Monday, February 11, 2013

விஸ்வரூபம் - திரைப்பார்வை


ஒரு தமிழ் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகும் முன் பிற மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் வெளியாகும் என்றோ, அதனை நான் பார்த்து ரசிப்பேன் என்றோ கனவில் கூட நினைத்ததில்லை.

நான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறேன். கடந்த ஒரு வருடத்தில் நான் திரை அரங்கிற்கு சென்று பார்த்த ஒரே படம் 'பீட்சா'. அதுவும் சென்னைக்கு விடுமுறையில் (இரு மாதங்களுக்கு முன்பு) வந்த பொழுது மாயாஜாலில் பார்த்தது.

விஸ்வரூபம் டிடிஹெச் மற்றும் தமிழகத் தடையினால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஜனவரி 25 - வெள்ளியன்று அமெரிக்காவில் ரிலீசானாலும், எங்கள் நகரத்தில் ரிலீசாக வில்லை. 26 சனி காலை நண்பர் ஒருவர் குறுந்தகவல் கொடுத்திருந்தார், ப்ரைவேட் ஸ்க்ரீனிங்கில் அன்று இரு ஷோக்கள் (shows) உள்ளன என்று. டிக்கெட் விலை சற்று அதிகம்தான் $16. உடனே எடுத்து விட்டேன்.தமிழகத்தில் மக்கள் நிறைய சிரமப்பட்டு ஆந்திராவிற்கோ, கேரளாவிற்கோ சென்று பார்த்துள்ளனர். ஆனால் எம்பெருமான் கருணையினால் எனக்கு அவ்வுளவு சிரமமில்லை. வீட்டிலிருந்து 8 மைல் தொலைவில் தியேட்டர். இரவு 9 மணி ஷோவிற்கு 8:30க்கு சென்று அமர்ந்தேன். நல்ல பெரிய தியேட்டர் (மல்ட்டிப்ளெக்ஸ்), 300 இருக்கைகள் இருக்கலாம். ஒலி, ஒளி அமைப்புகள் நன்றாக இருந்தன.

நிறைய எதிர்பார்ப்புகள் இல்லை. ஏற்கனவே வந்த விமர்சனங்களை படித்திருந்தேன். கமல் நன்றாக நடித்திருந்தார் என்று கூறுவது கடல் நீர் துவர்க்கிறது என்பதற்கு சமம். அதுதான் அனைவரும் அறிந்த விஷயமாயிற்றே! அறிமுகப் பாடலும், காட்சியமைப்பும் அருமை. 'பாப்பாத்தியம்மா - சிக்கன்' டயலாக்கை தவிர்த்திருக்கலாம், வலிந்து திணிக்கப் பட்டது போல் தோன்றுகிறது.

முதல் இருபது நிமிடங்கள் காமெடியாய் ஆரம்பித்தாலும், கமலின் விஸ்வரூப காட்சிக்கு பிறகு சீரியஸாகி விடுகிறது. அதன்பிறகு என் போன்ற சாதாரண ரசிகனை பிடித்து வைக்கக் கூடிய சுவாரசியங்கள் குறைவே.

ஆப்கானிஸ்தான் காட்சிகள் சற்று மெதுவாக நகர்கின்றன. அங்கே நடப்பதையும், அமெரிக்காவில் நடப்பதையும் மாற்றி மாற்றி காட்டும் உத்தி நன்று.

ஆனால் காட்சிகளை நாம் புரிந்து கொண்டு தொடர்வது சற்று கடினம்தான். இந்த சீசியம், ட்ர்ட்டி பாம், மைக்ரோவேவ் ஒவன் வைத்து பாம் வெடிப்பதை தவிர்ப்பது என்பதெல்லாம் மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு பாமர ரசிகனுக்கு புரியுமா என்பது சந்தேகம்தான். இதை அவனுக்கும் புரியவைக்க கமல் எவ்வித முயற்சியும் எடுக்க வில்லை.படத்தில் நிறைய கேள்விகள் உள்ளன. சில முடிச்சுகள் சரியாக அவிழ்க்கப் படவில்லை. கமல் ஆரம்பத்தில் திட்டமிடும்போது இரு பாகங்களாக திட்டமிட்டிருக்க மாட்டார். எல்லாவற்றையும் எடுத்துவிட்டு எடிட் செய்யும் போது நிறைய காட்சிகள் இருந்திருக்கும், ஆதலால் இரு பாகங்கள் என நினைக்கிறேன். எனவை படத்தின் முடிச்சுகள் சில இரண்டாம் பாகத்தில் அவிழலாம். அப்பாகத்தையும் பார்த்தால் ஒரு முழுமையான உணர்வு நமக்கு கிடைக்கலாம்.

படத்தில் புத்திசாலித்தனமான காட்சியமைப்புகள் உள்ளன. தேவையான அளவுக்கு இசை, பின்னனியிசை. ஓலி, ஒளிப்பதிவு அபாரம். ஆனால் திரைக்கதை சரியாக அமையவில்லை. இன்னமும் சற்று தெளிவாக, சுவாரசியமாக, வேகமாக அமைத்திருக்கலாம். ஒரு திரில்லர் கதைக்குரிய வேகமோ, பரபரப்போ இல்லாதது சற்று ஏமாற்றம்தான்.

