிவு செய்து விட்டேன். பெங்களூரூ - கும்பகோணம் 10 மணிநேரப் பயணம், பரவாயில்லை பேருந்தில் பயணிக்கலாம் என்று முடிவாகி விட்டது.

புனேயிலிருந்து மாலை 5:25க்கு விமானம் கிளம்பியது. இண்டிகோ விமானச் சேவை பரவாயில்லை, டிக்கெட் குளறுபடிகளில்லை. இணையத்தளமும் நன்றாக, எளிமையாக உள்ளது. பயணத்தின் போது கொஞ்சம் விமானம் ஆட்டம் காட்டினாலும், சரியாக இரவு 7 மணிக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள் :-)

பெங்களூரூவிற்கு இதுவரை வந்ததில்லை. தேசிகன் வலைப்பக்களிலும்(பெண்களூர்), மற்ற வலைப்பதிவர்களின் வலைப்பக்கங்களிலும், செய்தி ஊடகங்களில் ஊரைப் பற்றி கேள்விப் பட்டதை தவிர வேறு அனுபவமில்லை. பரவாயில்லை, ஊர் நன்றாகத்தான் இருக்கிறது.

பெங்களூரூ விமானநிலையம் ஓரளவுக்கு சுத்தமாக உள்ளது. என்னை ஆச்சரியப் படுத்தியது இதுவல்ல, வெளியே வந்தவுடன் மெஜஸ்டிக்(கேம்ப்கவுடா) பேருந்து நிலையம் செல்வதற்கு ஆட்டோவைத் தேடினேன். ஆட்டோவிற்கான வரிசை முன்பு, ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் நின்று கொண்டு பயணிகளின் பெயர், செல்லுமிடம், செல்பேசி எண்ணை,
ஆட்டோ எண்ணை குறித்துக் கொண்டு வழியனுப்பி வைக்கிறார். அற்புதமான ஏற்பாடு. ஊர் தெரியாது புதிதாக வருபவர்களுக்கு இது பயனுள்ளது.

பெங்களூரூவில் சாலைகள் நன்றாக உள்ளன. ஓரளவுக்கு ஊரே சுத்தமாக உள்ளது (மும்பை, புனேவை ஒப்பிடும்போது).ஆட்டோகாரர் மீட்டர் போட்டு, 74 ரூபாய் (மீட்டர் சார்ஜ்) வாங்கிக் கொண்டு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார். ஆனால் டிராபிக் ரொம்பவும் அதிகம். விமான நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு 75 நிமிடத்திற்கு மேலாகி விட்டது (12 கிமீ மட்டுமே என்று நினைக்கிறேன்).

நான் பார்த்த வரையில் தமிழர்கள் நிறைய பேர் தென்பட்டனர். தமிழ் பத்திரிக்கைகளையும், செய்தித் தாள்களையும் கூட பார்க்க முடிந்தது. மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் இரவு 8:30க்கு கே.எஸ்.ஆர்.டி.சி ஏசி வசதிப் பேருந்து கும்பகோணத்திற்கு கிளம்புகிறது. ரூ 363 பயணக் கட்டணம். பேருந்து சுத்தமாக, வசதியாக உள்ளது. டிவி தொல்லை இல்லை. போர்த்திக் கொள்ள போர்வை, தண்ணீர் பாட்டில், முகம் துடைக்க டிஸ்யூ பேப்பர் போன்றவற்றை கொடுக்கின்றனர்.

சற்று கண்ணயர்ந்தால் 11 மணியளவில் கிருஷ்ணகிரி, காலை 5 மணிக்கு திருச்சி, 7 மணிக்கு கும்பகோணத்தில் கொண்டு சேர்த்து விடுகின்றனர். இவ்வண்டியைத் தவிர கேபிஎன் பேருந்தும் இருக்கிறது.

மூன்று நாட்கள் ஊரில் இருந்து விட்டு, திரும்பவும் கும்பகோணத்திலிருந்து, பெங்களூரூ. அங்கிருந்து புனே வந்து சேர்ந்து நண்பர்களிடம் 'அதிருதுல்ல....' என்றேன்!

14 comments:

koothanalluran said...

