Wednesday, August 29, 2007

தமிழ் வலைப்பதிவுகளில் முதன்முறையாய்...

தமிழ் வலைப்புதிவுகளில் முதன்முறையாய் ஒரு Interactive Crime Thriller (ஊடாடும் குற்ற திகில்) சிறுகதையை அனுபவிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன். கதையின் பாதி பகுதி இங்கே இருக்கிறது. இந்த கதையின் முடிவை (climax) கூறப்போவது நீங்கள்தான்.


எனக்கு ராஜேஷ்குமார், சுபா ஸ்டைலில் ஒரு க்ரைம் திரில்லர் எழுத ரொம்ப நாட்களாய் ஆசை. சரிதான் முயற்சிப்போமே என்று சென்ற வருடம் தேன்கூடு போட்டிகளின் போது ஒரு கதையை எழுத ஆரம்பித்தேன். அந்த கதையில் முதல் மூன்று பகுதிகளை கீழே கொடுத்திருக்கின்றேன்.


கதையை முதலில் படியுங்கள். பிறகு கதை எப்படி தொடர்ந்து சென்று முடிந்திருக்கும் என்பதை பின்னூட்டத்தில் 3-4 வரிகளில் எழுதுங்கள். நேரமும், ஆர்வமும் இருந்தால் கதையின் தொடர்ச்சியை தனிப் பதிவாகவும் இட்டு, இங்கே லிங்க் கொடுத்து விடுங்கள்.


Come on, let's interact !!!!


<<<>>>


{{விளையாடாமல் வேட்டையாடு}} - க்ரைம் சிறுகதை



Part - 1


நவிமும்பை வாஷி ட்ரெயின் ஸ்டேசன் அந்த அதிகாலை வேளையிலும் பரபரப்பாய் இருந்தது. கருஞ்சிவப்பு நிறத்தில் வழிந்திருந்த ரத்தம் தண்டவாளத்தை ஒட்டி உறைந்திருந்தது. இரண்டு அடி இடைவெளியில், விழுந்திருந்த இளம்பெண்ணின் சுடிதாரில் ரத்தம் திட்டு திட்டாய் இருந்தது. கம்யூட்டர் டெஸ்க்டாப் ஐகான்கள் போல் மக்கள் சிதறி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.


வாக்கிங் வந்திருந்த பெரியவர் தற்காலிமாக ஆஸ்த்மாவை மறந்து விட்டு "காலம் ரொம்ப கெட்டுக் கிடக்கு.. யாராவது போலிசுக்கு சொல்லுங்கப்பா" என்றார். கூடியிருந்தவர்களில் சிலர் அவசரமாக விலகினர். கேர்ள் ப்ரண்டுக்காக காத்துக் கொண்டிருந்த ஜீன்ஸ் இளைஞன் செல்போனில் "கமான்யா, சீக்கிரம் வாப்பா, பொணமெல்லாம் ஸ்டேசன்ல கிடக்கு, எப்ப ட்ரெயின் எடுக்கப்போறான்னே தெரியல, இன்னிக்கு 'சக்தே இண்டியா' படம் பாத்தாப்பலதான்" என்று அலுத்துக் கொண்டிருந்த நொடிகளில் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள்கள் புடை சூழ வந்தார்.


"போட்டாகிராபர், பாரன்சிக் ஆளுங்க, டாக் ஸ்குவாட் எல்லாரையும் வரச் சொல்லுய்யா.. காலங்காத்தாலயே பொணத்து முகத்துல முழிக்க வேண்டியதா இருக்கு....பேசாம கம்ப்யூட்டர் படிச்சிட்டு, சாப்ட்வேர் கம்பெனில ப்ளாக் எழுதிகிட்டு இருந்திருக்கலாம்.." என்ற இன்ஸ்பெக்டர் குனிந்து கர்சீப்பால் கையை சுற்றிக்கொண்டு ஹேண்ட்பேகை எடுத்தார். வேலை பார்த்த கம்பெனியின் அடையாள அட்டை, கிரெடிட், டெபிட் கார்டுகள், ஸ்டிக்கர் பொட்டுகள், இத்யாதி, இத்யாதி...


கம்பெனி அடையாள அட்டையில் பெயர் பார்த்தார் "வந்தனா ராஜசேகர், Emp Id: 78292"


<<<>>>



Part - 2


பிரகாஷ் லேட்டஸ்ட் ஹிட் பாலிவுட் நடிகையுடன் "கஜுராரே, கஜூராரே..." என்று டூயட் பாடிக்கொண்டிருந்த போது எங்கோ தொலைவில் செல்போன் ரிங்கியது. போர்வையை விலக்கி செல்போனை காதில் வைத்தான். "ஹாய் பிரகாஷ், என்னடா இன்னுமா தூங்கிகிட்டு இருக்க? எந்திருச்சி, ஜிம்முக்கு போடா ராஸ்கல், 10 கிலோ எடையை குறைச்சாதான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்.." என்று வந்தனாவின் குரல் தேனாய் வழிந்தது.