ஒரு காட்சியில் ஒரு ஆப்ரிக்க இளைஞன் (பிற்பாடு அவனே குண்டு வைக்கப் போகிறான்) ஒருவன் தனது உடம்பை, அந்தரங்க பாகத்தை ஷேவ் (shave) செய்து  கொள்கிறான். அதை எதற்கு காட்டுகிறார்? ஏதாவது கேரக்டரை ஸ்தாபிக்கிறாரா? இக்காட்சியில் மறைமுகக் குறீயீடு ஏதாவது உள்ளதா என்று புரியவில்லை.

ஆண்ட்ரியா, நாசர் போன்றோரின் கேரக்டர்களும், அவற்றின் தேவையும் சரியாக அமைய வில்லை. கிளைமேக்ஸ் பரபரப்பாய் இல்லாமல் சாதாரணமாக முடிந்து விடுவது ஏமாற்றமே.

வழக்கமான தமிழ் சினிமாவாய் குத்துப் பாட்டு, இரட்டை அர்த்த காமெடி இல்லாமல் ஒரு வித்தியாசமான கதைக் களத்துக்காகவும், டெக்னிக்கல் விஷயங்களுக்காகவும் கமலை பாராட்டலாம்! எனக்கு படம் பிடித்திருந்தது, எல்லோருக்கும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை!

9 comments:

ராஜ் said...

ரொம்ப சரியா எழுதி இருக்கீங்க.. கமலின் படத்தில் இருக்கும் அதே குறை தான்.. பாமரனுக்கு புரியாமல் எடுப்பது.. இடைவேளைக்கு மேல் நிறைய காட்சிகள் தேவை இல்லாத திணிப்பு.. கொஞ்சம் கொட்டாவி வந்துச்சு..ஆனா கமலின் வித்தியாசமான முயற்சி, முதல் 30 நிமிடங்கள், முஸ்லிம் கும்பலின் எதிர்ப்பு எல்லாம் சேர்ந்து படத்தை பெரிய வெற்றி படமாக ஆக்கி விட்டது..
எனக்கு என்னமோ, இது Kil Bill படம் மாதிரியே ரெண்டு Vol வந்து முதல் Vol கேள்விகளுக்கு அடுத்த Volவில் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்..

பழூர் கார்த்தி said...

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி ராஜ்! இதிலுள்ள குறைகளை சரி செய்து, அடுத்த பாகத்தில் (பெயர்: 'மூ'வாமே) அசத்துவார் என்று நம்புவோம்..

வவ்வால் said...

கார்த்தி,

படத்தின் இயல்பை சரியா சொல்லி இருக்கீங்க.

படம் சுமாராக போகும் என்பதை முன்னரே திட்டமிட்டு தான் இத்தனை விளம்பர ஸ்டண்ட்களும் செய்துள்ளார், அவர் நினைத்தது நடந்துவிட்டது.

ஸ்பீல் பெர்க்,ஜேம்ஸ் கேமரூனிடம் இருந்து பாடம் படிக்க வேண்டும்,சிக்கலான கான்செப்டை எளிமையாக்கி லாஜிக் மீறல்கள் கவனத்தியில் பதியாமல்,நம்புவது போல காட்டிவிட்டு ,முக்கியமான காட்சிகளுக்கு நகர்ந்துவிடுவார்கள்.

ஜிராசிக் பார்க்கை எல்லாம் பயோடெக்னாலஜி ஜல்லி அடிச்சு எடுத்திருந்தால் எத்தனைப்பேருக்கு புரிந்திருக்கும்?

ராஜ நடராஜன் said...

ஷேவிங்க் செய்து கொள்வது ஜிகாத் ritual சம்பந்தப்பட்டதாக இருக்க கூடும்.இதற்கான விடை paradise now என்ற பாலஸ்தீனிய-இஸ்ரேல் கதையில் உங்களுக்கு கிடைக்க கூடும்.சினிமா வேண்டாம் நிஜமாத்தான் இருக்கணும்ன்னா 9/11 எகிப்தியன் அத்தா தகவல் தேடவும்.

பழூர் கார்த்தி said...

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி வவ்வால்! இன்னும் திரைக்கதையை எளிமைப் படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!

பழூர் கார்த்தி said...

ராஜ நடராஜன், உங்க கருத்து சரிதான், சில கூகுள் தேடல்களில் தெரிந்தது.. நன்றி! இவ்வுளவு நுணுக்கமா காட்சிப் படுத்தியிருக்கார்னா பாராட்ட வேண்டும்தான்...

Karthik said...

Swami need more frequent blogs from u...

Karthik said...

Swami need more frequent blogs from u...

பழூர் கார்த்தி said...

கார்த்திக், நன்றி. நிச்சயம் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.. இதில் ஏதும் உள்குத்து இல்லையே?? :)