கும்பகோணம் கொசு,யாணைக்கால்,பாத்திரக்கடை,டிகிரி காப்பி என ஏதாவது இருக்கும் எனப் பார்த்தால் சப்பென முடித்து விட்டீர்கள்

Unknown said...

Hope u had a nice trip :)

Unknown said...

Hope u had a nice trip :)

siva gnanamji(#18100882083107547329) said...

கும்பகோணத்திலிருந்து (கீழ?)பழூர் எப்படி போணீங்க?

பழூர் கார்த்தி said...

நண்பர்களே, பின்னூட்டத்திற்கும் பதிவை படித்ததற்கும் நன்றி!!

<<>>

கூத்தநல்லூரான்,
கும்பகோணத்தை பற்றி நிறைய எழுதலாம், நிச்சயம் எழுதுகிறேன் நீங்கள் சொன்னவற்றை எல்லாம்..

<<>>

அனிதா,
நன்றி, நீங்க யாருங்க, எனக்கு முன்பே தெரிந்த அனிதாவா அல்லது வேறு யாராவது புது அனிதாவா???

<<>>

சிவஞானம்ஜி,
எனது ஊர் தாதம்பேட்டை பழூர் (தா.பழூர்). கும்பகோணத்தில் இருந்து 1 மணி நேரப் பயணம், பேருந்தில் செல்லலாம்.... நீங்கள் சொல்லும் கீழப் பழூர் ஜெயங்கொண்டத்திலிருந்து திருச்சி செல்லும் வழியில் இருக்கிறதல்லவா!!!

ஜீவி said...

என்ன இருந்தாலும் 'கும்மோணம்'
கும்மோணம் தான்!
நான் பிறந்த ஊரில்லே!

siva gnanamji(#18100882083107547329) said...

பழூர் ன்னதும் கீழப்பழூர் நினைவுக்கு வந்தது......
தா.பழூர் பெரிய ஊர்தான்
ஒரு காலத்தில் சட்டமன்றத் தொகுதி ஆயிற்றே..
அப்றம் கார்த்தி பிறந்த ஊராச்சே!

பழூர் கார்த்தி said...

ஆமாம் ஜீவீ, கும்மோணம் கும்மோணந்தான் :-)))

கும்பகோணம் என்பதை பேச்சு வழக்கில் கும்மோணம் என்றே நம்மக்கள் கூறுவர், பேருந்துகளில் குடந்தை என்று அழகாக சுருக்கப்பட்டிருக்கும்....

கும்மோணத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப் பட்டு அதில் பணிபுரியும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் :-)

<<>>

சிவஜானம்ஜி,

எப்படி இவ்வுளவு விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள்!!!

நீங்கள் எந்த ஊர்??? இப்போது எங்கே இருக்கிறீர்கள்???

Unknown said...

hi karthi,
this is anithashanthi ...
hope u know me !!

Unknown said...

hi karthi
u know me .....

Abarna said...

bangalore pathi evlo peeter thevaiya??? u had a half an hour stay in b'lore..adhan nalla irukkunnu sollli irukkenga...
and autowala 75 rupees charge pannadhu seriously aacharyam..generally he charges more than 100 rupees...

பழூர் கார்த்தி said...

அனிதா, பிறகு உங்கள் மெயிலை பார்த்த பிறகு புரிந்து கொண்டேன், நன்றி!!

<<>>

அபர்ணா,
இக்கரைக்கு அக்கரை பச்சை.. புனேயிலிருக்கும் எனக்கு பெங்களூரூ நல்ல சிட்டியாகத்தான் தெரிகிறது :-))

ஆட்டோவில் மீட்டர் போட்டு சரியான பைசா கொடுத்தது எனக்கும் ஆச்சரியம்தான் :-))

Abarna said...

இப்ப உங்களுக்கு பெங்களூர்(மன்னிக்கவும் பெண்களூர்) அழகான ஊரா தான் தெரியும்....

ஓகை said...

//கும்மோணத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப் பட்டு அதில் பணிபுரியும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் :-)//

எனக்கும் இதுபோன்ற ஒரு கற்பனை இருக்கிறது. நானும் கும்மோணம்தான்.