.jpg)
எந்த தமிழ்படத்தையுமே முதல் வாரத்தில் பார்ப்பதை நான் விரும்புவதில்லை. படம் பார்த்த நான்கு நண்பர்களை கேட்டு விட்டோ, வலைப்பதிவிலோ, டிவியிலோ, வாரப் புத்தகங்களில் வரும் விமர்சனங்களை கேட்டு விட்டு நல்ல, வித்தியாசமான படம் என்றால்தான் செல்வேன். ஆனால் ராவணன் பற்றிய எதிர்பார்ப்புகள், மணிரத்னம், ரெஹ்மான், விக்ரம் கூட்டணி என்னை சற்றே சஞ்சலப் படுத்தியது. படம் நிச்சயம் வித்தியாசமாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சற்றே அசட்டையாய் கடந்த புதன் இரவு வலையில் மேய்ந்த போது கிடைத்தது வடபழனி கமலாவில் டிக்கெட்.
எதிர்பார்ப்பை ஏமாற்ற வில்லை ராவணன். அருமையாய் இருக்கிறது படம். நான் முழுக்க முழுக்க ரசித்தேன்.
ஆரம்ப காட்சியே அமர்க்களம், அவ்வுளவு பெரிய போட்டில் விக்ரம் வந்து ஐஸ்வர்யா இருக்கும் சிறிய போட்டை மூழ்கடிக்கும் போது, நாமே மூழ்கிப்போவது போல் ஓர் உணர்வு. படத்தில் பெரும்பாலான காட்சிகளில் தண்ணீர். மழை, நீர்விழ்ச்சி, மலைகள் என ஒளிப்பதிவாளர் அசத்தியிருக்கிறார். புனே பக்கத்தில்தான் எங்கோ படம் பிடித்திருக்கிறார்கள். மஹாராஷ்ராவில் இம்மாதிரி நிறைய பசுமையான மலைகளும், மலை சார்ந்த இடங்களும் உண்டு.
ஒரு காட்சியில் பஸ் வரும், ஐஸ்வர்யா அதில் ஏறி விக்ரமை சந்திக்க வருவார். அந்த பஸ் மகாராஷ்டிரா மாநில அரசு பஸ் (BEST) என்று நினைக்கிறேன், பஸ் கலர் நான் 4 ஆண்டுகள் மும்பையிலும், புனேயிலும் வசித்தபோது பரிச்சயம்.
கதை சாதாரண கடத்தல் கதைதான். ஆனால் அதை எடுத்த விதமும், திரைக்கதையும், தொழில் நுட்பமும் அசத்தல். இந்திய சினிமாவை நிச்சயமாய் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல முயற்ச்சிகிறது. ஒளிப்பதிவு, இசை, பின்னணி இசை, கலை என்று அனைவரும் சிரத்தையாய் உழைத்திருக்கிறார்கள்.
விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ் மூன்று பேருமை நன்றாக நடித்திருக்கிறார்கள். விக்ரம் வழக்கம்போலவே வீரா கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். டண்டண் டண் டண்டனக்கா என்று அவர் சொல்லும்போது தியேட்டரே அதிர்கிறது, ரசிக்க முடிகிறது. அற்புதமான முகபாவங்கள், உடல் மொழிகள் என மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்திருக்கிறார் இன்றைய அடைமொழி சூரப்புலிகளின் முன்பு. ஐஸ்வர்யா ராயும், விக்ரமிற்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். அவருடைய கண்கள்தான் எத்தனை கதைகள் பேசுகின்றன?? எவ்வுளவு அருமையாய் நடனமாடுகிறார்? குரல் கொடுத்தவர் ரோகினியா? கொஞ்சம் பொருந்தவில்லை.
கார்த்திக், பிரபு இருவரும் தனக்கு கொடுத்த வேலையை சரியாய் செய்திருக்கிறார்கள், இருந்தாலும் கார்த்திக்கை மரத்துக்கு மரம் தாவ விட்டதெல்லாம், கொஞ்சம் ஓவர். பாடல்கள் அனைத்தும் முன்பே ஹிட், தியேட்டரில் பார்க்கவும் நன்றாக இருக்கிறது. குறைகளே இல்லையா? இருக்கிறது, முதல்பாதி சற்று விறுவிறுப்பு குறைவு. இருப்பினும் படத்தை பார்த்து ரசிக்கலாம். நிச்சயம் இந்திய சினிமா பெருமைப் படக்கூடிய படம். இந்தியில் அபிஷேக்கும், விக்ரமும் எப்படி நடித்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாய் இருக்கிறது, பார்த்து விட்டு மீண்டும் உங்களை சந்திக்கிறேன்!!