"இதோ எந்திருச்சுட்டேன், எங்க இருக்க இப்ப?" என்றான் பிரகாஷ்.



"வாஷி ஸ்டேசன்ல வெய்ட் பண்ணிகிட்ருக்கேன், 5:12 தானே ட்ரெயின் இன்னும் வரலே.." - வந்தனா



"சரி, கரெக்டா ஆபிஸ் போய்சேரு.. நான் ஜிம்முக்கு கிளம்பறேன்.... வச்சிரட்டுமா..ஒரே ஒரு முத்தம் கொடேன்..." - பிரகாஷ்.



வந்தானாவின் வெட்கப்படும் "போடா, திருட்டு ராஸ்கல்" உடன் கால் கட்டானது.


<<<>>>



Part - 3


ஆறுமுகம் காபி குடித்துக் கொண்டே மும்பை தமிழ் டைம்ஸை பார்வையால் மேய்ந்தார். செல்போன் வைப்ரேஷனில் அதிர்ந்தது. நம்பர் பார்த்தார். புதிதாக இருந்தது. ஏற்கனவே நம்பர் செல்போனில் இருந்தால் பெயர் வருமே என யோசித்துக் கொண்டே எடுத்தார்.


"சார்...வி1 தான் பேசறேன்...வெல்டிங் பண்ணியாச்சு.. இப்ப பன்வேல்ல இருக்கேன்.. ஹைதராபாத் பஸ்லதான் உக்காந்துருக்கேன்...." என்று எதிர்முனையில் குரல் கரகரத்தது.


"...ஏய்.. உன்னை போன் பண்ண வேண்டாம்னு சொன்னேன்ல..." என்றார் ஆறுமுகம். வியர்த்த நெற்றியை தோள் துண்டால் துடைத்தார்.


"இல்ல சார்... நேத்து நைட் வாஷி ஸ்டேசன்ல ஏர்டெல்காரன் ஏதோ விளம்பர ஸ்டால் வச்சி, ஃப்ரியா சிம்கார்டு கொடுத்துகிட்டு இருந்தான்..இதுல 10 ரூவாய்க்கு டாக்டைம் இருக்குன்னான்.. அதான் அந்த நம்பர இப்ப போட்டு உங்கிள்ட பேசிகிட்டு இருக்கேன்.. பேசி முடிச்சவுடனே தூக்கி போட்டுடறேன்"


"சரி சரி.. காலை கட் பண்ணு, ஹைதராபாத் போய்ட்டு 2-3 நாள் கழிச்சி எஸ்டிடீ பூத்ல இருந்து எனக்கு போன் பண்ணு.." என்று கட் செய்தார் ஆறுமுகம்.


<<<>>>



இவ்வுளவுதாங்க.... இப்ப நீங்க அசத்த ஆரம்பிங்க :-)))

6 comments:

பழூர் கார்த்தி said...

:-(
என்ன கொடுமை சார் இது.....
எவ்ளோ கஷ்டப்பட்டு ஒரு க்ரைம் கதை எழுதினா, ஒரு பின்னூட்டம் கூட வரல :-((((

<<>>

சரி..சரி.., இனிமே வரவங்க ஒரு ஸ்மைலியாவது போட்டுட்டு போங்க
:-(((

நாமக்கல் சிபி said...

//இனிமே வரவங்க ஒரு ஸ்மைலியாவது போட்டுட்டு போங்க
//



:)

நாமக்கல் சிபி said...

//என்ன கொடுமை சார் இது.....
எவ்ளோ கஷ்டப்பட்டு ஒரு க்ரைம் கதை எழுதினா//

அண்ணே அது ஒரு க்ரைம் கதை இல்லை. முக்கா க்ரைம் கதை!

நாமக்கல் சிபி said...

//என்ன கொடுமை சார் இது.....//

இதை நான் வழி மொழிகிறேன்!

குசும்பன் said...

கதை நன்றாக இருக்கிறது, ஆனால் தொடர எல்லாம் முடியாது:))))

பழூர் கார்த்தி said...

நாமக்கல் சிபி,

ஒரு பின்னூட்டம் கேட்டதற்கு நான்கு பின்னூட்டங்களை வாரி வழங்கிய
எட்டாவது வள்ளல் சிபி அவர்களே, நன்றி, நன்றி!!! (என்னா மூச்ச போட வேண்டியதாயிருக்கு பாருங்க.. ஒரு ப்ளாக்கரா இருப்பது சுலபமல்ல :-))))

<<>>

குசும்பன்,

தொடர முடியாதா, வேணாம் அழுதுருவேன் :-)))